Thursday, February 9, 2017

மன்னார்குடியும் மாஃபியாவும்

நான் ஜெயலலிதாவை முதலும் கடைசியுமாக நேரடியாக பார்த்தது மன்னார்குடியில்தான். ராஜகோபாலஸ்வாமி கோயில் கும்பாபிஷேகத்திற்கு 1990களில் வந்திருந்தார். தெற்குவீதியில் நின்றிருந்தபோது காரில் வணக்கம் சொல்லியபடி சென்றார். அன்றுதான் என் உறவினர் கண்ணப்பா மாமாவையும் முதன்முதலில் பார்த்தேன். கும்பாபிஷேகம் பற்றி கட்டுரை எழுத வந்திருந்தார். விதுரன் என்கிற பெயரில் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தார்.  அவரும் ஜெயலலிதா போலவே திடீரென மரணம் அடைந்தார். தீபம் இதழின் பொறுப்பாசிரியர் ஸ்ரீநிவாச ராகவன் என்றால் சிலர் அறிந்திருக்கக்கூடும்,

மன்னார்குடி என் ஊர். என் அப்பாவின் ஊர் அதுவல்ல. திருவாரூர் அருகே  வேளுக்குடி என்னும் கிராமம்.  என் குழந்தைகளுக்கும் அது சொந்த ஊர் அல்ல. ஆகவே, எனக்கு மட்டுமான ஊர் என சொல்லலாம். நான் ஆறாவது படிக்கும்போது அங்கு வந்தோம். பதினெட்டு வருடங்கள் வாழ்ந்தோம். மன்னார்குடியை பற்றி சொல்லவேண்டுமெனில் அங்குள்ள குளங்களை பற்றி சொல்லவேண்டும். நாங்கள் ஆரம்பத்தில் இருந்த முதல்தெருவை சுற்றியே மூன்றுகுளங்கள் இருந்தன. ஆனால் குளிக்க போகவேனும் எனில் அரைமைல் நடந்து கோபிநாதன் கோயில் குளத்திற்குத்தான் செல்லவேண்டும். இவைகளைத்தவிர பல குளங்கள் இருந்தன. காவிரியின் கிளைஆறான பாமணியில் வரும் தண்ணீரை சேமிக்க முடிகிற வகையில் அருகருகே குளங்கள் இருக்கும்.   மிக கச்சிதமாக தாயக்கட்டத்தில் கோடு போட்டதைப்போல ஒரே அளவில் பிரிக்கப்பட்டு நன்றாக திட்டமிடப்பட்டு உருவான நகரம் அது.

பெரிய தெப்பகுளம் எனப்படும் ஹரித்ராநதியில் மதகு வழியே காவிரி தண்ணீர் பாய்வதை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன். மன்னார்குடி தெப்பகுளம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய குளங்களில் ஒன்று. அதன் நடுவே ஒரு கிருஷ்ணன் கோவில் உண்டு. இப்போது படகில் போய் வரலாம். நான் நீந்திப்போயிருக்கிறேன்.


ஆனிமாதம் தெப்ப உற்சவம் நடக்கும். அந்நாளில் அந்த குளத்தின் கரைகளில் உள்ள மாடங்களில் அகல் விளக்கு ஏற்றுவோம். இதுதவிர பங்குனி மாதம் பதினெட்டு நாட்கள் ராஜகோபாலனுக்கு உற்சவம் நடக்கும். அப்போது கோபாலன் நகர் உலா. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் என. இது தவிர அமாவசை, ரோஹிணி நட்சத்திரம், ஸ்ரவண நட்சத்திரம் கூடி வரும் நாட்களில் கோயிலுக்குள் கோபாலன் புறப்பாடு நிகழும். வெள்ளிக்கிழமைதோறும் செங்கமலத்தாயார் புறப்பாடு நிகழும். வெள்ளிக்கிழமையும் மேற்படி தினங்களும் கூடி வருகையில் இரட்டைப்புறப்பாடு நிகழும். புறப்பாடுகளில் பிரபந்தம் வாசித்தபடி முன்னால் செல்ல பின்னால் பெருமாள் வர அவருக்குப் பின்னால் வேதம் ஓதியபடி வருவார்கள். தமிழ் முன்னால் செல்ல அவ்வழியே பெருமாள் வர பின்னால் அவரைத்தேடி வேதம் வருகிறது என சொல்வார்கள்.மன்னார்குடி கோயிலின் ராஜகோபுரமானது இந்தியாவின் உயரமான கோபுரங்களில் முதல் பத்துக்குள் வரக்கூடியது. கோவிலைசுற்றி உயரமான மதில்கள் உண்டு. மன்னார்குடி மதிலழகு, திருவாரூர் தேரழகு, வேதாரண்யம் விளக்கழகு என சொல்வடை உண்டு. மன்னார்குடி கோயிலுக்கு மதிலழகைப் பார்க்கப் போனேன் என புஷ்பவனம் குப்புசாமியின் துள்ளலான பாடல் உண்டு. ( தஞ்சாவூரு மண்ணெடுத்து தாலி ஒண்ணு செய்ய போனேன், சீரகம் பாத்திக் கட்டி செடிக்கு செடி குஞ்சம் கட்டி என்று அவர் பாடிய பாடல்கள் அப்போது மிகப்பிரபலம். )

 உள்ளே நூற்றுங்கால் மண்டபம், ரோஹிணி மண்டபம் என கோயில் மிக பிரம்மாண்டமானது.

தாயாருக்குத் தனி கொடிக்கம்பம், கருடி சந்நிதி, தனி பிரகாரம் உண்டு
கோயிலில் ஒரு அழகான யானையும் உண்டு. செங்கமலம் என்று பெயர். செங்கம்மா என்று
அழைப்பார்கள். குழந்தைகளுக்கு தலையில் கைவைத்து குஷியாக்கும்.
மதியம் மூணு மணியளவில் சென்றால் யானை குளிப்பதை பார்க்கலாம்.

ராஜகோபாலன் மிக அழகு. மணிநூப்புரதாரி ராஜகோபாலா என்கிற தெலுங்கு கீர்த்தனையை கேட்டுப்பாருங்கள். மிக அழகான பாடல். அருணா சாய்ராம் குரலில் யூட்யூபில் இருந்தது.  பிறகு தூக்கிவிட்டார்கள். பதினெட்டு நாட்கள் உற்சவத்தின் போது இரவில் கடைத்தெரு வழியாக புறப்பாடு வருவதைப்போல பகலில் கோவிலை சுற்றியும் தெப்பகுளம் சுற்றியும் புறப்பாடு நிகழும். இதுவும் வேறு அலங்காரம். வைரமுடி, காளிங்க நர்த்தன சேவைகள் எல்லாம் அந்நேரங்களில்தான்.

கலை இலக்கிய இரவு எங்கள் ஊரில் மிக பிரசித்தம். பந்தலடி அருகே இரவு முழுவதும் கூட்டம் நடக்கும். அல்லது கோயில் அருகே. காலை பீப் லேந்து மாலை பீப் வரை வேலை பீப் செய்து கூலி பீப் கேட்டவனை பீப் சொல்லி திட்ட்டும் முதலாளி பீப் பற்றிய பாடல் அங்குதான் முதலில் கேட்டேன். படிச்சவன பன்னி மேய்க்க சொன்னான் பன்னிக்கெல்லாம் மினிஸ்டர் போஸ்ட்டு தந்தான் என்ற பாடலை கேட்டு ரசித்து கைதட்டி சிரித்து நின்றிருக்கிறேன். பொன்னீலன் குன்றக்குடி அடிகளார் பற்றி பேசிய உரை இன்னும் ஞாபகம் இருக்கிறது.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம். பொன் விளைகிற பூமி என்று சொல்லப்படும்.  இப்போது நிலக்கரி கிடைக்கிறது. மீத்தேன் கிடைக்கிறது என கிளம்பியிருக்கிறார்கள். பழுப்பு நிலக்கரி இல்லை ராவாகவே கிடைக்கிறது என சிலர் சொல்கிறார்கள். அதற்கேற்றார் போல தண்ணீரும் வருவதில்லை. முன்பு காவிரியில் தண்ணீர் வருகிறது என கீழப்பாலம் அருகே நின்று தண்ணீர் கணுக்காலில் பின் ஆடுசதையில் பின் இடுப்பளவு என குப்பைகளை சேர்த்து வர நடுவே கும்மாளமிடுவோம்.இப்போது தண்ணீர் அவ்வளவாக வருவதில்லை.  வண்டிகளில் மணல் அள்ளுகிறார்கள். மிகச் சமீபத்தில் விக்னேஷ் என்னும் ஒரு இளைஞன் காவிரி தண்ணீர் வரவில்லை என தீக்குளித்தான்.

இதுபோல என்னிடம் மன்னார்குடி பற்றி சொல்ல இன்னும் பல விஷயங்கள் உண்டு. அவற்றையெல்லாம் சொல்லிவிட ஆசைதான். ஆனாலும், சொந்த ஊர் மன்னார்குடி என்று நான் சொன்னதும், ஓஹோ!! மாஃபியா ஊருன்னு சொல்லுங்க.. என சிரிப்பவர்களுக்கு என சொல்ல சில விஷயங்கள் உண்டு. நீங்கள் சொல்லும் மாஃபியா கட்சி மன்னார்குடி எம் எல் ஏ வாக ஆனது என் பதின் பருவத்தில்.  அதன் பின் இன்று வரை இல்லை. இது முழுக்கவும் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் கோட்டை. கூட்டணி யாராக இருந்தாலும் இடது சாரிகள் வெல்வார்கள் .  திமுக மீது மிக அபிமானம் உண்டு. இடதுசாரிகள் ஜெயிக்காத நேரங்களில் திமுக ஜெயித்திருக்கிறது. கலைஞர் திருவாரூர் காரர். இன்னொரு அமைச்சருக்கு வடசேரியில் தொழிற்சாலை உண்டு. மாஃபியாவை  வாழவைக்கும் மற்ற ஊர்க்காரர்களுக்கு மாபியாவை சொந்தமாக்கி மன்னார்குடி  யை விட்டு வைக்குமாறு ஊர்க்காரனாக ஒரு விண்ணப்பத்தை   வைக்கிறேன்.
Wednesday, February 8, 2017

தாண்டவராயன் கதை - வாசிப்பனுபவம்

நான் இப்போது யாருடைய கனவில் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன் அல்லது நீங்கள் யாருடைய கனவில் இதை படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என இன்ஸெப்ஷன் தனமாக யோசித்திருக்கிறீர்களா? அல்லது மோகன்லால், சுரேஷ்கோபி நடித்த குரு த்தனமாக நமதுநோய்க்கு மருந்து நமக்குள்தான் இருக்கிறது என்றாவது? தமிழில் இதுபோன்ற முயற்சிகள் இல்லையென்பதால் நான் தமிழ் படங்களை குறிப்பிடவில்லை. முதல்தேதி என்றொரு திரைப்படம் சிவாஜி நடித்தது.. “ சம்பள தேதி ஒண்ணிலிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்” என்கிற என்.எஸ்.கே பாடல் இடம்பெற்ற படம். இறுதியில் மொத்த கதையும் சிவாஜியின் கனவு என சொல்லி முடித்திருப்பார்கள், இந்த கூற்றை நம்பி தமிழில் அப்பவே இதெல்லாம் என நினைத்து படத்தை பார்த்து பின் என்னை திட்டக்கூடாது. எனக்கு இந்த படம் ஞாபகம் வருகிறது அவ்வளவுதான். பா.வெங்கடேசனின் தாண்டவராயன் கதை நாவலை படிக்கும்போது எனக்கு இயல்பாக மேற்கண்ட ஆங்கில மலையாள படங்கள் நினைவிற்கு வந்தன. நடிகர் திலகம் படம் இதை எழுதும் போது தான் ஞாபகம் வந்தது

சாபக்காட்டில் பார்வை இழந்த தன் மனைவி எலினாரை அவள் தாய்வீட்டில் விட்டுவிட்டு இந்தியா பயணமாகும் டிரஸ்ட்ராம் என்கிற பிரிட்டீஷ் குடிமகன்,  அப்போது காலனியாதிக்கத்தில் இருந்த இந்தியாவில் கதைகளின் வழியே தன் மனைவியின் கண்பார்வைக்கான மருந்தை கண்டுபிடிப்பதுதான் தாண்டவராயன் கதை.  950 பக்கங்கள் கொண்ட இந்த நாவல் எண்ணூறு பக்கங்கள் வரை கதாநாயகனின் பயணங்கள், பிரெஞ்சு புரட்சி, இந்தியாவில் சுல்தானிய ஆட்சி முடிவு என பல வரலாற்று சம்பவங்களீனூடே பயணித்து கடைசி நூற்றியைம்பது பக்கங்களில் மொத்த கதைக்கான முடிச்சை ஒவ்வொன்றாக அவிழ்க்கிறது. கிராபத் என்கிற கதாபாத்திரத்தை நன்கு கவனித்திருந்தால் முன்பே ஊகித்தும்விடலாம். 

நாவலில் முதலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது அதன் மொழிநடையைத்தான். கொழுகொழுகன்றே கன்றிந்தாயே தாய் மேய்க்கும் இடையா என்ற பாடல் பா.வெங்கடேசனுக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இருந்திருக்கும் என அடித்து சொல்ல முடியும். வாக்கியங்கள் நிற்காமல் ஓடுகின்றன. ”950 பக்கங்கள் படிக்கல.. 950 வரிகள் படிக்கிறேன்” என  நண்பர்களிடம் நான் சொல்வதுண்டு. அது மிகைதான். உண்மையில் அதற்கும் குறைவான வாக்கியங்களே இருக்க வாய்ப்பு அதிகம். இவ்விதமான எழுத்து நடை முதலில் ஒரு வாசகனுக்கு ஒரு பந்தயத்தை முன் வைக்கிறது. நான் இதை படித்தேன் என்று சொல்வது என்னால் இப்படி கடினமான நாவலையும் படிக்கமுடியும் என்ற சுயதம்பட்டமாகவும் இருக்கலாம். 

இரண்டாவது ஆசிரியர் கையாண்டிருக்கும் புனைவுலகம். சாபக்காடு, பிரெஞ்சு மக்கள், நாயக்க மன்னர்களிடம் பணியாளாக சேரும் துயிலார்கள், லவணர்கள் என சமூகத்தால் சற்று தள்ளிவைக்கப்பட்டுள்ள மக்களை ஒரு மாலையாக தொகுத்துவிட்டிருக்கிறார். அதில் சரடாக தாண்டவராயன் கதை வருகிறது. தாண்டவராயனும் அவன் மகன் கோணய்யனும் செய்கின்ற சாகசங்கள் மற்றும் காற்றுப்புலி அத்தியாயங்கள் போன்றவை அவரது கற்பனையின் உச்சத்தை காட்டுகின்றன. டிரஸ்ட்ராம் தவிர இந்த கதையில் இன்னொரு நாயகனாக வரும் சொக்ககெளட பிரான்சில் மருத்துவரிடம் கதைகளைக்கொண்டே வியாதிகளை குணமாக்க முடியும் என சிறப்பாக வாதிக்கும் இடம் இந்த நாவல் செல்லும் திசையை அறிவிக்கும் மிகச்சிறந்த துவக்கம். அதற்கு முன் சொல்லியிருக்கும் சம்பவங்களை அதன் பின் சேர்க்கும் லாவகமும் அயற்சியடையாமல் படிக்க உதவுகின்றன. முதல்பாதியில் எலினாரும் இரண்டாம் பாதியில் கெங்கம்மாவும் நாயகிகள். ஓரளவு எழுதப்படித்த கெங்கம்மா மற்றும் தமிழ் படிக்க கற்றுக்கொண்ட டிரஸ்ட்ராம் ஆகியோரும் நீலவேணியின் பாதை என்கிற அந்த காவியத்தின் இடைசெருகலை படித்து புரிந்து கொள்வது போன்றவை ஆசிரியர் நமக்கு அளிக்கும் குறிப்புகள். நீலகண்டருக்கு தாண்டவராயன் கதை எழுத அவர் ராபர்ட் நோபிளி என்கிற பாதிரியாரால் ஈர்க்கப்பட்டார் என்று சொல்வது இன்னும் ஆச்சரியமானது. இத்தாலியிலிருந்து வந்த நோபிளி அவர்கள், இல்லாத ஒன்றை  இருப்பதாக பொய்யுரைகளை எழுதி அதற்கான ஓலைச்சுவடிகளை அவரே உருவாக்கி பின் அது ஒரு மோசடி என நூறு ஆண்டுகள் கழித்து இன்னொருவரால் நிரூபிக்கப்பட்டது. அதற்குள் அது வரலாறாக இங்கு பரப்பப்பட்டு இன்றளவும் சிலரால் நம்பப்படுகிறது. அதை மாதிரியாகக் கொண்டு எழுதப்பட்டது தாண்டவராயன்கதை என்று இந்த நாவலில் வரும் தாண்டவராயன் கதையாசிரியர் சொல்கிறார்.

எழுதுவது அபினி இழுப்பதுபோல. அந்த சுவாரசியத்தாலேயே எழுத்து எழுதிச்சென்றபடியே இருக்கிறது. இந்த நாவல் துப்பறியும் நாவல்களின் வகையைச்  சேர்ந்தது. ஆனால் இதை  பொன்னியின் செல்வன் வரிசையில் வைத்து அதுபோன்ற சுவாரசியமான வணிக எழுத்தாகவும் சொல்ல முடியாது. இது கையாளும் விவாதங்கள் அதன் குழப்பங்கள் மற்றும் மாயஎதார்த்தநடை போன்றவற்றைக்கொண்டு பின் தொடரும் நிழலின் குரல் வரிசையிலும் வைக்க முடியாது. தாண்டவராயன் கதை இரண்டும் கலந்து இவற்றிற்கிடையே ஒரு இடத்தில் இருக்கிறது. ஒரு உதாரணத்திற்கு, இந்த நாவலை கடைசி நூறு பக்கங்களை முதலில் படித்துவிட்டால் பின் முதலிலிருந்து படிக்க சுவாரசியம் போய்விடும். அப்படியிருக்கையில் அந்த பக்கங்கள் பின்னால் அவிழ்பதற்கான முடிச்சுகளை மட்டுமே போட்டுவருகிறதா என்கிற கேள்வி வருகிறது. வந்தியதேவன் என்னை கத்தியால் குத்திவிட்டான் என கந்தமாறன் பொன்னியின் செல்வனில் பல இடங்களில் மொத்தத்தையும்  விவரிப்பது போல இதிலும் இரண்டு பக்கங்கள் நீட்டித்து சம்பவங்களை விவரித்தபின் நாலு வரியில் என்ன நடந்துச்சின்னா என மீண்டும் அது சுருக்கமாக சொல்லப்படுகிறது. சொல்லின் அழகைத்தவிர அங்கே இருப்பது என்ன என்ற குழப்பம் வந்துவிடுகிறது. என் நண்பர் சிவகுமார் இது பற்றி பேசியபோது ஈர்க்கப்பட்டு இதை வாங்க அலைந்தேன். ஆனால் இது அச்சில் இல்லை. மூர்மார்க்கெட்டில் கிடைக்கும் என்றார்கள். மூர்மார்க்கெட்டில் இது இல்லை. காளியப்பா மருத்துவமனை பின்னால் இருகும் பழைய புத்தககடையில் கிடைக்கும் என்றார்கள். அங்கு போவதற்குள் சிவகுமாரே, தன் புத்தகத்தை இரவல் அளித்தார். அப்படித்தான் இதை வாசிக்க நேர்ந்தது. இதை விரைவில் அச்சில் கொண்டுவரவேண்டும் என்பதே பதிப்பாளர்க்ளுக்கு என் வேண்டுகோள். 
கீழுயிர்கள்

இழிமக்கள்… கீழுயிர்கள்… செத்துக்குவியட்டும் இவர்கள். ஆண்குறிகொண்டிருப்பதனாலேயே சாகத்தக்கவர்கள்… மீசைகொண்டிருப்பதனாலேயே கீழுலகில் நெளியவேண்டியவர்கள்

- வெண்முரசிலிருந்து


அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் இருப்பவனே இன்னொரு வீட்டின் ஏழு வயது பெண் குழந்தையை கடத்தி சென்று கொன்று பின் எரித்த செய்தி இன்று காலையில் நண்பர் மூலமாக அறியவந்தது. நண்பரின் பக்கத்து வீட்டு பெண். குழந்தை காணவில்லை என்று அவர் அனுப்பிய செய்தியை வேறொரு குழுமத்திற்கு அனுப்பிய போது அங்கிருந்த நண்பர் இந்த லிங்க்கை அனுப்பி குழந்தை இறந்த செய்தியை குறிப்பிட்டார். அதுவரைக்கும் அந்த குழந்தையை திருப்பி சேர்த்துவிடு ஆண்டவா என்ற வேண்டுதல்,  பயனற்றுப்போய் பலமணிநேரம் ஆகியிருந்தது. யாராலும் ஆறுதல் சொல்ல முடியாத சோகம். ஹாசினி என்ற பெயரைக்கேட்டால் நேற்றுவரை பொம்மரில்லு படத்தில் வந்த ஜெனிலியா ஞாபகம்தான் வந்தது. இனி இந்த குழந்தை ஞாபகம்தான் வரும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனை தயவு தாட்சணியம் பார்க்காமல் கொன்று தீர்க்கவேண்டும்.
Wednesday, January 18, 2017

நம்பிக்கை

அவநம்பிக்கைகளால் ஆனதும் என் உலகம். பெரிதளவில் நட்பையோ உறவுகளையோ நம்புவதில்லை. யார்மீதும் நம்பிக்கையில்லை என்ற பொருளில் சொல்லவில்லை. ஒன்று யாரும் சாஸ்வதம் இல்லை என்ற பொருளில் சொல்வதாக வைத்துக்கொள்ளலாம் அல்லது கண்முன் காணும் உண்மைக்கு பின் இன்னொரு உண்மை உள்ளது என்பதாகவும் வைத்துக்கொள்ளலாம். அது மிக குரூரமானதாக இருக்கும். மிகவும் பிற்போக்கு கொண்டதாகவும் இருக்கும். இந்த இரண்டு குறித்த பயமும் எப்போதும் எனக்கு இருக்கும். முந்தையதற்கு விபத்தில் இறந்த நண்பர்கள் காரணமாக இருக்கலாம். பிந்தையதற்கு காரணம் நான் வலையுலகில் ஆர்க்குட் காலம் முதல் கண்டுவரும் விவாதங்கள் காரணமாக இருக்கலாம்.

