Tuesday, August 17, 2021

அர்ச்சகர் சட்டம் - எனது எண்ணங்கள்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறது. இதற்குள் திமுகவின் அரசியல் இருக்கிறது என்பதையும் அது மக்களை திசை திருப்புகிறது என்பதையும் விவாதத்திற்கு அப்பால் வைத்து விட்டு யோசிக்கிறேன். இந்த வழக்கு நீதி மன்றத்தில் உள்ளது. நாளை என்ன நிகழும் என தெரியாது. இதன் சமூக ஏற்பும்  எப்படியிருக்கும் என  தெரியாது. இதுவே தொடரலாம். மாற்றமடையலாம். ஆனால் அவ்வாறு  மாற்றமடைகையில்  அதில் அரசு தடை இருக்காது என்று சட்ட ரீதியாக சொல்லியிருக்கிறது என்கிற கோணத்தில் பார்த்தாலும் இது ஏற்கத்தக்கது. 

 


துவக்கம் முதலே இங்கு அர்ச்சகர் என்கிற பொறுப்பு / உரிமை  ஒரு குடும்பத்திற்கு உட்பட்டதுதானே ஒழிய ஒரு சமூகத்திற்கு உட்பட்டது அல்ல.  இப்போது ஒரு குறிப்பிட்ட புராதன கோயிலை எடுத்துக் கொள்ளுங்கள் அங்கு தொடர்ச்சியாக வரும் தலைமுறையினர் அர்ச்சகராக இருப்பார்கள்.  அவர்கள் தவிர வேறு யாரும் அர்ச்சனை செய்ய இயலாது. அதாவது பொதுப்புரிதல் படி  பிராமணர்கள் அனைவரும் அர்ச்சகர்கள் அல்ல. எல்லா பிராமணர்களும் கருவறை புக இயலாது. சொல்லப்போனால் ஒரு கோயில் அர்ச்சகர் மற்றோரு கோயிலுக்கு கருவறை புக முடியாது. தலைமுறையாக வரும் குடும்பத்தினர்தான் அர்ச்சனை செய்ய இயலும்.

 

இங்கே என் ஊரைச் சுற்றியுள்ள (திருமுல்லைவாயல்) நான்கு அம்மன் கோயில்களை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஒன்று  மாசிலாமணீஸ்வரர் - கொடியிடையம்மன்  கோயில் அடுத்து  ஸ்ரீமன்னாதீஸ்வரர் - ஸ்ரீ பச்சையம்மன் கோயில் அதற்கடுத்து ஸ்ரீவைஷ்ணவி அம்மன் கோயில் நான்காவதாக ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில். இதில் கொடியிடையம்மன் கோயில் தஞ்சசைப்  பெரிய கோயிலுக்கும் புராதனமானது.   கோயிலில் பரம்பரையாக அர்ச்சனை செய்யும் குருக்கள் இருக்கிறார்.  வைஷ்ணவி அம்மன் கோயில் தனியார் கோவிலாகும். நூறாண்டுக்குள் தான் இருக்கும். ஆனால் இந்திய அளவில் அறியப்பட்டதும் ஆகும். அங்கு அவர்களால் நியமிக்கப் பட்ட அர்ச்சகர் இருக்கிறார். இங்கு பலருக்கு குலதெய்வமாக விளங்கும் பச்சையம்மன் கோயில் 800 வருடங்கள் பழமையானது. அதன் அர்ச்சகர்கள் நீலகண்டநாயனார் வழி வந்தவர்கள். அவர்களும் பிராமணர்கள் அல்ல. மற்றது ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில். அது நாடார்மகாஜனங்களின் கோயில். அங்கும் அர்ச்சகர்கள் பிராமணர்கள் அல்ல.

 

பொதுவாகவே இந்து மதம் தனக்கான அதிகார மையம் என ஒன்றை கொண்டிருப்பது இல்லை.  நானோ நீங்களோ பணம் திரட்டி ஒரு கோயில் கட்டி அதை பூஜித்தும் வரலாம். அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. நெடுஞ்சாலையில் காணும் பல அனுமன் கோயில்கள், மேல்மருவத்தூர், வேலூர் பொற்கோயில் முதல் லிங்க பைரவி வரை அத்தகையவையே. அந்தக் கோயிலுக்கு அதை நிர்மாணித்தவர் வழக்கப்படி எந்த ஜாதியினரும் அர்ச்சகராகவும் இருக்கலாம். அதுவும் தடைசெய்யப்பட்டதல்ல. அதன் வழிபாட்டு முறையை நீங்களே வகைப்படுத்தியும் கொள்ளலாம். அதேபோல மடங்களும் நீங்கள் நிறுவலாம். அது சங்கரமடம் போல இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. சத்குருவை சங்கரமடமோ ஆதீனமோ கட்டுப்படுத்தினார்களா என்ன?

 

ஆகவே இங்கு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுதான் என சொல்லிவிட முடியுமா? ஒருவிதத்தில் ஆம். ஆனால் புராதன கோயில்கள் அனைத்திலும்  பெரும்பாலும் பிராமணர்களே அர்ச்சகர்கள் என்பது மறுப்பதற்கில்லை. அவர்கள்  அந்தக் கோயில் நிர்மணிக்கப்பட்ட காலம் முதற்கொண்டு  பரம்பரையாக வரும் தொடர்ச்சி. அந்தப் பரம்பரை முறை செல்லாது என தமிழக அரசு ஏற்கனவே சட்டம் இயற்றி அதுதான் இன்று நடைமுறைப் படுத்தப்பட்டது. இதை, அன்றைய மன்னர் அரசு அளித்ததை இன்றைய அரசு ரத்து செய்து மாற்றியமைக்கிறது என புரிந்து கொள்ளலாம். 

 

இங்கு வரும் எதிர்ப்பு என்பதற்கும்சாதனை என்பதற்கும் இது பொதுவாக அவ்வாறு   பிராமண சமூகத்தின் ஒரு முக்கியமான இடமாக இது கருதப் படுவதே ஆகும். இவற்றில் ஏற்கனவே பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் இருக்கும் கோயில்களுக்குள் சில காரணங்களால்  அடுத்து அதைத் தொடர வாய்ப்பில்லாமல் நிற்கும் பட்சத்தில் அங்கு பிராமணர் ஒருவர் அர்ச்சனை செய்ய வந்தால் அங்கு அதற்கான ஏற்பு இருக்கும். அவ்வாறு இல்லாமல் மாறி நிகழ்ந்தால், பிராமணர் அர்ச்சகராக இருக்கும் இடத்தில் பிராமணரல்லாதார் அர்ச்சகராக வரும்போது  அதற்கான ஏற்பு இருக்குமா என்றால் இருக்காது. கிட்டத்தட்ட அதுதான் இன்றைக்கு எழும் கண்டனங்களுக்குக்  காரணம். 

 

இந்த கோயில் அர்ச்சனை மரபை இந்நாள் வரை தொடர்ந்து கொண்டு வந்ததில் பிராமண அர்ச்சகர்களின் பங்கு உள்ளதா என்றால் கண்டிப்பாக உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக்  கோயில்களுக்குக்கும்   மூன்று வேளைக்கு நிகழும் பூஜைக்கான குறைந்த பட்ச தொகையைத் தருகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். சென்னை நகரிலேயே நான் சென்ற சில கோயில்களில் சுவாமிக்கு எண்ணெய் டின் வாங்கி கொடுங்க என்று கேட்டு வாங்கி விளக்கேற்றினார். அறநிலையத்துறை விளக்கேற்ற எண்ணெய் கூட தருவது இல்லை. கிராமப்புறங்களில் உள்ள கோயில்களில்  தனது வீட்டில் சமைத்தவற்றை கொண்டுபோய் வைத்து கடவுளுக்குப் படைத்தும்  அதை இத்தனை வருடங்களாக தொடர்ச்சியாக ஆற்றியவர்கள் அவர்கள்தான்.  இதுநாள் வரை தர்மத்தை பேணிக்காத்ததில் அவர்களின் பங்கு பெரியது. 

 

இரண்டாவதாக, சுயமரியாதை இயக்கத்தின் எழுச்சிக்குப் பிறகு பிராமண சமுதாயம் கிண்டலுக்கும்  ஆளானது.  முதலில் அபிராமண இயக்கம் என்று பெயர் கொண்டு துவக்கப் பட்ட சுயமரியாதை இயக்கத்தின் தொடர் செயல்பாடுகள் பிராமண சமூகம் தன்னை  சுய விமர்சனம் செய்யவும் ஒடுங்கிக் கொள்ளவும் வழி வகுத்தன. அக்ரஹாரங்கள் மெல்ல அருகியதும் நதிக்கரையோர பிராமணர்கள் மொத்தமும் வாழ்வாதாரத்திற்காக நகரத்தை நோக்கி இடம் பெயர்ந்ததும் நிகழ்ந்தது. இன்று சென்னை தவிர பிற நகரங்களில்  , முன்பு அக்ரஹாரங்களாக இருந்த நகரங்களில் கூட புரோகிதர்கள் இல்லாத நிலைதான். வேதம் பயின்ற / அர்ச்சக பிராமணர்களை விடவும் உலகியல் வேலைக்கு வந்த குமாஸ்தா பிராமணர்கள் முக்கியத்துவம் பெற்று  பல துறைகளில் கோலோச்சினார் கூட. இதில் விமர்சனம் ஏதும் இல்லை. யதார்த்தத்த்தில் புரிந்து கொள்ளத் தக்கதே. மெல்ல பிராமண சமூகம் பிற வேலைகளுக்குள் இறங்க  அவற்றின் நியாயத்தை பொது சமூகமும் ஏற்றுக் கொண்டது. அதேபோல பிராமணர்கள் கோயிலுக்குள்  மெல்ல தன இடத்தை விட்டுத் தருவதும் நல்லதே.  மெல்ல மெல்ல தன்னை சுற்றியிருந்த தினசரி அனுஷ்டானங்களையும் கைவிட்டது. அது அந்த சமூகத்தாலேயே ஏற்றுக் கொள்ளவும் பட்டது. அதை  தனக்குள்ளே  நியாயப் படுத்தவும் செய்தனர். மெல்ல மெல்ல அது வேஷம் போடத் துவங்கியது. வேதம்தான் முக்கியம்  என்று வெளியே பேசுவதும் ஆனால் தன பிள்ளைகளுக்கு தினசரி சந்தியா வந்தனம் கூட செய்ய சொல்லித்தராமல் விட்டுவிடுவதும் நிகழ்ந்தது.  வேதம் ஓதும் பிராமணர்களும் அர்ச்சக பிராமணர்களும் ஆதரவு இல்லாமல் விடப்பட்டனர் என்பதும், இன்றைக்கும் அவர்களில் பலர் திருமணமும் கூட ஆகாமல் இருப்பதும் உண்மை. 

    

ஆனால் அதேநேரத்தில் அர்ச்சகர்களாக இருந்த பல பிராமணர்கள் கோயிலை விடாமல் இருந்தனர். பஞ்ச காலத்திலும்  நைவேத்தியம் குறை வைத்தார்கள் இல்லை. இதுநாள் வரை கோயில் மரபை தன்னுடைய தலைமுறைகளுக்கு அவர்களே கடத்தி வந்தனர். தட்சணை என்பது ஒரு சில பெரிய கோயில்கள் தவிர வேறு எங்கும் கிடைப்பதே இல்லை. அறநிலையத்துறை அவர்களுக்கு அளிக்கும் மாத சம்பளம் ஐந்நூறு அல்லது அறுநூறு என்கிறார்கள். அவர்களின் வாழ்வு  என்பதே சொந்த சமூகத்தாலும் பொது வெளியிலும் நுட்பமாக புறக்கணிக்கப்படும் ஏளனம் செய்யப்படும் ஒன்றே. இன்று அவர்களுக்காக குரல் கொடுக்கும் உலகியல் பிராமணர்களோ  பிராமண சங்கங்களோ  ஒருகாலமும் அவர்கள் கூட நிற்கப் போவதும் இல்லை. எல்லாம் வெறும் கண் துடைப்புத்தான். ஆதரவு இல்லாத ஏதும் தானாக காணாமல்தான் போகும். அர்ச்சகர்கள் / வேத விற்பன்னர்கள் தன்னுடைய மைந்தர்களைக் கொண்டு அதைத் தொடர இயலாமல் குற்ற உணர்ச்சி கொள்வதைவிட   அரசின் மீது கை  காட்டிவிட்டு மெல்ல வெளியேறி விடலாம் என்பதே என் கருத்தும்.  ஆலயங்களின் மரபுகளிலிருந்து மரபு இசை வெளியேறி அங்கு இயந்திரங்கள் வந்துவிட்டன. ஊர் கூடி தேர் இழுப்பது போய் அங்கு இயந்திரங்கள் வந்துவிட்டன. அர்ச்சகர்கள் போய் அங்கும் இயந்திரம் வரும் காலத்தை சுஜாதா திமலா என்ற ஒரு கதையில் எழுதியிருப்பார். அதைவிடவும் சிறந்தது இந்த மாற்றம். பிற சமூகத்தினர் திரளாக வந்து ஆவலுடன் பயின்று அதை முன்னெடுக்க வேண்டும். அவர்களுக்கான மரியாதையையும் கெளரவத்தையும் அந்த சமூகத்தின் பிற உலகியல் மக்கள் காத்து நிற்கவும் வேண்டும். 




 

இனி அர்ச்சகர்கள் பணி முற்றிலும் அரசு வேலையாக போகும் பட்சத்தில் கீழ் கண்டவற்றை ஒரு பக்தனாக சொல்ல விரும்புகிறேன். 

 

இந்த அர்ச்சகர் நியமனம் என்பது ஏற்கனவே பாத்தியப்பட்ட ஒரு குடும்பதினரிடமிருந்து அதை வலுக்கட்டாயமாக  மாற்றித் தருவதாக இருக்கிறது  என்று வலைதளச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதற்கு கோயில் நிர்வாகம், உள்  அரசியல் அல்லது வெளி அரசியல் என் காரணம்  எதுவாக இருந்தாலும் அது நிறுத்தப் படவேண்டும். முதல்நாள் இரவு நடை சாத்திவிட்டுப் போனவரை மறுநாள் கோயிலுக்குள் அனுமதிக்காதது மனிதாபிமானமற்ற செயலே. நான் சாபம் பாவம் ஆகியவற்றில் நம்பிக்கை உள்ளவன். இது சாபமன்றி வேறில்லை. 

 

அடுத்த தலைமுறைக்கும் தன் மைந்தரை தொடர்ச்சியாக உருவாக்கி வைத்து அவ்வாறு  பரம்பரைத் தொடர்ச்சி இருக்கும் கோயில்களுக்கு  இதை அமல்படுத்த வேண்டாம் என்பது. மரபாக  அவர்களிடம் வந்து  சேர்ந்த ஒன்று அது. அதை தட்டிப்பறிப்பது தேவையில்லாத ஒன்று. அதுவும் பாவமே என்று கருதுகிறேன். அவர்களுக்கான கெளரவம் அளிக்கப்பட  வேண்டும் 

 

அர்ச்சகர் பயிற்சியை  மடங்கள் முன்வந்து, முன்னெடுக்க வேண்டும். பொதுவாக அரசு பயிற்சி அளிப்பதும் பல்கலைக் கழகங்கள் பயிற்சி அளிப்பதும் இதில் தேவையில்லாத ஒன்று. இங்கே ஆகம மரபு என்பது பல பிரிவுகள் அதற்கான சடங்குகள் முத்திரைகள் கொண்டவை. புதிய அர்ச்சகர்கள்  அவற்றை முறையாக பயின்று வரவேண்டும்.

 

அர்ச்சகர்கள் அரசு ஊழியராக கருதப்பட்டு அவர்களுக்கு ஊதியம் ஓய்வுக்காலம் எல்லாம் அனுமதிக்கப்படும் பட்சத்தில் எல்லா அரசு ஊழியருக்கு இணையான சம்பளமும் அளிக்கப்பட வேண்டும். இப்போது அளிக்கப் படும் 500/- மற்றும் 1000.- என்பது மிகவும் குறைவானது 

 

இப்பொழுது பூஜை நிகழாத அர்ச்சகர்கள் இல்லாத  பல கோயில்களில் புதியவர்களை நியமித்து அவர்களை முன்னுதாரணமாக கொண்டும் இது தொடரலாம். பொது மக்களுக்கு அதற்குள் அவர்கள் மீது  ஒரு நம்பிக்கை வரும். 

 

இதில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொன்று அன்றும் இன்றும் மன்னர்கள் கருதிய /கருத வேண்டிய  பக்தர்களின் ஏற்பு என்பதைத்தான். பக்தர்களின்  விருப்பம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். கடவுள் நம்பிக்கை இல்லாத அரசு இதை முன்னெடுப்பதால் வரும் தேவையற்ற குழப்பங்களை  இது தவிர்த்து விடும். 

 

இன்றைக்கு  எதிர்பாராமல் ஒரு  கடவுள் புகழ் பெறுவார். குபேரன், சரபேஸ்வரர், போல. பல பெரிய புராதன  கோயில்களில் அவர்கள் தேமேவென ஒரு தூணில் இருப்பார்கள். ஆனால் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க காலப்போக்கில் அங்கு   ஒரு சந்நிதி கிளம்பி பூஜை நிகழும். இந்து மதத்தில் இதெல்லாம் யார் கட்டுப்படுத்துகிறார்கள்? அவ்வாறு ஏதும் இல்லை. பக்தர்களுக்கு ஏற்ப  அவர்கள் விருப்பம் பொறுத்து அது நிகழும். ஒரு பக்தன்  அகிலாண்டேஸ்வரி, சமயபுரம், மருவத்தூர் எல்லாம் தனக்கான மரபுகளோடு  திகழ வேண்டும் என்று கருதவும் உரிமையுண்டு..  அரசு  அதை ஆதரித்தாலும்  மாற்றினாலும் காலப்போக்கில் பக்தர்களின் ஏற்புப்படியே இது நிகழும்..

 


ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அவதரித்த எம்பெருமானார் பாஷ்யகாரர் ஸ்ரீராமானுஜர், மானுடர்கள்  அனைவரும் சமம் என்று அனுமதி மறுக்கப்பட்ட  தழ்த்தப்பட்டவர்களை திருக்குலத்தோர் என்று கூறி அவர்களுக்கான வழிபாட்டு உரிமையை அளித்தார் என்பது வரலாறு. தமிழ் பிரபந்தங்களை ஓதவும் வைணவச் சின்னங்களை தரிக்கவும் எந்தச் சாதியினரோ, ஆணோ பெண்ணோ எனக் கருதாமல்  எலலோருக்கும் வைணவத்தில் இடம் இருக்கச் செய்தார்.  அன்று அவர் செய்ததை  புரட்சி என இன்று கொண்டாடும் இந்த சமூகம் இதையும் ஏற்கவேண்டும். இது இன்றைக்கு ஒரு சமூகத்தேவை என்பதும்  நீண்டகால நோக்கில் இந்து மதத்திற்கும் பயனளிக்கக் கூடியது என்பதும் என் கருத்து. 

 

Friday, August 13, 2021

ஒரு அஞ்ஞான கலைஞனின் கதைகள்

எழுத்தாளர் சி.மோகன் அவர்களின் ‘மஞ்சள் மோகினி’ சிறுகதை தொகுப்பின் முதல் கதை 'ஓடிய கால்கள்' என்கிற சிறுகதை. கதைசொல்லியும் அவர் நண்பரும் ஒரு எழுத்தாளரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். அந்த எழுத்தாளர் அங்கு இறந்தும் போகிறார். கதை சொல்லியும் அவர் நண்பரும் அந்த எழுத்தாளரின் மனைவியை சந்தித்து சேதி சொல்வது வரையிலான கதை. நினைவுகள் முன்னும் பின்னும் செல்ல அந்தக் கதை அமைந்திருக்கும். அதில் ஒரு வரி எழுத்தாளர் சொல்வது, " ரொம்ப குளிருது. சிதையில போய் படுத்தாதான் இந்தக் குளிர் அடங்கும்' என்பது. அந்த வரியை ஏற்கனவே சி.மோகன் அவர்களின் எழுத்துக்களில் வாசித்திருக்கிறேன். நான் வாசித்துக் கொண்டிருக்கும் சிறுகதை எழுத்தாளர். ஜி.நாகராஜனின் இறுதிநாட்களின் புனைவு வடிவம்தான் என்பது எனக்குப் புரிந்தது. ‘ஓடிய கால்கள்’ என்கிற தலைப்பில் ஜி.நாகராஜனும் ஒரு கதை எழுதியுள்ளார். அவ்வகையில் சி.மோகன், தனது கதைக்கு வைத்த்திருக்கும் இந்த தலைப்பும் அவருக்கான அஞ்சலிதான்.  அதுவரை கட்டுரைகள் வாயிலாக ஜி.நாகராஜன் என்கிற ஆளுமையை அறிவேனே தவிர, அவரை வாசித்ததில்லை. இவ்வாறாகவே,  ஜி.நாகராஜன் தன் கலகக்கார வாழ்க்கை வழியாக வாசகருக்கு அதிகம் அறிமுகமாகியிருக்கலாம்.  ‘ஓடிய கால்கள்’ கதைக்குப் பின்னரே ஜி.நாகராஜன் தொகுப்பை முழுமையாக வாசித்தேன்.  இருப்பினும் இந்தக்  கட்டுரையில்,  ஜி.நாகராஜன் என்கிற ஆளுமையை கலக்காமல்,  அவர் புனைவை மட்டுமே கருத்தில் கொண்டு எழுதியுள்ளேன்.




ஜீ.நாகராஜன் ஒரு மீறலைக் கொண்டிருக்கிறார். அவரது கதைகளே மீறலின் வடிவம்தான். அது உண்மையில் மீறல்தானா அல்லது கேலியா எனவும் தோன்றுக்கிறது. கேலி என்றால் அவர் கேலி பேசுவது யாரை?  பொதுவாக, ஒழுக்கவாதிகளை என்று சொல்லலாம். ஆனால் ஒழுக்கவாதிகளை கேள்வி கேட்பது எழுத்தாளர்களுக்கு ஒன்றும் புதிதானது அல்லவே. அவ்வாறு இருக்கையில் இவர் எங்ஙனம் மாறுபடுகிறார் என்கிற பார்வை முக்கியமானது.

எந்த சிக்கலும் இல்லாமல் இல்லறத்தில் தானுண்டு தன வேலையுண்டு என்றிருப்பவர்களை , மதவாதிகளை, ஆசாரவாதிகளை, தத்துவம் பேசுபவர்களை அனைத்திற்கும் மேல் இலக்கியவாதிகளை, எழுத்தாளர்களை என அனைவருக்குமான (அனைத்து ஒழுக்கவாதிகளுக்குமான)  கேள்விகளை எழுப்புகிறார். எழுத்தாளன் என்பவன் சக மனிதனின் உளக்கொதிப்புகளை, வேட்கைகளை கீழ்மைகளை எழுதுபவன். ஒருவகையில் எழுத்தாளர்களுக்கான "கன்டென்ட்" அந்த மனிதர்கள்தான். அவர்களின் தத்தளிப்பிற்கு தன்னாலான மேலதிக  குழப்பங்களை  அல்லது தீர்வுகளை எழுத்தாளர்கள் அளிக்கிறார்கள். அதன்வழி அவர்களுக்கான தீர்வுகளையோ தற்கொலைக்கான உந்துதலையோ எழுத்தாளர்கள் அளித்தபடியே இருக்கிறார்கள். இதில் மாறுபட ஏதுமில்லை. கால ஓட்டத்தில்  பதிவு செய்யப்பட வேண்டிய அனைத்துமே இலக்கியத்தில் சொல்லப்பட்டுத்தான் ஆகும்.  சிலர் சாத்வீகமாக இப்படியெல்லாம் நடக்கிறது என்று அதை ஒரு வேடிக்கையாகவோ ஆற்றாமையாகவோ அல்லது கரிசனமாகவோ கூட சொல்வதுண்டு. அதில் ஜீ.நாகராஜன் மேற்கண்ட எந்த உணர்வு நிலைக்குள்ளும் இட்டுச்சென்று கடத்துபவரில்லை. அவர், காம வேட்கையை தூண்ட காமப்பிதற்றல்களை எழுதி வைத்து வாசிப்பவருக்கு கிளர்ச்சியூட்டும் எண்ணம் கொண்டவரும் அல்ல. எளிமையாக சொன்னால் அவர் காட்டுவது மற்றோரு உலகத்தை. அந்த உலகிலும் சாதாரண உலகில் நிகழ்வது போலவே அனைத்தும் நிகழ்கின்றன.  இயல் உலகில் இருக்கும் நாசூக்கு, மறைத்துரைத்தல் போன்ற பாசாங்குகள் குறைந்தவையாகவே  அவை உள்ளன. அங்கு நிகழும் அன்பு துரோகம் அனைத்தும் அனைத்திற்கும் சமமானவையே.

 

அந்த உலகத்திலும் வேட்கை, மோதல், கொன்றெடுத்தல், சுயபலி எல்லாம் உண்டு.  பாசாங்கு முற்றிலும் இல்லை என்றும் சொல்லிவிடமுடியாது. நாம் இயங்கும் உலகம், நம் தலைமேல் இயங்கும் ஒரு உலகம், பாதாள உலகம் என மூன்று உலகங்கள் உண்டு. நம் அறிவில் செயல்படும்  தத்துவார்த்த ஓழுக்கவாத மேலுலகத்தின் தாக்கமும்,  நமக்குள் ஆழத்தில் இயங்கும் இச்சை, பசி, வன்மம் கொண்ட ஆழுலகத்தின் தாக்கமும்தான் நம்மை   அலைக்கழிக்கின்றன. அவற்றின் ஆதிக்கம் ஒருவர் மீதோ  அல்லது ஒட்டுமொத்த சமூகத்தின்  மீதோ நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் ஆழ் உலகத்தின் ஆட்டங்களை தனது எழுத்தின்  வழி காட்டியவர் ஜீ.நாகராஜன். அவர் காட்டும் உலகம் பால் பேதமற்ற, உயர்வு தாழ்வு பிரிவினையற்ற ஒரு உலகமாகத்தான் இருக்கிறது. அடுத்த குடிசையில் / வீட்டில்  வாழும் மனிதருக்கு ஆதரவாகவும் இருக்கிறது.  ஆனால்  அந்த வள்ளிகுறத்தி முடுக்கின் ஆதார உணர்வு வேட்கை மட்டுமே. அது அந்த நிலப்பகுதிக்கு மட்டுமே உரித்தான குணம் அன்று. அதை எந்த நாகரிக உலகிலும் பொருத்திப் பார்க்கலாம்.  வலியது வாழும் என்பதே அதன் அடிப்படை நெறி. ஆகவே அது எக்காலமும் மற்றவரை கைவிட்டுச் செல்லவும் செல்லும்.

 


நீங்கள் சொல்லும் எல்லா உன்னதங்களும் நீங்கள் பொதுவில் முகம் சுளித்து ஒதுங்கிச் செல்லும் இடத்திலும் உள்ளன.  நீங்கள் சொல்லும் எல்லா கீழ்மைகளும் உங்கள் மத்தியிலும் உள்ளன என்பது அவரது சொல்லாக விளங்குகிறது. அது ஒருவகையில் மரபை எதிர்த்து நிற்கும் நவீனத்தின் இயல்பு. அவ்வாறாகவே  ஜெயமோகன் தன்  இலக்கிய முன்னோடிகள் புத்தகத்தில் ஜீ.என்.ஆரை மதிப்பிடுகிறார். அவ்வாறு நவீனத்துவத்தின் முகங்களாக  அவர்  மதிப்பிட்ட மேலும் இருவர் சுந்தர ராமசாமியும், அசோகமித்திரனும்.  அம்மூவரை மேம்போக்காக அறிந்தவருக்குமே கூட இவர் நவீனத்துவராகவே இருந்தாலும்  எவ்வாறு மற்ற இருவரிடமிருந்தும் மாறுபடுகிறார் என்பது புரியும்.

 

அசோக மித்திரனின் ‘விரல்’ என்கிற ஒரு சிறுகதை  உண்டு. ஒரு எழுத்தாளனின் பரிதாப தோற்றம் அதில் வருகிறது. சுந்தர ராமசாமியின் ‘ஜெ.ஜெ.’ எழுத்தாளனின் உன்னத வடிவம். இரண்டும் இருவேறு பரிணாமங்கள். ஜி.  நாகராஜனின் ஜுரம் கதையில் வரும் தங்கராஜு ஒரு   எழுத்தாளர் மற்றும் பள்ளி ஆசிரியர். சமுதாயத்தை திருத்த வேண்டும் என்று சொல்லிக்கொண்டு கவிதைகள் எழுதிக் கொண்டும் அவன் ஆற்றுவது சம்பள பணத்தை சீட்டாட்டத்தில் செலவு செய்வதுதான். பாவிப் பழிகாரா என்கிறாள் மனைவி. தன் மனைவியின் ஜுரம் அவருக்கு தன், யதார்த்த நிலையை பறைசாற்றி ஒளிபாய்ச்சுகிறது. ஜி.நாகராஜனின் கதைகளில் எழுத்தாளருக்கான தனி பீடமோ, சலுகையோ இருப்பதில்லை. அவரைப் பொறுத்த மட்டில்  அவர் கொள்கை எழுத்தாளருக்கும் பொருந்துவதுதான். அவனும் மற்றோரு மனிதனே என்பதுதான். அது சக எழுத்தாளரான ஜெயகாந்தனின் அக்னிப் பிரவேசம் சிறுகதையையும்  கேள்விக்குள்ளாக்குகிறது. அதே தலைப்பில்.

ஜி.நாகராஜனின் அக்னிப் பிரவேசம்  கதையில் வரும்  அந்த தாய் சாதாரண தாயாகவும்  அந்தப் பெண்  பக்குவமான பெண்னாகவும் வருகிறார்கள்.  அந்தப்பெண் கர்ப்பமாகிவிடுகிறாள். “பாவி, பழிகாரன். அவன் வௌங்குவானா? உடம்பெல்லாம் புளுத்துச் சாகணும்!” என்கிறாள் தாய். “இப்ப அவனெத் திட்டி என்னம்மா பண்றது? கார்ல ஏறியிருக்கக் கூடாது. அப்படி ஏறினபெறவும் அவன் தப்பா நடந்துக்கிறான்னு தெரிஞ்சதும் ஓடற கார்லேந்து குதிச்சாவது செத்து மடிஞ்சிருக்கணும். ஏம்மா, நான் மனசால் தப்புப் பண்ணலைனியே, அது எப்படிம்மா உண்மையாகும்? மனசு திடமா இருந்திருந்தா இப்படி நடந்திருக்குமா?” என்கிறாள் மகள். மனசு உடம்பு என்று ஜெ.கா பேசியதன் தொடர்ச்சியாகவே இதைக்கொள்ளலாம். அக்கினிப் பிரவேசம் நடந்து விட்டது. ஆனால அக்கினியானால் என்ன கார்ப்பரேஷன் தண்ணீரால் என்ன? இயற்கைக்கு எல்லாம் ஒன்றுதான் என்று  துவங்குகிறார். கடைசியில், நமக்கென்ன கவலை, நாம் வேணும்னா நீதிக்கத்தை படிக்கலாம் என்று முடிக்கிறார்.

 

இதில் அறிவுதளத்தில் செயல்படும் உலகம் ஜெயகாந்தனுடையது. ஆகவே இயல்பாகவே, அவர் வழிகாட்டுதல் என்ற இடத்தில் வந்து அமர்கிறார். உரக்கப் பேசுகிறார். புத்திமதிகள் உரைக்கிறார். அவருக்கு எதிரான உலகமாக ஜீ.நாகராஜன் உலகம் அமைந்தது ஆச்சரியம் அன்று. நீங்கள்  சொல்லும் சிந்தனை, தத்துவம் அனைத்தும் சரியே, சற்று இதையும் கணக்கில் கொள்ளுங்கள் என்கிறார். அவரைப் பொறுத்தமட்டில் ஆதார குணத்தை அறிவு வெல்லாது என்றே கருதுகிறார். அறிவு என்பதே வேட்கை போட்டுக்கொண்ட ஒரு வேடம்தான் என்பதாக இருக்கலாம். “தொழிலாளி வர்க்கத்தை யாராலும் அடக்கி ஒடுக்க முடியாது. ஹிட்லர் அடக்கிப் பார்த்தான், முடியலே. முசோலினி பார்த்தான், முடியலே. சர்ச்சில் பார்த்தான், முடியலே.ஆனா, ஸ்டாலின் பார்த்தான், முடிஞ்சது” என்கிற வரி ( நாளை மற்றோரு நாளே )எதிரொலிக்கிறது இது. ஒரு வகையில் பார்த்தால் , புத்தரிடம் மாரன் சொல்வதும் கிறிஸ்துவிடம் சாத்தான் சொல்வதும் இதைத்தான். அப்படியென்றால் ஜெ.நாகராஜனை மாரனின் / சாத்தானின் பிரதிநிதி என்று சொல்லிவிட முடியுமா.

 

அவரது புகழ்பெற்ற வாசகத்தை  இங்கு நினைவுகூறலாம். "இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள். இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும் எனக் கேட்டு தப்பித்துக்கொள்ள பார்க்காதீர்கள்." ஜி.நாகராஜன் சாத்தானின் பிரதிநிதி அல்ல. அவர் அவ்வாறு செயல்படுகிறவரும் அல்ல. அவருக்கு யாரையாவது தண்டிக்க வேண்டிய அல்லது வென்றெடுக்க வேண்டிய நிர்பந்தம் கூட ஏதும் இல்லை. அவர் வெறும்  சாட்சி. சில சமயங்களில்  வக்கீல். ஆனால் அவர் யாருக்கும் நீதிபதி மாத்திரம் அல்ல.

 

அவர் உரையாடல்களும் நன்மை தீமை என்று அடங்கி விடுவதில்லை. அவற்றை அவர் உயிர்ப்பு என்றும் ஆதார குணம் என்றும் சொல்கிறார். ஏமாறுவர்களும் ஏமாற்றுபவர்களும் கலந்ததுதான் உலகம். சூழ்ச்சி செய்யும்  திறமைதான்  மனிதனை  மனிதனாக்குவது என்பதும்  சூழ்ச்சி செய்து ஏமாற்றுபவன் ஒருவகையில்  உனக்கு குரு  என்பதும் அவருடைய சொற்களாக வெளிப்படுகின்றன. "சூழ்ச்சி செய்யத் தெரியாதவன் வாத்தியாராவோ குமாஸ்தாவாவோ வாழ்நாள் பூரா இருக்கவேண்டியதுதான். அவன் பெரிய வக்கீலாவோ, டாக்டராவோ, வியாபாரியாவோ, அரசியல்வாதியாவோ, போர் வீரனாவோ வர முடியாது. மந்தரம் கிந்தரம்னு பேசறாங்க. மந்தரமும் கெடெயாது; மாயமும் கெடெயாது. தந்தரந்தான் மந்தரம்." இவை கதாபாத்திரங்களின் சொற்களாக இருந்தாலும் அவர் சொற்களாகவே ஒலிக்கின்றன. குளிக்கும்போது முதுகிலே இருக்கிற அழுக்கைத் தேய்க்க பூநூல் ரொம்பவும் பிரயோஜனப்படும் என்பது அவருடைய மற்றோர் வரி. எல்லா அறிவும் ஒழுக்கமும் பீற்றலும்  வெறுமனே முதுகு சொரிந்து கொள்ளத்தான் என்றும் பொருள் கொள்ளலாம்.

 

ஜி.நாகராஜனின் கதை மாந்தர்கள் தன்னுடைய  உள்ளுணர்வின் வழியாக இயங்குபவர்கள்.மிகவும் நுட்பமான குறிப்புகள் வருகின்றன . தன்னுடைய இணை, உறவின் போது விளக்கை ஒளிர்க்கவில்லை, தன்னுடைய  முகத்தைப் பார்க்க விரும்பவில்லை என்பதை  உணரும் ஜெயா ஒரு உதாரணம். பழக்காரியின் கூடையிலிருந்து பழங்கள் விழுந்து சிதற அதைக் குனிந்து பொறுக்கும் கூடைக்காரியை உற்று நோக்கிவிட்டு அங்கே ரசிப்பதற்கு எதுவுமில்லாததால் கண்களை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன் என்கிறார் கதைசொல்லி. இதுவே, ஆண்மை என்னும் ஒரு கதையின் துவக்கத்தில்  கதை சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இடம். தன்னை யுவதிகள் பார்ப்பதை சொல்லிக்கொண்டே வருகிறான். அவன்  தொடர்ந்து சென்று ஒரு பெண்ணை தன் தர்க்கத்தால்  வெல்லும் கதை. அந்தப்  பெண்ணின் அகத்தை முற்றிலும் திறக்க வைத்து வென்றதாக  எண்ணி, மறுக்கணத்திலேயே நான் ஒரு பேடி என வெளியேறும் கணத்தில் உச்சம் கொள்கிறது.ஒரு அகங்கார போட்டியுடன் நிகழும் மற்றொரு போட்டியை கண்டுவிட்டான். இரண்டும் திரண்டு வரும் கதை. இது போன்ற குறு வர்ணனைகளும் உரையாடல்களுமே முதற்கட்டமாக வாசகரை அணுகவும் வைப்பது. அவரது கதைகள் அதற்கடுத்த தளத்திலும் விரிகின்றன.

 

கடற்கரையில் அலைகளை பார்த்தபடி அமர்ந்திருப்பவனை ஒரு ‘ஈ’  தொந்தரவு செய்கிறது . அவன் மனதில் இறந்த பெண்ணின் நினைவு தொந்தரவு செய்கிறது. அந்தக் கதையும் இறுதியில் அந்தப் பெண்ணின் தமக்கையுடன் அவன் இணைவதில் முடிகிறது. அப்பொழுது  அந்த 'ஈ' க்கான  பொருள் மாறிவிடுகிறது. அவன் ஆழ்மனம் தாமதமாக போவதையே விரும்புகிறது. அதன் மீது அன்பு கருணை என அதை  தர்க்கத்தை வைத்து பொருள் கொள்கிறான் ஆனால் அந்த மற்றொரு கதாபாத்திரம் அவனது ஆழ்மனதை துரிதமாக புரிந்தும் கொள்கிறது. இந்த ஆடல்கள்  இவர் கதைகள் முழுவதுமே வருகின்றன. இந்த வரிசையிலிருந்து விலக்கி நிற்பவை சில.  கிழவனின் வருகை என்கிற கதை குறிப்பிடத்தக்கது . தான் தொலைத்த  மகனைத் தேடி வரும் கிழவன் அந்தக் கதையின் நாயகன். அந்தக் கிழவன்  யாரென்பதை கதைசொல்லி சொல்லாமல் விடுகிறார். தேசத்தந்தை காந்தியாக பொருள் கொள்ளலாம். இந்த தொகுப்பிலேயே மிகவும் மாறுபட்ட ஒன்று. அவரை அரசியல் ரீதியாகவும் புரிந்துகொள்ளத் தக்க சிறுகதை

 


இவர் கீழ்மைகளை  மேன்மைகளை எடுத்துக் காட்டுபவராக இல்லை. வெறுமனே  சக மனிதர்களை சற்று கவனியுங்கள் போதும் என்கிறார். நீங்கள் வைக்கும் கட்டுப்பாடு ஒழுக்கம் அவையனைத்தும் செல்லாமல் போகும் இடம் ஒன்று உண்டு. அதைக் காணுங்கள். உங்கள் சுவர்க்கலோகத்திற்கு தடையாக வரபோவது அதுதான் என்பது அவர் திரும்ப திரும்ப சொல்லும் சொல்லாக உள்ளது . மிஸ்.பாக்கியம், கல்லூரி முதல்வர் மிஸ்.நிர்மலா ஆகிய கதைகள் கட்டுப்பாடான மகளீர் விடுதிக்குள் நிகழ்பவை. அங்கே எழும் மீறல் உண்மையில் மாணவிகளிடம் அல்ல ஆசிரியைகளிடம் தோன்றுகிறது என்பது சுவாரசியமானது. இவருடைய மீறல் என்பது எதோ ஒன்றை எதிர்த்துப் பேசி ஆர்ப்பாட்டம்  செய்யும் கலக  மனம் அல்ல. அதற்கு அவரே வகுத்துக்கொண்ட கொள்கைகள் ஒரு  காரணம். "தத்துவ ஆட்படாமை"  என்பதை அவரது கொள்கை  என்றே கொள்ளலாம். "எந்தத் திட்டம் போட்டு சொர்ணத்தம்மா வயத்துலே வந்து பொறெந்தேன்?" என்பான் கந்தன் ஒரு இடத்தில்  ( நாளை மற்றோரு நாளே )

 

 எங்கும் தீர்ப்போ நீதியோ உரைக்காத ஜி.நாகராஜனின்  ஒரு  கதாப்பாத்திரத்தின் வார்த்தைகள் இவை. ‘உண்மையிலேயே கேட்டுக்கொள்கிறேன்: கற்பு, காதல், கொள்கை, அது, இதுவென்று சொல்லிக்கொண்டு உலகத்தைக் குறை சொல்லாதீர்கள். புத்திசாலிகள் பிழைத்துக்கொள்ளத்தான் செய்கிறார்கள்!’ பல சாகசங்களையும்   சறுக்கல்களையும் கண்ட அந்த எழுத்தாளரின் புன்னகை வரிகள் இவை.  அந்தக் கதையின் தலைப்பும் "நான் புரிந்த நற்செயல்கள்" என்று அமைந்திருப்பது முழுக்க முழுக்க தற்செயலாகவே இருக்கக் கூடும்.