Tuesday, March 30, 2021

'ஆள்தலும் அளத்தலும்' - எழுத்தாளர் எஸ்.ரா. அவர்களின் வாழ்த்து

எழுத்தாளர் எஸ்.ரா. அவர்களின் வாழ்த்து 

 எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின்  கதாவிலாசம் வாசித்து அதன் வழியாகவே எழுத்தாளர்களையும் படைப்புகளையும் தொகுத்துக் கொண்டேன். அன்று விகடன் போன்ற வணிக ஊடகத்தில் இலக்கியத்தையும் ஆளுமைகளையும் அறிமுகப் படுத்தினார். என் தொகுப்பின் முன்னுரையில் அவருக்கு இதை குறிப்பிட்டு நன்றியும் தெரிவித்திருந்தேன்.வெகுஜன எழுத்திற்கும் இலக்கிய எழுத்திற்குமான வேறுபாட்டை அது (கதாவிலாசம்) உணர்த்தியது.

 சமூக ஊடகங்களின் வாயிலாக வாய்க்கும் இணைய உறவிற்கு அடித்தளமாக அமைந்த ஆர்க்குட் உச்சத்தில் இருந்த காலத்தில், எனக்கு அதில் இலக்கியம் சார்ந்து ஆர்வம் இருந்தது.  அந்த திசை நோக்கி வாசிப்பில் மேலும் உந்திச்செலுத்தியது அன்றைக்கு எங்கள் ஆர்க்குட் கூடுகைக்கு நேரில் வந்து அவர்  ஆற்றிய உரைதான்.

என்னுடைய மொழிபெயர்ப்பு நாவலான தம்மம் தந்தவன் வந்த பொழுது அதை அந்த வருடத்தின் சிறந்த புத்தகங்களில் ஒன்றாக குறிப்பிட்டு அவர்  எழுதியருந்தது என்றும் எனக்கு பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் ஒன்று.

வாசகர் எழுத்தாளரை அறியும் அளவு எழுத்தாளர் எங்கோ ஒரு நகரத்தில் வாழ்ந்திருக்கும் வாசகரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால்  இன்று தொகுத்துப் பார்க்கையில், அவரது  எழுத்துக்கள் வழியாக மறைமுகமாக என் வாசிப்பிலும்,   புனைவுகள் வெளியாகும் தருணங்களில் அதை அடையாளப்படுத்தி நேரடியாகவும்  அவர்  எப்பொழதும் என்னுடன் இருக்கிறார்   என்கிற உணர்வு உண்டாகிறது.




 ஆள்தலும் அளத்தலும் சிறுகதை தொகுப்பு வெளியான பொழுது அதை அவருக்கு   அளித்து ஆசிபெறவே எண்ணினேன். ஆனால் அதை இவ்வளவு விரைவாக வாசித்து இருநாட்களில் அவரது  தளத்தில் அது குறித்து எழுதுவார்  என்று எதிர்பார்க்கவில்லை. நேரில் சந்தித்த பொழுது  என் சிறுகதை தொகுப்பு  குறித்த பாராட்டுகளோடு அது சார்ந்த    மேலும் சில கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளித்தார். அவற்றையும் மனதில்  குறித்துக் கொண்டேன்

இந்த நெருக்கடியான புத்தக கண்காட்சி காலத்தில் கிடைத்த சொற்ப ஓய்வு நேரத்தில் இதை வாசித்து  எழுதியதும் கதைகள் குறித்து உரையாடியதும்  என்னை மிகவும் உற்சாகமாக உணரச் செய்தன. 

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றிகள். 

’ஆள்தலும் அளத்தலும்’ எஞ்சுவதும்- அனங்கன்

 முதல் சிறுகதைத் தொகுப்பு மிகவும் முக்கியமான ஒன்று ஆசிரியருக்கும் வாசகருக்கும்.ஆசிரியன் தன்னை முதன்முதலாக வாசகன் முன் வைக்கும் தருணம் அவன் வாழ்வில் என்றும் இனிமையாக நினைவில் இருக்கும்.ஆசிரியன் தன் வாசகனையும்,வாசகன் ஒரு ஆசிரியனையும் கண்டுகொள்ளும் நிகழ்வு இதன்மூலம் நடக்கிறது.பின்னாளில் அவன் அடையும் உச்சங்களும்   கண்டடைதல்களும்   விதையாக இங்கே உறங்குகின்றன.தமிழில் மகத்தான படைப்பாளிகளின் முதல் தொகுப்புகளில்  அவர்களின் ஆளுமை திரண்டு வருவதை காணலாம். அசோகமித்திரனின் அவருக்கே உரிய கறாரான யதார்த்தவாதம் அவ்வெதார்த்ததிலிருந்து மெலெழும் அழகியல்,இனிமையும் கறிப்புமாக அவர் அளிக்கும் வாழ்க்கை அவரின் முதல் தொகுப்புகளில் நாம் அடையலாம். ஜெயமோகனின் “திசைகளின் நடுவே” என்னும் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பில்,அவர் பின்னால் விரிந்து பரவிய நாட்டாரியல், காவியவாதம்,மாயாவாதம்,கேரள கன்னியாகுமரி வரலாறு கதைகள் என   அனைத்திற்கும் தொடக்கத்தை அங்கே காணலாம். 

அவ்வகையில் ஆர்.காளிப்ரஸாத்தின் “ஆள்தலும் அளத்தலும்” முதல் சிறுகதைத் தொகுப்பு யதார்த்தவாதத்தில் ஆரம்பித்து கதைகளின் வழியே அதை மீறி மேலெழ முயற்சிக்கின்றன. இத்தொகுப்பை வாசிக்கும் பொழுது அசோகமித்திரன் இந்திரா பார்த்தசாரதி கதைகள்நினைவில் எழுவதை தவிர்க்க முடியவில்லை, பெரும் முன்னோடிகளின் கதைகளை நினைவூட்டுவது சாதகமே தவிர எதிர்மறை அம்சம் இல்லை. இம்முன்னோடிகள் போலநகர் சார் வாழ்க்கையை எழுதியதால் அல்ல நினைவிற்கு வருவது அகச்சித்தரிப்பினூடே புறச்சித்தரிப்பும் பின்னி அதன் வழியே கதைகள் செல்கின்றன. உதாரணமாக “விடிவு” “ஆர்வலர்” “ஆள்தலும் அளத்தலும்” கதைகளைக் கூறலாம். குத்தூஸ் தன் வீடு மதம் சார்ந்து கட்டுப்பட்டவராயின் பன்றிகளிடம் அன்புடன் இருக்கவே முயற்சி செய்கிறார்  தாய் பன்றி ஒரு சரடெனில் குத்தூஸ் இப்பக்கம் இன்னொரு சரடு, பேரனுக்காக பன்றிக் குட்டியை குத்தூஸ் தூக்கியதால் தாய் பன்றி குத்தூஸ் இருக்கும் இடத்தை விட்டு தன் வசிப்பிடத்தை மாற்றிக்கொள்கிறது, பன்றிக்கு, மனிதன் தீண்டத்தகாத சேர்ந்து வாழ தகுதியற்றவனாக ஆகும் இடம் கதை முடிகிறது.






