Friday, November 19, 2021

விஷ்ணுபுரம் விருந்தினர்




ஜெ. இந்த நிகழ்விற்கான மெயில் அனுப்பியபோது, மிக்க மகிழ்ச்சியாகவும் கெளரவமாகவும் உணர்ந்தேன். சென்னையில் வேலைகிடைத்து வந்த பிறகு ஊருக்கு போனால் மூன்று அல்லது நான்கு நாட்கள் தங்கிவிட்டு திரும்புவது வழக்கம். சொந்த வீட்டுக்கு கெஸ்ட் மாதிரி வர்ற என்று கிண்டலுக்கு ஆளாவதுண்டு. ஜாலியாகத்தான் இருக்கும். பல வருடங்கள் கழித்து மீண்டும் அதே போன்று ஒரு அனுபவம்..






விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்




விஷ்ணுபுரம் விருந்தினர் அரங்கில் இளம்படைப்பாளிகளுக்கான மேடையில் இம்முறை காளிப்பிரசாத் கலந்துகொள்கிறார். சென்னையைச் சேர்ந்த காளிப்பிரசாத் ஆள்தலும் அளத்தலும் என்னும் சிறுகதை தொகுதியை எழுதியிருக்கிறார். தொடர்ந்து இணைய இதழ்களில் கதைகளை எழுதி வருகிறார். இலக்கிய விமர்சனங்கள் எழுதுவதுடன் இலக்கிய உரைகளையும் ஆற்றிக்கொண்டிருக்கிறார்



ஆள்தலும் அளத்தலும் தொகுதி வாங்க

காளிபிரசாத் படைப்புகள், வலைப்பக்கம்

 

காளிப்பிரசாத் சிறுகதைத் தொகுதி குறித்த விமர்சனம்

’ஆள்தலும் அளத்தலும்’ எஞ்சுவதும்- அனங்கன்

ஆள்தலும் அளத்தலும்: செல்லும் தூரத்தை சுட்டும் சாதனை

இரண்டு இளம் படைப்பாளிகள் -எஸ்.ராமகிருஷ்ணன்

காளிப்பிரசாத் கட்டுரைகள்

இந்திரா பார்த்தசாரதி- காளிப்பிரசாத் உரை

ஷோஷா – காளிப்பிரசாத்

ஆள்தலும் அளத்தலும்- காளிப்பிரசாத்

கணப்பித்தம் கணச்சித்தம்- காளிப்பிரசாத்

முரசும் சொல்லும்- காளிப்பிரசாத்

கடல், வண்ணத்துப்பூச்சி, சுரேஷ்குமார இந்திரஜித்- காளிப்பிரசாத்

ராம்குமாரின் ‘அகதி’ – காளிப்பிரசாத்

அழகியபெரியவன் கதைகள் – காளிப்பிரசாத்

பகடி எழுத்து – காளிப்பிரசாத்

புலம்பெயர் இலக்கியம் – காளிப்பிரசாத்

நீரின்றி அமையாது – காளிப்பிரசாத்

சிவா கிருஷ்ணமூர்த்தியின் வெளிச்சமும் வெயிலும் – காளிப்பிரசாத்

சிலுவைப்பாடு – காளிப்பிரசாத்

ஞானக்கூத்தன் இறுதிநாள்- காளிப்பிரசாத்

சீ.முத்துசாமியின் மலைக்காடு – காளி பிரசாத்

சபரிநாதன் கவிதைகள் – காளி பிரசாத்

Thursday, November 18, 2021

ஒரு பழைய கலகக்காரனின் கதைகள் - என்.கே.ரகுநாதம் புத்தகத்தை முன்வைத்து

 நவம்பர் 2021 - அகழ் மின்னிதழில் வெளியான கட்டுரை. கட்டுரைக்கான இணைப்பு இங்கே


ஒரு பழைய கலகக்காரனின் கதைகள்

 

 கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள்   தன்னுடைய கம்பராமாயண உரையில் குகன் படலத்தைச் சொல்லும் பொழுது, இலங்கையில் தான் பிரசங்கம் செய்யப் போன இடத்தில் நிகழ்ந்த ஒன்றைக் கூறுகிறார். அங்கு  கூட்டமாக  மக்கள் கோயிலுக்கு வெளியே குந்த வைத்து அமர்ந்து இவர் உரையைக் கேட்கிறார்கள். உள்ளே இடம் இருப்பதைக் காட்டி அவர்களை வரச்சொல்லும் போது உடனிருந்தவர்கள் அவர்களை "மத்தவங்க" என்று சொல்லி  அனுமதிக்க மறுப்பதை சொல்கிறார். முன்பு தமிழகத்தில் அத்தகைய சூழல் நிலவியதைக் கேள்விப் பட்டிருந்தாலும் சமகாலத்தில் அத்தகைய   ஒன்றைக் கண்டிராத, முக்கியமாக தமிழகத்தை விடவும் சிறந்த பொற்கால/சமதர்ம ஆட்சி அங்கு நடக்கிறது என்று எல்லாம் கருதி வந்தவனுக்கு முதல் அதிர்ச்சி அதுதான் என்று சொல்லலாம்.  சமகால இலக்கியத்தில் ஒரு எழுத்தாளர் இத்தகைய சூழல் சார்ந்தும் கேள்விகளை தன் எழுத்தில் எழுப்புகிறாரா என்பது முக்கியமானது.

 

எழுத்தாளர் கற்சுறா தொகுத்து 'கறுப்புப் பிரதிகள்' வெளியீட்டில் வந்துள்ள "என்.கே.ரகுநாதம்" புத்தகம் ஈழ எழுத்தாளர் என்.கே.ரகுநாதன்  அவர்களுக்கான ஒரு முழுத்தொகுப்பாகவும் அவர் எழுத்துலகிற்கு ஒரு சமர்ப்பணமாகவும் வந்திருக்கிறது. அவரது சிறுகதைகள், வரலாற்றுச் சித்திரம், கட்டுரைகள், நேர்காணல்கள், கவிதைகள் எல்லாம் கொண்ட பெருந்தொகுப்பாக  வந்துள்ளது. ஆனால் பெரும்பான்மையான தமிழக வாசக தளத்திற்கு தான் பிறந்து தொன்னூறு வருடங்கள் கழிந்து, தன் மறைவிற்குப் பின்னர்,  இந்தத் தொகுப்பு வாயிலாகத்தான் அவர் அறிமுகமாகிறார் என்பதும் உண்மை. அதற்கான நடைமுறைக் காரணங்கள் இல்லாமல் இல்லை. அவர் எழுதத் துவங்கியபோது இருந்த சமூக நிலை அல்ல பிற்கால ஈழத்தில்  இருந்தது. ஆகவே துவக்கத்திலும் இறுதிக்காலத்திலும் இருந்த அளவு இடைப்பட்ட காலத்தில் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. தன் கண்முன்னரே தன்னுடைய அனைத்து கருத்தியலும் கலகமும் போர்ச்சூழலில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன்.



முதல்கதையான "நிலவிலே பேசுவோம்" கதையே  மிகவும் சுவாரசியமானது. காந்தி சொன்னார் என்று கள்ளுண்ணாமையை முன்னெடுக்கும்  சிவப்பிரகாசத்தைக் கண்டு தன் தரப்பு நியாயங்களை உரைக்க வரும் கள்  இறக்கும்  மக்களுடனான உரையாடல்தான் கதை. 'மது ஒழிக' என்னும் கோஷம் சீமை சாராயத்தைக் கொண்டு வரும் முயற்சிதான் என்று வாதிடுவது சாதாரணமானது என்றாலும் மற்றொரு கோணத்தை வைக்கும்போது ஆகச்சிறந்த கதையாகிவிடுகிறது.  மக்கள் தங்களிடம் கள்ளைத்தான் வாங்கிப் பருகுவார்களேதவிர தாங்கள் தேநீர்க்கடை வைத்தால்  மக்கள் வாங்கிப் பருகுவார்களா என்று கேள்வி எழுப்புபவருக்கு அவரிடம் பதில் இல்லை. அவர் மழுப்பி சமாளிக்க,  அங்கிருந்து விடை பெற்றுச்  செல்லும்போதுதான் தங்களை  வீட்டுக்குள் கூட அனுமதிக்காமல் வெளியில் "நிலவிலே பேசுவோம்" என்று வெளியே வைத்துப் பேசியதன உள்ளர்த்தம் விளங்குகிறது. கள் இறக்குவது என்பதுதான்  தன்  சமூகத்தை பொருளாதார ரீதியாக நிலை நிறுத்தும் என்பதும், வேறு ஏதும் தான் பரிமாற மற்றவர்கள் வாங்கி அருந்த தயாராக இல்லை என்பதும் உணர்ந்த ஒரு தோலைநோக்குப் பார்வையும் அதே சமயம் தன்னை வீட்டிற்குள் சேர்க்காத யதார்த்தமும் திரண்டு வரும் கதை.  இந்தக்கதை வெளியானது 1951 ம் வருடம் என்பதையும் வைத்துப் பார்க்கும்போது எழும் வியப்பைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அந்தக் கதையின் கூறு பொருள் தமிழகத்திலேயே இன்றும் செல்லத்தக்கதாக இருக்கிறது என்பதை உணரமுடியும். அவரது எழுத்துநடையுமே மிகவும் கச்சிதமானது.1950களில் எழுதப்பட்டதாக வாசகரால் உய்த்தறிய இயலாது. மேலும் சில கதைகளும் அத்தகையவை

 

 

கோயிலுக்குள் அனைத்துச் சமூக மக்கள் அனுமதிக்கப்பட்டது அறிந்து  ஆலயம் செல்லும் செல்லத்துரை தரிசனம் முடிந்த பின் வெளியே உள்ள உணவகத்தில் சென்று குழந்தைக்கு சோறூட்ட ' அனைவரும் வந்து அமர இது கோயிலல்ல கடை  என்று முதலாளியால் அவர் வெளியே தள்ளப்படுகிறார் ( கதவுகள்), ஒரு விலைமகள் வீட்டிற்கு செல்லும்போதும் அங்கும்  அவனின் வேலை பணவசதி எல்லாம் கடந்து சாதிதான் கேட்கப் படுகிறது ( வெறி). இத்தகைய கதைகள் ஒரு கலகக்காரராக அவரை காட்டுகின்றன.  ஒரு கலகக்காரனின் குரல் என்றால் அது தனக்கு சாதகமான இடங்களில் கண்மூடி இருப்பது அல்ல என்கிற தெளிவும்  அவரது கதைகளில் காணக்கிடைக்கிறது.  ஆகவே, அவர் கல்வி சாலைகளில் உள்ள கீழ்மைகள் , சுயமரியாதை இயக்க நபர் கொள்ளும் தகா உறவு, இலக்கிய உலகம் கொண்டிருக்கும் போலிக் பெருமிதங்கள்,  எழுத்தாளரின் சுயநலம் , இலக்கிய அமைப்புகளின்  இரட்டை வேடம் என அனைத்திலும் உள்ள போலித்தனத்தைக் காட்டி விடுகிறார்,  பகடி செய்கிறார்.

 

அடுத்து ஈழப்போரின் துவக்கம் மற்றும் அகதிகள் பெருகி வருவது என ஈழப்போர் ஒரு தீப்பொறியாக மட்டும் இருந்த காலங்களில் இவர் கதைகளில் அவை எதிரொலிக்கும் விதமும் கவனிக்கத்தக்கது. தன்னுயிரைக் காப்பாற்ற உயிர் துறக்கும்  சிங்கள தம்பதிகள் ( நெருப்பு), இன வெறுப்பில் குடையை மறைத்து வைத்த சிங்கள கடைக்காருக்கு ஆதரவாக வரும் மற்றொரு சிங்களவர் (குடை) ஆகிய கதைகளின் ஊடாக அவர் வலியுறுத்துவது மாற்றுத் தரப்பிலும் உள்ள நல்ல மனிதர்களையும் மேன்மைகளையும்தான். அவரது  முதல்கதையான "நிலவிலே பேசுவோம்" ல் உள்ள ஒருவித முன்னோக்கிக் காணும் தன்மை இத்தகைய கதைகளில் வெளிப்படுகிறது.  இவ்விரு தளங்களையும் தவிர்த்தும் பல கதைகள் எழுதியுள்ளார். அவற்றில் வெளிப்படும் ரகுநாதன் மிகவும் ரசிக்க வைக்கிறார். வெள்ளைக்கார துரை மற்றும்  துரைசானி  இருவரும் காரில் வரும்போது பள்ளி ஆசிரியர் ஒருவர் படாரென இரு கரங்களாலும் சல்யூட் அடிக்கும் கதை (இரட்டை 'சல்யூட்' )  ஒரு அபத்தமும் அதற்குள் கொண்டிருக்கும் பகடியும் கலந்த கதை. இவரது கதைகளில் வரும் குழந்தைகள் மனதிற்கு மிகவும் நெருக்கமாகிறார்கள்.  ( ஒருநாள் கழிந்தது, இரண்டு அப்பாமார்களும் பிள்ளைகளும்,  ஓர் அம்மாவும் அந்த அம்மா பெற்ற பிள்ளைகளும் ). மேற்சொன்ன  சீண்டல் / கலகக்  கதைகளை ஒருவேளை இவர் எழுதியிருக்காவிட்டால் கூட , இவருடைய இந்தக் கதைகள் பொது வாசகர் தளத்தில் திஜா எழுத்துக்கள் போல வெகுவாக ரசிக்கப் பட்டிருக்கும். 

 


என்.கே.ரகுநாதன் அவர்களின் அத்தனைச் சிறுகதைகளையும் குறித்த பொதுவான ஒன்றை ஒரே சொல்லில் சொல்லவேண்டும் என்றால், அவர் கதைகளில் வலியுறுத்தும் ஒழுக்கவியலைக் குறிப்பிடலாம். அவரைப் பொறுத்தவரை, எழுத்தாளன் என்பவன் ஒரு படி மேலே, அவனுக்கு பிற மக்களை வழிநடத்தும் பொறுப்பு இருக்கிறது, ஆகவே அவன் கவனமாக வார்த்தைகளைக் கையாளவேண்டும்  என்கிற நிலைப்பாட்டைக் கொண்டவராக  இருக்கிறார். இது அவரது இடதுசாரி சித்தாந்தத்தின் வழி வந்தது என்பதும் எளிதில் விளங்கிக் கொள்ளக்கூடிய ஒன்றுதான். மற்றபடி, இலக்கிய அழகியல், வடிவச் சோதனைகள், நேரடி வர்ணனைகள், காமம் மற்றும் உரையாடலில்  வரும் கெட்ட வார்த்தைகள் என அனைத்தும் அவருக்கு ஒரு பொருட்டு இல்லை. ஒருவித நேரடி கதைச்சொல்லல்தான் அவரது பாணி. அது தன்னுடைய பாணி என்றாலும் அதிலிருந்து மாறுபட்டு எழுதும் பிற பாணி எழுத்தாளர்களை அவர் மேற்கண்ட காரணங்களால் குறைத்தே சொல்கிறார். ஈழ மற்றும் தமிழக எழுத்தாளர்கள் அனைவரிடமும் அவர் இந்த ஒழுக்கத்தை எதிர்பார்க்கிறார். அவ்வாறு இல்லையேல் அதைச் சுட்டிக் காட்டுகிறார். சில இடங்களில் எழுத்தில் இவ்வாறு சொல்பவர் தன சொந்த வாழ்க்கையில் எப்படி இருந்தார் என்று பிரதிக்கு வெளியேவும் சென்று அலசுகிறார். இந்த வகையில் தமிழக எழுத்தாளர்கள் நா.பார்த்தசாரதி ஜெகே, இ.பா ஆகியோர் மீதும் இதே விதமான விமர்சனங்களும் வைக்கிறார்.

 

அவரது கட்டுரைகளில் உள்ள அன்றைய இலக்கிய வம்புகள் இன்று வாசிக்கப்படுகையில் சுவாரசியமாகத்தான் உள்ளன. பெரும் பகடியும் உண்டு.  அகஸ்தியர் என்னும் எழுத்தாளர் குறித்த ராகுலதாசன் என்கிற வாசகர் கட்டுரையையும் மேலும் சில கட்டுரைகளையும் கட்டுடைத்து அதை எழுதியது ராகுலதாசன் அல்ல அந்த எழுத்தாளரேதான். அவரே புனைப்பெயரில் இதை எழுதுகிறார் என்று ஒரு கட்டுரையில் பூடகமாக  குறிப்பிடுகிறார். பிறகு சில ஆண்டுகள் கழித்து ஈழ இலக்கியம் சார்ந்த இன்னொரு கட்டுரையில் பெயர் சொல்லாமல் இன்னொரு  சம்பவத்தை சொல்கிறார். முன்பு ராகுலதாசன் என்னும் வாசகர்  தன்  ஆதர்ச எழுத்தாளரைப் புகழ்ந்து கட்டுரைகள் எழுதியபடியே இருந்தார். அந்த ஆதர்ச எழுத்தாளர் ஒருநாள் இறந்தும் போனார். ஆனால் வியப்பு என்னவெனில் அந்த வாசகரும் அதோடு எழுதுவதை நிறுத்திக் கொண்டார். ஒரு அஞ்சலிக் கட்டுரை கூடவா எழுத்தமாட்டார்.. ஒருவேளை ஆதர்ச எழுத்தாளர் இறந்ததையடுத்து அவரது ஆதர்ச வாசகரும் இறந்தாரோ  என்று சொல்லி வருந்துகிறார். நமக்குத்தான் வெடிச்சிரிப்பாக இருக்கிறது.

 

தாழ்த்தப் பட்டவர்களின் முன்னேற்றமும் முற்போக்கு எழுத்தும்தான் தன் பாணி என்று அவர் முடிவு செய்து கொண்டதால் பிற விஷயங்களான மாற்று இலக்கியம் அல்லது  அரசியல் மாற்றங்கள் அவருக்கு எந்தளவு ஏற்கத்தக்கதாக இருந்திருக்கும் என்று ஊகிக்க உதாரணமாக இரு சம்பவங்ககளைச் சொல்லலாம். ஒன்று, தேவதாஸ் மற்றும் ஷோபாசக்தி ஆகியோர் அவரை எடுக்கும் நேர்காணலில் ஈழ எழுத்தாளர் மு.தளையசிங்கம் குறித்த கேள்விக்கு  ரகுநாதன்  சொல்லும் பதிலில், "எனக்கு மு.தளையசிங்கம் குறித்து ஒன்றும் தெரியாது.. அவரது இலக்கிய நிலைப்பாடு முற்போக்கு எழுத்தாளர்களால் கவனத்தில் கொள்ளப்படவில்லை" என்கிறார். எல்லைகளைக் கடந்து இன்றும் தொடர்ந்து வாசிக்கப்படும் ஒருவர் குறித்த இந்த பதில் வியக்கத்தக்கது. அதேநேரம் முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கவிஞர்களுக்கு  பல ஆண்டுகள் கழித்தும் நினைவு மலர் கட்டுரைகள் எல்லாம் கொண்டுவருகிறார். மற்றது ஈழப்போர். முதல்பத்தியில் சொன்ன இரு கதைகளைத்தவிர வேறு எங்கும் போர் விவரணைகள் இவர் எழுத்தில் இல்லை. இன்றைக்கு ஈழ இலக்கியம் என்பதே போர்ச்சித்தரிப்பு என்று ஆகிவிட்ட சூழலிலும் தானும் அகதியாக கனடா சென்று வாழ்ந்திருந்த போதும் அவர் போர் குறித்து ஏதும் எழுதவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 'சாதி வெறியர்கள் இன்று துப்பாக்கியின் நிழலிலே மறைந்து கிடக்கிறார்கள்' என்கிற ஒரு வாக்கியத்தோடு அவர் கடந்துவிடுகிறார். தான் எதிர்பார்த்து வந்த சமூக முன்னேற்றம் என்கிற சிந்தனை, இன்று இனக்கலவரம் / போர்  என்று  வேறொரு சூழலால் அடித்துச் செல்லப்பட்ட போது அவருடைய எழுத்துக்கான காலம் இன்னும் கனியவில்லை என்பதும் அதனால் அவர் எழுதுவதையும் நிறுத்திக் கொண்டார் என்றும் புரிந்துகொள்ள முடிகிறது. தனக்கான களம் வாய்க்காத போது செல்லுபடியாவதை எழுதுவோம் என்று எழுதி அவர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விரும்பவில்லை என்றே கருதுகிறேன்.




 

இதே தொகுப்பில் உள்ள 'ஒரு பனஞ்சோலை  கிராமத்தின் எழுச்சி' என்கிற இவரது தன்  வரலாற்று நாவல் பிற்காலத்தில் எழுதப்பட்டது.  குரும்பைக்கட்டு விளையாட்டோடும் நல்ல நிலவர்ணனையோடும் துவங்கும் "ஒரு பனஞ்சோலை  கிராமத்தின் எழுச்சி" ஒரு நாவலளவிற்கான களம் கொண்டது. இத்தனைக்கும் கதைநாயகனாக  இராசன் என்று படர்க்கையில் எழுத்தப்பட்டிருந்தாலும் அது வரலாற்றுச் சித்திரம் என்றே குறிப்பிடுகிறார். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு மாணவன் பள்ளியில் கொண்ட இடர்களும் மெல்ல பொதுவெளியில் கொண்ட எதிர்வினைகளும் கொண்ட  இளமைக்கால நினைவுத் தொகுப்பு என்றாலும், அங்கு நிலவிய சமூக அமைப்பை விளங்கிக் கொள்ள பெரிதும் உதவுகிறது. காந்தி, பெரியார் ஆகிய இந்திய தலைவர்களின் தாக்கம் அங்கு நிகழ்வதும்  ஆலய நுழைவு போராட்டம் எழுவதும் அதற்கு ஆதரவாக இராசன் எழுதிய கந்தன் கருணை நாவல் குறித்த இலக்கிய அரசியல் நிகழ்வுகளும் போருக்கு முன்பான ஈழ நிலத்திற்கான ஒரு முன்வரைவை அளிக்கின்றன. ஈழத்தில் இருந்த  சாதீய வன்முறைகளும், அதற்கெதிராக சமதர்மம் பேசி  எழுந்த காந்திய திராவிட சிந்தனைகளும்  அதற்குள்ளும் அவர் சுட்டிக் காட்டும் சொற்ப சுயநலமும் கலந்து ஒரு சித்திரத்தை அளிக்கின்றன. மேலும் சுவாரசியமான களமாக ஈழத்தில் இருந்த சீன ஆதரவு கம்யூனிஸம் மற்றும் ரஷ்ய ஆதரவு கம்யூனிஸம் ஆகிய சித்திரங்கள் கிடைக்கின்றன. நண்பர்கள் சேர்ந்து அமைக்கும் வாசகசாலைக்கு தமிழக அரசியல் பாதிப்பால் திராவிடர் கலைமன்றம் என்று பெயர் வைக்கிறார்கள்.  அவை அனைத்தும் வாசிக்கையில் போர் வந்து கலைத்திருக்காவிடில் அங்கு வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்ற யோசனைக்குள் ஆழ்த்திவிடுகின்றன.

 

இவருடைய கதையுலகம் பள்ளிச் சம்பவங்கள், ஆலயப்பிரவேசம், அனைத்து சாதியினருக்கும் ஒரே சுடுகாடு போன்ற முழக்கங்களுடன் செல்கிறது. எதிலும் இடதுசாரிவழி  உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், கோஷம் என்று செல்கிறது. ஆங்காங்கு நாமறிந்த இலக்கியவாதிகள் கதைமந்தர்களாக வருகிறார்கள். பெரும் திருப்பங்கள் இலாத அதேநேரம் வாசிக்கவும் அயற்சிதராத கதையோட்டம் கொண்டது. இருப்பினும் அனைத்தும் கலந்த தொகுப்பாக இதை வாசிக்கும் பொழுது இவர் தன்வாழ்வில் எதிர்கொண்ட அந்தச் சில குறிப்பிட்ட சம்பவங்களே மீளும் மீளும் பதிவு செய்யப் படுவதை வாசிக்கையில் சலிப்பூட்டுகிறது. உதாரணமாக, கந்தன் கருணை நாடகம் எதிர்கொண்ட 'உரிமைப்பிரச்சனை' பல கட்டுரைகளில் வருகிறது. ஆனால் முதல் கட்டுரையை படித்தபின் மற்ற எதிலும் பெரும் மாற்றமோ புதிய சுவாரசியமோ  இல்லை. அவற்றை இன்னும் கச்சிதமாக்கியிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது.

 

சாதியமைப்பில்  தனக்கு மேல்  இருக்கும்  சமூகத்தை  நோக்கி அதற்கடுத்த நிலை சமூகம் கேள்வி எழுப்புவது இயல்பானது. ஒரு ஏணியில் அனைவரும் ஏறிப்போகத்தன் விரும்புவார்களே தவிர நிலைத்து நிற்கவோ இறங்கிப் போகவோ யாருக்கும் எண்ணம் இராது. அங்கு வரிசையில்  பின்னால் இருப்பவர் மேலே இருப்பவருடன் இணைந்தோ  அல்லது தாண்டியோ செல்லவே விரும்புகிறார்.  இது இயல்பான ஒன்று. இங்கே  அதிகாரம் அல்லது வழிநடத்துவது ஆகியவற்றிற்கு ஒரு சமுதாயம் பொறுப்பேற்பதாக கருதப்படும் பொழுது அது தன்னுடைய 'தன்னலமின்மையை' நிரூபித்தாக வேண்டும். அவ்வாறு இல்லாத சமயங்களில் பழி ஏற்க வேண்டும். உதாரணமாக,  தமிழகத்தில் பிராமண சமுதாயம் அந்தக் கேள்வியை  எதிர்கொண்டது. அது மிகவும் சிறுபான்மை என்பதாலும் சமரச அணுகுமுறையாலும் தற்காத்தும் கொண்டது. ஆனால் அவ்வாறு இல்லாத நிலங்கள் உண்டு. அங்கு அவை தங்களுக்குள் போரிடல் வேண்டும். அல்லது ஒரு பொது எதிரியைக் கண்டடைய வேண்டும். இரண்டிலும் பேரழிவு நிச்சயம் என்பதற்கு ஈழம் வரை பல உதாரணங்கள் உண்டு. ஒரு இலக்கியவாதியின் இடமானது,  இந்த நெருப்பில் தான் எண்ணெய் ஊற்றுகிறோமா அல்லது தண்ணீர் ஊற்றுகிறோமா  என்பதும், யாருக்கான தரப்பில் நின்று பேசுகிறோம் என்பதிலும் வைத்து முடிவு செய்யப் படுகிறது. என்.கே. ரகுநாதன் அவர்களுக்கு தீயில் எண்ணெய் ஊற்றும் அத்தனை வாய்ப்புகள் இருந்தாலும் அவர் எழுத்தில் அதை கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும்  அணுகுகிறார். புரட்சியை கலகத்தை  தன்னலம் கருதி எழுதி ஆதாயம் அடையும் எழுத்தாளரின் கட்டைவிரலை எமன் எடுத்துக் கொள்ளும் இவரது கதை ஒன்று உண்டு (கட்டைவிரல்). ஏகலைவனின் கட்டைவிரலை மட்டும் பேசிக் கைத்தட்டல் பெறும் எழுத்துலகில் எழுத்தாளர்களின் கட்டை விரலையும் பற்றிப் பேசிய என்.கே.ரகுநாதன் என்கிற அந்தக் கலகக்காரரின்  "கட்டைவிரல் ரேகை" இந்தத் தொகுப்பின் கதைகள் வழி தமிழ்நிலத்திலும் பதிக்கப்பட்டிருக்கிறது.


எஸ்.ராவுடன் ஒருநாள்

 எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை வாசித்தி்ராமல் ஒருவர் நவீன இலக்கிய வாசகராக இருக்கவியலாது என்றே சொல்லலாம். நவீன இலக்கியம் என்றால் என்ன என்று தெரியாமல் கூட அவரது துணையெழுத்து வழியாக அவரை அறிந்தவர்கள் அவ்வாறு வாசகரானவர்கள் கூட இருக்கலாம். எஸ்ரா அவர்கள் எழுதியுள்ள புத்தகங்களின் / பக்கங்களின் எண்ணிக்கை மிகுதியானது. அவரது அனைத்து நாவல்களையும் முன்னூறுக்கும் மேற்பட்ட  சிறுகதைகளையும் துணையெழுத்து முதல் மறைக்கப்பட்ட இந்தியா வரையிலான கட்டுரைத்தொடர்களையும் வாசித்திருக்கிறேன். இருப்பினும் நான் வாசிக்காத அவரது புத்தகங்களின் எண்ணிக்கை அதைவிட மிகுதி. இதுவே அவரிடம் கண்ட முதல் பிரமிப்பு.

ஒரு வாசகராகவும் இன்றைய எழுத்து வரை படித்து அதுகுறித்து எழுதியும் வருகிறார்.




நற்றுணை கலந்துரையாடலில் எஸ்ரா அவர்களின் புத்தகங்கள் குறித்து உரையாடலாம் என்று ஆலோசிக்கத்  துவங்கினால் ஏதோ ஒரு புத்தகத்தை என அனைவரும் அவரை வாசித்திருந்தனர்.  அனைவருக்கும் கூற ஏதோ ஒன்று இருந்தது. ஆகவே ஒருநாள் முழு  அமர்வுதான் சரி என தோன்றியது. அதுவுமே போதாது என அன்றைய தினம் தோன்றியது. ஒருமணி நேர நிகழ்வை (எஸ்ராவுடன் வாசக கலந்துரையாடல்) நேரம் கருதி இன்னொரு  நாளுக்கு ஒத்திவைக்க வேண்டியிருந்தது.






யாவரும் பதிப்பகமும் ஆர்வமாக இணைந்து கொண்டனர். எஸ்ரா அவர்களும் ஒப்புக் கொண்டார். பிறகு நிரல் தயாரித்து சிறுகதைகள், நாவல், அயல் இலக்கியம், திரைப்பட நூல், பயண நூல், ஆளுமை என பல தலைப்புகளில் அமர்வுகள் ஒருக்கப்பட்டன. நான் 'கர்னலின் நாற்காலி' என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள 'எஸ்ரா குறுங்கதைகள்'  குறித்து பேசினாலும் மேற்சொன்ன அனைத்து தலைப்புகளிலும் பேச விஷயங்கள் இருந்தன. ஆகவே அவர் ஆளுமை முதல் நாவல் சிறுகதை கட்டுரை என தொட்டு குறுங்கதையில் வந்து நிறைவு செய்தேன். பேசிய பிற அனைவருக்கும் அப்படியே. இறுதியாக பேசிய கவிதைக்காரன் இளங்கோ அவர்கள் துயில் நாவலை தன் சொந்த அனுபவத்துடன் ஒப்பிட்டு கூறினார். வசந்தபாலன் வெயில் குறித்து கூறினார். அவ்வாறு அனைவருக்கும்  புனைவிற்கு வெளியே அவர் கதைகளுடன் இணைக்கும் அனுபவம் ஒன்று இருந்தது வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது.

மிகவும் உற்சாகமும் நிறைவும் அளித்த நாள்.  துவக்க உரையே சரவெடியாக இருந்தது.  நீதியரசர் சந்துரு அவர்களின் உரை. அடுத்து தோழர்.எஸ்.ஏ.பெருமாள் அவர்களின் உரை. மாணவர் மீதான ஆசிரியரின் பெருமிதம் வெளிப்பட்ட உரை அது. எஸ்ரா அவர்கள் காதல் திருமணம் செய்தவர் என்பது அன்றுதான் தெரிந்தது. அடுத்து எஸ்ரா அவர்களின் படைப்புகள் மீதான வாசக / எழுத்தாளர்களின் உரை துவங்கியது.

சுரேஷ் பிரதீப் உரையுடன் துவங்கி கவிதைக்காரன் இளங்கோ உரையுடன் நிறைவுபெற்ற அந்த உரைகளில் 14 பேர் பேசினோம். ஒவ்வொரு அமர்வு நிறைவடைந்தவுடன் அது குறித்து எஸ்ரா அவர்களும் பேசினார். இறுதியாக ஏற்புரையும் வழங்கினார். துவக்கம் முதல் இறுதிவரை வாசகர்கள் அரங்கில் இருந்தனர். 130 வாசகர்கள் வரை முழுமையாக நாள் முழுதும் அமர்ந்திருந்தனர். 




பெரும்பான்மை வாசகரை இலக்கியத்திற்குள் அழைத்து வந்த ஆசிரியருக்கு எங்கள் அன்பை தெரியப்படுத்தக் கிடைத்த வாய்ப்பு  அந்த நாள். அந்த நல்வாய்ப்பை நல்கிய அனைவருக்கும் அன்று இடைவெளி விட்ட சென்னை பெருமழைக்கும்  நன்றி

 நிவேதனம் அரங்கின் முத்துகுமார் மற்றும் ஸ்ருதிடீவியை சேர்ந்த சுரேஷ் ஆகிய இருவரும் வாசகர்களுக்கும் நிகழ்விற்கும் உறுதுணையாக இருந்தனர். அவர்களுக்கும் நன்றி. நிகழ்வு மொத்தமும் ஸ்ருதி டிவியால் பதிவு செய்யப்பட்டுள்ளது.










Monday, November 8, 2021

வருங்காலத்திற்கான எழுத்து - எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி குறித்த உரையாடலின் எழுத்து வடிவம்

facebook  ல் உள்ள "வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்"  குழுவில் எழுத்தாளர்: இந்திரா பார்த்தசாரதி குறித்து பேசினேன். அந்த உரையின் கட்டுரை வடிவம் இது 

உரையின் youtube link :- https://www.youtube.com/watch?v=PnU__6FWmm8&t=2151s

நன்றி:- Shruti TV Literature


வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழுவின் வழியாக பல புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்கிறேன்.  அதன் அடுத்தகட்டமாக நிகழும் அந்த மாதாந்திர கூடுகை மிகவும் உபயோகமான ஒன்றாக உள்ளது. மந்திரமூர்த்தி சார் உள்ளிட்ட, 'வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்' குழுவின் நிர்வாகிகளுககு அவர்களின் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் ஒருவராக என் நன்றிகள்.. வணக்கங்கள்!!!


வருங்காலத்திற்கான எழுத்து - எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி குறித்த உரையாடலின் எழுத்து வடிவம்

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி  குறித்து இதில் பேசுவது மகிழ்ச்சியானது. நான் வாசிப்பின் துவக்கத்தில் இருந்த போது அவரை  சிறிது வாசித்திருந்தேன். ஆனால் அவரை  தீவிரமாக நான் வாசிக்க ஆரம்பிக்கும்போது அவர் மிகவும் வியப்பளிக்கக் கூடிய ஒருவராக இருக்கிறார்.




இங்கு நாம் கவனிக்கும் ஒவ்வொரு நிகழ்வும் தனக்குப் பின்னால் பல பின்னல்களைக் கொண்டிருக்கின்றன. சித்தாந்த ரீதியில் / உணர்வு ரீதியில் /  இதுதான்  யதார்த்தம் அளவில் / இதுதான் அறம் என்று பல பின்னல்கள். ஒவ்வொரு சம்பவம் நடந்த பின்னாலும் இது ஏன் இப்படி நடக்குது என ஆராய்ந்தால் அதுக்கு பின் இதுதான் என கைநீட்டி சொல்ல முடியாத பல விஷயங்கள் இருக்கின்றன. ஒரு வலை போல அவை பிண்ணிப் பிணைந்து இருக்கின்றன.  இவ்வாறு அறிவும் உள்ளுணர்வும் கலந்து ஒன்றை அர்த்தப்படுத்திக்கொள்ள பார்க்கிறோம்.. ஆனால் அப்போது ஒன்று புரிகிறது.. அங்கு அதற்கும் மேலாக தனது தர்க்கத்துக்கு அப்பாற்பட்டு  ஒன்றும் நிகழ்ந்திருக்கிறது என்று.. அது தற்செயலா அல்லது விதிப்படியா என்று எல்லாம் போகவேண்டாம். மனிதர்களின் கையை மீறிய ஒன்று நிகழ்கிறது. நாம் அதை கவனிக்கிறோம்.. மீண்டும் இதை மனதில் வைத்தும் அடுத்த திட்டமிடலை நிகழ்த்துகிறோம். ஆனால் கண்டுக்கு புலப்படாத ஒன்று மீண்டும் வருகிறது.  எப்பொழும் ஒன்று இவ்வாறு நிகழ்ந்து கொண்டும்தான் இருக்கிறது.

சிலநடைமுறை உதாரணங்களையே பார்ப்போம். கோயிலுக்கு பக்கத்தில் வீடு வேணும்னு புறநகர் சொந்தவீட்டை விட்டுவட்டு   நகர் மத்திக்கு ஒரு வாடகை வீட்டை மாற்றிச் சென்ற ஒரு மாதத்தில்  அங்கிருந்த அண்டை வீட்டார் வழி கொரோனா வந்து பலியான ஒரு குடும்பத் தலைவர் உண்டு. தலைப்பிரசவம் தாய் வீட்லதான் நடக்கனும்  என்று வலுக்கட்டாயமாக ஊருக்கு  அழைத்து செல்லப்பட்டு அடுத்த இரு நாட்களிலேயே அவர்ரகள் இருந்த வீடு  சென்னை வெள்ளத்தில் மூழ்க கடவுள் காப்பாற்றினார் என்று சொன்னவர்கள்  உண்டு.  இது ஒரு தனிப்பட்ட நிகழ்வுகள். இவை தவிர பொதுவான நிகழ்வுகளுமுள்ளன. ஒரு போர் அல்லது கலவரம், இனப்படுகொலை  அல்லது ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு  அநீதி இழைக்கப்படும் போதும்  அவ்வாறே நிகழ்கிறது.   இந்திராகாந்தி கொலையை அடுத்த வன்முறை கோத்ரா சம்பவத்தை அடுத்த வன்முறை ராஜீவ்காந்தி கொலையானது என பல உதாரணங்கள் நமக்கு உண்டு.. அது மேற்சொன்ன பின் புலங்களில் பல  விதங்களில் விவாதிக்கப் படுகிறது.

இங்கே ஒரு அறிஞர் அல்லது மேதை  என்பவர் அவற்றை தனித்தனியாக அணுகுகிறார். இந்த குழப்பங்களினூடாக எது ஒருவரை அப்படி செலுத்துகிறது என்று ஆராய்கிறார். அது  அவற்றில் சம்பந்தமே இல்லாத ஒரு தனிமனிதனுக்கு எப்படி பாதிப்புகளை அளிக்கிறது என   சொந்த விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு அவற்றை விவாதிக்கிறார். உட்சபட்ச நேர்மையும் உளச்சான்றும் கொண்டு அலசுகிறார். பபுத்தகங்களிலோ  நிகழ்கால சம்பவமானாலும் அதன்மீதான தன் பார்வையை தர்க்கமும் உணர்வும் கலந்து வைக்கிறார். தமிழ் இலக்கியத்தின் அத்தகைய மாஸ்டர்களில் ஒருவரான இந்திரா பார்த்தசாரதி அவர்கள் குறித்து சிறுகுறிப்பு வரைக என்று என்னை யாராவது கேட்டால் மேற்சொன்னவாறுதான் துவங்குவேன்.. நான் அறிந்த வரையில் அவர் 15 நாவல்கள், 15 நாடகங்கள் மற்றும் 86 சிறுகதைகள் எழுதியுள்ளார். நான் அறிந்த வரையில் என்று என் சொல்கிறேன் என்றால் சென்ற புத்தக கண்காட்சியில் அவர் எழுதியிருந்த ஒரு புதிய நாவல் எனது கைகளுக்கு கிடைத்தது. இணையத்திலோ அல்லது ஆசிரியரின் பிற புத்தகங்கள் என அவரது புத்தக அட்டை குறிப்புகளிலோ அது இல்லை. ஆகவே என் லேட்டஸ்ட்  பட்டியலைத்  தாண்டிய ஒன்றும் எங்காவது இருக்கும் என்றே நம்புகிறேன் 

இந்த உரையின் வழி நான் அவரை தொகுத்துக் கொள்ளவும், புதிய வாசகர்கள் அவரை அணுகவும் அவரை  ஏற்கனவே முழுதாக வாசித்திருப்பவர்கள் மற்றும்  பிற எழுதித்தாளர்கள்  கலந்துரையாடவும் ஏற்ற ஒன்றாகவே இந்த குறிகிய நேரத்தில் கொண்டு செல்ல விரும்புகிறேன் 

இந்திரா பார்த்தசாரதியின் அணுகுமுறை என்பது பெரும்பான்மையாக தர்க்கமும், சைக்காலஜியும் அதற்கு பின்புலத்தில்  தத்துவமும் கலந்த ஒன்றாக உள்ளது. கூடவே எவ்வளவு தீவிரமான விஷயத்தை பேசினாலும் அதில் இழையோடும் மெலிய நகைப்பும் உண்டு. இந்த நகைப்பு என்பது தான் குறிப்பிடத்தக்கது என்று நினைக்கிறேன். நீ எவ்ளோ சீரியாசமாக பேசினாலும் சம்பந்தமில்லாத எதோ ஒன்று எங்கிருந்தோ வந்து எல்லாவற்றையும் மாத்திப்போடும்னு தெரிந்த ஒருவனால் அதையும் கருணையும் நகைப்பும் கலந்துதான் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். அவரிடம் வெளிப்படுவது அந்த நகைச்சுவைதான் தவிர அபத்த நகைச்சுவை அல்லது வாசகருக்கு கிச்சு கிச்சு மூட்ட வேண்டிய என்னமோ இல்லை. மேலும் வாசகருக்கு ஒரு ட்விஸ்ட் காண்பித்து வியக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏதும் இல்லை. இ.பாவிடம் கவனிப்பது அனைவரும் நம்பும் ஆதாரங்களுக்குள்  ஒரு மந்தமான  புள்ளியையையும் இணைப்பதுதான்.

உதாரணமாக, கீழ்வெண்மணி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட குருதிப்புனல் நாவலில் நாவல் முழுவதும் பண்ணையார் ஒருகொடுங்கோலனாக வருகிறார். தவறு மொத்தமும் அவர் மீதுதான் உள்ளது இந்த இடத்தில் அவர் பொதுமனநிலையிலிருந்து நாவலில் எங்கும் மாறுபடவில்லை. அந்த விவசாயிகள் எரிப்பு சம்பவத்திற்கு முன்பாக அந்த பண்ணையாரை ஆண்மையற்றவன் என்று சொல்லும் இடம் வருகிறது. நான் வாசிப்பின் துவக்கத்தில் இருந்தபோது அந்நாவலை வாசித்திருக்கிறேன்.  அறிமுகத்தில் சொன்னது போல நான் தஞ்சை மாவட்டத்துக்காரன். கல்லூரி படிப்பு நாகப்பட்டினத்தில் நிகழ்ந்த்து. எனக்கு கீழ்வெண்மனி சோகத்தின் மீது தனிப்பட்ட ஆதங்கமும் உண்டு. அந்த சூழலில் குருதிப்புனல் நாவல் எனக்கு ஒரு ஒவ்வாமையை கூட அளித்தது என்று சொல்லலாம். வெளிவந்த காலத்திலும் அது விவாதங்களை கிளப்பியிடுக்கிறது. ஆனால் இஅப்போது வாசக்கையில் அந்த நாவலில் அவர் அந்த triggering  point ஐயும் ஏன் புனைவுக்குள் கொண்டுவருகிறார் என்று பார்க்கிறேன். அது அவருடைய பார்வைக்கு ஒரு உதாரணம். அந்த வசவு அவனைத்தூண்டியதாக சொல்லும்போது அது அந்த போராட்டத்தின் மாண்பை குறைக்கிறது என்று கருதவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த வசவு  இல்லையென்றால் அந்த எரிப்பு  நிகழ்ந்தே இருக்காது  என்றும் அவர் சொல்லவில்லை. அப்படி இருக்கையில் அதை  அவர் கதையல் வைப்பது  வெறுமனே வாசகரை யோசிக்க வைக்கத்தான் என்று கருதுகிறேன்.. 

உணர்ச்சிப் பூர்வமான வர்ணனைகளை கவனமாக தவிர்த்து எழுதுகிறாரோ என்றுமே தோன்றும்.

இங்கிருந்து அவரது எழுத்து பின்புலத்தற்கு செல்வோம்.

முற்போக்கு எழுத்துக்கள்  என்ற வகைப்பாடு தமிழ் இலக்கியத்தில்  இருக்கிறது.  அது முற்போக்கு அரசியல் ரீதியான எழுத்துக்களாக உள்ளன. அதில் பங்காற்றுபவர்கள் முற்போக்கு எழுத்தாளர்கள் என்கிற அடையாளம் உண்டு. அப்படியானால் தன்னை அவ்வாறு அறிவிக்காதவர்கள் முற்போக்கானவர்கள்  அல்ல என்று பொருள் அல்ல. ஒருவர் எழுதுகிறார் என்றாலே அவர் மீறுகிறார் என்பதுதான் பொருள். ஏற்கனவே இருப்பதை உரைப்பவர்கள் உரையாசிரியர்கள் தான் அல்லவா. எப்போது ஒருவர் எழுத வருகிறார் அப்போதே அவர் முன்னோக்கி பார்க்கத்தான் செய்கிறார். அந்த விதத்தில் நவீன இலக்கிய எழுத்தாளர்களில்  பிற்போக்காக எழுதும் ஒருவர் யாரும் என் கண்ணில் படவில்லை என்பதை இப்போது சொல்லிவிடுகிறேன். 

இதில் இ.பாவின் எழுத்து முற்போக்கு தத்துவங்களை அடிப்படையாக கொண்டது என்று சொல்லலாம். மார்க்ஸியத்தையும் இந்திய தத்துவங்களையும் அகடமிகலாகவே பயின்றிருக்கிறார்.  இலக்கியத்தில் அதை அவர் எங்கெங்கெல்லாம் வைக்கிறார் என்பதை காண்பது அவசியமானது. அது சுவாரசியமானதும் கூட. உதாரணமாக அவருடைய ராமானுஜர் நாடகம் முதலாழ்வார்கள் சந்திப்பில் துவங்குகிறது. அந்தக் கதை பரவலாக அறியப்பட்ட ஒன்றுதான். உபன்யாசங்களில் பக்திக் கதையாக உரைக்கப்படுகறது.  பலத்த மழையில் ஒரு குடிசையில் பொய்கையாழ்வார் கால் நீட்டி உறங்கிக் கொண்டிருக்க அங்கு பூதத்தாழ்வார் வருகிறார். ஆகவே இருவரும் அமர்கிறார்கள். பின் அங்கு பேயாழ்வார் வருகிறார். அப்போது அவர்கள் இருவரும் எழுந்து கொண்டு இனி மூவர் நிற்கலாம் என்கிறார்கள். அப்போது அங்கு கடவுள் வர திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்று பாசுரம் பாட ஆரம்பிக்கிறார்கள். இது பக்தி மரபு. அதுவே இப்படி யோசித்து பாருங்கள்….  இங்கே இருப்பதை பொதுவாக பங்கு கொண்டால் அங்கு இறைவன் உறையும் வீடு  என்பது பொதுடைமை சித்தாந்தம். இந்த அடிப்படை தான் அவருடைய புரிதல். ஒரு connectivityஐ establish செய்கிறார். 

இந்த மார்க்சிய அணுகுமுறையை அவர் வைப்பதால் அவர் படைப்புகளை வாசிக்கையில் பெரியதிறப்புகள் உண்டாகின்றன. ராமானுஜர் காலத்தில் வரும் சோழ மன்னன் சைவ வெறியால் வைணவரான ராமானுஜரை ஒழித்தான் என்று வருகையில், தன நாடகத்தில் அவர் அது வேறு விதமாக அணுகுகிறார். உண்மையில் ராமானுஜரை சைவர்கள் மட்டும்தான் எதிர்த்தார்கள் என்பதே தவறு.. அவரது சமகால வைணவர்களும் அவரை எதிர்த்தார்கள் என்பதை எடுத்துரைக்கிறார். சப்த விஷ்ணு வர்த்தனன் என்கிற பட்டப்பெயர் கொண்டு விளங்கிய அந்த சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன், வைணவரை பகைக்கவில்லை என்பதும் அவன் வைணவர்களை ஆதரிக்க வேண்டியே ராமானுஜரை தண்டிக்க முடிவே செய்தான் என்பதும் அவர் சுட்டும் இடம். காரணம் அவர் ஒரு்புரட்சியாளர். அரசுக்கு எதிரானவர். இன்றைக்கும் அப்படித்தானே.. விளையாட்டாக சொல்லனும்னா வைணவர்களுக்கு பெரும் எதிர்ப்பு சைவர்களிடமிருந்து வராது. அடுத்த கலை வைணவரிடமிருந்துதான் முதலில் வரும்.. இந்த யதார்த்த புரிதல் கொண்டவருக்கு ராமானுஜர் யாரால் கடுமையாக எதிர்க்கப் பட்டிருப்பார் என அறிவது கடினம் ஒன்றும் அல்ல

இ.பாவின் படைப்புகளில் ஒவ்வொரு பாத்திரங்களும் ஒவ்வொரு தரப்பின் சொற்களாக வருகிறார்கள். அதாவது அவருடைய குணாதிசயங்களை வைத்து ஒரு உரையாடலாக நிகழ்கிறது. துவக்கத்தில் ஒன்றாக துவங்கி பின் உரையாடல் அனுபவங்கள் வழியாக மாறி பின் நாவல் இறுதியில் வேறொன்றாக மாறுகிறார்கள். அவர்கள் தான் ஏன் அவ்வாறு இருக்கிறேன் என்று உணரவும் அதையும் விவாதிக்கவும் செய்கிறார்கள். ஆகவேதான் அவரை அறிவுத்தரப்பாகவே பெரும்பாலும் அணுக முடிகிறது. Intellectual approach அதிகம் இருக்கிறது. அந்த வகையில் அவர் நாவலில் செய்வது என்னவென்றால் ஒரு கருத்து பரிமாற்றம்தான் என்று சொல்லலாம். ஆகவே அது அன்றாட சிக்கல்களுக்குள் இருப்பதும் இல்லை. அன்றாட சிக்கல்களுக்குள் ஆட்படும் ஒருவருக்கு இ.பா. அந்நியமாகவே ஆகிவிடுகிறார். அதற்காக இந்த நாடு எங்கே போகிறது என்று கவலைப்படவும் தேவையில்லை. சும்மா ஒருநாள் மொட்டைமாடியில் உட்கார்ந்து traffic ஐ பார்த்து இத்தனை பேர் எங்கே போகிறார்கள் என்று யோசிப்போம் அல்லவா.. அந்த மாதிரி உட்கார்ந்து யோசிப்பவராக இருந்தாலும் போதும்.. அன்றாட சிக்கல் அல்லாத ஆனால் அந்த மனோத்ததுவ குழப்பங்களும் மற்றும் சித்தாந்த குழப்பங்களும் கலந்தவர்களாகத்தான்  கதாபாத்தரங்களை அவர் உருவாக்குகிறார்.  ஏன் குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால் அன்றாட சிக்கல் இல்லாதவர்களின் கதை என்றால் பொருளாதார ரீதியாக அப்பர் மிடில்கிளாஃ் வாழ்க்கை என்று எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்குத்தான்.   ரெண்டு பாத்திரங்கள் பேசுகின்றன என்றால் அவை வேறு சிந்தனை வயப்பட்டவர்களாக இருப்பார்கள்.. தன்முனைப்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர் பழம் விற்கும் பாட்டியாக இருந்தாலும் சரி. ஹலோ சொன்ன பிறகு உடனே ஒரு அறிவார்ந்த உரையாடலுக்குள் இறங்கிவிடுவார்கள். அவர்கள் உரையாடவில்லை என்றால் கதைசொல்லி தானாக ஒரு போஸ்டரையோ எதையோ வைத்து இழுத்தும் விடுவார். நவீன சமூகம் சார்ந்து என்றல்லை வரலாற்றை எழுதுகையில் கூட அப்படித்தான்

இப்பொழுது நாம் ஒளரங்கசீப் நாடகத்திற்கு வருவோம். அதை வாசித்து முடித்தபின் தோன்றியது யாதெனின், ஒருவேளே ஒளீரங்கசீப்பிற்கு பதிலாக அவரது அண்ணன் தாரா ஆட்சியமைத்திருந்தால் இன்றைக்கு இந்தியா எப்படி ஆகியிருக்கும் என்பதே. ஆங்கிலேயர்கள் கால்பதிக்கும் காலத்திற்கு சற்று முன்பு நிகழ்ந்த ஒளரங்கசீப்  ஆட்ச்சிதான்  இன்று நாம் எதிர்கொள்ளும் மதப்பிரச்சனை சுதந்திர இந்தியாவின் பிரிவினை என பல விஷயங்களுக்கு அடிப்படையாக அமைந்தது என்றே தோன்றுகிறது.  இன்று உருவாகியுள்ள்ள இந்துத்துவ வீர வழிபாட்டில் சத்ரபதி சிவாஜிக்கு தனித்த இதன் உண்டு. ஆனால் ஒளரங்கசீப்பிற்கு பதிலாக தாரா ஆண்டிருந்தால் சத்ரபதி சிவாஜிக்கான தேவையே கூட இல்லாமல் போயிருக்கலாம். இன்று உலகின் சிறந்த கிரிக்கெட் அணி உருவாகியிருக்கும். ஆனால் யோசித்து பார்த்தால் அன்றையகாலத்தில் ஒளரங்கசீப்பின் அரசும் பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொல்லப் பட்டிருக்கிறது. ராஜபுத்திரர்கள் அவருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். இந்து முஸ்லீம் ஒற்றுமையாக இருக்க விரும்பிய தாராவை வீட ஒளரங்கசீப்பை ஏன் மக்கள் விரும்புகிறார்கள் என்பது கூட கவனிக்க வேண்டிய ஒன்று. ஆனால் இன்று ஒளரங்ககசீப்பின் மீதான புரிதல் வேறு ஒன்றாகத்தான் உள்ளது. இந்த வேறுபாட்டை ஆராய்கிறார். ஒற்றை மதப்பிரசரம் கொண்டு ஒளரங்கசீப் சாதித்தது அதன் எதிர்தரப்பின் வளர்ச்சியை தான் என்கிறார். இறுதிக் காலத்தில் அதை அவருமே உணருவதாக நாடகம் நிறைவடைகிறது.




இவ்வாறுதான் அதற்கும் முந்தைய ராமானுஜர் காலத்தையும் அதற்கும் முந்தைய மகாபாரத காலத்தையும் எழுதியுள்ளார். அந்த விதத்தில் அவருடைய கிருஷ்ணா கிருஷ்ணா நாவலை மஹாபாரதம் மீதான அவருடைய  மார்க்சிய  critic  என்றே கருதலாம். கம்சன் ராதை குறித்து அவர் சொல்வது தத்துவ அணுகுமுறை என்றால்  சத்ரிய அரசு குறித்து அவர் சொல்வது எல்லாமே அரசியல் அணுகுமுறை. பக்திக்கு அப்பாற்பட்டு நிற்கும் நாவல் என்றும் சொல்ல முடியாது. அவருடைய கிருஷ்ணா கிருஷ்ணா நாவல் பக்தியையும் தத்துவார்த்தமாக வரையறுக்கிறது.

நான் இதுவரையில் சொன்ன இந்தப் பின்னணி அவரை அணுகுவதற்கு உதவியாக இருக்கும் என்றே கருதுகிறேன். அவருடைய நாவல்களில் தந்திரபூமி, குருதிப்புனல், கிருஷ்ணா கிருஷ்னா மேலும் சில சிறுகதைகள் ஒளீரங்கசீப் மற்றும் ராமானுஜர் ஆகிய நாடகங்களை இந்த உரையாடலுக்கான மறுவாசிப்பு செய்தேன்.  புத்தக கண்காட்சியில் எதிர்பாராத விதமாக வாங்கிய ஏசுவின் தோழர்கள் என்னும் நாவலை முதல்முறையாக இவ்வருடம்தான் வாசித்தேன். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் அந்த நாவலை எடுத்து வைத்திருந்தார். அவர்தான் இதை வாங்கி வாசிக்கவும் சொன்னார். எனக்கு இப்படி ஒரு நாவல் அவர் எழுதியிருப்பதும் அன்றுதான் தெரியவந்த்து.  முன்பே கூறியது போல இந்நாவல் அவரது படைப்பு பட்டியலில் இல்லை. ஆனால் இன்றைய  உரையாடலுக்கு தேர்ந்தெடுத்ததற்கு காரணம், இந்நாவல் அவரது வழக்கமான அணுகுமுறையிலிருந்து மாறுபட்டதாக தோன்றியதுதான். ஏசு என்னும் ஆன்மீகமும் தோழர்கள் எனும் கம்யூனிசமும் கலந்த ஒன்றுதான் என்றாலும் அது  ஒரு odd man out என்பார்கள் அல்லவா அப்படியான நாவல்தான்..

நான் இதை சொல்லும்போது ஒரு பகடி இருக்கிறது இந்நாவல் எழுதப்பட்டது 1985ல், அதற்குப் பிறகு அவர் எழுதியதை முதலில் வாசித்திருக்கிறேன். ஆனால் இந்நாவலை இப்பொழுதான் வாசிக்கிறேன். ஆகவே முன்பு சொன்னதை மாற்றி சொல்லலாம்..  அவரது பிந்தைய படைப்புகளை விட இதில் உணர்ச்சி கூடுதலாக இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். பொதுவாக  அவர் படைப்புகளில் intellectual discussion இருக்கும்.. உணர்ச்சிகரமான பகுதிகள் அதைவிட குறைவாக இருக்கும்.  இந்நாவலில் கூட அத்தகைய சித்தாந்த வரலாற்று ரீதியிலான அலசல்கள்தான் மையம் என்றாலும் அதன் உணர்ச்சிப்பூர்வமான பகுதிகள் ஆங்காங்கு இருக்கின்றன. 

ஒரு படைப்பு எப்பொழுது செவ்வியல் அந்தஸ்து பெறுகிறது என்றால், அது எழுதப்பட்ட காலத்திற்கு பின்பும் வாசிக்க பொருத்தப்பாடு இருப்பது போல உள்ளது தான். அந்த விதத்தில் இ.பா வின் சிறுகதைகள் நாவல்கள் நாடகங்கள் எல்லாம் இன்றைக்கு வாசிக்கும்போதும் சமகால பொருத்தம் இருக்கிறது. ஒளரங்கசீப்பின் ஒற்றை மத நோக்கு சமகாலத்தில் விதந்தோத பட்டாலும் பிற்காலத்தில் எப்படி பார்க்கப்படுகறது என்பதை பார்க்கிறோம். கொரானா காலத்தைப் போல அவருடைய பிளேக் கால கதைகளும் இன்று பொருந்தி வாசிக்க முடிகிறது. 

அந்த விதத்தில் ஏசுவின் தோழர்கள் நாவல் போலந்தில் நிகழும் கதை. போலந்து பல உலக இலக்கியங்களிலும் உதாரணமாக எடுத்து கையாளப்பட்டட பிரதேசம். ஐசக் பால்வ்யேஷ் சிங்கரின் ஷோஷா நாவல் நினைவுக்கு வருகிறது. போலந்திற்கு பணிநிமித்தம் செல்லும் ஒரு கல்லூரி விரிவுரையாளர் எதிர்கொள்ளும் நிகழ்வுகளும் மனிதர்களும்தான் இந்த நாவல் . இதற்குள் மேலை தத்துவம் கீழை தத்துவம் அங்குள்ள அரசியல் இங்குள்ள அரசியல் என எல்லாம் கலந்து ஒரு சித்திரம் எழுந்து வருகிறது. முன்பே சொன்னது போல தர்க்கத்திற்கும் அப்பாற்பட்ட ஒன்று கலந்து இந்நாவல் நிறைவடைகிறது. இ.பாவின் நகைப்பு முன்னுரையிலிருந்தே துவங்கி விடுகிறது. அது இவ்வாறு துவங்குகிறது. அவர் போலந்திற்கு போவதற்கு முன்னால் இந்திய அரசு அவரிடம் ஒரு சுய கையொப்பமிட்ட சான்றிதழ் கேட்கிறது. "நான் பைத்தியம் இல்லை.."  என்கிற சான்றிதழ் வேண்டும் என்கிறார்கள் என்கிறார். ஆரம்பத்தில் நான் அதிர்ச்சி  அடைந்தாலும் போலந்து சென்று சேர்ந்தபின் பாரத தேசம் தவறிப்போய் செய்தெ சில புத்திசாலிதங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்று தோன்றியது என்கிறார் 

போலந்து மீது பற்றும் தாயநாடான இந்தியா மீது ஒருவித ஒவ்வாமையும் கொண்டு விளங்கும் டிஎன்டி. அவரது போலந்து மனைவி டெல்லியில்  பயணம் செய்த காலத்தில் வன்புணர்வு செய்யப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டு இறந்தவர். அவரது மக்கள் ஆஷா மேலும் அவர்களின் உறவுக்கார பெண். இவர்கள் தவிர சில உள்ளூர் `நண்பர்கள் கொண்ட நட்பு சூழல் புரொபஸருக்கு வாய்க்கிறது.வெவ்வேறு இயல்புகள் மற்றும் சிந்தனைகள் கொண்ட ஒவ்வொருவரும் நாவல் முடியும் தருவாயில் எவ்வாறு மாறிவிடுகிறார்கள் என்பதைக் காணலாம்.  பொதுவாகவே இப்பாவின் நாவல்களில் கதை சொல்லியின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம் தெரிவதில்லை. தந்திரபூமியின் நாயகன் தன இயல்பை மாற்றிக் கொள்வதுண்டு. குருதிப்புனலிலும் ஏசுவின் தோழர்களிலும் அவன் கிட்டத்தட்ட ஒரு பார்வையாளராகத்தான் வருகிறான். ஏசுவின் தோழர்கள் நாவலின்  இறுதியில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு வித தெளிவு பெற்று பொருந்த, தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட ஒரு விபத்து நிகழ்ந்து நாவலை முடித்து வைக்கிறது.

இந்தியா மீது வெறுப்பு கொண்டிருந்த ஆஷா மாறுவதும், கடினமான நபர் என்று கருதிய டிஎன்டி  மரணம் நிகழும் தருணனும் உணர்ச்சிகரணமான இடங்கள். இந்த நாவலுக்கு இடையே இ.பா வைக்கும் சில வசன தெறிப்புகள் / observation கள் கவனிக்கத்தக்கவை.

மனைவிமீதான தனிப்பட்ட கோபத்தால் எதிர் அரசியல் சார்புநிலை ஒருவன் எடுக்கிறான். தனிப்பட்ட கோபம் சம்பந்தப்பட்ட ஒருவன் அரசியல் தலையெழுத்தை மாற்றுவதை கூறுகிறார்.. நம்ம நாட்டுக்கு எவ்ளோ பொருத்தம்!!! இதுபோல போலாந்துக்காரர்களுக்கும் இந்தியாவிற்குமான முக்கியமான ஒற்றுமையாக பலவற்றை குறிப்பிடுகிறார்.. மிக முக்கியமாக நேரந்தவறாமை. இருவரும் சொன்ன நேரத்திற்கு வருவதில்லை.

எங்கள் ஊரில் சுதந்திரம் பெற்ற பிறகு முதல் அதிபரை நாங்கள் கொன்றோம் என்று ஒருவர் வருத்தம் தொனிக்க ஒருவர் புரொபசரிடம் கூற, அவரிடம் புரொபஸர் சொல்வார்.  இதென்ன பிரமாதம் நாங்கள் எங்களுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த்தவரையே கொன்னிருக்கோமே என்று

"இந்தியாவின் தேசியமொழி இந்தி. ஆனால் நாங்கள் தமிழில் பேசினால்தான் நீங்கள் மதிப்பீர்கள்" என்று ஆஷா கூறும்போது "தமிழும் இந்தியாவில் ஒரு தேசியமொழிதான்.." என்று பதிலளிப்பார். ஸொமோட்டாவில் French fries ஆர்டர் செய்த போது  இந்த கட்டுரையில் இந்த வரியை எழுதிக் கொண்டிருந்தேன்.. அந்தளவிற்கு அது சமகால பிரச்சனையாகவும் உள்ளது. அந்த மொழிசார் அடையாளம் சார்ந்த விவாதங்கள் அதற்குள் எழும் தனிமனித விழைவுகள் எல்லாமே அதைவிட அதிகமாக  இன்று சோஷியல் மீடியாவில் புழங்கி வருவதை காண்கையில்  அந்த பொருத்தம்  இருக்கத்தான் செய்கிறது.

நமக்கு என்னவொரு பற்று  இருக்கிறது என்று நாம் பெருமை படவும் முடியாது. ஏனெனில் அடுத்த வரி அப்படி வரும்..

போல்விஷ்  மக்களைப்போல இந்தியர்களும் முரண்பாடு மனநிலை கொண்டவர்கள். தேசியம் நாட்டுப்பற்று என்றெல்லாம் பேசிக்கொண்டு ஆனால் போலந்தை விட்டு எப்போது வெளியேறலாம் என்று ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருப்பது போல்விஷ் மக்களின் இயல்பு. பாரதமாதா என்று நாட்டை தாய் ஸ்தானத்திற்கு உயர்த்திவிட்டு வரதட்சணை காரணமாகப்பெண்களை தீயிலிட்டு எரிப்பது பாரத பண்பாடு. 

ஒரு உபநிஷத வரி உண்டு.. குடஹாசம் மடஹாசம் என்று.. அந்த வானத்தில் இருப்பதுதான் இந்த குடத்திலும் இருக்கிறது என்பது பொருள்.. இ.பா. வின் எழுத்துக்கள் அத்தகையவையே.. அவர் சொல்வது தனிமனிதனின் பிரச்சனை அல்ல.. ஒட்டு மொத்த ஜனத்திரளின் அலசல் அவர் செய்வது. ஆகவே அவர்கதையில் ஒரு பாத்திரத்தை நாம் புரிந்துகொண்டால் அதை விரித்து எடுத்து ஒரு சமுதாய அமைப்பை நாம் புரிந்து கொள்ள முடியும். முகம் தெரியாத அன்பு முகம்தெரியாத கோபம் மக்களிடையே இருக்கிறது. நம்மை ஆள்வது நாமா, சித்தாந்தமா அல்லது அடுத்தவரின்  சுயநலமா என்று அவர்களுக்கு தெரியவில்லை. இது ஒவ்வொரு மனிதனின் பிரச்சனை ஆனால் அவர்கள் எளிய மனிதர்கள்தான். சிலுவையுடன் சுத்தியும் அரிவாளும் கொண்டு ஏசுவின் வருகைக்காக காத்திருக்கும் தோழர்கள் என்று சொல்கிறார்..




தீபாவளி என்பதால் அது சம்பந்தமான உதாரணத்தோடு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். இ.பா தன் ஒவ்வொரு படைப்புகளிலும் வாசிப்பவர் சிந்தனைக்குள் மெல்ல திரியை கிள்ளி  சிறிது பற்ற வைக்கிறார்.. அதை உள்வாங்கும் வாசக மனம் ராக்கெட்டாக இருந்தால் மேலே உயர்ந்து சென்று சிதறுகிறது. பிஜிலியாக இருந்தால் இருந்த இடத்திலேயே சிதறுகிறது. எவ்வாறானாலும் சிதறல் மட்டும் நிச்சயம். ஆகவே நீங்கள் அவரை வாசித்திருக்காத பட்சத்தில் இப்போது வாசிக்க துவங்கலாம். முன்பே வாசித்திருந்தால் இன்று மறுவாசிப்பை துவங்கலாம். ஏனெனில் அவருக்கான தேவை உள்ள காலத்தில் நாம் இருக்கிறோம். அவர் எழுதிய காலத்தில் அவர் எழுத்தாளர்களுக்கான எழுத்தாளராகத்தான் இருந்திருப்பார் என்று நம்புகிறேன். இப்போதுதான் அவர் வாசகர்களுக்கான எழுத்தாளராக எழுந்து வருகிறார் என்பது என் கருத்தாகும்.

ஒருவரது வாழ்நாள் என்பது அவர் எத்தனை காலங்கள் உலகிற்கு பயன்படுகிறார் என்பதில் இருந்து கணக்கிடப்படுகிறது என்று ஒரு பார்வை உண்டு. அப்படிப்பார்த்தால் வள்ளுவரின் ஆயுள் இன்னும் எத்தனை ஆண்டுகளாக இருக்கும்? அவருக்குப் பின் வந்த கவிராயர்களின் ஆயுள் முடிந்து போயும் அவர் இன்றும் புதிதாக கண்டடையப்பட்டுக்கொண்டே இருக்கிறார் அல்லவா? எனக்கு இ.பா குறித்தும் அப்படித்தான் தோன்றுகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் வாட்சப் குழுவிற்குள் சித்தாந்த விவாதங்களில் இறங்குவதை சமீப காலமாக பார்க்கிறேன்… உணர்கிறேன். ஒரு குடும்பத்தில் சீர் வரிசை முறையில் சண்டை வரலாம்.. ஒரு நண்பர்கள் குரூப்பில் சினிமாவிக்காக காதலுக்காக சண்டை வரலாம்.  ஆனால் அலுவலக குரூப்பில் கூட சித்தாந்த சண்டைகள் நிகழும் காலத்தில் நாம் இருக்கிறோம். அரசு,  சமூகம் சார்ந்த எந்த ஒரு சிறிய செயல் கூட அது எந்த சித்தாந்தம் எந்த மரபு எந்த மண்ணுக்கு உரியது என்று நாட்கணக்கில் விவாதிக்கப்படுகறது.  இ.பாவிற்கான தேவை எழுதப்பட்ட காலத்தைவிட இப்போது பெருகியுள்ளது என்றே நான் நினைக்கிறேன். அடுத்த நூறாண்டுகளுக்கு அவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் நம் உரையாடல்களில் இடம்பிடித்துக்கொண்டே இருப்பார். இந்த அமர்வு அதற்கான ஒரு துவக்கப்புள்ளியாக இருக்கும்..

 அனைவருக்கும் நன்றி!!



ஆள்தலும் அளத்தலும் - ஆனந்த விகடனின் மதிப்புரை

ஆனந்த விகடன் வழியாகத்தான் வாசிப்பு துவங்கியது. அதன் தொடர்கள் வழியாக இலக்கியமும் தொற்றிக்கொண்டது. ஆதர்ச எழுத்தாளர்களும் அறிமுகமாயினர். இன்றைக்கு வெளியாகியுள்ள ஆனந்த விகடனில் (28-10-2021) எனது "ஆள்தலும் அளத்தலும்" சிறுகதை தொகுப்பு குறித்த மதிப்புரை, அதன் படிப்பறை பகுதியில் வந்துள்ளது. இது மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றி Ananda Vikatan

Link:- https://www.vikatan.com/arts/literature/book-review-3



ஆனந்த விகடனின் மதிப்புரை

 தமிழ்ச் சிறுகதைகளில் மொழியையும் கதைசொல்லலையும், நவீன காலத்தின் அலைக்கழிப்பான வாழ்வியலையும் நேர்த்தியாகச் சொல்லத்தெரிந்த கதைசொல்லிகளில் ஒருவர் ஆர். காளிப்ரஸாத். இவரது `ஆள்தலும் அளத்தலும்' என்னும் பத்துக் கதைகள் கொண்ட தொகுப்பு பதாகை வெளியீடாக வந்துள்ளது.


காளிப்ரஸாத், மரபான உணர்வுபூர்வமான தருணங்களை எப்படிக் கதைகள் ஆக்குகிறாரோ அதேபோன்று சிக்கலான விஷயங்களையும் மிக அநாயாசமாகக் கையாள்கிறார். குறிப்பாக, இன்று பலரும் எழுதத் தயங்கும் அல்லது எழுத விரும்பாத விஷயங்களை மிக நுட்பமாகக் கையாள்கிறார். அப்படி ஒரு கதைதான் `ஆர்வலர்.' குத்தூஸ் என்பவரை மையமாகக் கொண்ட இக்கதை, பிற உயிர்களின் மீதான அன்பு குறித்துப் பேசுகிறது. மதம் எப்படி ஒவ்வொரு மனிதருக்குள்ளும் அன்பை சவாலாக்குகிறது என்னும் எக்காலத்துக்குமான பிரச்னைதான் கதை. ஒரு வார்த்தை தவறாக மாறியிருந்தாலும் பெரும் சிக்கலாக உருவெடுக்கும் கதைக்களம். ஒருவகையில் சமகால அரசியலை மிக அழகாக விளக்கும் கதை அது.


`விடிவு' நவீன இளைஞனின் மனதையும் அது எதிர்கொள்ளத் தயங்கும் தருணங்களையும் விவரிக்கிறது. நண்பன் ராஜாவின் விபத்து மரணத்துக்குத் தான்தான் காரணம் என்று வருந்தும் நண்பன் ரவியின் மனத்துயரை ராஜாவின் தாய் தீர்த்துவைக்கும் முடிவு ஒரு செவ்வியல் தருணம்.


இத்தொகுப்பின் பல கதைகளிலும் சாமானியர்களே கதை மாந்தர்களாக இருக்கிறார்கள். பல கதைகளில் சொந்த ஊரிலிருந்து பணி நிமித்தம் வேறு ஊருக்கு வந்து அல்லல்படும் எளிய மனிதர்களே வருகிறார்கள். ஆனால் காளிப்ரஸாத் கதைகளில் பெண்களைத் தேட வேண்டியிருக்கிறது. பெண்களே இல்லாமல்கூட ஒருவர் படைப்புகளை எழுதலாம். ஆனால் கதைகளில் அவர்கள் உதிரிகளாக வந்துபோகிறபோது அது படைப்பின் நிறைவில் ஒரு சிறுகுறையாகவே படுகிறது. இந்தத் தொகுப்பில் ஒரு பெண் பாத்திரம்கூட மனதில் அமரவில்லை.


கதை மொழியாலும் மாறுபட்ட கதைக்களங்களாலும் நிறைந்திருக்கும் இந்தத் தொகுப்பு வாசக கவனம் பெற வேண்டிய ஒன்று.