Wednesday, November 14, 2018

கட்டண உரை பயணம் ( தொடர்ச்சி...)



அரங்கம் மிக பரபரப்பாக இருந்தது. வழியிலேயே சாலையில் வண்ணதாசன் தனது நண்பருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அரங்கம் பாதிக்குமேல் நிரம்பி இன்னும் வாசகர்கள் வந்து கொண்டும் வெளியே நண்பர்களுடன் பேசிக்கொண்டும் இருந்தனர். சக்திகிருஷ்ணன், சல்யான் கிருஷ்ணன் இருவரும் இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆகவே மிகவும் பதட்டத்துடனும் இருந்தனர். 5:25 க்கு அனைவரும் உள்ளே வர அரங்கம் நிரம்பியது. ஆனால் ஒரு இறுக்கமான சூழ்நிலை இருந்தது. முதல் கட்டண உரை என்பது காரணமாக இருக்கலாம். அரங்கம் அமைதியாக இறுக்கமாக இருக்க, உரையை ஆரம்பிச்சுடலாம்சார் என்று கிருஷ்ணன் கேட்க ஜெ. சரியென தலையசைக்க, ஒலி அமைப்பாளர் என்ன நினைத்தாரோ, உடனே தன் ஒலிப்பெருக்கியையும் இசைத்தட்டையும் இயக்கினார்.. ”பல்ட்டி பக்குர டர்ல வுடனும் பல்த்து..வெர்ல்டு மொத்தமும் அர்ல வுடனும் பிஸ்த்து..” என சிம்டாங்காரன் அலற ஆரம்பிக்க, உடனே கிருஷ்ணன் அதை நிறுத்தச்சொல்ல.. மொத்த அரங்கும் கலகலத்தது. வண்ணதாசனுமே சிரித்தார். இந்த நேரத்தில் கவிஞர் விவேகாவைப்பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும்.  எனக்கு திருமணமான புதிதில் ஆர்த்தியுடன் முதல் சண்டை துவங்கியிருந்த நேரம் அது. அவள் முகத்தை அலமாரி மேல் வைத்துக்கொண்டு நிற்க, நானும் கோபித்துக்கொண்டு பேசாமல் டிவியை ஆன் செய்தேன். அதில் அப்போது எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி,  மியாவ் மியாவ் பூன போன்ற பாடல்களை எழுதிய பிரபல கவிஞர் விவேகாவின் பேட்டி ஒளிபரப்பானது. பேட்டியெடுப்பவர், ”சார் நீங்க சமீபத்துல எழுதின பாடல் என்ன சார் அந்த கவிதையை சொல்ல முடியுமா” என்று கேட்டார். அதற்கு அவர், இப்ப ஒரு படத்துல கவிதை எழுதி எல்லோரும் நல்லாருக்குன்னு சொன்னாங்க சார்.. அந்த கவிதை என்னான்னா..” ஒரு மணி ரெண்டுமணி.. நீ ஓரமா போடி குண்டுமணி” ங்கிற கவிதைதான் என்று சொல்லிய போது நாங்கள் இருவரும் கடகடவென சிரிக்கத்துவங்கினோம். தற்போது மீண்டும் நிகழ்காலத்துக்கு வருவோம்..ஒன்பது ஆண்டுகளுக்குள் இருநூற்றைம்பது பேரின் இறுக்கத்தை போக்கும் அளவு கிட்டத்தட்ட அதே பெயரில் கவிஞர் விவேக் என ஒருவர் வந்துவிட்டார்  என நினைத்துக் கொண்டேன்.




ஜெ. உரைக்கு முன் கிருஷ்ணன் இந்த புதிய முறையான கட்டணஉரை பற்றி ஒரு நிமிடம் பேசினார். சென்றமுறை விஷ்ணுபுரம் விழா மேடையில் கவனித்தது போலவே, இங்கும் அவர்  பேசுகையில் வாக்கியத்தில் செய்வினை செயப்பாட்டுவினை சிக்கலில் சிக்கியிருப்பது கண்டேன். இலக்கிய வாசகர்களுக்குப் பிரச்சனையில்லை.. ஆனால் கச்சேரியில், “ கனம் கோர்ட்டார் அவர்களே, எனது கட்சிக்காரர்  எதிர்கட்சிக்காரரை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்” என்று வாதாடினால் நீதியரசர்கள் குழம்பிவிட மாட்டார்களா..


அடுத்து, ஜெ. வை உரையாற்ற கிருஷ்ணன் அழைத்தார். ஜெ. உரையாட எழுந்த அதே நேரம் இரு சம்பவங்கள் நிகழ்ந்தன. குருஜியின் மகன் சத்யா யாராலோ கிள்ளப்பட்டது போல அழத்துவங்கினான். அஸ்வத்க்கு பிஸ்கெட் சாப்பிட்டே ஆக வேண்டிய தாகம் எதானாலோ ஏற்பட்டது. அவனும் நச்சரிக்கத்துவங்கினான். சாதாரண உரையிலேயே யாராவது தும்மினால் ஃபஸ்ட் பெஞ்ச் பசங்க திரும்பிமுறைப்பார்கள். இது கட்டண உரை வேறு. அதனால், அஸ்வத்தை தூக்கிகொண்டு வெளியேறினேன். கதவை சாத்தும்போது அந்த இடுக்கில் புகுந்து வெளியே வந்த விஸ்வாவும் அத்விகாவும் விளையாட ஆரம்பித்திருந்தார்கள். உரையாற்றிய நேரம் முழுவதும் நானும் குருஜியும் குழந்தைகளை கவனித்துக்கொண்டு ஹாலில் நின்றிருந்தோம். உரை முடிந்து வெளியே வரும்போது ஒருவர் அருகில் வந்து “சூப்பர் ஸ்பீச்..செமயா இருந்ததில்ல” என்றார்..” ஆமாங்க அதிலும் சிந்தனையாளனின் அறம்னு ஒண்ணு சொன்னாரு பாருங்க” என்றேன்.. அது எப்போ என்று அவர் திரும்ப கேட்டதை கவனிக்காதவன் போல குழந்தையை தாயிடம் அளிக்க உள்ளே ஓடிவிட்டேன்.



ஜெ . உரையற்றிக்கொண்டிருந்தபோது, வெளியே பாரதி இளங்கோ அண்ணனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். விகடனில் தொடராக வந்த வெள்ளிநிலம் அச்சில் வந்துவிட்டது. அது சேலம் பிரசாத் திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது கண்டு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அவன் தன்னை பெருங்காதலனாக எண்ணிக்கொண்டிருப்பவன். மோமோவையும் பேரழகியாக காண்பவன். கன்னிநிலம் ரேஞ்சுக்கு நினைத்திருப்பவனுக்கு வெள்ளிநிலத்தை அளித்த ஆசானின் நகைச்சுவையை எண்ணி அவனை அழைத்துக்கூறினேன்.  அவன்சேதி கேட்டு உணர்ச்சிவசப்பட்டு நின்றுவிட்டான். முருகனைக்கண்ட ஏவிஎம் ராஜன் அளவிற்கு ஆகிவிட்டதால் என் கருத்தை குறுஞ்செய்தியாக மட்டுமே அனுப்பினேன்.. தாமதமாக விழாவுக்கு வந்தவர்கள் அவசர அவசரமாக உள்ளே சென்றனர். இருந்த இரண்டு மூன்றுசீட்டுக்களை பாரி கருப்புச்சந்தையில் விற்றார். அப்புறம் என்னைப்பார்த்து சில்லறை இல்லீங்க.. திரும்பி வரும்போது மீதி வாங்கிக்கச்சொன்னேன் என்று கூறினார். சிறப்பு அழைப்பாளராக இருந்த  நெல்லைத் தமிழ்சங்கத்தை சேர்ந்த இருவர் தாமதமாக வந்தனர். ஆனால் அவர்கள் ஏழுமணி சுமாருக்கு வந்ததால் அவர்கள் உள்ளே சென்ற சிறிது நேரத்திற்குள் உரை முடிந்துவிட்டது. எனக்கு ஜெ.வுடன் இரு வாக்கியங்களே பேச முடிந்தது. அவர் வாசகர்களால் சூழப்பட்டிருந்தார். பிறகு குரூப் போட்டோ எடுத்துக்கொண்டு கிளம்பினோம். மீண்டும் ஒரு விசாகா ஹோட்டல் உணவு..

அன்றிரவு மண்டபத்தில் ஒருவருக்கொருவர் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ந்தது. படித்தது, வளர்ந்தது திருமணமானது இலக்கியம். என. வாசகர்கள் ஒவ்வொருவரும் இலக்கியத்தின் பயன் மதிப்பு என்ன வென்பதை மனைவியிடம்தான் கேட்டறிய வேண்டும். தள்ளிநின்று கேட்பவர், “என்னடா உன் நிலமை காறித்துப்பறாப்லல்ல இருக்கு “ என வடிவேலு ரியக்‌ஷன் கொடுக்க வாய்ப்பிருக்கிறது.


மறுநாள் இலக்கியப்புகழ்பெற்ற, குறுக்குத்துறையை அடைந்தோம். அந்த ஏரியாதான் ஜாஜா பிறந்து வளர்ந்த இடம்.. ஒவ்வொன்றாக அவர் விவரிக்கையில், கங்கா சந்திரமுகியாக மாறுவதை கண்டேன். இதுதான் சுகா எழுதின் ஹோட்டலு,  அதோ போறாரு பாரு அவர் பேரு செந்தில்நாதன்,  இது பாரதியார் படிச்ச ஸ்கூலு, இந்த ஆபீஸ்லதான் நான் வேல பாத்தேன்,  இந்த ரோட்டுலதான் முதல்தடவை…. தூரத்தில் கோபியர் கொஞ்சும் ரமணா பாடல் ஒளிபரப்பாகிகொண்டிருந்தது. கூகுள் மேப் இல்லாமலேயே வாசகர்கள் சென்றடையும் விதம் அறிமுகமாகியிருந்த குறுக்குத்துறை எதிபார்த்ததை விட அழகாக இருந்தது. ஒருநாள் குளித்தால் ஒரு கவிதை தொகுப்பு போட்டுவிடலாம். அத்விகாவும் ஜுரம் விட்டு, ஆற்றில் ஆட்டம் போட ஆரம்பித்தாள். பெண்கள் அனைவரும் வட்டமாக நின்று முங்கிக் குளித்தனர். முங்குவதற்கு முன் என்னமோ சொன்னமாதிரி இருந்துச்சே.. சா பூ த்ரீயா என கரையேறியதும் ஆர்த்தியிடம் கேட்டேன். அவள் சீற்றத்துடன் மறுத்து அது ரிங்கா ரிங்கா ரோசஸ் என்று கூறினாள்.



அடுத்து கிருஷ்ணாபுரம் கோயில். அங்கிருந்து விட்டலாபுரம் போகலாம் என்று நினைத்திருந்தோம் ஆனால் நேரம் கருதி செல்ல முடியவில்லை. கயத்தாறு புளியமரத்தையே ரோட்டிலிருந்து திசை நோக்கித்தான் கும்பிட்டேன். ஓட்டுநர் தன் சேகரிப்பில் இருந்த 80களின் பாடல்களை ஒலிபரப்பினார். 80 களின் பாடல் என்றதும் நம் நினைவில் வரும் மோகன் பாடல்களும், பாடறியேன் படிப்பறியேன்களையும் கவனமாக தவிர்த்து சேகரிக்கப்பட்ட பாடல்கள். ஒரே படத்தின் பாடல்களில் சந்தோஷப்பாடல்களை தவிர்த்து சோகப் பாடல்களை மட்டும் வைத்திருந்த  அந்த  தொகுப்பை அலறவிட்டார் ஓட்டுநர்.  இவை அனைத்தும்கூட எனக்கு ஞாபகம் இருந்தன என்பதும்  ஆச்சரியம். அது சேடப்பட்டியில் சரண்யா இறங்குகையில் “குடகுமலை காற்றில்வரும் பாட்டு கேட்குதா ..ஏதோ நினைவுதான் உன்னைசுத்தி பறக்குது“ என சந்தோஷின் மனதை வெளிப்படுத்தியது. ஊரப்பாக்கத்தில் வெங்கட் இறங்கும்போது..” சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை.. அது தேடுது தன் உறவை..” என்றது. வீட்டிற்கு வரும்போது நள்ளிரவு மூன்று மணி.. 

மறுநாள் காலை எழுந்திருக்கவே பத்துமணியனது. ப்ராஜெக்ட் மேனேஜர்.. “ கால் இருக்கே..ஜாயின் பண்ணலையா..” என எழுப்பிவிட்டார்.. திருநெல்வேலி போய்விட்டு வந்தேன் என்று சொன்னதும்.. “ ஐயையோ.. ஸ்ட்ரிக்ட்டான கஸ்டமராச்சே.. இந்த கால் க்கு நீங்க கண்டிப்பா வேணும்.. இருந்தாலும் சமாளிச்சுகிறேன்.. வரும்போது என் டெஸ்க்குக்கு வந்துட்டுப்போங்க” என்றார். சரியென எழுந்தபடி, வீட்டுக்கு - ஆபீசுக்கு என தனித்தனியாக அடுக்கி இருந்த டப்பாக்களில் இருந்த லக்‌ஷ்மிவிலாஸ் அல்வாக்களில் வீட்டுகணக்கில் இருந்து ஒன்றை எடுத்து ஆபீஸ் வரிசையில் வைத்தேன்..” நெல்லையில் அல்வா கிண்டும்வரை  கொலை செய்தாலும் சமாளித்துக்கொள்ளலாம் என்று நினைத்தபடி பல்துலக்கச்சென்றேன்..

கட்டண உரை பயணம்

எச்சரிக்கை:- நெல்லையில் ஜெ. ஆற்றிய கட்டண உரை பற்றிய என் கருத்துக்கள் இங்கு இல்லை…



நெல்லை செல்வது பிரச்சனையில்லை. ஆனால், தீபாவளி நேரத்தில்  திரும்பி வர பயணச்சீட்டு கிடைப்பதுதான் கடினம்.  அதிலும் மறுநாள் வேலைக்குச்செல்ல, அன்று மதியம் கிளம்பி இரவு சென்னை வந்தடைவதுதான் வசதியானது. ரயிலில் முன்பதிவு செய்யச் சொன்னபோது ஜாஜா இவ்வாறு கூறினார். அதற்கு எதிர்வினையாக, அதுக்கு நீங்கதான் சொந்தமா வண்டி வாங்கி விடனும் என்று நான் சொல்ல, சொந்தமா எதுக்கு வாங்கனும் ஒரு வண்டி ஏற்பாடு செஞ்சா போதாதா என்ற நியாயமான கேள்வியைக் கேட்டார் சண்முகம் அண்ணன். கட்டண உரைக்கு குடும்பத்துடன் ஒரு  செல்லலாம் என்ற எண்ணம் இப்படி கணப்பொழுதில்தான் உதித்தது. வெள்ளியன்று காலை எட்டரை மணிக்கு அச்சிறுபாக்கத்தில் காலை சிற்றுண்டி உண்டு வண்டியேறியபோது, வண்டியில் ஓட்டுநர் தவிர நான், ஆர்த்தி அத்விகா அஸ்வத்  என மனைவி குழந்தைகளுடனும் ஜாஜாவும் சுபா விஸ்வா என தன்  குடும்பத்தினருடனும், செளந்தர் சாரதா சத்யா என மனைவி குழந்தையுடனும்  சண்முகம் பாரதி,  ஸ்ரீநிவாசன் சுதா  என தம்பதி சமேதராகவும், ராகவ் ராஜசிம்மனுடன் சகோதர சமேதராகவும் எழுத்தாளர்: பானுமதி, சிவகுமார், ரவீந்திரன், சந்தோஷ், வெங்கட்ரமணன் மற்றும் காஞ்சீபுரம் சிவகுமார் ஆகியோர் தனியராகவும்  என இருந்தோம்.




  ஓட்டுநர் அறையில் அவருக்குப் பின்னால் அமர்ந்து சாலையை வேடிக்கை பார்த்தபடி வருவது மிக இனிமையானது. சாலையை விட முன்னால் செல்லும் வண்டிகளில் உள்ள படங்களும் வசனங்களும் சுவாரசியம். வண்டிக்குப்பின்னால் அதை ஒட்டுவதில் ஒரு காரணம் இருக்கிறது என்பது அப்போதுதான் புரிந்தது. முன்னால் செல்லும் வண்டிகள் நமக்கு ஒரு செய்தியை சொல்கிறன. நாம் அவசரமாக முந்திச்செல்ல முயன்றால், அந்த வண்டியின் பின் கண்ணாடியில் உள்ள ஷீர்டி சாய்பாபா, கால் மேல் கால் போட்டு அமர்ந்து தனது வலது உள்ளங்கையை காட்டி பொத்துனாப்ல பின்னாடி வாப்பா என்கிறார். சில இடங்களில் பாலமுருகன் அங்கிள் வேகமா போகாதீங்க என கெஞ்சுகிறார். சரியென்று நாமும் பின்வாங்குகிறோம். என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என என்று ஒருவர் எழுதிவைத்து அடம்பிடிக்கிறார். சரி நீங்களே முன்னாடி போங்க என்று விட்டுவிட்டோம். மிக அதிகமாக கண்டது செந்தூர ஆஞ்சநேயர் தன் ஒரு பக்க முகத்தை மட்டும் காட்டி மிரட்டுவது தான். வந்துதான் பார்றா என்பது போல…


ஓட்டுநர் தன் சேகரிப்பில் இருந்த 80களின் பாடல்களை ஒலிபரப்பினார். 80 களின் பாடல் என்றதும் நம் நினைவில் வரும் மோகன் பாடல்களும், பாடறியேன் படிப்பறியேன்களையும் கவனமாக தவிர்த்து சேகரிக்கப்பட்ட பாடல்கள். ஒரே படத்தின் பாடல்களில் சோகப்பாடல்களை தவிர்த்து மற்ற பாடல்களை மட்டும் வைத்திருந்த  அந்த  தொகுப்பை அலறவிட்டார் ஓட்டுநர்.  அனைத்தும் எனக்கு ஞாபகம் இருந்தன என்பதே ஆச்சரியம். தூதுவலைய அரைச்சு தொண்டையிலதான் நனைச்சு பாடலை கூட சேர்ந்து பாட முடிந்தது.. அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் பாடல்தான் என்பது இசைக்கருவிகள் ஒலிக்க துவங்கும்போதே தெரிந்துவிட்டது. அரும்பாகி மொட்டாகி பூவாகி பாடல் அடுத்து வரும் என்று ஆசையில பாத்திகட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி என்ற பாடல் ஒலிக்கும் போதே மனம்  காத்திருக்கிறது. கூடவே, இதுபோல பாடல் கேட்கும் உணர்வுகளை தொகுத்து எழுதிய  எழுத்தாளர் சுகாவின் ஞாபகமும் வந்தது. அவர் எழுத்தின் வழியாக மட்டுமே அறிந்து வந்த நெல்லை மண்ணிற்குப் போகிறேன் என்ற எண்ணமும்..



அன்று மாலையே நெல்லையப்பர் கோவிலை அடைந்துவிட திட்டம். கிட்டத்தட்ட நடை சாற்றுவதற்கு முக்கால்மணிநேரம் முன் அங்கு எட்டினோம். அத்விகாவிற்கு திருச்சி எட்டும் முன்பே காய்ச்சல் வந்துவிட்டதால் மிக சோர்வாக இருந்தாள். பாராசிடமால் இருமுறை அளித்திருந்தோம். மதியம் உணவும் அதிகம் உண்ணாமல் இருந்ததால்   நெல்லையப்பர் கோயில் கொடிக்கம்பம் வரை வந்தவள் முடியல என்று அமர்ந்து கொண்டாள். ஆகவே, அவளுக்கு உணவு வாங்கித்தர வெளியே அழைத்துச்சென்று வந்து, யானைக்கு அருகில் இருவரும் உட்கார்ந்து கொண்டோம். யானை தேங்காய் மூடியை மிதித்து உடைத்து ஓடை விலக்கிவிட்டு தேங்காயை மட்டும் உண்பதை ஆச்சரியத்துடன் கண்டாள். அந்த யானைக்கு காந்திமதி என்று பெயர். அந்த பாகன் சுவாமிமலையை சேர்ந்தவர். நான் மன்னார்குடி என்றதும் உற்சாகமாக ஊர்கதைகளைப்பேசினார். தற்போதைய மன்னார்குடி யானை செங்கம்மாவிற்கு முன் அங்கிருந்த செங்கமலம் என்கிற பெரிய யானையையும் அவர் கவனித்துக்கொண்டிருக்கிறார். காந்திமதி வாழைஇலையை நடுக்காம்பை விட்டுவிட்டு இலையை மட்டும் பிய்த்துத்தின்பதை ஆரம்பித்திருந்தாள். அதற்குள் மற்ற குழந்தைகளும் வந்து யானையுடன் விளையாடத்  துவங்கினர். பின் மெதுவாக மற்றவர்கள் சந்நிதியை விட்டு வெளியே வந்தனர். கொட்டிலுக்கு காந்திமதியை வழியனுப்பிவிட்டு, நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்த  மண்டபத்திற்கு வந்து சேர்ந்தோம். ஜாஜா அந்த இடத்தை ஏற்பாடு செய்திருந்தார். வரும்வழியில் சந்தோஷின் தோழி எங்களுடன் இணைந்துகொண்டார்.

மறுநாள் காலை திருப்புடைமருதூர் சென்றோம். வழியில் முக்குடல் என்ற ஊரில் காலை உணவு. அப்பா அங்க பாரு ஷண்முகம் அங்க்கிள் மாதிரியே ஒரு சர்வர் இந்த ஹோட்டலில் இருக்காரு என்று காட்டினாள் அத்விகா. பார்த்தால், அது மாதிரி இல்லை அவரேதான் என்பது உடனே புரிந்தது. சென்னையில் பிரபல பில்டராக இருக்கும் அவர் அந்த ஹோட்டல் பணியாளர்களை சித்தாள் ரேஞ்சுக்கு வேலை வாங்கிகொண்டிருந்தார். வண்டி ஏற்பாடுமுதல், உணவகங்களின் தரம் பார்த்து அழைத்துச்செல்வது வரை அவர் வேலைதான். 


திருப்புடை மருதூர்   கோவிலுக்குப்பின்னால் தாமிரவருணி ஓடுகிறது. அங்கு தான் காலை குளியல். அத்விகாவிற்கு ஜுரம் என்பதால் அவள் கால் மட்டும் நனைத்திருக்க மற்ற அனைவரும் இறங்கி குளிக்கத்துவங்கினோம். குழந்தைகளின் பற்கள் தந்தியடிக்க இன்னும் இன்னும் என்று கேட்டு ஒவ்வொருவர் முதுகாக ஏறிச்சென்று குளித்தனர். அதற்குள் குழந்தைகள் அனைவருடனும் அதிகம் நெருங்கி விளையாடத்துவங்கியிருந்தனர். ராகவ் பிரதர்ஸும் சந்தோஷும் வெங்கட்டும் அவர்களை ஒருவர் மாற்றி ஒருவர் தூக்கிச்சென்றனர். அங்கு படிதுறைக்கு சற்றுத்தள்ளி நடு ஆற்றுக்கு முன்பாக மணல் மூட்டையை அடுக்கி ஒரு மேடை போல வைத்திருக்கிறார்கள். திருப்பதி போன்ற இடங்களில் பொதுவாக கம்பித்தடுப்பு போட்டு மக்கள் ஆழப்பகுதிக்குச் செல்லாமல் தடுக்கும் ஏற்பாடுபோலத்தான் அது. சென்றமாதம் நடந்த புஷ்கரம் விழாவிற்காக இந்த தற்காலிக ஏற்பாடு. ஆனால் இப்போது  ஓடும் நதிக்கு நடுவே உட்கார்ந்துகொண்டிருக்கலாம் அங்கு. நல்லதொரு அனுபவமாக இருந்தது. அந்தக்கோயிலின் மதில் சுவற்றைச்சுற்றியிருந்த மரங்களில் பழந்தின்னி வெளவ்வால்கள் இருந்தன. அவ்வளவு பெரிய வெளவ்வால்களை நான் கண்டது அதுவே முதல்முறை. அந்தக்கோயிலின் வீடியோக்களும் புராணங்களிம் தகவல்களும் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன

அங்கிருந்து சென்றது பாபநாசம் அருவிக்கு. நாங்கள் சென்றபோது, எவனெவனோ எங்கிருந்தோ  வாரான் குளிச்சி பாவத்தைக்கழுவறான் என்ற கமல் வசனம் நினைவிற்கு வந்தது. தூரத்திலிருந்து காண்கையில் ஒரு கரும்பானையில் மெல்லிய ஓட்டை விழுந்து  தயிர் மெல்ல ஒரு கோடாக வழிந்து ஓடுவது போல இருந்தது.  ஆனால் அருகே சென்ற போது அதன் வேகமும் அளவும் தெரிந்தன. ஒருநிமிடம் அதனடியில் நின்றாலே முதுகு சிவக்கும் அளவு அடி.. பள்ளி நாட்களில் கூட இவ்வளவு வாங்கியதில்லை.  இங்கும் குழந்தைகளின் தாவல்கள். குதியாட்டங்கள். அதற்கு மேலிருந்த கல்யாணி தீர்த்தத்தை ஸ்ரீநிவாசன் சார் மட்டும் சென்று பார்த்து வந்து பிரமித்துக்கூறினார். அதற்கும் மேலே உள்ள சொரிமுத்து ஐயனார் கோவிலும் அருவியும் உள்ள இடத்திற்குச் செல்லும் பாதையை மட்டும்  ஜாஜா காட்டினார்.  பாபநாசத்தில் மேலும் ஒரு குளியல் மதிய உணவு என ஒருமணி நேரத்துக்கும் மேலாக ஆட்டம் போட்டு விட்டு மாலை ஜெயமோகன் உரையைக்கேட்க அரங்கிற்கு வந்தோம். வரும் வழியிலேயே ஆங்காங்கு இருந்த உரை குறித்த விளம்பரப் பதாகைகளைக் கண்டோம். மண்டபத்துக்குச்சென்று உடை மாற்றிக்கொண்டு வருவதாகத்தான் திட்டம். ஆனால், அதிகநேரம் நீரிலேயே ஆடிவிட்டதால் அணிந்திருந்த வேட்டி சட்டையும் பரட்டைத்தலையுமாய் ஒரு இலக்கியவாதியாகவே மாறி அரங்கை நிறைத்தோம்.

Sunday, November 4, 2018

ஆர்வலர் - சிறுகதை



குத்தூஸ் தன் தெருமுனைக்கு வந்து மறுமுனையில் தோரணங்களோடும் அலங்கார விளக்குகளோடும் இருந்த சமுதாய கூடத்தை நோக்கினார். அப்போது அவருக்கு எதிர் திசையிலிருந்து வந்த இருவர்கம்மூனிட்டி ஹாலுக்கு எப்படி போகனும் என வழி கேட்டனர். அவர்கள் வண்டியின் முன்புறம் தேநீர் நிரப்பிய பெரிய குடுவை அடியில் குழாயுடன் இருந்தது. பின்னால் இருந்தவர் கையில் பெரிய பிஸ்கெட் பொட்டலங்களும் இருந்தன. அவர்களுக்கு வழி சொல்லிவிட்டு, இன்று அங்கு நடக்கும் ஜான்சி நகர் நல சங்க கூட்டத்திற்கான ஆரம்பம் இந்தத் தெருமுனையில் அதுவும் இந்த இடத்தில்தானே நிகழ்ந்தது என எண்ணியபடி அதை நோக்கி நடந்தார் குத்தூஸ்.
அன்று காலை சுகாதார ஆய்வாளர் வந்தபோது எப்போதும் போல ராஜசேகருக்கும் சுந்தர்ராமுக்கும் பெரிய விவாதமே நடந்தது. அந்தப் பகுதியின் குப்பை தூர்வாரப்படாமல் பன்றிகள் கூட்டமாக அங்கு புழங்குவதுதான் முக்கிய காரணம். குப்பைகளைவிட பன்றிகள் பெரிய பிரச்சனையாக இருந்தன.
எல்லாப்பன்னியையும் தூக்கிட்டுப்போய் சுட்டுப்போடுங்க என்றார் ராஜசேகர்.
குப்பையை எடுத்துட்டுப்போங்கபன்னிங்க தானா போயிரும்இது சுந்தர்ராம்.
போட்க்ளப் ரோடுல அண்ணாநகர்ல ஒரு பன்னியாவது கண்ல படுமா…? எல்லாத்தையும் கொண்டுவந்து இங்கவுட்டுட்டாங்க…”
அங்க இருக்கிவங்க மாதிரி நீங்களும் குப்பையை தொட்டில போடுங்க. நீங்களே சோறுபோட்டா உங்களத்தான் சுத்தி சுத்திவரும்.
அரைமணிநேரம் நீடித்துக்கொண்டு போனது அந்தப் பேச்சு. ராஜசேகர் மற்றும் சுந்தர்ராமின்  டாம் அண்ட் ஜெர்ரி பிரச்சனை ஒரு முடிவை எட்டி நகர்வாசிகள் கண்டதில்லை

ஜான்ஸி நகரில் குத்தூஸ் வீட்டின் காம்பவுண்டிற்குப் பக்கத்தில் சந்து என்றும் மனை என்றும் சொல்லமுடியாத ஒரு இடம் கேட்பாரற்று கிடக்கிறது. செடிகளும் புதர்களுமாக இருக்கும் அந்த இடம். கழிவு நீரும் அங்கு தேங்கும். குத்தூஸும் மீந்து போன உணவை அவ்வப்போது அங்கு கொட்டுவதுண்டு. சேறும் சகதியுமாகவே இருக்கும் எப்போதும். அந்த சேற்றுக்குதான் பன்றிகள் வருகின்றன.
 சம்பத் சார்! பொது வேலைன்னா எடுத்து செய்யறீங்க. நாலு விஷங்களும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க.. என்னை கூப்டுட்டு வந்துட்டு சும்மா நின்னா எப்படி சார்? எதாச்சும் சொல்லுங்க!” என்றார் ஆய்வாளர் சம்பத்தை நோக்கி.
சம்பத் காய்ந்த மாலையை இன்னும் தன் வண்டியிலிருந்து கழட்டியிருக்கவில்லை. வண்டி எண்ணும் இன்னும் வரவில்லை. பழையவண்டி ஓரளவு நல்ல விலைக்கு போனது. பன்னி இடிச்ச வண்டின்னு விற்கும்போது சொல்லக்கூடாது என அவர் அறிந்தே இருந்தார்.
“’சென்னைல மத்த ஏரியால தெருநாய்ங்க பிரச்சனைன்னா எங்களுக்கு பன்னிங்க பிரச்ச்னையும் கூட சேர்ந்து இருக்கு. மாநகராட்சிலேந்து வந்து மத்த இடங்களிலெல்லாம் பூங்காவே வச்சுத்தறீங்க. ஆனா எங்க நகர்ல மட்டும் இன்னும் பன்னிதான் மேயுது. பன்னிய தூக்கிட்டுப் போவீங்களோ இல்ல குப்பையை எட்டுத்துட்டுப் போய் பன்னிய விரட்டுவீங்களோ எல்லாம் உடனடியா பண்ணனும்.  அதான் உங்களை கூட்டு வந்தேன்.’ சம்பத் தொடர்ந்தார்.
இப்ப நம்ம பாயை எடுத்துக்கங்க. அவங்க வீட்ல எல்லோரும் அஞ்சு வேளை தொங்க. அப்ப பன்னி சத்தம் கேட்டா அவங்களுக்கும் அது ஹராம் இல்லையா…? நாமதான் சார் ஏதாவது செய்யனும்.”
குத்தூஸ் சம்பத்தை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தார்.

சம்பத்திற்கு ஹராம் எல்லாம் தெரிந்திருக்கிறது. அவர் தன்னை வழியில் எங்கு பார்த்தாலும் தன் கையில் இருக்கும் காய்கறிபையை கண்டும் தொழுகைக்கு போயிட்டு வறீங்களா என்றுதான் கேட்பார். அப்படி பொதுவாகவும் கேட்கமாட்டார். நேரத்துக்குத் தகுந்தபடி ளுகரா, அஸரா என்றுதான் கேட்பார்.
குத்தூஸ் தாம் கடைசியாக ஐந்துவேளை தொழுதது எப்போது என யோசித்தார். மதியமும் மாலையும் முடிவதே இல்லை. மகனும் ஐந்து வேளைகள் தொழுவதில்லை. அலுவலகத்திற்கு ரெண்டுங்கெட்டானாக மதியம் மூன்று மணிக்கு கிளம்பிப்போய் காலை ஐந்து மணிக்கு வருகிறான்.
ஆனால் சம்பத் சொன்ன கருத்துக்கு மாற்று என யாரும் சொல்லவில்லை. அன்று மாலை இருவர் வந்து ஒரு கயிற்றை நீட்டிப்பிடிக்க மற்றொருவர் துரத்த, ஓடிவந்த பன்றிகளில் ஒன்றை கயிற்றில் தடுக்கிவிட்டு பிடித்துச்சென்றனர். ஆய்வாளர் வந்ததற்கும் இதற்கும் தொடர்பில்லை. வாரம் ஒரு பகுதியில் இது நடக்கும். பின் ஞாயிறு அன்று புளியமரத்தடியில் பாளம் பாளமாக காணக் கிடக்கும் இறைச்சியாக சென்றுவிடும்.
அந்தப்பன்றியின் கேவல் வெகுநேரத்திற்கு கேட்டுகொண்டுதான் இருந்தது.
பன்றியின் சத்தம்கூட ஹராமா என ஜமாத்தில் கேட்கவேண்டும்என நினைத்துக்கொண்டார் குத்தூஸ்.

ஓல்ட் மெக்டோனால்ட் என்று அவர் பேரன் அவரை அழைப்பான். அவனைப்பார்த்து பிற குழந்தைகளும் அதையே சொல்லத்துவங்கின. அவர் வீட்டு பக்கத்திலிருக்கும் அந்த இடத்தில் ஒவ்வொருமுறை மாட்டையோ நாயையோ பன்றியையோ பார்க்கையில்,
மூம்மூ ஹியர்
ஒய்ங்க் ஒய்ங்க் ஹியர்
பவ் பவ் ஹியர்
என பாடுவான். கூட பேத்தியும் கையை அசைத்து ஆடுவாள். அவர் மகன் வேலைக்கு போய்வந்து காலையில் தூங்கும்போது அவர் பேரக்குழந்தைகளை சிலநேரம் வெளியே அழைத்து வந்து நிற்பார். அப்போதுதான் இந்த பாடல். சிலநேரங்களில், பன்றிகளை கல்லால் அடித்தும் கம்பை வீசியும் துரத்தியடிப்பார். அவர் ஹ்ஹேய் என கையை ஓங்கியதுமே அவைகள் ஓடத்துவங்கும்.
அன்று இரவு நல்ல மழையில்தான் அந்த சத்தம் கேட்டு விழித்துக்கொண்டார் குத்தூஸ். சில நாட்களாகவே சினைப்பன்றி வந்து செடியோரம் ஒதுங்கியிருப்பதை ஜைனம் சொல்லியிருந்தாள். மழைக்கு முன் ஈன்றிருக்கவேண்டும். நேரம் செல்லச்செல்ல சத்தம் வலுத்தது.. மழையும்தான். குத்தூஸ் தன் மகனை எழுப்பி இருவருமாக அவசரகால விளக்கை எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கொல்லையில் சாய்த்து வைக்கப்பட்டு சும்மா கிடந்த ப்ளாஸ்டிக் கூரையை எடுத்துச்சென்று மதிலுக்கும் ஒரு தடித்த செடிக்கும் இடையே போட்டு பன்றிமீது மழை விழாமல் குடை போல வைத்துவிட்டு வந்தனர். சிறிது நேரத்தில் சத்தம் நின்றதோ அல்லது அவர் தூங்கினாரோ என அவருக்கு நினைவில்லை.

