Wednesday, January 18, 2017

நம்பிக்கை

அவநம்பிக்கைகளால் ஆனதும் என் உலகம். பெரிதளவில் நட்பையோ உறவுகளையோ நம்புவதில்லை. யார்மீதும் நம்பிக்கையில்லை என்ற பொருளில் சொல்லவில்லை. ஒன்று யாரும் சாஸ்வதம் இல்லை என்ற பொருளில் சொல்வதாக வைத்துக்கொள்ளலாம் அல்லது கண்முன் காணும் உண்மைக்கு பின் இன்னொரு உண்மை உள்ளது என்பதாகவும் வைத்துக்கொள்ளலாம். அது மிக குரூரமானதாக இருக்கும். மிகவும் பிற்போக்கு கொண்டதாகவும் இருக்கும். இந்த இரண்டு குறித்த பயமும் எப்போதும் எனக்கு இருக்கும். முந்தையதற்கு விபத்தில் இறந்த நண்பர்கள் காரணமாக இருக்கலாம். பிந்தையதற்கு காரணம் நான் வலையுலகில் ஆர்க்குட் காலம் முதல் கண்டுவரும் விவாதங்கள் காரணமாக இருக்கலாம்.

முதலாவது காரணம் தனிப்பட்டது. அதை விட்டு விடலாம். ஆனால் இரண்டாவது காரணம் மிகப்பொதுமையானது. 2007 2008 ல் ஈழப்பிரச்சனை உச்சத்தில் இருக்கும் போது அதை தனக்கு சாதகமான அத்தனை சித்தாந்தங்களுக்குள்ளும் அடைக்கப்பார்த்து தனித்தனியாக பிரிந்து போராடிய குழக்கள் பல இருந்தன. அனைவரும் இணைய ஏதோ ஒன்று தடுத்தது. அங்கே பள்ளியில் சாதி கேட்பதே இல்லை என உயர்த்தி அப்போது என் நண்பர் ஒருவர் பேசுவார்.  ஆனால் பிற்பாடு சில புதினங்கள் வாசிக்கையிலேயே அங்கு இருந்த வேற்றுமைகள் புரிந்தன. ஈழத்தில் இன்னும் இட ஒதுக்கீடு கிடையாது என்பது புரிந்த்து.  சாதி அடிமைத்தனம் இன்னும் தமிழர்களுக்குள் பேச்சளவில் கூட நீக்கப்படவில்லை. அந்த இடத்தில் ஒருவன் ஏன் சாதி பற்றி பேசப்போகிறான் இத்தனை அழிவுக்குப்பிறகும்? இதுபோன்று உண்மையான சங்கதிகளுக்குப்பின்னே இருக்கும் இன்னொரு உண்மை.

தமிழ்நாட்டிலுமே இது உண்டு. மிக உச்ச கட்டமாக பொதுவுடைமை பேசும் ஒருவர் தன் உறவுக்காரப்பையனின் காதலி குறித்து பேசியபின் அவருடனான நட்பை விட்டிருக்கிறேன். தனிப்பட்ட அனுபவங்களிலும் வீடு வாங்கியதிலோ சுற்று வட்டாரங்களிலோ ஒருவித அமைதியற்ற தன்மையையே உணர்ந்து வந்திருந்தே்ன்.

முத்துக்குமார் ஈழபிரச்சனைக்காக உயிராயுதம் ஏந்தியபோது இதைவிட அதிக கூட்டம். ஆனால் அவர் உடலை வைத்து போராடக்கூடாது என அதை அவசரமாக அடக்கம் செய்த அவலம். அப்போது பலரின் உண்மைமுகம் தெரியவந்த்து. முள்ளி்வாய்க்காலில் போர் முடிவுக்கு வந்தபோது கொல்லப்பட்ட மக்களுக்கான ஊர்வலத்திலும் அதிக இளைஞர்கள் கலந்துகொண்டனர். சமூக வலைதளங்கள் முழுவதும் இது பற்றிய விவாதங்களும் இருந்தன. ஆனால் பிறகு அவற்றை அந்த அளவு சீந்துவாரில்லை. அதற்குபிறகு நினைவுநாள் வாரநாளில் வந்த்தால் வார இறுதிக்கு மாற்றப்பட்டது. தன்னிச்சையான கூட்டம் வரவில்லை. தன் வேலை என்பது இதைவிட முக்கியம் என்றானது. அப்போது மிகவும் அவநம்பிக்கையே எஞ்சியது.

ஆனால் இப்போது சற்று மாறுதல் இருப்பதாக தோன்றுகிறது. 2015
வெள்ளத்தின் போது தானாக இணைந்த மக்கள் தெருத்தெருவாக பொருட்களை சேகரித்தது அதற்கான துவக்கம். அன்று சென்னையிலிருந்து கடலூர் வரை சென்று வந்தார்கள் நண்பர்கள். பிறகு வர்தாபுயலின் போதும் ஆங்காங்கே இதுபோன்ற குழுக்களாக இணைந்து மரங்களை அகற்றி்னர்.




இன்று, ஜல்லிக்கட்டிற்கு கூடியிருக்கும் மக்களை கண்டபோது இன்னும் மகிழ்ச்சியாகவே இருந்த்து. பலருக்கு மாடு வளர்ப்பு என்பது அவ்வளவு பரிச்சயமில்லை. எருமைமாடுகள் அனைத்துமே பால் கறக்கு்ம் மாடுகள்தான் அதில் கிடாவே கிடையாது என்கிற அளவில் புரிந்து வைத்திருந்தார்கள். அது பிரச்சனையில்லை என்றே தோன்றியது. நமது பாரம்பரியமான விளையாட்டு அழிக்கப்படப்போகிறது அதன்வழியாக காளை இனங்கள் அழிவுக்குள்ளாகப்படப்போகின்றன என்ற செய்தி அனைவருக்கும் எட்டியிருக்கின்றது.

முந்தைய ஈழப்பிரச்சனை போல் இல்லாமல் இது தனக்கான பிரச்சனை என அனைவரும் ஆதரவு அளிக்கிறார்கள். குறிப்பாக குடும்பப் பெண்கள் மற்றும் இளம்பெண்கள் அனைவருமே இதை நிறுத்தவேண்டும் என பேசுவதை கேட்கமுடிகிறது. இந்தளவு சென்று அடைந்திருப்பது மகிழ்ச்சி. ஈழத்தில் ,கூடங்குளத்தில் கோட்டைவிட்டதுபோல் ஜல்லிக்கட்டில் காவிரியில் தாமிரபரணியில் மீத்தேனில் கோட்டைவிடக்கூடாது என ஆசைப்படுகிறேன். போராட்டக்கார்ர்கள் அரசியல்வாதிகளையும் நடிகர்களையும் குறிப்பாக இயக்குநரகளையும் முன்னிறுத்தாது விலக்கி வைப்பது அவர்கள் அனுபவப்பட்டவர்கள் என்பதை உணர்த்துகிறது. வெல்க!!!!

No comments: