Thursday, September 3, 2020

முரசும் சொல்லும் - ஐ ) வரலாற்றுடன் உரையாடுதல்

இந்தப் பகுதி வல்லினம் கலை இலக்கிய இதழின் செப்டம்பர்-2020 இதழில் வெளியானது. இணைப்பு இங்கே:- 

 

முந்தையது:- முரசும் சொல்லும் - ஏ) கதிரெழுகை

ஐ ) வரலாற்றுடன் உரையாடுதல்


(1)

இதிகாசங்கள் என்பவை பொதுவாக உரையாடல்தான். முன்னர் நிகழ்ந்ததை சொல்பவை. இவ்வாறு வியாசர் வினாயகரிடம் சொல்லி அவர் எழுதிய ஜய கதையை சொல்கிறேன் என்று வைசம்பாயனர்  ஜனமேஜயனிடம் அவையில் சொல்லும்போது அதைக் கேட்ட செளதி ( சூததேவர்) பிற்காலத்தில் செளனகரிடம் உரைப்பதுதான் மஹாபாரதமாக நமக்குக் கிடைப்பது.  அந்த இதிகாசம் இலக்கியத்துக்குள் வரும்போது அதுவும் ஒரு உரையாடலாகத்தான் நிகழ்கிறது. அது அந்த எழுத்தாளாரின் அக உரையாடல் எனக் கொள்ளலாம். அது வழிபாடு, குழப்பம் என்கிற இரு இடங்களில் நிகழ்கின்றன. வழிப்பாட்டு மனநிலையில் அணுகும்போது அது அதன் உச்ச குணங்கள் அனைத்தையும் மீறாமல் அதற்குள்ளாகவே அவர்களின் நுட்பத்தை இன்னும் விரிவாக்கி அளிக்கிறது. பாலகுமாரன் எழுதிய  ஒரு அன்பு மந்திரம், கிருஷ்ண அர்ஜுனன் ஆகியவை இந்த வகையைச் சேர்ந்தவை.  அன்றைய பாக்கெட் நாவல்களின் குடும்ப நாவல் வகை கதைகளாக அவை உள்ளன. புலரியில் படுக்கையில் துவங்குவதே பாக்கெட் நாவலின் ஒரு மரபு. அதுபோலவே சுபத்ரையை மணந்த அர்ஜுனன் மஞ்சத்திலிருந்து துவங்கும் கதை.  அது கிருஷ்ண அர்ஜுன தோழமையை இன்னும் விரித்துச் சொல்லி வாசகருக்கு நெகிழ்வும் பக்தியையுமே அளிக்கின்றன. என் அன்பு மந்திரமும் இந்த வகைதான். அது துரோணர் துருபதன் நட்பைப் பேசுகிறது. குருகுலங்கள் ஏன் முக்கியம் என்ற உரையாடலில் இது துவங்குகிறது.  இதனூடாக அன்றாட வாழ்வின் எளிய சிக்கல்களே அணுகப் படுகின்றன.  இதிகாச பாத்திரங்களின் சிக்கலைக் கண்டு வாசகர்கள் தெளிவடைவது வேறு.  வாசகரின்அன்றாட சிக்கலை இதிகாச பாத்திரங்களுக்கு பொருத்துவது வேறு. இதனாலேயே இவை ஆரம்பகட்ட பக்தியுடன் நின்று விடுகின்றன. அல்லது கடமையை செய் பலனை எதிர்பாராதே போன்ற சொற்களின் விளக்கங்களாக அவை அமைந்து விடுகின்றன. இது இலக்கியத்தை நேர்மறையாக அணுக உதவும் என்றாலும் பாத்திரங்கள் மீது உன்னதங்கள் ஏற்றி வைக்கப்படுதலும் அவர்களைப் பெரும் பிம்பமாக்குவதும் இதன் மூலம் நிகழ்ந்து விடுகிறது

 

இந்த சிக்கல் எங்கும் இருக்கத்தான் செய்கிறது. பாஞ்சாலி சபதம் எழுதிய பாரதி அதை விடுதலைப் போருக்கான ஆயுதமாக முன்னெடுக்கிறார். அதற்குள் அதிகம் அறச்சிக்கல் கொள்ளவில்லை.  ஆனால் நவீன இலக்கியத்திற்கும் முன்பு சொன்ன ஒருவித சிக்கல் இருக்கத்தன் செய்கிறது. அந்த விதத்தில், நவீன எழுத்தாளருக்கு இதிகாசத்தை அணுகுவதில் இருக்கும் நோக்கானது தமிழின் முதல் நவீன சிறூகதை எழுத்தாளரான புதுமைப் பித்தனிடமிருந்தே துவங்குகிறது. ராமன் அகலிகையிடம் சீதையிடம் நடந்து கொள்ளும் முறைகள் வேறு வேறாக இருப்பது  புதுமைப் பித்தனைக் குழப்பியிருக்கின்றது ( சாபவிமோசனம்). அதன் பின் மற்ற படைப்பாளிகள் வாயிலாகவும் அது மெல்ல வளர்ந்து, அது இதிகாசத்தில் கொல்லப்பட்ட அனைவரின் தரப்பாகவும் ஒலிக்கத் துவங்குகிறது. ஏகலைவனுக்காக,  அரக்கு மாளிகையில் பலியாகும் ஆறு அப்பாவி வேடர்களுக்காக அவை வாதிடுகின்றன. ஒடுக்கப்படும் மக்களின் குரலாக ஆள்பவரை கேள்வி கேட்கும் குறியீடாக அவை மெல்ல முன்னெடுக்கப் படுகின்றன. அதன்பின் மெல்ல மெல்ல தோற்பவர் தரப்பு நியாயங்கள் முன்னெடுக்கப் பட்டு வென்றவர்கள் சூழ்ச்சி செய்பவர்களாக நிலை நிறுத்தப் படுகிறார்கள். அல்லது ஒரு தனிப்பட்ட நாயகனை முழுதும் அலசி ஆராய்ந்து அவன் எவ்வகையில் சூழ்நிலைக் கதையாக இருக்கிறான் கட்டுண்டு கிடக்கிறான் பிறருக்காக தன்னைப் பலி கொடுக்கிறான் என்று வர்ணிக்கப் படுகிறது. கர்ணன் பாத்திரம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். இதனால் ஏற்படும் பிரச்சனை என்னவெனில், கர்ணனுக்காக துரியோதணன் தரப்பு நியாயங்கள் பீமன் அர்ஜுனர்கள் தரப்பு அநீதிகள் தொகுக்கப்பட வேண்டிய நிர்பந்தம் எழுத்தாளருக்கு உண்டாகிவிடுகிறது. இந்த விதத்தில் இந்த வகை படைப்புகள் ஏற்கனவே உள்ள நம்பிக்கையை கேள்விக்கு உள்ளாக்குவது அல்லது ஏற்கனவே சித்தரிக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் இன்னொரு முகத்தை எடுத்துரைப்பது என்கிற இருவகைகளில் அடங்கி விடுகின்றன. முன்பு சொன்னது நேர்மறை என்றால் இதை எதிர்மறை என்று சொல்லலாம்

