Saturday, July 24, 2021

வெண்முரசும் facebook வம்பும்

 சுரேஷ் வெங்கடாத்ரி வெண்முரசில் கிருஷ்ணன்  வருகை குறித்து எழுதிய பதிவினை நண்பர்கள் சுட்டி அளித்ததன் வாயிலாக கண்டேன். அப்படியே அவரது முகநூல் பக்கத்தில் சிறிது நேரம் மேய்ந்தேன். 


அவர்  என்னுடைய Facebook நட்பு வட்டதில் அல்லது தனிப்பட்ட  வகையில் இல்லை. சிறந்த வாசிப்பாளர் என்று  அவர்மீது இருந்த பிம்பம் குறைந்துவிட்டது என்பதும் உண்மை.


குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் விசு திண்ணையில் அமர்ந்திருப்பார். தசரதராஜகு....மாஆஆராஆ.., அதிதீஈஈஈராஆஆ.. , சுகுமாஆஆஆராஆஆ.. என பாடிக்கொண்டிருப்பார். இங்க இதுக்கு முன்னாடி எம்ஜிஆர் படம் இருந்தது. இப்ப ரஜினி படம் இருக்கு என தன் மகனின் சினிமா ஆர்வத்தை கிண்டலடிப்பார். மணிஆர்டர் கொண்டுவரும் போஸ்ட் மேனிடம் இவர் லெக்ஷ்மிஅம்மாள் அல்ல சரஸ்வதி அம்மாள் என்று ஜர்க் காட்டி திடுக்கிடசெய்வார்.. பானுமதிக்கு கால அங்க போடனுங்க என்று பிழைதிருத்துவார்.


பிற்காலத்தில் இன்றைய திண்ணையான Facebook ல் அந்த நபர், சுரேஷ்வெங்கடாத்ரி என்கிற பெயரில்  அமர்ந்திருக்கிறார். மெல்லிசை, லாஜிகல் கேள்விகள், கிரிக்கெட் விமர்சனம் என இருக்கிறார்.


அந்த படம் எப்படி விசு இல்லாமல் போரடிக்குமோ அதுபோல சுரேஷ்வெங்கடாத்ரி இணையாமல் இருந்திருந்தால் பொழுது போயிருக்காது என்பதும் உண்மை.



சரி், நாம் வெண்முரசு விவாதத்துக்கு  வருவோம்..

வெண்முரசு எழுதப்பட்ட காலத்திலிருந்து அதை வாசித்து வருபவர்களில் அவரும் ஒருவர்  என்பதால் ஜெ. செய்வது ஒரு மொழியாக்கம் அல்ல. அது மகாபாரதத்தின்  மறு ஆக்கம் என்பது அவருக்கும் தெரியும். வியாசபாராத கதையிலேயே பாத்திரங்கள், மகபாராத ஓட்டத்தில்  வருவதை விட பின்னால்  சொல்லப்படுவது  என ஒரு நான்லீனியராக இருக்கும். 


இதில் அனைவரும் அறிந்த உதாரணம் ஒன்று உண்டு.  கர்ணன்தான் துரியோதனனையும் ஜராசந்தனையும் சேர்த்து வைத்தான் என்று வெய்யோனில் ஜெ. எழுதியிருந்தார்.  அப்போது மூலத்தில் அவ்வாறு இல்லை என்று சுரேஷ் வம்புகேள்விகள்  எழுப்பினார். ஆனால் பலமாதங்கள் சென்று சாந்திபர்வத்தினை மொழிபெயர்த்து எழுதிய  அருட்செல்வபேரரசன் அவர்கள் அதில் திருதராஷ்டிரன் புலம்பலில் இது வருகிறது என எடுத்துக்காட்டினார். அதற்காக சுரேஷ் வெங்கடாத்ரி அவர் பழைய போஸ்டை டெலீட் செய்வது அல்லது வருத்தம் தெரிவிப்பது ஏதும் இராது.. சர்றா வுட்றா சுனா பானா என போய்க்கொண்டிருப்பார்.


அதேபோல்  மற்றொன்று மகாபாரத பிற்சேர்க்கை.. மகாபாரதத்திற்கு  பின்  எழுதப்பட்ட பாகவதம் தேவிபாகவதம் முதல் நவீன இலக்கியகர்த்தாகளின் நாவல்கள் வரை பாரதகதாபாத்திரங்கள் வளர்ந்து வருகிறார்கள்.  அவர்களின் பாத்திரப்படைப்பு பலவிதங்களில் ஆராயப்பட்டிருக்கிறது. வரலாற்று தத்துவ பின்புலத்திலும் கூட.


