Wednesday, December 29, 2021

விஷ்ணுபுரம் விழா - 2

முந்தைய பதிவின் தொடர்ச்சி 





முந்தைய பதிவில் ஒரு விஷயத்தை கவனித்திருப்பீர்கள். எங்கும் எழுத்தாளர். ஜெயமோகன் குறித்து ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் அவர் அமர்வுகளில் பங்குபெற்று கேள்விகள் எழுப்பவே இல்லை. முன்பு ஏற்காடு காவிய முகாமில் அமர்வில் பங்கேற்க வெளியே இருந்த இருவரை கண்டிப்புடன் உள்ளே துரத்த, அப்போது  அரங்கா பதறியபடி இடைபுகுந்து அவர்கள் சமைக்க வந்தவர்கள் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்த வரலாறு உண்டு. இந்த முறை மொத்த அமர்வுகளையும் ஜாஜாவிடம் (ஜா.ராஜகோபாலன்) விட்டு விட்டு வெளியே சென்று அமர்ந்திருந்தார். 

எங்கே என தேடினால் கீழே வந்து தெருவை வேடிக்கை பார்ப்பது, அவசரமாக அரங்கில் நுழைபவருக்கு வணக்கம் சொல்வது போன்ற சீரிய பணிகளில் இருந்தார். அப்போது நானும் விஜயசூரியனும் சைகையில் பேசிக்கொண்டதன் கருத்துப்படம்தான் சைடில்  இருப்பது,

 
அரங்கிலேயே தனியாக பேசும்போது பதில் கூறினார் என்றாலும், இன்று பதிவில் அதற்கான விளக்கம் அளித்திருக்கிறார். ஆனால் விழாவிற்கு முன்பு விக்கீபிடீயா பதிவு போல முதல் பல முன் வேலைகள் செய்திருக்கிறார். மதுசூதனன் சம்பத் இது சம்பந்தமாக விக்கீபீடியா மக்களுடன் போராடிக்கொண்டிருக்கிறார்.  இவ்வளவு வேலைகளுக்குப் பிறகும் ஜெ. ஒரு விலகல் தன்மை கொண்டிருப்பதாக கூறியது கவனிக்கத்தக்கது. இது போன்ற தத்துவ சிக்கல்களில் மாஸ்டர்கள் ஆட்பட்டு விடுகின்றனர் என்று நான் நினைத்துக் கொள்வேன். எனது இன்னொரு ஆதர்சமான ரஜினியும் இதுபோல விலகி இமயமலைக்கு செல்வதுண்டு. ரஜினி, ஜெ. இருவருக்கும் பொதுவானவை சில உண்டு. இருவரும் இளம் வயதில் தற்கொலை செய்ய ஒரு மலைக்குப் போய் அங்கு திடீர் தரிசனம் பெற்று மனம் மாறி இறங்கி வந்தவர்கள். வந்தபிறகு  தன் துறையில் இறங்கி அடித்து ஆடியவர்கள். தான் சார்ந்த்துறைக்கே புத்துயிர்ப்பு அளித்தவர்கள். தன் துறை சாராத பொதுமக்களிடமும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.ஆனால் ஒரு விலக்கமும் கொண்டிருக்கிறார்கள்.இது பொதுவாகவே கர்மயோகிகளுக்கு இருக்கும் பிரச்சனை என நினைக்கிறேன். (இதை தட்டச்சிடும்போது  மனம் இளகிநிற்கிறது. சமீப காலமாக இப்படி ஆகிறது. விழாவில் ஜெ. உரை கேட்டபோதும் இதேபோல் உணர்ச்சி மேலிட்டது ). ஆகவே ஒரு பிரேக் எடுத்துக் கொண்டு  பன்னிரெண்டு வருடங்களுக்கு முந்தைய என் இந்த பதிவை வாசித்து மீண்டு இந்த பதிவிற்கு வருகிறேன். 

(ஒரு கிசுகிசு:- அந்த  பதிவில் குறிப்பிட்டுள்ள  "தியேட்டரில்   முன்சீட்டில்  ஆடிக்கொண்டிருந்த அண்ணன்களில்" ஒருவர் இன்று டோக்கியோவில் இருக்கிறார். சிறுகதை தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். அவர் எழுத்தாளர் ஆகிவிட்டபடியால் அவர் பெயரை நாகரீகம் கருதி சொல்லாமல் தவிர்க்கிறேன்.




காலை தெலுங்கு கவிஞர் சின்ன வீரபத்ருடுவின் அமர்வு. நான் ஐந்து வருடங்கள் ஆந்திராவில் பணிபுரந்ததால் எனக்கு தெலுங்கு நன்றாக பேச வரும். தெலுங்கு திரைப்பாடல்களும் தெம்மாங்கு பாடல்களும் மிகவும் பிடிக்கும். இசையேயான மொழி அது. ஆகவே அது சார்ந்து அவரிடம் கேள்விகள் எழுப்பினேன். தமிழில் பாரதிக்கு பிறகு கவிதையில் சந்தம் குறித்து யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. இசையேயான தெலுங்கில் எப்படி என கேட்டேன். அந்த மரபு  குறித்து நீண்ட பதில் கூறினார். சில கவிதைகளை பாடிக்காட்டினார். 1970களில் சந்தம் வேண்டாம் என ஒரு தம்பிக்கை உண்டானதும் அவ்வாறு அவரது இரண்டாம் தொகுப்பில் கவிதை வடிவம் மாறியதும் பின் தற்போது அவரும் அதை விரும்புவதாகவும் கூறினார். அந்த அமர்வை அவரது கவிதைகளை மொழிபெயர்த்த ராஜு அவர்கள் மட்டுறுத்தினார்.


அதன் பிறகு இயக்குநர் வஸந்த் அமர்வு. சுபஸ்ரீ அவர்கள் ஒருங்கிணைத்தார். அந்த அமர்வில்  கேளடிகண்மனியில் வரும் பாலகுமாரன் முதல் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் வரை அவர் இலக்கியத்தோடு கொண்டிருக்கும் ஒட்டுதல் குறித்து கேட்டேன். அது தனிப்பட்ட  ஆர்வம் என்றார். உண்மைதான். அவர் தமிழிலக்கிய வாசகரில் ஒருவர்தான். 




அதன்பின் விக்ரமாதித்யன் அமர்வு. அதை சுநில் ஒருங்கிணைத்தான். விக்ரமதித்யன் அவர்கள் நாற்காலியில் உட்கார்ந்து பேச இலகுவாக இல்லை என நின்று கொண்டு பேசினார். ரகளையான அமர்வு அது. அந்த தாமிரபரணிதான் நான். திருநெல்வேலி ஒரு சுக்கிர ஸ்தலம் என்று அவர் அடித்த பன்ச்கள் ஏராளம். அவர் தமிழின் அத்தனை வகையிலும் எழுதிப்பார்த்திருக்கிறார். வரம்பு மீறிய கவிதைகள் முதல் பக்திக்கவிதைகள் வரை. அவர் குறித்து நான் எழுதிய கட்டுரை தளத்தில் வெளியாகியிருந்தது. நேர்ப்பேச்சில் அது குறித்து நிறைய பேசினார். 


இறுதியாக ஜெய்ராம் ரமேஷ் அவர்களின் அமர்வு. அவர் எழுதிய புத்தரின் ஆசியஜோதி புத்தகம் குறித்த உரையாடல் நீண்டு சென்றது. பெளத்தம் தனிமனிதனுக்கு அணுக்கமாவதை விட சமூக இயக்கமாக ஆகும்போது பொற்காலமாக திகழும் என்று கூறினார். அதற்கு முரணான சூழலாக விளங்கும் இலங்கையின் பெளத்த அரசியல் குறித்து கேள்வி கேட்டிருந்தேன். எந்த ஒரு மதத்திலும் அரசியல் நுழைந்தால் இப்படி ஆகிவிடுகிறது. அதில் பெளத்தமும் விதிவிலக்கல்ல. தான் கூறுவது அந்த அரசியல் புத்தர் அல்ல என்று கூறினார். I respect your sentiment என்று இறுதியில் கூறினர். சூழலியல் குறித்தும் இந்திராகாந்தியின் பங்கு குறித்தும் புதிய விஷயங்களை அவர் கூறியது நன்றாக இருந்தது. 


அவரது அமர்விற்குப் பின் கல்பனா ஜெயகாந்தின் "இம்ம் என்றமைந்திருக்கும் ஆழ்கடல்" கவிதை தொகுப்பு வெளியானது. இவ்வாறு அரங்கில் வெளியானவை தவிர புத்தக ஸ்டால்களில் புத்தக வெளியீடுகள் நிகழ்ந்தவண்ணம் இருந்தன. ம.நவீன் எழுதிய சிகண்டி நாவல், கே.ஜே.அசோக்குமாரின் 'குதிரைமரம் , வைரவன் லெ ரா  எழுதிய 'பட்டர் பி' ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளியாயின.



அதன்பின்னர் விழா துவங்கியது. விழா பதிவுகளையும் ஆவணப்படத்தையும் பார்த்திருப்பீர்கள். அதன்பின்னர் இரவு உணவோடு விஷ்ணுபுரம் விருது விழா நிறைவு பெற்றது. இந்த இரு நாட்களிலும் நாஞ்சில் நாடன் அவர்களை அழைத்து வந்தபோதும் கொண்டு போய் விடும்போதும் யோகேஸ்வரனுடன் நானும் இணைந்து கொண்டேன். மறுநாள் காலை ஜெ. லக்ஷ்மி மணிவண்ணன் மற்றும்  கவிஞர்.விக்ரமாதித்யன் ஆகியோரை சந்தித்து விடைபெற்றுக்கொண்டேன். இவ்வாறாக உலகம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியது.



விழாவிற்கு பிறகான உரையாடலில் கவிஞரை விடவும் பகவதி அம்மாள் இன்னும் அணுக்கமானவராக ஆனார். அவர் ஒரு சிவாஜி ரசிகை. வசந்தமாளிகை படத்தின் வசனங்களைப் பேசிக் காட்டினார். அன்று காலைதான் அவர் அறிமுகம். காலையில் நடைபயணத்தின் போது அவரை கவிஞருடன் கண்டிருந்தேன். அவருக்கு வணக்கம் வைத்து விட்டு கவிஞருடன் பேசிக்கொண்டிருந்தேன். அதை ஞாபகம் வைத்திருந்து நீ காளிதாஸ் தான.. காலையில் என்னை பார்த்தும் பேசாம போனியே என்று கேட்டார். ஆவணப்படத்தில் ஒரு காட்சி வருகிறது. "இந்தா.. குடிக்க தண்ணி குடு" என்கிறார் கவிஞர். பின் "காதுவேற சரியா கேட்காது" என தனக்குள் முணகுகிறார். பகவதியம்மாள் தண்ணீர் கொண்டு வந்து தருகிறார். "ஆங்.. என்னதிது ? " என்கிறார் கவிஞர். "ஆங்..  டீ.. " என்கிறார் இவர். அது அவர் கேட்ட தண்ணீர்தான் என்பது அவர் குடிக்கும் வேகத்தில் நமக்குப் புரிகிறது. சிரிப்புத்தான் வருகிறது. இப்படியே அவரை லெஃப்ட் ஹேண்டில் டீல் பண்ணிருக்கார். அவருடன் உரையாடிய போது கவிஞர் இளம்வயதில் பாக்யராஜ் போல அழகாக இருப்பார் என்றார். விருதாளரின் மனைவியை சுற்றி உட்கார்ந்து அரட்டை நிகழ்ந்தது விஷ்ணுபுர வரலாற்றில் முதல் முறை. இந்த விழாவின் நாயகர் கவிஞர்.விக்ரமாதித்யனாக இருக்கலாம். ஆனால் 'மக்களின் முதல்வர்'  பகவதி அம்மாள்தான். அவரிடம் ஆசி பெற்றுக்கொண்டேன். மீண்டும் ஒரு நிறைவான விழா. அடுத்து சென்னையில் புத்தக வெளியீடுகளும் கண்காட்சியும் இருக்கிறது. இந்த இனிமை தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது பிரார்த்தனை



Tuesday, December 28, 2021

விஷ்ணுபுரம் விழா - 1

 விஷ்ணுபுரம் விழாவில் விஷ்ணுபுரம் ஆளாக கலந்துகொள்வதற்கும் விருந்தினராக கலந்துகொள்வதற்கும் ஆறு வித்யாசங்கள் ஏதும் இல்லை. மூன்று வித்யாசங்கள்தான். பயணப்படியை பெற்றுக்கொள்ளலாம். இலவசமாக நான்கு புத்தகங்கள் கிடைக்கும். ஒரு சால்வை உண்டு. மற்றபடி அதே ஜாலிதான். மாடரேட்டரைவிட மன அழுத்தம் குறைவுதான். 



என்னுடைய அமர்வு முதல்நாளின் (சனிக்கிழமை) மூன்றாவது அமர்வு. முதல் அமர்வு ரோல்ஸ் ராய்ஸ் புகழ் கோகுல் பிரசாத் அமர்வு. இந்த முறை இத்தகைய தனிப்பட்ட அமர்வுகளில் இருந்த பெரிய வித்தியாசம் என்பது கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கைதான். கோகுல் அமர்விலேயே முந்நூறு பேர் இருந்தனர். முதல் அமர்விற்கான கேள்விகள் கொஞ்சம் கொஞ்சமாக வரும். வண்டியை தள்ளி ஸ்டார்ட் பண்ணனும். ஆனால் இந்தமுறை சரவெடியாக இருந்தது. நரேன்  அந்த அமர்வை மிகவும் நிதானத்துடனும் பொறுப்புடனும் கொண்டு சென்றார். கோகுல்பிரசாத் பதில்களும் பத்திரிக்கை ஆசிரியராக சினிமா மற்றும் இலக்கிய விமர்சகராக அவர் முன்வைத்த கருத்துகளும் ஏற்புடையதாக இருந்தன. சினிமா பங்களிப்பு சாராதவர்கள் விமர்சனம் எழுதுவது குறித்த கேள்விக்கும்  அவருடைய பதில் நேர்மறையாக இருந்தது. அது வலையுலகிலும் மேன்மேலும் விவாதிக்கப்படும் என்றே நினைக்கிறேன். 


அடுத்த அமர்வு எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனின் அமர்வு. அவர் கூறிய திருப்பூர் மளிகைகடை சித்திரம் சடாரென ஒரு புரிதலை உண்டாக்கியது. மனைமாட்சியில் அவரது உரையாடல்கள் எளிதாகவும் ஆழமானதாகவும் இருக்கும். அது உரையாடலிலும் காணமுடிந்தது. கேள்வி கேட்டவர்களையே ஒருமுறை லேசாக பாராட்டிவிட்டு அல்லது கலாய்த்துவிட்டு பதில் சொன்ன ஸ்டைல் நன்றாக இருந்தது. குருஜி செளந்தர் அந்த செஷனை மாடரேட் செய்தார்

அடுத்த அமர்வு என்னுடையது. பேராசிரியர் லோகமாதேவி அவர்கள் ஒருங்கிணைத்தார். ஆள்தலும் அளத்தலும் மற்றும் தம்மம் தந்தவன் குறித்து அறிமுக கட்டுரைகள் எழுதியருந்தார். அது ஜெ. தளத்தில் வந்திருந்தது. யாவரும் பதிப்பகம் நிகழ்த்திய ஆள்தலும் அளத்தலும் விமர்சனக் கூட்டம்  குறித்த பதிவு மற்றும் நான் எழுதிய கட்டுரைகள் மற்றும் உரைகள் குறித்த லிங்க் என அனைத்தும் அவ்வப்போது ஜெ. தளத்தில் வந்த வண்ணம் இருந்தன. ஏண்டா விக்ரமாதித்யனுக்கு விழா எடுக்கிறாங்க ஆனா சைட்ட திறந்தா காளியோட பதிவா வந்து சாவடிக்குது என்று என் நலம் விரும்பியான முனைவர்.சக்தி கிருஷ்ணன் B.A.B.L, P.H.D  (இவ்வாறு போடுமாறு கேட்டுக்கொண்டார்) அலுத்துக்கொண்டார்.  விக்ரமாதித்யனுக்கும் காளிக்கும் புராணகாலத்திலிருந்து லிங்க் இருக்கு என பதில் அளித்தேன். 



மேடையில் அமரும் வரை படபடப்பு இருந்தது. ஆனால் அந்த நாற்காலியில் உட்கார்ந்த போது இல்லை. போஜராஜன் வேட்டைக்கு போகும் போது ஒரு விவசாயியை சந்திப்பான். அவன் மேட்டில் இருக்கும்போது படைவீரர்களை தோட்டத்தில் இளைப்பாற அழைப்பான். இறங்கி வந்தவுடன் துரத்துவான். ஏன் என ஆராய அந்த மணல்மேட்டை தோண்டினால் அங்கு ஒரு சிம்மாசனம் இருக்கும்.. அது  விக்ரமாதித்யன் அமர்ந்த சிம்மாசனம். விக்ரமதித்யன் கதை இப்படித்தான் துவங்கும். அதுபோலத்தான் அந்த நாற்காலியும். நாஞ்சில்நாடன்  முதல் சரவணன்சந்திரன் வரை அமர்ந்திருந்த நாற்காலி. ஏறும் வரை இருந்த படபடப்பு அமர்ந்த பின் இல்லாமல் ஆனது. தம்மம் தந்தவன் மற்றும் ஆள்தலும் அளத்தலும்  தொகுப்பு மற்றும் நான் எழுதியிருந்த புத்தக மதிப்புரை மற்றும் அபுனைவு கட்டுரைகளிலிருந்து கேள்விகள் வந்தன. அனைத்து கேள்விகளையும் நேரடியாகவும் நேர்மையாகவும் எதிர்கொண்டேன்.  

அதன் பின்னர் சுஷில்குமார், ஜா.தீபா செந்தில் ஜெகன்னாதன், பா.திருச்செந்தாழை ஆகியோரின் அமர்வுகள் நிகழ்ந்தன.  அவர்கள் அனைவரும் உரையாடல்களை கொண்டு சென்ற விதம் சிறப்பாக இருந்தது. ஆங்காங்கு கைத்தட்டல்களும் எழுந்தன. அந்த அமர்வுகளை முறையே அவற்றை சுரேஷ் பாபு, இரம்யா, சந்திரசேகர், கிருஷ்ணன் ஆகியோர் மட்டுறுத்தினர். 



அதற்குப்பிறகு அன்றைக்கான கடைசி அமர்வு.  சோ.தர்மன் எனும் பாணனின் அமர்வு.  பேசினாரு  சிரிப்பலை கரகோஷம் ரிப்பீட்டு என சென்றது.  எனர்ஜிடிக்காகவும் யோசிக்க வைப்பதாகவும்  இருந்தது.  ஒரு கட்டத்திற்கு மேல் அடுத்த கேள்வி என்ன என அவர் ஜி.எஸ்.எஸ்.வி நவீனை பார்க்க அவர்  என்னை ஏன் சார் டிஸ்டர்ப் பண்றீங்க நீங்களே ஏதாவது பேசுங்க சார் என்றார்.  


அனைத்து உரையாடல்களிலும் எழுத்தாளர் அமிர்தம் சூர்யா கேள்விகள் எழுப்பினார். விக்னேஷ் மற்றும் இரம்யா ஆகியோரும் அனைத்து அமர்வுகளிலும்  தீவிரமாக பங்காற்றினர். வருங்காலத்தில் எழுத்தாளர்களாக வரக்கூடும். அரங்கா மீனாம்பிகை ஸ்ரீநிவாசன் சார்  சுதா மேடம்  பிரசாத் ஷிமோகா ரவி அண்ணன் விஜயகிருஷ்ணன் ஆகியோர் வரவில்லை. அவர்களை மிஸ் செயதேன். வாட்சப்பில் பேசினாலும் நேரில் பேசுவது போல வராது. ஆனந்த்குமார் மற்றும் சுஷில்குமாரின் புத்தகங்கள் வெளியாயின. சீர்மை, தமிழினி, அழிசி, பாரதிபுத்தகாலயம், தன்னறம், யாவரும், விஷ்ணுபுரம் என ஏழு பதிப்பாளர்களின் ஸ்டால்கள் அரங்கில் இருந்தன. கலந்துகொண்ட வாசகர்களின் எண்ணிக்கையும்  எழுத்தாளர்கள்  பதிப்பாளர்கள் எண்ணிக்கையும் விஷ்ணுபுரம் விருது விழா ஒரு திருவிழாவாக ஆகிக்கொண்டிருப்பதற்கான சான்று.


(தொடர்ச்சி இங்கே...)

Tuesday, December 21, 2021

'கரி' சிறுகதையின் ஒலிவடிவம்



சொல்வனம் இதழின் பொறுப்பாசிரியர்களில் ஒருவரான சரஸ்வதி தியாகராஜன் அவர்கள் ஆள்தலும் அளத்தலும் தொகுப்பில் உள்ள 'கரி' சிறுகதையின் ஒலிவடிவத்தை பதிவேற்றியுள்ளார்கள். அதன் இணைப்பு இங்கே,




Wednesday, December 15, 2021

பிழைத்தலும் வாழ்தலும்! - லோகமாதேவி

ஆள்தலும் அளத்தலும் தொகுப்பு குறித்து பேராசிரியர்:லோகமாதேவி அவர்களின் மதிப்புரை.

கட்டுரைக்கான இணைப்பு

பிழைத்தலும் வாழ்தலும்! 

 என் தம்பி மகள் சாம்பவி   என்  இரு  மகன்களுடனே தான் வளர்ந்தாள்;  மூவருக்கும் அடிக்கடி வாய்ச்சண்டை, கைச்சண்டை, கால் சண்டையெல்லாம் நடக்கும்.  அப்போதுதான் பேச கற்றுக் கொண்டிருந்த  சாமபவி, கோபம் எல்லை மீறி போகும் போது முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு அவளுக்கு தெரிந்த கிண்ணம், வெள்ளைப்பூண்டு, சாதம் போன்ற வார்த்தைகளை ’’போடா கிண்ணம், போடா பருப்பு சாதம்’’ என்று பல்லை கடித்துக்கொண்டு வசவைப்போல சொல்லுவாள்.  வார்த்தைகளின் அர்த்தம் தெரியாவிட்டாலும் சொல்லும் விதத்தில் அவற்றை கெட்ட வார்த்தை ஆக்கிவிடுவாள் காளியின் திருவண்ணாமலை கதை இப்படி பழசை நினைவுபடுத்தி வாசிக்கையில் புன்னகைக்க வைத்துக் கொண்டே இருந்தது.

வசவை சர்வசாதாரணமாக புழங்கும்,தெலுங்கு பேட் வேர்ட்ஸ் இணையத்தில் தேடும் ரஙகன் ’’டேய் தோத்ரம்’’ என்று நிலைக்கண்ணாடி முன் நின்று நாலு முறை சொல்லிப்பார்த்து  அது மோசமான வார்த்தை தான் என்று உறுதி செய்து கொண்டு அத்தனை நாட்கள் புத்தரால் கொடுக்க முடியாத நிம்மதியுடன்    உறங்கச்செல்கிறான்




இந்த கதையில் மட்டுமல்ல பழனியிலிருந்து பராசக்தி வரை பத்துக்கதைகளிலும் நமக்கு தெரிந்தவர்களும் நம்மை தெரிந்தவர்களும் நாமும்தான் இருக்கிறோம்.  கதைமாந்தர்களின் அவஸ்தைகள், தடுமாற்றங்கள், குடும்ப சிக்கல்கள், பணியிட பிரச்சனைகள் வழியே  காளி பிரசாத் காண்பிப்பது நம் அனைவரின் வாழ்வைத்தான். வாசிப்போர் கடந்து வந்திருக்கும் பாதைகளில்தான் கதைகள் அவர்களை அழைத்துச் செல்கின்றன.

பழனியிலிருந்து பராசக்தி வரை கதைமாந்தர்கள் வேறு வேறு பெயர்களில் இருக்கும் நாமறிந்தவர்கள் என்பதாலேயே கதைகள் மனதிற்கு அணுக்கமாக விடுகிறது.. நாம் சந்தித்தவர்களும் கடந்துவந்தவர்களும் இனி சந்திக்க விரும்பாதவர்களுமாக  கதைகள் நமக்கு பலரை நினைவுக்கு  கொண்டு வருகிறது.

அத்தனை அடாவடி செய்த பழனி,   50 ரூபாய் பெறுமானமுள்ள ஸ்பேர் காயிலை திருடி மாட்டிக்கொண்டதை, அவன் குடும்பம் சிதைந்ததையெல்லாம் கேட்கையில் ஃபேக்டரி இயந்திரங்களின் சத்தத்தில் மண்டை கனக்கும் கதை சொல்லி,  பழனி நல்ல நிலைமையில் வீடும் காரும் குடும்பமுமாக இருப்பதை கேட்டபின்பு  இரைச்சல் உண்டாக்கிய தலைவலிக்கென  போட்டிருந்த தொப்பியை கழட்டிவிட்டு பறவகள் கூடடடையும் சத்தங்களை கேட்டபடி, தூரத்தில் சிறு வெளிச்சம் தெரியும் கோவில் வரை நடக்கும் கதை முடிவு பெரும் ஆசுவாசத்தையும் நிறைவையும் கொடுக்கிறது

எல்லாக்கதைகளிலும்  மனிதர்களின் இயல்புகளை அப்படியப்படியே ஏற்றங்களும் இறக்கங்களும் அல்லாடல்களுமாக இயல்பாக காட்டுகிறார் காளி. எதையும் உன்னதப்படுத்தாமல், எதையும் உச்சத்துக்குகொண்டு செல்லாமல் சொல்லப்பட்டிருக்கும் கூறுமொழி நம்மையும்  இயல்பாக கதையோட்டத்துடன் கொண்டுபோய், நம்மையறியாமலே கதைகளுடன் நம் வாழ்வை தொடர்புபடுத்தி பார்க்க வைத்துவிடுகிறது

. பகடிகள்  வாய்விட்டு சிரிக்கும் படி இல்லாமல்,  முகம் மலரும்படி இருக்கிறது, ஆட்டோ இடித்த தகராறு, ரின்ஸ் ஸ்பெனரரால் பழனி அடித்ததும் முடிவுக்கு வருவதும்,   ஆட்டோக்காரர் தலையை மூடி, அவரே ஆட்டோவை ஓட்டிபோய் அட்மிட் ஆவதும் அப்படியானவற்றில் ஒன்று.

அதைப்போலவே  திருவண்ணாமலையின் ’’திருச்சி டம்ப்ளரு’’ ஆர்வலர் கதையில் சம்பத் சொல்லும் குறள்,  ஷாக் அடிக்கும் போதும் பியூஸ் போகும்  சிரித்துக் கொண்டிருக்கும் புத்தர், ’அன்னிக்கு அம்மா நாப்பதுன்னு சொல்லும்பொது ஒன்னும் பேசாம  பெண்ணின் இடுப்பை பார்த்துட்டு இருந்தீங்க ’என்று மாப்பிள்ளையிடம் மனசுக்குள் கேட்கும் நீலகண்டன் என்று   இயல்பான சின்ன சின்ன பகடிகள்  கதை வாசிப்பை கூடுதல் சுவாரஸ்யமாக்குகின்றன




கதைகளில் சொல்லப்படும்  சிக்கல்கள், பரிதவிப்புகள், மீள முடியாத பிரச்சினைகளுக்கு மத்தியிலும், கதை மாந்தர்கள் அவர்களுக்கான் அறத்தை மீறாமல் அல்லது மீற முடியாமலிருப்பதையும் காளி காட்டுகிறார்.  அடுத்தவருக்கு கெடுதல் நினைக்காத  பழனியின் கதை சொல்லி, ஐந்து வேளை தொழுவதை கடைப்பிடிக்க முடியாவிட்டாலும், அன்னைபன்றிக்கு கேரட் போடும்,  பாம்புக்கு பாவம் பார்க்கும் குத்தூஸ்,,   ’’அநாதைபொணமா ரோட்டில் கிடக்காம என்புள்ளைய வீட்டில் கொண்டு வந்து சேத்திட்டியெப்பா’’ என்று ரவியிடம் கதறும் ராஜாவின் அம்மா, எத்தனையோ அலைச்சலுக்கு பிறகு,அசட்டு நம்பிக்கையில் தேடிப்போன ஒருவரிடம் வேண்டியது கிடைக்காமல், அந்த கிஃப்ட் பாக்ஸில் என்ன இருக்கிறதென்றும் தெரியாமல் வீடு வந்து,  கற்கள் பதிக்கப்பட்ட  வெள்ளி மரக்காலை கன்னத்தில் பளீர் பளீரென அடி வாங்கிய பெண்ணுக்கு சிரித்தபடி கொடுக்கும் கதை சொல்லி, வண்டியிலிருந்து இறக்கி விடுகையில் தனியாக இன்னும் ஒரு ஐநூறு கொடுக்கும் இருதயம் அண்ணன், என்று  நெஞ்சில் ஒளி கொண்டவர்கள் கதை முழுக்க வருகிறார்கள்.

இருப்பை தக்க வைத்துக்கொள்ள இடுப்பை நெளித்து ஆடும் அழகு ராணியும், கான்கிரீட் மூடியை மாற்றிய ஸ்ரீஜியும் ஒரே திரையில் தெரிவது, ஸ்கூட்டர் கேவலை சொல்லியிருக்கும் இடம், கேபிள் சுருளையும், கருமையான மலைப்பாம்பில் படுத்திருந்த அழகனையும் கதைசொல்லி பார்க்கும் கணங்கள் என காளி ஒரு கதாசிரியராக செல்லப்போகும் தூரங்களை  காட்டும் இடங்களும் உண்டு.

20 வருடங்களுக்கு முன் இருந்த, கோவிலின் பெயரும், கோபுரங்களும், புதிய டைல்ஸும்,  கடைகளும் எல்லாம் மதிப்பு கூடி மாறிவிட்டிருக்கையில், ரோஜாவையும் தாமரையையும் கொடுத்துவிட்டு பஞ்சாமிர்தத்தை  வாங்கி வாயில் இட்டுக்கொள்ளும் குருக்களும், நாப்பது பவுன் நகையை வாங்கிக்கொண்டு வீட்டை சகோதரனுக்கு கொடுத்துவிட்ட நீலகண்டனுமாக சன்னதியில் உமையுடனும் ஈஸ்வரனுடன் நிற்பதில் முடியும் கதையான பூதம் இந்த தொகுப்பில் எனக்கு மிகப் பிடித்தமான கதை

கழுத்தில் சங்குபுஷ்ப சரமும் உதட்டில் ஒரு சொட்டு தேனுமாக ஈசனை நீலகண்டன் பார்க்கும் காட்சிச் சித்தரிப்பு மனதுக்கு அளித்த சித்திரம் அற்புதமாக இருந்தது.

ஸ்பேனரும்  நட்டும், போல்ட்டும், ஸ்பேர் காயிலுமாக கதைக்களம் காளியின்  அனுபவக்கதைகள் இவை என  எண்ண வைக்கிறது.  கதைமாந்தர்களின் இயல்பை  விரிவாக சொல்லுவதிலேயே கதையையும் கொண்டு போவதும்  சிறப்பு.  மொழிநடையும் சரளம்.

புதிய இடங்களில் தங்களை பொருத்திக்கொள்ள முடியாமல் தடுமாறுகிறவர்கள், நிலுவைத்தொகை வாங்கமுடியாமல் அல்லாடுபவர்கள். இளைய தலைமுறையினரிடம், இழந்த தன் இருப்பை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள போராடுபவர்கள், தேடியவை கிடைக்காமல் ஏமாறுபவர்கள். ஜான் ஏறினால் முழம் சறுக்கி விழுபவர்கள், குற்ற உணர்வு கொண்டவர்கள்,  சிற்றின்பத்திலிருந்து  பேரின்பத்தை நோக்கி செல்பவர்கள், குடிகாரர்கள். திருடர்கள். அடிப்பவர்கள், அடிவாங்குபவர்கள் என கதைகளில் வரும் மாந்தர்களின்  பிழைத்தலுக்கான  போராட்டங்களையும்,  அவற்றிற்கிடையிலும்  அவர்களுக்கு ஆத்மார்த்தமாக வாழக்கிடைக்கும்  அரிய கணங்களுமாக கதைகள் மிக சிறந்த நிறைவான வாசிப்பனுபவத்தை அளிக்கின்றன.

பிழைத்தலும் வாழ்தலும்!



புறத்தைச் சொல்லி அகத்தை அடையாளம் காட்டும் எழுத்து - ஆஸ்டின் சௌந்தர்

 என்னுடைய முதல் சிறுகதை வெளியாக சொல்வனம் இதழின் பொறுப்பாசிரியர்களில் ஒருவரான எழுத்தாளர் சிவாகிருஷ்ணமூர்த்தி அவர்கள்தான் காரணம். தொகுப்பின் நான்கு கதைகள் சொல்வனத்தில் வெளியானவை. அதில் எனது இரண்டாவது கதையான பழனி குறித்த விமர்சனக் கட்டுரையும் வெளியாகியிருந்தது.




இப்போது சொல்வனம் இதழில் 'ஆள்தலும் அளத்தலும்' குறித்து மதிப்புரை வெளியாகியுள்ளது. ஆஸ்டின் செளந்தர் அவர்கள் அதை எழுதியுள்ளார். கதைகள் வெளியான நேரங்களில் அதை வாசித்து உரையாடினார். அவர் சொற்கள் ஊக்கம் அளிப்பவை. அவரது பணிச்சூழலுக்கு இடையே கூட மொழியாக்கம், விமர்சனம், இலக்கிய கூட்டங்கள் என எப்போதும் மும்முரமாக இருப்பார். அவருக்கு மட்டும் கடிகாரம் ஒரு நாளைக்கு முப்பது மணிநேரம் காட்டுகிறதா என்ற ஐயம் எனக்கு உண்டு.
சொல்வனம் குழுவினருக்கும் செளந்தர் அவர்களுக்கும் நன்றி


புறத்தைச் சொல்லி அகத்தை அடையாளம் காட்டும் எழுத்து

இருபத்தொரு வருடங்களுக்கு முன், நவம்பர் மாதத்தில் ஒரு நாள், தொலைபேசியில் என்னை அழைத்த  நண்பர்,  பெரும் பதட்டத்தில் இருந்தார். “இன்னும் இரு நாட்களில் ஒரு வேலை கிடைக்கவில்லையெனில், H1b-விதிப்படி தான் அமெரிக்காவைவிட்டு ஊருக்குத் திரும்ப வேண்டும்.” என்றார். , “எங்கள் அலுவலகத்தில் Build engineer வேலை. இருக்கிறது. செய்ததையே திரும்ப திரும்பச் செய்யும் வேலை. ஆனால், கணினிக் கட்டளைகள் எழுதுவதுதான் உன் ஆதர்சம், இலட்சியம் என்று எல்லாம் சொல்வாயே?” என்றேன். “வேலை எதுவும் இல்லாமல் ஊருக்குத் திரும்புவதைவிட, இது எவ்வளவோ மேல்” என்றார். எழுத்தாளர் ஆர். காளிபிரஸாத் எழுதி வெளிவந்துள்ள, ‘ஆள்தலும் அளத்தலும்’ பத்துக் கதைகள் உள்ள தொகுப்பில் தலைப்பை ஏந்திய கதையின் கதைசொல்லியின் நிலைமையும் இதுவேதான். அவன் வேலை செய்து வந்த கேபிள் வேலை முடிந்துவிட்டது. இருப்பதற்கு ஒரு அறைகூட இல்லை. ஊருக்குத் திரும்பவேண்டியதுதான்  என்கின்ற  நிலையில், தன் கிராமத்திற்கு வந்தபொழுது சந்தித்த ஒருவரை தேடி ஒரு நப்பாசையுடன் செல்கிறான்.  அவரைப் பார்ப்பதற்குச் செல்வதற்கான பஸ் பயணத்தில் ஆரம்பித்து, அவர் கொடுத்த  நினைவுப்பரிசு மூன்றாமவர் கைக்கு மாறுவது வரை நடக்கும் நிகழ்வுகளின் தொகுப்புதான் இந்தக் கதை என்று சாதாரணமாக சொல்லிவிடமுடியாது. அந்த நிகழ்வுகள், இடம் பொருள் காலம் அற்று கழிவிரக்க நிலைக்கு ஆட்பட்ட எந்த ஒரு புலம்பெயர்ந்த தனிமனிதன் வாழ்வியல் நிகழ்வுகளோடு ஒப்பிடும்படி இருக்கிறது. கதைசொல்லி, கண்முன் நடந்த ஒரு இழிவான செயலை மறந்து, அதைச் செய்தவன் கொடுத்த வேலையை ஒப்புக்கொள்கிறான். என் நண்பரோ, தனக்குப் பிடிக்காத வேலையை வாழ்வின் நிமித்தம் ஏற்றுக்கொள்கிறார். 




கதைசொல்லியைத் தொந்தரவு செய்யும் அந்தக் கரிய சிலையின் வடிவத்தில் கண்ணை மூடிக்கொண்டால்தான், ஆளவும் அளக்கவும் முடிகிறது என்று யதார்த்தத்தை, ‘ஆள்தலும் அளத்தலும்’ கதை தொட்டுச் செல்கிறது. வாசிப்பவனையும் அவன் வாழ்வில் கண்ணை மூடிக்கொண்ட தருணங்களை  நினைவு படுத்தி தொந்தரவு செய்கிறது. டெல்லியில் மத்திய அரசாங்கத்து வேலையில் சேர்ந்த முதல் வாரத்தின் கடைசி வெள்ளிக்கிழமை. எனது சக அலுவலகர்கள் மாலை ஐந்து ஆறு ஆகியும் கிளம்பவில்லை. என்னையும் இருக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். அலுவலக கதவைச் சாத்தினார்கள். இருந்த நான்கு பேரில் ஒருவர், அவரது மேசையின் ட்ராயிரிலிருந்து விஸ்கி பாட்டிலை எடுத்து வைத்தார். இன்னொருவர், டம்ளர்களை எடுத்து வைத்தார்.  ‘லட்சுமி சரஸ்வதி உறைகின்ற இடத்தில் .தண்ணி அடிக்கிறான்களே’ என்று நான் உறைந்துபோய்விட்டேன். எனக்கு இது ஆகாதுடா சாமி என்று வீட்டுக்கு கிளம்பி வந்ததைவிட வேறு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தொகுப்பில், ஹோட்டல் ஒன்றில் ஏ.சி. ஜெனரேட்டர் ரிப்பேர் பார்ப்பவர்களை வைத்துப் பின்னப்பட்ட கதையாக வருகிறது பழனி எனும் கதை..  சின்ன சின்னத் திருட்டுக்கள் பித்தலாட்டங்கள் செய்பவன் பழனி. படிப்பறிவில்லாதவன். அவன் செய்த திருட்டு ஒன்றுக்கு கதை சொல்லி போலிஸில் பிடித்துக் கொடுக்கப்படுகிறான். அந்த எரிச்சலில் , பழனியை பழி வாங்க அவனுக்கு வந்த கடிதத்தின் சாரத்தை தனக்கு சாதகமாக வாசிக்கிறான். மேற்போக்கான வாசிப்பில், இப்படி ஒரு சாதாரண புரிதலைக் கொடுத்துவிடும் கதை.. ஆழ்ந்த வாசிப்பினால் அடையும் இடம் வேறு. தூரத்தில் செல்லும் இரயிலின் சத்தமும், கூடடையும் பறவைகளின் கீச்கீச் ஒலியும் கதைசொல்லிக்கு இனிமையாக இருக்கிறது என்ற வரிகளில் முடியும்பொழுது பிரதிபலிக்கும் திருடனின் அகத்தை அந்த வாசிப்பு அறியும். புறத்தைச் சொல்லி அகத்தை அடையாளம் காட்டும் எழுத்தாளராக காளிபிரஸாத் சுட்டிக்காட்டும் கதை, பழனி..