முதலாவது காரணம் தனிப்பட்டது. அதை விட்டு விடலாம். ஆனால் இரண்டாவது காரணம் மிகப்பொதுமையானது. 2007 2008 ல் ஈழப்பிரச்சனை உச்சத்தில் இருக்கும் போது அதை தனக்கு சாதகமான அத்தனை சித்தாந்தங்களுக்குள்ளும் அடைக்கப்பார்த்து தனித்தனியாக பிரிந்து போராடிய குழக்கள் பல இருந்தன. அனைவரும் இணைய ஏதோ ஒன்று தடுத்தது. அங்கே பள்ளியில் சாதி கேட்பதே இல்லை என உயர்த்தி அப்போது என் நண்பர் ஒருவர் பேசுவார்.  ஆனால் பிற்பாடு சில புதினங்கள் வாசிக்கையிலேயே அங்கு இருந்த வேற்றுமைகள் புரிந்தன. ஈழத்தில் இன்னும் இட ஒதுக்கீடு கிடையாது என்பது புரிந்த்து.  சாதி அடிமைத்தனம் இன்னும் தமிழர்களுக்குள் பேச்சளவில் கூட நீக்கப்படவில்லை. அந்த இடத்தில் ஒருவன் ஏன் சாதி பற்றி பேசப்போகிறான் இத்தனை அழிவுக்குப்பிறகும்? இதுபோன்று உண்மையான சங்கதிகளுக்குப்பின்னே இருக்கும் இன்னொரு உண்மை.

தமிழ்நாட்டிலுமே இது உண்டு. மிக உச்ச கட்டமாக பொதுவுடைமை பேசும் ஒருவர் தன் உறவுக்காரப்பையனின் காதலி குறித்து பேசியபின் அவருடனான நட்பை விட்டிருக்கிறேன். தனிப்பட்ட அனுபவங்களிலும் வீடு வாங்கியதிலோ சுற்று வட்டாரங்களிலோ ஒருவித அமைதியற்ற தன்மையையே உணர்ந்து வந்திருந்தே்ன்.

முத்துக்குமார் ஈழபிரச்சனைக்காக உயிராயுதம் ஏந்தியபோது இதைவிட அதிக கூட்டம். ஆனால் அவர் உடலை வைத்து போராடக்கூடாது என அதை அவசரமாக அடக்கம் செய்த அவலம். அப்போது பலரின் உண்மைமுகம் தெரியவந்த்து. முள்ளி்வாய்க்காலில் போர் முடிவுக்கு வந்தபோது கொல்லப்பட்ட மக்களுக்கான ஊர்வலத்திலும் அதிக இளைஞர்கள் கலந்துகொண்டனர். சமூக வலைதளங்கள் முழுவதும் இது பற்றிய விவாதங்களும் இருந்தன. ஆனால் பிறகு அவற்றை அந்த அளவு சீந்துவாரில்லை. அதற்குபிறகு நினைவுநாள் வாரநாளில் வந்த்தால் வார இறுதிக்கு மாற்றப்பட்டது. தன்னிச்சையான கூட்டம் வரவில்லை. தன் வேலை என்பது இதைவிட முக்கியம் என்றானது. அப்போது மிகவும் அவநம்பிக்கையே எஞ்சியது.

ஆனால் இப்போது சற்று மாறுதல் இருப்பதாக தோன்றுகிறது. 2015
வெள்ளத்தின் போது தானாக இணைந்த மக்கள் தெருத்தெருவாக பொருட்களை சேகரித்தது அதற்கான துவக்கம். அன்று சென்னையிலிருந்து கடலூர் வரை சென்று வந்தார்கள் நண்பர்கள். பிறகு வர்தாபுயலின் போதும் ஆங்காங்கே இதுபோன்ற குழுக்களாக இணைந்து மரங்களை அகற்றி்னர்.


இன்று, ஜல்லிக்கட்டிற்கு கூடியிருக்கும் மக்களை கண்டபோது இன்னும் மகிழ்ச்சியாகவே இருந்த்து. பலருக்கு மாடு வளர்ப்பு என்பது அவ்வளவு பரிச்சயமில்லை. எருமைமாடுகள் அனைத்துமே பால் கறக்கு்ம் மாடுகள்தான் அதில் கிடாவே கிடையாது என்கிற அளவில் புரிந்து வைத்திருந்தார்கள். அது பிரச்சனையில்லை என்றே தோன்றியது. நமது பாரம்பரியமான விளையாட்டு அழிக்கப்படப்போகிறது அதன்வழியாக காளை இனங்கள் அழிவுக்குள்ளாகப்படப்போகின்றன என்ற செய்தி அனைவருக்கும் எட்டியிருக்கின்றது.

முந்தைய ஈழப்பிரச்சனை போல் இல்லாமல் இது தனக்கான பிரச்சனை என அனைவரும் ஆதரவு அளிக்கிறார்கள். குறிப்பாக குடும்பப் பெண்கள் மற்றும் இளம்பெண்கள் அனைவருமே இதை நிறுத்தவேண்டும் என பேசுவதை கேட்கமுடிகிறது. இந்தளவு சென்று அடைந்திருப்பது மகிழ்ச்சி. ஈழத்தில் ,கூடங்குளத்தில் கோட்டைவிட்டதுபோல் ஜல்லிக்கட்டில் காவிரியில் தாமிரபரணியில் மீத்தேனில் கோட்டைவிடக்கூடாது என ஆசைப்படுகிறேன். போராட்டக்கார்ர்கள் அரசியல்வாதிகளையும் நடிகர்களையும் குறிப்பாக இயக்குநரகளையும் முன்னிறுத்தாது விலக்கி வைப்பது அவர்கள் அனுபவப்பட்டவர்கள் என்பதை உணர்த்துகிறது. வெல்க!!!!

Sunday, January 1, 2017

2016

இரெண்டாயிரத்துப்பதினாறாம் ஆண்டு எனக்கு மிக முக்கியமானது. இதை எப்பவும் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும் என நினைத்தே இந்தப் பதிவு.
அதற்கும் முந்தைய ஆண்டின் இறுதி மாதம், மழை, வெள்ளம்,  மின்சார இணைப்பு துண்டிப்பு என கடந்தது சென்னைக்கு. என் மகன்பிறந்து ஒருவாரம் ஆகியிருந்தது. அம்பத்தூர் எஸ்டேட் துவங்கி பாடி, அண்ணாநகர் என நீண்டு பெருங்களத்தூர் தாண்டி சென்னை மிதக்கிறது. ஆனால், என் வீடு இருக்கும் பகுதி பாதுகாப்பாக இருந்தது. மகனின் பெயர் சூட்டல் விழா சிக்கனமாக முடிந்தது. பன்னிரெண்டு பெயர்கள் வைத்தோம். மொத்தம் ஒன்பது பேர் இருந்தோம். நெல்லில் பேரெழுத தாய்மாமனும், காப்பிட அத்தையும் வர இயலவில்லை. ஒன்று விட்ட மாமா வந்து பெயரெழுதினார்.  மொத்தமாக சேர்த்து அரைமணி நேரம் மின்சாரம் துண்டிப்பு இருந்தது. பால், காய்கறிகள், மெழுகுவர்த்தி, நூடுல்ஸ் எல்லாம் தாராளமாகவே கிடைத்தன. மொபைல் சிக்னல் இருந்தது. இங்கிருந்து பொருட்களை வாங்கிச் சென்று பிறபகுதிகளில் வசிக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் விநியோகித்தோம். இருபது தேதிக்குப் பிறகு சென்னை ஒரளவு இயல்பு நிலைக்கு திரும்பியது. டிசம்பர் 26, 27 தேதிகளில் கவிஞர் தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா. நண்பர்கள் ஒரு van வைத்து சென்றுவந்தோம். வெள்ளக்காட்டைத் தாண்டிய ஒரு ஆறுதல் அது. காலை ஆறு மணிமுதல் இரவு உறங்கும் வரை உரையாடல்கள், வேடிக்கைகள், பாடல்கள் என சென்ற இரு நாட்கள்.  ஜெயமோகனை நான் வாசிக்க ஆரம்பித்த நாள் எதுவென்றால், இந்த வலைப்பூ தேங்கிய அந்தநாள் என சொல்லலாம். எழுத்து என்பது என்ன என உணர்ந்து / உணராமல் நின்ற தருணம் அது. எழுத்து மட்டுமில்லாமல் மேடைப்பேச்சு / நேர்ப்பேச்சு அனைத்தின் மூலமாகவும் அவர் என்னை வழிநடத்திக்கொண்டிருக்கிறார். என் ஆசிரியர் ஜெயமோகன் பற்றி தனியாக ஒரு பதிவு எழுத வேண்டும்.புத்தாண்டின் இரவில் கடற்கரையில் உலாவுவது என்ற வழக்கம் முன்பு இருந்தது. கடந்த ஏழு வருடங்களாக இல்லை. ஆமாம். திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகின்றன. 2016ம் ஆண்டில் புதிய வேலைக்கு மாறினேன். முதல் விமான பயணம் செய்தது இந்த ஆண்டுதான். யோகாசனம் கற்றுக்கொண்டதும் வசனம் உள்ள ஆங்கிலப்படங்கள் அதிகம் பார்த்ததும் இந்த ஆண்டில்தான். இந்த லெளகீக சாதனைகளை ஒருபக்கம் வைத்துவிட்டு மற்றவைகளை சாராம்சமாக தொகுத்து பார்க்கிறேன்.

மயிலாப்பூர் ராமக்ருஷ்ணமடத்தில் புத்தாண்டின் காலை தரிசனம் மற்றும்  மதிய உணவு, மாலையில் ஸோர்பா தெ க்ரீக் நாவல் குறித்து எஸ்.ரா. அவர்களின் உரை என புத்தாண்டு ஆனந்தமாகவே துவங்கியது. அந்த உரையின் போது நண்பர் முரளி க்ருஷ்ணன் அறிமுகமானார்.சென்னை வெண்முரசு கூட்டங்கள் என் வாசிப்பு முறையை மாற்றியமைத்ததில் மிக முக்கியமானவை. வெண்முரசு நாவலின் கதைகளையும் அதன் உதிரி கதாபாத்திரங்களையும் பற்றி பேசிய விவாதங்கள் நாங்களறியாமலேயே மாறி வெண்முரசு சொல்லும் தத்துவங்கள், மனித நாகரீகங்கள் என வெண்முரசை ஒரு கருவியாகக்கொண்டு மற்றவைகளை விவாதித்து அறிவதாக மாறிவிட்டன. 2015 ல் துவங்கி இன்று வரை மிகச்சிறப்பாக சென்றுகொண்டிருக்கின்றன.

நண்பர்களுடனான குழும உரையாடல்கள் நல்ல புரிதலை ஏற்படுத்தின. நடப்பு அரசியல், சினிமா, அறிவியல் என அனைத்தையும் பற்றி விவாதித்தோம். அனைவருமே விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் மூலமாக அறிமுகமானவர்கள். வெவ்வேறு இடங்களில் பணிகளில் இருப்பவர்கள். ஜெயமோகன் என்கிற மந்திரக்கயிறு இணைத்து வைத்திருக்கிறது.கபாலி திரைப்படத்தின் வெற்றி மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. அது  குறித்த நீயா நானா சிறப்பு நிகழ்ச்சியில் ரஜினி ரசிகனாக  கலந்துகொண்டேன். நண்பர் சுனில் கிருஷ்ணன் மூலமாக என்னையும்  சுரேஷ்பாபுவையும் இந்த நிகழ்சிக்கு அழைத்திருந்தார்கள். தூத்துகுடி, திருநெல்வேலி, வேலூர் என பல மாவட்டங்களிலிருந்தும் வந்து கலந்துகொண்ட ரசிகர்களை கண்டு உரையாடியது மகிழ்ச்சியாக இருந்தது.நண்பர் கெ.ஜெ.அசோக் குமார் அவர்களின் சாமத்தில் முனகும் கதவு சிறுகதைத்தொகுதி வெளியானது. அந்த விழாவில் தான், எழுதாளர்கள் கீரனூர் ஜாகீர் ராஜா, ப்ரான்ஸிஸ் கிருபா ஆகியோரை சந்தித்து உரையாடினேன்.

எழுத்தாளர். திரு. யூமா வாசுகி அவர்களை சந்தித்தது என் வாழ்வின் நல்லூழ்களில் ஒன்று. சென்ற தலைமுறையின் தஞ்சை மாவட்ட கதைசொல்லிகளான தி.ஜா,எம்.வி. வெங்கட்ராம் போன்றவர்களை அடுத்து என் தலைமுறைக்கான தஞ்சை மாவட்ட எழுத்தாளர் யுமா வாசுகி அவர்கள்.ரத்த உறவு   என்கிற தமிழின் முக்கியமான க்ளாசிக் நாவலை படித்ததும்  சென்றஆண்டுதான். இந்த நாவல் பற்றிய ஒரு பதிவு இந்த வலைப்பூவில் பாதியில் நிற்கிறது. அதை முடித்து பதிவேற்றவேண்டும்.எங்க சுத்தியும் ரங்கனை சேவி என, இந்த பதிவில் ஜெயமோகனே மீண்டும் வருகிறார். சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் அவருடன் நண்பர்கள் உரையாடியது, பின் மறுநாள் மே-1, குருஜி செளந்தர் அவர்களின் சத்யானந்தா யோகா மையத்தை ( புணரமைப்புக்குப் பின் ) திறந்து வைத்து அன்றைய வெண்முரசு கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரை, பின் அக்டோபர் -2 காந்தி ஜெயந்தி உரை, பின் சமண தலங்கள் உலா மற்றும் நடைபயணங்களில் காரில் செல்கையில் அவர் கூறும் கருத்துக்கள் வேடிக்கை துணுக்குகள் என பல சுவாரசியங்கள்

மகாசிவராத்திரியன்று நண்பர்களுடன் திருவாலங்காடு, திருநின்றவூர், திரிசூலம், திருவாச்சூர் என சிவனருள் விழையும் பயணம், பின் திருவாசாக முற்றோதல், உத்தமர்கோயில் கிராதமூர்த்தி என தொடர்ந்தது, அதேநேரம், வெண்முரசில் கிராதம் வெளிவந்ததும் தற்செயலாக அமைந்ததுசில துக்க நினைவுகள், கவிஞர். குமரகுருபரன், கவிஞர். ஞானக்கூத்தன் , இரு கல்லூரி நண்பர்கள், ஒரு அலுவலக தோழர், மற்றும் இரு நண்பர்களின் தாயார் / தந்தை என கனமான நாட்கள்.

சிறுகதைகள் எழுத முயற்சித்து,அவற்றில் இரண்டு கதைகள் சொல்வனம் இணைய இதழில் வெளிவந்தன. முதல் கதையான விடிவு கதைக்கு எழுத்தாளர் ஜெயமோகன் நீண்ட விமர்சனம் எழுதினார். ஜெ.தளத்திலும் பலர் விமர்சனங்களை கூறினார்கள். இரண்டாம் கதையான பழனிக்கு  சொல்வனத்தில் மைத்ரேயன் ஒரு விமர்சனம் எழுதியுள்ளார். முதல் கதைகளுக்கே இப்படி அமைவதெல்லாம் ஈ உட்கார தேங்காய் விழுவது போலத்தான். ஆனால், எனக்கு அமைந்தன. இதெல்லாம் அந்தரங்கமாக எனக்கு மிகவும் மகிழ்ச்சியையே முதலில் அளித்தன. என் மீதான இந்த அக்கறைக்கு நான் என்றுமே கடமைப்பட்டுள்ளேன். நண்பர்கள் சிவா கிருஷ்ணமூர்த்தி மற்றும் நட்பாஸ் ஆகியோர்கள் என்னை மிகவும் ஊக்குவித்தார்கள். அவர்களுக்கும் நன்றி. வாசிப்பை சற்று மேம்படுத்திக்கொண்டு எழுதுவதைத் தொடர வேண்டும்.வருட இறுதியில் மீண்டும் விஷ்ணுபுரவிழா. அதுகுறித்து எழுதிய கடிதம் ஜெ. தளத்தில் வெளியாகியுள்ளது. இரா.முருகன், பவா. செல்லத்துரை, பாவண்ணன், ஹெச். எஸ்.சிவப்ரகாஷ் ஆகியோரை முதன்முறையாக சந்தித்தேன்

சென்ற ஆண்டு முதல்நாள் வாங்கிய ராமக்ருஷ்ணரின் அமுதமொழிகள் புத்தகங்களை இன்று முதல் படிக்கத் துவங்கியுள்ளேன்.


சென்ற ஆண்டில் படித்த புத்தகங்கள் பட்டியல் அளித்துள்ளேன். அனைத்தும் கதைகள் / நாவல்கள்.என்னுள் இன்னும் கதை கேட்கும் சிறுவன் ம் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான் என புரிந்துகொள்கிறேன்.