அவ்விதத்தில்  முன்பே சொன்னது போல வெண்முரசு மகாபாரத்தின் மொழிபெயர்ப்பு அல்ல. அது மறுஆக்கம். அதில் இத்தனை கூறுகளும் உள்ளன. இங்கே சுரேஷ் வெங்கடாத்ரி சொல்லிய கிருஷ்ணனின் அறிமுகம் பிஆர்சோப்ராவின் பாரதத்திலும்  வருகிறது. ஆனால் அதில் திடீரென விஸ்வகர்மா தோன்றி  துவாரகையை சிருஷ்டிக்கிறேன் என்கிறார்.  ( அதாவது கிருஷ்ணன் அழைக்க அவர் தேவலோகத்திலுருந்து மதுரா  அரசவையில் பிரத்யட்சமாகி நான் அந் நகரை நிர்மாணிக்கிறேன் பரம்பொருளே என்கிறார்) கிருஷ்ணன் அஸ்தினாபுரி பிரச்சனையை கவனிக்க செல்கிறான் என்று வருகிறது. ஒரு மந்திரஜாலமாக. அதிலும் அவர் சொல்லும்  சுயம்வரத்தில் என்ட்ரி என்று  தரவில்லை..

 

அதேபோல நாட்டார்பாரத கூறுகள் வெண்முரசில் இருந்தாலும் செயற்கையான திணிப்புகள் அதில் இல்லை. நாமறிந்த மாயாபஜார் பட காட்சிகள் வெண்முரசில் இல்லை. இது எதுவும் சுரேஷ்வெங்கடாத்ரிக்கு புதிது அல்ல. அவர் சொல்புதிது குழுமத்தில் இருந்தபோது இதை பலமுறை அவருடனே விவாதித்திருக்கிறோம்.

வெண்முரசின் கேள்விகளுக்கான பதில்கள் வெண்முரசிலேயே உள்ளன. Discussion blogspot ல் உள்ளன. மேலும் பலரால் பல  கட்டுரைகள் எழுதப்பட்டும் உள்ளன.

 ஆகவே இங்கு சொல்வது அவர் இதைக்கேட்டு மறுபரிசீலனை செய்வார் என்ற நம்பிக்கையில் அல்ல. ஒருவகையில் என் மன ஆறுதல் என்று மட்டும் கொள்க..


அவரது வாசிப்பு எண்ணிக்கை என்னை வியக்க வைத்திருக்கிறது. இவ்வளவு வாசிப்பு சாத்தியமா என.. ஆனால்  தினசரிகள் அச்சாகும் பத்திரிக்கை இயந்திரத்திற்கும் அந்த தகுதி உண்டுதானே. எத்தனை வார்த்தைகளை தினமும் கடக்கிறது. ஆனால் அதற்குள் எப்படி ஏதும் போகாதோ அதுபோல இவருக்குள்ளும் ஏதும் போகாது என்பதை தாமதமாக புரிந்துகொண்டேன். கொஞ்சங்கூட மழத்தண்ணி உள்ள போயிரக் கூடாது நல்லா கான்கிரீட் போடு என தனக்குத்தானே கான்கிரீட் போட்டுக்கொண்டவர்..


 அதேநேரம் ஆடிட்டர் என்பதால் அவரால் வேறொரு பிரதியை இறுதிவரை ஒப்புநோக்கி ரெட்இங்கால் மார்க் பண்ண முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஸீ த ப்ராப்ளம் இஸ்... என்று அதை விளக்கவும் முடியும்


தொடர்ச்சியாக நிகழும் சென்னை  வெண்முரசு மாதாந்திர  கூடுகை தற்போது ஏழாவது வருடத்தை  நோக்கி செல்கின்றது.  கோவையில் கூட ஆரம்பத்தில் நிகழ்ந்த்து. இவர் சென்னை மற்றும் கோவையில் இருந்தபோதும் ஒரு இடத்திலும் வந்து பேசியவர் அல்ல.  அங்கு எதிர் விமர்சனம் வைப்பவர்களும் வந்து உரையாடியுள்ளனர். இவர்  இவர் சொல்வது ஒருவித சாதாரண அபிப்ராயம் மட்டுமே.. 


மேலும் இவர் பேஜ் பார்த்தால் சிலவற்றை கிசுகிசு பாணியில் சொல்கிறார். அது அதிர்ச்சியாக இருக்கிறது. எழுத்தாளர். எஸ்ராமகிருஷ்ணன் குறித்து சொல்புதிது கூகுள் குழுமத்தில் பகடியாக எழுதுகிறார்கள் என்று  ஒரு கமெண்ட் பார்த்தேன். அட ஆண்டவா என்று இருந்தது.. இப்போது அந்த குழுமம் ஆக்டிவ்வாக இல்லை. ஆனால் அது அவ்வாறு ஆக்டிவ்வாக  இருந்தபோது அதில் இப்படி எழுதியிருந்ததே சுரேஷ் அண்ணார்தான்.  அதை அப்போது நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை. காரணம் தீவிர இசை ரசிகர்கள் எப்படி தன் ஆதர்ச இசையமைப்பாளர்களை கிண்டலடிப்பார்களோ அப்படி ஒரு ஜாலியான ஃபன்னாகத்தான் அதை பார்த்தேன். 


ஆனால் facebook ல் அவர்  அதையே ஒரு கிசுகிசுவாக ஆக்குகிறார். அது தவறானது.தில்லானா மோகனாம்பாள் வைத்தி போல. அதன்  காரணம் அவர் பேசுகையில் அது ஒரு இன்சைடர் இன்ஃபர்மேஷன் என்பது போல வேறு ஒன்றாக மாறி  தோற்றமளிக்கிறது. அது ஒருவர் மீதான மாண்பை குறைக்கிறது.


ஒரு படத்தில் சுருளிராஜன் ஒரு வம்பு பேசுவார். 'நீங்க கேட்டீங்களா ?' என்பார் எதிரில் இருப்பவர். அட இல்லப்பா நான் சும்மா சேரை போட்டு உட்கார்ந்திருந்தேன். அப்ப யாரோ ரெண்டு பேரு பேசிட்டு போனாங்க அப்ப லைட்டா காதில் விழுந்தது என்பார்..


சுரேஷ் வெங்கடாத்ரியின் நேற்றைய பதிவு இவ்வாறு கூறுகிறது. 'வெண்முரசு நிறைவுநாள்  விழா உரையாடல் லைவ் அப்படி  வீடியோ பக்கம் லேசா எட்டிப்பார்த்தேன். அப்ப லைட்டா இப்படி காதில் விழுந்தது' என்கிறார். அங்கே நேரடியாக அதை காமெண்டில் கேட்டிருக்கலாம். பதில் வந்திருக்கும்.. ஆனால்  இரண்டரை மணிநேர கலந்துரையாடலில் அவருடைய தேவை ஒரு  அவல். அதை யாருக்கு வீசவேண்டும் என்றும் அவருக்குத் தெரியும். அதை வீசிவிட்டு நாராயண நாராயண என்று ஈஸிசேரில் அமர்ந்து கொண்டு மேட்ச் பார்க்க ஆரம்பித்துவிடுவார். அதில் எப்படியும் கமாண்டேட்டர் பழைய ப்ளேயர் பெயரை சொல்லும் போது அது  சக்லைன் முஷ்டாக்கா முஷ்டாக் அஹமதா என அடுத்த  பதிவுக்கான கன்டெண்ட் கிட்டும் வாய்ப்பு இருக்கு..


வெண்முரசு வாசிக்கவில்லை  அதை நிராகரிக்கிறேன் என்று கூறும் நண்பர்கள் உண்டு. அவர்கள் மீது எந்தவொரு வருத்தமோ புகாரோ அல்ல. சுரேஷ் வெங்கடாத்ரி செய்வது, தான் வெண்முரசை வாசித்துவிட்டேன் என்று சொல்லி தன் பிழையான வாசிப்பை வைத்து எதையாவது செய்து குழப்புவது. இலக்கியம்  பொதுவாக இலக்கிய வம்புகளால் வெளியில் இருப்பவரை ஈர்க்கிறது. அவ்வாறு ஈர்க்கப்பட்டு உள்ளே வருபவர்கள் தீவிரமாக இலக்கியத்தில் ஆழ்வதும் உண்டு. அதில் இதுபோல ஈஸிசேர் ஆசாமிகளும் உண்டு.  அதை வாசகர்கள் உணர்வதும் தானாக நிகழும். யாரும் சொல்லத்தேவையில்லைதான்.


இன்று அவர் மீதான எண்ணங்களை தொகுத்தால் கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் என்பதுபோல விசு முதல் சுருளிராஜன் வரை   நியூஸ் பேப்பர் மிஷின் முதல் ஈஸிசேர் வரை பல உதாரணங்கள் தானாக எழுந்து வருகின்றன. எப்படி கிருஷ்ணனை அந்த ஆயிரம் நாமங்கள் கொண்டு பாராட்டினாலும் அதற்கும் அப்பால் எஞ்சி நிற்பாரோ அப்படி இவரும் இன்னும் எஞ்சி நிற்கிறார். வாழ்த்துகள்.

