Tuesday, July 16, 2019

புத்தரைச் செலுத்திய விசை



தம்மம் தந்தவன் மொழிபெயர்ப்பு நாவலுக்கு எழுதிய முன்னுரை

புத்தர் வாழ்வில் நிகழ்ந்த பல சம்பவங்களும் அவரின் உபதேசங்களும் பல்வெறு வடிவங்களில் நாம்மை வந்தடைந்தபடியேதான் இருக்கின்றன. நாடகத் தருணங்கள்நீதிக்கதைகளாக வந்திருக்கின்றன. ஒரு பறவையை வீழ்த்தியவனைவிட அதைக்  காப்பாற்றியவனுக்கே அது உரிமையானது என்கிற கதை மூலமாகவே நான் சிறுவயதில் முதன் முதலாக சித்தார்த்தனைப் பற்றி அறிகிறேன். சித்தார்த்தன் தன் மனைவியையும் குழந்தையையும் விட்டுவிட்டு ஞானம் அடைய சென்ற அகத் தத்தளிப்பைச் சித்தரிக்கும் இட த்தைப்  பலர் கவிதைகளாக புனைந்திருக்கின்றனர். சித்தார்த்தன் புத்தரான பிறகு அவர் உபதேசித்தவை ஜென் கதைகளாகவும் புத்தரின் சொல் என்ற வகையில் ஓரிரு வரிகளாக தொகுக்கப்பட்டும் இன்றும் நாம் காணும் பதாகைகளிலோ நம் கைபேசியில் வரும் குறுஞ்செய்திகள் வடிவிலோ நம்மை வந்தடைந்துகொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறு எக்காலத்திற்கும் பொருத்தமான உபதேசங்களை அவர் அளித்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்று எண்ணுகையில் வியப்பு மேலிடுகிறது

இவ்வண்னம் புத்தர் காலத்திற்கு அப்பாற்பட்டு நின்றாலும், அவரை இங்கனம் செலுத்திய விசை எது என்பதை அறியும் ஆவல் எழாமல் இருந்ததில்லை. ஒரு கதையாகக் காண்கையில், நம் மண்ணிம் பெரும் நாயகர்களான ராமனும் கிருஷ்ணனும், வீறு கொண்டெழுந்து,  இவ்வுலகுக்கு புதிய அறத்தை போதித்திருக்கிறார்கள். அதற்குத் தேவையான காரணங்கள் அவர்களின் வாழ்விலேயே  நிரம்பியிருக்கின்றன. அவர்களைக் காழ்ப்பும் வஞ்சமும் சூழ்ந்திருக்கின்றன. தன் இளமையில் உற்றார்களாலேயே அலைகழிக்கப்படுகின்றனர். அவர்களுக்குப் பாதகமானவர்களாக முறையே கைகேயியும் கம்சனும் திகழ்கிறார்கள்அதே உலகியல் பார்வையில் சித்தார்த்தனை நோக்கும்போதுசித்தார்த்தனுக்கு வாய்த்தவர்கள் அனைவருமே அவனுக்கு மிகவும் சாதகமானவர்கள். ஒருக்காலும் அவனுக்கு தீங்கு விழைவிக்க எண்ணாதவர்கள். இவர்களிடமிருந்து விலகி, பிரிந்து சென்று அவன் தனித்தலைய வேண்டி இருந்ததற்கான காரணங்கள் எவை என்பதை அறியும் ஆவல் ஒரு வாசகனுக்குள் இயல்பாகவே தோன்றக்கூடும். காழ்ப்பும் குரூரமும் ஒருவனை விரட்டுவதைப் போல, மாசற்ற அன்புமே கூட ஒருவனைத் விரட்டியடிக்குமா என்ற ஐயம் எனக்குமே தோன்றியிருக்கிறது.  அத்தகைய தருணத்தில்தான் இந்நாவல் வாசிக்கக் கிடைத்தது.




    விலாஸ் சாரங், சிறந்த புனைவாசிரியர்.  இந்நாவலில் புத்தரின் வாழ்க்கையோடு மட்டுமன்றி, மேற்சொன்ன நீதிக்கதைகள், கவிதைகள், உபதேசங்கள் ஆகிய அனைத்தையுமே எதிர்பாராத விதங்களில் கலந்து அளித்திருக்கிறார். கூடவே புத்தரின் வாழ்க்கையில் முன்னும் பின்னும் நிகழந்த சம்பவங்களைத் தொகுத்தும் இதை ஒரு சுவாரசியமான நாவலாக ஆக்கியிருக்கிறார்காலமும் தூரமும் தோன்றிய பின்னர்தான் உலகில் உயிரினங்கள் தோன்றுவதற்கான காரணிகள் உருவாயின என்று சொல்லப்படுகிறது. இந்நாவலில் கூட சில தருணங்களை அவர் காலமும் தூரமும் கொண்டுதான் விளக்குகிறார். அதில் தனக்கான ஒரு சுதந்திரத்தையும் எடுத்துக் கொள்கிறார். உதாரணமாக, கதாபாத்திரங்கள் உரையாடுகையில் இடையே தற்கால சொற்களை கதைகளை உள்நுழைக்கிறார். இது ஆங்கிலத்தில் எழுதப்பட்டது என்பதால் தன் ஆங்கில வாசகர்களின் புரிதலுக்காக லில்லிபுட், எலிசபெத், கதைகளையும் கதாபாத்திரங்களின் உரையாடலுக்கிடைய உட்புகுந்து உரைக்கிறார். அதுவும் மிக இயல்பாகவே எவ்விடத்தில் துருத்தைக்கொள்ளாமல் அவரின் தனித்துவ நடையுடன் இயைந்து கொள்கிறது. இந்நாவலை வாசிப்பவர்கள், புத்தரின் வாழ்க்கையை மட்டுமன்றி, அன்றைய மக்களின் பழக்கவழக்கங்கள், கல்விமுறைகள் எவ்வாறு இருந்தன அதிலிருந்து பெளத்தம் எவ்வாறு எழுந்து வந்தது என்னும் ஒட்டுமொத்த புரிதலையுமே அடைந்துவிடமுடியும். அவ்வகையில் இது ஒரு சிறந்த துவக்கமாகவும் விளங்கும்.
இம் மொழிபெயர்ப்பிற்கு ஊக்கமளித்த யுகன் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த என் குடும்பத்தாருக்கும், இப்புத்தகத்தை சிறப்பாக வெளியிட்டிருக்கும் நற்றிணை பதிப்பகத்தாருக்கும், மொழிபெயர்ப்பை முதலில் வாசித்து பிழைநீக்கி செம்மைபடுத்திய ஸ்ரீநிவாஸன் அவர்களுக்கும் என் நன்றியையும் வணக்கத்தையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments: