Tuesday, February 23, 2021

ஆள்தலும் அளத்தலும் சிறுகதை தொகுப்பிற்கான முன்னுரை


எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் என் முதல் சிறுகதைக்கு அவரது இணையதளத்தில் ஒரு நீண்ட விமர்சனத்தை எழுதினார். .  விடிவு என்கிற அந்தக் கதை என் வாழ்வில் ஒரு நேரடி அனுபவமே. இந்தத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளில்  நேரடி அனுபவத்தை அப்படியே கதையாக்கியதும் அது ஒன்று தான். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் நண்பர்கள் குழுவில் இருந்த எழுத்தாளர் சிவா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சொல்வனம் இதழின் ஆசிரியர் குழுவிலும் உள்ளார். அவர் மற்ற அனைவரையும் எழுதுவதற்காக தொடர்ச்சியாக வற்புறுத்தியும் வந்தார். அது என் முதல் கதை என்பதால் பிரசுரமானதும் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு  ஒரு ஆர்வத்தில் அனுப்பி வைத்தேன். அதற்கான அவரது  விமர்சனம் என் மீதான அக்கறையின்பால் எழுதப்பட்டது. அந்தக் கதை முந்தைய எழுத்தாளர்களில் யாருடைய சாயலில் உள்ளது; அவ்வகை கதைகள் எவ்வாறெல்லாம் எழுதப்பட்டுள்ளன;  எனது கூறுமுறையில் நல்லவை அல்லவை என்னென்ன; இனி வரும் கதைகளில் நான் தொடர வேண்டியவை என்ன விட வேண்டியவை என்னென்ன என அவர் விரிவாக எழுதினார். தான்தோன்றித்தனமாக ஒரு தெருவோரத்தில் பாடிக்கொண்டிருப்பவனைக் கண்ட ஒரு இசைமேதை இறங்கி வந்து அவனுக்கு அதன் நிறைகுறைகளை விளக்கிச் சொல்வது போன்றது அது.  அந்த சிறுகதைக்குப் பல வாசகர்களும் தங்கள் விமர்சனங்களை எழுதி அவையும் தளத்தில் வெளியாயின. இந்தத் தொகுப்பு இன்று வெளியாக அன்று அவர் காட்டிய அன்பும் அக்கறையும் ஒரு முக்கியக் காரணம். அவருக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.


    எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் புகழ்பெற்ற வாசகம் ஒன்று உண்டு ’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல; ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்து கொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’ என்று. இந்தத்தொகுப்பில் நானும் அதற்கான என் முதலடியையே எடுத்து வைத்திருக்கிறேன். அவரது மோஹித்தே, நாட்டுமருந்து ஆகிய கதைகள்  நான் இலக்கியத்துக்கும் வணிக எழுத்துக்கும் வித்தியாசம் அறியா காலத்தில் படித்தவை. மிதவை நாவல் பிற்காலத்தில் அறிந்து வாசித்த ஒன்று. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் மூலமாக அவரை அணுகி உரையாட வாய்ப்புகள் வாய்த்தன. இவை தொகுக்கப்பட்டால்  அவருடைய  முன்னுரை வேண்டும் என்று நான் கதைகளை எழுதிய போது நினைத்துக்கொண்டேன். அவரும் ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்துள்ளார். அவரது முன்னுரையை பெரும் கெளரவமாகவும் ஆசியாகவும் கருதுகிறேன். வணிக இதழ்களில் தன் எழுத்துக்கள் மூலம் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்த எழுத்தாளர்களான சுஜாதா மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரையும் இக்கணத்தில் நினைத்துக்கொள்கிறேன்.




சமூக வலைதளங்கள் தமிழுக்கு அறிமுகமான சமயத்தில் வலைப்பூ, ஆர்க்குட் போன்றவற்றில் சில பத்திகள் எழுதியிருக்கிறேன். அவற்றில் நிகழும் தொடர் விவாதங்களில் பங்கெடுத்துப் பத்திகளாக எழுதினேன். ஆனால் எழுத்து என்பது வேறு; அது டைரி எழுதுவது போல அன்றாட அலைச்சல்களின் தொகுப்பு மாத்திரம் அல்ல; அன்றாடங்களிலிருந்து நாம் உணரும் ஒன்று என்று நம்புகிறேன். என்னுடைய கதைகளில் ஒரு சிறுகதைக்கான தருணம் இருக்கிறதா என்று கவனிக்கிறேன். என் கதைகளின் வழியே நான் சொல்ல  வருவது வெறும் அதிர்ச்சியோ அல்லது நகைச்சுவையோ மாத்திரம் அல்ல என்பதில் கவனமாக இருக்கிறேன். கதைகளை வாசிப்பவரை மகிழ்விக்கும் நோக்கமோ அவரது அறிவுக்கண்ணை திறந்துவைக்கும் ஆவலோ இருந்ததில்லை. நான் அறிந்த களங்கள் எனக்கு சிலவற்றைச் சொல்ல இலகுவாக இருக்கின்றன என்பது மறுப்பதற்கில்லை. அந்தப் பின்புலம் உதவியாக இருந்தது. அனுபவங்கள் அறிதல்கள் என அனைத்தையும் ஒரு கலைடாஸ்கோப்பில் போட்டு சுழற்றிச்சுழற்றிக் காட்டுவது போலத்தான் இவை வெளிப்பட்டிருக்கின்றன.


இந்தத் தொகுப்பில் உள்ள ‘ஆர்வலர்’ கதை  எழுத்தாளர்கள் அரவிந்தன் மற்றும் ஆர். அபிலாஷ் ஆகியோர் நடுவர்களாக இருந்த கிழக்கு பதிப்பகத்தின்  ’சென்னையர் கதைகள் -2018’ சிறுகதை தொகுப்பில் தேர்வானது. மற்ற கதைகளில் நான்கு சொல்வனம் இணைய இதழிலும் மூன்று பதாகை இணைய இதழிலும் வெளியாகின. இரு கதைகள் இங்கு நேரடியாகப் பிரசுரமாகின்றன. நண்பரும் இலக்கிய விமர்சகருமான ஜா.ராஜகோபாலன் ஒரு சிறந்த திருத்தரும் ஆவார். அவரது ஆலோசனைகள் மிகவும் உதவியாக இருந்தன.  நண்பர் அருணாச்சலம் மற்றும் ஆனந்த் ஸ்ரீநிவாசன், தனா ஆகியோரும் ஒன்றிரண்டு தவிர அனைத்து கதைகளையும் பிரசுரமாவதற்கு முன்பே படித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். அரங்கசாமி, ஷிமோகா ரவி, சுனில் கிருஷ்ணன், சுந்தரவடிவேலன், சுரேஷ்பாபு, செளந்தர்ராஜன், நட்பாஸ் ( பதாகை ), கிரிதரன்(சொல்வனம்) ஆகியோரும் ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளனர். வாசகசாலை அமைப்பினர் இதன் மூன்று சிறுகதைகளை தங்கள் அமர்வுகளில் விவாதித்துள்ளனர். இவர்கள் தவிர இலக்கிய வட்ட நண்பர்கள் ஒவ்வொரு கதை வெளியான போதும் தம் விமர்சனங்களை முன்வைத்து உரையாடினர். இவையனைத்தும் எனக்குப் பெரும் உற்சாகத்தை ஊட்டின. ’நற்றிணை’ யுகன் அவர்கள் பதிப்பித்த என் முதல் மொழிபெயர்ப்பு நாவலான ’தம்மம் தந்தவன்’ எனக்கு ஏற்கனவே இலக்கிய உலகில் நல்ல அறிமுகத்தைக் கொடுத்திருக்கிறது. 


ஒரு ஆற்றைக் கடந்து செல்ல அதன் நடுவில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கிற தென்னை மரத்தில் நடப்பவன் போல முழுக்கவனத்துடன் தான் என் லெளகீகத்தில் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நடுநடுவே சிரிப்பது, அழுவது, அன்பு பாராட்டுவது, சீற்றம்கொள்வது என எதைச் செய்தாலும் ஒரு கண்ணை அந்த மரத்தின் மீது வைத்தபடியேதான் செய்ய இயல்கிறது. இருந்தாலும் என் ஆர்வத்தைப் புரிந்து  கொண்டு குடும்பத்தினரும் என் வாசிப்புக்கும் எழுத்துக்கும் ஆதரவாக இருக்கின்றனர். 

மேற்சொன்ன அனைவருக்கும், இந்தத் தொகுப்பை பதிப்பிக்கும் ’யாவரும்-பதாகை’ பதிப்பகத்தாருக்கும் இத்தருணத்தில் என் அன்பும் நன்றிகளும்.

R.காளிப்ரஸாத்

திருமுல்லைவாயல், சென்னை


ஆள்தலும் அளத்தலும்’ சிறுகதை தொகுப்பிற்கு எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்களின் முன்னுரை

புத்தகம் வாங்க

2 comments:

RV said...

மனமார்ந்த வாழ்த்துக்கள், காளிபிரசாத்!

காளி said...

மிக்க நன்றி ஆர்.வீ