Friday, January 13, 2023

சுவருக்குள் சித்திரங்கள் மற்றும் கம்பிக்குள் வெளிச்சங்கள்

மரண வாக்குமூலம் மிகவும் கருணையுடன் பரிசீலிக்கப்படுகின்ற ஒன்று. மரணத் தருவாயில் எந்தவொரு மனிதனும் பொய் சொல்லமாட்டான் என நம்பி ஏற்கப் படுவது. தியாகு, தான் நேரடியாக சம்பந்தப்பட்ட வழக்குகளில் பாதிக்கப் பட்டவர்களின் மரண வாக்குமூலம் பெறப்பட்டு, வழக்கானது அதற்கு தோதாக  மாற்றி  எழுதப்பட்ட விதத்தைச் சொல்கிறார். தியாகுவும் நண்பர்களும் 'அழித்தொழிப்பு' செய்ய வேண்டி சேர்மேன் ஒருவரைக் கொல்கிறார்கள். அதைப் பார்த்த இருவர் ஏழுபேர் சேர்ந்து கொன்றதாக வாக்குமூலம் அளிக்கின்றனர். ஆனால்  இவர்கள் ஏழு பேர் அல்ல ஐந்துபேர்கள் தான். ஆனால் காவல்துறையினர் அந்த வாக்குமூலத்தை உண்மையாக்கவேண்டி இருவரை சேர்க்கிறார்கள். மற்றொன்று, ஒரு மணியக்காரர் ஒருவரை 'அழித்தொழிப்பு' செய்யும் போது அவர் குற்றுயிராக தப்பித்து விடுகிறார். அவர் தனது வாக்குமூலத்தில் தனது பகைவர்கள் பெயரை சொல்லிவிடுகிறார். நடுவர் நீதிமன்றம் அவர்களுக்கு தண்டனை வழங்கிவிடுகிறது. அதாவது 'அழித்தொழிப்பு'  செய்த தியாகுவுக்கும் தண்டனை ; குத்துப்பட்டவர் வாக்குமூலத்தில் அவராக சொன்ன அவருடைய பகைவர்களுக்கும் தண்டனை. சில விஷயங்களை தியாகு தர்க்கரீதியாக கேள்வி கேட்கும் போது நம்மால் எதிர்த் தரப்பை எடுக்க இயலவில்லை.



தியாகு அவர்கள் தனது  ஆரம்பகால வாழ்க்கையையும் சிறை அனுபவங்களையும்  சுவருக்குள் சித்திரங்கள் மற்றும் கம்பிக்குள் வெளிச்சங்கள் ஆகிய புத்தகங்களின் வாயிலாக எழுதியுள்ளார். அவரது இயற்பெயர் தியாகராஜன். கல்லூரி காலத்தில் அரசியலில் ஆர்வம் கொண்டு, பின் நக்ஸல்பாரி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அதில் பங்காற்றி வர்க்க எதிரிகளை 'அழித்தொழிப்பு' செய்கிறார். அதற்காக தூக்கு தண்டனை பெறுகிறார். அது பிறகு ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டு 1970 முதல் 1986 வரை சிறையில் இருக்கிறார். அதன் முதல் நான்காண்டு அனுபவங்கள் முதல் புத்தகமும் அடுத்த நான்காண்டு அனுபவங்கள் இரண்டாவது புத்தகமுமாக வந்திருக்கின்றன. கால ஒட்டத்தில் முன்னும் பின்னுமாக சென்று வரும் சித்தரிப்புகள் உண்டு. இதன் தொடர்ச்சி "விலங்கிற்குள் மனிதர்கள்" இன்னமும் புத்தக வடிவம் பெறவில்லை. 


சேரிப்பெண்ணை மணியக்காரரின் இளைய மகன் வம்பிழுக்க அதைத் தட்டிக் கேட்கப் போன அவளது அண்ணனுக்கு கத்திக்குத்து கிடைக்கிறது. அதை முறையிட எந்த அரசுத்துறைக்கும் கேட்க செவிகள் இல்லை என்று மக்கள் உணர்ந்த பின்னர் அவர்களுக்காக நியாயம் செய்ய  அங்கு களமிறங்குகிறார்கள் நக்சல்பாரிகள். தியாகு அவர்களில் ஒருவர். மணியக்காரரை அவர்கள் அழித்தொழிக்க முயல்வதின்  மூலம் பசுமையான தஞ்சையில் ஒரு சிவப்புத்துளி படர்கிறது. அதன் பின்னர் சிறிது காலம் சென்றபின்  திருச்சி சேர்மேனை அழித்தொழித்து கைதாகி சிறைக்குச் சென்றபின்னர் சிறைக்கூடம் அவருக்கு ஒரு போதிமரமாகிறது. அங்கு நிகழும் உரையாடலும் சந்திக்கும் மனிதர்களும் சிறையில் நிகழும் சம்பவங்களும் கலந்து ஒரு புரிதலை அளிக்கிறது. 


மூத்த தோழர்கள் ஏஜிகே எனப்படும் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் ஏஎம்கே எனப்படும் ஏ.எம்.கோதண்டராமன் ஆகியோர்களின் ஆளுமைச் சித்தரிப்பு முக்கியமானது. தலைவர்கள் எங்கிருந்தாலும் தலைவர்கள் தான். அவர்கள் காவலர்களுக்கும் "தலைவரே" தான். ஏ.ஜி.கே அங்கும் சக கைதிகளின் வழக்குகளுக்கான மேல் முறையீடு முதல் காவலர்களின் உரிமைக்குரல் உரை அனைத்திற்கும் குரல் கொடுக்கிறார்; போராடுகிறார். சாரு மஜூம்தார் கண்ணதாசன் என ஆளுமைகளை சந்திக்கும் போதும் சரி; சந்துரு, பாலகிருஷ்ணன் போல சக கைதிகளை சந்திக்கும் போதும் சரி; ஒவ்வொருவரிடமும் மாணவராக கற்றுக் கொள்ளவும் வழிகாட்டியாக  சொல்லித்தரவும் தோழர்களாக தோள் கொடுக்கவும் தியாகுவிற்கும் அவரது நண்பர் லெனினிற்கும் பல சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றன. தியாகுவின் வாசிப்பும் சிந்தனையும் ஒரு கட்டத்திற்கு மேல் நக்ஸல் இயக்கம் மீதான தனது நிலைப்பாட்டை  மறுபரிசீலனை செய்யும் இடத்திற்கு அவரை இட்டு வருகின்றன.  அங்கு தோழர்கள் கொள்ளும் கோபமும் ஒருவருக்கொருவர் பேசாமல் இருப்பதும் பின் அவர்கள் உரையாடி தெளிவுறுவதும் என உணர்ச்சிகளும் சிந்தனையும் கலந்த பக்கங்கள்..


சித்தரிப்புகள், சிறைக்கைதிகளின் வாழ்வை விவரிக்கும் போது அவர்களின் கடந்தகாலத்திற்குச் சென்று திரும்புகின்றன. அங்கு அவை ஒவ்வொன்றும் குறுநாவலாகின்றன. தற்போது அவர்களின்  நிலையை சொல்லும் போது கறாரான மதிப்பீடாக ஆகின்றன. சிறைக் கலவரங்களைச் சொல்லும்போது ஆவணங்களாகி விடுகின்றன. சீவலப்பேரி பாண்டி வரும் இடங்களில் மர்மநாவலாகி விடுகின்றன.  தியாகுவும் லெனினும் உடனிருப்பவர்களுக்கு மார்க்ஸியத்தை சொல்லித்தரும் போது தத்துவ நூலாகிவிடுகின்றன. எந்த இடத்திலும் வாசிப்பு சுவாரசியம் குன்றாத ஓட்டமாகவும் விளங்குகின்றன. 




மருத்துவமனையும், நீதிமன்றமும் காவல் நிலையமும் ஒருமுறை உள்ளே காலடி எடுத்து வைத்தவரை தொடர்ந்து இழுக்காமல் விடாது; ஆகவே அந்தப் பக்கம் போகக் கூடாது என்று ஊரில் சொல்வார்கள். நானும் எந்தக் காலத்திலும் ஒரு மனிதன் சிறை செல்லக் கூடாது என்றே விரும்புகிறேன்.  ஆனால் அந்தக் காலம் அப்படி ஒரு லட்சியவாதத்தை சுமந்திருக்கிறது. அதற்குள்ளேயே, சிறைக்குச் சென்றதை சாதனையாக்கி அதன் நேரடி உலகியல் பலனை அரசியல் அதிகாரங்கள் வழி கைப்பற்றியவர்களும் உண்டு. ஆனால், கல்லூரி மாணவராக  இளம் போராளி தியாகு அவர்களின் முதிரா வேகம்,  சிறைக்குள் சித்திரங்களையும் கம்பிகளுக்கிடையே வெளிச்சங்களையும் மட்டும் கண்டடைந்திருக்கிறது. 


இந்த வருடத்தின் முதல் வாசிப்பே இவ்விரு புத்தகங்களாக அமைந்தது மகிழ்ச்சி. எனக்கு கதைசொல்லி என்றால் கி.ராஜநாராயணன் யுவன் சந்திரசேகர் ஆகியோர் நினைவிற்கு வருவார்கள். இனி தியாகுவும் நினைவிற்கு வருவார். இந்தப் புத்தகங்களின் இலக்கிய இடமும் இலக்கியப் பிரதிகளுக்குச் சளைத்தது அல்ல.


விஜயா பதிப்பத்தின் வெளியீடாக வந்துள்ளன.