பசி வழி ஞானம்
நாவலில் ஒரு இடத்தில் 'காமோகாரிஷீத்: மன்யுரகாரீஷீத்:' என்று சொல்வதில் குறிப்பிடப்படும் ரிஷிகள் யாரு என்று ஐயம் கேட்கிறார்கள் ஊரில் உள்ளவர்கள். வாத்தியார் அதற்கு பதில் சொல்கிறார். அது நான் செய்த அத்தனை தவறுகளும் தன் காமத்தால் செய்தேன் . கோபத்தால் செய்தேன் என்று உணர்ந்து சொல்வது என்று.
எழுத்தாளர் கரிச்சான்குஞ்சு என்று அறியப்படும் ஆர்.நாராயணசாமி அவர்கள் எழுதி, தமிழ் இலக்கிய உலகில் மிகவும் புகழ்பெற்ற நாவல் பசித்த மானிடம். கணேசனும் கிட்டாவும் தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட இடர்களும் பெற்ற புரிதல்களும் நாவலின் கதை. கும்பகோணம் மன்னார்குடி நகரங்களும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களும் கதைக்களம்.
ஒருபுறம் காமத்தால் அல்லாடும் கணேசன் மற்றொரு புறம் கோபமும் சந்தேகமும் கொண்டவனாய் மாறியிருக்கும் கிட்டா. பணம் இல்லாததால் இளம் வயதில் டிரைவர் / மெக்கானிக் வேலைக்கு போகும் கிட்டா சிறு வயதுமுதல் எதிர்பார்ப்பது தான் ஒரு முக்கியஸ்தன் என்று மற்றவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதுதான். சிறுவயதில் அவமானப்பட்டு ஊரை விட்டு கிளம்புவதிலிருந்து தொடர்ந்து வருவது அவனுடைய அணுக்கமான மக்கள் அவன் மீது காட்டும் மரியாதையின்மை. பின் வேலைதேடி அலைவது, பின் மணம் கொள்ளப்போகும் காலங்களிலும் செட்டியார் மகள் உதாசீனப்படுத்துவது தன் அக்காள் மகள் ஏற்க மறுப்பது இறுதியில் தன் மகன் கூட தன்னை எதிர்ப்பது என இந்த உளைச்சலில் இருந்து அவன் மனம் விடுபடவில்லை..
காமம் வேட்கை ஆகிய பசியின் வழி எழுந்து வந்து அதற்கான உணவு உண்ட பின்னும் அடங்காத இருவரின் வாழ்க்கையையும் ஞானியாக மாறிய கணேசன் உணர்ந்து உரைக்கிறான், உடலின் பசி உள்ளதின் பசி இரண்டும் கடந்தபின்னும் அந்தப் பசித்த மானிடங்களை நிறைவடையாமல் வைத்திருப்பது என்ன என்று ஆராய்கிறது நாவல். கணேசனை குருவாக உணரும் பசுபதியின் சொற்களை இறுதியில் நினைத்துப் பார்க்கிறான். ஒருவகையில் அவனுக்கு சீடனாக வந்த குருவாக பசுபதியே இருக்கிறான்.
நாவலில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது அந்த முன்னோடி எழுத்தாளரான கரிச்சான்குஞ்சுவின் தெள்ளிய மொழிவளம். ஒரு சிறிய நகரத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் எந்தளவு ஒரு குழுவாக இருக்கிறார்கள் என்பதை சொல்வது நாவலின் குறிப்பிடத்தக்க ஒரு இடம். சிங்கத்தின் ஆள் மீது ஜவுளிக்கடைக்காரருக்கு ஈர்ப்பு. அவர் அவனை தன்னிடம் அனுப்ப கேட்கிறார். அப்போது சிங்கம் ஜவுளி கடைக்காரரிடம் சொல்கிறார்.." யோவ்.. இது அயர்ன் ராஜாபார்ட் சரக்கு.. இவ்ளோ செலவு பண்ணி இவனை தயார் பண்ணிருக்கேன்.. உனக்கு பைசா இருந்தா சொல்லு.. இதே போல இன்னொண்ணு தயார் பண்ணி தறேன்.. இவனை தர முடியது.. "
குறிப்பிடத்தக்க மற்றொன்று. மனிதர்கள் மீதான நுட்பமான வர்ணனை. தோப்பூர் எனும் கிராமத்தில் ஒரு கணக்கப்பிள்ளை இருக்கிறார். தோப்பூரின் அத்தனை நில பத்திரபதிவுகளும் கொடுக்கல் வாங்கலிலும் பஞ்சாயத்துகளிலும் அவர்தான் முக்கிய புள்ளி. தீர்ப்பு அல்லது முடிவு எட்டப்படும் முன் அவர் வார்த்தைக்கும் பெரிய மதிப்பு உண்டு. அவர் வைத்ததுதான் சட்டம். பட்டாமணியார் வாரிசு இல்லாதவர் என்பதால் ஊரில் உள்ள பாட்டிகள் விதவைகள் எல்லாருக்கும் இவர்தான் ராஜா மந்திரி எல்லாமே என்கிறார் கரிச்சான் குஞ்சு. விவசாயம் சார்ந்த குத்தகை உழவுப்பணம் ஆகிய அனைத்திற்கும் இவரை நம்பித்தான் இருக்கிறார்கள். கிட்டா வேலைதேடி வெளியூர் போகும்போது கிட்டாவின் அம்மா அவனிடம் சொல்வதே, எதானாலும் நேரில் வந்து சொல். கடிதம் எழுதினால் அவர் வழியாகத்தான் நமக்கு வந்து சேரும் என்று.
கணேசனுக்கு பூணூல் போட்ட கல்யாணத்தில் கிடைத்த மொய்பணத்தை எண்ணி வாத்தியாரிடம் கொடுக்கையில், இதை வைத்து இன்னும் பலருக்கு சிறப்பாக நல்லது செய்யவேண்டும் என ஆசீர்வதிக கிறார் கணக்கப்பிள்ளை சீனி ஐயங்கார். அவருடைய மேன்மையான மனம் அப்போது எழுந்து வருகிறது. ஆனாலும் அவர் இதை எப்பொழுது வேண்டுமானாலும் இதை தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வார்; அப்போது அவரிடம் சொல்ல தனக்கு சரியான பதில் உள்ளதா என யோசித்து வாங்கிக் கொள்கிறார் வாத்தியார். அனாதையான கணேசனுக்கு ஒரு சுப காரியம் செய்த திருப்தியில் ஊரே இருக்கும் போது, அந்த நேரத்தில் சீனியின் மேன்மை யதார்த்தமாக வெளிப்படுகிறது என்பதும் அதை அந்த ஊர் எவ்வளவு கவனமாக கையாள்கிறது என்பதும் எளிமையாகவும் நேரடியாகவும் சொல்லிவிடுகிறார்.
மன்னார்குடியை சேர்ந்தவனாக இருந்தாலும் மன்னார்குடியிலேயே நிகழும் இந்த நாவலை இந்த வாரம்தான் வாசித்தேன். கரிச்சான் குஞ்சு ஒரு தமிழாசிரியர். மன்னார்குடியில் நான் பயின்ற பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றியுள்ளார். ஊரின் இடங்களை குறிப்பிடுகிறார் ஆனால் நிலம் பற்றிய பெரிய வர்ணனைகள் இல்லை. அதேநேரம் மனிதர்கள் மீதான அவதானிப்பும் வர்ணனையும் திகைக்கவே வைக்கின்றன. இது எழுதப்ப ட்ட காலத்துக்கும் முன்னால் நிகழும் கதை. காமம் ஆசை எல்லாம் அப்பட்டமாக எழுதுகிறார். சில நேரங்களில் பக்கங்களைப் புரட்டவே தயக்கமாக இருக்கும் அளவு கதாபாத்திரம் மீது கருணை உண்டாகிறது. அந்த 'அப்பட்டமான' என்பது காமத்தை வர்ணிப்பதில் இல்லை. கதையோட்டத்தில்தான் இருக்கிறது. தொழுநோயாளிகளின் பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை தகாஉறவுகளின் போது எழும் மனவோட்டத்தை வர்ணிக்கையில் அவர் கையாலும் இயல்புத்தன்மை குறிப்பிடத்தக்கது. இலக்கியத்தின் எல்லைகளை மீறும் எழுத்திற்கு பசித்த மானிடம் ஒரு முன்னோடி படைப்பாக என்றுமே இருக்கும்
No comments:
Post a Comment