சூரியன் நன்றாக பல்லைக்காட்டிய காலையில் பன்றிக்குட்டிகள் தாய்ப்பன்றி மீது புரண்டு கிடந்தன. பேரன் மாடியிலிருந்து பொம்மை பைனாகுலரில் பார்த்தபடி ஒவ்வொரு குட்டிக்கும் டோரா, ஜூலி, சிங்சாங், ஹடோரி, பீம், சுக்கி என பெயர் வைத்தான். குத்தூஸ் தன் வீட்டில் இருந்து சமைத்தது போக எஞ்சிய காய்கறிக் கழிவுகளை மதில்வழியாக பன்றிக்கு விட்டெறிந்தார். அது எழுந்து வந்து உண்டுவிட்டு திரும்ப இவர் முகத்தைப் பார்ததது. மீண்டும் வீட்டிற்குள் போய் முழு கேரட்டுகளை எடுத்துவந்தார். ஒவ்வொன்றாக அதற்கு போட்டார்.
அன்று மதியம் மகன் வேலைக்கு கிளம்புகையில் அவரை அழைத்து முகநூலில் அன்புக்கு ஹராம் ஏதுமில்லை என்ற வசனத்துடன் பன்றிக்கு கேரட் போடும் அவர் படம் வந்திருந்ததை காட்டினான். அவர் என நினைத்துப்பார்த்தால்தான் அவர் என புரியும் வண்ணம் நல்லதொரு நிபுணத்துவத்துடன் அந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. ஜான்ஸி நகரின் மக்கள் அதற்கு விருப்பக்குறி இட்டிருப்பதை சொன்னான். ராஜசேகர் தன் கண்டனத்தையும் சுந்தர்ராம் தன் அன்பையும் குறியீட்டிருப்பதாக அவன் மேலும் கூறிச் சென்றான். ராஜசேகர் நேரிலும் தன் எதிர்ப்பை தெரிவித்திருந்தார். சில முகநூல் குழுக்களில் இது ஏன் ஹராம் என் விவாதிக்கப்பட்டது.
பன்றியை தின்பதுதான் ஹராம் என்றில்லை, வளர்ப்பதுகூட ஹராம்தான் என ஒருவர் போட்டிருந்தார். அவருக்கு பலர் தன் கோபக்குறியையும் பலர் கட்டைவிரல் உயர்த்தி வெற்றிச்சின்னத்தையும் அளித்த்திருந்தனர்.
இவர் வளர்க்கவில்லை. பொதுவாக திரியும் ஒன்றிற்கு உணவிடுகிறார். இதைத்தான் அன்பு மார்க்கம் போதிக்கிறது என்று ஒருவர் அளித்த பதிலுக்கு முன்பு பதிவிட்டவரே வெற்றிச்சின்னத்தை காட்டியிருந்தார்.
பள்ளிவாசலிலும் இதைப்பற்றி பேசினார்கள்.
எதுக்கு வாப்பா இந்த வேலை உனக்குஎன்று சலித்துக்கொண்டான் அவர் மகன். குட்டிகளை பார்க்கவேண்டும் என அடம்பிடித்த பேரனுக்கு ஒருமுறை அடிகூட விழுந்தது.
தலைவரே! உங்களுக்கு ஒரு சேதி தெரியுமா? இதுதாண்டா இந்தியா குரூப்பில் மட்டுமே உங்கபடம் இன்னிய தேதிக்கு ஐம்பதுலட்சம் லைக் வாங்கிடுச்சுஎன்றான் சுந்தர்ராம். அப்போது சமுதாய கூடத்தின் வாசலுக்கு வந்திருந்தார் அவர்.

பன்றிப் பிரச்சினையையும் துப்புறவுப் பிரச்சினையையும் தீர்த்தற்காக குத்தூஸுக்கு இன்று பாராட்டும் மற்றும் ஜான்ஸி நகர் நல சங்கத்தின் தலைவராக ராஜசேகர் சுந்தர்ராம் என இருவராலுமே முன் மொழியப்பட்டு பொறுப்பேற்பதும் என ஒரு சேர நடக்கும் கூட்டம் இது. அதனால்தான் தலைவரே என்ற இந்த விளி.
துப்புறவுத்துறை ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கவுன்சிலரும் காவல்துறை மற்றும் சுகாதரத்துறை ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர். சம்பத் உரையாற்றினார்.
நாமளும் எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தோம். அடிச்சுப்பார்த்தோம். துரத்திப்பார்த்தோம். நம்ம ஹெல்த் இன்ஸ்பெக்டர்கூட பல தடவை மாநகராட்சியுடன் போராடிய ஒரு விஷயம் இது. ஆனால் பன்றிகள் செல்லவில்லை. ஆனால் நம்ம பாய் என்ன பண்ணினாரு? அவைகளிடம் அன்பால் பேசினார். மழைக்காலத்தில் அவைகளுக்கு ஒதுங்க இடம் அளித்தார். பசிக்கு உணவு போட்டார். பிறகு அவைகளிடம் எடுத்துரைத்தார். அவைகளால் தனக்கு எவ்வளவு பெரிய ஹராம் ஏற்படுதுன்னு சொன்னார். அவர் ஐந்து வேளை தொழுத அந்த எல்லாம் வல்ல பேரருளானின் கருணையால் பன்றிகளுக்கு அவர் நிலை புரிந்து தாமே நம் நகரைவிட்டு விலகின. இதைத்தான் வள்ளுவர் தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக்கூலி தரும்னு சொல்றார். குத்தூஸ் பாய் நம்ம தலைவரா பொறுப்பேற்று இனி நம்ம தண்ணீர், தெருவிளக்கு பிரச்சினையெல்லாம் தன் அன்பால் தீர்த்துவைப்பார்.”

குட்டிகள் சிலநாட்கள் ஆன நிலையிலும் குத்தூஸ் கவனமாக யாரும் போட்டோ எடுத்துவிடாவண்ணம் ஜன்னல் வழியே கேரட் பீட்ரூட் துண்டுகள் முட்டைகோஸ் என விசிறியெறிந்து பன்றிக்கு உணவிட்டு வந்தார். அன்று மகன் தூங்கிக்கொண்டிருந்தபோது பேரனைப்  பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு பேத்தியை தடுப்பூசிக்கு தூக்கிச்சென்றிருந்தனர். அவன் மாடிவழியே எக்கி எக்கி குட்டிகளை பார்த்துக்கொண்டிருந்தான். குட்டிகளில் டோரா மட்டும் தனியாக குதித்து விளையாடிக்கொண்டிருந்தது. மற்றவைகள் தூங்கிக்கொண்டிருந்தன.. தாய் அருகில் இல்லை எங்கோ இரைதேடிச்சென்றிருந்தது.
தாத்தா! எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணுவியா?
சொல்லுப்பா!”
இல்ல ப்ராமிஸ் பண்ணு!”
ப்ராமிஸ். சொல்லு!”
டோராவ எடுத்துத் தரியா? விளையாடிட்டுத் ரேன்.”
அதெல்லாம் வேணாம்ப்பா, வேற ஏதாவது கேளு
முடியாதுபோ!!“ குதித்தான் பேரன்
பேசிக்கொண்டே எதார்த்தமாக பார்த்த போது, அந்த டோரா கொஞ்சம் கொஞ்சமாக மதில் ஓரத்தை எட்டி அடுத்து சாலைக்கு ஓடிவிடும்படி நின்றது. எதிர்பாராமல் வாகனங்கள் வரும் சாலை. தூரத்தில் லாரி ஒலிபோல ஏதோ கேட்டது. அதன் பின் அவர் தாமதிக்கவில்லை
குத்தூஸ் ஒரு ஸ்டூல் போட்டு மதில் மேல் வயிறு பதிய குனிந்து கைநீட்டி மெல்ல துழாவி அதை எடுத்தார். வெதுவெதுப்பாக இருந்த தண்ணீரை ஊற்றி துடைத்தார்.. துணியைச்சுற்றி தன் கையில் லாவகமாக வைத்தபடி பேரனிடம் காட்டினார். இத்தனை களேபரத்திலும் யாரும் போட்டோ எடுக்கிறார்களா என முன்னும் பின்னும் பார்க்கத் தவறவில்லை. ஒரு முன்னெச்சரிக்கையாக குல்லா போடவில்லை என்பதையும் உறுதிசெய்துகொண்டிருந்தார்
தாத்தா! இது முயல் மாதிரி இருக்கு... அணில் மாதிரி இருக்கு…”
அவன் சிறு தட்டை முறுக்குபோல வட்டமாக இருந்த அதன் வாயின் முன் தன் வாயை குவித்து அதே போல வைத்துக்கொண்டு வும் வும் என பார்த்து பார்த்து டோரா டோரா என தலையாட்டிக் கூவி விளையாடினான்.
டோராக்கு சாக்லேட் எடுத்துட்டு வறேன் என்று உள்ளே ஓடினான்.
அணில்குஞ்சு போலத்தான் இருந்தது. மெல்ல வருடினார். அது கையில் துள்ளியபடி இருந்தது.

அப்போதுதான் தன் அடிவயிற்றைக் கலக்கிய அந்த உறுமலை கேட்டார். தன் உடலின் மொத்தத் துடிப்பும் அடங்க திரும்பிப் பார்த்தார். அன்னைப் பன்றி ஒருமுறை மதிலை முட்டியது. பின் பின்னே சென்று அவரைப்பார்த்து உர் என உறுமியது. பின் மீண்டும் அவரை நோக்கி பாய்ந்தது. சுவற்றை பெயர்த்துக்கொண்டு வந்து தன் மீது பாய்வதுபோல உணர்ந்தார். மதில் அதிர்ந்தது. உடல் நடுக்கம் குறையாமல் மதிலுக்கு அந்தப்பக்கம் டோராவை விட்டார். இறங்கி நின்ற பிறகும் உடல் அதிர்ந்தது. நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது. வீட்டிற்குள் சென்று கை முகம் கழுவி சிறிது நேரம் நாற்காலியில் சாய்ந்தார். இன்னும் படபடத்துக்கொண்டிருந்தது.
கைதட்டல் ஓசை கேட்டு மீண்டார் குத்தூஸ். சம்பத் இன்னொரு குறள் சொல்லியிருக்கவேண்டும்
.
பன்றிகள் அவர் மதில்பக்கம் வருவதேயில்லை. அந்த இடத்தை சுத்தம் செய்து சில மரக்கன்றுகளை நட்டுவைத்தனர். ஒரு சிறு புல்வெளிபோல ஆக்கினர். அதன்பின்னும் அந்த இடம் இன்னும் வெறுமையாக இருப்பது போலவே தோன்றியது. அது அவருக்கு குற்றவுணர்ச்சியை தூண்டியது. தினமும் நடைபயிற்சிக்கு செல்லும்போது பன்றிகள் புதிதாக தேர்ந்தெடுத்துள்ள விளையாட்டுத்திடலையொட்டிய இடத்திற்குச் சென்று டோராவை பார்த்து வருவார். அதன் மென்மை இன்னும் அவர் கைகளில் ஒட்டியிருந்தது.
அடுத்து தலைவரை பேச அழைத்து அமர்கிறேன்கைத்தட்டலோடு அமர்ந்தார் சம்பத்.

குத்தூஸ் ஒலிபெருக்கி முன் நின்றார்.
நண்பர்களே! ஒருவரை நாம் வெறுக்கும்போதும் விரும்பும்போதும் ஒரு எல்லைக்குள் நிற்கிறோம். ஆனால் அது கொஞ்சம் நீண்டு போகும்போது ஒரு உரிமை எடுத்துக்கொள்கிறோம். அதுவரையிலான நம் அன்பு, எல்லை தாண்டும்போது உரிமை என்றாகிறது என்பது நமக்குத் தெரிவதில்லைஅப்போது அனைத்தும் தலைகீழாக ஆகிவிடுகிறது... அது தெரிந்தபின் செய்வதற்கு ஒன்றும் இருப்பதில்லை.” குத்தூஸுக்கு சற்று தொண்டையடைத்துக்கொண்டது. தான் இங்கு ஏதாவது உளறப்போகிறோம் என உறைத்து தண்ணீர் குடிக்க மூடியை திறந்தார்.
அதைத்தான அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் ங்கிறாரு வள்ளுவர் என்றார் சம்பத் தன் இருக்கையில் அமர்ந்தபடி. ஆய்வாளர் அற்புதம் என தன் கட்டைவிரலை உயர்த்திக் காட்டினார்.
சற்று நேரம் அவர்களை வெறித்துப்பார்த்த குத்தூஸ், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு இயல்பாக ஏற்புரையைத் துவங்கி நன்றி எனக்கூறி முடித்துக்கொண்டார்.

வீட்டிற்குத் திரும்பியபோது பேரன் தன் இடது உள்ளங்கையில் வலது முழங்கையை வைத்து உள்ளங்கையை மடக்கி புஸ் புஸ் ஹியர், புஸ் புஸ் தேர் எனப்பாடியபடி ஆடிவந்தான். மகனும் மருமகளும் மதிலுக்கு அந்தப்பக்கம் பார்த்துகொண்டிருந்தனர்.
ஏக் படீ சாம்ப் ஹை ஜிஎன்றாள் ஜைனம் தன் இரு கைகளையும் அகல விரித்தபடி,
அந்தக்கணம் பாம்பைவிட சம்பத்தை எண்ணி அவருக்கு கதி கலங்கியது.

( கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ”சாமி ஊர்வலம் வராத தெருவில் வசித்தவர்கள் தொகுப்பில் இடம் பெற்ற சிறுகதை )