Wednesday, January 18, 2017

நம்பிக்கை

அவநம்பிக்கைகளால் ஆனதும் என் உலகம். பெரிதளவில் நட்பையோ உறவுகளையோ நம்புவதில்லை. யார்மீதும் நம்பிக்கையில்லை என்ற பொருளில் சொல்லவில்லை. ஒன்று யாரும் சாஸ்வதம் இல்லை என்ற பொருளில் சொல்வதாக வைத்துக்கொள்ளலாம் அல்லது கண்முன் காணும் உண்மைக்கு பின் இன்னொரு உண்மை உள்ளது என்பதாகவும் வைத்துக்கொள்ளலாம். அது மிக குரூரமானதாக இருக்கும். மிகவும் பிற்போக்கு கொண்டதாகவும் இருக்கும். இந்த இரண்டு குறித்த பயமும் எப்போதும் எனக்கு இருக்கும். முந்தையதற்கு விபத்தில் இறந்த நண்பர்கள் காரணமாக இருக்கலாம். பிந்தையதற்கு காரணம் நான் வலையுலகில் ஆர்க்குட் காலம் முதல் கண்டுவரும் விவாதங்கள் காரணமாக இருக்கலாம்.

முதலாவது காரணம் தனிப்பட்டது. அதை விட்டு விடலாம். ஆனால் இரண்டாவது காரணம் மிகப்பொதுமையானது. 2007 2008 ல் ஈழப்பிரச்சனை உச்சத்தில் இருக்கும் போது அதை தனக்கு சாதகமான அத்தனை சித்தாந்தங்களுக்குள்ளும் அடைக்கப்பார்த்து தனித்தனியாக பிரிந்து போராடிய குழக்கள் பல இருந்தன. அனைவரும் இணைய ஏதோ ஒன்று தடுத்தது. அங்கே பள்ளியில் சாதி கேட்பதே இல்லை என உயர்த்தி அப்போது என் நண்பர் ஒருவர் பேசுவார்.  ஆனால் பிற்பாடு சில புதினங்கள் வாசிக்கையிலேயே அங்கு இருந்த வேற்றுமைகள் புரிந்தன. ஈழத்தில் இன்னும் இட ஒதுக்கீடு கிடையாது என்பது புரிந்த்து.  சாதி அடிமைத்தனம் இன்னும் தமிழர்களுக்குள் பேச்சளவில் கூட நீக்கப்படவில்லை. அந்த இடத்தில் ஒருவன் ஏன் சாதி பற்றி பேசப்போகிறான் இத்தனை அழிவுக்குப்பிறகும்? இதுபோன்று உண்மையான சங்கதிகளுக்குப்பின்னே இருக்கும் இன்னொரு உண்மை.

தமிழ்நாட்டிலுமே இது உண்டு. மிக உச்ச கட்டமாக பொதுவுடைமை பேசும் ஒருவர் தன் உறவுக்காரப்பையனின் காதலி குறித்து பேசியபின் அவருடனான நட்பை விட்டிருக்கிறேன். தனிப்பட்ட அனுபவங்களிலும் வீடு வாங்கியதிலோ சுற்று வட்டாரங்களிலோ ஒருவித அமைதியற்ற தன்மையையே உணர்ந்து வந்திருந்தே்ன்.

முத்துக்குமார் ஈழபிரச்சனைக்காக உயிராயுதம் ஏந்தியபோது இதைவிட அதிக கூட்டம். ஆனால் அவர் உடலை வைத்து போராடக்கூடாது என அதை அவசரமாக அடக்கம் செய்த அவலம். அப்போது பலரின் உண்மைமுகம் தெரியவந்த்து. முள்ளி்வாய்க்காலில் போர் முடிவுக்கு வந்தபோது கொல்லப்பட்ட மக்களுக்கான ஊர்வலத்திலும் அதிக இளைஞர்கள் கலந்துகொண்டனர். சமூக வலைதளங்கள் முழுவதும் இது பற்றிய விவாதங்களும் இருந்தன. ஆனால் பிறகு அவற்றை அந்த அளவு சீந்துவாரில்லை. அதற்குபிறகு நினைவுநாள் வாரநாளில் வந்த்தால் வார இறுதிக்கு மாற்றப்பட்டது. தன்னிச்சையான கூட்டம் வரவில்லை. தன் வேலை என்பது இதைவிட முக்கியம் என்றானது. அப்போது மிகவும் அவநம்பிக்கையே எஞ்சியது.

ஆனால் இப்போது சற்று மாறுதல் இருப்பதாக தோன்றுகிறது. 2015
வெள்ளத்தின் போது தானாக இணைந்த மக்கள் தெருத்தெருவாக பொருட்களை சேகரித்தது அதற்கான துவக்கம். அன்று சென்னையிலிருந்து கடலூர் வரை சென்று வந்தார்கள் நண்பர்கள். பிறகு வர்தாபுயலின் போதும் ஆங்காங்கே இதுபோன்ற குழுக்களாக இணைந்து மரங்களை அகற்றி்னர்.




இன்று, ஜல்லிக்கட்டிற்கு கூடியிருக்கும் மக்களை கண்டபோது இன்னும் மகிழ்ச்சியாகவே இருந்த்து. பலருக்கு மாடு வளர்ப்பு என்பது அவ்வளவு பரிச்சயமில்லை. எருமைமாடுகள் அனைத்துமே பால் கறக்கு்ம் மாடுகள்தான் அதில் கிடாவே கிடையாது என்கிற அளவில் புரிந்து வைத்திருந்தார்கள். அது பிரச்சனையில்லை என்றே தோன்றியது. நமது பாரம்பரியமான விளையாட்டு அழிக்கப்படப்போகிறது அதன்வழியாக காளை இனங்கள் அழிவுக்குள்ளாகப்படப்போகின்றன என்ற செய்தி அனைவருக்கும் எட்டியிருக்கின்றது.

முந்தைய ஈழப்பிரச்சனை போல் இல்லாமல் இது தனக்கான பிரச்சனை என அனைவரும் ஆதரவு அளிக்கிறார்கள். குறிப்பாக குடும்பப் பெண்கள் மற்றும் இளம்பெண்கள் அனைவருமே இதை நிறுத்தவேண்டும் என பேசுவதை கேட்கமுடிகிறது. இந்தளவு சென்று அடைந்திருப்பது மகிழ்ச்சி. ஈழத்தில் ,கூடங்குளத்தில் கோட்டைவிட்டதுபோல் ஜல்லிக்கட்டில் காவிரியில் தாமிரபரணியில் மீத்தேனில் கோட்டைவிடக்கூடாது என ஆசைப்படுகிறேன். போராட்டக்கார்ர்கள் அரசியல்வாதிகளையும் நடிகர்களையும் குறிப்பாக இயக்குநரகளையும் முன்னிறுத்தாது விலக்கி வைப்பது அவர்கள் அனுபவப்பட்டவர்கள் என்பதை உணர்த்துகிறது. வெல்க!!!!

Sunday, January 1, 2017

2016

இரெண்டாயிரத்துப்பதினாறாம் ஆண்டு எனக்கு மிக முக்கியமானது. இதை எப்பவும் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும் என நினைத்தே இந்தப் பதிவு.




அதற்கும் முந்தைய ஆண்டின் இறுதி மாதம், மழை, வெள்ளம்,  மின்சார இணைப்பு துண்டிப்பு என கடந்தது சென்னைக்கு. என் மகன்பிறந்து ஒருவாரம் ஆகியிருந்தது. அம்பத்தூர் எஸ்டேட் துவங்கி பாடி, அண்ணாநகர் என நீண்டு பெருங்களத்தூர் தாண்டி சென்னை மிதக்கிறது. ஆனால், என் வீடு இருக்கும் பகுதி பாதுகாப்பாக இருந்தது. மகனின் பெயர் சூட்டல் விழா சிக்கனமாக முடிந்தது. பன்னிரெண்டு பெயர்கள் வைத்தோம். மொத்தம் ஒன்பது பேர் இருந்தோம். நெல்லில் பேரெழுத தாய்மாமனும், காப்பிட அத்தையும் வர இயலவில்லை. ஒன்று விட்ட மாமா வந்து பெயரெழுதினார்.  மொத்தமாக சேர்த்து அரைமணி நேரம் மின்சாரம் துண்டிப்பு இருந்தது. பால், காய்கறிகள், மெழுகுவர்த்தி, நூடுல்ஸ் எல்லாம் தாராளமாகவே கிடைத்தன. மொபைல் சிக்னல் இருந்தது. இங்கிருந்து பொருட்களை வாங்கிச் சென்று பிறபகுதிகளில் வசிக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் விநியோகித்தோம். இருபது தேதிக்குப் பிறகு சென்னை ஒரளவு இயல்பு நிலைக்கு திரும்பியது. டிசம்பர் 26, 27 தேதிகளில் கவிஞர் தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா. நண்பர்கள் ஒரு van வைத்து சென்றுவந்தோம். வெள்ளக்காட்டைத் தாண்டிய ஒரு ஆறுதல் அது. காலை ஆறு மணிமுதல் இரவு உறங்கும் வரை உரையாடல்கள், வேடிக்கைகள், பாடல்கள் என சென்ற இரு நாட்கள்.  ஜெயமோகனை நான் வாசிக்க ஆரம்பித்த நாள் எதுவென்றால், இந்த வலைப்பூ தேங்கிய அந்தநாள் என சொல்லலாம். எழுத்து என்பது என்ன என உணர்ந்து / உணராமல் நின்ற தருணம் அது. எழுத்து மட்டுமில்லாமல் மேடைப்பேச்சு / நேர்ப்பேச்சு அனைத்தின் மூலமாகவும் அவர் என்னை வழிநடத்திக்கொண்டிருக்கிறார். என் ஆசிரியர் ஜெயமோகன் பற்றி தனியாக ஒரு பதிவு எழுத வேண்டும்.



புத்தாண்டின் இரவில் கடற்கரையில் உலாவுவது என்ற வழக்கம் முன்பு இருந்தது. கடந்த ஏழு வருடங்களாக இல்லை. ஆமாம். திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகின்றன. 2016ம் ஆண்டில் புதிய வேலைக்கு மாறினேன். முதல் விமான பயணம் செய்தது இந்த ஆண்டுதான். யோகாசனம் கற்றுக்கொண்டதும் வசனம் உள்ள ஆங்கிலப்படங்கள் அதிகம் பார்த்ததும் இந்த ஆண்டில்தான். இந்த லெளகீக சாதனைகளை ஒருபக்கம் வைத்துவிட்டு மற்றவைகளை சாராம்சமாக தொகுத்து பார்க்கிறேன்.

மயிலாப்பூர் ராமக்ருஷ்ணமடத்தில் புத்தாண்டின் காலை தரிசனம் மற்றும்  மதிய உணவு, மாலையில் ஸோர்பா தெ க்ரீக் நாவல் குறித்து எஸ்.ரா. அவர்களின் உரை என புத்தாண்டு ஆனந்தமாகவே துவங்கியது. அந்த உரையின் போது நண்பர் முரளி க்ருஷ்ணன் அறிமுகமானார்.



சென்னை வெண்முரசு கூட்டங்கள் என் வாசிப்பு முறையை மாற்றியமைத்ததில் மிக முக்கியமானவை. வெண்முரசு நாவலின் கதைகளையும் அதன் உதிரி கதாபாத்திரங்களையும் பற்றி பேசிய விவாதங்கள் நாங்களறியாமலேயே மாறி வெண்முரசு சொல்லும் தத்துவங்கள், மனித நாகரீகங்கள் என வெண்முரசை ஒரு கருவியாகக்கொண்டு மற்றவைகளை விவாதித்து அறிவதாக மாறிவிட்டன. 2015 ல் துவங்கி இன்று வரை மிகச்சிறப்பாக சென்றுகொண்டிருக்கின்றன.

நண்பர்களுடனான குழும உரையாடல்கள் நல்ல புரிதலை ஏற்படுத்தின. நடப்பு அரசியல், சினிமா, அறிவியல் என அனைத்தையும் பற்றி விவாதித்தோம். அனைவருமே விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் மூலமாக அறிமுகமானவர்கள். வெவ்வேறு இடங்களில் பணிகளில் இருப்பவர்கள். ஜெயமோகன் என்கிற மந்திரக்கயிறு இணைத்து வைத்திருக்கிறது.



கபாலி திரைப்படத்தின் வெற்றி மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. அது  குறித்த நீயா நானா சிறப்பு நிகழ்ச்சியில் ரஜினி ரசிகனாக  கலந்துகொண்டேன். நண்பர் சுனில் கிருஷ்ணன் மூலமாக என்னையும்  சுரேஷ்பாபுவையும் இந்த நிகழ்சிக்கு அழைத்திருந்தார்கள். தூத்துகுடி, திருநெல்வேலி, வேலூர் என பல மாவட்டங்களிலிருந்தும் வந்து கலந்துகொண்ட ரசிகர்களை கண்டு உரையாடியது மகிழ்ச்சியாக இருந்தது.



நண்பர் கெ.ஜெ.அசோக் குமார் அவர்களின் சாமத்தில் முனகும் கதவு சிறுகதைத்தொகுதி வெளியானது. அந்த விழாவில் தான், எழுதாளர்கள் கீரனூர் ஜாகீர் ராஜா, ப்ரான்ஸிஸ் கிருபா ஆகியோரை சந்தித்து உரையாடினேன்.

எழுத்தாளர். திரு. யூமா வாசுகி அவர்களை சந்தித்தது என் வாழ்வின் நல்லூழ்களில் ஒன்று. சென்ற தலைமுறையின் தஞ்சை மாவட்ட கதைசொல்லிகளான தி.ஜா,எம்.வி. வெங்கட்ராம் போன்றவர்களை அடுத்து என் தலைமுறைக்கான தஞ்சை மாவட்ட எழுத்தாளர் யுமா வாசுகி அவர்கள்.ரத்த உறவு   என்கிற தமிழின் முக்கியமான க்ளாசிக் நாவலை படித்ததும்  சென்றஆண்டுதான். இந்த நாவல் பற்றிய ஒரு பதிவு இந்த வலைப்பூவில் பாதியில் நிற்கிறது. அதை முடித்து பதிவேற்றவேண்டும்.



எங்க சுத்தியும் ரங்கனை சேவி என, இந்த பதிவில் ஜெயமோகனே மீண்டும் வருகிறார். சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் அவருடன் நண்பர்கள் உரையாடியது, பின் மறுநாள் மே-1, குருஜி செளந்தர் அவர்களின் சத்யானந்தா யோகா மையத்தை ( புணரமைப்புக்குப் பின் ) திறந்து வைத்து அன்றைய வெண்முரசு கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரை, பின் அக்டோபர் -2 காந்தி ஜெயந்தி உரை, பின் சமண தலங்கள் உலா மற்றும் நடைபயணங்களில் காரில் செல்கையில் அவர் கூறும் கருத்துக்கள் வேடிக்கை துணுக்குகள் என பல சுவாரசியங்கள்

மகாசிவராத்திரியன்று நண்பர்களுடன் திருவாலங்காடு, திருநின்றவூர், திரிசூலம், திருவாச்சூர் என சிவனருள் விழையும் பயணம், பின் திருவாசாக முற்றோதல், உத்தமர்கோயில் கிராதமூர்த்தி என தொடர்ந்தது, அதேநேரம், வெண்முரசில் கிராதம் வெளிவந்ததும் தற்செயலாக அமைந்தது



சில துக்க நினைவுகள், கவிஞர். குமரகுருபரன், கவிஞர். ஞானக்கூத்தன் , இரு கல்லூரி நண்பர்கள், ஒரு அலுவலக தோழர், மற்றும் இரு நண்பர்களின் தாயார் / தந்தை என கனமான நாட்கள்.

சிறுகதைகள் எழுத முயற்சித்து,அவற்றில் இரண்டு கதைகள் சொல்வனம் இணைய இதழில் வெளிவந்தன. முதல் கதையான விடிவு கதைக்கு எழுத்தாளர் ஜெயமோகன் நீண்ட விமர்சனம் எழுதினார். ஜெ.தளத்திலும் பலர் விமர்சனங்களை கூறினார்கள். இரண்டாம் கதையான பழனிக்கு  சொல்வனத்தில் மைத்ரேயன் ஒரு விமர்சனம் எழுதியுள்ளார். முதல் கதைகளுக்கே இப்படி அமைவதெல்லாம் ஈ உட்கார தேங்காய் விழுவது போலத்தான். ஆனால், எனக்கு அமைந்தன. இதெல்லாம் அந்தரங்கமாக எனக்கு மிகவும் மகிழ்ச்சியையே முதலில் அளித்தன. என் மீதான இந்த அக்கறைக்கு நான் என்றுமே கடமைப்பட்டுள்ளேன். நண்பர்கள் சிவா கிருஷ்ணமூர்த்தி மற்றும் நட்பாஸ் ஆகியோர்கள் என்னை மிகவும் ஊக்குவித்தார்கள். அவர்களுக்கும் நன்றி. வாசிப்பை சற்று மேம்படுத்திக்கொண்டு எழுதுவதைத் தொடர வேண்டும்.



வருட இறுதியில் மீண்டும் விஷ்ணுபுரவிழா. அதுகுறித்து எழுதிய கடிதம் ஜெ. தளத்தில் வெளியாகியுள்ளது. இரா.முருகன், பவா. செல்லத்துரை, பாவண்ணன், ஹெச். எஸ்.சிவப்ரகாஷ் ஆகியோரை முதன்முறையாக சந்தித்தேன்

சென்ற ஆண்டு முதல்நாள் வாங்கிய ராமக்ருஷ்ணரின் அமுதமொழிகள் புத்தகங்களை இன்று முதல் படிக்கத் துவங்கியுள்ளேன்.


சென்ற ஆண்டில் படித்த புத்தகங்கள் பட்டியல் அளித்துள்ளேன். அனைத்தும் கதைகள் / நாவல்கள்.என்னுள் இன்னும் கதை கேட்கும் சிறுவன் ம் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான் என புரிந்துகொள்கிறேன்.

நாவல்கள் / தொகுப்புகள்
துறைவன் - கிறிஸ்
மத்தகம் - ஜெயமோகன்
அழகான அம்மா ( ரஷ்ய சிறார் கதைகள்) - யூமா வாசுகி
காடு - ஜெயமோகன்
நிழலின் தனிமை - தேவிபாரதி
ரத்த உறவு - யூமா வாசுகி
கன்னி - ப்ரான்ஸிஸ் கிருபா
அரசூர் வம்சம் - இரா. முருகன்
கசாக்கின் இதிகாசம் - ஓ.வி.விஜயன் ( தமிழில்:-  யூமா வாசுகி )
கன்யாகுமரி - ஜெயமோகன்
கன்னிநிலம் - ஜெயமோகன்
நெடுங்குருதி - எஸ். ராமக்ருஷ்ணன்
துயில்  - எஸ். ராமக்ருஷ்ணன்
சஞ்சாரம்  - எஸ். ராமக்ருஷ்ணன்
சிதம்பரநினைவுகள் - பாலசந்திரன் சுள்ளிக்காடு ( தமிழில்:- ஷைலஜா)
பனிமனிதன் - ஜெயமோகன்
சாமத்தில் முனகும் கதவு - கெ.ஜெ.அசோக் குமார்

வெண்முரசு வரிசையில், வெய்யோன், பன்னிரு படைக்களம், சொல்வளர்காடு மற்றும் கிராதம்

கட்டுரைகள் / சம்பவங்கள்

இவர்கள் இருந்தார்கள் -ஜெயமோகன்
குற்றம் புரிந்தவர் - சுபா

சிறுகதைகள்

அ.மி (20கதைகள்)
திஜா (20 கதைகள்)
இரா.முருகன் ( 18 கதைகள்)
அ.முத்துலிங்கம்( 10 கதைகள்)

பாதியில் நிற்பவை

தாண்டவராயன் கதை - பா.வெங்கடேசன்
ஆதிரை - செயந்தன்
ஆரோக்ய நிகேதனம் - தாராஷங்கர் பந்த்யோபாத்யாய
Everyday Yogi- H.S.Shivaprakash

பாதிக்கு முன் நிற்பவை :-) 

மயக்குறு மகள் - காயத்ரி சித்தார்த்
மோகமுள் - திஜா
Sapiens - Yuval Noah harari


அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!