ஆசிரியரின் பலம் கதாப்பாத்திரங்களை நம் மனதில் பதியவைப்பது தான்,கதைகளை விட ஆசிரியர் கதாப்பத்திரங்களை சொல்வதில் தான்  அதிக மகிழ்ச்சி அடைகிறார் போலும், அது மனதில் நிற்கவும் செய்கிறது.”பூதம்” கதையில் கதை என்று எதுவும் இல்லை நீலகண்டனின்  அகச்சித்தரிப்பின் மூலம் புறம் விவரிக்கப்படுகிறது.சென்ற தலைமுறையில் தந்தையின் நகையையும் வீட்டையும்  பங்கிட்டுக் கொள்கிறார்கள் சகோதரர்கள்,வீட்டின் மதிப்பு உயர்கிறது, நகை வீடு அளவிற்கு லாபம் தரக் கூடியதாக இல்லை, மனைவி மகளின் நச்சரிப்புக்கு ஆளாகும் நீலகண்டன்,யதார்த்தமாக கோயிலுக்குச் செல்கிறார். அர்ச்சகர் சிவ சந்நிதியில் அலங்காரம் செய்து கொண்டிருக்கிறார்,வேறொரு சந்நிதியில் வரும் மற்றொரு அர்ச்சகர் பிரசாதத்தையும் மாலைகளையும் எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார்,பார்வதி பரமேஸ்வரனை எள்ளி நகையாடும் இடத்தில் கதை தன்னை, பகடியின் மூலம் நிகழ்த்திக் கொள்கிறது.

இத்தொகுப்பின் ஆசிரியரை முழுமையாகக் அடையாளம்  காட்டும் கதை “ஆள்தலும் அளத்தலும்”.வேலைத் தேடி அலையும் “நான்” சமூக பெரியவர்களைக் கண்டு வெறும் பரிசுப் பொருளுடன் திரும்பும் பொழுது வேசியுடன் இருக்கும் தன் சக ஊழியர்களை கண்டு திடுக்கிடுகிறான், பின் சகஜமாக அதை எடுத்துக் கொள்கிறான் .நாஞ்சில் நாடன் முன்னுரையில் சொல்லியிருப்பது போல எதையோ ஒன்றை தேடி மற்றொன்றை கண்டுகொள்வதோடு கதை முடிவடைகிறது. அவன் கண்டடைந்த ஒன்று முழுமையாக வாசகனிடமே உள்ளது. அதே போல் “பழனி” கதையில் பழனியின் மீறல்கள் நன்றாக சித்தரிக்கப்பட்டிருந்தது.அவனின் மீறல்கள் மூலமாகவே கதை நம்மை வந்தடைகிறது.

“கரி” நம் அன்றாட தருணங்களில் ஒளிந்து கொண்டிருக்கும் காமத்தை நுட்பமாக வாசகனுக்கு உணர்த்துகிறது.

“ஶ்ரீஜீ” “விடிவு” போன்ற கதைகளில்  திருப்பத்தை ஆசிரியர் உண்டு பண்ணுவது போல் இருக்கிறது. வடிவ சிதறலும் அநேக கதைகளில் வாசகனின் கவனத்தை சிதைப்பதாக இருக்கிறது.

இக் கதைகளின் வழியே ஆசிரியரின் கண்டடைதல்களையும் பயணத்தையும்   நம்மால் அறிய முடிகிறது. இத்தொகுப்பில் கடைசி கதையான “பராசக்தி” யில் ஆசிரியர் தன்னுடையதான எழுத்தை வந்தடைகிறார் நம் கண்ணுக்கு தெரியாத மின்சாரத்தை, அச்சக்தியை , பெரும் பிரபஞ்சத்தியில் ஒன்றாக காணும் போது கதையும் இத்தொகுப்பும் நிறைவடைகிறது,  பின் நாட்களில் மகத்தான படைப்புகளை ஆசிரியர் தருவார் என்னும் நம்பிக்கையை தருகிறது.

