Saturday, November 28, 2020

ஞானத்தை அடைய பத்து வாயில்கள் - குரு - ஹெச். எஸ். சிவபிரகாஷ் ( தமிழில்:- ஆனந்த் ஸ்ரீநிவாசன்)

           ஆன்மீக அனுபவம் மிகவும் அந்தரங்கமானது. இங்கு மிகவும் உன்னதமாக ஆக்கப் பட்டிருப்பதும் அதற்கு இணையாகவே மிகவும் தவறாக பிரசாரம் செய்யப் படுவதும் ஆன்மீகம்தான். உடனடி பலன் என்ன எனத் தேடி அலையும் உலகில் அது ஒருவித சித்து வேலை என்று நகர்பவர்கள் உண்டு. சித்து வேலையிலேயே ஆழ்ந்து அதில் உலகியல் இன்பங்களைப் பெற்று உழல்வதும் உண்டு. தீர்க்க தரிசனம், ஞான திருஷ்டி போன்றவற்றை வைத்து பலனடையும் சாமியார்களும் உண்டு.

 

           ஹெச். எஸ். சிவபிரகாஷ் அவர்கள் கன்னட எழுத்தாளர். கவிஞரும் கூட. அவர் தன் ஆன்மீகத்தேடல் குறித்து எழுதிய Everyday Yogi" புத்தகம் மிகவும் ஆர்வமூட்டக்கூடிய ஒன்று.  ஹெச். எஸ். சிவபிரகாஷ் அவர்களின் தந்தை ஒரு கன்னடர். கன்னட அறிஞர் அவர். பல பல்கலைக்கழக துணைவேந்தர்களும், மந்திரிகளும் அவரது கருத்து கேட்க அவரது வீட்டில் வந்து காத்திருக்கும் அளவு செல்வாக்கு உள்ளவர்.  அவருக்குத் தன் தந்தை வழியாகவே இலக்கிய அனுபவம் உண்டாகிறது. அவரது தாயார் தமிழர். தன் தாயார் வழியாக சங்க இலக்கியங்களும் அவருக்கு நல்ல அறிமுகம் உண்டு. தன் குழந்தைப் பருவத்தில் பெற்ற அனுபவங்களும்,  தன் தந்தை தன் தாய் மீது காட்டிய வன்முறையும் அவரை சில குருமார்களை தேடிச் செலுத்துகின்றன. காஷ்மீர வீர சைவ மரபை சார்ந்தவர். மரபு வழி சம்பிரதாயங்களை கொண்ட மடங்கள், சத்யானந்தா குருகுலம்  உள்ளிட்ட நவீன மையங்கள், சித்தர்கள், சூஃபி ஞானி மற்றும் கிறிஸ்தவ மத தீர்க்கதரிசிகள் என தான் வாழ்வில் சந்தித்த அனைவரைப் பற்றியும் அதில் எழுதியுள்ளார். யாரையும் தேடி வனங்களுக்கு அலைவது போன்றது அல்ல. நம் அருகே இருப்பவர்கள். மிகவும் பரபரப்பான பெங்களூருவில் சாலையிலிருந்து சற்று விலகியுள்ள ஒரு மலைப்பகுதியில் இருந்த ஒரு சூஃபி ஞானி போல. ஞானிகள் ஆற்றும் அற்புதங்கள்கூட ஒருவித சோதனைகளே. அதைக் கடந்துதான் ஞானத்தின் பாதையில் செல்லவேண்டும். இந்த அனுபவங்கள் Everyday Yogi" புத்தகத்தில் உண்டு.

 


                     அறிதல் என்பது ஆனந்தம் அளிக்கவல்லதே. அதே நேரம் அது அளப்பறியது கூட. இலக்கியம், யோகம், தியானம், செயல், பக்தி என அனைத்தும் அறிதலுக்கான வழிகளே. ஆனால் அவற்றின் எல்லைகள எங்கனம் அறியமுடியும் என்பது திகைப்பை அளிக்கிறது. இவற்றில் இவை அனைத்தையும் சிறிது முயன்று பார்த்தவர்களும் இருக்கலாம். எதுவுமே துவக்கத்தில் ஒரு ஈர்ப்பும் செல்லச் செல்ல சலிப்பும் அளிக்கக் கூடியவையே. அந்த சலிப்பைக் கடந்து நிறைவை அடைவது ஒரு தவம். அது அனைவருக்கும் கைகூடுவதில்லை. சிலர் அறிந்து அதிலிருந்து விடுபடுகிறார்கள். சிலர் அறிந்து அதை தொடர்கிறார்கள். ஏன் இந்தச் சலிப்பு என்று அறியாமல்  விழிபிதுங்குவதை விட அதை அறிவது மேலானது. அந்தவகையில் அவரது சமீபத்திய புத்தகமான குரு மிகவும் முக்கியமான ஒன்று. நற்றிணை பதிப்பகம் வாயிலாக தமிழில் வெளியாகியுள்ளது.




          ஞானத்தை அடைய உறுதுணையான பத்து வாயில்களை இது சொல்கிறது. குரு, மந்திரம், தெய்வம், உடல், பிராணன், மனம், காமம், செயலும் வினையும், அகவொளி, பிறிதொன்றிலாமை என பத்து வாயிகள் குறித்து விளக்குகிறார். இவை படிநிலைகள் அல்ல. இன்றுடன் ஒன்று கலந்தவை. சிலருக்கு இதில் ஏதேனும் ஒன்று மட்டும் கூட உவப்பானதாக இருக்கலாம். மேலும் இந்தப் புத்தகம் அதற்கான எந்த ஒரு பயிற்சியையும்  விளக்கவில்லை. யோகப் பயிற்சிகளில் இருப்பவருக்கு எந்தெந்த பயிற்சிகள் மேற்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்கிறது. அவ்வாறு இல்லாதவருக்கு இலக்கியம் செயல் மற்றும் வாழ்வியல் சார்ந்து ஒரு வழியை காட்டுகிறது. இது அறுதியிட்டு ஒன்றைச் சொல்வது அல்ல.  பத்து வாயில்கள் வழியாக இந்தப் புத்தகம் அதை வாசிப்பருக்கு அனைத்து வழிகளை சுட்டி ஒரு திசை காட்டி போல நிற்கிறது. சென்று அடைவது வாசகரின் தன்முனைப்பு சார்ந்தது. 





    இந்தப்  புத்தகத்தை திரு.ஆனந்த் ஸ்ரீநிவாசன் அவர்கள்,  ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.    சிக்கலான விஷயத்தை மொழிபெயர்ப்பில் வாசிக்கும் போது அதை எளிய மொழியில் சொல்லி நீர்த்து போகச் செய்வதும், ஸ்லோகங்களை கடின மொழியில் சொல்லி அச்சுறுத்துவதும்  நிகழ்ந்துவிடும். அவ்வாறு இல்லாமல் மிகவும் நேர்த்தியாக மொழிபெயர்ப்பு செய்யப் பட்டிருக்கும் புத்தகம் இது. இதில் பல கவிதைகளை எழுத்தாளர் குறிப்பிட்டிருக்கிறார். சில வேத மந்திரங்கள் கூட உள்ளன அவையும் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.  ஞானத்தின் பாதையை அறியாதவருக்கும், அறிய விரும்புபவருக்கும்ஆன்மீகத்தில் இல்லக்கில்லாமல் ஓடுபவருக்கும்,   இலக்கை நோக்கி ஓடுபவருக்கும் என அனைவருக்குமே சற்று அமர்ந்து தொகுத்துக் கொள்ள இந்தச் சிறிய புத்தகம் உதவிகரமாக இருக்கும்.


குரு - நற்றிணை பதிப்பகம்

No comments: