Monday, June 23, 2025

மூன்றாம் பிறை

சந்திர தரிசனம் என நாள்காட்டியில் இருக்கும். அமாவாசை முடிந்த இரண்டாம் நாள் மூன்றாம் பிறையை பார்ப்பது ஒரு பழக்கம். அமாவாசை, பிரதமை முடிந்து துவிதியை இரவு பிறை தெரிந்து மறைந்து விடும். த்ரிதியையான முன்றாம் நாள் தெரிவதுதான் மூன்றாம் பிறை என்று எண்ணி நான்காம் பிறையை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்த நாட்களும் உண்டு. ‘நாலாம்பிறையை பார்த்தால் நாய்படாத பாடு படனும்’ என்பது  பழமொழி. மூன்றாம் பிறை மங்கலம்.  வளர்பிறையின் துவக்கம். ஆயிரம்பிறை கண்டவர் என எண்பத்தோராம் வயதில் அடியெடுத்து வைப்பவரை வணங்குவது மரபு. தமிழினி வெளியீடாக வந்திருக்கும் மூன்றாம் பிறை நாவல் அத்தகைய மங்கலமான தலைப்பையே கொண்டிருக்கிறது. நாவலை வாசித்து முடிக்கும் போது மனம் கனமாகிறது. இது ஒரு தேய்பிறை இருளின் சித்தரிப்பா அல்லது அமாவாசைக்கு அடுத்து வரும் நிலவின் கீற்றின் பிரதிபலிப்பா என்கிற எண்ணம் உருவாகிறது. இந்த தலைப்பு அங்கே ஒரு மெல்லிய ஆசுவாசத்தையே அளிக்கிறது. 

மூன்றாம்பிறை நாவலின் குறிப்பிடத் தக்க அம்சமாக அதன் நடையைச் சொல்லலாம். சுமார் 800 பக்கங்கள் வரை நீளும் நாவலை ஒரு வாரயிறுதியில் வாசித்து விடலாம் என்கிற அளவிற்கான ஒரு இலகுவான வாசிப்பை அளிக்கிறது. பள்ளி, நண்பர்கள், சுற்றம், என இதன் வாசகரும் இதை தொடர்புபடுத்திக் கொள்ள இயல்கிறது. ஒரு யதார்த்த நாவலின் இலகுவான வாசிப்பை தடைசெய்பவை தேய்வழக்கு, பொருந்தா உரையாடல், போலச்செய்தல் ஆகியவை. மூன்றாம்பிறை நாவல் தன்னுடைய உள்ளடக்கதாலும் நடையாலும் அதை எளிதாக வாசிக்க வைக்கிறது.

இந்த நாவலை வெவ்வேறு கோணங்களில் வாசிக்கலாம். காதரின் வாழ்க்கையாக, ஒரு காலகட்டத்தின் பதிவாக, ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியாக என பல கோணங்களில் வாசிக்கவும் பொருந்தக் கூடிய நாவல். முதிராத காதல்களின் /  நிறைவேறாத காதல்களின் தொகுப்பாகவும் இதை பார்க்கலாம். உதுமான் - பாரு முதல் துவங்கும் இந்த காதல் ஆட்டங்கள் தலைமுறைக்கும் தொடர்கிறது. கீற்றாக தெரியும் மூன்றாம் பிறை வளர்ந்து  பெளர்ணமியாக ஆகி நிறைய வேண்டும் என்கிற விதியில்தானே உலகம் இயங்குகிறது. ஆனால் எல்லா கீற்றும் வளர்வது இல்லை. கரோலின் வஹீதா காதர் இன்பா புவனா என அனைத்தும் கீற்றுக்கள்.  ஒருபக்கம் உதுமான் ராவுத்தருடைய வாரிசுகளின் நிராசைகள் தொடர்கின்றன. அதற்குக் காரணம் ஒரு பெண்ணின் சாபம் என்று கதையோட்டத்தில்  சொல்லப் படுகிறது. கூடவே எத்தனையோ ஆட்கள் சாபத்தையும் வாங்கி வளமாகவும் வாழவில்லையா  என்கிற கேள்வியும் நாவலில்  கதையோட்டத்திற்கு வெளியே  இருக்கிறது.



அடிப்படையில் ஒரு திமுக ஆளாக வீட்டிற்கு உதயசூரியன் பெயரும்  உணவகத்திற்கு பெரியார் பெயரும் வைக்கும் உதுமான் ராவுத்தரின் கடைசி பிள்ளையான காதரை மையமாக வைத்து அந்த குடும்பத்தின் மூன்று தலைமுறைக் கதையும், காதர் மையல் கொள்ளும் பெண்ணின் கதையும், அவனது நண்பர்கள் கதையும் ஆசிரியர்கள் கதையும் என நாவல் கிளைபரப்பி பரந்து விரிகிறது. ஒரு புதிய களம் என்றாலும் அந்தப் பாத்திரங்களுடன் வாசகமனத்திற்கு  உருவாகும் நெருக்கம் என்பது குறப்பிடத்தக்கது. இஸ்லாமய பாத்திரம் என்றால் அதற்கு தார்மிக ஆதரவு அல்லது உள்ளார்ந்த எதிர்ப்பு என இருமை நிலையில் பழக்கப்படுத்தி வரும் பொதுப்புத்தியை எதிர்கொள்ள இது அவசியம். அவற்றுடன் கதையோட்டத்தின்  நம்பகத்தன்மையை உறுதி செய்யும் அன்றைய நாட்டு்நடப்பு விஷயங்களும் உடன் வருகின்றன.  அது தோற்றத்தில் காதரின் நாவலாக தோன்றுகிறது  ஆனால் இறுதியில் சுபைதாவின் பாத்திரம் மையம் கொண்டிருக்கிறது. அவளது மூடத்தனமான / தாழ்வுணர்ச்சியான  பண்புநலனால் தனது குழந்தைகளின் மணவாழ்வு, கல்வி எல்லாம் பாதிக்கப் படுவதும் நாவலில் வருகிறது.

சுபைதாவின் வாழ்க்கையை தொகுத்துப் பார்த்தால் எஞ்சுவது அவளுக்குள் இருக்கும் நன்றி உணர்ச்சி மட்டும்தான். தனது மாமனாருக்கு அவள் வாக்குகொடுத்த சத்தியத்தை காப்பாற்ற செய்யும் யத்தனங்கள். வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக  இருளும் போது ஒவ்வொரு முறையும் கதறி அறற்றுவதும் பின்னர் கீற்றாக ஏதோ ஒன்றைப்  பற்றிக் கொண்டு தொடரும் சுபைதா ஒரு போராட்டகுணத்தின் வெளிப்பாடாக நிற்கிறாள். நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் இருக்கிறாள். துவக்கத்தில் அவளுக்கும் ஜைனத்தாவுக்கும் வர்க்கபேதத்தை தாண்டிய ஒரு நட்பு உள்ளது. ஒரு இடத்தில் அந்த வர்க்கபேதம் கரைந்து நட்பு மட்டுமே எஞ்சுகிற சித்தரிப்பு வரும் இடம் நாவலின் உச்ச கணத்தில் ஒன்று. அதை எளிமையான வரிகளில் கடத்திவிடுகிறார்.  வங்கியில் சுபைதா அவமானப்படும் நீண்ட சித்திரிப்பை விட விட அது காத்திரமாக நிற்கிறது.  

காதரது நண்பர்கள் குழாம் அவனது 'உதயசூரியன்' வீட்டில் சுதந்திரமாக உலவும் சித்திரம் துவக்க அத்தியாயத்தில் வருகிறது.  வீட்டின் செல்லப்பிள்ளை காதர். உதுமானின் பெரும்பான்மை சொத்துக்கள் கரைந்து போய் வீடும் கடையும் மட்டும் எஞ்சி நிற்கும் காலத்தில் பிறக்கும் காதர் பார்ப்பது தனது குடும்பத்தின் படிப்படியான வீழ்ச்சியை மட்டுமே. அது அவனுக்குள் உருவாக்கும் தயக்கம் கூச்சம் தாழ்வுணர்வு உன அனைத்து எதிர்மறை எண்ணங்களும் அவனது வாழ்வின் முக்கிய தருணங்களிலேயே அவனுக்கு எதிராக நிற்கின்றன. உறவினர் திருமணத்தில் உச்சகட்ட அவமானத்தை எதிர்கொள்ளும் போது அவன் காட்டுகிற எதிர்வினை பின் கரைந்து விடுகிறது. அதை எண்ணி மருகுகிறதே தவிர வீறு கொண்டு எழுவது இல்லை. அவனது இயல்பு என்பது அத்தகையதாகவே இருக்கிறது. 

அவனுக்கு எதிர் பாத்திரமான  பூங்குழலி அதற்கு எதிர்மறை குணம் கொண்ட சூட்டிகையான பெண். அவளது அந்த ‘எதையும் பொருட்பருத்தாத’ குணமே ஆபத்துகளில் இருந்து அவளைத் தற்காக்கிறது. அந்த குணத்தின் எதிர்மறை விளைவுகளையும் அவள் உணர்வதாகவே நாவலில் வருகிறது. துவக்கம் முதல் வரும் அவளது பாத்திரம் அதன் பின்னர் அவசரமாக முடிந்தும் விடுகிறது. அதுபோலவே நீட்டி சொல்லத்தக்கதான ரசாக் பாத்திரமும் துரிதகதியில் விலகிச் சென்றுவிடுகிறது. ரசாக் அதிகம் பேசுவதில்லை. அவனுக்குத் திக்குவாய் உள்ளது. ஆனால் நுணுர்கொம்புகள் உள்ளன. மிருக சுபாவம் உண்டு. ஆனால் அந்த சுவாரஸ்யமான பத்தி கதையின் போக்கில் அவ்வாறே கலைந்து போய்விடுகிறது


இத்தகைய யதார்த்த வகை நாவல்கள் குறிப்பாக பெருநாவல்களில் மனிதர்களின் குணங்களை நுட்பமாக அணுகிப் பார்ப்பதும்  மனிதகுலத்தின் முக்கிய கேள்வியை ஆராய்வதும் நிகழும்.  சில நாவல்கள் ஒரு காலமாற்றத்தை கண்முன் நிறுத்துகின்றன. சில படைப்புகள் ஒரு வாழ்வியலை நேரடியாகப் பதிவு செய்கின்றன.  

முறையே தமிழினியின் முந்தைய வெளியீடுகளான அஞ்சலை, வெறும் தானாய் நின்ற தற்பரம், மணல்கடிகை, ஆழிசூழ் உலகு ஆகியவற்றை இவற்றிற்கு உடனடி உதாரணங்களாக சொல்லலாம்.  அவ்வகையில் மூன்றாம்பிறை நாவல் ஒரு  குறிப்பிட்ட காலகட்டத்தையும் கூடவே ஒரு குடும்பத்தின் கதையையும் பதிவு செய்யும் நாவலாக உள்ளது. 


இந்திய முஸ்லீம் வாழ்க்கையை 1992 ம் ஆண்டை வைத்து கோடு கிழித்து இரு பாகங்களாக பிரிக்கலாம். முஸ்லிம் சமூகம் முற்றிலுமாக அரசியல் மயமாக்கப்பட்ட பிறகு இஸ்லாமிய குடும்ப கதையை எழுதுவது என்பது கறுப்பு வெள்ளையாக ஆகிவிட்டது. மாட்டுக்கறி அல்லது குண்டு வெடிப்பு என ஏதேனும் ஒன்றையாவது ஏற்றி வைப்பது நிர்பந்தமாகிப் போய்விட்டதோ என்று என்னும் அளவிற்கு படைப்புகளில் அவை பிரதிபலிக்கின்றன. மூன்றாம் பிறை நாவல் இந்த 1990க்கும் 2002 க்கும் இடையேயான பன்னிரெண்டு வருடக் கதை என்றாலும் இது இந்த அரசியல் வயப்படவில்லை. கதையில் அரசியல் கட்சிகள் வருகின்றன. காஃபிர், ஹராம் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப் படுகின்றன. ஆனாலும் அது அரசியல் கலக்காத நாவலாகவே உள்ளது. எந்த விதத்திலும் புறக் காரணிகள் கதையின் போக்கை மாற்றவில்லை. குடும்பக் கதையாக பால்யகால நினைவேக்கத்தை கொண்டு வருகிறது. முதலில் வஹாபியசம் கால் வைக்கும் போது நிகழ்ந்த ரசாபாசங்கள் என்ன அதன் ஊற்றுமுகம் யாது அதற்கான பலன் யாரை அடைந்தது போன்றவற்றை ஆராயவில்லை. ஆனால் குறிப்பால் உணர்த்துகிறது. காதரின் கையெழுத்து கற்பூரம் காட்டி கண்ணில் ஒற்றிக்கொள்கிற எழுத்து, ராவுத்தர் குணத்துல தர்மன் கொடுக்கிறதுல கர்ணன் போன்ற உதாரணங்கள் இயல்பாக புழங்குகின்றன. 


குடும்பத்தின் கதையைச் சொல்லும் போதும்  கூர்மையான சித்தரிப்புகள் ஊடாக ஒவ்வொருவரின் மனவோட்டத்தையும் கூறுகிறது. கவனமாக எடுத்துரைக்கிறது. வஹீதாவும் ஃபிர்தெளஸும், கொள்ளும் நட்பும் உரையாடலும் அந்த கச்சித சித்தரிப்பிற்கு உதாரணம். வஹிதாவின் மாற்றாளுமையாக வரும் மீரா மற்றொரு உதாரணம். ஆகவே நாடகீயமாக ஏதும் நடக்கவில்லை. ஆர்ப்பாட்டமாக ஏதும் சொல்லப்படவும் இல்லை. நாவலை முடித்த பின் ஓட்டிப் பார்க்கும் போது யார் எங்கிருந்து எங்கு வந்திருக்கின்றனர் என உணரமுடிகிறது. யார்மீதும் கோபம் எழவில்லை. தான் திருமணம் செய்து வாழ்ந்திருந்தால் காதரை அதட்டி கேள்வி கேட்கலாம் ஆனால் இப்போதைய நிலையில் எப்படி கேட்பது என வஹீதா தயங்குவதை சித்தரிப்பது மிக நுணுக்கமான இடம். வஹதாவை கைவிடும் இஸ்மாயில் சூழல்கைதியாக இருப்பதும் அத்தனை கோரமான முடிவுக்கும் பின்னரும் தெரிகிறது. மாற்றாக, பூங்குழலி வீட்டுச் சித்தரிப்பில் ஒரு அவரசமும் நாடகீயமும் மிகுந்து இருப்பதும் கவனிக்கத் தக்கது. அன்றாட செய்திகளிலும் பிற ஊடகங்களிலும் கண்ட தருணங்களின் பிரதிபலிப்பு உள்ளது. உதுமான் குடும்பத்தில் காணப்படும் இயல்புத் தன்மை பூவின் குடும்ப கதையை சொல்லும் போது அவசர நிலையும் இருமைத் தன்மையும் கொண்டுள்ளது. பூங்குழலியின் ஆளுமை வெளிப்படும் உச்சகட்ட தருணமாகவும் அது உள்ளது. மூலக்கதையான உதுமான் குடும்ப நிகழ்வுகளின் கையறு நிலையை கண்டு வெதும்பும் வாசக மனம் இந்த அத்தியாயத்தில்  பூங்குழலியின் ஆளுமையில் ஒருவித ஆசுவாசத்தை அடைகிறது என்றும் சொல்லலாம்.


நாவலை வாசிக்கையில் சினிமா மற்றும் கிரிக்கெட் விஷயங்கள் சம்பந்தப்பட்ட பெயருடன் வரும் போது அதன் சமகால ரசிகனாக ஒரு காலக்குழப்பமும் உருவாகறது. மற்றும் உருட்டு போன்ற பிற்காலத்திய சொற்கள் வரும்போது சற்று துணுக்குறலும் வருகிறது. ஆனால் இவையாவும் கதையின் போக்கை மாற்றத் தக்கவை அல்ல. அடுத்த பதிப்பில் சரிசெய்யத் தக்க எளிய உறுத்தல்கள். 


பட்டவர்த்தனமாக சித்தரிப்பதால் நவீன இலக்கியத்திற்கு எந்தக் குறையும் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்றாலும் பல வர்ணனைகளை இடக்கரடக்கல் கொண்டு நகர்த்திச் செல்லும் பாங்கு நாவலாசிரியரின் நடைக்கு ஒரு உதாரணம். குறிப்பிடத்தக்க மற்றொன்று பெரும்பாலான அத்தியாயங்களின் துவக்கத்தில் வரும்  சூழல் வர்ணனை. ஆற்றைச் சொல்லி நாட்டைச்சொல்லி பொறுமையாக நகரத்தை சொல்லும் பழந்தமிழ் இலக்கியத்தின் மெதுவான நடை.


//இதமான சூடும் இணக்கமான ஸ்பரிசமும் வாய்க்கப்பெற்ற உயிர்களுக்கு அந்த விடியல் வாயில் கணிந்த தாய்ப்பாலாய்த் தித்தித்துக் கிடந்தது. உலகத்தின் உயிர்களில் எல்லாம் புன்னகையைப் பூசிய ஏழுதேர்ச்செல்வி  தனித்துக் கிடந்தவர்களின் கண்ணீரை முத்தங்களால் துடைத்து விட்டாள்.// 


இது காவிய அழகியல் சாயல் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் இத்தகைய வர்ணனைகளுடன்   அத்தியாயங்களைத் துவக்குகிறார்.  நாவலாசியர் மானசீகனுக்கு காவிய அழகியல் தன்மை ஈடுபாடு இருப்பது இத்தகைய நடையில் புலப்படுகறது. அவை அடுத்தடுத்த நாவல்களில் இன்னமும் காத்திரமாக வெளிப்படக்கூடும் எனத் தோன்றுகிறது


*********



சென்ற மாதம் (2025, மே-10ல் ) நிகழ்ந்த 'நற்றுணை கலந்துரையாடலில்' எழுத்தாளர்

 மானசீகனின் 'மூன்றாம்பிறை' நாவல் விவாதிக்கப்பட்டது. 



Sunday, June 15, 2025

தக் லைஃப்

கவியரசு பட்டத்தை கண்ணதாசனுக்காக துறக்கிறேன் என்று வைரமுத்து அறிவித்தார். 'என்னா மனுசன்...!' என்று நெக்குருகி பீடியைப் பற்ற வைத்த போது கவிப்பேரரசு என்று அறிவித்துக் கொண்டார். உலக நாயகன் என்று யாரும் தன்னை அழைக்க வேண்டாம் என்று கமல் அறிவித்த போது மேற்படி சம்பவம் மறந்து போயிருந்தது. விண்வெளிநாயகாஆஆ என்ற வீறிடலின் போது அது மீண்டும் நினைவுக்கு வந்தது. ஆனால் உலகநாயகன் என்பது போல அது வெறும் பட்டமல்ல. கதையில் அதற்கு ஒரு இடம் இருப்பதாகவே தோன்றுகிறது.




இந்திரன் வேட்கையின் நாயகன். காமுகன். புராணப்படி, இந்திரன் என்பவன் ஒருவன் அல்ல. அது ஒரு பதவி. அதில் ஒரு சுவாரஸ்யமான முடிச்சு உள்ளது. இந்திர பதவி மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் இந்திராணி மாறுவதில்லை என்பது அதில் உள்ள தொன்மம். இந்திராணி ஏற்றுக்கொண்டு அருகில் அமர்ந்தால்தான் அவன் இந்திரன். அதுவரை அவன் தேவர்களை போரில் வென்றாலும் இந்திராணியின் ஏற்பு என்பது முக்கியமானது. மேலும் யார் வல்லமை கொண்டு எழுந்தாலும் இந்திரனின் நாற்காலி ஆடத் துவங்கும். அவன் அச்சம் கொண்டு அவனை வீழ்த்த எல்லா உத்திகளையும் கையிலெடுப்பான்.


இங்கே ஏற்கனவே இந்திரனாக இருக்கும் சக்திவேலுக்கு  வேறு யார் மீதும் பயம் இல்லை. அவனது பயம் அமர் மீது இருக்கிறது. ஏனெனில் அவன்தான் தன்னைப் போன்ற ஒரு 'சாவுக்கஞ்சாத சத்ரியன்' என அவனது உள்ளுணர்வு அறிகிறது. அந்த அச்சம்தான் தான் உள்ளே போகும் போது அமரை தன்னிடத்தில் நிறுத்தி தனக்கு விஸ்வாசமாக இரு என மறைமுகமாக கூறுகிறது. அவன் அங்கு தனது வர்த்த்கத்தை விஸ்தரிப்பதைப் பார்த்துப் பொங்குகிகிறது. குடும்பமும் தனது சுற்றமும் அவனிடம் பொறுப்பை ஒப்படைக்கும்போது தடுமாறுகிறது. அவன் கைமீறி போகும் போது அவன் மீது சந்தேகம் கொண்டு கேள்வி கேட்கிறது. 


அமருக்கும் இந்திராணியை அருகில் அமர்த்திக் கொண்டு அந்த பதவியை ஆள அசை இருக்கிறது. அது சக்திவேலின் ஐயத்தை வைத்து ஊடுருவும் சதிக்கு உடன்டுகிறது. இருவரின் அந்த போர்க்குணமே இறுதிவரை ஒருவருக்கொருவர் மல்லுக்கு நிற்கும் வரை தொடர்கிறது. சக்திவேல் அமரை தன்னிடத்திற்கு வரவழைக்கும் போதே சந்திராவைப் பற்றி சொல்லாமல் இருக்கவும் அந்த குணமே காரணம். அது தானாக  சமாதானம் பேசாது. அதுவும் அதன் பின்னர் வரும் இறுதிக்காட்சியும் நன்றாக இருந்தது. பலமுறை சாவை தொட்டுப் போகும் சக்திவேலை விட ஒருமுறை அதை சந்தித்து அமரனாகும் அமரின் பாத்திரம் நன்றாக இருந்தது



நாயகன் படத்தை ஒட்டி கேள்விகள் வர இருவர் இணைந்த முந்தைய படம் ஒரு காரணம். ஆனால் இந்தப் படம் நாயகனின் தொடர்ச்சியாக அல்ல. இது சற்று தளபதியின் சாயல் கொண்ட கதை.  இரு நாயகர்கள். அவர்களுடைய ஈகோவும் பாசமும் கலந்து வருகிறது. அதில் நாயகன் என்று சொல்லத்தக்க ஆளுமை கொண்ட பாத்திரம் சிம்புவுடையது. தளபதியின் ரஜினிக்கு இணையானது. தந்தையை இழந்த , தங்கையை பிரிந்த,  தன்னை வளர்த்தவரின் குடும்ப விஷயங்களில் முடிவெடுக்கும் அளவு வளர்ந்த நம்பிக்கை பெற்ற, அவரே தன்னை சந்தேகப்பட, அவர் மீது  வெறுப்பு கொள்ள, அவர் இடத்தை அடைந்து நிற்க, பின் அவரிடம் மன்னிப்பு கேட்க என அருமையான பாத்திரம். மறுபுறம் சக்திவேல் அப்படியேதான் துவக்கம் முதல் இருக்கிறார். அமரின் மரணம் மனதை பாதிக்கிறது. அங்கு படம் முடிந்து விடுகிறது. 


அத்தனை கனமான காட்சிக்குப் பின் சக்திவேல், சத்குரு கெட்டப்பில் முண்டாசும் கூலிங்கிளாஸுமாய் இருக்க பிண்ணனியில் விண்வெளிநாயகா என வீறிடும் போது ஒன்ற முடியவில்லை. ஒன்றமுடியவில்லை என்பதையும் தாண்டி எரிச்சல் உருவாகிறது என்றே சொல்லலாம்.  இத்தனைக்கும் இந்தி்ரன் என்ற யோசித்தால் விண்வெளிநாயகனும் பொருந்துகிறது என்றாலும் கூட அந்த இடத்தில் அது பொருந்தவில்லை. தளபதியில் தேவா இறந்த பின்  மிகவும் எளிமையாக படம் முடியும். இங்கே அது சக்திவேலின் புகழ் பாடுகிறது. ஆனால் ரசிகனின் மனம் அமரிடம் இருக்கிறது





கங்குவா தக்லைஃப் எல்லாம் எதிர்மறை விமர்சனங்களால் ஓடவில்லை என்று ஒரு கருத்து அப்பொழுதே எழுந்து வந்தது. ஜெ. கூட தளத்தில் எழுதியிருக்கிறார். எதிர்மறை விமர்சனங்கள் பேட்ட அண்ணாத்த ஜெயிலர் ஆகிய படங்களின் போது இன்னும் வீறுகொண்டு வந்த வண்ணமே இருந்தன. இவற்றில் நான் இன்னொருமுறை பார்க்கவே விரும்பாத படமான அண்ணாத்த கூட தியேட்டரில் என்னை ஏமாற்றவில்லை. அது என்ன சொல்லப் போகிறது என்பது அதன் முன்னோட்டங்களில் தெளிவாக தெரிந்தது. ஆகவேதான் அது தாக்குப் பிடித்தது. வியாழனன்று வெளியான தக்லைஃப் திரைப்படம், சனிக்கிழமையன்று திரையிடலுக்கு பத்து நிமிடங்கள் முன்பு, விரும்பும் வரிசையில் சீட்டு கிடைக்கும் என்கிற அளவு நிரம்பி இருந்தது. அது ஏமாற்றத்தாலும் உறவுமுறை கூறப்பட்ட அதிர்ச்சியாலும் நிகழ்ந்திருக்கலாம். அந்த ஏமாற்றத்திற்கு காரணம் இதன் கதைப்போக்கு குறித்த தெளிவை இதன் முன்னோட்டங்களும் பேட்டிகளும் அளிக்கவில்லை என்பதாக இருக்கலாம். ரோஜா தளபதி ராவணன் உள்ளிட்ட படங்கள் வந்தபோது சாவித்ரி, கர்ணன் மற்றும் இராமாயண புராண கதைகளை ஒப்பிட்டு வார இதழ்களில் கட்டுரைகள் வந்தன. அதுபோன்று இதன் இந்திர விழைவை தொட்டு ஒரு அறிமுகம் வந்திருந்தால் இந்தளவு ஏமாற்றம் நேர்ந்திருக்காது. வணிக சூதாட்டத்தில் இவ்வாறு ஆகிவிட்டது என்றே எண்ணுகிறேன். படம் எனக்குப் பிடித்திருந்தது. பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கிறேன். படத்தையும் இன்னொரு முறையும் பார்த்து விடுவேன்.

Sunday, May 11, 2025

டாங்கோ நாவல் - குணா கந்தசாமி

 

நற்றுணை கலந்துரையாடல் நிகழ்வில் எழுத்தாளர் குணா கந்தசாமியின் டாங்கோ நாவல் குறித்துப் பேசிய உரையின் எழுத்து வடிவம்


டாங்கோ

 

நாம் தொடர்ச்சியாக பொது ஊடகங்களின் வாயிலாகவும் ஜனரஞ்சக திரைப்படங்களின் வாயிலாகவும் பயின்று வந்த ஒன்று இருக்கிறது. தனித்து இருப்பவன்/ள் மீது சமூகம் கொள்ளும் பரிதாபம்.  நான் வளர்ந்த காலத்தில் பார்த்த திரைப்படங்களில் மூன்றுக்கு ஒன்று இப்படி ஒரு  கதையைக் கொண்டிருக்கும். நாயகன் யாருமற்றவனாக இருப்பான். அனாதையான ஒருவன் இருக்கிறான் என்றால் அவன் மீது கருணையை குடம் குடமாக ஊற்றுவது என்பது அன்றைய கதைகளின் மரபு. அதற்கு எதிர் தரப்பாக அவனைத் திட்டுபவர்கள் ‘அடிச்சா ஏன்னு கேட்க ஆளில்லாத அனாதை என்றும்.. செத்தா தூக்கிப்போட ஆளில்லாத அனாதை” என்றும் வசைச் சொல்லை உதிர்க்கிறார்கள். அவனுக்கு ஆதூரமாக இருக்கும் கதாபாத்திரங்கள் ‘’உனக்கு யாரும் இல்லைனு நினச்சுக்காத.. என்னை அம்மாவா நினைச்சுக்கோ” என்று சொல்கிறார்கள்.

 

அந்தப் பதின் பருவத்தைக் கடந்த பின் நேரில் காண்பது என்பது வேறொன்றாக உள்ளது, அந்த காலகட்டத்தில்தான் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ந்து தனிநபரின் வருமானம உயர்ந்து போகும் ஒன்றையும் கண்முன்னால் காண்கிறோம். அப்போது இத்தகைய ”உடனிருப்புகளை” விடவும்  விலகியிருத்தலில் ஆர்வம் கொண்ட தலைமுறை உருவாவதையும் காண்கிறோம். தனக்கு யாரும் இல்லை என்பது கழிவிரக்கம் என்கிற நிலை போய்.. அது ஒரு சுதந்திரம் என்கிற நிலைபாடு வருகிறது. இதற்கு இடையில் என்ன நிகழந்து விட்டது என்றால் வாழ்வாதாரத்திற்கான பொருள் சேர்ந்திருக்கிறது என்கிற ஒன்றைத்தவிர வேறு பெரிய மாற்றம் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை. பொருளியல் சுதந்திரம் என்பது அதுவரை கட்டிவைத்திருந்தவற்றைக் கலைத்துவிடுகிறதா? அதுநாள் வரையிலான ஒரு ‘கட்டு” என்பது தனிநபராக பார்க்கையில் ஒருவித பொருளியல் பாதுகாப்புதானா என்கிற கேள்வி எழுகிறது.

 


 

மானுடவியலாளர்கள் ஒன்று சொல்கிறார்கள். மனிதன் எப்பொழுதும் தனிமையானவனே.. lonely tiger என்பது போல. ஆனால் அவன் ஒரு குழுவாக மாற அவனுக்கு ஒரு “பிழைத்திருத்தல் தேவை இருக்கிறது. அன்றைய கால பெரு விலங்குகளுக்கு மத்தியில் வாழ்ந்து அவற்றை வென்று இன்றைய உயிரினங்களின் உச்சத்தில் மனிதன் அமர்வதற்கு அவனுக்கு ஒரு குழுவாக இயங்குவது தேவையானது. அவன் இயல்பாக குழுவுடன் இருப்பவன் அல்ல. ஒரு பிழைப்பிற்காக சேர்ந்து இருக்கிறான். அவ்வாறு தொடர்ந்து பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து உயிர்ச் சங்கிலியின் உச்சத்தை அடைந்த பின்னர் நாகரீக மனித உயிரிக்கு குழுவாக இருத்தல் என்பது ஒருசில விதங்களில் மட்டுமே பொருளாகிறது. சக மனிதர்களுடன்  கூடிக் களித்திருத்தல், சக மனிதர்களுடன் விலகியிருத்தல். தாமரை இலைத் தண்ணீர் போல எதிலும் இருந்து கொண்டும்.. அதே நேரத்தில் இல்லாமலும் உருண்டு போவது.

இலக்கியத்தில் யாரும் லட்சிய வேட்கை, தியாகம் ஆகியவற்றை உன்னதப் படுத்துவதில்லை. பெரும்பாலானவை அவற்றில் உள்ள அபத்தத்தை சுட்டிக் காட்டியபடி இருக்கின்றன. இன்னும் விளக்கமாக சொன்னால், எழுத வரும் அனைவரும் ஒருவகையில் இருத்தலியல் சிக்கல் கொண்டுதான் வருகின்றனர். சமூகம் ஒரு குழுவாக அடுத்தக் கட்டத்திற்கு பலவகைகளில் முன்னேறிச் செல்கிறது. அப்போது இலக்கியம் அதில் உள்ள அபத்தத்தை சுட்டிக் காட்டுகிறது. ஒவ்வொரு காலத்திலும் இங்கே இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது என்று சொல்கிற படைப்புகள் உண்டு. இந்திரா பார்த்தசாரதி எழுதிய ஏசுவின் தோழர்கள் நாவல் ஒரு உதாரணம். தோழர் என்றால் நாம் இங்கு குறிப்பிடும் இடதுசாரி தோழர்கள். Friends of Jesus அல்ல comreds of Jesus. பணி நிமித்தமாக போலந்து செல்லும் ஒருவன் தனது கலாசாரம் மற்றும் போலந்தின் கலாசாரம் மற்றூம் அன்றைய அரசியல் சூழல் ஆகியவற்றைக் கொண்டு அடையும் ஒரு புரிதல். அதை அரசியல் நாவல் எனலாம். பசித்த மானுடம் நாவலில் வரும் கணேசன் கொள்கிற அலைபாய்தல்கள் மற்றொரு உதாரணமாக வருகிறது. இறுதியில் அவன் அடைகிற தரிசனம் அந்நாவலில் உண்டு. அவன் அதற்கான செயலில் இருப்பான்.


டாங்கோ நாவலை இவ்விரு விதங்களிலும் மேற்சொன்ன நாவல்களைத் தொட்டுப் பார்த்து அறியலாம். இன்றைக்கு சென்ற தலைமுறையை விடவும் பொருளிலும் ஆரோக்யத்திலும் பயணங்களிலும் பலதரப்பட்ட அனுபவங்களிலும் உயர்ந்து நிற்கிற நமது தலைமுறை எதையும் வெறும் நுகர்வோடு தொட்டு நகர்கிறதா? அல்லது சென்ற தலைமுறை போல காலுன்றி ஒன்றைப் பற்றிக்கொண்டு நிற்க விரும்பிகிறதா என்கிற கேள்வி கேள்வியை டாங்கோ நாவல் ஆனந்த் என்கிற ஒருவனின் பார்வையில் கேட்டுப் பார்க்கிறது.

 



திணை என்பது ஒரு நாலலுக்கு முக்கியமானது. காடு, ஆழிசூழ்உலகு, அவன் காட்டை வென்றான் ஆகியவற்றில் திணை ஒரு பாத்திரமாக ஆவைதைப் பார்க்கிறோம். அவ்வகையில் நிலப்பகுதி என்று எடுத்துக் கொண்டால், டாங்கோ மேலோட்டமாக உருகுவேவை சுட்டிச் செல்கிறது. அந்த நாடு தனிப்பட்ட விதத்தில் ஆனந்திற்கு என்ன செய்கிறது? முழுக்க முழுக்க நுகர்வு கலாசாரம் ஊறியிருக்கும் ஒரு அமெரிக்க நகரத்திற்கு சென்று அங்கிருக்கும் ஒரு மலைப்பகுதியில் ஆனந்திற்கு இதே புரிதல்தான் ஏற்பட்டிருக்குமா.. அல்லது முழுக்க கட்டுப்பாடுகள் நிறைந்திருக்கும் அரபு தேசத்திற்கு சென்று அங்கு பாலைவன மணலில் அவனுக்கு இதே புரிதல் ஏற்பட்டிருக்குமா என்றால் ஆம் என்று சொல்லிவிடக்கூடிய சாத்தியம்தான் இருக்கிறது. ஏனெனில் அவனது குழப்பங்கள் அவனது அகக்குழப்பங்கள். மிகவும் கவனமும் எச்சரிக்கையும் கொண்டவன். ஆனந்த் தனக்குள் இட்டுக்கொண்டிருக்கும் கூண்டு அல்லது தான் அடைப்பட்டிருக்கும் தீவிலிருந்துதான் முதலில் வெளிவர வேண்டும்.  அவன் தனது ஊரிலேயே இருந்திருந்தாலும் இப்படித்தான் ஆகியிருக்கும் என்று கருத முடிகிறது. ஆகவே அந்நிய தேசத்தின் அரசியலோ சமூகமோ அவனுக்கு ஒரு பாதிப்பை உருவாக்கவில்லை. அவனது ஈர்ப்புமே ஒரு தமிழ்ப் பெண்ணிடம்தான் உருவாகிறது. ஆகவே நாம் இதை ஏசுவின் தோழர்கள் போல ஒரு கலாசார மோதல் என்று சொல்ல முடியாது. அல்லது அந்த தேசத்தைப் பற்றிய அறிதல் என்றும் சொல்லவியலாது. இளம்வயதில் கைவிடப்பட்டவன் என்று கருதி அலைபாய்தல் கொண்ட மற்றொரு நாவலான பசித்த மானிட்டத்தை எடுத்துக் கொண்டால், டாங்கோவில் ஆனந்த் அந்த அளவு வயதாலும் அனுபவத்தாலும் முதிர்ந்து விடவில்லை. அவன் அந்த திசை நோக்கி ஒரு அடி எடுத்து வைப்பதுதான் நாவலின் இறுதிப் பகுதியாக இருக்கிறது

அப்படியென்றால் இந்நாவலை என்னவென்று சொல்லலாம்

”நுண்ணுணர்வு கொண்டவர்களின் தனிமை” என்று வகைப்படுத்தலாம்.




 

ஆனந்த், சந்தியா, மத்தியாஸ், ’அமேந்தே என்கிற மார்செலா’’ என இந்நாவலின் கதா பாத்திரங்கள் அனைவருமே தனித்து அலைபவர்கள். தனக்கான சுயம் கொண்டவர்கள். இதில் ஆனந்த் மட்டுமே தனக்கான தேவை என்ன என்பதை அறிய முடியாத ஒரு தத்தளிப்பு கொண்டவனாக இருக்கிறான். பிற அனைவருக்கும் ஒரு உணர்ச்சிப் பிணைப்பும் அதன் வழி பெற்ற அனுபவமும் இருக்கின்றன. சந்தியா ஒரு கொடூரமான திருமண வாழ்க்கையில் இருந்து விலகி ஒரு புரிதலை அடைகிறாள். அவளுக்கு தான் போஷிக்கும் உயிர் போதுமானது. தன்னைப் பார்த்துக்கொள்ளும் உயிர் தேவையில்லை. இந்தியாவில் பெற்றோர்கள், உருகுவேயில் கிளிகள். அவளுக்கு அவற்றுடன் நிலைகொள்ளும் தெளிவு இருக்கிறது. அமந்தே என்னும் மார்செலாவுக்கும் தனது குழந்தைகள் உள்ளன. இத்தகைய உணர்ச்சிப் பிணைப்பு என்பது ஆனந்த் க்கு வாய்க்கவில்லை. பெற்றோர் இல்லை என்றான பின்னர் பெயருக்கு இருக்கும் மாமா. விடுதியிலும் கல்லூரியிலும் அவன் பெறும் ஆசிரியர்களையும் வழிகாட்டி என்று சொல்லமுடிகிறதே யன்றி அவர்களுடன் ஒரு இடைவெளி உள்ளது. அவனுக்கு ஏற்படும் பிணைப்பும் சந்தியாவுடந்தான் என்றாலும் அவன் அதில் ஏமாற்றம் அடைகிறான்.

ஒவ்வொருமுறை அவன் விரும்பி விழுகின்ற நினைவின் பள்ளத்தாக்கு என்றால் அது பெற்றோர்களால் வளர்க்கப் படாமல் அவன் இழந்த அரவணைப்பும் பாதுகாப்பு உணர்வும்தான். அவன் அதையே தனது வாழ்நாளில் தேடிக்கொண்டு இருக்கிறான்.  சொந்தம் என்று யாரும் இல்லாத ஒருவனுக்கு சொந்த ஊர் சொந்த நாடு என்று ஏதும் இல்லை. ஆகவே அவன் தனது அறிவுத்தளத்தில் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்கிற எண்ணமும் உணர்வுத்தளத்தில் தனக்கு ஒரு துணை வேண்டும் என்கிற ஏக்கமும் கொண்டவனாக இருக்கிறான்.

மனிதர்கள் மீது ஆர்வம் கொண்டவனாக இருக்கிறான். கடற்கரையில் சுற்றித் திரியும் கார்லோஸ் முதல் வீட்டு உரிமையாளர் டாக்டர் கிற்ஸ்டாஃப் வரை அனைவரிடமும் உரையாடுகிறான்.

அதுநாள் வரை தான் சந்தித்த சுற்றுவட்ட நண்பர்களை வைத்து, தன்னுடைய துயரம் தனித்துவமானது என்று எண்ணி இருந்தவனுடன் அவன் வீட்டு உரிமையாளர் டாக்டர் கிற்ஸ்டாஃப் உரையாடுவது நாவலின் ஒரு மைய அத்தியாயம். ஒருவகையில் அவனை உடைத்து விடுகிறார். அவருக்கு மறதி நோய் உள்ளாது. அவர் அந்தக் கணத்தில் வாழ்பவர். அந்த இடம் கவித்துவமானது. தன் கடந்த கால ஏக்கத்தை சுமந்து நிற்கும் ஒரு இளைஞன் அவன் முன்னால் தொன்னூறு வயதை அடைந்த ஒரு முதியவர், மறதி நோய்க்கு ஆட்பட்டு அந்தக் கணத்தில் வாழ்பவர், முதல் உலகப்போர் முதல் கண்டவர், அவர் சொல்கிறார், ”உன்னுடைய சிக்கல் என்னவோ ஸ்பெஷல்னு நினைச்சுக்காத, இது மாதிரி லட்சம் பேர் உண்டு. இதைவிட கொடுமையை அனுபவிப்பரும் பலர் உண்டு” என்று. தான் கூட்டத்தில் ஒருவன் இல்லை நான் தனித்துவமானவன் என்பதே ஒரு இறுமாப்புதான். அவர் அதை உடைத்து விடுகிறார். மேலும் குடும்பம் பற்றிய அவனுடைய அத்தனை முன் முடிவுகளையும் சிதறடிக்கிறார். அவனறியாமல் அவனுக்கு கிட்டிய ஒரு கீதோபதேசம் அதுதான் என்று வாசகர்கள் கருதும் வண்ணம் அந்த இடம் உணர்த்தப் படுகிறது.  இப்பொழுது பார்த்த்தால் அவன் தன் தனிமை நுகர்வை விட்டுவிட்டு வெளியேறுவது அங்கிருந்து துவங்குகிறது என்று கூறலாம். அதை ஒரு காட்சியாக உணரமுடிகிறது,

உள்ளடக்கத்தைத் தாண்டி நாவலில் குறிப்பிட வேண்டிய விஷயங்கள் என்று இம்மூன்றைக் கூறலாம்

 

1.     அதன் காட்சித் தன்மை. நாவலில் கடற்கரை வர்ணிக்கப் படுகிறது. ஒரு அருமையான விண்மீன்கள் காட்சிவருகிறது. அவற்றொடு  நான் குறிப்பிட விரும்புவது மேற்சொன்ன காட்சித் தன்மை. கிற்ஸ்டோபருடனான் உரையாடல் அவனுக்கு என்ன உருவாக்கியது என்பதை நாவலில் சொல்லாமல் உணர்த்த முடிகிறது. நாவல் வடிவத்தின் ஒரு முக்கியத்துவம் இது.

ஒரு இடத்தில் அவன் தனது அலுவலகத்திற்கு அன்றக்கான தனது விடுப்பு செய்தியை அறிவிப்பதை சொல்லும்போது அவன் பொருள் வரியில் அதை தட்டச்சு செய்து அனுப்பினான் என்று குறிப்பிடுகிறார். அவன் உடல் நலமின்றி இருப்பதை சட்டென்று சொல்கிறது. அவன் அலுவலகத்தில் அவன் இடம் என்ன என்பதையும் அது சொல்கிறது. அங்கு உள்ள சுதந்திரத்தையும் சொல்கிறது

2.     உவமைகள்.. சில உவமைகள் உரையாடல்களில் சட்டென்று விழுகின்றன. சந்தியாவிடம் தனது விருப்பத்தை தெரிவிக்கையில் அவள் அதை மறுத்து பேசி தன் விருப்பத்தைக் கூறூம்போது என்ன ifloop போட்டு பேசற என்பான்

3.     அறிதல்- தன் கனவும் தன் எதார்த்தமும் வேறு வேறு என்று அவன் உணரும் இடம். குறிப்பாக மத்தியாஸ் அவனிடம் சொல்லுவார், தம்பி கனவுப் புணர்ச்சியில் நாற்றம் இருக்காது. ஆனால் யதார்த்தத்தில்  அப்படியில்லை என்பார். கிட்டத்தட்ட ஆனந்த்ன் வாழ்நாள்  கேள்வி அது. அதற்கான பதில் அவன் இறுதி அத்தியாயத்தில் வாய்விட்டு உளறும் வார்த்தைகள். அங்கு அவன் தன் வாய்விட்டு சொல்கிறான்.. ”பிரபஞ்சமே நான் உன்னை ஆரத் தழுவிக் கொள்கிறேன்” என்று.




தற்போது கஞ்சா இயல்பாகிவிட்டது போல அதுகுறித்த செய்திகள் வருகின்றன.  பிற போதைப் பொருட்கள் போல கஞ்சா குடித்தவரை வாடையை வைத்து அறிய முடியவில்லை. உள்ளே தேக்கிக்கொண்டு வெளியே சாதரணமாய் இருப்பது அவர்களுக்குப் பழகியிருக்கிறது. அவர்களுக்கு என்று இல்லை இப்பொழுது பொதுவெளி நாகரீகம் என்பதே அதுதான் என்று ஆகிவிட்டது.  இந்நாவல் அதை சொல்லுவதோடு நிற்கிறது.

உருகுவெ நாட்டில் ரியோ தெ லா பிளாட்டா அட்லாண்டிக்கில் கலக்கும் முகத்துவாரத்தில் உள்ள மாண்டிவிடியோவின் தென்பகுதியான லா றாம்ப்லா என்கிற இடத்தில் நிகழ்கிற கதை. முதல் அத்தியாயம் கடலில் மூழ்கி நீந்தி பின் வெளியே வந்து விழுந்து ஈரம் காயும் வரை கரையில் கிடப்பவன் தன்னை அனாதையாக உணர்கிறான். இறுதி அத்தியாயமும் அத்தகையதே. இங்கே அவனது தனிமை நீங்கிவிடவில்லை.. அவனது நட்புக் குழுக்களுடான சந்திப்புகள் முன்போல நடக்கவில்லை. முன்பைவிடவும் தனிமையில்தான் இருக்கிறான். தன் கையில் இருக்கும் போதை பொட்டலத்தை கிழித்து அலைகளில் வீசிவிட்டான். ஆனால் அவன் பிரபஞ்சத்தைத் தழுவிக்கொள்ளும் அளவிற்கு மிதமிஞ்சிய உணர்ச்சிக் குவியலில் இருக்கிறான். இவற்றிற்கிடையிலான நிகழ்வுகளின் தொகுப்புதான் டாங்கோ.  பிரபஞ்சமே நான் உன்னைத் தழுவிக் கொள்கிறேன் என்று அவன் வாய்விட்டு சொல்வது இங்கு  ஒரு சிறுகதைக்கான முடிவாக இருக்கிறது

Thursday, October 31, 2024

குரவையும் சோளமும்

நற்றுணை கலந்துரையாடல் நிகழ்வில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். ( நன்றி ஸ்ருதி டீவி )



எனது வாழ்க்கையை இரண்டாக பிரித்தால் அதில் முதல் 20 வருடங்களை ‘குரவை’ நாவல் நிகழும் நிலப்பகுதியிலும் அடுத்த இருபது வருடங்களை ‘சோளம் என்கிற பேத்தி’ நாவல் நிகழும் நிலப்பகுதியிலும் கழி்த்திருக்கிறேன். அந்த வகையில் இதன் நிலப்பகுதிகள் மனதிற்கு  நெருக்கமானதாக இருக்கின்றன. இந்நாவல்களை வாசிக்கும் தருணங்களில் அந்த நிலப்பகுதிகளுடனான என்னுடைய நினைவுகளை மீட்டெடுக்கவும் முடிந்தது. ஆனால் அதற்காக ஒரு விமர்சன கூட்டத்தை நாம் ஒருங்கிணைத்தால் க.ந.சு. வின் ஆவி நம்மை மன்னிக்காது.  ஒரு நாவலை தேர்ந்தெடுத்து விவாதிக்க இது போன்ற தனிப்பட்ட மெல்லுணர்ச்சி சார்ந்த காரணங்களை பொருட்படுத்த கூடாது என்பது எனது தனிப்பட்ட பார்வை. அத்தகைய பார்வைகள் பெரும்பாலும் நினைவேக்கம் சார்ந்தவை. அந்த ஊருக்கே கொண்டு போய் காமிச்சிட்டாருங்க என்று சொல்லும்போது அந்த ஊரின் சில நல்ல நினைவுகளை சொல்வதாக மட்டும் அமைந்து விடுகிறது. அதை சில வணிக திரைப்படங்களும் வணிக எழுத்துகளும் செய்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்காக அந்த நாஸ்டால்ஜியா என்பது புறக்கணிக்க வேண்டியது அல்ல. அதை வாசிக்கும் போதும் பார்க்கும்போதும் நமக்கும் சற்று மனம் நெகிழுக்கூடும். அது கண்டிப்பாக நல்ல விஷயம்.  ஆனால் ஒரு படைப்பை நாம் விவாதிக்க எடுத்துக்கொள்ளும் போது இத்தகைய விஷயங்களை பொருட்படுத்தக் கூடாது என்றே கருதுகிறேன். நமக்கு முற்றிலும் புதிய நிலங்களை  அறிமுகப்படுத்திய என்.ஸ்ரீராம், கீரனூர் ஜாகீர் ராஜா, சாம்ராஜ் ஆகியோரது படைப்புலகத்துடன் நம்மால் ஒன்ற முடிவதற்கு வேறு காரணிகள் இருக்கின்றன.  கார்சியா காப்ரயீல் மார்க்வேஸின்,  தால்ஸ்தாயின்  உலகங்களுக்குள் நாம் நம்மை அவ்வாறே பொருத்திக் கொள்கிறோம். ஆகவே முதலில் ஒரு நாவலை வாசிக்கும் போது அது நம்மை ஈர்க்கும் பட்சத்தில் அவற்றில் நினைவேக்கம் சார்ந்த முதற்கட்ட கவர்ச்சியை  கடந்தும் இத்தகைய  விஷயங்கள் இருப்பதை நாம் அறிகிறோம். அத்தகைய இரு நாவல்கள் குறித்து நாம் இங்கு விவாதிக்கிறோம். எப்படி ஹெமிங்வேயின் கிழவனும் கடலும் நம்மை எப்படி ஈர்க்கிறதோ அதுபோலவே ஒரு மேற்குலக வாசகர் இவ்விரு நாவல்களை வாசித்தால் ஈர்க்கப்படுவார். தனித்தன்மை கொண்ட இந்நாவல்களில் அனைவரையும் இணைக்கும் பொதுச்சரடு ஒன்று இருக்கிறது. நாம் அவற்றை பார்க்க வேண்டும்





குரவை நாவலை அது வெளிவந்த சென்ற ஆண்டில் நாம் கையில் எடுக்கும் பொழுதே இதன் கதைக்களம் சார்ந்து இரு வகையில் அறிமுகம் இருப்பதை உணரலாம். ஒன்று காவரி பிரச்சனையைச் சார்ந்து உருவான சச்சரவு. இவை பெரும்பாலும் நாளிதழ்களில் செய்தி ஊடகங்களில் சொல்லப்பட்டு நாம் அறிந்தவை.  இரண்டாவது இதில் கூறப்படும் நாட்டுப்புறக் கலைகள்  அல்லது நிகழ்த்துக் கலைகள் எல்லாம். சின்னத்திரை வெள்ளித்திரை பின்னர் கைபேசி போன்ற நவீன கேளிக்கைளின் பெருக்கம் காரணமாக தேய்ந்து போனது. இந்த பின்புலமும் நம்மிடம் நாளிதழ்கள்வாயிலாகவும் இலக்கியங்ஙள் வாயிலாகவும் கவனம் பெற்றுள்ளன. ஆகவே அதன் நிகழ்கால நிலைமையும் போக்கும் நமக்குத் தெரியும். அங்கு கதையை துவங்கும் சிவகுமார் முத்தையா அவர்கள் ஒரு யதார்த்த கதைசொல்லியாக இருக்கிறார். மக்களிடம் ஒரு விழப்புணர்வு வந்து அழிந்து கொண்டிருக்கும் கலைகளை. மீட்கவேண்டும் என்உறுதி பூண்டனர். இவ்வாறாக மீண்டும் நாட்டுப்புறக் கலைகள் அங்கு வெற்றிகரமாக திகழ்ந்தன. மக்கள் அந்தக் கலைஞர்களை சரஸ்வதி கடாக்ஷம் பெற்றவர்கள் எனக் கருதி வணங்கினர் என்று அவர் நாவலை முடிக்க இயலாது. ஆகவே இந்நாவலின் துவக்கமும் நிறைவும் தடாலடி திருப்பங்கள் கொண்டிருக்கவில்லை. 


புதிய கதைக்களங்களை அறிமுகப்படுத்தும் புதிய உலகை காட்டும் நாவல்கள் உண்டு. ஆனால் அவை அடிநாதமாக கொண்டிருக்க வேண்டிய ஒரு புள்ளி இல்லாவிடில் அவை வெறும் ஆவணப்படமாக மட்டும் நிற்கும் தவிர, நாவலாக ஆவதில்லை. முன்பெல்லாம்திரைப்படம்துவங்கும் முன்னர் நியூஸ் ரீல் என்ற ஒன்று போடுவார்கள். காட்டுவாழ்க்கை என்று தலைப்பு இருந்தால் ஒருவர் செய்தி்வாசிப்பதை போல அதை வர்ணிப்பார். அந்தக் காட்டுவாசிஙய ஏதாவது பேச அதை அவர் எடுத்துக்கூறுகிறார். அவர் கூறுகிறார் இந்தக் காட்டில் நரிகள் இருப்பதாக அவர் கூறுகிறார் என்கிற வகையில் சொல்லிச் செல்வார். நான் நியூஸ் ரீலில் கண்ட ஒரு கானக வாழ்க்கை தராத ஒரு எழுச்சியை அவன் காட்டை வென்றான் என்கிற ஒரு சிறு நாவல் அளித்துவிட்டு சென்றது. யானை டாக்டர் என்கிற சிறுகதை அளித்தது. இலக்கியத்தின் இடம் என்பது இதுதான்.  அதாவது ஒரு இலக்கியப் படைப்பு என்பது தனக்குள்ளே பல ஆவணத் தொகுப்புகளை வைத்திருக்கும், அதன் இரக்கமின்மையை காட்டும். அந்த வாழ்க்கையின் பாடுகளை வாசகனும் அடைவான்.


சிவகுமார் முத்தையாவின் குரவை நாவலில் இருந்து குறைந்த பட்சம் பத்து ஆவணப்படங்களை ஒருவர் உருவாக்கலாம். சிலம்பம் பறை தவில் கரகாட்டம் நையாண்டி மேளம் என பல கலைகளின் தொகுப்பு இருக்கிறது. அவரிடம் அவை பற்றி சொல்ல தகவல்கள் பல இருக்கின்றன. அதனூடாகவே ஒரு கலைஞர் மற்றவர் மீது வைத்திருக்கும் வஞ்சமும் சமூகம் அதற்குள் வைத்திருக்கும் படிநிலைகளும் ஒருவர் மற்றவரை நசுக்குவதும் சொல்லப்படுகின்றன. அதற்கு மேலாக உள்ளே பல கிளைக் கதைகளும் அனைத்தையும் இணைக்கும் ஒரு மூலக்கதையும் உள்ளன. 



அதற்குள் அவர் உருவாக்கும் உலகமும் அதன் பாத்திரங்களின் மனமாற்றங்களும் சூழலும்தான் இதை தனித்துவமான நாவலாக ஆக்குகிறது. உதாரணமாக அதில் வரும் பறை கருவி செய்பவர் கதை. பொட்டு என்பவரின் கதை. அவருக்கும் கணேசலிங்க பண்டிதருக்கும் ஒரு குரு சிஷ்ய உறவு இருக்கிறது. ஆனால் அவர் இவருக்கு கலையை பயிற்றுவித்தவர் அல்ல. வெறும் ஒரு நாள் பழக்கமும் ஒரு மணிநேர உரையாடலும்தான் அவர்களுக்குள் நிகழ்கிறது. அன்று நடந்த ஒரு சச்சரவால் பொட்டு ஒரு முடிவு எடுக்கிறார். இனி்மேல், தான் எந்த சாவுக்கும் வாசிப்பதில்லை என.  பத்து வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் பண்டிதர்  இறக்கும் போது தனக்கு பொட்டு தான் வாசிக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு இறக்கிறார்.  அதற்காக பொட்டு கிளம்பிச் செல்கிறார். அது ஒரு அத்தியாயம். இந்த நாவலில் பொட்டு அதற்கு முன்னும் வருகிறார். பின்னும் வருகறார் ஆனால் அந்த ஒரு அத்தியாயத்தில் தான் அவரது ஆளுமையை பற்றிய நுட்பத்தை எழுத்தாளர் ஒளித்து வைத்திருக்கறார். 


கலியபெருமாள் வசந்தா இருவரின் கதையும் ஊடாக வருகிறது. அவர்கள் ஒருவர் மீது மற்றவர் கொள்ளும் பரிவு அது கலியமூர்த்தியின் வீட்டில் உருவாக்கும் சச்சரவு எல்லாம் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை. ஆனால் ஒரு கட்டத்தில் வசந்தாவின் கணவன் இறந்தபோது கலியமூர்த்தியின் மனைவி சொல்லும் வார்த்தைகளும் வசந்தா தற்கொலை செய்ய முயற்சிக்கும் போது அவள் அதே பெண் என்ன்சொல்கிறாள் என்பதும் தான் இதன் யதார்த்த தளத்தை காட்டுவதாக இருக்கின்றன.


இதன் பாத்திரங்கள் உதிரியானவை அல்ல. அதாவது இந்த நாவலின்  ஒவ்வொரு பாத்திரமும் இன்னொரு பாத்திரத்துடன. தொடர்பு உடையதுழ பொட்டு இந்நாவலில் வரும் சந்திரனுக்கு உதவுகிறார். ஆனால் அவர் ஏன் உதவுகிறார் என்பதை புரிந்து கொள்ள பொட்டு குறித்த இந்த அத்தியாயம் தேவையாகிறது. அதுதான் நாவலின் முழுமை சார்ந்து எழுத்தாளருக்கான பிரக்ஞையை சுட்டுவதாக உள்ளது.





இதற்கு மாறாக சோளம் என்கிற ஒரு பெண்ணையும் அவளது சூழலையும் சொல்லும் ஒரு நாவல் கி.கண்ணன் அவர்களின் சோளம் என்கிற பேத்தி. சென்னை உருவாகி வளர்ந்த விதம் சென்னையின் பூர்வகுடிகள் நிலை என்னவானது என்பது குறித்த பல திரைப்படங்களும் ஆவணங்களும் நாவலும் வந்த பிறகு வெளியாகியிருக்கும் இந்த நாவலிலும் நமக்கு நாவலின் கதை சார்ந்த புரிதல்கள் இருக்க சாத்தியம் உள்ளது.  இன்றைய சென்னையின் போரூரில் இருந்து  கிண்டிவரைக்குமான பகுதியில் 60களில் நிகழும் கதைக்களம் இந்த நாவல். 


 சோளம் என்கிற ஒரு டீன் ஏஜ் பெண். அவளது அறிமுகத்தில் 

நெருப்பு வாங்க பக்கத்து வீட்டில் போய் நிற்பது. மளிகை கடை கடன் வாங்க செல்லும் குழந்தை என்றுதான் அறிமுகப் படுத்தப் படுகிறாள்.  இவ்வாறு அடுத்தவர்களைச் சார்ந்து இருக்கும் ஒரு குடும்பம். அதில் பாட்டியும் பேத்தயும் மட்டும் இருக்கிறார்கள். குன்றுமேடு எனப்படும் அந்தப் பகுதியில் இருக்கும் பிற மக்களின் கதைகளும் இவர்கள் கதை வழியாக சொல்லப் படுகிறது. அடுக்கடுக்காக அவமானங்களை மட்டும் பெற்று வரும் சோளம் தான் ஒரு பெண் என்பதால் மட்டும் பூனையால் கவனிக்கப் படுகிறோம் என்பது புரிந்து கிளர்ச்சி அடைவதும் அவனுக்காக ஏதாவது அலங்காரம் செய்து கொண்டு அவள் முன் நடமாடி அவன் கவனத்தை ஈர்ப்பது என்று இருக்கிறாள்.  


அவளுடைய தோழி மாலா என்பவள் அந்தப் பகுதியில் சாராயம் விற்கும் அம்பிகா அங்கு தோட்டம் வைத்திருக்கும் ரெட்டியார் என பல பாத்திரங்கள் இந்த நாவலில் வருகிறார்கள்.  கண்ணன் அவர்களின் எழுத்தில் ஒவ்வொரு பாத்திரமும் எவ்வளவு முக்கியமானவை என்பதை உணரமுடிகிறது. ஒரு சீட்டிக்கட்டஇல் ஒரு சீட்டை மட்டும் எடித்துவட்டால் எப்படி மொத்த ஆட்டமும் அர்த்தமிழந்து போகுமோ அப்படி இந்நாவலின் எந்தப் பாத்திரத்தை எடுத்தாலும் நமக்கு சோளத்தின் வாழ்க்கையில் அவள் எடுக்கும் சில முடிவுகளை விளங்கிக் கொள்ள முடியாமல் ஆகவிடும்.  இதன் பாத்திரங்களின் பெயர்கள் பெரும்பாலும் பட்டப் பெயர்கள். அல்லது காரணப்பெயர்கள். 


உதாரணமாக பூனை என்கிற பெயரில் வரும் ஒருவன். அவன் பூனைக்கண் கொண்டதால் மட்டும் பூனை அல்ல. அவன் தனது நடவடிக்கைகளில் பூனை போலவே மிக கவனத்துடன் இருக்கிறான்.  கவனமாக வேட்டையாடுகிறான். தனக்கான எந்த தடத்தையும் பூனை வைக்காது. அது போல அவனும் தனது வேண்டிய முடித்துவிட்டுக் கிளம்புபவன்.  


ரெட்டியார் தனது காட்டில் விறகு வெட்ட வருபவர் மீது கல் வீசி எறிகிறார். ஆனால் அதை ஒரு வர்க்கரீதியல் அணுகாமல் ரெட்டியார் அவ்வாறு இருக்க என்ன காரணம் என்று சில பத்திகள் எழுதுகிறார். அவரும் நிறை குறை கொண்ட ஒரு சராசரி மனிதான வருகிறார்.


இந்த இரு நாவல்களிலும் வெளிப்படும் சில முத்தாய்ப்பான வஷயங்களைக் காண வேண்டும் என நினைக்கிறேன்


முதல் விஷயம் இருவரும் கொண்டிருக்கும் கவனம். அவர்கள் வைக்கும்  பெயர்கள். தப்படிச்சான் மூலையில் வைக்கப்படும் பெயர்கள் கவர்ச்சயானதும் சிறிய பெயர்களாகவும் இருக்கின்றன. அங்கு பெயர்கள் நித்யா, பேபி, வசந்தா என்பதாகவே இருக்கின்றன. ஆயிரம்தான் மருத நிலம் என்றாலும் கலையும் இலக்கியமும் புழங்கிய தஞ்சை பூமி என்றாலும்  அங்கு போய் உலகாளும் நாயகி என்று பெயர் வைத்து ஒருவர் ஆட முடியாது. அதற்கு எது அனுமதிப்பதில்லக என்பதை நாம் ஆராயலாம்.


மாறாக சோளம் கதையில் அனைவருக்கும் பெயர் முன்பு கூறயதைப்போல கதாபாத்திரத்தின் இயல்பை சுட்டுவதாக உள்ளது.






சிவகுமார் முத்தையா அவர்களின் எழுத்துகளில் கீழத்தஞ்சையின் பண்பாடு சார்ந்த பெருமிதம் தெரிகிறது. பொதுவாக தஞ்சை மண் சார்ந்த எழுத்தாளர்களிடம் இருக்கும் நினைவேக்கம் என்பது நாஸ்டால்ஜியாவாயு வெட்கப்பட வைக்கும் அளவிற்கானது. சமீபத்தில் கூட மெய்யழகன்னு ஒரு படம் பார்த்திருப்பீங்க. கண்ணீர் விட்டு மெய்சிலிர்க்க ஊர் பேர் போட்ட பஸ் போதுமானது. சிவகுமார் முத்தையாவற்கும் அந்த உணர்ச்சி இருக்கறது.  தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில் என்றே சொல்கிறார். அவரும் தன்னை டெல்டா பாடகன் என்றே சொல்லிக் கொள்கிறார். 



மாறாக, கண்ணன் அவர்களின் படைப்பில் தனி்மனிதர்கள் மீதான நெகிழ்ச்சி இருக்கிறது. ஆனால் நிலம் சார்ந்தோ சுற்றுப்புறம் சார்ந்தோ அது சார்ந்த எந்த பெருமிதமும் இல்லை. சமீபத்தில் அதிகம் ரொமாண்டிசைஸ் செய்யப்பட்ட விஷயங்களில் சென்னையும் ஒன்று. கி.கண்ணன் அவர்களின் எழுத்துக்களில் இதை ரொமாண்டிசைஸ் செய்வதற்கான அத்தனை சாத்தியங்களை வைத்திருந்தும் அவர் அதை கவனமாக தவிர்க்கிறார் என்பது கவனிக்க வைக்கிறது.



இரண்டு நாவல்களின் பேசு பொருள்களும் உலகமயமாக்கல் நவீனம் நகரமயமாதல் ஆகிய புறக் காரணங்களால் வீழ்ந்த அல்லது தனது அசலான வாழ்க்கையை இழந்த இரு வேறு உலகங்களைப் பற்றிப் பேசுகின்றன. இன்று திரும்பப் போய்ப்  பார்த்தால் இந்தக் கதையின் தொடர்ச்சி அந்த நிலத்தில் இருக்காது. அது ஒன்று தேய்ந்து மறைந்திருக்கும். அல்லது மெலிந்து இடம் பெயர்ந்திருக்கும்.



இரண்டாவதாக இந்நாவல்கள் ஒரு விஷயத்தை உரக்க கூறுகின்றன. அது எந்த மனிதனும் வெறும் அடிமையோ அல்லது அதிகாரத்தற்கு அடிபணிந்தவனோ இல்லை. அவனுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவன் அந்த அதிகாரத்தை அடுத்தவர் மீது பாய்ச்ச தவறுவது இல்லை.  வெவ்வேறு நிலங்களில் நிகழும் இந்த இரு நாவல்களிலும் வெட்டியானை ஏன் அடிக்கிறார்கள்? காரணமில்லாமல் அடிப்பதற்கான காரணம் என்ன?  எது அவர்களை அடிக்கத்தூண்டுகிறது. சாராய போதை ஏறியவுடன் எது எழுந்து வருகிறது என்கிற கேள்வி இருக்கிறது அல்லவா. அது முக்கியமான ஒன்று.  



தமிழில் இத்தகைய வாழ்க்கையை பதிவுசெய்த எழுத்தாளர்களில் இருவர் முக்கியமானவர்கள். ஒருவர் ஜி.நாகராஜன் மற்றவர்  தஞ்சை பி்ரகாஷ். சமகால எழுத்தாளர்களில் லட்சுமி சரவணகுமார் இத்தகைய சூழலை எழுதிப்பார்க்கிறார்.  கள், காமம் ஆட்டம் என ஒரு வாழ்க்கை சூழல். அதற்குள்ளிலிருந்து வரும் மாந்தர்கள் அவர்களுக்குள் இருக்கும் ஆசை என்ன என்பது முக்கியமான கேள்வி. குரவையில் வரும் நாட்டுப்புற ஆடல் ஆடும் பெண்களுக்குள் இருக்கும் காதல் குடும்பம் சார்ந்த ஒரு எதிர்பார்ப்பும் ஆசையும் சிவகுமார் முத்தையா சொல்லிச் செல்கிறார். அதேபோலத்தான் சோளத்திற்கு இருக்கும் ஒரு காதலும் அது சார்ந்த எதிர்பார்ப்பும். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பது என்னவோ ஒன்று போலத்தான் இருக்கின்றன.





யதார்த்தவாதத்திற்கும் இயல்பு வாதத்திற்குமான வித்தியாசங்களில் முக்கியமான ஒன்றாக சொல்லப்படுகிற ஒன்று உள்ளது. யதார்த்தவாத்தரதல் இருந்து நாடகீய தருணங்களை எடுத்துவிட்டால் எஞ்சுவது இயல்புவாதம் என்று.  தமிழின் யதார்த்தவாத எழுத்துக்கும் இயல்புவாத எழுத்துக்கும் உதாரணமாக சொல்லத்தக்க இரு நாவல்கள் குறித்து இங்கு உரையாடியதும் நிறைவளிக்கிறது. அவர்களுக்கு நன்றி. இத்தகைய எழுத்துக்களைத் தேடிப் பதிப்பிக்கும் யாவரும் பதிப்பகம் ஜீவகரிகாலனுக்கும் நன்றி.




Monday, August 12, 2024

புக் பிரம்மா

புக்பிரம்மா நிகழ்விற்கு சென்று வந்தேன். நல்ல அனுபவமாக இருந்தது.  போக்குவரத்து மற்றும் தங்குமிடம் உணவு ஆகிய ஏற்பாடுகள் மெச்சத்தக்கதாகவே இருந்தன. சென்னையில் தி ஹிண்டு இலக்கிய விழா நிகழும் போது பார்வையாளராக செல்வதுண்டு. அது பல இந்திய எழுத்தாளர்களை சந்திக்க நல்ல வாய்ப்பாக இருக்கும். அங்கு அமர்வுகள் இரண்டு அரங்குகளில் நிகழும். அதோடு ஒப்பிட்டால் இந்த வளாகத்தின் பரப்பளவு, அரங்க கொள்ளளவு, அரங்கங்களின் எண்ணிக்கை எல்லாம் அதிகம்.


நான் ரயில் நிலையத்திலிருந்து  அரங்கம் சென்ற காரில் என்னுடன் கார்த்திக் பாலசுப்ரமணியன், அந்திமழை அசோகன், மற்றும் தெலுங்கானா பகுதி எழுத்தாளரான கீதா ராமசாமி ஆகியோர் வந்தனர். கீதா ராமசாமி அவர்களை அங்கு சந்தித்தது ஆச்சரியமாக இருந்தது.  அவர் எழுதியிருந்த Land Guns Caste Woman புத்தகம்  தமிழில் 'நிலம் துப்பாக்கி சாதி் பெண்' என விநோத்குமார் மொழிபெயர்ப்பில் இவ்வருடம் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது. மிகவும் முக்கியமான புத்தகம். எனக்கு அவரைச் சந்திக்க ஆவல் இருந்தது. ஆனால் புக்பிரம்மா விருந்தினர் பட்டியலில் அவர் பெயரைக் கண்ட நினைவு இல்லை. எதிர்பாராத சந்திப்பாக அது அமைந்தது  அந்தக் காலையை அழகாக்கி விட்டிருந்தது. அவர் பெயர் இல்லாததைக்  கேட்ட போது தான் பதிப்பாளராக மட்டுமே வந்திருப்பதாக கூறினார். 





 St. John கல்லூரி வளாகம் மிகப் பெரியது. நான்கு அரங்குகள். மண்டபா என பெரிய அரங்கு. மதனா ( தமிழ் எழுத்தாளர்கள பெரும்பாலும் மந்தனா என்றே உச்சரித்தனர். அரே ராஷ்மிகா!!!) , அங்களா, அக்ஷரா ஆகிய சிறிய அரங்குகள்.  புஸ்தகா என்கிற ஒரு அரங்கு புத்தக கண்காட்சி் கூடத்தில். கூடவே  அதற்கு வெளியே ஒரு திறந்தவெளி அரங்கு சின்னார லோகா என்று. அதில் பெரும்பாலும்  குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்வு நடந்தது. 


தங்குவற்கான அறைகள் அந்த வளாகத்திலேயே ஒதுக்கப்பட்டிருந்தன. கல்லூரி விடுதி அறைகள் என நினைக்கிறேன். வரிசையான அறைகள். மிகவும் சுத்தமான பராமரிப்பில் இருந்தன. என்னுடன் பதிப்பாளர் ஜீவகரிகாலன் அறைத்தோழராக இருந்தார். பக்கத்து அறையில் கவிஞர்கள் சாம்ராஜ் மற்றும் இசை இருந்தனர்.


அப்போதே facebook ல் கடலூர் சீனு அமர்வுகளில் பங்கேற்பது குறித்து கண்டனங்கள் கேலி குத்தல் பதிவுகள் வரத்துவங்கியிருந்தன. இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டவர்களில் மூத்த படைப்பாளிகள் இளம் படைப்பாளிகள் மொழிபெயர்ப்பாளர்கள் வாசகர்கள் இலக்கிய செயல்பாட்டாளர்கள் என கலந்தே இருந்தனர். இவர்களில் கடலூர் சீனு கடந்த 15 வருடங்களாகவே  தீவிர இலக்கியத்தில் கட்டுரைகள் வாயிலாகவும் அவர் கடலூரில் முன்னெடுத்த  நற்றிணை கூட்டங்கள் வாயிலாகவும் பங்காற்றி வருபவர். இனியஜெயம் எனத் துவங்கும் அவரது கடிதங்கள் மீது ஒரு நகைப்பு பொதுவாக உண்டுதான்.  அவரைக் கண்டாலும் நண்பர்கள் கிண்டலடிப்பது உண்டு. ஆனால் அவரது தொடர் பங்களிப்பை மறுக்க முடியாது.   நிகழ்வு ஒருங்கிணைப்பாளரான எழுத்தாளர் பாவண்ணனும் இவரும்  புதுவையை ஒட்டிய இலக்கியச் செயற்பாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு  வருபவர்கள். ஆனால் அவருக்கு எதிராக எழுந்த கன்டணங்கள் மனதை மிகவும் வருந்தச் செய்தன. 


ஜெ. அங்கு முதல்நாளே வந்து தங்கியிருந்தார். ஆகவே காலையில் அவர் அறைக்குச் சென்றேன். அப்போதுதான் கவிஞர் இசை ஊரிலிருந்து  வந்தார். அவரை அறைக்கு அழைத்துச் செல்ல  வந்திருந்த கவிஞர் சாம்ராஜ் ம் கூடவே இருந்தார்.. நான் அங்கு நிற்பதைப் பார்த்து அவர்களும் வர கதவைத் திறந்த ஜெ. அப்போதுதான் தூங்கி எழுந்திருந்தார்.  (நல்ல தூக்கத்தில் இருந்திருக்கக் கூடும். அவருடைய பதிவில் சாம்ராஜும் எம. கோபாலகிருஷ்ணனும் வந்த்தாக குறிப்பிட்டிருந்தார். ) பின்னர் எங்களுடன் தேநீர் அருந்த கேண்டீனுக்கு வந்தார். அங்கு ஏற்கனவே பிற கவிஞர்களும் எழுத்தாளர்களும்  வந்திருந்ததால் அப்போதே உரையாடல் துவங்கிவிட்டது. 


புக் பிரம்மா முதல்நாள் வாழ்த்துரையை தென்னிந்திய மூத்த எழுத்தாளர்கள் வழங்க விழா துவங்கியது. தமிழ் இலக்கியம் சார்பாக ஜெ. துவக்க உரையாற்றினார். அது குறித்த பதிவு அவரது தளத்தில் உள்ளது. 





பிறகு காலை அரங்குகள் துவங்கின. எனக்கு தெலுங்கு அமர்வுகள் மீது பெரிய எதிர்பார்ப்புகள்  இல்லாமல் இருந்த்து. நண்பர் பாஸ்கர்  அவிநேநி் பங்கேற்றதால் தெலுங்கு மொழபெயர்ப்பாளர்களின் அரங்கிற்குச் சென்றேன். அது மிகவும் சகஜமாகவும் யதார்த்தமாகவும் இருந்த்து. அதன்பின்னர் இரு வேறு தெலுங்கு அமர்வுகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டேன். நான் நெல்லூர் மாவட்டத்தில் ஆறு வருடங்கள் பணி புரிந்தேன். ஆகவே எனக்கு தெலுஙகில் சகஜமாக உரையாட இயலும். (எழுதப் படிக்கத் தெரியாது.) ஆகவே அமர்வுகளில் இயல்பாக ஒன்ற முடிந்தது.  குமார் கனபராஜு எழுதி கெப்பல ஸ்ரீநிவாஸ் மொழிபெயர்த்த 'முக்குளிப்பான்' தொகுப்பும் , அஜய் பிரசாத் எழுதி மாரியப்பன் மொழிபெயர்த்துள்ள 'அத்தங்கி மலை' என்கிற சிறுகதை தொகுப்பும் இந்த விழாவில் பெற்றவை. மலையாள எழுத்தாளர்களை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.  ஆனால்  தெலுங்கு அமர்வுகள் சுவாரஸ்யமாக இருந்தன. சக்காரியா, சின்ன வீரபத்ருடு, பெருமாள் முருகன் , நாகபூஷணஸ்வாமி, பிரதீபா நந்தகுமார் ஆகியோர் பங்கெடுத்த அமர்வு   (The Role of Media in Keeping Alive the Literature & the Culture of the Land) தீவிரமானது ஆனால் மூத்த எழுத்தாளர்கள் மிகவும் கலகலப்பாக கொண்டு சென்றனர். கன்னடம் முற்றிலும் புரியாது என்பதால் கன்னட அமர்வுகளில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் விவேக் ஷேன்பேக், விக்ரம் ஹத்வார் ஆகியோருடன் உரையாடினேன். விக்ரம் ஹத்வார் எழுதி பாவண்ணன் மொழிபெயர்த்த 'காரணம்' கதை முன்பு நம்நற்றிணை இதழில் வந்த்து. அதைப்பற்றி ஊட்ட காவியமுகாமில் நான் பேசியிருந்தேன். 





எங்கள் அமர்வு ( சுரேஷ் பிரதீப், ரம்யா மற்றும் கயல் ) மொழிபெயர்ப்பு புதிய உலகம் புதிய சிந்தனை என்பது குறித்து. நான் மட்டுறுத்தாளராக இருந்தேன். சுரேஷ் மற்றும் ரம்யா அவை அளித்த முன்னகர்வுகள் பற்றிப் பேச மொழிபெயர்ப்பாளரான கயல் அவை தறபோது என்னென்ன காரணிகளை என்னென்ன சவால்களை எதிர்கொள்கிறது எனப் பேசினார். அதன் இணைப்பினை முதல் comment ல் இட்டுள்ளேன். நண்பர்கள் அதைப் பார்த்து கருத்துக்களை சொல்லவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ( வீடியோவில் 03:58:00 ல் எங்கள் அமர்வு  துவங்குகிறது)


நடிகர் பி்ரகாஷ்ராஜ், தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னட கவிதைகளை வைத்து ஒரு மேடை நிகழ்வினை ஆற்றினார். பிற அமர்வுகளில் பார்வையாளராக அமர்ந்திருந்தார். நடிகர் கிஷோரும் அவ்வாறு பார்வையாளராக  வந்து அமர்ந்திருந்தார். கலை நிகழ்ச்சிகளும் நன்றாக இருந்தன. அதில் வெங்கடேஷ் குமாரின் ஹிந்துஸ்தானிய இசையும், மாலை யக்ஷகானா வில் நிகழ்த்தப்பட்ட பஞ்சவடி பற்றிய நிகழ்த்துக் கலையும் அருமையாக இருந்தன. இரு வேறு கலை நிகழ்வுகளைத் தவற விட்டேன். 





ஞாயிறு அன்று மாலை வாழ்நாள் சாதனையாளர் விருது ஜெ. க்கு அளிக்கப் பட்டது.  விருதினைப் பெற்றுக் கொண்ட பின்னர் சுசித்ராவுடனான ஒரு உரையாடல். இரண்டும் நன்றாக இருந்தன. மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாகவும் இருந்தன.. இந்த விருது அறிவிப்பை மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர்.  அது ஆஸ்கார் விருது அறிவிப்பது போன்று அந்த சமயத்தில்தான்  இந்த விருதைப் பெறுபவர் என்று சொல்லி வழங்கினர். முன்பே சொல்லியருந்தால் இன்னும் பலர் வீட்டற்குச் செல்லாமல் காத்திருந்திருப்பார்கள். அந்த உரையாடலை நேரில் கேட்டிருந்திருக்கலாம். அமைப்பு, இந்த அறிவிப்பு முறையை மறுபரிசீலனை செய்யலாம் என்று தோன்றுகிறது. மற்றொன்று புத்தக கண்காட்சி அரங்கம். ஊரே இதமான குளிரோடு இருக்கையில் பளீர் விளக்குகளும்  மூடிய அரங்கும் வியர்வை வழிய வைத்தன. இஸ்லாம் இன்டர்நேஷனல் லிமிடெட் அமைப்பின் தன்னரா்வலர்கள் ஆங்காங்கு நின்று உரையாடினர். உலக நெருக்கடியும் அமைதிக்கான வழிமுறையும் என்கிற புத்தகம், உலகளாவிய அஹ்மதிய்யா முஸ்லீம் ஜமாஅத்தின் ஐந்தாவது கலீஃபாவான ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஜ்மது அவர்களின் சொற்பொழிவுகள் கடிதங்கள் ஆகியவற்றின் தொகுப்பு. அவர்களின் உரையாடலால் உந்தப்பட்டு அதைப் பெற்றுக் கொண்டேன். பின் அரங்கிற்கு சென்று அதன் தமிழ் வடிவத்தையும் பெற்றுக் கொண்டேன். விலையில்லாப் பிரதியாக அளித்தார்கள்.


புக்பிரம்மா இந்த நிகழ்வை நேர்த்தியாக ஒருங்கணைத்தது. குறிப்பாக பல கல்லூரிகளின் மாணவ மாணவிகள் தன்னார்வலராக வந்திருந்தனர். அவர்கள் வெவ்வேறு துறையில் படிக்கிறார்கள். இலக்கிய ஆர்வத்தில் வந்திருக்கிறார்கள். கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட அவர்கள் பிற மொழி அமர்வுகளின் விவரத்தை கன்னட லிபியில் எழுதி அந்தந்த மொழியில் வாசித்தனர். சுக்குமி ளகுதி ப்பலி என கேட்க ஜாலியாக இருந்தது. பிறகு பார்வையாளர்கள் சிரித்தவுடன் வெட்கப்பட்டு சுதாரித்து சரியாக   சொன்னார்கள். Enjoyed thoroughly!!!





பிற மாநில விழாக்களுக்குச் சென்றிருந்த எழுத்தாளர்கள் இந்த அமைப்பில் இருக்கும் ஜனநாயகத் தன்மையை வெகுவாகப் பாராட்டினர். எனக்கும் இதுதான் தோன்றியது. அவர்களுக்கு  அந்நிய மொழி எழுத்தாளரான,  பாவண்ணன் அவர்களுக்கு , புக்பிரம்மா அளித்த சுதந்திரமும் மற்றும் முதல் விருதை தன் மொழி எழுத்தாளருக்கு அளிக்காமல் தமிழ் எழுத்தாளருக்கு அளித்ததும் குறிப்பிடத்தக்கவையாகத் தோன்றின. அழைக்கப்பட்ட  விருந்தினருக்கு சன்மானம் உண்டா  என்று நண்பர் கேட்டார். அப்படி ஏதும் இல்லை. ஆனால் அங்கு நிகழ்ந்த சந்திப்புகளும், கலை நிகழ்ச்சிகளும், நிகழ்த்துக் கலைகளும் ஈடு இணைற்றவை. 


முதல் விழாவை சிறப்பாக நடத்தி முடித்திருக்கும் புக்பிரம்மா அமைப்பிற்கும் எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கும்  பாராட்டுக்கள். அடுத்தடுத்த விழாக்களில் பார்வையாளராக கலந்துகொள்ளும் எண்ணம் உள்ளது.