நன்றி:-  அனங்கன்  (https://www.jeyamohan.in/144644/)

தொடர்புடைய பதிவுகள்:-

பண்ணைக்கு ஒருவன்


Sunday, March 28, 2021

வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம் - இருப்பை அர்த்தப்படுத்திக் கொள்ளல்

 

ஒரு புதினத்தின் ஆதாரம் என்பது பெரும்பாலும் அசாதாரண சம்பவங்களே. அதிலும் தன்வரலாறு புத்தகமாக எழுதப்படுக்கையில் அந்த அசாதாரண சம்பவங்களே கதையை முன்னெடுத்துச் செல்கின்றன. எழுத்தாளரும் கவிஞருமான யுமா வாசுகியின் ரத்த உறவு நாவலில் வரும் அசாதாரண குடும்ப வன்முறை ஒரு உதாரணம். அதுபோல சில தன்வரலாற்றுப் புனைவு நாவல்களில்  ஆசிரியர் குறிப்பிட்டுச்   சொல்ல வருவது என்ன என்பதும்   துவக்கத்திலிருந்தே  வருகிறது.  சிலுவை குவா குவா என்று அழுதுகொண்டு எல்லா குழந்தைகள் போலத்தான் பிறந்தான் என்ற வரியிலிருந்து சிலுவைராஜின் சரித்திரம் என்னும் தன்வரலாற்றுப்  புனைவை ராஜகெளதமன் எழுத துவங்குகிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வரியை பகடி செய்திருப்பது போல தோன்றும். சமூகத்தில்  பிறப்பால் /  ஜாதியால்  தாழ்வாக  பார்க்கப்பட்ட ஒருவரின் வாழ்க்கைக்குள்   இப்படித்தான் நுழைகிறோம். ஆனால் இதை எழுத்தாளர் வாசகருக்கு கோடிட்டு காட்டுவது  இல்லை. அவர் எழுத்தின் வழியாக வாசகன்  அறிகின்ற புரிதல்தான் இது. இவ்வகை நாவல்கள், தான் சொல்லவருவது என்ன என்பதை துவக்கத்திலேயே வாசகருக்கு குறிப்பாலுணர்த்தி விடுகின்றன. இவையன்றி பெரும் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த வாழ்க்கை வரலாறும் வாசகருக்கு ஆர்வமூட்டக் கூடியது. பெரும் தொழிலதிபர், தன் வாழ்க்கை வரலாற்றை எழுதும்போதும் அல்லது ஒரு கைதி / குற்றவாளி / போர்வீரன்  தன் கதையை எழுதும்போதும்  வரும் ஆர்வம் அத்தகையது.   ஒருவகையில் வாசிப்பவர் தனக்கு  அணுக்கமாகவும் அதே நேரம் அசாதாரணமானதாகவும் அவர் வாழ்க்கையை உணரவேண்டும். அது இல்லாமல் வெகு சாதாரணமாய் அனைவருக்கும் பொதுவான இளம்பிராயம், காதல், மணவாழ்க்கை வேலை  என்று செல்லும் தன்வரலாற்றுப் புத்தகம் வாசகரை சற்று குழப்பக் கூடும்.  வி.அமலன் ஸ்டேன்லி எழுதி தமிழினி வெளியீடாக இவ்வருடம் வந்திருக்கும் 'வெறும் தானாய் நிலைத்து நின்ற தற்பரம்' இந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்கிறது. அது தன்னை நாவல் என்றோ, தன்வரலாறு என்றோ வரையறுத்துக் கொள்ளவில்லை. பதிப்பகமும் அதை என்னவென்று குறிப்பிடவில்லை. அதை ஒரு தன்வரலாற்றுப் புனைவு என்று வாசக பார்வையில் எடுத்துக் கொள்கிறேன்.  

எழுத்தாளர் ஜெயமோகன், ஹிந்து நாளிதழில் எழுதிய 'புத்தாயிரத்தின் படைப்பாளிகள்' கட்டுரையில் அமலன் ஸ்டேன்லி அவர்களின் அத்துமீறல் நாவலை முக்கியமானதாகக் குறிப்பிட்டிருந்தார். அவ்வகையில் எழுத்தாளரின் பெயர் அறிமுகம் இருந்தாலும் அவரது கவிதைகள், புனைவுகள் என எதையும் வாசித்ததில்லை. இதுவே முதல் புத்தகம்.

ஜெரி மற்றும் சேவியர் ஆகியோர் வாயிலாக துவக்க அத்தியாயங்கள் விவரிக்கப் படுகின்றன. இரு பாத்திரங்கள் வாயிலாக சொல்லப் பட்டாலும்  ஜெரியைச் சுற்றித்தான் கதை நிகழ்கிறது. சேவியர்கூட ஜெரி பற்றித்தான் சொல்கிறான்.  அது அவர்களின் இளமைப் பருவம். ஐ.சி.எஃப்  எனப்படும் சென்னை  பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலையின் அலுவலர் குடியிருப்புதான் அவர்கள் வளர்ந்த இடம். அதைச் சுற்றி நண்பர்கள், பள்ளி, காதல் என செல்கிறது இளமைப் பருவம். இதில் நிகழக் கூடிய அனுபவங்கள் எல்லாம் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த   அனைவருக்கும் பொதுவான அனுபவங்களே. இது சில புத்தகங்களில் அயர்ச்சியை கொடுத்திருக்கின்றன.  இங்கு எழுத்தாளர்,  ஒரு கவிஞராகவும் இருப்பதால் அந்த எழுத்து நடை அதை சுவாரசியமாக சொல்லிச்  செல்கிறது. மேலும் ஒரு முக்கிய காரணம் இவை வெறும் பால்யகால நினைவுத் தொகுப்பு அல்ல என்பதும்  ஜெரியின் பிற்கால தேடல்களுக்கான காரணிகள் என்பதும் வாசிப்பினூடே துலங்கி வருவதும்தான்.




ஜெரி கல்வி முடித்து பணியில் சேரும் தருணம் வரை செல்லும் இந்தக் கதையின்  துவக்க அத்தியாயங்கள் மெல்ல மெல்ல தன் பிற்பகுதியில் ஒரு மெய்யியல் நோக்கில் இலகுவாகத் திரும்புகின்றன. அதன் பின்னான ஜெரியின் தேடல்களும்  அவன் வாழ்க்கையை புரிந்துகொண்டு அமர்வதும் அதன் நிறைவுப் பகுதிகள். ஒரு பெரிய கேள்வி அல்லது தேடல் என்பதற்குள் தன்னை முற்றிலும் ஆழ்த்திக் கொண்டு, விடுபடல் எனறால் அனைத்தையும் வெறுத்து ஒதுங்குவது அல்லது அதிலிருந்து கூட்டுமானவரைக்கும் விலகி இருப்பது என்று செல்லாமல்   உலக வாழ்க்கையின் சிக்கலை எதிர் கொள்ளும் விதத்தை  கண்டறிய முயல்கிறது. 

முதல் அத்தியாயங்களில் வரும் ஜெரியின் உறவினர்கள் மற்றும் சுற்றுப்புர மனிதர்களின் கதையை புரிந்து கொண்டால் பிற்பகுதியில் ஜெரி கொள்ளும் குழப்பங்களையும் அதைக் கவனமாக கையாளுவதும் பிடி கிடைக்கின்றன.  அதை எழுத்தாளர் எங்கும் இணைப்பதில்லை ஆனால் சிறுவயது சம்பவங்கள் வாசிப்பவரின் மனதில் இருப்பதால் அங்கிருந்து எழுத்தாளர் எடுக்கும் நிலைப்பாடு புரிந்துகொள்ளத் தக்கதாய் இருக்கிறது. சங்கர் என்கிற ஒருவர் மணமாகிய பின்னர் இன்னொரு ஈர்ப்பு ஏற்பட அதைக் கையாளத் தெரியாமல் குடிகாரனாக நடைபாதையில் கிடந்து உழலும் ஒரு சித்தரிப்பு முன் அத்தியாயங்களில் வருகிறது. பிற்காலத்தில் ஜெரி தன்  வாழ்வில்  அந்த சிக்கலை அடையும் பொழுது அதை கவனமாகக் கையாளுகிறான். அதேபோல தன்னுடைய ஆய்வக பரிசோதனை எலிகளுக்கு புற்றுநோய்க்கான நுண்ணுயிர்களைச் செலுத்துவது ஜெரிக்கு உண்டாக்கும் அகச்சிக்கலும் குறிப்பிடத்தக்கது. அதே தருணத்தில் தன்னுடைய அக்கா நோயுடன் போராடுவது வருகிறது.

 


நுண்ணுயிர்கள் குறித்த ஜெரியின் சிக்கல் முதலில் பணியிடத்திலிருந்து துவங்குகிறது.    ஒரு காரணத்தில் செயல்படும் பொழுது அதற்கு சம்பந்தமில்லாத வேறு  யாரோ பாதிக்கப்படுவது ஜெரிக்குள் கேள்வியை எழுப்புகிறது.  பணி  நிமித்தமாக எண்ணூர் பகுதியில் ஆய்வு மேற்கொள்பவன் அங்கு தொழிற்சாலை கழிவுகளால் மக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டும்,  உறுப்புச் சிதைவுடனும் பிறப்பதை கண்டறிந்து அது சார்ந்த ஆய்வறிக்கையும் தயார் செய்கிறான். மேலும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த  வேண்டி கூட்டங்களும் நடத்துகிறான். சோதனைச்சாலை எலிகள், தொழிற்சாலையை சுற்றியுள்ள மனிதர்கள் இவர்கள் தவிர தீராத நோயால் அவதியுறும் தன் அக்காள் என அனைத்து துன்பங்களுக்கும் விடை தேடக் கிளம்புவது போல அவன் பயணம் துவங்குகிறது. அப்பொழுது அவன் உணரும் ஒன்று அவனை திகைக்க வைக்கின்றது. எண்ணூர் பகுதியில் பணி புரிகையில் அவர் வெண்ணிற அந்துப்  பூச்சிகள் சார்ந்த ஒரு வாசிப்பை அடைகிறார். முன்பு பர்மிங்ஹாமில்  வெண்ணிற அந்துப் பூச்சிகள் உலவுகின்றன. தொழிற்சாலை கழிவுகளாலும் மாசினாலும் சுற்றுப்புறமே கருமைகொள்ள வெண்மை நிறத்தில் தெளிவாக தனது கண்களுக்குப் புலப்படும் அந்தப் பூச்சிகளை, பறவைகள் எளிதாக பிடித்து உண்கின்றன. போகப்போக இதை உணர்ந்த பூச்சியினம் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டி மெல்ல மெல்ல தன் நிறத்தையே சாம்பல் நிறமாக மாற்றிக் கொள்கின்றன. அந்தப் பூச்சியினத்தின் வெண்ணிற பூச்சிகள் அருகி சாம்பல் பூச்சிகளே மிஞ்சுகின்றன. இது அவனுக்குள் புரிதல்களை ஏற்படுத்துகின்றன. ஒரு எண்ணம் தன் இனத்தின் வண்ணத்தையே  மாற்றுமா என்று அன்றைக்கு ஏற்படும் வியப்பு தானறியாமல் அவனை மெய்யியல் நோக்கிச் செலுத்துகின்றது.  நாவலின் முதல் பகுதிக்கும் இரண்டாம் பகுதிக்குமான மையம் என்று அந்தப் பகுதியை சொல்லலாம்.

 

ஆராய்ச்சி வாழ்க்கையின் வாயிலாக மனிதர்கள்  தன்னுடைய சிந்தனையில் கொள்ளும் இச்சை சார்ந்த பாவனைகளும்  ஜெரியை  அலைக்கழிக்கின்றன. ஆய்வகத்தில் ஒரு ஆண் எலியை பல பெண் எலிகளுடன் இணை சேர்ப்பது போல மனித வாழ்விலும் ஆணின் இயல்பு அதுதான் என்றும் அதை மறுக்கக் கூடாது என்றும் தன்னுடன் இருப்பவர்கள் வாதிடுவதை  அவனது இயல்பு ஏற்றுக் கொள்ளவில்லை. ஆறறிவு என்று மெச்சிக் கொள்பவர்கள் இச்சை என்று வரும்போது ஐந்தறிவு உயிருடன் தன்னைப் பொருத்திக் கொள்ள தயங்கவில்லை என்பது அவருக்கு அச்சத்தையும் சீற்றத்தையும் உண்டாக்குகிறது. புத்தகம் பொதுவாக ஜெரியை ஒரு ஜென்டில்மேனாகவே முன் வைக்கிறது.  அது தவிர, ஜெரிக்கு சில உள்ளுணர்வுகள் உண்டு. அவனால் சிலரின் புகைப்படத்தைப் பார்த்து அவரின் பெயரைச் சொல்ல முடிகிறது. எங்கோ மரணிக்கும் மனிதர்கள் திடீரென அவன் நினைவில் / கனவில் வந்து திகைப்படையச் செய்கிறார்கள். ( இத்தகைய திறன் கொண்ட ஜெரி தனக்குத் திருமணமானது தெரியாமல்  தன்னை அணுகி வரும் பெண்ணின் மனதை அறியாமல் இருக்கிறான் என்பது  ஆச்சரியமே. )

 

நாவலின் பிற்பகுதி முழுவதும் ஜெரியின் தியான அனுபவங்கள் வாழ்க்கைப் புரிதல்களைச் சுற்றி அமைக்கப் பட்டுள்ளன. இயல்பான ஆராய்ச்சி மனம் கொண்ட ஜெரி ஒரு சித்தாந்தத்தில் இருத்திக்  கொள்ளாமல்   பெளத்தம், ரமணர், ஜேகே ஆகியோரின் வழியாக தனக்கான புரிதலைக் கண்டடைகிறான். ஹோமியோபதி மருத்துவ முறையில் ஒரு விளக்கம் சொல்வதுண்டு. அங்கு எந்த நோய்க்கும் அவர்கள் மருந்து அளிப்பதில்லை. நோயாளிக்குத்தான் மருந்து அளிப்பார்கள். ஜுரத்துக்கு இந்த மருந்து என்கிற வழி அங்கு இல்லை. நோயாளியின் உடல்நிலை மனநிலை எல்லாம் அலசப்படும்.  நோயாளிக்கு வரும் கனவுகள் முதல் அவர் உண்ட உணவு வரை கேட்கப் பட்டு  அதற்கேற்ப மருந்து அளிக்கப்படும்.  இங்கு ஜெரிகூட தனக்கான புரிதல்களை தியானமுறைகளை அவ்வாறு தனித்துவம் கொண்ட, தனக்கேயான ஒன்றாக கண்டடைவது இந்த புத்தகத்தின் சிறப்பு. நாம் ஒரு யோக ஆசிரியரை சென்று சேர்வதே பரம்பரையாக நம் குடும்ப மரபில் வரும் ஒன்றை மீறும் ஒன்றுதான். ஆனால அங்கும் நாம் எதிர்கொள்ளும் முதல் கேள்வி, நாம் எந்த யோகா ட்ரெடிஷன் -ல் வருகிறோம் என்பது. அது ஒரு முரண்நகை. ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன்தான். ஒருவருக்கு பொதுவான உடல்நல சிகிச்சையே ஒத்துவராது என்கிற பொழுது, அவனால்  பொதுவான மனநல, தியான அனுபவங்களுடன் எவ்வாறு பொருத்திக் கொள்ள இயலும் என்கிற ஜெரியின் குழப்பம் கூட உண்மையானதுதான். அதனால்தான் அவன் கண்டடைந்த தீர்வு பெளத்தம், ரமணர், ஜேகே என எல்லா வழிகளையும் அறிந்து அதிலிருந்து இவை அனைத்தும் கலந்த ஒன்றைத் தனக்கானதாக கண்டடைந்த விதமாக அமைகிறது. இதை நமக்குத் திறந்து  வைப்பதன் மூலம் ஒரு கைகாட்டியாக ஒரு திசையை வாசகருக்கு இது காட்டுகிறது.




