அனைத்து
ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறது.
இதற்குள் திமுகவின் அரசியல் இருக்கிறது என்பதையும் அது மக்களை திசை திருப்புகிறது
என்பதையும் விவாதத்திற்கு அப்பால் வைத்து விட்டு யோசிக்கிறேன். இந்த வழக்கு நீதி
மன்றத்தில் உள்ளது. நாளை என்ன நிகழும் என தெரியாது. இதன் சமூக ஏற்பும் எப்படியிருக்கும் என
தெரியாது. இதுவே தொடரலாம். மாற்றமடையலாம். ஆனால் அவ்வாறு
மாற்றமடைகையில் அதில் அரசு தடை
இருக்காது என்று சட்ட ரீதியாக சொல்லியிருக்கிறது என்கிற கோணத்தில் பார்த்தாலும்
இது ஏற்கத்தக்கது.
துவக்கம் முதலே
இங்கு அர்ச்சகர் என்கிற பொறுப்பு / உரிமை ஒரு குடும்பத்திற்கு உட்பட்டதுதானே ஒழிய ஒரு
சமூகத்திற்கு உட்பட்டது அல்ல. இப்போது ஒரு குறிப்பிட்ட
புராதன கோயிலை எடுத்துக் கொள்ளுங்கள் அங்கு தொடர்ச்சியாக வரும் தலைமுறையினர்
அர்ச்சகராக இருப்பார்கள். அவர்கள் தவிர வேறு யாரும்
அர்ச்சனை செய்ய இயலாது. அதாவது பொதுப்புரிதல் படி பிராமணர்கள்
அனைவரும் அர்ச்சகர்கள் அல்ல. எல்லா பிராமணர்களும் கருவறை புக இயலாது.
சொல்லப்போனால் ஒரு கோயில் அர்ச்சகர் மற்றோரு கோயிலுக்கு கருவறை புக முடியாது. தலைமுறையாக வரும் குடும்பத்தினர்தான் அர்ச்சனை செய்ய
இயலும்.
இங்கே என் ஊரைச்
சுற்றியுள்ள (திருமுல்லைவாயல்) நான்கு அம்மன் கோயில்களை உதாரணமாக
எடுத்துக்கொள்ளலாம். ஒன்று மாசிலாமணீஸ்வரர் - கொடியிடையம்மன் கோயில்
அடுத்து ஸ்ரீமன்னாதீஸ்வரர் - ஸ்ரீ பச்சையம்மன் கோயில்
அதற்கடுத்து ஸ்ரீவைஷ்ணவி அம்மன் கோயில் நான்காவதாக ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில். இதில்
கொடியிடையம்மன் கோயில் தஞ்சசைப் பெரிய கோயிலுக்கும்
புராதனமானது. கோயிலில் பரம்பரையாக அர்ச்சனை செய்யும்
குருக்கள் இருக்கிறார். வைஷ்ணவி அம்மன் கோயில் தனியார்
கோவிலாகும். நூறாண்டுக்குள் தான் இருக்கும். ஆனால் இந்திய அளவில் அறியப்பட்டதும்
ஆகும். அங்கு அவர்களால் நியமிக்கப் பட்ட அர்ச்சகர் இருக்கிறார். இங்கு பலருக்கு
குலதெய்வமாக விளங்கும் பச்சையம்மன் கோயில் 800 வருடங்கள்
பழமையானது. அதன் அர்ச்சகர்கள் நீலகண்டநாயனார் வழி வந்தவர்கள். அவர்களும்
பிராமணர்கள் அல்ல. மற்றது ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில். அது நாடார்மகாஜனங்களின்
கோயில். அங்கும் அர்ச்சகர்கள் பிராமணர்கள் அல்ல.
பொதுவாகவே இந்து
மதம் தனக்கான அதிகார மையம் என ஒன்றை கொண்டிருப்பது இல்லை. நானோ நீங்களோ பணம் திரட்டி ஒரு
கோயில் கட்டி அதை பூஜித்தும் வரலாம். அதை யாரும் கேள்வி கேட்க முடியாது.
நெடுஞ்சாலையில் காணும் பல அனுமன் கோயில்கள், மேல்மருவத்தூர்,
வேலூர் பொற்கோயில் முதல் லிங்க பைரவி வரை அத்தகையவையே. அந்தக்
கோயிலுக்கு அதை நிர்மாணித்தவர் வழக்கப்படி எந்த ஜாதியினரும் அர்ச்சகராகவும்
இருக்கலாம். அதுவும் தடைசெய்யப்பட்டதல்ல. அதன் வழிபாட்டு முறையை நீங்களே
வகைப்படுத்தியும் கொள்ளலாம். அதேபோல மடங்களும் நீங்கள் நிறுவலாம். அது சங்கரமடம்
போல இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. சத்குருவை சங்கரமடமோ ஆதீனமோ
கட்டுப்படுத்தினார்களா என்ன?
ஆகவே இங்கு அனைத்து
ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுதான் என சொல்லிவிட
முடியுமா? ஒருவிதத்தில் ஆம். ஆனால் புராதன
கோயில்கள் அனைத்திலும் பெரும்பாலும் பிராமணர்களே
அர்ச்சகர்கள் என்பது மறுப்பதற்கில்லை. அவர்கள் அந்தக்
கோயில் நிர்மணிக்கப்பட்ட காலம் முதற்கொண்டு பரம்பரையாக
வரும் தொடர்ச்சி. அந்தப் பரம்பரை முறை செல்லாது என தமிழக அரசு ஏற்கனவே சட்டம்
இயற்றி அதுதான் இன்று நடைமுறைப் படுத்தப்பட்டது. இதை, அன்றைய
மன்னர் அரசு அளித்ததை இன்றைய அரசு ரத்து செய்து மாற்றியமைக்கிறது என புரிந்து
கொள்ளலாம்.
இங்கு வரும் எதிர்ப்பு
என்பதற்கும், சாதனை
என்பதற்கும் இது பொதுவாக அவ்வாறு பிராமண சமூகத்தின்
ஒரு முக்கியமான இடமாக இது கருதப் படுவதே ஆகும். இவற்றில் ஏற்கனவே பிராமணர் அல்லாத
அர்ச்சகர்கள் இருக்கும் கோயில்களுக்குள் சில காரணங்களால் அடுத்து அதைத் தொடர வாய்ப்பில்லாமல் நிற்கும் பட்சத்தில் அங்கு பிராமணர்
ஒருவர் அர்ச்சனை செய்ய வந்தால் அங்கு அதற்கான ஏற்பு இருக்கும். அவ்வாறு இல்லாமல்
மாறி நிகழ்ந்தால், பிராமணர் அர்ச்சகராக இருக்கும் இடத்தில்
பிராமணரல்லாதார் அர்ச்சகராக வரும்போது அதற்கான ஏற்பு
இருக்குமா என்றால் இருக்காது. கிட்டத்தட்ட அதுதான் இன்றைக்கு எழும்
கண்டனங்களுக்குக் காரணம்.
இந்த கோயில்
அர்ச்சனை மரபை இந்நாள் வரை தொடர்ந்து கொண்டு வந்ததில் பிராமண அர்ச்சகர்களின் பங்கு
உள்ளதா என்றால் கண்டிப்பாக உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களுக்குக்கும்
மூன்று வேளைக்கு நிகழும் பூஜைக்கான குறைந்த பட்ச தொகையைத்
தருகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். சென்னை நகரிலேயே நான் சென்ற சில
கோயில்களில் சுவாமிக்கு எண்ணெய் டின் வாங்கி கொடுங்க என்று கேட்டு வாங்கி
விளக்கேற்றினார். அறநிலையத்துறை விளக்கேற்ற எண்ணெய் கூட தருவது இல்லை.
கிராமப்புறங்களில் உள்ள கோயில்களில் தனது வீட்டில்
சமைத்தவற்றை கொண்டுபோய் வைத்து கடவுளுக்குப் படைத்தும் அதை இத்தனை வருடங்களாக தொடர்ச்சியாக ஆற்றியவர்கள் அவர்கள்தான்.
இதுநாள் வரை தர்மத்தை பேணிக்காத்ததில் அவர்களின் பங்கு பெரியது.
இரண்டாவதாக, சுயமரியாதை இயக்கத்தின்
எழுச்சிக்குப் பிறகு பிராமண சமுதாயம் கிண்டலுக்கும் ஆளானது.
முதலில் அபிராமண இயக்கம் என்று பெயர் கொண்டு துவக்கப் பட்ட
சுயமரியாதை இயக்கத்தின் தொடர் செயல்பாடுகள் பிராமண சமூகம் தன்னை சுய விமர்சனம் செய்யவும் ஒடுங்கிக் கொள்ளவும் வழி வகுத்தன. அக்ரஹாரங்கள்
மெல்ல அருகியதும் நதிக்கரையோர பிராமணர்கள் மொத்தமும் வாழ்வாதாரத்திற்காக நகரத்தை
நோக்கி இடம் பெயர்ந்ததும் நிகழ்ந்தது. இன்று சென்னை தவிர பிற நகரங்களில்
, முன்பு அக்ரஹாரங்களாக இருந்த நகரங்களில் கூட புரோகிதர்கள் இல்லாத
நிலைதான். வேதம் பயின்ற / அர்ச்சக பிராமணர்களை விடவும் உலகியல் வேலைக்கு வந்த
குமாஸ்தா பிராமணர்கள் முக்கியத்துவம் பெற்று பல
துறைகளில் கோலோச்சினார் கூட. இதில் விமர்சனம் ஏதும் இல்லை. யதார்த்தத்த்தில்
புரிந்து கொள்ளத் தக்கதே. மெல்ல பிராமண சமூகம் பிற வேலைகளுக்குள் இறங்க
அவற்றின் நியாயத்தை பொது சமூகமும் ஏற்றுக் கொண்டது. அதேபோல
பிராமணர்கள் கோயிலுக்குள் மெல்ல தன இடத்தை விட்டுத்
தருவதும் நல்லதே. மெல்ல மெல்ல தன்னை சுற்றியிருந்த
தினசரி அனுஷ்டானங்களையும் கைவிட்டது. அது அந்த சமூகத்தாலேயே ஏற்றுக் கொள்ளவும்
பட்டது. அதை தனக்குள்ளே நியாயப்
படுத்தவும் செய்தனர். மெல்ல மெல்ல அது வேஷம் போடத் துவங்கியது. வேதம்தான்
முக்கியம் என்று வெளியே பேசுவதும் ஆனால் தன
பிள்ளைகளுக்கு தினசரி சந்தியா வந்தனம் கூட செய்ய சொல்லித்தராமல் விட்டுவிடுவதும்
நிகழ்ந்தது. வேதம் ஓதும் பிராமணர்களும் அர்ச்சக
பிராமணர்களும் ஆதரவு இல்லாமல் விடப்பட்டனர் என்பதும், இன்றைக்கும்
அவர்களில் பலர் திருமணமும் கூட ஆகாமல் இருப்பதும் உண்மை.
ஆனால் அதேநேரத்தில் அர்ச்சகர்களாக இருந்த பல பிராமணர்கள் கோயிலை விடாமல் இருந்தனர். பஞ்ச காலத்திலும் நைவேத்தியம் குறை வைத்தார்கள் இல்லை. இதுநாள் வரை கோயில் மரபை தன்னுடைய தலைமுறைகளுக்கு அவர்களே கடத்தி வந்தனர். தட்சணை என்பது ஒரு சில பெரிய கோயில்கள் தவிர வேறு எங்கும் கிடைப்பதே இல்லை. அறநிலையத்துறை அவர்களுக்கு அளிக்கும் மாத சம்பளம் ஐந்நூறு அல்லது அறுநூறு என்கிறார்கள். அவர்களின் வாழ்வு என்பதே சொந்த சமூகத்தாலும் பொது வெளியிலும் நுட்பமாக புறக்கணிக்கப்படும் ஏளனம் செய்யப்படும் ஒன்றே. இன்று அவர்களுக்காக குரல் கொடுக்கும் உலகியல் பிராமணர்களோ பிராமண சங்கங்களோ ஒருகாலமும் அவர்கள் கூட நிற்கப் போவதும் இல்லை. எல்லாம் வெறும் கண் துடைப்புத்தான். ஆதரவு இல்லாத ஏதும் தானாக காணாமல்தான் போகும். அர்ச்சகர்கள் / வேத விற்பன்னர்கள் தன்னுடைய மைந்தர்களைக் கொண்டு அதைத் தொடர இயலாமல் குற்ற உணர்ச்சி கொள்வதைவிட அரசின் மீது கை காட்டிவிட்டு மெல்ல வெளியேறி விடலாம் என்பதே என் கருத்தும். ஆலயங்களின் மரபுகளிலிருந்து மரபு இசை வெளியேறி அங்கு இயந்திரங்கள் வந்துவிட்டன. ஊர் கூடி தேர் இழுப்பது போய் அங்கு இயந்திரங்கள் வந்துவிட்டன. அர்ச்சகர்கள் போய் அங்கும் இயந்திரம் வரும் காலத்தை சுஜாதா திமலா என்ற ஒரு கதையில் எழுதியிருப்பார். அதைவிடவும் சிறந்தது இந்த மாற்றம். பிற சமூகத்தினர் திரளாக வந்து ஆவலுடன் பயின்று அதை முன்னெடுக்க வேண்டும். அவர்களுக்கான மரியாதையையும் கெளரவத்தையும் அந்த சமூகத்தின் பிற உலகியல் மக்கள் காத்து நிற்கவும் வேண்டும்.
இனி அர்ச்சகர்கள் பணி முற்றிலும் அரசு வேலையாக போகும்
பட்சத்தில் கீழ் கண்டவற்றை ஒரு பக்தனாக சொல்ல விரும்புகிறேன்.
இந்த அர்ச்சகர் நியமனம் என்பது ஏற்கனவே பாத்தியப்பட்ட
ஒரு குடும்பதினரிடமிருந்து அதை வலுக்கட்டாயமாக மாற்றித் தருவதாக இருக்கிறது என்று வலைதளச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதற்கு கோயில் நிர்வாகம்,
உள் அரசியல் அல்லது வெளி அரசியல் என்
காரணம் எதுவாக இருந்தாலும் அது நிறுத்தப் படவேண்டும்.
முதல்நாள் இரவு நடை சாத்திவிட்டுப் போனவரை மறுநாள் கோயிலுக்குள் அனுமதிக்காதது
மனிதாபிமானமற்ற செயலே. நான் சாபம் பாவம் ஆகியவற்றில் நம்பிக்கை உள்ளவன். இது
சாபமன்றி வேறில்லை.
அடுத்த தலைமுறைக்கும் தன் மைந்தரை தொடர்ச்சியாக உருவாக்கி வைத்து அவ்வாறு பரம்பரைத் தொடர்ச்சி இருக்கும் கோயில்களுக்கு இதை அமல்படுத்த வேண்டாம்
என்பது. மரபாக அவர்களிடம் வந்து சேர்ந்த ஒன்று அது. அதை தட்டிப்பறிப்பது தேவையில்லாத ஒன்று. அதுவும் பாவமே
என்று கருதுகிறேன். அவர்களுக்கான கெளரவம் அளிக்கப்பட வேண்டும்
அர்ச்சகர் பயிற்சியை மடங்கள் முன்வந்து, முன்னெடுக்க
வேண்டும். பொதுவாக அரசு பயிற்சி அளிப்பதும் பல்கலைக் கழகங்கள் பயிற்சி அளிப்பதும்
இதில் தேவையில்லாத ஒன்று. இங்கே ஆகம மரபு என்பது பல பிரிவுகள் அதற்கான சடங்குகள்
முத்திரைகள் கொண்டவை. புதிய அர்ச்சகர்கள் அவற்றை
முறையாக பயின்று வரவேண்டும்.
அர்ச்சகர்கள் அரசு ஊழியராக கருதப்பட்டு அவர்களுக்கு
ஊதியம் ஓய்வுக்காலம் எல்லாம் அனுமதிக்கப்படும் பட்சத்தில் எல்லா அரசு ஊழியருக்கு
இணையான சம்பளமும் அளிக்கப்பட வேண்டும். இப்போது அளிக்கப் படும் 500/- மற்றும் 1000.- என்பது மிகவும் குறைவானது
இப்பொழுது பூஜை நிகழாத அர்ச்சகர்கள் இல்லாத பல கோயில்களில் புதியவர்களை
நியமித்து அவர்களை முன்னுதாரணமாக கொண்டும் இது தொடரலாம். பொது மக்களுக்கு அதற்குள்
அவர்கள் மீது ஒரு நம்பிக்கை வரும்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொன்று அன்றும்
இன்றும் மன்னர்கள் கருதிய /கருத வேண்டிய பக்தர்களின் ஏற்பு என்பதைத்தான். பக்தர்களின்
விருப்பம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். கடவுள் நம்பிக்கை இல்லாத
அரசு இதை முன்னெடுப்பதால் வரும் தேவையற்ற குழப்பங்களை இது
தவிர்த்து விடும்.
இன்றைக்கு எதிர்பாராமல் ஒரு கடவுள்
புகழ் பெறுவார். குபேரன், சரபேஸ்வரர், போல.
பல பெரிய புராதன கோயில்களில் அவர்கள் தேமேவென ஒரு
தூணில் இருப்பார்கள். ஆனால் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க காலப்போக்கில் அங்கு
ஒரு சந்நிதி கிளம்பி பூஜை நிகழும். இந்து மதத்தில் இதெல்லாம்
யார் கட்டுப்படுத்துகிறார்கள்? அவ்வாறு ஏதும் இல்லை. பக்தர்களுக்கு
ஏற்ப அவர்கள் விருப்பம் பொறுத்து அது நிகழும். ஒரு
பக்தன் அகிலாண்டேஸ்வரி, சமயபுரம்,
மருவத்தூர் எல்லாம் தனக்கான மரபுகளோடு திகழ
வேண்டும் என்று கருதவும் உரிமையுண்டு.. அரசு
அதை ஆதரித்தாலும் மாற்றினாலும்
காலப்போக்கில் பக்தர்களின் ஏற்புப்படியே இது நிகழும்..
ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அவதரித்த எம்பெருமானார்
பாஷ்யகாரர் ஸ்ரீராமானுஜர், மானுடர்கள்
அனைவரும் சமம் என்று அனுமதி மறுக்கப்பட்ட தழ்த்தப்பட்டவர்களை திருக்குலத்தோர் என்று கூறி அவர்களுக்கான வழிபாட்டு
உரிமையை அளித்தார் என்பது வரலாறு. தமிழ் பிரபந்தங்களை ஓதவும் வைணவச் சின்னங்களை
தரிக்கவும் எந்தச் சாதியினரோ, ஆணோ பெண்ணோ எனக் கருதாமல்
எலலோருக்கும் வைணவத்தில் இடம் இருக்கச் செய்தார். அன்று அவர் செய்ததை புரட்சி என இன்று
கொண்டாடும் இந்த சமூகம் இதையும் ஏற்கவேண்டும். இது இன்றைக்கு ஒரு சமூகத்தேவை
என்பதும் நீண்டகால நோக்கில் இந்து மதத்திற்கும்
பயனளிக்கக் கூடியது என்பதும் என் கருத்து.