அசோகமித்திரனின் ‘புண் உமிழ் குருதி’ கதையில் தாத்தா ஒருவர் வருவார். ஊரே கூடி திருடன் என்று அவரை அடிக்கும். அவர் நான் திருடலப்பா என்று பொருமையாக இருப்பார். ‘பூதம்’ கதையில் வரும் நீலகண்டன் எனக்கு அவரை நினைவு படுத்தினார்.. தானுண்டு தான் கும்பிடும் தெய்வங்கள் என்று இருப்பவர் நீலகண்டன்., அப்பாவின் சொத்திலிருந்து தனக்கு பங்காக வந்த  நாற்பது பவுன் தங்கத்தை வாதம் எதுவும் இல்லாமல் வாங்கிக்கொள்கிறார். அதை மகளுக்கு சீதனமாக போட்டும் ஆகிவிட்டது. அவர் தம்பிக்கு பங்காக கிடைத்த வீட்டின் விலை ஏறியதும், அதில் மீண்டும் பங்கு கேட்கவேண்டும் என்று மனைவியும் மற்றவர்களும் சொன்னபோதுதான். ‘பூதம்’ கிளம்புகிறது, அவருக்கு அப்படியெல்லாம் எதிர்த்துக்கேட்டுப் பழக்கமில்லை. தொண்டைவரை வந்ததை வெளியில் சொல்லாமல் இருக்கும் நீலகண்டன் வாசித்து முடித்தும் மனதில் நின்று விடுகிறார்.. .

சிலரின் பார்வை எதைப் பார்த்தாலும் செய்தாலும், தன் தொழில் சார்ந்தே இருக்கும். நான் வாங்கியிருந்த புதிய வீட்டை காண்பிப்பதற்காக என் தந்தையை ஆவலாக அழைத்து வந்திருந்தேன். எனது வீட்டின் தளம் , மரப்பலகையால் ஆனது. வீட்டிற்குள் நுழைந்தும் நுழையாமலும், விவசாயியான என் தந்தை, எத்தனை மரங்கள் இதனால் வெட்டப்பட்டிருக்கும் என்றார். காளிபிரஸாத்தின் கதையான, ‘மதிப்பு’ கதையில், தான் கான்ட்ராக் எடுத்து, அதற்கு வராத காசை வசூலிக்க கதைசொல்லியும் , அவனது முதலாளி இருதயமும் காஃபி கடையில் அமர்ந்துள்ளார்கள். இருதயம் அண்ணன் தொங்கும் சான்ட்லியர் விளக்கைப் பார்த்து சொல்கிறார். “அதுல ஒரு விளக்கு எரியல பாத்தியா? மாட்டும்போது தனியா டிரில் பண்ணி ஹூக்கில் மாட்டினாங்கலா இல்லாட்டி ஃபால்சீலிங்க் தகடோட சேர்த்துக் கட்டிட்டாங்களான்னும் தெரியல. சுத்தி குஞ்சலம் போல அங்கங்க தொங்குது. அதுல நாலஞ்சு காணும். அதைக்கூடவா சரியா பார்த்து வாங்க மாட்டாங்க?”. பணத்தை விட செய்யும் தொழிலுக்கே மதிப்பு என நினைக்கும் இருதய ராஜை வைத்து முடியப்படும் இந்தக் கதை ஒரே இரவில் இருந்த பணம் செல்லாக் காசாகியதை ஆவணப்படுத்துகிறது. 

ஆசிரியரின் முதல் கதையும் அவரது சொந்த அனுபவத்தை வைத்து எழுதியதும் என்று சொல்லப்பட்ட ‘விடிவு’,  தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.   நண்பர்கள் பைக்கில் செல்லும்பொழுது, ராஜா என்பவன் லாரியில் அடிபட்டு இறந்துவிடுகிறான்.  அவன் சடலத்தை இறந்தவன் வீட்டில் ஒப்படைக்கும்பொழுது எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை சஸ்பென்சாக வைத்து , கதை நகர்கிறது. ஏமாற்றுபவன், திருடன், காமக்கண்ணோடு பார்ப்பவன், சொல்வதொன்று செய்வதொன்று என்று நடமாடுபவர்கள், அப்பாவிகள் இருக்கும் கதைகள் உள்ள தொகுப்பில், மானுடத்தில் அன்பு மிச்சமிருக்கிறது என சொல்ல ஒரு எளிமையான கதை.

பன்றிகள் இல்லாமல் இப்பொழுதெல்லாம் கதைகளே இல்லை என்று ஒரு விமர்சனம் வாசித்திருந்தேன். ‘ஆர்வலர்’ கதை வாசிக்கும்பொழுது அது என் பின்மண்டையில் ஒலிப்பதை தவிர்க்கமுடியவில்லை. சுகாதாரம் முக்கியம். பன்றிகளை அகற்றவேண்டும். அதைச் சாடும் சமூக ஆர்வலனாக காளிபிரஸாத்.

“குப்பைகளைவிட பன்றிகள் பெரிய பிரச்சனையாக இருந்தன”

“எல்லாப் பன்னியையும் தூக்கிட்டுப்போய் கட்டுப் போடுங்க”

“குப்பையை எடுத்துட்டுப் போங்க.. பன்னிங்க தானா போயிரும்”

குழந்தைகளுக்கு எல்லா உயிர்களும் ஒன்றுதான். பூனையையும் கொஞ்சுவார்கள் பன்றியையும் கொஞ்சுவார்கள். குழந்தையின் பார்வையில் காளிபிரஸாத் எழுதுகிறார்.

தாத்தா! இது முயல் மாதிரி இருக்கு. ,,அணில் மாதிரி இருக்கு..”

அவன் சிறுதட்டை முறுக்கு போல வட்டமாக இருந்த அதன் வாயின் முன் தன் வாயைக் குவித்து அதேபோல வைத்துக்கொண்டு ‘வும் வும்’ எனப் பார்த்து பார்த்து டோர டோரா என தலையாட்டிக் கூவி விளையாடினான்

சமூக ஆர்வலனாகவும், குழந்தையாகவும் காளிபிரஸாத் ஊசலாடுகையில் நமக்கு சுவராஸ்யமான கதை கிடைக்கிறது. மற்ற கதைகளில் இல்லாத ஒரு அபார்ட்மென்ட் வாழ்க்கை சித்தரிக்கப்பட்டிருக்கிறது. 

பேசுபொருள், எடுத்துக்கொள்ளும் கதைக்களம், அங்கதம் கலந்த நடை, நிஜவாழ்க்கையை நினைவுறுத்தும் பாத்திரங்கள், நிகழ்வுகள், என தொகுப்பில் உள்ள பத்துக் கதைகளும் வாசகனை ஈர்ப்புடன் வாசிக்க வைக்கின்றன. மானுடனுக்குள் மறைந்திருக்கும் வக்ரம், குரூரம், காமம் குணங்களை எழுத்தில் கொண்டுவருவதில் எழுத்தாளனாக காளிபிரஸாத்திற்கு தயக்கமில்லை.  நடுத்தர மக்களின் வாழ்க்கை, சென்னை என அசோகமித்தரனின் கதைகளை நினைவுறுத்தும் கதைகள். அசோகமித்திரன் எழுதிய காலத்திற்கும், காளிபிரஸாத் எழுதும் காலத்திற்கும் வாழ்க்கை மாறிவிட்டது. சென்னை மாறிவிட்டது. குறிப்பாக நடுத்தரவர்க்கத்தின் வாழ்க்கை மாறிவிட்டது. சொந்த தொழில் செய்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள்,. வேலைக்கோ, கோவிலுக்கோ பைக்கிலும் காரிலும் செல்கிறார்கள்.. குடும்பத்தோடு கோவிலுக்கு சென்றவர்கள், நண்பர்களுடன் கோவிலுக்கு செல்கிறார்கள். ஜெயித்தாலும் பாருக்குச் செல்கிறார்கள். தோற்றாலும் பாருக்குச் செல்கிறார்கள். இந்த தற்காலிக யதார்த்தத்தை சொல்லும் கதைகளாக, நிகழ்காலத்தை காட்டும் நிலைக்கண்ணாடியாக ஆள்தலும் அளத்தலும் தொகுப்பை பார்க்கிறேன்.

ஒரு பார்வையில் பார்த்தால் வெவ்வேறு கதைக்களங்கள் என்று தோன்றுகிறது. பிரிதொரு பார்வையில் பெரும்பாலான கதைகளில் எலிக்ட்ரிக் / மெக்கானிக் பழுதுபார்ப்பவர்களே வருகிறார்கள். பழனி செய்யும் தொழிலுக்கும், ‘மதிப்பு’ ‘பராசக்தி கதைகளின் பாத்திரங்களில் உரையாடலில் புரியவரும் அன்றாட வேலைக்கும் அவ்வளவாக வேறுபாடு இல்லை.. ஒரு தரப்பட்ட வாழ்க்கையை, பாத்திரங்களை சித்தரிப்பதுபோல் ஒரு பிரேமை ஏற்படுகிறது.. ஆனந்தவிகடனில் வந்த இந்த தொகுப்பை பற்றிய மதிப்புரையில், கதைகளில் பெண்கள் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதையே நான் இப்படி சொல்கிறேன். பெண்களின் பார்வையில்கூட ஒரு கதையும் இல்லை. பெண்களை ஆண்கள் காமக்கண்ணுடன் பார்க்கிறார்கள் என்னும் நிஜம் நிலைக்கண்ணாடியில் அதிகமாகத் தெரிகிறது. ‘கரி’ கதையின் மொத்த மையமும் இதுதான் என்றாலும், மற்ற கதைகளில் வரும் சில காட்சியமைப்புகள் அதையே சுட்டிக்காட்டுகின்றன. ‘விடிவு’ கதையில் ஒதுங்கும் காதலர்களில் காதலன் காதலி வாயை முத்தம் கொடுக்கமுடியாமல் வாயை அனுமாரு மாதிரி வைத்துக்கொள்வதற்கு கவலைப்படுகிறான். ‘பராசக்தி’ கதையில் ‘சந்துல லைட் போடுறான், அங்கென்ன நல்லவேலையா நடக்கிறது? என்ற கேள்வி கேட்கப்படுகிறது.  . 

தமிழில் இணைய இதழ்கள் , வாசகனிடம் இருக்கும் நேரத்திற்கும், தேவைக்கும் அதிகமாக இருக்கின்றன. ஆசிரியரின் , ஆள்தலும் அளத்தலும் கதையை பதாகையில் வந்தபொழுதே வாசித்திருந்த ஈர்ப்பால்தான் புத்தகமாக வந்ததும் வாங்கினேன். முதல் புத்தகம் என்ற வகையில் சுவாராஸ்யம், யதார்த்தம் என்ற வகையில் வெற்றி பெறுகிறது. மேலும் அவரைத் தேடி வாசிக்க, வெவ்வேறு கதைக்களங்களுடன், தத்துவ விசாரங்களுடன்,  பன்முகப் பார்வையில் புனைவுகள் எழுந்து வரட்டும். வாழ்த்துக்கள் !


Sunday, December 12, 2021

'ஆள்தலும் அளத்தலும்' குறித்த விமர்சனக் கூட்டம்

ஆள்தலும் அளத்தலும் விமர்சன கூட்டம் இன்று சிறப்பான முறையில் நிகழ்ந்த்து.. அங்கு அளித்த ஏற்புரையின் சுருக்கப்பட்ட வடிவம் இது






ஏற்புரை
 

எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்களின் மோஹித்தே என்கிற கதை மிக எளிய ஒரு கதை. அந்த கதைதான் என் முதல் கதையான விடிவு என்கிற கதை நிகழ்ந்த சம்பவத்தை தொகுத்துக் கொள்ள உதவியது. அது ஒரு சிறுகதை எழுத்தாளன் என்று மட்டும் இல்லாமல், பொதுவாகவே சகமனிதர்கள் மீது நம்பிக்கையை  அளித்த  தருணம் என்று எனக்குக் காட்டியது.  நாஞ்சில்நாடன் என்னுடைய தொகுப்பிற்கு முன்னுரை எழுதி தந்தார். இன்னும் பேனாவில் எழுதும் அவர் முன்னுரை வந்த போது அதை பிரித்து பார்த்த தருணம் மிகவும் மலர்ச்சியாகவும் பெருமையாகவும் உணரச் செய்தது.  ஒரு விதத்தில் மன நிறைவும் அளித்தது. எனது தொகுப்பிற்கான முதல் அமர்வு அது. இந்த தருணத்தில் முதலில் அவருக்கு என் வணக்கமும் நன்றியும் 



முதல் கதை வெளியாக எழுத்தாளர்.சிவாகிருஷ்ணமூர்த்தி தான் காரணம். வெளியான பிறகு அதை எழுத்தாளர்.ஜெயமோகன் அவர்களுக்கு அனுப்பினேன். அப்பொழுது நிகழ்ந்தவை எல்லாம் ஒரு முதல் சிறுகதை ஆசிரியர் எண்ணிப் பார்க்க இயலாத ஒன்று. அந்தக் கதையுடன் சேர்த்து மேலும் அவருக்கு அனுப்பப்பட்ட பல சிறுகதைகளுக்கு அவர் நாளுக்கொன்றாக விமர்சனம் எழுதினார். அவர்களில் பலர் இன்று அறியப்பட்ட எழுத்தாளர்களாக உள்ளனர். சுனில்,சிவாக்ருஷ்ணமூர்த்தி, இரா.செந்தில்குமார் வரிசையில் கடைசியாக நானும் தொகுப்பு வெளியிட்டு இணைந்து கொண்டேன். ஜெ. எழுதிய விமர்சனம் அதைத் தொடர்ந்து பிற வாசகர்கள் எழுதிய விமர்சனம் என பல நாட்கள் அந்த விமர்சனப் பதிவுகள் வெளியாயின. முதல் கதை கவனம் பெறுவதும் விமர்சிக்கப்படுவதும் அரிதான சூழலில் அதை சாத்தியப்படுத்தியவர் ஜெயமோகன் அவர்கள். மேலும் அப்போது அவர் வெண்முரசு எழுதிக்கொண்டிருந்த சமயமும் அது.





அங்கு அவர் கூறிய கருத்துகள் விமர்சனங்கள் எல்லாம் பிற கதைகளை எழுதும்போது கவனத்தில் கொண்டிருக்கிறேன். அந்த குறைகளை தவிர்த்திருக்கிறேன். அதோடு இல்லாமல் இவ்வருட விஷ்ணுபுரம் விழாவில் எனக்கு இந்த தொகுப்பை  வைத்து ஒரு அமர்வும் அளித்திருக்கிறார். இதேபோல இதற்கு முந்தைய எனது மொழிபெயர்ப்பு நாவலான தம்மம் தந்தவன் க்கும் ஒரு விஷ்ணுபுரம் சார்பாக  விழா எடுத்து கவனப்படுத்தினார்.  அப்புறம் இன்னொரு விஷயம்  பள்ளி நாட்களில்தான் வாடா போடா என்று அழைக்கும் அளவு நெருக்கமான நண்பர்கள் கிடைப்பார்கள். அதன் பிறகு இருபத்தைந்து வயதிற்குப் பின்   அப்படி நண்பர்கள் கிடைப்பது அரிது. எனக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் அப்படி அணுக்கமான நண்பர்கள் கிடைத்தனர். அதற்கும் சேர்த்து மாஸ்டர் ஜெ. அவர்களுக்கு எனது நன்றி





யாவரும் பதிப்பகம் இந்த தொகுப்பை சிறப்பான முறையில்  வெளியிட்டது.  தொகுப்பு வெளியாகி இந்த ஒரு வருடத்தில்  இணையத்தில் பலரும் அதற்கு விமர்சன கட்டுரைகள் எழுதியுள்ளனர். ஆனந்தவிகடனிலும் மதிப்புரை வந்தது.  இன்று  அதற்கான விமர்சன கூட்டமும் ஒருங்கிணைத்துள்ளனர். யாவரும்-பதாகை  பதிப்பகத்தாருக்கும் (ஜீவகரிகாலன் & சுனில் கிருஷ்ணன் )அகரமுதல்வன் அவர்களுக்கும் எனது நன்றி.  



எனது சிறுகதைகளைப் பொறுத்தமட்டில் நான் சுயநலவாதியாக  மட்டுமே இருந்திருக்கிறேன். விடிவு கதை மாத்திரம் சற்று ஆட்டோ ஃபிக்‌ஷன் வகை சார்ந்த்து. மற்ற கதைகள் அனைத்தும் சுயபுராணமோ அல்லது அனுபவத் தொகுப்போ அல்ல. ஆனால் அதன் உணர்வுகள் என்னுடையவை. அனைத்து கதாபாத்திரமாகவும் என்னுடைய குணநலன்கள் கலந்து வெளியாகியுள்ளன.  இந்தக் கதைகள் வழியாக நான் என்னை மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் கூடியமட்டும் சிக்கலான வாக்கியங்கள் இல்லாமல் எழுதினேன். என்னுடைய சிக்கல்கள் என்றாலும் அதை தொகுத்துக்கொள்ள எனக்கு ஒரு கருவி தேவைப்பட்டது. வெண்முரசு எனக்கு அப்படி ஒன்றாக அமைந்தது. குறிப்பாக இமைக்கணம் நாவலின் கேள்விகள் எனக்கு வழிகாட்டியாக அமைந்தன. ஆனாலும் ஒரு ஐயம் எனக்கு இருந்தது.  வெண்முரசை முழுதாக வாசித்த ஒருவர் எழுதும் கதை என்பது வாசகருக்குத் தெரியவாய்ப்பில்லை. நானும் கூடியமட்டும்  அதிகம் சுழிக்காமல் reading pleasure இருக்கும்படி எழுதக் கூடியவன். அதை conscious ஆக செய்வதில்லை. அப்படித்தான் எழுத வருகிறது.  ஆகவே இதன் சில பல கதைகள் சாதாரண கேள்விகளாக அல்லது பகடிக் கதைகளாக புரிந்துகொள்ளப்படுமோ என்கிற ஐயம். என் கதைகளை பிரசுமாவதற்குமுன் படித்த நண்பர்கள் தனசேகர் குருஜி ஜாஜா உள்ளிட்ட பலருடன் பேசிருந்தாலும் அந்த பதட்டம் இருந்தது. எழுத்தாளன் புனைவு எழுதியபிறகு அதை விட்டு கடந்து போகவேண்டும் என்றெல்லாம் சொன்னாலும் அது நிகழ்வது எல்லாம் இல்லை.. தொகுப்பிற்கு பின் வந்த கட்டுரைகளே அதை போக்கின.


அந்த வரிசையில் இன்று இந்த விமர்சன அமர்வும் எனக்கு மிகவும் உற்சாகத்தை அளித்தது







Muthukumar speech | காளிபிரசாத் - ஆள்தலும் அளத்தலும் | முத்துக்குமார்

#TamilLiterature #ShrutiTVLiterature



முத்துகுமார் தொடர்ச்சியாக எழுதி வருபவர். தன் உரையில் ஆர்வலர் கதையில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் குறித்து கூறினார். ஏன் இவ்வளவு மனிதர்கள் வருகிறார்கள்? பன்றிக் குட்டிக்கு கூட ஏன் பெயர் வைக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். என் முதல் கதையான விடிவு வரும்போதும் இந்த கேள்வி வந்தது. ஒரு வாசகருக்கு அத்தனை பேரை நினைவு வைத்துக்கொள்ள நிர்பந்திக்கறது. அதை நானும் ஏற்றுக் கொண்டேன். அதை  அடுத்த கதையிலேயே  (பழனி) கவனமாக பார்த்துக் கொண்டேன். ஆர்வலர் கதையில் அது இருப்பது, பன்றிக் குட்டிகளுக்கு கூட பெயர் வைத்தது எல்லாம் கதையில் வரும் குழந்தை விளையாட்டுதான். பிற்கால கதைகளில் அத்தகைய குழப்பங்கள் அவருக்கு இல்லை என்று கூறினார். அவர் கருத்துகள் நண்பர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது கூட.



Sureshbabu speech | காளிபிரசாத் - ஆள்தலும் அளத்தலும் | முத்துக்குமார்

#TamilLiterature #ShrutiTVLiterature )



சுரேஷ் நான் தொடர்ந்து உரையாடும் நணபன். இதன் சில கதைகளை வெளியான தருணத்தில் வாசித்திருந்தார். இன்று சுரேஷ் முன்வைத்த கருத்துகளும் அவர் என்னை வரையறுத்த விதமும் மனதிற்கு உவகை அளித்தன. அவரது மாம்பழ ஜூஸ் உதாரணம் ரசிக்கத் தக்கதாய் இருந்தது






Thendral Sivakumar speech | காளிபிரசாத் - ஆள்தலும் அளத்தலும் | தென்றல் சிவக்குமார்


#TamilLiterature #ShrutiTVLiterature




கவிஞர்.தென்றல் அவர்களை முன்பு சந்தித்திருந்தாலும் முறையான அறிமுகம் இன்றுதான் நிகழ்ந்த்து. அவர் கதைகளில் உள்ள சிறு சித்தரிப்புகளை பற்றி பேசினார். சென்னை மக்களின் தெலுங்கு உச்சரிப்பு, ஆம்புலன்ஸ் பின்னால் போகும் பைக்காரர் போன்ற வர்ணனைகளை கூறினார். அவரது உரை ரசிக்கத் தக்கதாய் இருந்தது. ஆள்தலும் அளத்தலும்  ஸ்ரீஜி பூதம் போன்று கதைகளின் தலைப்பு  குறித்து கூறினார்.  கதைகளுக்கு பொருத்தமான தலைப்பு வைப்பவர் நாஞ்சில்நாடன் அவர்கள். மாமிச படைப்பு, தலைகீழ் விகிதங்கள் போன்று சுவாரசியமான வைத்தவர். நாவல்களுக்கும் சிறுகதைகளுக்கும்  பொருத்தமான தலைப்பு வைப்பதில் அவரது இடத்திற்கு அருகில் செல்ல முடிந்தால் கூட மகிழ்ச்சியே.



Akaramuthalvan speech | காளிபிரசாத் - ஆள்தலும் அளத்தலும் | அகரமுதல்வன்


#TamilLiterature #ShrutiTVLiterature



அகரமுதல்வன் ரகளையாக பேசினார்.  அவர் பேசுகையில் என்னுடைய பள்ளி (school of thought) பற்றி புரிந்து கொண்டால் என் கதைகளை புரிந்து கொள்ள முடியும் என்றார். அதை நான் மிகவும் கவனத்துடனே கையாளுகிறேன். அதை நான் எப்படி கையாள்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஆகவே நடையில் அல்லது  வார்த்தை அமைப்புகளில் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன் :-)) ஆனால் எங்கு இருக்கிறது என்று எனக்கு தெரியும் :-)






அனைவருக்கும் மீண்டும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்


காளிப்ரஸாத் ஏற்புரை "ஆள்தலும் அளத்தலும்" விமர்சனக் கூட்டம் | Kaliprasadh speech


#TamilLiterature #ShrutiTVLiterature


மேலும் புகைப்படங்கள் 


https://www.facebook.com/100008908201177/posts/2703315299975384/?app=fbl


நன்றி கபிலன் ஸ்ருதி டிவி





Monday, December 6, 2021

எல்லாமுமான கவிஞன்

விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர்.விக்ரமாதித்யன் படைப்புகள் குறித்த எனது கட்டுரை. எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் வெளியான லிங்க் இங்கே:-


எல்லாமுமான கவிஞன்

"தேவதைக்கதைகளில்வரும் தேவதைகளை தெரியவே தெரியாது   

பேய்க்கதைகளில் வருகிற 

பேய்களை புரியவே புரியாது   

கடவுளின் கதைகளில் வந்துபோகும் கடவுளைமட்டும் தெரியுமா என்ன  


எதுவுமே அறியாமல் எல்லாமுமான கவிஞன் இவன்"





நேற்று தி.நகரிலிருந்து வரும்போது வண்டி தேங்கிய நீருக்குள் நின்று விட்டது. வழக்கமான பாதைதான்.  நீருள்ளது என்றும் தெரியும்.  வண்டியின் வலுவும் தெரியும். ஆனால் இறங்கிய பின்தான் அதன்  ஆழம் தெரிந்தது. நேற்று காலை ஜன்னலோரமாக அமர்ந்து ரசித்த அதே சாரல்தான். காபி அருந்திக் கொண்டிருந்தே ரசித்துப் பார்த்த, படபடவென பொழிந்து தள்ளிய அதே மழைதான்.  நல்ல மழை என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளலாம். அது லேசானதா, மிக கனத்ததா என்பதையைல்லாம் நாம் சொல்வதற்கில்லை. ஒரு சென்டிமீட்டர் குறைந்தாலும் கூடினாலும்  பெயர் மாறிவிடும். ஆகவே நல்லமழை என்றே சொல்லிவிட்டு தொடரலாம். அதுவும் பெய்த அளவை வைத்துத்தான். மற்றபடி மழையின் குணத்தை வரையறுக்கும் எண்ணமும் இல்லை. சொல்லப்போனால் இங்கு (மாநகரத்தில்) பலருக்கு கெட்டமழைதான். எனக்குமே வண்டி மாட்டி பின் இயங்கத் துவங்கும் வரை நல்லமழை என்று சொல்ல வாய்வரவில்லை. நன்றாக ஒருநாளில் வெளுத்து வாங்கிவிட்டு  அடுத்தநாள் அதிக கனமழை என பெயர் வாங்கிக் கொண்டு போகும் மழைகளும் உண்டுதான். ஒருநாள் ஜாலி ஒருநாள் ஓட்டம்.  பரிசுப் போட்டிகளுக்கு மட்டுமே எழுதுவேன் என்ற பிடிவாத எழுத்தாளர்கள் போல சீசனுக்குத் தூறிவிட்டுப் போகும் மழைக்கூட உண்டு. அவை தனிரகம். அவற்றால் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால்  ஒரு மாதத்திற்கும் மேலாக தினமும் நின்று, ஆடி, நின்று  சுரக்கும் மழை அப்படி இல்லை. சாரலாக துவங்கி, வலுத்து, நின்று பின் வான்வெளுத்து ஏமாற்றி, மீண்டுமொருமுறை வெளுத்துவாங்கி என மாறி மாறி நின்று பெய்யும் மழை அது.  பார்க்கத்தான் சாரல், ஆனால் மெல்ல திரண்டு வண்டியை மூழ்கடிக்கும் ஆழம்.



கவிஞர்.விக்ரமாதித்யனை தொகுத்துக் கொள்வது போல வேறொரு கடினமான முயற்சி இல்லை. ஆனால் எப்பாடுபட்டாவது அவர் கவிதைகளை முற்றோதல் செய்யவேண்டும் என்றே பரிந்துரைப்பேன்.. அவரைப் புரிந்துகொண்டால் உலக இயக்கத்தை சிலர்  புரிந்து கொள்ளலாம். மனித மனத்தின் பக்குவத்தை  புரிந்து கொள்ளலாம்.  எனக்கு அவர் அறிமுகம் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையில் நிகழ்ந்தவைதான். 


அவர் புத்தகங்கள் வழி அறிமுகமாகிய காலம் தொட்டு இன்று வரையில் அவரது தோற்றத்தில், அவர்  ஆளுமை குறித்து வாசித்த கட்டுரைகளில், கேட்ட கதைகளில், இலக்கிய பேச்சிலர் ரூம் ரகளைகளில் புரணிக்கதைகளில் என ஏதும் மாறவில்லை. இதில் ரஸம் என்னவென்றால், பார்த்த திரைப்படங்களிலும் அவர் அப்படியே வருகிறார். கடவுளை தேவ்டியாப்பயல் என்கிறார். அந்த விக்ரமாதித்யன் எப்படி  ஒரே உருவத்தோடு கையில் வாளும் தோளில் வேதாளமுமாய்  கதைக்குள் வசிக்கும் ஒரு நபரோ அதுபோலத்தான் எனக்கு இந்த விக்ரமாதித்யனும். அதனாலேயே நானும் அவருடைய கட்டுரைகள் ஏதும் இதுவரை வாசித்ததில்லை. முன்னுரைகளை வாசிப்பதில்லை. அதில் எங்காவது  அவரது பால்யகாலம் இருந்துவைத்து சிறுவனாக பள்ளிக்குச் சென்ற அனுபவம் வந்தால் என்னாவது?   அவரெல்லாம் ஒண்ணாங்கிளாஸுக்கு தாடியோட போனேன் என்று சொன்னால்தானே நம்ப முடிகிறது! அவரைக் கண்ட முதல் புகைப்படத்திலேயே அவர் நரைத்த தாடியுடன் இருந்ததால் ஒருவேளை தாத்தாவிடம் கொள்ளும் நெருக்கம் போல ஆகிவிட்டதோ என்னவோ. அவரை,  அவரது கவிதைகள் வழியாகவும் பேட்டிகள் வழியாகவும் பிறருடைய கட்டுரைகள் வழியாகவும்தான் மாறி மாறி அறிந்து வருகிறேன். 


முதலில் விகடன் தீபாவளி மலரில்  (நேரடியாகவோ அல்லது யாரோ குறிப்பிட்டிருந்தோ நினைவில்லை) வாசித்த கூண்டுப்புலிகள்.  பின் 2000 ஆண்டில் விக்கிரம வருடம் பிறப்பதை ஒட்டி விகடனில் இயக்குனர் விக்ரமன் நடிகர் விக்ரம் என விக்கிரம வரிசை பெயர்கொண்டவர்களின் பேட்டி வழியாக மறுமுறை. அதில் கவிஞர்.விக்கிரமாதித்யனும் இருந்தார்.  கையில் காசு இருந்தால் குடிப்பேன் அல்லது ஓவியம் வாங்குவேன் என்று சொல்லியிருந்தார். வீட்டுக்கு காசு தரமாட்டேன் என்றார்.  விக்ரமாதித்யனுக்கு வரமளித்த மாகாளியை வணங்க கல்கத்தாவிற்கு  போனேன் என்றார். எத்தனை! அதன்பின்  ஜெயமோகன் எழுதிய தமிழிலக்கியம் ஒரு அறிமுகம் எனும் பகடி கட்டுரை. எஸ்.ரா எழுதிய அவரது ஆளுமை குறித்த ஒரு கட்டுரை (விக்ரமாதித்யன் எனும் பெருநகரப் பாணன்).  பின் நான்கடவுள்.. அங்காடி தெரு.. அந்த சமயங்களில் வந்த நேர்காணல்கள்.. இப்படியே.. இடையிடையே  ஆங்காங்கு வாசிக்க கிடைத்த அவர் கவிதைகள். எங்கும் மனதளவில் எனக்கு  அவருடைய தோற்றம் மாறவேயில்லை. ஆனால் அவரது கவிதைகள் மீதான எனது பார்வை மாறிக்கொண்டுதான் இருக்கிறது.


பாரதி முதற்கொண்டு  அனைவரும் எதிர் கொண்ட  சிக்கல் கொண்ட கூண்டுப்புலிகள் கவிதை.  லெளகீகம் ஆட்டிப்படைக்கும் ஒரு  படைப்பாளி தன்னை ஒரு கூண்டுப்புலியாகவும் ஒரு  புலிக்கலைஞனாகவும்  தான் உணர முடிகிறது.

(பிற்காலத்தில் ஜெயமோகன் எழுதய  குருவி கதையும் இதே வரிசையில் வருகின்றது. ஆனால் சற்று மாறுபட்டது )


கூண்டுப்புலிகள்

நன்றாகவே பழகிவிட்டன

நாற்றக் கூண்டு வாசத்துக்கு

பெரிதாக ஒன்றும் புகார் இல்லை

நேரத்துக்கு இரை

காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி

குட்டி போட சுதந்திரம் உண்டு

தூக்க சுகத்துக்கு தடையில்லை

கோபம் வந்தால்

கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்

சுற்றிச் சுற்றி வருவதும்

குற்றமே இல்லை

உறுமுவதற்கு உரிமையிருக்கிறது

முகம் சுழிக்காமல்

வித்தை காண்பித்தால் போதும்

சவுக்குச் சொடுக்குக்குப் பயந்து

நடந்து கொண்டால் சமர்த்து

ஆதியில் ஒரு நாள்

அடர்ந்த பசியக்காட்டில்

திரிந்து கொண்டிருந்தனவாம்

இந்தக் கூண்டுப் புலிகள்


இது இன்றும் அவர் பெயர் சொன்னால் அனைவருக்கும் நினைவில் வரும் கவிதைதான். ஆனால் அடுத்து வாசித்தது பலமாக ஆச்சரியப்படுத்தியது. அப்போது சென்னையில் நண்பர்களுடன் அறையில் வாசம்.


கூண்டுப்புலியா இவர் என்று தோன்ற வைத்த தொகுப்பு ஒன்றை அங்குதான் வாசித்தேன்."தேவதைகள்-பெருந்தேவி-மோகினிப்பிசாசு." கூண்டுப்புலி கவிஞரின் கைவிலங்கை முறித்து எழுந்த கவிதைகள் இவை. அப்பட்டமான காம வர்ணனைகள். காமத்தின் வழியான சரணாகதி என. வரம்பு மீறிய மொழி. கட்டற்ற இளமைக்கனவு.. திமிறி வரும் சொற்கள் என அந்த தொகுப்பு.


"புல்முளைத்து இருப்பது

போல இருக்குமோ


புதர்மண்டிக் கிடப்பது

போல இருக்குமோ


வெட்டி விடப்பட்ட

வெம்பரப்பாக விளங்குமோ


எப்படி இருந்தால் என்ன

ஏதோ ஒதுங்க இடம்கிடைத்தால் சரி

"


எனத் தூண்டிவிடுகிறது. ஒருவித விடலை மனப்பாங்கா? நிஜத்தில் வாய்க்காத ஒன்று சிந்தையை ஆக்ரமிக்க அதைக் கடைந்து எடுத்து வெவ்வேறு தளங்களில் ஆடிப் பார்க்கிறது மனசு





"படுப்பது

சுலபம்


படுக்கை விரிப்பதெ

ஒரு வேலை


படுக்கை போட்டுக்கொண்டே

பெண்


படுத்துக்கொண்டே

ஆண்"


இவ்வாறு யோசிக்க வைக்கிறது.


"அம்மனின் ஒற்றை மூக்குத்தி

பத்து நூறு ஆயிரம் லக்ஷமென

மாயத்தோற்றம் தரும் ராத்திரி


செவ்வரளி ஆரம்

சிவனணையும் காளிக்கு


இருப்பதில் உயர்ந்த 

மதுபானமும் அவளுக்கே

.

.

.


ஆதி 

நிறம் கொண்ட தாய்


ஆடவிட்டு

வேடிக்கை பார்க்கிறாள்


சோதித்ததெல்லாம் 

போதும்


சுகமாக

வாழவைக்க வேண்டும்"



இங்கு அந்த அரற்றல் எல்லாம் பிரார்த்தனையாக ஆகிறது. பின் அவளுடன் அமைகிறது


"காளி தர்சனம்

கதி மோட்சம்


ஓம் ரீம் காளி அபயம்

ஓம் ரீம் காளி தஞ்சம்


ஓம் ரீம் காளி சரணம்

ஓம் ரீம் காளி அடைக்கலம்

"

இங்கே அது ஒன்றிவிடுகிறது. 


இது மனிதனின் படிப்படியான புரிதலா அல்லது யோகப்படிநிலையா? அல்லது காமசாஸ்திரமா? என்றால்  அது எனக்கு காமசாஸ்திரம்தான். ஒருவகையில் அவர்  நவீனவாத்ஸ்யாயனர்.


இதன்பிறகு அந்த ஜுர வேகம் பிற கவிதைகளில் இல்லை. ஆனால்  கோபம் உண்டு. அமைதியும் உண்டு. 


அவருக்கு விக்கி என்று பெயர். விக்கிக்கு நாடாறு மாசம். காடாறு மாசம். குடும்ப பிரச்சனை உண்டு.  எந்தப் பெண்விலங்காவது ஆணை கொன்று தின்கிறதா? மனிதனில் மட்டும் ஏன் என அரற்றுகிறது. சமூக கோபமும் உண்டு. விக்கிக்கு தொழிலாளர்கள் மீதான துப்பாக்கிச்சூடு வயிரெறிய வைக்கிறது. முன்னால் பின்னால் பதினைந்து கார்கள் சூழ பவனிவரும் அரசியல்வாதியைக் கண்டு மனம் கொதிக்கிறது. இயல்புமீறிய குடும்பத் தலைவனின் சாயல் கொண்ட கவிஞராக விக்கி. அவர் எழுதிய மங்களக் கவிதைகளை குறிப்பிடவேண்டும். குறிப்பாக, சைவத் தலக்கவிதைகள்.  கோவில்களாக அலைந்து அம்மையப்பன் ஆடலை பதிவு செய்த கவிதைகள். இங்கு அவர் நவீன நாவுக்கரசராக ஆகிறார். அவர்  பாடிய ஸ்லதலங்கள் பாடல்பெற்ற ஸ்தலங்களாகின்றன. திருக்கோயில் வைபவங்களை பதிவு செய்கிறார். பழனியாண்டி, ஆழித்தேர், திருக்கல்யாணம் என. 


அதேநேரம்,  விக்கியின் சொற்கள் ஒரே நேரத்தில் தினசரி வாழ்வில் உழன்றும் அங்கிருந்து மேலேறியும் இருக்கும் சொற்கள்


'ஃப்ராய்ட் பணத்தை விட்டுவிட்டார் மார்க்ஸ் மனத்தைக் கவனிக்கத்தவறிவிட்டார் 

ஆனாலும் என்ன 

இருவரின் கொடைகளும்

எந்நாளும் அழியாதவைதாம் 

ஒன்றை யொன்று நிரவியபடியே"



ஆனால் அந்த விக்கியை கடந்தும் ஒருவன் எழுகிறான். அந்த மற்றையவன் அமர். அவன் அமரன். அமர்  வரும் கவிதைகளில்  அமருடைய சொற்களில் தெரிபவர் முந்தைய நாவுக்கரசரோ வாத்ஸ்யாயனரோ பாரதியோ  விக்கியோ அல்ல. அங்கு அவன் சித்தராக இருக்கிறான். சித்தர் பாடல்கள் தொகுப்பின் அட்டையில் சித்தர்களின் ஓவியங்கள் உள்ளன. அமரின் புகைப்படம் அதுவாக இருக்கலாம் என்று சொல்லிவிடலாம். 


"அமர் என்ன மேன்மைதங்கிய குடியரசுத்தலைவரா

மாண்புமிகு முதல்வரா 

 மேதகு ஆளுநரா 

மதிப்புக்குரிய மாவட்ட 

ஆட்சித்தலைவரா 

இல்லை சட்டமன்ற உறுப்பினரா லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகனா 

ஒரு சுக்கும் இல்லை 

முந்நூறுபேர் படிக்கும் கவிஞன்   அமர்"


நான் வாசித்த வரிசையில் கூண்டுப்புலியாக இருந்து அமராக எழும்வரை அத்தனை தடங்களும் கவிதைத் தொகுப்புகளில் விரவியிருக்கின்றன. எனக்கு இந்த வரிசைப்படியில் இன்று அமர் அணுக்கமாக இருக்கிறான். விக்கியும்தான். ஆனால் விக்கி மீது கூடவே ஒரு மரியாதையும் உண்டாகிறது

விக்கிக்கும் முந்தையவர்கள் தினமும்  வருகிறார்கள்தான். அவர்கள் மீது மரியாதை இருக்கறது. ஆனால் அனைவரை விடவும்  அமர் அணுக்கமாக இருக்கிறான். அவனுக்கு ஒரு ச்சியர்ஸ் சொல்லிவிட வேண்டும் என்று தோன்றுகிறது





"பிறந்துவிட்டான் விக்கி வசித்துக்கொண்டிருக்கிறான் அமர் வாழ்ந்துக்கொண்டிருக்கிறான் பூர்ணன் எழுதிக்கொண்டும் போகிறான் புட்டா"


கட்டுரையின் துவக்கத்தில்  சொன்னதை மறந்துவிடவும். கவிஞர்.விக்ரமாதித்யனை தொகுத்துக் கொள்வது கடினம் அல்ல. அதுபோல சுலபமான வேறு ஒரு வேலை இல்லை.


சுருக்கமாக சொல்லிவிடலாம். 

 

நல்ல மழை.