Tuesday, February 23, 2021

ஆள்தலும் அளத்தலும் சிறுகதை தொகுப்பிற்கான முன்னுரை


எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் என் முதல் சிறுகதைக்கு அவரது இணையதளத்தில் ஒரு நீண்ட விமர்சனத்தை எழுதினார். .  விடிவு என்கிற அந்தக் கதை என் வாழ்வில் ஒரு நேரடி அனுபவமே. இந்தத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளில்  நேரடி அனுபவத்தை அப்படியே கதையாக்கியதும் அது ஒன்று தான். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் நண்பர்கள் குழுவில் இருந்த எழுத்தாளர் சிவா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சொல்வனம் இதழின் ஆசிரியர் குழுவிலும் உள்ளார். அவர் மற்ற அனைவரையும் எழுதுவதற்காக தொடர்ச்சியாக வற்புறுத்தியும் வந்தார். அது என் முதல் கதை என்பதால் பிரசுரமானதும் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு  ஒரு ஆர்வத்தில் அனுப்பி வைத்தேன். அதற்கான அவரது  விமர்சனம் என் மீதான அக்கறையின்பால் எழுதப்பட்டது. அந்தக் கதை முந்தைய எழுத்தாளர்களில் யாருடைய சாயலில் உள்ளது; அவ்வகை கதைகள் எவ்வாறெல்லாம் எழுதப்பட்டுள்ளன;  எனது கூறுமுறையில் நல்லவை அல்லவை என்னென்ன; இனி வரும் கதைகளில் நான் தொடர வேண்டியவை என்ன விட வேண்டியவை என்னென்ன என அவர் விரிவாக எழுதினார். தான்தோன்றித்தனமாக ஒரு தெருவோரத்தில் பாடிக்கொண்டிருப்பவனைக் கண்ட ஒரு இசைமேதை இறங்கி வந்து அவனுக்கு அதன் நிறைகுறைகளை விளக்கிச் சொல்வது போன்றது அது.  அந்த சிறுகதைக்குப் பல வாசகர்களும் தங்கள் விமர்சனங்களை எழுதி அவையும் தளத்தில் வெளியாயின. இந்தத் தொகுப்பு இன்று வெளியாக அன்று அவர் காட்டிய அன்பும் அக்கறையும் ஒரு முக்கியக் காரணம். அவருக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.


    எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் புகழ்பெற்ற வாசகம் ஒன்று உண்டு ’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல; ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்து கொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’ என்று. இந்தத்தொகுப்பில் நானும் அதற்கான என் முதலடியையே எடுத்து வைத்திருக்கிறேன். அவரது மோஹித்தே, நாட்டுமருந்து ஆகிய கதைகள்  நான் இலக்கியத்துக்கும் வணிக எழுத்துக்கும் வித்தியாசம் அறியா காலத்தில் படித்தவை. மிதவை நாவல் பிற்காலத்தில் அறிந்து வாசித்த ஒன்று. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் மூலமாக அவரை அணுகி உரையாட வாய்ப்புகள் வாய்த்தன. இவை தொகுக்கப்பட்டால்  அவருடைய  முன்னுரை வேண்டும் என்று நான் கதைகளை எழுதிய போது நினைத்துக்கொண்டேன். அவரும் ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்துள்ளார். அவரது முன்னுரையை பெரும் கெளரவமாகவும் ஆசியாகவும் கருதுகிறேன். வணிக இதழ்களில் தன் எழுத்துக்கள் மூலம் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்த எழுத்தாளர்களான சுஜாதா மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரையும் இக்கணத்தில் நினைத்துக்கொள்கிறேன்.




சமூக வலைதளங்கள் தமிழுக்கு அறிமுகமான சமயத்தில் வலைப்பூ, ஆர்க்குட் போன்றவற்றில் சில பத்திகள் எழுதியிருக்கிறேன். அவற்றில் நிகழும் தொடர் விவாதங்களில் பங்கெடுத்துப் பத்திகளாக எழுதினேன். ஆனால் எழுத்து என்பது வேறு; அது டைரி எழுதுவது போல அன்றாட அலைச்சல்களின் தொகுப்பு மாத்திரம் அல்ல; அன்றாடங்களிலிருந்து நாம் உணரும் ஒன்று என்று நம்புகிறேன். என்னுடைய கதைகளில் ஒரு சிறுகதைக்கான தருணம் இருக்கிறதா என்று கவனிக்கிறேன். என் கதைகளின் வழியே நான் சொல்ல  வருவது வெறும் அதிர்ச்சியோ அல்லது நகைச்சுவையோ மாத்திரம் அல்ல என்பதில் கவனமாக இருக்கிறேன். கதைகளை வாசிப்பவரை மகிழ்விக்கும் நோக்கமோ அவரது அறிவுக்கண்ணை திறந்துவைக்கும் ஆவலோ இருந்ததில்லை. நான் அறிந்த களங்கள் எனக்கு சிலவற்றைச் சொல்ல இலகுவாக இருக்கின்றன என்பது மறுப்பதற்கில்லை. அந்தப் பின்புலம் உதவியாக இருந்தது. அனுபவங்கள் அறிதல்கள் என அனைத்தையும் ஒரு கலைடாஸ்கோப்பில் போட்டு சுழற்றிச்சுழற்றிக் காட்டுவது போலத்தான் இவை வெளிப்பட்டிருக்கின்றன.


இந்தத் தொகுப்பில் உள்ள ‘ஆர்வலர்’ கதை  எழுத்தாளர்கள் அரவிந்தன் மற்றும் ஆர். அபிலாஷ் ஆகியோர் நடுவர்களாக இருந்த கிழக்கு பதிப்பகத்தின்  ’சென்னையர் கதைகள் -2018’ சிறுகதை தொகுப்பில் தேர்வானது. மற்ற கதைகளில் நான்கு சொல்வனம் இணைய இதழிலும் மூன்று பதாகை இணைய இதழிலும் வெளியாகின. இரு கதைகள் இங்கு நேரடியாகப் பிரசுரமாகின்றன. நண்பரும் இலக்கிய விமர்சகருமான ஜா.ராஜகோபாலன் ஒரு சிறந்த திருத்தரும் ஆவார். அவரது ஆலோசனைகள் மிகவும் உதவியாக இருந்தன.  நண்பர் அருணாச்சலம் மற்றும் ஆனந்த் ஸ்ரீநிவாசன், தனா ஆகியோரும் ஒன்றிரண்டு தவிர அனைத்து கதைகளையும் பிரசுரமாவதற்கு முன்பே படித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். அரங்கசாமி, ஷிமோகா ரவி, சுனில் கிருஷ்ணன், சுந்தரவடிவேலன், சுரேஷ்பாபு, செளந்தர்ராஜன், நட்பாஸ் ( பதாகை ), கிரிதரன்(சொல்வனம்) ஆகியோரும் ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளனர். வாசகசாலை அமைப்பினர் இதன் மூன்று சிறுகதைகளை தங்கள் அமர்வுகளில் விவாதித்துள்ளனர். இவர்கள் தவிர இலக்கிய வட்ட நண்பர்கள் ஒவ்வொரு கதை வெளியான போதும் தம் விமர்சனங்களை முன்வைத்து உரையாடினர். இவையனைத்தும் எனக்குப் பெரும் உற்சாகத்தை ஊட்டின. ’நற்றிணை’ யுகன் அவர்கள் பதிப்பித்த என் முதல் மொழிபெயர்ப்பு நாவலான ’தம்மம் தந்தவன்’ எனக்கு ஏற்கனவே இலக்கிய உலகில் நல்ல அறிமுகத்தைக் கொடுத்திருக்கிறது. 


ஒரு ஆற்றைக் கடந்து செல்ல அதன் நடுவில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கிற தென்னை மரத்தில் நடப்பவன் போல முழுக்கவனத்துடன் தான் என் லெளகீகத்தில் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நடுநடுவே சிரிப்பது, அழுவது, அன்பு பாராட்டுவது, சீற்றம்கொள்வது என எதைச் செய்தாலும் ஒரு கண்ணை அந்த மரத்தின் மீது வைத்தபடியேதான் செய்ய இயல்கிறது. இருந்தாலும் என் ஆர்வத்தைப் புரிந்து  கொண்டு குடும்பத்தினரும் என் வாசிப்புக்கும் எழுத்துக்கும் ஆதரவாக இருக்கின்றனர். 

மேற்சொன்ன அனைவருக்கும், இந்தத் தொகுப்பை பதிப்பிக்கும் ’யாவரும்-பதாகை’ பதிப்பகத்தாருக்கும் இத்தருணத்தில் என் அன்பும் நன்றிகளும்.

R.காளிப்ரஸாத்

திருமுல்லைவாயல், சென்னை


ஆள்தலும் அளத்தலும்’ சிறுகதை தொகுப்பிற்கு எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்களின் முன்னுரை

புத்தகம் வாங்க

பண்ணைக்கு ஒருவன்

ஆள்தலும் அளத்தலும்’ சிறுகதை தொகுப்பிற்கு எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்களின் முன்னுரை

இளைய நண்பர் காளிப்ரஸாத் ஐந்தாறு  ஆண்டுகளாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் மூலமாக அறிமுகம். அவர் சிறுகதை எழுதுகிறவர் என்றெனக்கு அப்போது தெரியாது. ஒரு வகையில் அவருக்கே அந்த உத்தேசம் இல்லாதிருந்திருக்கலாம். ’யானை வேட்டுவன் யானையும் பெறுமே’ எனும் சங்க இலக்கியப் பாடல்வரி நினைவுக்கு வருகிறது.

 

            நான்காண்டுகளில் பத்துக் கதைகள், ‘ஆள்தலும் அளத்தலும்’ எனும் தலைப்பில் இன்று நூலாகிறது. ஆள்தல் என்றால் அரசு செய்தல், ஆட்கொள்தல், அடக்கியாளுதல், வழங்குதல், கைக்கொள்ளுதல், கையாளுதல் எனப்பல பொருள். அளத்தல் என்றால் அளவிடுதல், மதிப்பிடுதல், ஆராய்ந்தறிதல் என்பன பொருள். ஆழமான தலைப்பு சிறுகதை தொகுப்புக்கு. கதைகளை வாசித்து வரும்போது, தமிழ்ப் படைப்பிலக்கியப் பண்ணைக்கு ஒருவன் போந்தனன் என்பது உற்சாகமளிக்கிறது.

 



            மனத்தின் அவத்தைகள், தட்டழிவுகள், பிறழ்வுகள், கனவு நிலை உரைத்தல்கள், பிரமைகள் என்பன சிறுகதைக் கருப்பொருட்கள். சம்பவங்கள், முரண்கள், குணச் சித்தரிப்புகள், வாழ்வியல் போராட்டங்கள் எனப் பிறிதொரு வகை. என்ன வகையாயினும் மொழித்திறனிலும் செய்நேர்த்தியிலும் கூறு முறையிலும் சிறுகதைகள் எம்மை ஈர்க்கின்றன. சிலசமயம் சொப்பனத்தில் விடும் அம்பலப்புழை பால் பாயசத்தை விடவும் கையில் இருக்கும் சுட்ட பணகுடிப் பனங்கிழங்கு மேலென்பது என் மனோபாவம்

 

            காளிப்ரஸாத் எழுதிய பழனி முதல் பராசக்தி ஈறான பத்துக் கதைகளும் எனக்கு உற்சாக வாசிப்பு அனுபவம் தந்தன. செப்டம்பர் 2016-ம் ஆண்டு சொல்வனம் இணைய இதழில் அவரெழுதிய ‘விடிவு’ என்றே சிறுகதை அன்றே மனதை அலைக்கழித்தது. இப்போது மறுமுறை வாசிக்கும்போது அது பேசாப் பொருளைப் பேசத் துணிந்த கதை எனத் தோன்றியது.

 

            1992-ம் ஆண்டு நானெழுதிய ஐம்பத்து ஒன்றாவது கதை ‘ஊதுபத்தி’யை ‘விடிவு’ நினைவூட்டியது. எனது சாதி வெறியை நிறுவுகிற கதையென்று பகைமுரண் கொண்ட இதழாசிரியர் ஒருவரும் மார்க்சீய அறிஞர் ஒருவரும் ஆவணப்படுத்தினர். நல்லூழ் நிமித்தமாகக் காளிப்ரஸாத் அத்தகு அவதூறு, தரமிறக்குதல் எதையும் இக்கதை மூலம் எதிர்கொள்ள நேராது. தொகுப்பின் உணர்வுப் பூர்வமாக கதை அது. உருக்கும் கதையுமாம்.

 

            என் மதிப்பீட்டில், தொகுப்பின் சிறந்த கதை, ‘ஆள்தலும் அளத்தலும்’. அருளாலர் ஒருவர் பிரசாதம் போலக் கொடுத்த நினைவுப் பரிசொன்று பூசையறையில் வைக்கப் பெறும் தகுதியுடையது. நகரத்துச் சூழலில் வேசியொருத்தியின் செய்கூலிக்கு சேதாரமின்றிப் பணயமாகப் போகும் சம்பவமே கதை. இதில் வேசி, தாசி, பரத்தை, விலைமகள், பொருட்பெண்டிர், தேவடியாள், இருமனப் பெண்டிர், களவுக் கிழத்தி, விலை முலையாட்டி எனும் சொற்கள் இன்று விலக்கப்பட்ட கனிகள் என உணர்ந்தால், பாலியல் தொழிலாளி எனும் சமூக நீதிச் சொல் பெய்து கொள்ளலாம்.

 

            கிராமத்துப் பிறப்புகள், வளர்ப்புகள் பிழைப்புக்காக நகர் நோக்கி நகரும் போது சந்திக்கும் அலைக்கழிப்புக்களை அற்புதமாகச் சொல்லும் கதை மேற்சொன்ன ‘ஆள்தலும் அளத்தலும்’. மடாதிபதிகள் இருக்கட்டும், பெரு நகரங்களில் வாழ்பவர்கள் சொந்த ஊருக்கு வருகை புரிகையில், தம்மைக் காணவரும் படித்த வேலைக்குத் தொண்ணாந்து நிற்கிற இளைஞனிடம் பகட்டாகச் சொல்வார், ‘ பம்பாய் பக்கம் வந்தா என்னை வந்து பாரு என்னா! ‘என்று. சிலரைப் போய் பார்த்த அனுபவம் உண்டெனக்கு. தேடுவது ஒன்று, கண்டடைவது மற்றொன்று என்பதை அனுபவமாக்கும் கதையது

 

            மதிப்பு’ என்றொரு கதையும் தொகுப்பில் மதிப்பான கதை. விற்பனை, ஒப்பந்தம், பராமரிப்பு போன்ற பணிகளில் ஈடுபடுவோர் இந்தக் கதையைத் தீவிரமான பொருளில் புரிந்து கொள்வார்கள். அன்பு, பெருந்தன்மை, தன்னலம், வஞ்சம், உள்க்குத்து, தன்படை வெட்டிச் சாதல் எனப் படுபவை ஊடும் பாவுமாக நெய்யப்பட்டுக் கொண்டிருக்கிற சமூகப் பின்புலத்தில், இந்தக் கதைக்கென்றோர் தனித்துவம் உண்டு. கதையின் இறுதிப் பத்தியில் அவலமான திருப்பம். சிறுகதையின் இலக்கணம் என்று கொள்வாருண்டு இறுதி வரிகள் தரும் திருப்பத்தினை. கடந்து போனதொரு தேசீய நெருக்கடி சரியா தவறா எனும் கேள்விக்கு நம்மை ஆட்படுத்தாமலேயே தரப்பட்ட அதிர்ச்சி இக்கதையின் இறுதி

 

            கரி’ என்றொரு சொல்வனத்தில் வெளியான கதை. ஒரு ஸ்ரீலஸ்ரீ உருவாகும் கதை. சிற்றின்பம், பேரின்பம் என இரண்டைத்தான் இன்பம் என்றனர். ஒன்றைக் கடக்க இன்னொன்று. அல்லது ஒன்றைக் கடந்தால் இன்னொன்று. நமது புராணங்களில் இரண்டுக்குமான எடுத்துக்காட்டுகள் உண்டு. நாம் காசு கொடுத்து கடிக்கிற பட்டியை வாங்க விரும்பவில்லை. வாசிக்க ஈர்ப்பான கதை இது.

 

            முன்னுரை எழுதுவது என்பது தொகுப்பின் அனைத்துக் கதைகளுக்கும் ஐயம்பெருமாள் கோனார் நோட்ஸ் எழுதுவதல்ல என்பதை அறிவோம். எனவே முடிப்புரையாகச் சில சொற்கள்.

           

            பெரும்பாலான இந்தக் கதைகள் நல்ல வாசிப்பு அனுபவம் வழங்குகின்றன. ஈர்ப்பான கூறுமொழி. சொந்த அனுபவங்களா அல்லது சாட்சியாக நின்றவையா என்று அனுமானிக்க முயல்வது வாசகனின் வேலை அல்ல. ஆனால் நம்பகத்தன்மைக்கு என்றொரு தனியான வசீகரம் உண்டு.

 

            சம்பிரதாயமான சில புத்திமதிகள் கூறுவார்கள், வழக்கமாக முன்னுரை எழுதுவோர். அதனைத் தவிர்க்க விரும்புகிறேன். ‘அழுதாலும் பிள்ளை அவள் தானே பெறனும்!’ என்பது நம் இலக்கியக் கொள்கை.

 

            காலத்தால் தொடரும் முயற்சியும், ஊக்கமும், உழைப்பும், நுட்பமான பார்வையும், சமநிலைச்சீர் கோடாமையும், மொழித்திறனும், கலைத் தேர்ச்சியும் மேலும் காளிப்ரஸாத்துக்கு வாய்க்க இந்தக் கலைமகள் வழிபாட்டுத் தினத்தில் வாழ்த்துகிறேன்!

 

மிக்க அன்புடன்,                            

நாஞ்சில்நாடன்

25 அக்டோபர் 2020   

ஆள்தலும் அளத்தலும் - முன்னுரை

புத்தகம் வாங்க

Monday, February 15, 2021

இடைவெளி - எஸ்.சம்பத்

நான் யார்? எங்கிருந்து வந்தேன்? போன்றவை அடிப்படைக் கேள்விகள். மனிதனைத் தவிர வேறு உயிர்களுக்கு இந்த ஆர்வம் ஏதும் இல்லை. ஆறாம் அறிவின் பக்க விளைவாக இதை சொல்லலாம். இந்த குழப்பம் இருந்தாலும்  அதை பெரிதாக பற்றிக் கொள்ளாமல் உலகியலில் ஆழ்வது என்பது பெரும்பான்மையினர் செய்வது. இதை அறிய வேண்டி உலகியலைத் துறந்து இந்த தேடலை ஒட்டி அலைவது  ஞானியருக்கானது. இந்த குழப்பம் ஒரு தருணத்தில் அனைவருக்கும் எழக்கூடியதுதான். உலகியலில் ஒருவித ஞான மரபின் தொடர்பில் இருப்பவருக்கு பற்றிக் கொள்ள ஒரு பிடிப்பு போதுமானது. அவர்கள் தனக்கான குருவை மத சித்தாந்தத்தைக் கண்டடைகிறார்கள். ஆனால் எதையும் கேள்விக்கு உள்ளாக்கி தானே  முழுதும் அறிய விரும்புபவர்க்கு உலகியல் கைகூடாமல்  ஞானமும் கைகூடாமல் போவதே சாத்தியமானதாகிறது. முற்றிலும் தேடலில் அமர்ந்த புத்தனே தன வீட்டை விட்டு காட்டில் சென்று அமர்ந்து பல  ஆண்டுகள் கழித்துதான் அந்த உண்மையை அறிகிறான். புத்தனுக்கும் முன்னால் தோன்றிய கிருஷ்ணனும் பாண்டவர்களின் வனவாச காலம் முழுவதும் ஊழ்கத்தில் அமர்ந்துதான் இதை அறிகிறான். ஆனால் மனிதனின் ஆசை என்பது அளப்பரியது. அது, தான் உலகியலில் இருந்தபடியே அந்த அடிப்படைக்கு கேள்விகளை அறிய முடியுமா என்று தூண்டியபடியே இருக்கிறது. தினகரன் அத்தகைய பேராசை கொண்ட ஒருவர்.

 



அடிப்படைக் கேள்விகள் என்பது உடநிடத காலத்தில் வரும் நசிகேதன் முதல் தாஸ்தாவ்யெஸ்கி வரை அனைவரையும் அலைக்கழித்த ஒன்றுதான். தினகரன் அனைவரையும் வாசித்திருக்கிறார். காணும் அனைத்தினையும் அதற்கான சமிக்ஞைகளாக  கருதுகிறார்.  மரணம் என்பது ஜீவாத்மாவின் ஒரு தொடர்ச்சியே வினைப்பயன் என்றெல்லாம் செல்லும் நம் சிந்தனை மரபின் ஊடாக அவர் மரணம் என்பது ஒரு 'இடைவெளி'தான் என்கிற புரிதலை அடைகிறார். அந்த புரிதல் வரை அவரை செலுத்தியவைகளின் தொகுப்பு இந்த நாவல்

 

தினகரன் மெத்த படித்தவர் ஆனால் ஒரு கடைநிலை பணியிலேயே தன்னைப் பொருத்திக் கொள்கிறார். பெரும் அலுவலக பொறுப்புகள் தன் தேடலுக்கு இடையூறாக அமைந்துவிடும் என்று அவற்றைத் தவிர்க்கிறார். ஆனால் அவரது உடல் இச்சையை அவ்வாறு விலக்கிவைத்தவர்  இல்லை. அது சார்ந்து ஒரு அலைக்கழிப்பே அவருக்கு  எஞ்சி நிற்கிறது.  முற்றிலும் அதில் ஆழ்ந்து கிடப்பது. மற்றோரு தருணத்தில் இணையின் அழைப்பையும் தவிர்த்துவிட்டு தான் ஒரு இம்போடெண்டோ என்று குழம்புவது என அலைபாய்கிறார். அலுவலக வேலையிலும் முழுக்கவனம் செலுத்த இயலவில்லை. ஒரு வேலையில் இருக்கும்பொழுது இந்த சிந்தனைக்கு ஆட்பட்டு அப்படியே கால நேரம் தெரியாமல் அமர்ந்திருக்கிறார். அவர்  ஒரு தருணத்தில் தனக்கு மனநோய் இருக்கிறதோ என்று கருதி அதற்கான சிகிச்சையும் மேற்கொள்கிறார். அத்தகைய தருணத்தில்தான் ஒரு உறவினரின் மரணம் அவருக்கு ஒரு புரிதலை கொடுத்துவிட்டுச் செல்கிறது.

தினகரனின் அவஸ்தையை சுற்றியுள்ள நபர்கள் நன்றாக புரிந்து கொள்கிறார்கள். அவர் ஏமாற்றவில்லை என்பதும் அவருக்கு உண்மையாகவே அந்த குழப்பம் இருக்கிறது என்றும் அதற்கு தன்னால் இயன்றதை செய்யவும் அவர்கள் சித்தமாக இருக்கிறார்கள். ஹோட்டல் சர்வர் முதல் மனைவிவரை அனைவரும் அதக அனுசரணையாகவே செய்கிறார்கள். ஆனால், அவருடைய கேள்விகளுக்கான பதிலாக  இந்த நாவல் தெளிவாக ஒன்றை சொல்லிவிடுகிறதா? என்றால் இல்லை. இது ஒன்றும் பெரிய ரகசியம் இல்லை. இதன் முடிவு என்னவாக இருக்கும் என்பது இந்த நாவலைக் கையில் எடுக்கும்   அனைவருக்கும்  தெரிந்த ஒன்றாகத்தான் இருக்கும். அப்படி ஒன்று நிகழ்ந்திருந்தால் இன்று இதை பற்றி நான் எழுதிக் கொண்டிருக்க மாட்டேன். இந்நேரம் இந்த நாவல் புனித நூலாக ஆகி உரைகள் எழுதப் பட்டிருக்கும். அதிருஷ்டவசமாக அல்லது துரதிஷ்டவசமாக    அவ்வாறு ஆகாமல்  இலக்கிய தரத்துடன் நின்றுவிடுகிறது.

 

நாவலின் பெரிய  பலம் என்பது அதில் உள்ள ஒரு அப்பட்டமான அணுகுமுறை. தன்  தயக்கம், தோல்வி, அவமானம் என அனைத்தையும் பாசாங்கு இல்லாமல் முன் வைக்கிறார். தாஸ்தாவ்யேஸ்கி மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்ததை போல தானும் முயற்சிக்க எண்ணி மாடியின் விளிம்பு வரை சென்று கீழே குதிக்க யோசிக்கிறார். முழு பிரக்ஞையுடன் அதைச செய்வதால் அவர் குதிக்கவும் இல்லை. அதே சமயம் அவரது தேடல் வெற்றியடையவும் இல்லை. இந்த நாவல் முழுவதுமே இருக்கும் குழப்பம் என்பது இந்த  பிரக்ஞை உள்ள மற்றும் அற்ற நிலைகளின் குழப்பமாக இருப்பதுதான். தாஸ்தாவ்யேஸ்கி நாவலின் நாயகர்கள் போல தினகரன் முழுவதாக ஒரு பேரதிர்ச்சியைக் கண்டு செயலிழக்கவும் இல்லை. அல்லது இந்திய மரபின் ஞானத்தேடல் போல முற்றிலும் தன்னை விடுவித்துக் கொள்ளவும் இல்லை. கீழைத்தேச மற்றும் மேலைத்தேச ஞான மரபை அறிந்தவராக இருப்பதால் மேலும் மேலும் என்று அதை துழாவியபடியே செல்கிறார். அவர் நிலையழிந்து போகும் தருணங்கள் வருகின்றன. காசு  சுண்டிவிடும்போதும், அலுவலக இயந்திரத்தைக் கண்டு அமர்ந்திருக்கும்போதும் அவருக்கு காலம் தூரம் கடந்த நிலை உருவாகிறது. ஆனால அவர் மூர்ச்சையாவதும்  அல்லது உடனே விழிப்படைவதும் உண்டாகிறது. சாவு ஒரு உருவம் கொண்டு அவருடன் பேசாத துவங்குகிறது. அவர்   அதனுடன்  உரையாடத துவங்குகிறார். இதில் அகவெளியில் நிகழ்வது எது? புறவெளியில் நிகழ்வது எது? என்கிற குழப்பம் அவருக்கும் உண்டாகிறது. சுற்றியிருப்பவர்கள் அது உணர்ந்தாலும் கண்டுகொள்வதில்லை. இறுதியில்  இடைவெளி என்ற  சித்தாந்தத்தை பற்றிக் கொண்டதும் அதற்கேற்ப சில பரிசோதனைகளை செய்து தன்னுடைய  ஆய்வை நிறுத்திக் கொள்கிறார்.

 

நாவலின் மற்றோரு பலம் என்பது பிறழ்வு நிலையை இலகுவாக எழுதியிருக்கும் நடை. சட்டை மாற்றுவது போலத்தான் உயிர் உடலை மாற்றுகிறது.. காந்தி வெற்றுடம்புடன் நின்றததுதான் அவரது தற்காப்புக்கு முதன்மை காரணம்  போன்ற வரிகள்  மூலம் பல நீண்ட விவாதங்களை எளிதில் தாண்டிச்  செல்கிறார்.  மூணு சிட்டு விளையாட்டால் அவர் காணும் நுட்பம் பிடிபட்டதும் அதிலிருந்து விலகுவது. அவர் கல்பனா என்ற பெண்ணுடன் அவருக்கு இருந்த உறவு உண்மையா அல்லது அவருடைய புனைவா ( கல்பனா பெயர்க்காரணம்) என்பது வாசிப்பை சுவாரஸ்யமாக்குபவை. ஆனாலும் இது நாவலின் முடிவை நோக்கி எந்த வித எதிர்பார்ப்பையும் உருவாக்கவில்லை என்பதும் உண்மை




 

நாவலின் நாயகன் தினகரனுக்கும், நாவலாசிரியர் எஸ்.சம்பத்துக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. இந்த நாவலின்  முன்னுரையை வெங்கட் சாமிநாதன் எழுதியிருக்கிறார். எழுத்தாளர். சம்பத் பற்றி அவர் அளிக்கும்  சித்திரம் மிகவும் ஆர்வமானது. பழுப்பு நிறப் பக்கங்களில் சாரு அனைத்தையும் தொகுத்து எழுதியிருக்கிறார்.  சம்பத்தின்  மரணமும்  அவரது பதட்டமும் அலைச்சலும் கொண்ட  வாழ்க்கை சம்பவங்களோடு இடைவெளி தினகரனை  வாசிக்கையில் அந்தப் பின்புலம் இந்த நாவலை  இன்னொரு தளத்திற்கு இட்டுச்  செல்கிறது என்பது மறுப்பதற்கில்லை.  சென்றமுறை எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியை சந்தித்த பொழுது அவர் ஒரு தகவல் கூறினார். எழுத்தாளர் சம்பத் அறுநூறு பக்க நாவல் ஒன்று எழுதி சரிபார்க்க இவரிடம் கொடுத்துள்ளார். பதினைந்து நாட்கள் கழித்து நாவலைப் பற்றி அவரிடம் கருத்து கேட்கையில் "நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன்' என்று இந்திரா பார்த்தசாரதி பதில் அளிக்கிறார். இத்தனை நாட்களில் முழுமையாக உங்களை வாசிக்க வைக்கவில்லையென்றால் அது நாவலின் தோல்வியே என்று கூறியபடி, அந்த நாவலை எரித்துவிடுகிறார் சம்பத். இன்று போல அப்பொழுது கணினியில் சேமிக்கும் முறையெல்லாம் வழக்கத்தில் இல்லை. கையால் எழுதியதுதான். அதைத்தான் முற்றிலுமாக எரித்து சாம்பலாக்கியிருக்கிறார். இடைவெளி நாவல் வாசித்தபின், அந்த நிகழ்வை எண்ணிப்பார்க்கிறேன்.  இன்று அந்தப் பிரதி  இருந்திருந்தால் அது ஒருவேளை அவரை தமிழிலக்கியத்தின் தாஸ்தாவ்யேஸ்கியாக  அடையாளம் காட்டியிருக்கும் என்று எண்ணவைக்கிறது இடைவெளி என்னும் இந்த நூறு பக்க   நாவல் காட்டும் சித்திரம்.