சமீபத்தில் வெளியான சு.வேணுகோபாலின் தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி புத்தகத்தைப் பற்றி எழுத்தாளர் கெ.என்.செந்திலின் உரையைக் கேட்டேன். யப்பாடி! எனத்தோன்றியது. அந்த புத்தகத்தை நானும் படித்திருந்தேன். சு.வேணுகோபாலின் படைப்புகளையும் இந்த புத்தகத்தையும் மேலும் சில விமர்சன புத்தகங்களையும் படித்திருந்த ஒருவர் கிட்டினால் இது பற்றி விவாதிக்க ஏதுவாக இருக்குமே என நினைத்திருந்தேன். தட், ”தமிழார்வமும் இருக்கனும் அதேநேரத்துல அறிவியலும் தெரிஞ்சிருக்கனும்” ரேஞ்சில். ஆனால், மாணவர்களுக்கு மே மாதம் பள்ளியில் விடுமுறை விடுவது போல ஜெயமோகனும் இமைக்கணத்தை முடித்து ஒரு விடுமுறை விட்டிருந்ததால், மாணவர்களும் குடும்பத்தினரை பரிவுடன் தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டு தன்னை அனுதினமும் சோதித்த இரு விஷயங்களிலிருந்து விலகி மிகத்தீவிரமாக அலுவலக வேலையை எப்போதும் இந்த அப்ரைசல் நேரத்தில் செய்வது போல கண்ணும் கருத்துமாக பார்த்து வந்தனர். இரு வெண்முரசு நாவல்களுக்கிடையே யாரோ ஒருவரை ஒரண்டையிழுக்கும் வேலையும் இல்லாததால் சுரேஷ் கூட சேப்பியன் படிக்காமல் டி20 பார்த்தான். நிர்மலாதேவியையே மறந்திருந்தனர் மக்கள். அந்த விதத்தில் மீண்டும் இலக்கியம் பற்றிப்பேச இந்த உரை நல்ல துவக்கமாக இருந்தது. நான்கு நாட்களுக்கு வாட்சப் குழுமங்களில் இது பற்றிய ஒரு த்சோ.. த்சோ இருந்துகொண்டிருந்தது. தமிழர்களின் சமகால பிரச்சனைகளிலிருந்து இலக்கியம் பக்கம் திசை திருப்ப ஒரு இலுமினாட்டி கார்பொரேட் செய்யும் சதி என பாரிசாலனின் பேட்டி வருமென நினைக்குமளவிற்கு போய்விட்டது. அதற்குப் பிறகு தூத்துக்குடி பிரச்சனை வந்து திண்றடித்துவிட்டது. இப்போது இது பற்றி எழுதலாம் என நினைக்கும்போது கூட ஸ்டெர்லைட் பிரச்சனை இருக்கறப்போ பிடில் வாசிக்கிறியா என ஷிமோகா ரவி அண்ணன் கண்ணாடியில் மங்கலான பிம்பமாக வந்து கேட்கிறார். ஆனால், சம்பந்தப்பட்டவர்களே பிடில் வாசிக்கும் போது அப்பாவி பொதுஜனமாகிய நான் சம்பந்தமில்லாமல் கொஞ்சம் எழுதி வைக்கலாம் ! என்ன தவறு எனத் தோன்றுகிறது
சு.வேணுகோபால் கே.என். செந்தில் இருவரையும் ஆண்டிற்கொருமுறை விஷ்ணுபுரம் விருதுவிழாவில் சந்திக்கிறேன். இவர்களில் சு.வே யின் படைப்புகள் கிட்டத்தட்ட அனைத்தையும் வாசித்திருக்கிறேன். கே.என். செந்திலின் மாறாட்டம் சிறுகதை மட்டும் வாசித்திருக்கிறேன். அரூபநெருப்பு தொகுதியைப்பற்றி எழுத்தாளர். சுரெஷ் ப்ரதீப் கூறியிருக்கிறார். விரைவில் படித்துவிடுவேன். விழாவில் பார்த்த வகையில் மிகத்தீவிரமாக , கறாராக இலக்கியத்தை அணுகுபவர் என்று சொல்லுவேன். அமிதாப் பச்சன் போல ஒரு கோபக்கார இளைஞன் என்று தோன்றுமளவிற்கு இருப்பார்.
இனி புத்தகத்தைப்பற்றிப் பார்க்கலாம். ஒரு நாவலையோ கவிதை தொகுப்பையோ படித்துவிட்டு எழுதுவது போல ஒரு திறனாய்வு நூலைப்பற்றி எழுதிவிடமுடியாது. மனம் போன போக்கில் எல்லாவற்றையும் எழுத வேண்டியிருக்கும். ஒவ்வொரு எழுத்தாளர் குறித்தும் தன் மனதிற்குள் தான் கொண்டுள்ள பிம்பத்தை சார்ந்தோ மறுத்தோ எப்படி எழுதப்பட்டிருக்கும்... தனக்குப்பிடித்த கதை இவருக்கும் பிடித்திருக்கிறதா என்ற அளவில் சரி பார்த்துக்கொள்ளலாம். மூத்த எழுத்தாளர்கள் பற்றிய திறனாய்வு தொகுப்புகளில் இதுவரை வந்தவைகளிலிருந்து மாறுபட்டு முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தை தரவல்லதாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே. சாரு எழுதியிருக்கும் பழுப்புநிற பக்கங்கள் எஸ்ரா எழுதியிருக்கும் கதாவிலாசம் போன்றவை பெருமளவில் வாசகனுக்கு முக்கிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்கின்றன. அவைகளை திறனாய்வு என சொல்ல இயலாது. அதிலும் தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய கதாவிலாசம் தொடர் ஒரு விகடன் வாசகரை உள்ளிழுக்கும் என்றால், சு.வே. யின் இந்த புத்தகம் வாசகருக்கு விமர்சன ரீதியில் அடுத்த நிலைக்கு தன் வாசிப்பை தொகுத்துக்கொள்ள சரிபார்த்துக்கொள்ள உதவியாக இருக்கும் என்று சொல்லலாம். ஒரு விமர்சன நூல் பற்றி எழுத வேண்டுமெனில் முதலில் அதை எப்படி அணுகுகிறோம் என்பது அவசியமாகிறது. அதற்கு தன்னைக் கொஞ்சம் தொகுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பற்றிக்கொள்ள ஒரு கொழுகொம்பு தேவைப்படுகிறது. கே.என். செந்திலின் உரையை நான் அப்படித்தான் எடுத்துக்கொண்டு அது சார்ந்த என் புரிதல்களை எழுதலாம் என நினைக்கிறேன்
முதலில் இந்த உரை சு.வேணூகோபால் முன்பே நிகழ்ந்திருக்கிறது. ஒரு கட்டுரையாக வந்திருந்தால் மறுப்பு தெரிவித்திருக்கலாம். விவாதிக்கலாம். ஆனால் நேருக்கு நேராக குறைகளாக அடுக்கும்போது, நாம் செய்த தொண்ணூற்று எட்டு நல்ல விஷயங்கள் ஞாபகமே வராது.. இந்த ரெண்டு குறைகள் மட்டுமே அனைவருக்குமே பெரிதாக நிற்கும் என்பதை ஆண்டிற்கொருமுறை பர்ஃபார்மன்ஸ் ரிவ்யூ மீட்டிங்கில் இதையே சந்திக்கிறவன் என்கிற வகையில் அடித்து சொல்லமுடியும். அந்த வகையில் சு.வேணுகோபாலின் உடனடி எதிர்வினை வந்திருக்கிறதா எனத் தெரியவில்லை.
கேஎன் செந்தில் இரு குற்றச்சாட்டுக்களை வைக்கிறார். அதில் முதலாவது, சுவேணுகோபால் தன் தகுதிக்கு மீறி நிலை நிறுத்தப்படுகிறார் என்பது. இரண்டாவது இந்த புத்தகம் குறித்து,
முதலாவது சற்று அதீதமாகப்போய்விட்டதோ எனத் தோன்றுகிறது. அவர் மகத்தான படைப்பாளி என்று தூக்கிநிறுத்தப்படுவதாக சொல்வது சற்று மிகையாகவே இருக்கிறது. தமிழகத்தில், ஒரு டபரா செட்டுக்குள் நடக்கும் பிரச்சனைதான் இலக்கியவாதிகளின் சச்சரவுகள் என ஆதிகாலந்தொட்டே ஒரு கருத்து நிலவுகிறது . சமீபத்தில், பாலகுமாரன் மறைந்த போது அங்கு டிவி சேனல் ஆட்கள் வந்திருந்தார்கள். இறந்த செய்தி வந்து ஒரு மணி நேரம் தாண்டியிருந்தது. இப்ப வீட்டு ஆளுங்கதான் இருக்காங்க வெளி ஆளுங்க வரல..இனிமதான் சேதி தெரிஞ்சு விஐபிக்கள் வருவார்கள் பேட்டி எடுக்கலாம் வீட்டு ஆளுங்களை வேண்டாம் என்று நிருபர்கள் சொல்லிக்கொண்டிருந்தனர். அங்கு அவர்கள் வீட்டு ஆளாக எண்ணிக்கொண்டிருந்தது அங்கு கூடமாட நின்று கொண்டிருந்த ஜெயமோகனை. இந்த அளவில்தான் பெரும்பான்மை சமூகம் இருக்கிறது. இந்த நிலையில் இதுவரை சு. வேணுகோபால், தான் எழுதியிருக்கும் அளவு கவனிக்கப்படவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். இதில் தகுதிக்கு மீறி அவர் கவனிக்கப்படுவதாக சொல்வதை மறு பரிசீலனை செய்யலாம். கே.என். செந்தில் தானும் அனைத்தையும் படித்திருப்பதாக சொல்லித்தான் கூந்தப்பனையை நிராகரிக்கிறார். ஆனால், இப்படி தடாலடி கருத்துக்களால் சில அறிமுக வாசகர்கள் அவரை வாசிக்காமல் போகலாம். ஆனால், ஒரு எழுத்து தனக்கான வாசகனை கண்டடைந்தே தீரும் என்று ஒரு தியரியும் இருப்பதால் அவர் புத்தகங்கள் இன்னும் வாசிக்கப்படக்கூடும் என்றே நம்புகிறேன்.
அவர் படைப்புகளை வாசித்த வகையில் சமூகம் வாழ்க்கை மற்றும் குடும்பம் சார்ந்த அலைக்கழிப்பு அவர் படைப்புகளில் என்னை நெருக்கமாக உள்ளிழுக்கிறது. தொடர்ச்சியான தலைமுறையிலிருந்து மாறி ஒரு நாட்டிலேயே இடம்மாறி அந்நியமாக வாழும் ஆணின் தடுமாற்றமும் தவளை வாழ்க்கையும் அதிகம் மெனக்கடாமல் அதன் இயல்பிலேயே இடம்பெறுவதாக அவரின் படைப்புகள் உள்ளன. இதில் இயல்பாகவே பிறந்தவீடு புகுந்தவீடு என மரபணுக்களில் பழகிவிட்டதால் பெண்களால் விரைவில் விட்டு விலக முடிகிறது. தீர்க்கமாக முடிவெடுக்கவும் முயல்கிறார்கள். ஆனால் இப்போது இரு தலைமுறைகளாகவே பெரும்பான்மை ஆண்கள் அதற்கு பழகுகிறார்கள். அதனால் அவர்கள் கிருஷ்ணன் போன்ற நபும்சகனாகவோ, பழனி போல குழம்பியவனாகவோ, இளமையில் தொலைத்ததை 36 வயதில் தேடுபவனாகவோ இருப்பது ஒட்டுமொத்த தற்கால ஆண்களின் குறியீடாகக்கூட புரிந்துகொள்ள முடிகிறது. அது உணரும்போது எனக்கு பெரும் சோர்வைக்கூட அளித்திருக்கிறது. Ignorance is bliss என்று சொன்னவனை நானும் அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன். உணர்ச்சிகரமாக இல்லாமல் யதார்த்தமும் பரிவும் நம்பிக்கையுமாக அவரின் பெரும்பான்மை நாவல்கள் முடிவது எனக்கும் ஆறுதலாக இருந்த்து. ஆனால், அவர் காமத்தை நன்றாக கையாள்கிறார் என்றும் விவசாயத்தை எழுதும் எழுத்தாளர் என்றும் முதன்மையாக அடையாளப்படுத்துகிறார்கள். அதை மறுக்கவியலாது என்றபோதும் அவரை வாசிக்கையில் நான் உணர்ந்தது இது. நானே அவரிடம் என் கருத்தை சொன்னபோது, அவர் பதறி அப்படியெல்லம் இல்லீங்க நான் பெண்களை எழுதிய அளவு ஆண்களை எழுதியதில்லை. வேணும்னா வெளியில விசாரிச்சு பாத்துகங்க என்று சொல்லிவிட்டார்.
இரண்டாவதாக சொல்லிருப்பது இந்த புத்தகம் குறித்து. கேஎன் செந்தில் எழுதியிருக்கும் கட்டுரைகள் மற்றும் உரைகளை கேட்கையில் அவர் கோட்பாடு ரீதியாக நிறைய அறிந்திருக்கிறார் என்பதும் தெளிவாகிறது. நவீனத்துவம் பற்றி இந்த புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதை முதலில் மறுதலிக்கிறார். அந்த சுழலுக்குள் சிக்கி நவீனத்துவம் என்றால் என்ன என்று ஒரு விளக்கத்தை கூறுவது என்பது மீண்டும் ஒரு கட்டுரையளவு படிக்க வேண்டியிருக்கும். நவீனத்துவத்திலிருந்து நவீனத்துவத்தை எடுத்துவிட்டால் நவீனத்துவமே மிஞ்சும் என்ற உபநிஷத் வரிகளுக்கேற்ப நான் இந்த விஷயத்தை சாய்சில் விடுகிறேன். அதன்பின், அவர் குறிப்பிடும் சில விஷயங்களில் முதன்மையானவை, கூறியது கூறல் கட்டற்ற மொழி நடை இல்லாதவர்களை நிராகரித்தல் மற்றும் தவறான கருத்துக்களைக் கூறல் போன்றவை. புதுமைப்பித்த்னைப்பற்றி இதுவரை தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டவைகளையே இதுவும் கூறுகிறது என்பது உண்மைதான் என நினைக்கிறேன். செல்லம்மாள் கதை பற்றி வேதசகாயகுமாரின் விமர்சனம் புதிய வாசிப்புக்கோணத்தை அளித்தது. அதுபோல இதில் ஒரு புதிய அனுபவம் இல்லை. திஜா கட்டுரை பற்றியும் அங்ங்னமே எண்ணத் தோன்றுகிறது. திஜா நாவலில் சாதிக்கவில்லை சிறுகதையில் சாதித்தார் என்பது போல இதிலும் வருகிறது. கட்டற்ற மொழிநடை இல்லாததால் சுவே அதிகம் விமர்சிப்பது சுந்தரராமசாமி படைப்புக்களைத்தான். கேஎன் செந்திலின் சுந்தரராமசாமி சிறுகதைகள் பற்றிய உரை ஒன்று கேட்டேன். அதைவைத்து பார்க்கையில் இது அவரவர் சுதந்திரம் என்கிற அளவில் விட்டுவிடத்தோன்றுகிறது. சுந்தர ராமசாமியை விமர்சிக்க இருக்கும் நியாயங்கள் போல சுவேயை நிராகரிக்க இவருக்கான காரணங்களும் இருக்கின்றன. அது அவரவர் வழியைப்பொறுத்தது என்றுதான் சொல்லமுடியும்.
சுவேயின் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் 2001லிருந்து 2018 வரை எழுதியதன் தொகுப்புகள். இதனால் சில குழப்பங்கள் உள்ளன. உதாரணமாக, அசோகமித்ரனின் சதாபிஷேகத்தை இலக்கிய உலகம் சரியாக கொண்டாடவில்லை என்கிற இடம். இந்த தகவல் பிழையானது என்று சில உதாரணங்களை செந்தில் சொல்கிறார். ஆனால், அந்த கட்டுரை அந்த நிகழ்வுகள் நடப்பதற்கு முன்பு எழுதப்பட்டவை. இப்போது வெளியாகிருக்கின்றன. அசோகமித்திரன் உத்திகளைக் கையாளவில்லை நுட்பங்களைக்கையாளுகிறார் என்று சொல்வதும் அத்தகைய குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வரிகளே. அவர் சொல்லியிருப்பது சிறுகதைகளின் வெவ்வேறு வடிவங்களை என்று நான் புரிந்துகொண்டேன். பிராமண எழுத்தாளர்கள் விலங்குகளைக் குறித்து எழுதுவது பற்றி இவர் சொல்லியிருப்பது 2016ல் ந.பிச்சமூர்த்தி கட்டுரையில்.. ஆனால் அதற்கு முன்னே சி.சு.செல்லப்பா கட்டுரையில் சிலாகித்து எழுதியது 2010ல். இவற்றையெல்லாம் ஆங்காங்கே tag செய்திருக்கலாம். அல்லது பக்கத்தின் கீழே * போட்டு குறிப்பிடலாம். அடுத்த பதிப்பில் திருத்திக்கொள்வார்கள் என நினைகிறேன். சுந்தரராமசாமிக்கு நிலத்தை சொல்லத் தெரியவில்லை என்று பொதுவாக சொல்லவில்லை. “மரியா தாமுக்கு எழுதிய கடிதம்” என்கிற கதையை பற்றிய வரி அது. அதற்கு மாற்றாக புளியமரத்தின் கதை நாவலை சொல்வது ஏற்புடையதாக இல்லை. ஜெயகாந்தன் ஒரு சுயம்பு என்று சொல்வது ஒரு flow வில் வந்துவிட்டதைப்போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. அவரே அந்த கட்டுரையில் பல இடங்களில், பாரதி சித்த்ர் பாடல்கள் ரஷ்ய இலக்கியங்கள் ஆகியவற்றின் மீதான் ஜெயகாந்தனின் ஈடுபாட்டைச் சொல்லியிருக்கிறார்.
இந்த இடங்களில்தான் இலக்கியமுன்னோடிகள் புத்தகத்தை ஒப்பிடுவதை தவிர்க்கமுடியவில்லை. இலக்கிய முன்னோடிகள் புத்த்கம் 2003ல் வெளியான தொகுப்பு. குறிப்பாக குபரா பற்றிய பிரம்ம சமாஜத்தின் ஈடுபாடு அதை அப்படிய தமிழுக்கு பொருந்தாமல் காப்பியடித்தது.. திஜா காமத்தை எழுதிய மற்றவர்கள் தொடாத இடங்களை ( காமத்தை எழுதுகிறேன் என்று கிளம்பிய சாருநிவேதிதாவும் நழுவிய இடம் என்று ) எவ்வளவு நேர்மையாக கையாண்டார் என்பதும் புதிய திறப்புக்களாக அமைந்தன. குறிப்பாக சொல்லவேண்டுமெனில், அசோகமித்திரனின் புலிக்கலைஞன் கதை. அதை அசோகமித்திரன் பாராட்டு விழாவில் ஒரு திரைக்கலைஞனனின் பரிதாப வாழ்க்கை என்கிறார் சுரா. அதற்கு பத்தாண்டுகள் கழித்து வந்த கதாவிலாசத்திலும் அதையே சொல்கிறார். ஆனால் அதில் அந்த காதர் ஒரு கணத்தில் புலியாக மாறுவதும் அவன் சொல்லும் தற்குறிப்பிலிருந்து அவன் யாரென அடையாளம் காட்டுவதும் ஒரு புதிய நோக்குதான். அதன்பின் அசோகமித்திரனின் பல கதைகளை வாசிக்க இன்னொரு கோணம் கிடைத்தது. அதுபோல புதிதாக ஒன்றை காண இதில் இடம் இல்லை. மேலும் இது சிறுகதைகளுக்குள் மட்டும் தன்னைக் குறுக்கிக்கொண்டதும் ஒரு காரணமாகலாம்.
கு அழகிரிசாமி மற்றும் கிரா ஆகியேரை இவர் தூக்கிப்பிடிப்பது சாதிப்பற்றால் என்று சொல்லி பின் அங்ஙனம் இல்லை என அறிந்து கேஎன் செந்தில் வருந்தியதாக முகநூலில் நண்பர் எழுதியிருந்தார். ஆனால், ஆதவனை அழகிரிசாமியை அசோகமித்திரனை ஜெயகாந்தனை சுவே ஒரு விமர்சகனாக அணுகவில்லை எனத்தோன்றியது. ஒரு வாசகனாகத்தான் அணுகியிருக்கிறார். அதிலும், கிரா பற்றிய பதிவு,முழுக்க முழுக்க அவரின் அன்பே வெளிப்படுகிறது. அவரின் கோமதிதானே இவரின் பால்கனிகள் கிருஷ்ணனாக வேறு பரிணாமத்தில் வருகிறான்.., அவரின் ”சாவு” கதையில் இறந்தவனின் மனைவி கர்ப்பமாக இருப்பதை வெண்கலதாம்பாளத்தை மூன்று முறை தட்டி அறிவிப்பதைத் தானே ”நிலம் என்னும் நல்லாளில்” குமரனின் மனைவிக்கும் நடக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.
இறுதியாக ( அப்பாடா !! ) , இதில்சொல்லியிருக்கும் சி சு செல்லப்பா, மெளனி ந.பிச்சமூர்த்தி குபரா போன்ற எழுத்தாளர்களை நான் இன்னும் முழுமையாக படிக்கவில்லை. இங்கோ இலக்கிய முன்னோடிகளிலோ உயர்த்தி சொன்னதாலோ தாழ்த்திச் சொன்னதாலோ ஒருவரை நிராகரிக்க முடியாது. முதன்மை எழுத்தாளர்கள் என்பதாலேயே அவர்கள் இந்த புத்தகங்களில் இடம் பெற்றிருக்கிறார்கள் அவர்களின் பங்களிப்பு ஒருவகையில் மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து தான் ஒருவர் இந்த புத்தகத்தை வாசிக்கத் துவங்குகிறார். அல்லது விமர்சனங்கள் இல்லாவிடில் அவர்களை விட்டுவிடவும் போவதில்லை. திறனாய்வு புத்தகங்கள் தத்தமது வாசிப்பின் எல்லையை சரிபார்க்க ஒரு வாசகருக்கு உதவுகின்றன. ஒட்டு மொத்த பார்வை என்று அனைத்து படைப்புக்களையும் உள்ளடக்கியதாக ஒரு மேல்நிலை மதிப்பீடாக ( high level ) இல்லாமல் சிறுகதை என்கிற அள்வில் வைத்து ஒவ்வொரு எழுத்தாளரின் இருபது சிறுகதைகளையாவது குறைந்த பட்சம் பட்டியலிட்டு ஒரு உள்நோக்கிய பார்வையில் மதிப்பிட்டிருகிறார். அந்த வகையில் இது மிக முக்கியமானது எனக் கருதுகிறேன். இந்த புத்தகத்தை வெளியிட்டிருக்கும் எழுத்தாளருக்கும் தியாகு நூலகத்தும் நன்றிகள். கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஊட்டி கூட்ட்த்தின் போது புத்தகத்தை கொண்டுவந்து அளித்த க்விஸ் செந்தில் க்கு ஸ்பெஷல் நன்றிகள்
x