Thursday, February 6, 2020

அழகியபெரியவன் கதைகள்

(1)

மிகச்சரியாக பதினோரு வருடங்கள் முன்பு விகடனில் வெளியான ‘வாகனம் பூக்கும் சாலை’ என்ற சிறுகதைதான் அழகியபெரியவன் எழுதி நான் வாசித்த முதல் சிறுகதை. அதற்கு விகடன் தளத்தில் பின்னூட்டமிட்டதும் நினைவிருக்கிறது. அதன்பின் இணையதளங்களில் அவரது கட்டுரைகளை வாசித்து வந்தாலும், கேணி கூட்டம் போன்ற மேடைகளில் அவரது உரைகளை கேட்டிருந்தாலும்  மீண்டும் முழுமையாக அவரது படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பு சென்ற வருடம்தான் வாய்த்தது. சென்ற வருட துவக்கத்தில் தமிழினி வெளியீடாக வந்திருந்த ‘கொங்குதேர் வாழ்க்கை – 2’-இல் அழகியபெரியவனின் கவிதைகளை வாசித்தேன். பிறகு அது அப்படியே தொடர்ந்து அவரது முழுச்சிறுகதை தொகுப்பையும் வாசிக்கத் தூண்டியது. நற்றிணை பதிப்பகத்தில் வெளியாகியிருந்த அழகியபெரியவன் கதைகள் என்கிற இந்தத்தொகுப்பில் அவர் துவக்ககாலம் முதல் எழுதிய சிறுகதைகள் முதல் அப்போதுவரை எழுதியிருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் ஆறு குறுநாவல்களும் இடம்பெற்றுள்ளன. 2013-ஆம் வருடம் வந்த தொகுப்பு இது.



இவரது கதை மாந்தர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்ட மக்களே. வேலூர் முதல் ஓசூர் வரையிலான நிலப்பகுதிகளில்தான் அழகியபெரியவனின் கதைகளில் அநேகமானவை நிகழ்கின்றன. ஒரு அதிகாலைப்பொழுதில் மலர்களில் பனித்துளிகள் தூங்கியிருக்க மென்கதிர்கள் அவற்றைச்சீண்ட அதிலிருந்து பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கவென, எந்தநேரமும் திரைப்பட கதாநாயகிகள் அறிமுகமாகிவிடக்கூடய அதிஉன்னத சூழ்நிலையில்தான் கதைகள் துவங்குகின்றன. அழகிய பெரியவன் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை எழுதும்போது அதில் எவ்விதத்திலும் சமூகம் எழுத்தாளன் மீது நிர்பந்தித்திருக்கும் ஒரு கருணைமிகு நோக்கோ நீதிஉரைக்கும் பாவனையோ ஏதுமில்லாமல் கதைமாந்தர்களின் நிலப்பகுதிக்குள்ளும் வாழ்க்கைக்குள்ளும் எடுத்துச்செல்கிறார். அதுவே அவரது தனித்தன்மையாகவும் இருக்கிறது.



‘பிச்சை’ என்கிற கதை தொண்ணூறுகளில் வெளியானது. எந்நேரமும், தன் மகன்களால் நேசிக்கப்படாத தளர்ந்த தாய்மார்களின் வழக்கமான உணர்ச்சிக் கதையாக ஆகிவிடக்கூடிய சாத்தியத்துடனே இருக்கிறது. ஆனால் அதில் சினுவுக்கிழவியின் அன்றாட வாழ்க்கைச் சித்திரமும் பஜாரைத் தாண்டினால் கைநீட்டாத அவளின் குணமும் கதையின் இறுதி அதிர்ச்சியைவிட அதிர்ச்சியானது. இன்றைக்கு வாசிக்கையிலும் அதன் வீரியம் அப்படியே இருக்கிறது. முன்பே கூறிய ‘வாகனம் பூக்கும் சாலை’ சிறுகதையும் அப்படியே. அது ஜோசியக்காரனால் படிப்பு நின்று மெக்கானிக்காக ஆன நாயகன் தனக்கான கடையை, காதலை, கற்பனையைப் பெற்று நல்வாழ்வு வாழும்பொழுதும் தன்னை சிறுவனாக மீண்டும் கண்முன்னே காண்கையில் என்ன செய்வான் என்கிற எளிய முடிச்சுக்குள் உள்ளது. பெரும்பான்மையான கதைகள் கதைமாந்தர்களின் கையறு நிலையையும் வாழ்க்கையின் அவலத்தையும் சுட்டிக் காட்டி யதார்த்தவாதக் கதைகளாகவோ, சமூகம் குறித்த கதைமாந்தர்களின் நிலைப்பாட்டை உணர்த்தும் பிரசாரங்களாகவோ முடிந்துவிடுவதில்லை. ஒவ்வொரு கதையிலும் கதாபாத்திரங்களின் அகச்சிதறல்களும், குடும்பத்துடனோ ஊருடனோ மதத்துடனோ அவர்கள் கொள்ளும் முரண்களும் அதில் அவர்கள் கண்டடையும் எளிய புரிதல்களும் அரிதான தரிசனங்களும் இருக்கின்றன. ‘கறி’ என்னும் கதையில் கறி வாசனைக்காகவே ஏங்கும் நாயகன், பக்ரீத் அன்று மாடுகளை கழுத்தறுக்கும் பணிக்குச் செல்லும்போது ஏற்படுகிற அனுபவத்தில் அழுது நிற்கிறான். இன்னொரு கதையில் தன் காதலியின் தாயார் கரகாட்டம் ஆட வருவதால் அதை பார்க்கமாட்டேன் என்று அவளுக்கு சத்தியம் செய்துகொடுத்துவிட்டு ஆனால் எதிர்பாராவிதமாக ஆசை உந்துதலால் அதைக்கண்டு கூட்டநெரிசலில் அத்துமீறி அவமானமும் பெற்று மீளும் பாத்திரம். ‘நீர்ப்பரப்பு’ அதற்குப்பின்பும் ஒருபக்கம் நகர்ந்து முடியும்போது அது ஒரு முழுமையை அடைந்திருக்கிறது. அன்று அவன் காதலி அவள் தாயாரின் நடனத்தைப் பார்க்காமல் இருந்ததற்கு நன்றி சொல்கிறாள். அழகிய பெரியவனின் புனைவோடு கலக்கையில் அந்தத் தருணங்கள் உச்சத்தை அடைகின்றன.



              ஒரு எழுத்தாளர் தன் எழுத்தில்  விளிம்புநிலை கதாபாத்திரங்கள் முதன்மைபெரும் கதைகளை எழுதும்போது  ஒவ்வொரு கதாபாத்திரமும் வேறு வேறு பின்புலங்கள் கொண்டிருந்தாலும் பெரும்பாலும் ஒரேபோல் சிந்திப்பது ஒரே பிரச்சனையை எதிர்கொள்வதாகவே காணமுடிகிறது. அதன்மூலமே எழுத்தாளர் சமூகத்ததின்பால் கொண்டிருக்கும் விமர்சனமும் வெளிப்படுகிறது. அழகியபெரியவனின் கதைகள் ஒரே நிலப்பகுதியின் வாழ்க்கை என்றாலும் சம்பவங்கள வெவ்வேறு தளங்களில் நிகழ்பவை. அவை கூத்துக்காரனின் சமூகப் புறக்கணிப்பை மட்டும் பேசுவதில்லை. அவனது காதலை அவனது குரல் மீது அவன் மனைவிக்கு உள்ள மோகத்தை என பல நுண்விவரங்களை தொட்டுச்செல்கிறது. அதனாலேயே அவை தனித்துவமாகவும் இருக்கின்றன.



              அழகிய பெரியவனின் அரசியல் சமரசமற்றது. ”எங்கள் ஊரில் பல வருடங்கள் முன்பே சாவுக்கு பறையடிக்கமாட்டோம்” என உறுதிமொழி எடுத்துக்கொண்டோம் என்று அவர் ஒரு உரையில் கூறினார். இந்தத் தொகுப்பின் அரசியல் கதைகளில் அவை வெளிப்படுகின்றன. அதேநேரம், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை எழுதும் எழுத்தாளர் முதலில் சமரசம் செய்துகொள்ளவேண்டியது ஒரு கற்பித பாவனை முன்பே. ஒரு கருணை வாசகன் முன் வந்து நிற்கிறது. வாசகன் தன் மனத்தின் அனைத்து அழுக்குக்களையும் களைந்து நிற்பதாக ஒரு கனவுலகச்சாதனையை அது அளிக்கிறது. அதை வெல்ல கதாசிரியர்கள் அந்த டெம்பளேட் வகையினை விட்டு வெளியே வர வேண்டியிருக்கிறது. கருணையில்லாத, முன்தீர்மானம் கொண்ட முடிவுகள் இல்லாத, நேர்மையான அணுகுமுறையே தீவிர வாசகனுக்கு அணுக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. அந்த வாசகர்களை நோக்கியே அழகியபெரியவன் பேசுகிறார்.







(2)

              ஒரு எழுத்தாளருக்கு மொத்தத்தொகுப்பு வருவது என்பது அதற்குப்பின் அவர்களுக்கு பெரும் சவாலை அளிக்குமோ என்கிற ஐயம் எனக்கு உண்டு. பெரும்பாலான எழுத்தாளர்களின் பிற்காலத்தைய சிறுகதைகள் எனக்கு ஏமாற்றத்தையே அளித்திருக்கின்றன. ஒருசிலரே விதிவிலக்காக இருக்கின்றனர். சென்றவருடம் வெளியாகியிருக்கும் அழகியபெரியவனின் சிறுகதை தொகுப்பான ‘அம்மா உழைப்பதை நிறுத்திக்கொண்டாள்’ தொகுப்பு விதிவிலக்குகளில் ஒன்று. “அழகியபெரியவன் கதைகள்” என்கிற பெருந்தொகுப்பிற்குப் பின்னர் அவர் எழுதியிருக்கும் சிறுகதைகளின் தொகுப்பான இந்தப் புத்தகமும் நற்றிணையில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ‘நம் நற்றிணை’ இதழில் வந்த ‘காட்டுக்கிழங்கு’, ‘சாகசத்தாத்தா’ உள்ளிட்ட பதினேழு கதைகள் கொண்டது இந்தத் தொகுப்பு. அவரின் மற்ற கதைகளைப் போலவே இக்கதைகளும் உறவும், காதலும், கற்பனையும் அல்லது சமூகமும், உறவும், விமர்சனமும் என அனைத்தும் கலந்த புனைவுகளே. ஒரு பகடிக்கதையும் இருக்கிறது. (மிஞ்சின கதை). விதைப்பரவல் கதையின் அத்தியாயங்களை அந்தாதி வடிவில் எழுதியிருக்கிறார். இதுபோல சில மாறுதல்கள் இருந்தாலும் அனைத்துக்கதைகளும் அவரது உலகிற்குள் நம்மை அழைத்துச்செல்லத் தவறுவதில்லை. ஒரு அட்சய பாத்திரம் போல கதைகள் அவரிடமிருந்து சுரந்துகொண்டே இருக்கின்றன.



                             ’தன்னுள்ளே சஞ்சாரிப்பவள்’ என்கிற கதை ஒரு நாவலுக்குரிய அத்துணை வடிவங்களும் கொண்டது. தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை செய்யும் லோகு மற்றும் சண்முகநாதனின் காதலுக்கும் அங்கு நிகழும் எதிர்பாராத விபத்துக்கும் அதன்பிறகு லோகுவின் தோழி ஏகவள்ளியிடம் வெளிப்படும் மாற்றத்துக்கும் இடையே ஆசிரியர் சொல்லாத ஒன்றும் இருக்கிறது. அந்தக்கதையை மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டுவது அந்த இடைவெளிதான். வேறொரு சிறுகதையில் அதன் தொடர்ச்சியை அவர் எழுதக்கூடும் என நினைத்துக்கொண்டேன். இதுபோல உறவுச்சிக்கலை தளமாகக் கொண்ட ‘மஞ்சள் பூக்கள் வைத்திருக்கும் ரகசியம்’ ‘உடன்படிக்கை’ ‘பருவம் தப்பிய மழை’ போன்ற கதைகளில் ஒரு எதிர்பாரா கனத்தில் வெளிப்படும் கதாபாத்திரங்களின் ஆழ்மனம் கலவையான உணர்வுகளை அளிக்கின்றன். மாமியார் மருமகள் இடையிலான உறவை கையாள்வதில் ஒருவித நெகிழ்ச்சித்தன்மை இந்தக் கதைகளில் வெளிப்படுகின்றன. ‘ஆழ்ந்து உறங்கிடும் இசை’ ‘அம்மா உழைப்பதை நிறுத்திக்கொண்டாள்’ ஆகிய கதைகளில் மையப்பொருளாக அது இல்லாவிடினுமே அந்த உணர்வுகள் இயல்பாக உள்ளன. வெறும் வாசிப்பின்பத்திற்காக எழுதப்பட்ட கதைகள் அல்ல இவை. அதோடு பெண்ணியம் அல்லது சமூக சிக்கல் போன்ற வரைமுறைக்குள்ளும் இவை சிக்குவதில்லை. வெளியுலகச் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு வீடுகளுக்குள் இயல்பாக நிகழும் உரையாடல்கள் வழியாக நாடகத்தன்மையும் இல்லாத கதைகளாக இருக்கின்றன. லா. ச. ரா. எழுதிய ‘இதழ்கள்’ கதைத் தொகுப்பு போல அழகிய பெரியவனின் இந்த வகை கதைகளையுமே ஒரு தொகுப்பாக வாசிக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.



              ஒவ்வொரு தனிமனிதனும் சமூகத்தை எதிர்கொள்ளும் தருணங்களில் ஒரு சிறுகதைக்கான தளம் இருக்கவே செய்கிறது. பொருளாதார ரீதியில் மிகவும் அடித்தட்டில் வாழும் மிளகுக்கிழவி, தன்னைவிட உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும் மணிமொழியுடன் பழகுவதில் வெளிப்படும் ஜாக்கிரதை உணர்வு மிக லாவகமாக உள்ளது. (விதைப்பரவல் ). ஆசாரம் என்பது அவளிடம் டீப்பொடி சர்க்கரை பால் வாங்கலாம் ஆனால் அவள் தரும் தேநீரை தவிர்க்க வேண்டும் என்பதே. இதை மணிமொழி அறிந்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் அதை சோதித்துப்பார்க்கிறாளா உண்மையில் அவளுக்கு அது புரியவில்லையா என்ற ஒரு கோணமும் இந்தக்கதையில் உள்ளது. அதனாலேயே அந்தக்கதை மணிமொழியின் மனநிலையை சுட்டுவதாக முடியவும் இல்லை. அது வாசகருக்கான இடம். அவர்கள் தன்னை எங்கு பொருத்திக்கொள்ளவேண்டும் என்பதை சுதந்திரமாக விட்டுவைத்திருக்கிறார். பிணச்சுற்று என்கிற கதை இடைநிலை சாதியைச் சேர்ந்த நண்பனின் தகப்பனார் இறந்தபோது பறையடிக்கும் குலத்தைச்சேர்ந்த கதைநாயகன் நண்பனோடு சேர்ந்து பிணத்தைச் சுற்றியதால் ஏற்படும் பிரச்சனையப் பற்றியது. இதன் முடிவும் சராசரி வாசக எதிர்பார்ப்பை முறியடிப்பதுதான் இதன் பலம். தொகுப்பின் தலைப்புக்கதையான ‘அம்மா உழைப்பதை நிறுத்திக்கொண்டாள்’ கதை இவ்வரிசையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. முதன்முறையாக மேட்டுத்தெரு வழியாக செல்லும் சவ ஊர்வலம் கதைசொல்லியின் அம்மாவுடையது. அதில் வெளிப்படுவது கதைசொல்லியின் புரட்சியா அல்லது அம்மாவின் நன்றியா என்பது வாசிப்பவரை கலங்கடிக்கக்கூடியது. அதுதான் அம்மா உலத்துக்கு சொல்லிச்சென்ற சேதி என்கிறார்.







              அவர் சார்ந்த நிலப்பகுதியின் கதைகள்தான் இதிலும் இருக்கின்றன. ஆனால் அவை மீண்டும் ஒரு புதிய சித்திரமாக வெளிப்பட்டிருக்கின்றன. சிலம்புக்கும் அவள் கணவனுக்கும் இடையே சொல்லவொண்ணா ஒன்றாக அகங்காரமாக நின்றதுதான் எது? (அவளில்லை அவனில்லை) எதிர்பாராமல் அக்காளை கல்லால் அடித்துக்கொன்றுவிடும் சபரிவாசனை இயக்கும் அவனது காடு (காட்டுக்கிழங்கு) பூசணிப்பூவாக தரையோடு ஒன்றியபடி அத்தைவீட்டுக்குச் சேவகம் செய்யும் சுபா அப்பாவைப் பார்க்க கிளம்பும் தருணம் (மஞ்சள் பூக்கள் வைத்திருக்கும் ரகசியம் ) என அனைத்துக்கதைகளுமே தன்னளவில் ஒரு வாழ்க்கையை பதிவு செய்கின்றன. ‘பின் தொடரும் பெண்’ கதையில் வரும் ராணி அர்ஜுனனின் தவத்தை கலைக்கும் ஏலகன்னியா என்பது போல் ஆரம்பித்து அவளின் காதலை சொல்லும் கதையாக விரிந்து முடியுமிடமும் அத்தகையதே. தன் நிலப்பகுதியின் முக்கிய நிகழ்த்துக்கலையான கூத்துக்கலை பற்றிய கதைகள் பல இவரின் தொகுப்புகளில் இருந்தாலும் இதில் ஒரு மின்னல் ஒளியில் மொத்த உலகைப்பார்ப்பது போல பதிவு செய்திருக்கிறார். சாகசத்தாத்தாவின் முடிவு எதிர்பார்த்த ஒன்றாக இருப்பதாக தோன்றினாலும் அதில் பதிவாகியிருக்கும் அவரது வாழ்க்கை மிக முக்கியமானதாக இருக்கிறது. ‘அம்மா உழைப்பதை நிறுத்திக்கொண்டாள்’ போல இதுவும் ஒரு காலகட்டத்தை பதிவு செய்கிறது. அந்த வகையில் மிகவும் முக்கியமானது.




(3)

அழகிய பெரியவனின் எழுத்து நடை குறிப்பிட்டத்தக்க ஒன்று. சில சமயங்களில் அவருக்குள் இருக்கும் கவிஞன் இடம் பொருள் ஏவல் தெரியாமல் வெளிப்பட்டுவிடுகிறான். “கோடையின் பொன்மாலையில், வெயில் தாழ்ந்து மெலிதாய் இதம் பரவும் கணத்தில், கதிரோனின் மந்திர ஒளி குதித்தாடும் சமவெளியில், காற்றுக்கு அலைவுறும் செம்பழுப்பு மஞ்சுப்புள்வெளியைப்போல இருந்தது அக்காட்சி.” இதுபோன்ற வர்ணனைகள் கதைகளுக்கிடையே தான் ஒரு பார்வையற்ற, அவ்வப்போது வந்து போகும் மாமனால் துன்புறுத்தப்படுகிற பாவப்பட்ட பெண்ணின் கதைக்கிடயே வெளிப்பட்டு சம்பிரதாயத்தை மீறுகிறோமே என்ற பிரக்ஞையில்லாதவையாக இருக்கின்றன. காடுகள் நிறைந்த நிலப்பகுதியில் கதைகள் நிகழ்வதால் அவ்வப்போது அழகியல் தருணங்கள் வந்துவிடுகின்றன. நள்ளிரவில் கர்ப்பிணியை தூக்கிக்கொண்டுச் செல்கையிலும் ஆங்காங்கு கேட்கும் நரி கரடி போன்ற விலங்குகளின் சப்தங்களையும் கவனித்துச் சொல்கிறார். தவசிமரம் வெண்மட்டி மரம் என்று பிரித்துச்சொல்கிறார். இடையிடையே இன்னும் சுவாரசியமாக்குகின்றன எதிர்பாராமல் வருகிற அபத்த நகைச்சுவைகள். பேய்பிடித்த பெண்ணிற்கு படையல் வைத்திருக்க அங்கு கோபாவேசமாக வந்து அவளை அழைத்துச்செல்லும் அவளின் அம்மா அனைவரையும் பார்த்து “நாங்க க்றிஸ்டியன்ஸ்” என்று ஒரு எச்சரிக்கையும் செய்கிறார். முத்தன் தாத்தாவுக்கு வசவுமொழிகள் அத்தனை எளிதாக வருகின்றன. ஊரில் பண்டிகை முடிந்ததும் மாரியின் உருவத்தைப் பொதிந்திருக்கும் கரகத்தை தூக்கிப்போய் ஊர் எல்லையில் இருக்கும் கிணற்றுக்குள் போடவேண்டும். அவ்வாறு போகும்போது மாரி மீண்டும் ஊருக்குள் வந்துவிடக்கூடாது என்று வசைமாறி பொழிகிறார்கள். அதில் முத்தனின் சிறப்பு வசவுகளுக்கு பயந்துதான் அம்மை வாந்தி பேதி என அவள் மீண்டும் ஊருக்குள் வருவதில்லை. வாங்கின ஓத்தாமுட்ட கொஞ்சமா நஞ்சமா… திரும்ப வந்துருவாளா என்று மீசை முறுக்குகிறார் முத்தன் கிழவன்.



அவர் சமூகம் மீது வைக்கும் விமர்சனங்களில் எவை கோபமாக வெளிப்படுகின்றன எவை பகடியாக வெளிப்படுகின்றன என்கிற பேதத்தை கண்டறிதல் தேவையானது. ”அழகிய பெரியவன் கதைகள்” தொகுப்பில் உள்ள ‘பூவரசம் பீப்பீ’ ‘தலைப்புச் செய்தியும் ஒரு பெண்னும்’ ‘வாதை’ ‘அழியாத மை’  வகை கதைகள் நேரடியான விமர்சனங்கள். இந்தத் தொகுப்பில் உள்ள ’தப்பறிதல்’ கதையில் வரும் அப்பன் ராஜ் என்கிற நேர்மையான காவல் அதிகாரி தான் எப்படி சாதி சார்ந்து முடிவுகள் எடுப்பேன் என விளக்கும் இடம் போல. அனால் அவரது ஆற்றாமை பெரிதாக வெளிப்படும் கதை ஒன்று பகடியாக உள்ளது. இந்துத்துவ ஆட்சி நிலைபெற்று அம்பேத்கர் ஆச்சாரியர்களில் ஒருவராக ஆகி நிற்கும் ‘மிஞ்சின கதை’யின் நடையும் மொழியும் மொத்தத் தொகுப்பிலிருந்தும் வித்தியாசப்பட்டு இருக்கிறது.



சிறுகதைகளின் அத்துணை சாத்தியங்களையும் கையாண்டிருந்தாலும் பெரும்பாலான கதைகள் பெண்களின், குழந்தைகளின், கலைஞர்களின் வாழ்க்கை மீது உறவும் சமூகமும் என புறக்காரணிகள் செலுத்தும் ஆதிக்கமும் அதற்கான எதிர்வினைகளுமாகவே இருக்கின்றன. அனைத்தும் சுபமாக முடிந்துவிடுவதில்லை என்றாலும் அதற்கானதொரு முதலடியை அந்தக் கதாபாத்திரங்களே எடுத்துவைப்பதான சுதந்திரத்தை அவர் அளித்திருக்கிறார். முன்பு கேணிகூட்டத்தில் அவர் பேசுகையில் தென்மாவட்டங்களைவிட வடமாவட்டங்களில் சாதிவெறி வன்முறைகள் குறைவு என்று சொல்லப்போய் அது அங்கு பெரும் விவாதமானது. பின் தருமபுரி இளவரசன் சம்பவங்களால் அந்த நம்பிக்கையிலிருந்து அவர் சற்று பின்வாங்கியிருக்கக்கூடும் என்று எதிர்பார்த்தாலும், அரசியல் சமரசங்களைத் தாண்டிய ஒட்டுமொத்த மானுடம் மீதான ஒரு நம்பிக்கையை அவர் எழுத்துக்களின் மூலமாக அவர் வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார் என்பது இந்த இருதொகுதிகளை படித்தபின் எனக்கு தோன்றியது.

ஜெ. தளத்தில் கட்டுரையின் இணைப்பு