 

 



இவற்றில் முந்தையவை இதிகாசங்களை அறிய முற்படுகின்றன. அவை அவற்றை பல்வேறு கோணங்களும் சூழல்களும் வைத்து புரிந்து கொள்ள முயல்கின்றன. பாலகுமாரனின் என் அன்பு மந்திரம் நாவலில் சிங்கங்களின் போரை துரோணரும் துருபதனும் காணும் இடம் இத்தகையது. ஒரு விதத்தில் இவை இதிகாசங்களை அணுகுவதற்கான முதல்படி என்று சொல்லலாம். அந்த வகையில் இவை மிகவும் உபயோகமானவை கூட. கண்மூடித்தனமான ஆதரவு என்பதை விட அணுகி அறிய முற்படுவது என்பது எப்படியும் சிறந்த ஒன்றுதான். இளம் வயதில் வாசித்த இந்த இரு நாவல்களும் எனக்குள் விதைத்தவை இதிகாசங்களின் மீதான ஒருவித நம்பிகையைத்தான். ஆனால், ஒரு ஆசிரியர் தான் ஐயம் கொண்டு அதை முற்றிலும் அணுகாமல் அந்த ஐயத்தையே பெருக்கிக் கொண்டு கேள்விகளாக்கும்போது அது சில தருணங்களில் வாசிப்பவர்களிடம் எதிர்மறை விளைவை உண்டாக்கி விடுகின்றன. புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் கதையே இப்பொழுது இணையத்தில் தேடுகையில் ’ராமாயணம் படித்தவருக்கு இது பிடிபடாமல் போனால் அதை பொருட்படுத்த மாட்டேன்’ என்கிற அவரது குறிப்புடன் தான் கிடைக்கிறது.   இதை வைத்து பார்க்கையில் அந்தக் காலத்திலும் காவியத்தை வேறுவிதமாக அணுக பக்தர்கள் தரப்பில் இருக்கும் ஒருவித மனத்தடையை உணரமுடிகிறது.  சாபவிமோசனம் சிறுகதையை ஒட்டி எழுந்த பல விவாதங்கள் இங்கு இன்று காணக் கிடைப்பதில்லை. அதில் எதிர்தரப்பின் வாதங்கள் ஏதேனும் நூலகத்தில் அலமாரியில் பதுங்கியுள்ளதா என்றும் தெரியவில்லை. ஆனால், புதுமைப் பித்தனின் கேள்வியால் ராஜாஜி சீண்டப் பட்டார் என்பது இன்றும் கூட விவாதங்களில் குறிப்பிடப்படுகிறது. அது ஒரு வித கிளர்ச்சியூட்டுவது. எளிதாக ஒரு கலகக்கார உருவகத்தை அது பெற்றுத் தந்துவிருகிறது.  அது ஒருவகையில் காவியத்தை முழுதாக வாசிக்காமல் கூட அதை தலைகீழாக்கிப் பார்க்கும் உந்துததலை அளிக்கும் என்பதையும் உணரமுடிகிறது.  அந்த வகையில் இதிகாசங்களை அணுகுவது வணிக ஊடகங்கள் வழியாகவும் அதை புறக்கணிப்பது அல்லது மறுப்பது நவீன இலக்கியங்கள் வாயிலாகவும் நிகழ்ந்தன என்று கருத முடிகிறது

 

அந்த விதத்தில் இரண்டாயிரமாண்டு துவக்கத்தில் வெளியான எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம் ஒரு வாசகருக்கு மிகவும் உபயோகமான படைப்பு.  மகாபாரத வாசிப்பிற்கான  அனைத்து வாசிப்பு சாத்தியங்களையும் அது கோடிட்டுக் காட்டியது. உபபாண்டவம் வழியாக பாரதத்தின் சில உபகதைகளை அறிந்து கொள்ளவும் முடியும்.  அதேநேரம் அதை வைத்து அதை மகாபாரதம் மீதான ஒரு எதிர் தரப்பையும் அடைய முடியும் . இவை இரண்டுக்கான கடிதங்களும் கட்டுரைகளும் இப்பொழுதும் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. அந்தவகையில் ஒரு விருட்சத்தின் அடியில் நின்று அதன் பரந்து விரிந்த கிளைகளை பார்ப்பது போல மகாபாரதத்தைக் காட்டியது அந்த நாவல். ஏற்கனவே இருந்த உன்னதங்களை அதுவே உடைத்தது மேலும் அதுவே அங்கிருந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கான கேள்விகளையும் விட்டு வைத்துச் சென்றது. அந்த வகையில் உபபாண்டவம் நாவல் மிகவும் முக்கியமானது. காலத்தால் இதற்கு முன்னும் பின்னும் அமைந்தாலும் எம்.வி.வெங்கட்ராமின் நித்ய கன்னி மற்றும் இந்திரா பார்த்தசாரதியின்  கிருஷ்ணா கிருஷ்ணா இரண்டும் வாசகரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றன. தர்மத்தின் மீதான கேள்வியை பெண்ணை முன் வைத்து நித்யகன்னி எழுப்புகிறது.  ஒரு சத்ரிய பெண்ணாக இருந்தாலும் மாதவியை மூன்று மன்னர்களுக்கு குழந்தை பெற்றுத்தர யயாதி அனுப்பி வைக்கிறார். அதற்கு காரணமாக சொல்லப்படுவது அன்றைய பெண்களுக்கான அறம். ஆனால் இருபதாம் நூற்றாண்டின் சிந்தனைகள் அங்கு விசுவாமித்திரரின் குடிலின் இருக்கும் ரிஷி பத்தினிகள் வாயிலாக வெளிப்படுகின்றன அதுவே அதன் பலவீனம். அது அந்த காலத்தின் சிக்கல்களைப் பேசாமல் அதன் சிந்தனையில் அங்கும் இங்குமாக அலைபாய்ந்தது. அந்த நாவலே பெண்ணின் அடிப்படையான இடத்தை பேசும் ஒன்றுதான் என்றாலும் அன்றைய பிராமண இளைஞனின் எல்லை, சத்ரிய பெண்களின் எல்லை எதுவரை என்கிற ஒரு தோற்றத்தை அது அளிக்கிறது.  இந்திராபார்த்தசாரதியின் கிருஷ்ண கிருஷ்ணா நவீன மொழிநடையில் கிருஷ்ணனின் அறத்தை சொல்கிறது. நான் செய்த போரால் யார் பலனடைந்தார் என்று கேட்கிறான் கிருஷ்ணன். ஜரை, நாரதர், கிருஷ்ணன் பரீட்சித்து ஆகியோருக்கான உரையாடல் வாயிலாக பக்தி அறம் அனைத்திற்கும் நவீன உலகில் என்ன பொருள் என்கிற விளக்கத்தையும் அளிக்கிறது. நாரதரை ஆங்கிலம் பேச வைத்தது இதை சமகால உரையாடலுக்குள் கொண்டு வந்துவிடுகிறது.  உபபாண்டவம் நாவலில் இருந்து அளவிலும் அதன் பேசுபொருள்களிலும் விலகியிருந்தாலும் அடுத்த கட்ட வாசிப்பு இவ்விரண்டின் மூலம் சாத்தியமானது. இவை தவிர மொழிபெயர்ப்புகள் வழியாக தமிழுக்கு வந்த இந்தியாவின் பிறமொழி படைப்புகளும் இங்கு கலந்து வாசிப்பில் பங்களித்துக் கொண்டிருந்தன

 

(2)

 

 

வெண்முரசுக்குள் நுழையும் ஒரு நவீன வாசகர் இவற்றைப் படித்திருக்கலாம் அல்லது பாரத கதையையே இப்பொழுது அறிகிறவராகவும் இருக்கலாம் வெண்முரசு அவரவர்கக்கான தளங்களை தன் கதையோட்டத்தைல் வைத்துக் கொண்டுதான் இருக்கிறது.  அவர்கள் இருவருக்குமான கட்டுரையாகவே இதை முன்னெடுக்க நினைக்கிறேன். மூவாயிரம் ஆண்டுகள் முன்பு நிகழ்ந்த ஒன்று தலைமுறைகள் மூலம் வழிவழியாக கடத்தப்பட்டு வருகையில் அவற்றைத் தற்கால புரிதலை வைத்து பெருக்கி விளங்கிக் கொள்வதும் சுருங்க விளங்கிக் கொள்வதும் இயல்பான ஒன்றுதான். நீதி, தத்துவம், அரசியல், பக்தி என பல தளங்களிலும் அந்த காவியம் வெவ்வேறு தரப்புகளால் பலவிதங்களில் அணுகப்பட்டும் விட்டது.   ஒவ்வொன்றும் தனக்கான நோக்குடன் அணுகுகின்றன. அதற்கடுத்த படியாக, இத்தனை ஆண்டுகளாக உபகாவியங்கள் முதல் நாட்டர் கதைகள் வரை அது தனக்குள் பலவற்றை  சேர்த்துக் கொண்டு பரந்து விரிந்து நிற்கிறது. இன்று மேற்கண்ட எதிலும் ஈடுபாடு இல்லாத ஒருவர்  வெறும் காவிய சுவைக்காக அதை முழுதிலும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றால் கூட அவர் இவ்வனைத்தையும் கொண்டும் / விடுத்தும் ஒட்டுமொத்தமாக தொகுத்துக் கொள்ளல் அவசியம். நவீன இலக்கியத்தில் வெண்முரசின் இடம் அதுதான்

 

மரபான மகாபாரதத்தில் முன்னூறாவது பக்கங்கள் கடந்துதான் குருவம்சத்தினரின் கதையை சொல்வது துவங்குகிறது. அதுவரை இந்தக் கதை பரசுராமரையும் நாகங்களையும் கருடன் பிறந்த கதையையும் அமுதம் கடைந்த கதையையுமே சொல்லிக் கொண்டிருக்கிறது. காரணம் அதன் வாயிலாகவே வாசிக்கையில் பின்னால் எழும் சில கேள்விகளுக்கான விடையை வாசகர் அறிந்து கொள்ள முடியும் என்கிற நோக்கமாக இருக்கலாம்.  வெண்முரசு, ”நான் என்கிற அகங்காரம் எழுந்த தருணத்தை ஆஸ்திகனுக்கு சொல்வதிலிருந்து துவங்கி அடுத்த அத்தியாயத்திலேயே அஸ்தினாபுரிக்கு வந்து விடுகிறது. அறத்தின் மீது இச்சையின் கொடி எழுவதுதான் முதற்கனலின் சாரம்சமான வரி.  சித்ரகர்ணி என்னும் சிம்மம் பசுவை வேட்டையாடுவதை காணும் பீஷ்மர் தன்  தம்பிகளுக்காக காசி இளவரசிகளை வென்று வரக் கிளம்பும் இடத்தில் மையம் கொள்கிறது. புறாவுக்காக தன்னை தானமாக அளித்த சிபி சக்கரவர்த்தியுடன் கதையும் இங்கு நினைவு கூறப்படுகிறது. இது சத்ரிய அரசனின் கடமை அரசியரின் கடமை எது என்கிற ஒரு தோற்றத்தை மின்னலாய்க் காட்டுகிறது. நித்யகன்னி நாவலில் யயாதி மாதவியுடம் அவளின் தந்தையாக் நின்று அவளிடம் வேண்டிக் கொண்டு சொல்வதை இங்கு சத்யவதி அம்பிகை அம்பாலிகையிடம் அழுத்தம் திருத்தமாக சொல்கிறாள்.  ”நீ செய்யவேண்டியது ஒன்றுதான். அஸ்தினாபுரிக்கு இளவரசர்களைப் பெற்றுக் கொடு. பெண்களுக்கெல்லாம் அதுதான் அரசபாதை” என்று சொல்கிறாள்.  ஒரு அரசியல் நெறி சார்ந்த அனைத்துமே முதற்கனலிலேயே துவங்கி ஒரு வடிவத்தைப் பெற்றும் விடுகிறது. பெண்கள் வாழ்வு குறித்த அபத்தத்தை சுட்டுகிறது. அவர்களைக் கவர்ந்து வந்த பீஷ்மர் அல்ல. அவர் யாருக்காக கவர்ந்து வந்தாரோ அந்த விசித்திர வீரியனும் அல்ல. அஸ்தினாபுரியின் இளவரசர்கள் சத்யவதியின் மைந்தரான வியாசரின் குருதிவழியாக பிறக்கிறார்கள். அந்தப் பெண்களின் வாழ்வு அந்தப்புறத்தில் தன் மைந்தர்களோடு மட்டுமே நிறைவுறுகிறது. இவ்வாறு சூழல்கைதியான அம்பிகை அம்பாலிகையின் வாழ்விற்கு இணையான ஒன்றுதான் அவர்களின் முன்னோர்களான சுனந்தை முதல் அசோகசுந்தரி வரையிலான பெண்களின் வாழ்க்கையுமாகவும் இருக்கிறது.  அனைத்தையும் சத்ரிய நெறி என்கிற ஒன்று அடக்கி விடுகிறது.

 


அதேநேரம்,  அவர்களின் தமக்கையான  அம்பையின் வாழ்வுதான் இந்த காவியத்திற்கு ஒரு துவக்கத்தை அளித்துச் செல்கிறது என்பதையும் காணலாம். அம்பை தன்னை எரித்துக் கொள்கையில் சமூகம் அவளை தெய்வமாக்கி ஆலயம் எழுப்பி அம்பையன்னையாக்குகிறது என்பதிலிருந்து ஒரு வாசிப்பின் மற்றொரு தளத்திற்கு இது இட்டுச் செல்கிறது. இங்கு பெண்ணைக் கவர்ந்து வரும் சத்ரிய அறமும் பெண்ணிற்கு பிழையீடு செய்யும் குடி அறமும் சுட்டப்படுகிறது. அறத்தின் மீது ஏறிய இச்சையின் கொடியை மற்றொரு அறம் சமன் செய்யச் சொல்கிறது என்றும் சொல்லலாம். இவ்வாறு சத்ரிய அறம் குடி அறத்தால் மாறுபடும் மற்றொரு சித்திரம் திருதனிடமிருந்து பாண்டுவுக்கு அரியணை வரும் தருணம். திருதனின் பட்டாபிஷேகத்தை குடிமக்கள் தடுக்கிறார்கள். அவர்கள் திருதனுக்குப் பதிலாக பாண்டுவுக்கு அரியணை அளிக்கச் சொல்கிறார்கள். இது அந்த அறங்களின் முரணியக்கம். இந்த நிகழ்வின் அடிப்படைதான் அடுத்த தலைமுறையில் துரியோதணன் தருமனின் அரியணைப் போருக்கே வித்திடுகிறது

 

வரலாற்றுப் பார்வையே ஒரு வாசகனின் அடிப்படைத் தகுதி என்று சொல்லலாம். வரலாற்றுப் பார்வை இல்லாத இலக்கிய வாசிப்பு என்பதே ஒருவித பக்தி வாசிப்புக்கோ அல்லது எதிர் மனநிலைக்கோ இட்டுச் செல்கிறது.  அவ்விரண்டு வாசிப்பின் அடிப்படைப் பிழை என்பது இன்றைய ஒழுக்க சிந்தனையுடன் பிரதியை ஒப்பிடுவது. அப்பொழுது முரண்படும் சம்பவங்களை இந்த மனநிலை திரிக்கிறது. எளிய உதாரணமாக, திரெளபதியை பாண்டவர்கள் ஐவரும் மணக்கும் இடத்தை சொல்லலாம். அது வெண்முரசில் கொள்ளும் வடிவும் இதுவரை உரைக்கப்பட்ட விதமும் மாறானவை. ஆனால் நமக்குச் சொல்லப்படும் கதையில் ஒரு பாலமித்ரா பாவனை ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.  வெண்முரசு அதை சொல்கையில் பாஞ்சால தேசத்தின் ஒரு தொல்மரபை எடுத்து வருகிறது. ஒரு ஆரம்ப கட்ட வாசிப்புக்கு முந்தைய பாலமித்ரா கதைசொல்லல் முறை ஏற்புடையதுதான். ஆனால் அடுத்த கட்ட வாசிப்பு என்பது அதை பாஞ்சால தேசத்தின் தொல்மரபுடன் இணைக்கிறது.

இந்த வரலாற்றுப் பார்வையின் ஊடாகவே, நாம் போரையும் இதன் தத்துவார்த்த இடங்களையும் அறியமுடியும். போர் நிகழ்வது ஏன்? அதற்குப் பின் அரசமைத்தது யார் யார் என்கிற கேள்விகள் வழியாக விடையைக் கண்டடையலாம்.  இவற்றை விளங்கிக் கொள்ள அந்த வரலாற்றுப் பார்வை தேவையாகிறது.

 

வெண்முரசு அது நிகழும் காலத்தை சொல்லியபடியே செல்கிறது. இரும்புக் காலகட்டம் வருவதற்கு முன் இது நிகழ்கிறது என்று ஒரு குறிப்பை அளிக்கிறது. சிந்துவெளி நாகரீகத்தின் எச்சங்களைக் கடந்து காந்தார தேசத்திற்கு பீஷ்மர் செல்லும் பயணம் வருகிறது. இவ்வாறு காலஓட்டத்தில் இது எப்பொழுது நிகழ்கிறது என்று சொல்வதுபோல தத்துவார்த்தப் பின்புலமும் அளிக்கிறது. ஆதி குணத்திலிருந்து அறங்கள் எழுந்து வந்து வேதங்கள், யமன் இந்திரன் உள்ளிட்ட தெய்வங்கள் என அனைவரின் காலத்தையும் சொல்கிறது. அங்கிருந்து இளையயாதவன் உரைக்கும் வேதமுடிபு கொள்கையை வந்தடைகிறது. காலத்தாலும் சிந்தனையாலும் இதன் வரலாற்றுப் பின்புலத்தை அறிவதற்கான சித்தரிப்புகள் நாவலிலேயே உள்ளன. இதில் இருக்கும் பெரும் சவால் என்பது அது நாவல் முழுவதும் உணர்த்தப் படுகிறதேயன்றி ஜெயமோகனால் உரைக்கப் படுவதில்லை என்பதுதான்.  ஆகவே, ஒன்றுடன் ஒன்றை தொடர்பு படுத்தி வாசிக்காமல் விடும் பட்சத்தில்,  இதில் உள்ளோட்டமாக ஓடும் இந்த சரடை அறியமுடியாது என்பது தான் வாசகருக்கு மிகப்பெரிய சவால்.

 

அவ்வாறு வாசிக்கையில், தொடர்ந்து வரும் பாத்திரங்களின் இயல்பையும் அவை உரைக்கும் சொற்களையும் மாறும் முகபாவங்களையும் வைத்துமே கூட நாம் சிலவற்றை அறியமுடியும். தமிழின் அறியப்பட்ட மற்ற பெரு நாவலுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு என்பது மேலோட்டத்தில் கதையும், வேறு தளத்தில் உணர்வும் மற்றொன்றில் அதன் அறக் குழப்பங்களும் இயைந்து ஓருவதுதான். இத்தகையை பெருங்கதையாடல்கள், கதாபாத்திரத்திற்கு அளிக்கும் சித்திரங்கள் வாசகருக்கு அவர்களை அண்மையாக்கிக் கொண்டே வருகின்றன. தருமரின் குழப்பம், சகாதேவனின் தெளிவு போல அந்த தருணத்தை வாசகர் உணர முடியும்.  கதாபாத்திரங்களின் எளிய சித்தரிப்பின் வழியாக பெரும் அதிர்ச்சியை வாசகன் உள்வாங்க இயலும்.  உதாரணமாக,  இளைய யாதவன் புன்னகைத்த படியாகவோ ஒவ்வொருவரையும் எதிர் கொள்ளும் சித்திரம் நாவல் முழுதும் வருகிறது.  போருக்கான அறைகூவல் வரும்போது அவனது வீரம் வெளியாகிறது. ஆனால், ஒட்டுமொத்த வெண்முரசிலும் இளைய யாதவன் முகம் சுருங்கி வருந்தி நிற்கும் சித்திரம் வரும் என்பது ஒரே ஒரு இடத்தில் வருகிறது.  அது  எழுதழலின் அந்த தூதுக் களம்.  தன் தூது ஏற்கப் படவில்லை என்பதும் அவன் முகம் சுருங்குகிறது. அது ஒரே கணத்தில் அறிந்த கதையையும் அந்த அதிமானுடனையும் ஒருசேரக் காட்டிவிடுகிறது.  இது உருவாக்கப் போகும் பேரழிவும் அங்கிருக்கும் அனைவருமே அழியப் போகிறார்கள் என்கிற சித்திரமும் ஒரு சேரக் கடத்திய வரி அதுதான்.

 

(3)

 

கிருஷ்ணா கிருஷ்ணா நாவலில் கம்சன் வைகுண்டத்தில் இருப்பதாக சொல்லி அதற்கு காரணம்  வருகிறது. அவன் சதாசர்வ நேரமும் கண்ணனையே நினைத்திருந்தான், அதனால்தான் அவன் வைகுண்டத்தில் இருந்தான் என்று ஒரு அத்தியாயத்தில் இந்திரா பார்த்தசாரதி குறிப்பிடுகிறார்.  இது எளிய  பக்தி மார்க்க சொல் அல்ல. இது  தத்துவப் பின்புலம் கொண்டது.  வெண்முரசில், நீலம் நாவலும் கம்சனையும் ராதையையும் இவ்வாறே சொல்கிறது. பாரத காலம் முடிந்து பல தலைமுறைகள் சென்று கிருஷ்ணன் ஒரு பெருந்தெய்வமாக எழுந்து வரும் போது எழுதப் பட்ட பாகவதம் இங்கு வெண்முரசு வரிசையில் ஒரு இடைச் செருகலாக வருகிறது.  ஒட்டுமொத்த வெண்முரசின் கதையோட்டத்திற்கு ஒட்டாத நாவல் நீலம்தான். அதன் அட்டையிலேயே பாகவதம் தமிழில் எழுதப் பட்டது என்றுதான் இருக்கிறது. ஆகவே, பாரத கதையோட்டத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. ஆனால் அது முழுவதுமே ஒரு தத்துவார்த்த பிண்ணனியும் பக்தியின் பித்துநிலையும் ஒருசேரக் கொண்டது. கிருஷ்ணனின் இன்றைய உருவம் அவனை ஆராதிக்கும் ராதையால் அவனுக்கு அளிக்கப் பட்டது. அவன் அன்றைய சமகால மானுடன் எனக் கொண்டாலும், பிற்காலம் அவன் மீது ஏற்றி வைத்திருக்கும் மாயக்கதைகள் அனைத்தும் கிருஷ்ண பக்தர்களால் ஆனது. அவன் ஆற்றியவற்றைக் கொண்டு பிற்காலத்தில் தொகுக்கப் பட்டது. அவனது தத்துவமும் அவனது அரசியலும் மதி நுட்பமும் வீரமும் கண்டபிறகு, பல தலைமுறைகள் கடந்து அவனால் பயன் பெற்ற குலங்கள் எழுந்து வந்தபின் அவனது பிள்ளைப் பிராயத்தின் மீது தத்துவார்த்தம் ஏற்றி வைக்கப் படுகிறது.  இவ்வாறே, கம்சனுக்கு அஞ்சி அவன் ஆயர்பாடியில் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்தவைகளின் தொகுப்பின் மீது ஒரு தெய்வத்தின் ஆராதனை ஏற்றப் பட்டிருக்க வேண்டும். நீலம் நாவல் அதை அப்படியே வெண்முரசில் வைக்கிறது.

 

கிருஷ்ணனின் இத்தகைய பல குணங்கள் பிரம்மத்தின் எட்டு குணங்களுக்கு ஒப்பிட்டு அவனுக்கு பக்தர்களால் பரம்பொருள் சித்திரம் அளிக்கப் பட்டாலும் அதை வெண்முரசு லாவகமாகவே கையாள்கிறது. பூதகி பாத்திரம் அதற்கொரு உதாரணம். குழந்தைகளுக்காக ஏங்கும் தாயாக அவள் வருகிறாள். கண்ணன் இதழ் பட்டதும் வீடுபேறு அடைகிறாள். ஒரு தத்துவார்த்த பார்வை கொண்டு எழுதப் பட்டிருப்பதாலேயே வெண்முரசு நாவல்களிலேயே யதார்த்த கோணத்தில் அணுகாமல் ஒருவித பக்தியும் பித்திநிலையும் கலந்த தளத்திலேயே ஜெ. அணுகுவதும் நீலம் நாவலில்தான். ஆனால் அதேநேரம் பக்தர்கள் கட்டமைத்த அதிசயங்கள் அற்புதங்கள் அனைத்திற்கும் அப்பாற்பட்டதுமாக இரு விளங்குகிறது. கோவர்த்தன கிரியை சுண்டுவிரலால் தூக்கிய உவமையை அது பாணர் சொல்லால் விளக்குகிறது.

 


நாவலில் இந்த வகை தத்துவார்த்த குறியீடுகளும் ஒரு நவீன வாசகன் ஆழ்ந்து சென்று அறிய வேண்டியதாக உள்ளது. அல்லது இதை பக்தர்களின் அற்புதங்கள் நிகழ்த்தும்  கடவுள் வரிசையில் வைத்து விடும் அபாயம் நிகழ்ந்து விடும். சியமந்தக மணி காளிந்தி கைகளில் கூழாங்கல்லாக ஆவது ஒரு உதாரணம். நாகர்களின் வருகையும் ஒரு குறியீட்டுத் தளம் கொண்டது. தமயந்தி ஒரு பெரு நாகனைக் கட்டி உறங்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறான் நளன். அங்கு அது சக்கரவர்த்தினியாகும் பெரு விழைவின் குறியீடு அது என்பதை உணராமல் போனால் அதன் பின் அவன் பேரரசனாவதை வேறொன்றாகப் புரிந்து கொள்ளும் அபாயம் நேர்ந்து விடும். பீஷ்மரை சூழ்ந்திருக்கும் அவரது உடன் பிறந்த அஷ்ட வசுக்கள் ஒவ்வொருவராக அவர்கள் விலகும் தருணமும் மற்றொரு உதாரணம். கானகத்திலிருந்து வரும் பீஷ்மர் சிறுவர்களான பாண்டவ கெளரவர்களைக் காண்கிறார். அவர்களில் பீமனின் துடுக்குத்தனம் மட்டுமே அவரைப் புன்னகைக்க வைக்கிறது. அதுவும், பாரதப் போரில் அவர் தன் முன் ஆயுதங்களின்றி நிற்கும் பீமனைக் கொல்லாமல் விடுவதும் தொடர்புடையது. மூன்றாவது நாவலுக்கும் பதினெட்டாம் நாவலுக்கும் இருக்கும் கதையோட்டத்தின் நுண்ணிய தொடர்ச்சி வாசகருக்கு சவாலான ஒன்று.

 

வெண்முரசு நாவல்களின் கூறுமுறையும் நேர்கோட்டிலானது அல்ல. அதன் துணை நாவல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிண்ணனியும் தனக்கான நாயகனும் கொண்டவை. அவற்றின் மையமும் வெவ்வேறு. குழந்தைகளின் கற்பனைக் கதையாக துவங்கும் காண்டீபம் அர்ஜுனனின் வீரத்தைப் பேசி பின் கொல்லாமை என்னும் பெரும் வீரத்தை அறிமுகம் செய்கிறது. வண்ணக்கடல் தன் உள்ளடக்கத்திலேயே ஒரு குறியீடு கொண்டது. மகாபாரதம் என்கிற காவியத்தை சமகாலத்தில்  தள்ளி நின்று பார்க்கையில் அது ஏற்படுத்தும் நகைப்பும் அருகே செல்லச் செல்ல அது அப்படியே உள்ளிழுத்துக் கொள்வதும் அதன்  வடிவமாகவே வருகிறது. முன்பு கூறிய நீலம் மற்றொரு உதாரணம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று உதாரணம் சொல்லிகொண்டு இதில் ஏதேனும் ஒரு நாவலைப் படித்து அதை வைத்து ஒட்டுமொத்த வெண்முரசையும் மதிப்பிடவும் முடியாது. அப்படிச் செய்கையில் அது ஒரு நகைப்பாக மட்டுமே எஞ்சி விடுகிறது.

 

 

ஒரு நாவலின் அமைப்பு என்பது தன் உள்ளடக்கம் அனைத்தையும் வாசகருக்கு உரைப்பது அல்ல. வாசகரும் அந்த படைப்பின் ஒரு அங்கமாகி அதை இன்னும் விரித்தெடுக்க முயற்சிக்க வேண்டும். பெருநாவலான வெண்முரசில் ஜெ. எதிர்கொண்ட பெரும் சவால் என்பது இதுவாகத்தான் இருந்திருக்கும் என்று நான் கருதுகிறேன். பாண்டவர்களின் குருதித் தந்தை முதல் பரீட்சித்தின் குருதித் தந்தை வரை மூல பாரதத்தில் இருக்கும் ஒருவித ரகசியத் தன்மையை வெண்முரசு அப்படியே காத்து வருகிறது. இதில் குந்தி விதுரர் உறவின் புரிதல், கிருஷ்ணன் மற்றும் கணிகர் பாத்திரத்தின் மர்மத்தையும் பேணிக் காத்தபடியே அதன் ஒருமை குலையாமலும்  சித்தரித்த படியே செல்கிறது. அறிந்த கதையில் வரும் இத்தகைய எதிர்பாரா முடிச்சுகளே நாவலை இன்னும் சுவாரசியமாக்குகின்றன. அபிமன்யூ உத்திரையைக் காண காத்து நிற்கிறான். உத்திரை அவனைக் காண வருகிறாள். அப்பொழுது அவள் இடதுகாலை அழுத்தி வைத்து நடப்பதை அவன் உணர்கிறான். எதுவும் பேசாமல் செல்லும் இந்த சம்பவங்களின் தொடர்ச்சிதான் அவன் உயிரைத் துச்சமென மதித்து போரில் வீழ்வது வரை அவனை வெறிகொண்டு செலுத்துகிறது. கர்ணன் இறக்கையில் பரசுராமர் அவனுக்கு நீர்க்கடன் செலுத்துகிறார். தான் துரத்திய சீடனுக்கு பரசுராமர் ஏன் நீர்க்கடன் செல்லுத்திறார் என்பது வாசக பார்வைக்கானது.  யாதவனான சிசுபாலனை நீ சத்ரியன் இல்லை சற்று வெளியே நில்லுங்கள் என்று துரியோதணன் சொல்லும் போது அஸ்வதாமன் முகம் சுருங்குகிறான். மனதளவில் அவன் மீது இரங்குகிறான். அவன் தந்தை துரோணரும் அந்த இக்கட்டைக் கடந்து வந்தவர் என்பதை உணரும் வாசகர் அதை உள்வாங்க இயலும்.  இவையனைத்துமே பெரும் பிண்ணனி கொண்டது. இவை வாசகர் கண்டடைய வேண்டிய எளிய உலகியல் காரணங்கள். நாவலில் இவை உரைக்கப்படாது.  இளையயாதவனின் துணையை அர்ஜுணனும் அவரது படையை துரியனும் வேண்டி வந்து நிற்பது ஒரு சரணாகதி தத்துவ நோக்கு உடையது. இந்திரநீலம் நாவலின் இறுதியில் சாத்யகி திருஷ்ட்யத்யும்மனுக்கு ஆச்சாரியன் போல இருந்து அழைத்துச் செல்வது வைணவ பரம்பரிய நோக்கு கொண்டது.

 

இவற்றை அறிய இந்த பின்புலங்கள் தேவை என்றில்லை. கதையோட்டத்தில் அவை நேராகத்தான் செல்கின்றன. ஆனால், இந்தப் பின்புலம் அறிந்தால் அது வேறொரு தளத்திற்கு வாசிப்பை இட்டுச் செல்லக் கூடும். ஒரு நவீன வாசகராக வெண்முரசினை அறிய இதன் புராணக் கதையையோ அல்லது சாக்தம் விசிஷ்டாத்வைதம் போன்ற தத்துவ பின்புலமோ அறிந்திருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. ஏதும் அறியாமல் ஒரு கதையோட்டத்திற்காகவும் கதாபாத்திரங்களின் உணர்வு நிலைக்காகவும் கூட வெண்முரசை வாசித்துவிட முடியும். மகாபாரதம் கதை சார்ந்த ஐயங்களை கூட இது தெளிவு படுத்தி விடும். ஆனால் வெண்முரசை இன்னும் அணுக்கமாக அணுகி அறிய இவற்றில் வாசகனுக்குத் தேவையான ஒன்று எது என்றால் என் வாசிப்பின் வழியாக வரலாற்றுப் பார்வைதான் முக்கியமானது என்று சொல்வேன். அந்த வரலாற்றுப் பின்புலத்துடன் இதை அணுகுகையில் பண்டைய சமூகம் முதல் இன்றைய நம் சமூகம் வரை கூட புரிந்து கொள்ளலாம். முயன்றால் தத்துவ தரிசனங்களையும் கூட அறியலாம். இதற்கு ஒரு உதாரணமாக, பார்க்கவ குல பிராமணருக்கும் ஹேகேய குல யாதவருக்குமான உறவைப் பார்க்கலாம்.

ஒருவர் அனல்குல பிராமணர்கள். மற்றவர் கன்றோட்டும் யாதவர்கள். வனங்களை அழித்து மேய்ச்சல் நிலம் உருவாக்க வேண்டி யாதவர்கள் பார்க்கவர்களை அணுகுகிறார்கள். அவர்கள் யாதவருக்கு அனல் எழுப்புகிறார்கள். இரு சமூகமும் இணைந்து செயல்படுகிறது. இவ்வாறு இணைந்து செயல்படும் சமூகங்கள் ஒரு தருணத்தில், ஒருவருக்கொருவர் பிணக்கு கொள்வதால் போர் எழுகிறது. அந்தப் போரின் விளைவாக யாதவப் பேரரசு உதித்து கார்த்தவீரியனின் அரசு அமைகிறது. ஆனாலும் இருவருக்குமான வஞ்சம் தொடர்கிறது. பார்க்கவ குலத்தில் இணையற்ற வீரரான பரசுராமனால் கார்த்தவீரியன் அழிக்கப் படுகிறான். அதன்பின் பரசுராமர் இருபத்தியோரு முறை பாரத தேசத்தை வலம் வந்து அனைத்து சத்ரியர்களை அழித்தொழிக்கிறார். புதிய அரசுகளை நிறுவுகிறார். குருஷேத்திரத்தில் ஐந்து குளங்களை உண்டாக்கி அதில் மூழ்கி தன் பாவங்களைக் களைகிறார். இது நிகழ்வது திரேதா யுகத்தில் என்பது கவனிக்கத் தக்கது.

 

பரசுராமனுக்குப் பின் ராமனின் அவதாரம் நிகழ்கிறது. அது துவாபர யுகத்தில் நிகழ்வது. ராமனால் சத்ரிய அரசும் நெறியும் மீண்டும் ஓங்குகிறது. அதன் பின் கலியுகத்தில் கிருஷ்ண அவதார காலத்தில் குருஷேத்திரத்தில் மீண்டும் சத்ரிய அழித்தொழிப்பு நிகழ்ந்து சத்ரிய அங்கீகாரம் இல்லாத வேடுவ, நிஷாத குடிகள் எழுந்து வருகின்றன. இந்த வரலாற்றுப் புரிதலின் மூலம் இந்த  அரசியல் ரீதியான முன்னேற்றத்தைக் காணமுடிகிறது

 

ஒரு கந்தர்வனைக் கண்டு அவன் அழகில் ஒரு கணம் தடுமாறியதால் பரசுராமன் தன் தாயின் தலையை கொய்கிறான். அதற்குப் பின் வந்த ராமன், ராவணனால் தன் விருப்பமின்றி கவர்ந்து செல்லப்பட்டு தனியே சிறைவைக்கப் பட்டிருந்தாலும் சீதையை அனல் புகுந்து தன் கற்பை நிரூபிக்கச் சொல்கிறான். இளைய யாதவன், ஐவரை மணந்து சூதாட்டத்தில் கணவனால் பணயம் வைக்கப்பட்டு அடிமையாக்கி அவைச் சிறுமை செய்யப்பட்ட திரெளபதிக்காக அந்த சத்ரிய அரசை அழிக்கிறான். இது அதே வரலாற்றுப் பிண்ணனி உணர்த்தும் சமூக ரீதியிலான முன்னேற்றம்

 

இவர்களில் பரசுராமன் குருவாகவும், ராமன் அரசனாகவும் விளங்கி தனக்கான சொல்லை உரைக்கிறார்கள். அவர்களுக்குப் பின் வரும் இளையயாதவன் அனலூட்டலும் ஆபுரத்தலும் வேளாண்மையும் கூட வேள்விதான் என்று வேதாந்தக் கொள்கையை உரைக்கிறான். இது தத்துவ ரீதியிலானது

 

ஒரு காவியத்தை அந்த வரலாற்றுப் பின்புலத்துடன் விளங்கிக் கொள்கையில் அதில் தன்னையறியாமலேயே  அதன் மற்ற நோக்குகளும் கலந்ததொரு முழுமையான வாசிப்புக்கு இட்டுச் செல்கிறது. அந்த வரலாற்றுப் புரிதலுடன் அணுகும் போது அந்தக் காவியத்தை மட்டுமன்றி இன்றைய உலகை, வணிகத்தை, அரசியலை, நம் நாயகர்களைக் கூட விளங்கிக் கொள்ள முடியும். அதைவிட முக்கியமாக பெரும் நம்பிக்கைகளும் ஏமாற்றங்களும் இல்லாமல் வாழ்வை எதிர் கொள்ளவும் முடியும்

தொடர்ச்சி:-  ஒ) முரசும் சொல்லும் - நிறைவுடன்...


No comments: