சுரேஷ் வெங்கடாத்ரி வெண்முரசில் கிருஷ்ணன் வருகை குறித்து எழுதிய பதிவினை நண்பர்கள் சுட்டி அளித்ததன் வாயிலாக கண்டேன். அப்படியே அவரது முகநூல் பக்கத்தில் சிறிது நேரம் மேய்ந்தேன்.
அவர் என்னுடைய Facebook நட்பு வட்டதில் அல்லது தனிப்பட்ட வகையில் இல்லை. சிறந்த வாசிப்பாளர் என்று அவர்மீது இருந்த பிம்பம் குறைந்துவிட்டது என்பதும் உண்மை.
குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் விசு திண்ணையில் அமர்ந்திருப்பார். தசரதராஜகு....மாஆஆராஆ.., அதிதீஈஈஈராஆஆ.. , சுகுமாஆஆஆராஆஆ.. என பாடிக்கொண்டிருப்பார். இங்க இதுக்கு முன்னாடி எம்ஜிஆர் படம் இருந்தது. இப்ப ரஜினி படம் இருக்கு என தன் மகனின் சினிமா ஆர்வத்தை கிண்டலடிப்பார். மணிஆர்டர் கொண்டுவரும் போஸ்ட் மேனிடம் இவர் லெக்ஷ்மிஅம்மாள் அல்ல சரஸ்வதி அம்மாள் என்று ஜர்க் காட்டி திடுக்கிடசெய்வார்.. பானுமதிக்கு கால அங்க போடனுங்க என்று பிழைதிருத்துவார்.
பிற்காலத்தில் இன்றைய திண்ணையான Facebook ல் அந்த நபர், சுரேஷ்வெங்கடாத்ரி என்கிற பெயரில் அமர்ந்திருக்கிறார். மெல்லிசை, லாஜிகல் கேள்விகள், கிரிக்கெட் விமர்சனம் என இருக்கிறார்.
அந்த படம் எப்படி விசு இல்லாமல் போரடிக்குமோ அதுபோல சுரேஷ்வெங்கடாத்ரி இணையாமல் இருந்திருந்தால் பொழுது போயிருக்காது என்பதும் உண்மை.
சரி், நாம் வெண்முரசு விவாதத்துக்கு வருவோம்..
வெண்முரசு எழுதப்பட்ட காலத்திலிருந்து அதை வாசித்து வருபவர்களில் அவரும் ஒருவர் என்பதால் ஜெ. செய்வது ஒரு மொழியாக்கம் அல்ல. அது மகாபாரதத்தின் மறு ஆக்கம் என்பது அவருக்கும் தெரியும். வியாசபாராத கதையிலேயே பாத்திரங்கள், மகபாராத ஓட்டத்தில் வருவதை விட பின்னால் சொல்லப்படுவது என ஒரு நான்லீனியராக இருக்கும்.
இதில் அனைவரும் அறிந்த உதாரணம் ஒன்று உண்டு. கர்ணன்தான் துரியோதனனையும் ஜராசந்தனையும் சேர்த்து வைத்தான் என்று வெய்யோனில் ஜெ. எழுதியிருந்தார். அப்போது மூலத்தில் அவ்வாறு இல்லை என்று சுரேஷ் வம்புகேள்விகள் எழுப்பினார். ஆனால் பலமாதங்கள் சென்று சாந்திபர்வத்தினை மொழிபெயர்த்து எழுதிய அருட்செல்வபேரரசன் அவர்கள் அதில் திருதராஷ்டிரன் புலம்பலில் இது வருகிறது என எடுத்துக்காட்டினார். அதற்காக சுரேஷ் வெங்கடாத்ரி அவர் பழைய போஸ்டை டெலீட் செய்வது அல்லது வருத்தம் தெரிவிப்பது ஏதும் இராது.. சர்றா வுட்றா சுனா பானா என போய்க்கொண்டிருப்பார்.
அதேபோல் மற்றொன்று மகாபாரத பிற்சேர்க்கை.. மகாபாரதத்திற்கு பின் எழுதப்பட்ட பாகவதம் தேவிபாகவதம் முதல் நவீன இலக்கியகர்த்தாகளின் நாவல்கள் வரை பாரதகதாபாத்திரங்கள் வளர்ந்து வருகிறார்கள். அவர்களின் பாத்திரப்படைப்பு பலவிதங்களில் ஆராயப்பட்டிருக்கிறது. வரலாற்று தத்துவ பின்புலத்திலும் கூட.
அவ்விதத்தில் முன்பே சொன்னது போல வெண்முரசு மகாபாரத்தின் மொழிபெயர்ப்பு அல்ல. அது மறுஆக்கம். அதில் இத்தனை கூறுகளும் உள்ளன. இங்கே சுரேஷ் வெங்கடாத்ரி சொல்லிய கிருஷ்ணனின் அறிமுகம் பிஆர்சோப்ராவின் பாரதத்திலும் வருகிறது. ஆனால் அதில் திடீரென விஸ்வகர்மா தோன்றி துவாரகையை சிருஷ்டிக்கிறேன் என்கிறார். ( அதாவது கிருஷ்ணன் அழைக்க அவர் தேவலோகத்திலுருந்து மதுரா அரசவையில் பிரத்யட்சமாகி நான் அந் நகரை நிர்மாணிக்கிறேன் பரம்பொருளே என்கிறார்) கிருஷ்ணன் அஸ்தினாபுரி பிரச்சனையை கவனிக்க செல்கிறான் என்று வருகிறது. ஒரு மந்திரஜாலமாக. அதிலும் அவர் சொல்லும் சுயம்வரத்தில் என்ட்ரி என்று தரவில்லை..
அதேபோல நாட்டார்பாரத கூறுகள் வெண்முரசில் இருந்தாலும் செயற்கையான திணிப்புகள் அதில் இல்லை. நாமறிந்த மாயாபஜார் பட காட்சிகள் வெண்முரசில் இல்லை. இது எதுவும் சுரேஷ்வெங்கடாத்ரிக்கு புதிது அல்ல. அவர் சொல்புதிது குழுமத்தில் இருந்தபோது இதை பலமுறை அவருடனே விவாதித்திருக்கிறோம்.
வெண்முரசின் கேள்விகளுக்கான பதில்கள் வெண்முரசிலேயே உள்ளன. Discussion blogspot ல் உள்ளன. மேலும் பலரால் பல கட்டுரைகள் எழுதப்பட்டும் உள்ளன.
ஆகவே இங்கு சொல்வது அவர் இதைக்கேட்டு மறுபரிசீலனை செய்வார் என்ற நம்பிக்கையில் அல்ல. ஒருவகையில் என் மன ஆறுதல் என்று மட்டும் கொள்க..
அவரது வாசிப்பு எண்ணிக்கை என்னை வியக்க வைத்திருக்கிறது. இவ்வளவு வாசிப்பு சாத்தியமா என.. ஆனால் தினசரிகள் அச்சாகும் பத்திரிக்கை இயந்திரத்திற்கும் அந்த தகுதி உண்டுதானே. எத்தனை வார்த்தைகளை தினமும் கடக்கிறது. ஆனால் அதற்குள் எப்படி ஏதும் போகாதோ அதுபோல இவருக்குள்ளும் ஏதும் போகாது என்பதை தாமதமாக புரிந்துகொண்டேன். கொஞ்சங்கூட மழத்தண்ணி உள்ள போயிரக் கூடாது நல்லா கான்கிரீட் போடு என தனக்குத்தானே கான்கிரீட் போட்டுக்கொண்டவர்..
அதேநேரம் ஆடிட்டர் என்பதால் அவரால் வேறொரு பிரதியை இறுதிவரை ஒப்புநோக்கி ரெட்இங்கால் மார்க் பண்ண முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஸீ த ப்ராப்ளம் இஸ்... என்று அதை விளக்கவும் முடியும்
தொடர்ச்சியாக நிகழும் சென்னை வெண்முரசு மாதாந்திர கூடுகை தற்போது ஏழாவது வருடத்தை நோக்கி செல்கின்றது. கோவையில் கூட ஆரம்பத்தில் நிகழ்ந்த்து. இவர் சென்னை மற்றும் கோவையில் இருந்தபோதும் ஒரு இடத்திலும் வந்து பேசியவர் அல்ல. அங்கு எதிர் விமர்சனம் வைப்பவர்களும் வந்து உரையாடியுள்ளனர். இவர் இவர் சொல்வது ஒருவித சாதாரண அபிப்ராயம் மட்டுமே..
மேலும் இவர் பேஜ் பார்த்தால் சிலவற்றை கிசுகிசு பாணியில் சொல்கிறார். அது அதிர்ச்சியாக இருக்கிறது. எழுத்தாளர். எஸ்ராமகிருஷ்ணன் குறித்து சொல்புதிது கூகுள் குழுமத்தில் பகடியாக எழுதுகிறார்கள் என்று ஒரு கமெண்ட் பார்த்தேன். அட ஆண்டவா என்று இருந்தது.. இப்போது அந்த குழுமம் ஆக்டிவ்வாக இல்லை. ஆனால் அது அவ்வாறு ஆக்டிவ்வாக இருந்தபோது அதில் இப்படி எழுதியிருந்ததே சுரேஷ் அண்ணார்தான். அதை அப்போது நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை. காரணம் தீவிர இசை ரசிகர்கள் எப்படி தன் ஆதர்ச இசையமைப்பாளர்களை கிண்டலடிப்பார்களோ அப்படி ஒரு ஜாலியான ஃபன்னாகத்தான் அதை பார்த்தேன்.
ஆனால் facebook ல் அவர் அதையே ஒரு கிசுகிசுவாக ஆக்குகிறார். அது தவறானது.தில்லானா மோகனாம்பாள் வைத்தி போல. அதன் காரணம் அவர் பேசுகையில் அது ஒரு இன்சைடர் இன்ஃபர்மேஷன் என்பது போல வேறு ஒன்றாக மாறி தோற்றமளிக்கிறது. அது ஒருவர் மீதான மாண்பை குறைக்கிறது.
ஒரு படத்தில் சுருளிராஜன் ஒரு வம்பு பேசுவார். 'நீங்க கேட்டீங்களா ?' என்பார் எதிரில் இருப்பவர். அட இல்லப்பா நான் சும்மா சேரை போட்டு உட்கார்ந்திருந்தேன். அப்ப யாரோ ரெண்டு பேரு பேசிட்டு போனாங்க அப்ப லைட்டா காதில் விழுந்தது என்பார்..
சுரேஷ் வெங்கடாத்ரியின் நேற்றைய பதிவு இவ்வாறு கூறுகிறது. 'வெண்முரசு நிறைவுநாள் விழா உரையாடல் லைவ் அப்படி வீடியோ பக்கம் லேசா எட்டிப்பார்த்தேன். அப்ப லைட்டா இப்படி காதில் விழுந்தது' என்கிறார். அங்கே நேரடியாக அதை காமெண்டில் கேட்டிருக்கலாம். பதில் வந்திருக்கும்.. ஆனால் இரண்டரை மணிநேர கலந்துரையாடலில் அவருடைய தேவை ஒரு அவல். அதை யாருக்கு வீசவேண்டும் என்றும் அவருக்குத் தெரியும். அதை வீசிவிட்டு நாராயண நாராயண என்று ஈஸிசேரில் அமர்ந்து கொண்டு மேட்ச் பார்க்க ஆரம்பித்துவிடுவார். அதில் எப்படியும் கமாண்டேட்டர் பழைய ப்ளேயர் பெயரை சொல்லும் போது அது சக்லைன் முஷ்டாக்கா முஷ்டாக் அஹமதா என அடுத்த பதிவுக்கான கன்டெண்ட் கிட்டும் வாய்ப்பு இருக்கு..
வெண்முரசு வாசிக்கவில்லை அதை நிராகரிக்கிறேன் என்று கூறும் நண்பர்கள் உண்டு. அவர்கள் மீது எந்தவொரு வருத்தமோ புகாரோ அல்ல. சுரேஷ் வெங்கடாத்ரி செய்வது, தான் வெண்முரசை வாசித்துவிட்டேன் என்று சொல்லி தன் பிழையான வாசிப்பை வைத்து எதையாவது செய்து குழப்புவது. இலக்கியம் பொதுவாக இலக்கிய வம்புகளால் வெளியில் இருப்பவரை ஈர்க்கிறது. அவ்வாறு ஈர்க்கப்பட்டு உள்ளே வருபவர்கள் தீவிரமாக இலக்கியத்தில் ஆழ்வதும் உண்டு. அதில் இதுபோல ஈஸிசேர் ஆசாமிகளும் உண்டு. அதை வாசகர்கள் உணர்வதும் தானாக நிகழும். யாரும் சொல்லத்தேவையில்லைதான்.
இன்று அவர் மீதான எண்ணங்களை தொகுத்தால் கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் என்பதுபோல விசு முதல் சுருளிராஜன் வரை நியூஸ் பேப்பர் மிஷின் முதல் ஈஸிசேர் வரை பல உதாரணங்கள் தானாக எழுந்து வருகின்றன. எப்படி கிருஷ்ணனை அந்த ஆயிரம் நாமங்கள் கொண்டு பாராட்டினாலும் அதற்கும் அப்பால் எஞ்சி நிற்பாரோ அப்படி இவரும் இன்னும் எஞ்சி நிற்கிறார். வாழ்த்துகள்.