உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வளசரவாக்கத்தில் உள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் கூண்டுக்குள் பெண்கள் சிறுகதை தொகுப்பு குறித்து கலந்துரையாடல் நிகழ்ந்தது. அங்கு பேசிய உரையின் கட்டுரை வடிவம்:-
ஆங்கில/ மராத்திய எழுத்தாளரான விலாஸ் சாங் எழுதிய ”த தம்மா மேன்” ( தமிழில்:
தம்மம் தந்தவன் ) நாவல் வழியாகவே அவரை முதன் முதலில் அணுகுகிறேன். புத்தரின் வாழ்வைத் தத்துவ ரீதியிலாகவோ, போதனைகள் வழியாகவோ அணுகும் முறை உண்டு. ஆனால் இவர் அந்த நாவலில் புத்தரை அவரது அலைச்சல்களைக் கொண்டே அவதானித்தவர். புத்தரின் போதனைகள் அத்தனை இருந்தாலும் அவர் அந்த ”த தம்மா மேன்” நாவலில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் ஒரு போதனை குறிப்பிடத்தக்கது.
’சகோதரா! நீ உனக்குள் ஒரு தீவை உருவாக்கிக் கொண்டு அங்கேயே இருப்பாயாக! உனக்கு உன்னைத் தவிர வேறு யாரிடமும் அடைக்கலம் கோராதே! யாருக்கும் புகலிடமும் அளிக்காதே! உன் தீவாக தம்மத்தை எண்ணிக்கொண்டு அதற்குள் மட்டுமே வாழ்ந்து வா! ’ என்பதாகும் அது
அவரது சிறுகதை தொகுப்பான கூண்டுக்குள் பெண்கள் தொகுப்பைப் படிக்கும் போது, அந்த வரிகளை அடைய அவர் மேற்கொண்ட சோதனைகளோ இந்த கதைகள் எல்லாமே என்று எனக்குத் தோன்றியது. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நிலப்பகுதிகளில் இருந்தும் இவர் இத்தனை ஆண்டுகளாக் எழுதிய கதைகளின் நாயகர்/நாயகிகள் அனைவருமே வேறு வேறு வகைகளில் தனித்தலையும் புத்தர்களாகவே இருப்பது எனக்கு அப்படித் தோன்றச் செய்தது.
தமிழக எழுத்தாளர்களில் கி.ராஜநாராயணன் வரிசை இலக்கியவாதிகளை கதை சொல்லிகள் என்றும் அசோகமித்திரன் வகை இலக்கியவாதிகளை ”கதை எழுதுபவர்கள்” என்றும் விமர்சகர் பார்வையில் எழுத்தாளர் ஜெயமோகன் பிரிக்கின்றார் (இலக்கிய முன்னோடிகள்). விலாஸ் சாரங் -ன் இந்த தொகுப்பைப் படித்தவரையில் அவர் இவ்விரண்டில் அசோகமித்திரன் வழியில் வருபவர் என்பதை அவர் எழுத்தில் வெளிப்படும் வெறுமை, அங்கதம் இவ்விரண்டையும் வைத்து எளிதாக சொல்லிவிடமுடியும். இவரைத் தமிழின் நவீனத்துவ எழுத்தாளர்களில் இணை வைத்துப் புரிந்து கொள்ளலாம்
