எச்சரிக்கை:-
இந்தப்பதிவினை எழுதியதும் யார் யாருக்கு சுட்டிஅளிப்பேன் என தெரியும். அவ்வகையில் இது உடன்பிறந்தோனின் பெருமையை பிறந்தவீட்டில் பீற்றிக்கொள்ளும் பதிவே
அம்புப் படுக்கை - தொகுப்பு
பணமும் பாசமும் அறிவியலும் விதியின் முன் கையைப் பிசைந்துகொண்டு நிற்கும் வாசுதேவன் கதையின் மூலம் அறிமுகமான சுநீல் தன் பேசும்பூனை கதைமூலம் கணையாழியின் சிறந்த குறுநாவலுக்கான பரிசைப் பெற்று, ஜெயமோகன் காதில் புகை வரும் அளவிற்கான எழுத்தாளராய் வந்து நிற்கும் பயணமே இந்த அம்புப்படுக்கை தொகுதி.
பத்து கதைகள் கொண்ட இந்த தொகுப்பில் தர வரிசைப்படி முதல் இடம் வைக்கச் சொன்னால் நான் வாசுதேவனைத்தான் தேர்ந்தெடுப்பேன். அதில் உள்ள தவிப்பும் இயலாமையும் “சக்சன் போட கொஞ்சம் லேட்டானாக்கூட மூச்சு நின்னுடும்” என்று சொல்லிவிட்டு வருவதும் மிகவும் பாரமானது. வாசுதேவன் பெற்றோருக்கு அளிக்கும் அதே வேதனையை மருத்துவருக்கும் பின் வாசகனுக்கும் அளிக்கிறான். அந்த உணர்வைக் கடத்திய இடத்தில் இந்தக்கதை வெற்றியடைகிறது. இறுதியில் கொச்சையான தெலுங்கில் அந்தக் குழந்தை பொம்மையைப் பிய்த்து விளையாடுவதில் கதையை முடித்திருப்பார். வந்தேறிகளின் தெலுங்கு, ஊழைவிடவும் கொடுமையானது
குருதி சோறு கதை நம் குலதெய்வங்களின் கதை. ஒரு குறுநாவலுக்கிணையானது. பாலாயி அன்னபூரணியாகும் தருணம். இருவேறு கதைகளை சொல்லிவந்து இறுதியில் பாட்டிகதை வாயிலாக அனைத்தையும் இணைக்கும் நுட்பம் சரியாக கைவந்திருக்கிறது. இது தவிர காளிங்க நர்த்தனம், அம்புப்படுக்கை போன்ற கதைகளும் சரளமான மொழிவடிவில் உள்ளன.
2016 மற்றும் திமிங்கலம் போன்ற கதைகளை இவர் மொழிபெயர்த்தார் என்று சொன்னால் நம்பிவிடலாம். அந்த எழுத்து வகையினாலேயே அவை மாறுபட்டும் இருக்கின்றன. ”ஹோமோ ரீகாம்பினண்ட்” ஆய்வு பற்றி விளக்கியிருப்பது ஒரு சிறுகதைக்கு அவர் மேற்கொள்ளும் சிரத்தையைக் காட்டுகிறது.
எல்லாகாலங்களுக்கும் பொருந்தி வரக்கூடியதாக ஒரு கதை உள்ளது, கூண்டு. அது வெளிவந்தபோது இருந்த பணமதிப்பிழப்பு பிரச்சனையை ஒட்டிப் புரிந்துகொள்ளலாம். இப்போது படிக்கையில் வேறு ஞாபகம் வருகிறது. ஒரு நல்ல பகடி / அபத்த நகைச்சுவை கதையாக படிக்கலாம்.
சுநீல் எஸ்.பி.பி, யை விட சிறந்த பாடகர் என நம்பியிருந்த சுதீரனின் நம்பிக்கை தர்ந்த “ பொன்னழகை பார்ப்பதற்கும்” கதையை சுநீலின் பாடல்களைக் கேட்டவன் என்கிற வகையில் நகைச்சுவையாகவே அணுக முடிந்தது. இரண்டாம் முறை படித்தபோது சிரித்து வயிற்று வலி. சிறிது நேரம் பேசும் பூனை படித்து மனதை சோர்வாக்கிக் கொண்டு மீண்டும் படித்தால் இன்னும் பலமாக சிரித்து பிறகொருநாள் சீரியஸாக படிப்போம் என தாண்டிவந்துவிட்டேன். இறுதிக்கதையாக வரும் ஆரோகணம், காந்தியை தருமனோடு ஒப்பிடும் கதை. ஒரு துளி கண்ணீருடன் இந்த தொகுதியை மூடி வைக்க வைக்கிறது. ’ஹரி, என் செல்ல மகனே..” போல அநேக கதைகளில் வரிகள் வருகின்றன. இவை சற்று செயற்கயாக இருப்பது போல தோன்றுகிறது. அவை ஆங்கில நாவல்களுக்கே உரியவை என்பது என் எண்ணம். அவைகளை தவிர்க்கலாம் அல்லது தமிழ்படுத்தலாம். சில classic களில் இவற்றை தவிர்க்க முடியாது. ஆரோகணம் இந்த தொகுப்பின் classic என்பதால் விட்டுவிடலாம். ஆனால் மற்ற கதைகளுக்குள் இவை எட்டிப்பார்ப்பதை கவனமாக தவிர்க்கவேண்டும் எனக்கூறுவேன்.
சுநீலின் மிகப்பெரிய பலம் என்பது அவரின் நடை. பல இடங்களில் லா.ச.ராவை நினைவு படுத்துகிறார். நெருப்பென்றால் வாய் வேகும் நடைதான். உதாரணமாக குருதிசோறு நாவலின் இந்த வரிகளைக் கூறலாம்.
” அம்மா கொடுத்த தாய்ப்பால்தான் கடைசியில் கரிய திரவமாக, குருதி கலந்த காட்டுப்பீயாக வரும் என்று சொல்வார்கள்..”
“விளங்கியம்மன் கோவில் பூசாரி பாண்டியண்ணன் உடுக்கையை அடித்துக்கொண்டே ஆட தொடங்கினார். சபரியின் கால்கள் அவனை மீறி தாள கதிக்கு ஏற்ப ஆடுவது போலிருந்தன. கண்ணுக்கு எதிரே குளிர்ந்த நதியோன்று சபரியைப் வசீகரித்து அழைப்பது போலிருந்தது. ஒரு அங்குலம், ஒரு புள்ளி, ஒரு கனம், அல்லது ஒரு மிக மெல்லிய திரை ஏதோ ஒன்று \அவனை அந்த நதியில் இறங்க விடவில்லை. ஒரு மெல்லிய சலன தூரத்தில் அவன் நின்றுக் கொண்டிருந்தான். நதியின் தெறிப்புகள் உள்ளங்காலில் சிதறி சில்லிட செய்தன. கால்களிலும் கரங்களிலும் படர்ந்திருக்கும் பூனை மயிர்கள் குத்திட்டு நின்றன. அதன் ஆழமும் வேகமும் குளுமையும் கருமையும் அவனை ஈர்க்கிற அதேசமயம் அவைகள் அவனை அச்சமுற செய்தன. ராஜம் மாமாவின் விசும்பல் கூடிக்கொண்டே போனது. யாரோ இரு பெண்கள் உடலை முறுக்கிக்கொண்டு ஆடத் தொடங்கினார்கள். ஊஊஊய் என அடிவயிற்றிலிருந்து ஒரு கூச்சல் எழுந்தது. நதி ஒரு சுழிப்பில் பலரையும் வாரி சுருட்டி கொண்டுவிட்டது...”
அந்த இடத்தில் அங்கு நிற்கும் உணர்வை எழுத்தில் கொண்டுவருவது என்பது அசாதரணம். அது எளிதாக கைவந்திருக்கிறது,
சுநீல்க்கு நல்ல வாசிப்பு பயிற்சி இருக்கிறது, பலதரப்பட்ட மக்களோடும் புழங்குகிற தொழில் அனைத்தையும் மீறிய ஒரு தேடல் இருக்கிறது. அவை அனைத்தும் ஒரு ஒளிக்கீற்றாக இந்த தொகுப்பில் வெளிப்படுகின்றன. இந்த் ஒவ்வொரு கதைகளின் வழியே அவர் ஒவ்வொன்றாக கடந்து போகிறார். வாசுதேவனில் எளிய குற்றவுணர்ச்சியோடு துவங்கி அனைத்தும் மகாத்மாக்களாக நிறைவடையும் இந்த தொகுப்பில் உள்ள கதைகள் சுநீலின் மாறுபட்ட மன நிலைகளின் வெளிப்பாடு எனலாம்.
சிறுகதைகளைத்தாண்டி அடுத்தகட்ட நகர்வான நாவல் வெளிக்குள் அவர் பிரவேசிக்கவேண்டும்.
வாழ்த்துக்கள் சுநீல்!!!