Monday, July 12, 2021

வேங்கை பிழைத்த வேல்

 எழுத்தாளர் ஷோபாசக்தி அவர்களின் மூமின் சிறுகதை  தொகுப்பு பற்றிய என்னுடைய கட்டுரை அகழ் மின்னிதழில் வெளியாகியுள்ளது. சிலரை நாம் முற்றிலும் ஆதரிக்கிறோம் என்றோ அல்லது முற்றிலும் வெறுக்கிறோம் என்றோ ஒரு நிலைப்பாடு எடுக்க முடியாது. ஒரு தடுமாற்றம் வந்துவிடும்.. எனக்கு அந்த மனநிலை எழுத்தாளர். ஷோபாசக்தியின் மீது ஏற்படும்.. இன்று  கட்டுரையை மீண்டும் வசிக்கும் போது அந்த மனநிலை வெளிப்பட்டிருப்பது தெரிகிறது. அது புன்னகைக்க வைக்கிறது

அகழ் இணையஇதழில் கட்டுரைக்கான இணைப்பு :- https://akazhonline.com/?p=3398


வேங்கை பிழைத்த வேல் 

ஷோபா சக்தி எந்த இடத்தில் முக்கியமானவர் என்றால், தமிழகத்தில் ஈழம் சார்ந்து உருவாக்கியிருந்த ஒரு கருத்துருவாக்கத்தில் தனக்கேற்ப சில புனைவுகளும் கலந்திருந்தன.  இதில் தமிழகத்தில் அரசு சார்பாக ஏற்கனவே இருந்த சில வசதிகள் வாய்ப்புகள் (இடஒதுக்கீடு, மதியஉணவு)  அரசியல் சார்ந்த உரிமைகள் இவற்றை மனதில் இருத்திக் கொண்டும் ஆனால் இதையும் தாண்டிய பொன்னுலகம் அங்கே இருப்பது போலவும் சிருஷ்டிக்கப்பட்டு ஒரு சில புனைவுகள் மேடைப்பேச்சு வாயிலாக தமிழகத்தின்  அன்றாட உலகில் புகுத்தப் பட்டிருந்தன. அது பல இடங்களில் சரியாக உரைக்கப் படாமலே இங்கே தவற விட்ட பல விஷயங்கள் அங்கே நன்றாக இருக்கின்றன என்று பொதுவாக   உரைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.  அது எவ்வாறு தோற்றமளித்தது என்றால் இங்கே இருக்கும் அத்தனை வசதி வாய்ப்புகளும் கொண்டு இன்னும் சிறப்பான / கட்டுப்பாடான நிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்று  தமிழகத்தில் இங்கே நினைத்துக் கொண்டிருந்தனர். இந்தப் பொன்னுலகப் புனைவை ஒரு புனைவாலேயே எதிர்கொண்டவர் என்கிற வகையில் ஷோபா சக்தியின் இடம் மிக முக்கியமானதே. அந்த புனைவு உருவாக்கிய பல உன்னதங்களை தன்னுடைய புனைவினால் அவர் உடைத்துக்கொண்டே போய்க்கொண்டிருந்தார். அந்த மக்களின் நிலை, அந்த இயக்கங்கள், அங்கு இருந்த சமூக ஒழுக்கவியல் சார்ந்து அனைத்தையும் தொடர்ச்சியாக மீட்டுருவாக்கம் செய்த படியே இருந்தார். அந்த சீண்டல்  என்பது ஏற்கனவே உன்னதங்களை உருவாக்கியவர்களுக்கும் அதை நம்பிக் கொண்டிருத்தவர்களுக்கும் ஒரு ஒவ்வாமையை உருவாக்கியபடிதான் இருந்தது. ஆனால் அதையும் மீறி அவர் எழுத்தில் இருக்கும் நடையும் அங்கதமும் பகடியும் குறு சித்தரிப்புகளும் அவர் எழுத்துக்களை தொடர்ச்சியாக வாசிக்க வைத்துக் கொண்டும் இருந்தன. இவ்வாறாக  ஒரே கதைக்காக ஒரு வாசகரால்  விரும்பப் பட்டும் அதே கதைக்காக அதே வாசகரால் வெறுக்கப் பட்டும் இருந்த எழுத்தாளர் இன்னொருவர் இல்லை. அந்த விதத்தில் ஷோபா சக்தி மிகவும் தனித்துவமான எழுத்தாளரும் கூட.

 


அவர் தன்னுடைய புனைவை அரசியலுக்காக உபயோகித்தார். தன்னுடைய அரசியலை     தொகுப்பின் அனைத்துப் பக்கங்களிலும்  ஏற்றினார். ஒரு சமர்ப்பணத்தில் ஒரு தொகுப்பின் அட்டை /தலைப்பில் கூட அவரது கலகம் வெளிப்பாட்டுக் கொண்டே இருக்கும். உதாரணமாக, எம்.ஜி.ஆர்,  ஈழப் போராளிகள் இயக்கத்தின்பாற்  கொண்டிருந்த அன்பை சொல்லி தமிழகத்தில் ஒரு விவாதம்  எழுந்து வரும்போது   இவர் ‘எம்.ஜிஆர் கொலை வழக்கு’ என்று ஒரு தொகுப்பு வெளியிடுவார்.  தமிழகத்தில் ஈழ ஆதரவுப் போராளிகள் கலைஞர் மீது விரோதம் பாவிக்கையில் தன் இன்னொரு சிறுகதை தொகுப்பினை "தமிழ் அறிவித்த கலைஞருக்கு " என்று சொல்லி சமர்ப்பணம் செய்வார். இந்த சீண்டலைத் தாண்டியும் இவர் எழுத்து தமிழகத்தில் மனதளவில் போராட்ட ஆதரவு கொண்டிருந்த வாசகர்களுக்கு  கூட ஒருவித ஆசுவாசத்தை அளித்தது என்றும் கூறலாம். உச்ச கட்ட போரில் லட்சிய தரப்பு தோல்வியடைவது என்பது ஒரு சோர்வுக்கும் ஏமாற்றத்திற்கும் இட்டுச்செல்வது. அந்த சமயத்தில் அதிலிருந்து மனரீதியாக  மீண்டு வர இவரது புத்தகங்கள்   ஓரளவிற்கு உதவி செய்தன என்றே சொல்லவேண்டும். அதீத ஒழுக்கத்தை தியாகத்தை பகடி செய்வது என்பது அது உருவாக்கிய மனப் பதட்டடத்தை ஈடு செய்வதும் கூடத்தான். அந்த விதத்தில் புகை பிடிப்பது மது அருந்துவது போல ஒரே சமயத்தில் ஆசுவாசம் அளிப்பது மற்றும்  உள்ளே செல்லரிப்பது  என்கிற வகையில் இவர் கதைகள்  திகழ்ந்து வந்தன.   

எழுத்தாளனுக்கு சீண்டும் உவகை கொடுக்கின்ற உத்வேகம் என்பது, தன்  எதிர் தரப்பு ஆற்றலுடன்  இருக்கும் சமயத்தில் வெளியாகும் கதைகளில் மிக காத்திரமாகவே வெளியாகிறது. ஷோபாசக்திக்கு தேசத்துரோகி, எம்ஜிஆர் கொலைவழக்கு,  கண்டிவீரன் ஆகியவற்றில் மிக தீவிரமாக பாய்ந்து வெளியான அந்த உணர்வு மூமினில் சற்று முதிர்ந்து அமர்ந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். இந்த தருணத்தில் சொல்லிக் காட்டி கிண்டல் செய்வதை தவிர்த்தது,  அவரை இன்னும் மனத்துக்கு நெருக்கமாகவே வைத்திருக்கிறது.  ‘தீபன்’ திரைப்படத்திற்கு பிறகு முன்பிருந்த தீவிர எதிப்பு இல்லாமல் அடக்கி வாசிக்கும் உணர்வு இருக்கிறது. தீபனுக்குப் பிறகான ஷோபாவின் எழுத்துக்களை இரண்டு விதமாகவே பிரிக்கலாம். ஒன்று அவரது கதைப் பின்புலத்தில் உருவாகிய மாற்றம், மற்றது கதைசொல்லலில் உருவான மாற்றம்.  இவற்றை ஒரு விமர்சனமாக  அல்லாமல் ஒரு அவதானிப்பாக மட்டுமே முன்வைக்கிறேன். அவ்விதத்தில் தீவிர எதிர்ப்பியலைக் கடந்து ஒருவித கனிந்த மனதோடு வந்திருக்கும் கதைகளாக மூமின்  தொகுப்பைச் சொல்ல முடியும். அதே சமயம் தொடர்ச்சியாக இவரது சிறுகதைகளை வாசித்து வரும் ஒரு வாசகனுக்கு ஒருவித ‘ரெக்னிக்’ புரியவும் வருகிறது. இவரது தொகுப்பின் பத்து கதைகளில் ஒரு கதை இயக்கத்தை நேரடியாக பகடி செய்யும், ஒன்று அப்பாவி மக்களிடையே திகழும் கையறு நிலையை காட்டும், ஒன்று  பெண்மையின்  உன்னதத்தை நிலைநிறுத்தும். பத்தில் இரண்டு உன்னதம், மூன்று மக்களின் கையறு நிலை, இரண்டு இயக்கியத்தை / அரசியலை சீண்டும் என்கிற அளவில் திகழும். கதைகள் பெரும்பாலும் அபத்த சூழலும் அங்கத சித்தரிப்பும் கொண்டிருக்கும். அந்த அவுட்லைன் இதிலும் தொடர்கிறது.




ஈழ அரசியல் குறித்த புரிதல் இல்லாத ஒரு தமிழக நண்பர் தீபன் படத்தை பார்த்துவிட்டு இதில் நாயகன் ‘புலியாகவே வாழ்ந்திருக்கிறார்’ என்றார். ஷோபாவின் அரசியல் நிலைப்பாடு புலிகளுக்கு எதிரானதாவே இருந்தது என்பது இலக்கிய வாசகருக்குத் தெரிந்த அளவு  திரைப்பட ரசிகர்களுக்குத் தெரியாது. ஆனாலும் அவர் சொன்ன "புலியாகவே வாழ்ந்திருக்கிறார்" என்கிற காமெண்ட்டில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. தீபனுக்கு முன்பு இருந்த ஷோபாசக்தியின் படைப்புகள் அதற்குப் பின்பான படைப்புகள் என்று அதை ஒரு மையமாக கூட வைத்துவிட முடியும். அல்லது இறுதிப்போருக்குப் பிறகான ஷோபாவின் எழுத்துக்கள் என்றும் வைக்கலாம்.  இயக்கம் தனது அதிகாரத்தை முற்றிலும் இழந்த பிறகு ஷோபா சக்தி எழுதி வெளியான இந்த மூமின் தொகுப்பில் இயக்கம் மீதான தீவிர எதிர்ப்போ, அல்லது கரித்துக்கொட்டுவதோ இல்லை. மாறாக ஒருவித குற்ற உணர்ச்சி  வெளிப்பாடும் பாவமன்னிப்பு கேட்டு மருகும் பாவனையாக இருக்கிறது.  நண்பர் சொன்னது போல திரைப்படத்தில் "வாழ்ந்து விட்டதால்" ஒருவேளை, இத்தகைய வெளிப்பாடு இருக்கிறதா என்றும் தோன்றுகிறது.  ஏனென்றால் முந்தைய கதைகளில் "துப்பாக்கிச் சத்தம் கேட்டால் எவ்வாறு ஒடி ஒளிந்து கொள்ள வேண்டும் என்று இயக்கம் கற்பித்திருந்தது " என்றும்  ( கண்டிவீரன்) புலிகளின் சித்ரவதை கூடம் எப்படி இருக்கும் என்றும் ( கப்டன்) பண்ட பாதத்திரங்களை திருடிப் போன திருடன்  போய், இப்பொழுது குதிரையில் வரும் வீரர்கள் திருடிச் சென்றனர் என்றும் ( பரபாஸ்) இருந்த சீண்டல் இதில் இல்லை.  மாறாக ஒருவித ஆழ்ந்த நிறைவையே  அளிக்கின்றன என்பதை குறிப்பிட்டுச்  சொல்ல வேண்டும். அது மெல்லியதாக சுட்டிக் காட்டப்படும்   யானை கதையுமே கூட  ‘வித்ரோ ஜோசப்பின்’ ஆளுமையையே கண்முன் காட்டுகிறது. 

இந்த தொகுப்பில் ஒன்று  கிறிஸ்துவை தண்டித்த (அந்திக் கிறிஸ்து ) அதிபர் குறித்த கதையாகவே வெளிப்பட்டிருக்கிறது. மேலும் இரு கதைகள் நேரடியாகவே ஒருவித  பாவமன்னிப்புத்தனம் கொண்டிருக்கின்றன. ஒன்று பிரபஞ்ச நூல் என்கிற கதை மற்றது காயா என்கிற கதை. இரண்டிலும் அவனுக்கு அந்த மன்னிப்பு கிடைக்கப் பெறுகிறது. அவன் அந்த ஆறுதலும் கிடைக்கப் பெறுகிறான் என்பது நெகிழ்ச்சியூட்டவும் செய்கிறது. காயா கதையில் அந்த நண்பன் கதாபாத்திர வர்ணனை வாசிப்பவரை மிகவும்  தொந்தரவு செய்வது.  கதை  சொல்வதில் ஷோபா கொண்டிருக்கும் அசாத்திய திறன் வெளிப்படும் கதை இது. இந்தத் தொகுப்பின் மற்றோரு கதையான அம்மணப்பூங்கா கதையை முந்தைய தொகுப்பின் ரூபம் கதையின் தொடர்ச்சியாகவே  கருதிக் கொள்ள  முடியும் அல்லது அதன் வேறொரு பரிணாமமாக. போராட்டத்தில் உறுப்புகளை இழந்த  முன்னாள் போராளியின் வேதனை முந்தைய ஒன்று. அவன் இயக்கத்தில் இருந்ததால் பிற்காலத்தில் கவனிப்பாரற்றுப் போகிறான்.  பிந்தைய கதையான  இதில் ( அம்மணப்பூங்கா ) வருபவன் ஒரு சாமானியன். '1984'  புத்தகத்தின் அனைத்து பக்கங்களையும் சித்தரவதை கூட்டத்தில் சாப்பிட்டவன்.  ஒரு உந்துதலில்  போராட்டத்தில் தன்னை அழித்துக் கொள்ளச் சித்தமானவன் அவன்.  எரிந்த நிலையில் காப்பாற்றப் படுகிறான். அதன் பின் அவன் சமூகத்திற்கு சுமையாக மட்டுமே ஆகிறான் என்கிற வேதனையை பதிவு செய்கிறது. அவன் தன் இருப்பின் மூலம் பழைய  சம்பவங்களை  நினைவுறுத்திக் கொண்டே இருக்கிறான். அது நோக்கி நினைக்க விரும்பாத மக்கள் அவனை கண்டுகொள்வதில்லை. அந்தப் போராட்டத்த்தில் அவன் இறந்திருந்தால் இந்நேரம் வீரனாக நினைவில் நின்றிருப்பான். அவனை எரிய விடாமல் காப்பாற்றிய சமூகம்தான் அவனை கண்டுகொள்ளாமல் விடவும் செய்கிறது.  மேலும் அவன் தியாகம் மீது சாதாரண உலகியல் காரணங்கள் ஏற்றப்படுகின்றன.   இந்த தொகுப்பின் மிக ஆழமான கதை இது.  மிக உள்ளக விசாரணை என்கிற கதையும் இதற்கு ஒப்பானதே. நினைவுகளைக் கிளறுபவனை யாரும் கவனப்படுத்த விரும்புவதில்லை. 

 

ராணிமகால் கதையில் வரும் அன்னராணி ஒரு குறியீட்டு முக்கியத்துவம் பெற்றவளாக வருகிறாள். அழகும் மிளிர்வும் நிமிர்வும்  கொண்டவள் அவனை ஆட்கொண்டவன் அவ்வளவு ஆளுமை கொண்டவன் அல்ல. தன் ஆளுமையைக் காட்டும் பண்டமாகவே அவளை நினைக்கிறான். இங்கு ஒன்று கூறலாம். தீபனுக்குப் பிறகான மாற்றம் என்று குறிப்பிட்ட ஒன்று  அவரது கதை சொல்லலில் உருவான மாற்றம் என்பது. அதை இவ்விடத்தில் விளக்கலாம்.  அவரது முந்தைய  கதை சொல்லல் பாணி என்பது முழுக்க ஒரு எழுத்தின் அழகியல் சார்ந்து இருந்தது. ஆனால் இந்தத் தொகுப்பின் கதைகள் பெரும்பாலும் அதை காமிரா கோணத்துடன் காட்சியாக காட்டும் அளவு இருக்கிறது. அன்னராணி தன் கணவனின் உடலிலிருந்து சாவியை எடுத்து தன மகன் வீடு செல்லும் வரையிலான வர்ணனை ஒரு குறும்படம் காணும் உணர்வை உண்டாக்குகிறது. 

இவற்றுடன் ஒப்புநோக்கத் தக்க மற்றோன்று மூமின் கதை.  மூமின் கதையின் சஸ்பென்ஸ் என்ன என்பதை இறுதிவரை எழுத்தாளர் கொண்டு சென்றாலும் அது  முதலிலேயே வெளிப்பட்டுவிடுகிறது. சொல்லப்போனால்  தீபன் படத்தின் முதற்காட்சியே இதுதான். ஆனால் இது சஸ்பென்ஸ் கதையும் அல்ல ஷோபா சக்தி க்ரைம் கதை எழுத்தாளரும் அல்ல என்பதால் அந்த சஸ்பென்ஸ் தெரிந்தாலும் அந்தக் கதை வாசிக்கக் கூடிய ஒன்றாகவும் அந்த பாத்திரங்கள் மனதிற்கு நெருக்கமானவர்களாகவும் இருக்கின்றனர். 

     ஒரு படைப்பாளி அல்லது கலைஞன் தான் சொல்ல விரும்பும் ஒன்றை உரக்கச் சொல்கிறான். ஆனால் மக்கள் மத்தியில் எடுபடுவதாய் இல்லை. அவனால் அதை செயல்படுத்த இயலவில்லை. அவன் மன்றாடுகிறான். ஆனால் சமூகம் அவனை கேட்பதாக இல்லை. அவனை அது பித்தனாக்குகிறது. அவன் பித்தனான பின்னால் கடும்சொல் சொல்லி சமூகத்தை திட்டத் துவங்குகிறான். அப்பொழுது மக்கள் அவனை பின் தொடர்கிறார்கள். அவன் வசைகளை ஆசையாக பெற்று பூரிப்படைகிறார்கள். இந்த அபத்த சூழலை  வர்ணிப்பது ஷோபாசக்திக்கு அனாயாசமாக வரக்கூடியது.  அவ்வகையில் யாழ்ப்பாண சாமி கதை அவருடைய பிரத்யேக பாணி. இது போன்ற உரையாடல்களாக இல்லாமல்   ஒரு அபத்த சூழல் வர்ணனையாக மனிதனின் குரூரத்தை  வர்ணிக்கும்  அரம்பை கதையும் அத்தகையதே. துன்பமோ இன்பமோ, ஆனால் பழைய நினைவுகள் எப்பொழும் இனிமையானவையே என்று ஒரு மேட்டிமைவாதத்தை, பழிவாங்கலை சாடுகிறது  


நான் இந்த புகைப்படத்தை கட்டுரையுடன் இணைத்து அனுப்பியிருந்தேன். ஆனால் இந்த புகைப்படம் புறக்கணிப்புக்கு ஆளாகியுள்ளது. அகழ் பதிப்பாசிரியர்களுக்கு கண்டனங்கள். 


பெரும்பாலான   ஈழ எழுத்தாளர்களின் எழுத்து, வாழ்க்கைப் போராட்டத்தை  அடிப்படையாக கொண்டிருப்பவை. வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்பவே எழுத்தின் பாதிப்பு நிகழ்கிறது.  அதிகம் தமிழக எழுத்தாளர்கள் மிகவும் அகச்சிக்கல் கொண்டும்   ஈழ எழுத்தாளர்கள் அதிகம் புறம் சார்ந்தும் வெளிப்படுகின்றனர்.  ஷோபா சக்தியின் எழுத்துக்கள் இதில் ஒரு மீறலைக் கொண்டிருந்தவை என்று கூறலாம். அவரது எழுத்தின் பாதிப்பு  என்பது தமிழகம் ஈழம் என்கிற எல்லையைக் கடந்த ஒன்று. இரு நிலங்களிலும் அவருக்குப் பிறகு எழுத வந்த எழுத்தாளர்களுக்கு  ஒரு முன்னோடியாகவும்  விளங்குகிறார்.    மீறல் குணம் கொண்டிருந்தாலும்,  தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தாலும் ஒரு ஊஞ்சல் அல்லது ஒரு பெண்டுலம் போல அரசியல் என்னும்  ஒரு சட்டகத்துக்குள்ளே இரு  எல்லைகளுக்கு இடையே  ஆடுபவையாகத்தான் ஷோபாவின் சிறுகதைகள் இருந்திருக்கின்றன.  ஆனால் மூமின் வாசித்த பிறகு தோன்றுகிறது, இனிமேல் அவர்   தனக்கான அந்த எல்லையையும் மீறக்கூடும் என்று.

வாழ் - திரைப்படம்

 அருவி பட இயக்குநர் அருண் பி்ரபு புருஷோத்தமன் அவர்களின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாக உள்ள வாழ் திரைப்படத்தை ஒரு வாரம் முன்பே கண்டுவிட்டேன். அவருடைய முதல் படம் போலவே அதுவும் மற்றொரு  புதிய கதைக்களம் என்று சொல்லலாம். அதைவிட இதில் நகைச்சுவை தருணங்கள் அதிகம். அதனால் இன்னும் சுவாரசியமாகவே இருக்கிறது. 



குறிப்பிட்டு சொல்ல வேண்டியது இந்த  புதிய களத்தை அணுக அவர் புதிய உலகம் எதையும் காட்டாமல் இயல்பான வாழ்க்கையிலிருந்தே கொண்டு செல்கிறார். கதாநாயகனோடு இயல்பாக பொருத்திக் கொள்ள முடிகிறது. எதிர்நீச்சல் திரைப்படத்தில் வரும் சிவகார்த்திகேயனுக்கு பொருத்தமான ரோல். அதில் அறிமுக நாயகன் பிரதீப் ஆண்டனி நன்றாக நடித்திருக்கிறார். கதாநாயகியான இரு பெண்கள். அதில் TJ பானு சிறந்த பர்ஃபார்மன்ஸ். 


எதையும் யோசித்து யோசித்து செய்து  தயங்கி அதில் சொதப்பும் நாயகன், எதையும் செய்ய தயங்காத ஒரு ஹைப்பர் ஆக்டிவ் சிறுவன் இருவரையும் இணைக்கும் இரு பெண்கள் என கதை நகர்கிறது. அதில் பல சுவாரஸ்யமான திருப்பங்கள் நுணுக்கமான நகைச்சுவை. காதல் என நிகழும் அபத்தங்கள் குபீர் சிரிப்பை வரவழைக்கின்றன.  காதலுக்கு போராடும் தங்கை கொட்டும் மழையில் நனைந்து போராடும் வைராக்ய காட்சிகள் உதாரணம். 


சிவகார்த்திகேயன் படங்கள் அனைவருக்கும் பொதுவான படங்களாக வருபவை. குறிப்பாக குடும்பமாக பார்க்க தகுந்தவை...இந்த படமும் அந்த வகையில் வரும். தியேட்டரில் வந்தால் கண்டிப்பாக வெற்றியடைந்திருக்கும். வரும் 16ம் தேதி OTT யில் வருகிறது.


ஒரு நாவலுக்கு நீண்ட விமர்சனம் எழுதலாம். ஆனால் திரைப்படங்களுக்கு சொல்லும் விமர்சனம் என்பது ஒரு வரி கருத்துதான்.  வேறலெவல், ஒன் டைம் வாட்ச்,  வேஸ்ட் ப்ரோ என்றுதான் திரையரங்கு விட்டு வெளியே வருபவர்கள் கூறுகிறார்கள். அந்த மூன்று விரல்களில் ஒன்றைத்தான் தொடவேண்டும் என்றால் வேறலெவல் என்கிற விரலை தாராளமாக தொடலாம்