உதாரணமாக, அசோகமித்திரனனின் ”தப்ப முடியாது” என்கிற சிறுகதையை சொல்லலாம். குழந்தைக்கு வைத்தியம் பார்க்க ஒரு குடிசைவாழ் பெண்மனி சேர்த்து வைத்திருந்த பணத்தை அவளது குடிகார கணவன் எடுத்துக்கொண்டு குடிக்கக் கிளம்புகிறான். அதைத் திரும்பப் பெறக் கத்திக் கூப்பாடு போட்டுக்கொடு வரும் அவனது மனைவியை அடித்துப் போட்டுவிட்டுக் கிளம்புகிறான் அவன். அதை அங்கு ஓரமாக திருட்டு தம் அடிக்க வந்த அந்தக் கதையின் நாயகன் பார்த்துக் கொண்டிருக்கிறான். இரவு படுக்கையில் அவன் அந்த சம்பவத்தைப்பற்றி சிந்தித்தித்துக் கொண்டே இருப்பான். ”பாவி இப்படி பண்ணிடானே அந்தக் குழந்தை என்னவாகும்” என்று அவன் யோசிப்பான்.. அப்படியே அந்த எண்ணம் வளர்ந்து ’அருகில் இருந்த நான் அவனை அதட்டியிருந்தால் அவன் போயிருப்பான்’ என்று தன் மீது அவன் கோபம் திரும்பும். அப்போது அவன் இன்னொரு மனம் அவனிடம் ’நீ இன்றும் தப்பு செய்யவில்லை.. விருப்பு வெறுப்பு இன்றி அதைப் பார்த்துக் கொண்டிருந்தாய்..அதை தத்வமஸி என்று உபநிடதம் சொல்கிறது’ என்று ஆசுவாசப்படுத்தும். அப்போது அந்த முந்தைய மனம் மீண்டும், ‘நீ என்ன கிழித்தாய்! இப்படில்லாம் சொல்லி உன் கோழைத்தனத்தை மூடிக் கொள்ளாதே’ என்று குத்திக் காட்டும்.. அவன் அப்படியே உறங்கிப் போவான். அந்தக் கதை இப்படி முடியும்..” அப்படியே யோசித்தபடி நான் தூங்கி விட்டேன்.. மறுநாள் காலை நான் எழுந்து பார்த்தேன்.. எல்லாம் சரியாக இருந்தது..” என்று. அசோக மித்திரன் கதைகளில் வரும் ’நான்’ மிக முக்கியமானது. விலாஸ் சாரங் கதைகளும் இதேபோல துவங்கி ‘நான்’ என்றே தன்னிலையில் எழுதப்பட்டு செல்வதையும் ஒருவித அங்கதத்தில் முடிவதையும் ஒப்பிட்டுக் காண முடிகிறது. ஒரு அபத்த சூழ்நிலையை தத்துவார்த்தமார்க்கும் முயற்சியும் ஒரு அரிய சூழலை அபத்தமாக்கும் முயற்சியும் இவர் எழுத்தில் தென்படுகின்றன. உதாரணமாக, தன் நண்பனின் தாயின் பிணத்தை எரிக்கையில் அதில் குளிர்காயும் ஒரு தருணம். மற்றொன்று இதில் வரும் ஈக்கள் கதையில் அவர் ஒவ்வொரு ஈயாக எப்படி தப்பவிட்டு எப்படி கொன்று அதை சித்ரவதை செய்து பாடாய் படுத்துகிறார் என்று சொல்லிவந்து அதை இறுதியில் ‘ நான் இப்பொழுது சுய இன்பம் செய்வதில்லை என்று சொல்லி முடிப்பது. புத்தரின் சிலையை எரித்து ஒரு துறவி குளிர்காயும் அந்த புகழ்பெற்ற ஜென்கதையை நாம் இங்கு நினைத்துப் பார்க்கலாம்
கிட்டத்தட்ட இந்த சிந்தனையையே பலவிதங்களில் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார் விலாஸ் சாரங். அவருக்கு இந்தியப் புராணங்களின் மீது ஒரு பெரும் பயிற்சி இருக்கிறது. அதே நேரத்தில் அதை ஒரு நவீனத்துவனின் நோக்கில் காணும் பார்வையும் இருக்கிறது.
இந்திரனின் ஆயிரம் கண்கள் என்கிற தொன்மத்தை அவர் எடுத்துக் கொள்கிறார். அவர், அந்த இந்திரனிடமிருந்து வரும் மணத்தை அழிவின்மையின் மணமாக மாற்றுகிறார். இந்திரன் ரிஷி பத்தினிகளொடு அவர்கள் அறியாமல் உறவு கொண்டவர். அவன் இந்திரன் என்பதைப் பத்தினிகள் உணர்ந்ததே இல்லை. ஆனால் சிகப்பு விளக்குப் பகுதியில் விபச்சாரியாக இருக்கும் சம்பா அவனின் முதற்தொடுகையிலேயே ’நீங்க இந்திரன்தானே’ என்று கேட்கிறாள். இந்திரன் அவளுக்கு ஆயிரம் கண்களை அளிக்கிறான். அவளது பார்வையைக் காணமுடியாத ஆண்களும் பெண்களும் தங்கள் பார்வையைத் திருப்பிக் கொள்கின்றனர். அவளை எதிர்கொள்ள அவர்களால் முடியவில்லை. தன் உண்மையைப் சாதாரணப் பெண்களின் பார்வையிலிருந்து மறைத்து ஒரு பிம்பத்தை கட்டியெழுப்பி விடலாம். ஆனால் ஒரு விபச்சாரிப் பெண்ணிடம் ஒருவன் பீற்றிக் கொள்ள முடியுமா என்ன? அந்தக் கதையின் முடிவில் மக்கள் அவளைத் தெய்வமாக்கி தசரா விழாவில் அவளை துதிக்க ஆரம்பிக்கிறார்கள். இதுவே அவர் தன் அங்கதத்தை வெளிப்படுத்தும் இடமாக இருக்கிறது. இதேபோல ஓம்லிங்கம், தெய்வங்களின் புரட்சி, கஸ்தூரிமான் என்று இவர் சில தொன்மங்களைக் கையாளும் கதைகளிலும் இவ்விதமான நவீனத்துவரின் பார்வையை நாம் காணமுடிகிறது
அந்த நவீனம் என்பது அவர் தன் எழுத்துக்களைக் கையாண்ட முறை என்றும் சொல்லலாம். அதைக் கொண்டு அவர் மரபையோ தொன்மத்தையோ நிராகரிக்கவும் இல்லை. அதை தற்காலத்துடன் பொருத்துகிறார். அதிகநாள் மும்பையில் நிலை கொண்டிருந்தாலும் அவர், அவர் தன் பணி நிமித்தமாக பல தேசங்களில் வாழ்ந்திருக்கிறார். அவரது படைப்புகள் உளகளாவிய ஆங்கிய பத்திரிக்கைகளில்தன வந்திருக்கின்றன. சொல்லப்போனால், அவர் பிற்காலத்தில் மராத்தியில் எழுதிய படைப்புகளுமே அவர் முதலில் ஆங்கிலத்தில் சொற்றொடர்களை அமைத்துப் பின் அதை மராத்திக்கு மாற்றியவைகள் தான். இதுபோல பல உலகின் பல தேசங்களில் வசித்த எழுத்தாளர்கள் தங்கள் அனுபவங்களை எழுதியிருக்கிறார்கள். பெரும்பாலும் அவர்கள் அந்த தேசத்தின் பெயர் சொல்லியே எழுதியிருக்கிறார்கள். ஒருபக்கம் அ.முத்துலிங்கம் ஒவ்வொரு நாட்டின் மனிதர்களின் உன்னதத்தை அறியாமையை எழுதியிருக்கிறார். மற்றொரு பக்கத்தில் சென்ற வருடம் சிறுகதை தொகுப்பு வெளியிட்டிருக்கும் எழுத்தாளர் சிவா கிருஷ்ண முர்த்தி அவர்கள் ஒவ்வொரு நாட்டு மக்களின் உள்ளார்ந்த கீழ்மையை எழுதியிருக்கிறார். அந்த இரு எல்லைகளையும் வைத்துப் பார்க்கையில் விலாஸ் சாரங் தன் கதைகளில் தான் பணிபுரிந்த நாடுகளின் பெயரை அரிதாகவே குறிப்பிடுகிறார். சில கதைகளை வைத்து நாம் யூகிக்க முடிந்தாலும் அதை அவர் சொல்லாததன் காரணம் அவர் தனிப்பட்ட மனிதன் குறித்துதான் எழுதுகிறார் என்பது மட்டுமே. அவர் மொழி தேசம் என்று மனிதர்களை பிரித்துக் காட்டுகையில் அவர்களின் பின்புலம் தேவையற்ற குழப்பங்களை எற்படுத்தி கதையை திசை திருப்பிவிடும் என்று கூட கருதியிருக்கலாம். எந்த தேசமானாலும் அவர் கதாபாத்திரங்கள் ஒரு அறையில், ஒரு வீட்டில், ஒரு வாடகை குடியிருக்கில், ஒரு டார்மென்ரியில் இருக்கும் மனிதர்களே. கூண்டுக்குள் இருக்கும் பெண்களே அவரது கதை மாந்தர்கள்.
அவர்கள் தனக்குள்ளே ஆழ்ந்தவர்களாக இருக்கிறார்கள். இண்ட்ரோவெர்ட் என்று சொல்வோம் இல்லையா அப்படி. அவர்கள் அதிகம் மற்றவர்களிடம் வெளிப்படுவதில்லை. அவர்கள் ஒருவித சுயஆய்வு செய்கிறார்கள். ’வரலாறு தன் பக்கம்’ என்று சொல்லிக் கொண்டு அவர்கள் தனித்து இருக்கிறார்கள். அப்பொழுது அங்கு உலகியலுடனோ அரசியலுடனோ ஒரு தத்துவத்துடனோ அவர்கள் மோதிக் கொள்கிறார்கள். அல்லது குறைந்த பட்சம் அவர்கள் வெளித்தள்ளிய கருத்துக்களே பல்லியாக மீண்டும் அவருக்குள் திரும்புகின்றன. அவரது சிறுகதைகள் அந்த தருணத்தில்தான் நிகழ்கின்றன. விலாஸ்சாரங் அடிப்படையில் ஒரு கவிஞர் என்பதும் அவரது இந்த உள்ளொடுங்கிய கதைத் தனைக்கு காரணமாக இருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. மரபு எழுத்துகளுக்கு உரை எழுதுவது பண்பாடு. நவீன எழுத்துக்கள் ஒவ்வொரு வாசகனுக்கும் அந்தரங்கமானவை. ஆகவேதான், இவர் ஒரு நவீன எழுத்தாளர் என்பதாலேயே அவரது கதைகளுக்கு உரை எழுதுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது. அவரது மற்ற பரிணாமங்கள் குறித்தும் பார்க்கலாம்
விலாஸ் சாரங் என்கிற ஒரு கவிஞன் வெளிப்படும் தருணம் அவரது கதைகளில் மிக முக்கியமானதாக விளங்குகின்றன. கவிஞர்கள் கதைகள் எழுதும்போது அந்த அனுபவம் சில வரிகளில் நமக்கும் வந்துவிடும். யூமாவாசுகியின் ரத்த உறவு நாவலில் சுவீட் கடையின் பெயரை அந்தச் சிறுவன் மைக்கில் சொல்லும் தருணம்.. வேட்டை என்கிற சிறுகதையில் அவர் அந்த வாழை மரங்களை வெட்டும் தருணம்.. பிரான்ஸிஸ் கிருபா, கன்னி நாவலில் “ சிலுவையே! நீ உணர்ந்தது மீட்பரின் இறப்பையா அல்லது உயிர்ப்பையா “ என்று கேட்கும் தருணங்களில் இதை எழுதுபவன் நாவலாசிரியன் அல்ல கவிஞன் என்று நாம் உணர்வது நிகழும். எழுத்தாளர்களின் அபூர்வ வரிகள் இவ்வகையில் எழுந்து வரும். ”முகிலில் வாழ்கிறது அணையா நெருப்பு” என்று துவங்கும் ஜெயமோகனின் வெண்முகில் நகரம் நினைவுக்கு வருகிறது. ( உண்மையில் இந்த இடத்தில் விலாஸ் சாரங் இருந்தால் ஒரு பிராக்கெட்டில்(!) இந்த பேச்சாளர் இதையெல்லாம் படித்திருக்கிறார் என்று ஒரு ஆச்சரியக் குறியும் போடுவார் என்பதை நான் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். இடையூறுக்கு மன்னிக்கவும்.. )
ஆம் கவிதை வரிகள் பற்றி மீண்டும் வருவோம்.. சில கவித்துவ வரிகள் இவரது சிறுகதைகளில் வெளிப்படுகின்றன. இவரது ஒரு வரி எனக்கு தேவதச்சனை நினைவூட்டியது..
“துணி துவைத்துக் கொண்டிருந்தேன். காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்.
தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்.. காதில் விழுகிறது.. குருவிகள் போய்விட்ட நிசப்தம்.
அடுத்த துணி எடுத்தேன்.. காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகளின் சப்தம்”
இது தேவதச்சனின் கவிதை
மேற்கண்ட கவிதையை என்னைத் தேடச் செய்தது..விலாஸ் சரங்கின் வரலாற்றின் முடிவு என்கிற கதை. இந்தக் கதையைப் பற்றி முதலில் குறிப்பிடவேண்டும். இந்தக் கதையே இந்தத் தொகுப்பின் சிறந்த கதையாகவே எனக்குப் பட்டது. காரணம் அவரை எவ்வாறெல்லாம் நாம் பகுக்கலாமோ அல்லது அவர் தன்னை தொகுப்பின் கதைகளை ஐந்தாகப் பிரிப்பதன் மூலம் (வேட்கைச் சூழல், கடலோர நகரம், சிற்றுயிர்கள், நிவானத்தின் தரிசனம் குலாக்கின் நிழல் ) அவர் தன்னை எப்படிப் பகுத்துக் கொள்கிறாரோ அந்த அனைத்திற்கும் பொதுவான கதை அது. அதை எந்த பிரிவில் வைத்தலும் அதனுடன் ஒன்றியிருக்கும்.
முன்பு சொன்ன தேவதச்சன் கவிதைக்கு வருவோம்.. அந்தக் கதையில் ஒரு கதாபாத்திரம் ஒவ்வொரு வரலாற்று இடத்திற்கும் போய் அங்கு இருக்கும் நிசப்தத்தைப் பதிவு செய்கிறது. அந்தக் கதை முழுக்கவே உள்ளொடுங்கியவனை சந்திக்க அவரது மாணவன் வருவதைப் பற்றியது.. அதில் ஒரு வரி,
”‘தனித்திருப்பவன் தன் ஷூவை உள்வெளியாக அணிகிறான். மற்றவன் எதிர்பார்க்காதபடி என்றோ ஒருநாள் கையில் துப்பாக்கியுடன் வருகிறான். யாருடைய காலடிகள் பின்னோக்கிப் பதிகின்றன?’ என்று ஒரு எழுதுறார். வேறொரு கதையில் ‘என் காலணியின் நாடாக்களின் நிலைமை விவாதத்திற்கானது அல்ல.. நானும் அதைக் கோரவில்லை..’ என்று ஒரு வரி.. அவரது மொழிக் கச்சிதத்திற்கு அவர் ஒரு கவிஞர் என்பதும் முக்கியமான காரணம். என்று தோன்றுகிறது. அந்த கச்சிதத்தையும் அங்கதத்தையும் மொழிபெயர்ப்பில் அப்படியே கொண்டு வந்திருக்கும் ஸ்ரீநிவாசன் அவர்களின் மொழிபெயர்ப்பும் முக்கியமாக இந்த இடத்தில் குறிப்பிடப் படவேண்டும்
முன்பே சொன்னது போல அவருக்கு இந்திய தத்துவங்களையும் தொன்மங்களையும் எழுதுவதில் மிகவும் விருப்பம் இருக்கிறது. அவரது ’த தம்மா மேன்’ புத்தகம் முழுதுமே இது குறித்த பார்வையையும் அதில் தன் கருத்தை அதைச் சார்ந்தும் எதிர்த்தும் எழுதியிருக்கிறார். நேராகவோ அங்கதமாகவோ அந்தக் கருத்துக்கள் வெளிப்படும்
சாவுமரம் கதையில் வரும் பாபா சிரசாசனம் செய்யும்போது, தன் ஆசிரமத்தில் இருக்கும் மண்டையோட்டு மரம் வானில் வேர் கொண்டு புவியில் கிளைபரப்பும் தலைகீழ் மரமாக காண்பார். இதை பல இடங்களில் எழுத்தாளர் ஜெயமோகன் தன் படைப்புகளிலும் உரைகளிலும் குறிப்பிட்டிருக்கிறார். அது ஞானிகள் நமக்கு அளித்த கொடை. வானில் வேர்கொண்டு மண்ணில் கிளைபரப்பி விரிந்திருக்கும் நம் மரபு அளிக்கும் ஞானத்தின் குறியீடு. இந்த மரம் என்னும் குறியீட்டை விலாஸ் சாரங் அவர்களும் பல இடங்களில் கையாளுவார். ’த தம்மாமேன்’ முழுக்கவே மரங்களை வைத்து கொண்டு செல்வார். ஆனால் அதையே இங்கு பகடியாக குறிப்பிடுகிறார். அப்படி எழுந்து வந்த ஞானம் இப்பொழுது தன் ஓவியங்களின் வழியாக விபூதி கொட்டும் பாபாவிடம் வந்து நிற்பதன் அபத்தம் அது.
இதைத் தாண்டி இதுல் இருக்கும் அரசியல் கதைகள். இந்திய வல்லூறு வின் வாக்கு மூலம் கதை அவர் முன்பே எழுதியிருந்தாலும் சமீபத்தில்தான் அந்த சைவ அசைவ உணவு விவாதமானது என்பது நினைவுக்கு வந்து. வேறொரு கதையில் இந்தியாவில் இராணுவ ஆட்சி வரும் என்பது அவருக்கு ஒரு கனவில் தோன்றுகிறது. அதேநேரம், அவரது மற்ற கதைகளை விடவும் அவரது இந்த கதைகள் நாம் அறிந்த முடிவை நோக்கி நம்மை இட்டுச் செல்வதும் நாம் படித்த கதையையே மீண்டும் படிக்கும் எண்ணத்தை உண்டாக்குகின்றன.
மற்றும் ஒரு குறிப்பிடத் தக்க ஒன்று குரூர அழகியல். அந்த பீபத்ஸம் என்பதும் கூட வெறும் அதிர்ச்ச்சிக்காக அவரால் பயன் படுத்தப்படவில்லை
தேவதேவன் தன் கவிதை ஒன்றில் சொல்வார்:
’கடலோரம் வெளிக்கிருந்து /கால்கழுவி எழுந்த பின்புதான் /கடலும் வானமும் தன் ஆகிருதி காட்டிற்று’ ஆம்.. அத்தனை பிரம்மாண்டம்தான் என்றாலும் அவனவனுக்கு அவனவன் அவசரங்கள் அவஸ்தைகள் முக்கியம். அதில் முக்கிக் கொண்டிருப்பவனிடம் சென்று ஒரு ஆகாயத்தின் கடலின் அழகைப் பேசுவதைத்தான் அவர் தன் அந்தக் கதைகளில் சுட்டுகிறார். உலகியல் பிரச்சனைகளில் திளைத்துக் கொண்டு இருப்பவனிடம் கவித்துவத்தைக் காட்டிக் கொண்டு இருக்கும் ஒரு அபத்தம் உண்டு. அதைத்தான் விலாஸ் சாரங் கும் பகடி செய்கிறார். ஒரு விதத்தில் அது அவரையே அவர் சுயபகடி செய்து கொள்வதாக வெளிப்படுகின்றன. அதனால்தான் அவர் தன் கதைகளை பெரும்பாலும் தன்னிலையில் எழுதுகிறாரோ என்றும் தோன்றுகிறது
இந்த தொகுப்பைப் படித்ததும், அவர் கதைகளில் வெளிப்படும் ’இடம் /காலமற்ற தன்மையும்,’ ’கவித்துவமும்,’ ’பீபத்ஸம் எனப்படும் குரூர அழகியலும்தான்’ அவரது தனித்தன்மையாக நம் நினைவில் நிற்கின்றன. அந்த தருணங்களில்தான் அவரது எழுத்துக்கள் உச்சம் பெறுவதும் நிகழ்கிறது . நாம் நம் அலுவலகத்தில் வேறு தேசத்தின் நேரத்தில் ஆழ்ந்து வேலை செய்திருக்கலாம். சில நேரங்களில் நம் வாசிப்பில் கால நேரம் பார்க்காமல் ஆழ்ந்திருக்கலாம். அதன்பின் நிகழ்காலத்திற்கு மீள்கையில் யதார்த்தத்த்தைக் கண்டு திகைத்து நிற்கும் ஒரு கணநேரத் தருணம் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கலாம். தன் கதைகளில் இவ்வாறு காலமும் தூரமும் வைத்து விளையாடும் விலாஸ் சாரங்-ன் கதைகள் நமக்கும் அத்தகைய ஒரு திகைப்பைத்தான் அளிக்கின்றன
கூண்டுக்குள் பெண்கள்