புத்தரின் போதனைகளில் ஆழ்ந்திருக்கும் ஜெரி,  அதன்பின் ரமணாஸ்ரமம் நோக்கி ஒரு உந்துததில் செல்லும் இடம் கவித்துவமான உதாரணத்துடன் வருகிறது. ஜெரி போகும்போது எதிரில் ஒருவன் கையேந்துகிறான். ஜெரி அவனிடம் தனது  கையில் இருந்த கடலை பொட்டலத்தை அளிக்கிறான். அவன் அதைக் கொட்டிவிட்டுச் செல்கிறான். காலிக்கோப்பையில் தான் வேறொன்றை நிரப்ப முடியும் என்பது ஜென் தத்துவம். தான் உதிர்ந்த இடத்தில் ஒடுங்குதல் என்பதும். இதில் தான் யார் என்கிற கேள்வியுடன் அவன் ரமணரை நோக்கிச் செல்கிறான். சேவியர் மற்றும் ஜெரி வாயிலாக குறிப்பிடப்படும் ஜெரியின் வாழ்க்கையில், சேவியர் சொல்வது அவனது புறவெளியும் ஜெரி சொல்வது அவனது அகமும் என்று கொண்டால், இந்த அத்தியாயங்களுக்குப் பின் சேவியர் சொல்வது புத்தகத்தில் எங்கும் வரவில்லை. மொத்தமும் ஜெரியின் அகம்தான் வெளிப்படுகிறது என்றும் எடுத்துக் கொள்ள முடிகிறது.

 

’'பிறப்பு துன்பமானது. வாழ்க்கை துன்பமானது. மரணம் துன்பமானது’ என்பது ஒருவித போதனை. அனைத்து கவிஞர்களுக்கும் புத்தர் ஆதர்சமாக இருப்பதற்கு இந்த சிந்தனை கூட காரணமாக இருக்கலாம்.  தன்னுடைய இருப்பைப் புறந்தள்ளி தன் வாழ்வை கேள்வியாக்கும் படைப்புகள் ஏராளம் வருகின்றன.  அத்தனைக்கும் ஆசைப்படு என்பதும் ஒரு போதனை.  இது மற்றோரு எல்லையாக இருக்கிறது. இது அனைத்தையும் கொண்டாடு. கடன் வாங்கியாவது இன்பமாக இரு என்கிற கோட்பாட்டை கொண்டிருக்கின்றது. இரண்டுமே தன் இருப்பை, அதன் நோக்கத்தை புறக்கணித்து வேறொன்றை நோக்கிய ஒன்றாக இருக்கின்றன. எளிதில் கிட்டும் வழியாக இவை இரண்டுமே இருக்கின்றன. ஜெரி இவற்றுக்கிடையே தன்னை ஆராய்கிறான். இந்த நாவலின் இரண்டாம் பாதி முழுவதும் அதற்கான தேடலைக் கண்டடைகிறான்.  புரிதலை முன்வைக்கிறான். தன் அனுபவம், தன்  வாழ்க்கை, தன் பணி , தன் சுற்றுப்புறம் வாயிலாக ஜெரி கண்டடைந்த ஒன்று. அது இருப்பை நிந்திக்கவில்லை. மாறாக, அது இருப்பை புரிந்து கொண்டு ஆனந்தத்தை அடைய வழி சொல்கிறது. இந்த ஆராய்ச்சிகள் வழியாக மற்றவருக்கான தீர்வோ உபதேசமோ இல்லாமல் தனக்கேயான ஒன்றை வாசகரும் அறியத் தூண்டுகிறது. அதுவே இதன் தனிச்சிறப்பும். இறுதியில் எங்கும் நிறைந்த தற்பரம் தன்னையும் அதன் பாகமாக உணரச் செய்து,  தான் வெறும் தானாய் மட்டுமே நிலைகொள்கிறது