நாவல்கள் / தொகுப்புகள்
துறைவன் - கிறிஸ்
மத்தகம் - ஜெயமோகன்
அழகான அம்மா ( ரஷ்ய சிறார் கதைகள்) - யூமா வாசுகி
காடு - ஜெயமோகன்
நிழலின் தனிமை - தேவிபாரதி
ரத்த உறவு - யூமா வாசுகி
கன்னி - ப்ரான்ஸிஸ் கிருபா
அரசூர் வம்சம் - இரா. முருகன்
கசாக்கின் இதிகாசம் - ஓ.வி.விஜயன் ( தமிழில்:-  யூமா வாசுகி )
கன்யாகுமரி - ஜெயமோகன்
கன்னிநிலம் - ஜெயமோகன்
நெடுங்குருதி - எஸ். ராமக்ருஷ்ணன்
துயில்  - எஸ். ராமக்ருஷ்ணன்
சஞ்சாரம்  - எஸ். ராமக்ருஷ்ணன்
சிதம்பரநினைவுகள் - பாலசந்திரன் சுள்ளிக்காடு ( தமிழில்:- ஷைலஜா)
பனிமனிதன் - ஜெயமோகன்
சாமத்தில் முனகும் கதவு - கெ.ஜெ.அசோக் குமார்

வெண்முரசு வரிசையில், வெய்யோன், பன்னிரு படைக்களம், சொல்வளர்காடு மற்றும் கிராதம்

கட்டுரைகள் / சம்பவங்கள்

இவர்கள் இருந்தார்கள் -ஜெயமோகன்
குற்றம் புரிந்தவர் - சுபா

சிறுகதைகள்

அ.மி (20கதைகள்)
திஜா (20 கதைகள்)
இரா.முருகன் ( 18 கதைகள்)
அ.முத்துலிங்கம்( 10 கதைகள்)

பாதியில் நிற்பவை

தாண்டவராயன் கதை - பா.வெங்கடேசன்
ஆதிரை - செயந்தன்
ஆரோக்ய நிகேதனம் - தாராஷங்கர் பந்த்யோபாத்யாய
Everyday Yogi- H.S.Shivaprakash

பாதிக்கு முன் நிற்பவை :-) 

மயக்குறு மகள் - காயத்ரி சித்தார்த்
மோகமுள் - திஜா
Sapiens - Yuval Noah harari


அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!

Friday, August 14, 2015

விக்கிரமாதித்தன்

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனை போல் நானும் இந்த ப்ளாக் ஐ உயிர்ப்பித்து விட்டேன். எப்போதும் போல இது ஒரு டைரிக்குறிப்பாகவே இருக்கும்

இந்த ஆறு வருட இடைவெளியில் இன்னும் தொடரும் ஆர்க்குட் நட்புகள் உண்டு. புதிய நட்புகளும் ஏராளம் உண்டு. தொலைத்துவிட்ட நட்புகளும் உண்டு.

வீடு மனைவி மக்கள் என ஆன கதையும் உண்டு

அனைத்தைப்பற்றியும் கொஞ்சம் கொஞ்சமாக எழுதுவேன்


Saturday, April 25, 2009

ஊர்க்காவலன் முதல்


நாங்கள் எங்கள் ஊரில் பச்சகுதிரை, ஓடிப்பிடிப்பது, அலேஸ்பாய் போன்ற புராதன விளையாட்டுக்களை தொடர்ந்து விளையாடினாலும் காலத்திற்கேற்ப  அதை ரீர்மிக்ஸ் செய்து கொள்வோம்.  அது அப்பொழுது வந்த திரைப்படங்களை சார்ந்திருக்கும். திருடன் போலீஸில் திருடர்கள் கார் ஏறி தப்பிக்கும் போது காரில் ஒரு கயிற்றைகட்டி அதன் மறு முனையை தன் காலில் கட்டிக்கொண்டு காரை நிறுத்துவது ஊர்க்காவலன் ஸ்டைல். இதி கார் கயிறு போன்றவை கற்பனையாக நினைத்துக்கொள்பவை என்பதை அறிக. இது போல  தரையில் கால் படாமல் சுத்தி சுத்தி அடிக்கும் ”மனிதன்” விளையாட்டுக்களும் ஈ அடிக்கும் ”வேலைகாரன்” விளையாட்டுக்களும் உண்டு. இன்னும் பின்னோக்கி யோசித்தால்  எதுவும் நினைவில் இல்லை. நான் நினைவு தெரிந்த காலம் முதல் ரஜினி ரசிகன்.

நான் மட்டும்தான் என்றில்லை. எங்க செட்டில் எல்லோருமே அப்படித்தான். சில சீனியர் நண்பர்கள் ( 10 வயசு வித்தியாசம்) ஓரிருவர்  கமல் ரசிகராக இருந்தாலும் ரஜினி படம் வந்தால் முதல்நாள் முதல் ஷோ தவறாது. ( படங்கள் பெரிய நகரங்களில் ரிலீஸாகி அங்கிருந்து தூக்கப்பட்டபின் தான் மன்னார்குடியில் ரிலீஸ் ஆகும். சுற்றியிருக்கும் திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவாரில் எல்லாம் முதலில் ரிலீசாகி விடும். அதன் பின் மன்னார்குடிக்கு வரும்...நான் சொலவது இந்த இரண்டாம் கட்ட ரிலீஸின் முதல் நாள் முதல் ஷோ என்பது கவனத்திற்கு...) . அந்த விதத்தில் தலைவர் படங்களில் நான் பார்த்த முதல்நாள் முதல் ஷோவில் ( இனி சுருக்கமாக முமு) முதலானது முரளியுடன் முதலில் பார்த்த ( யப்பாடி எத்தனை மு) மாப்பிள்ளை படம்.  முரளி என் அண்ணன் என்பதும் உங்கள் கவனத்திற்கு.

முரளிக்கு ஏற்கனவே சென்னை ஸ்ரீநிவாஸா தியேட்டரில் அடித்து பிடித்து டிக்கெட் வாங்கிய அனுபவம் கைகொடுக்க கவுண்டரில் முட்டி மோதி கடைசியாக இருந்த இரண்டு பால்கனி டிக்கெட்டுக்களை வாங்கி விட்டான். அந்த படத்தில் தலைவர் அறிமுகம் அசத்தாலாகவே இருந்தது.
கல்யாண வீiட்டில் மோட்டர் பைக்கோடு வந்து கல்யாண பெண்ணை கடத்திக்கொண்டு போவார். 
ஒரு சண்டை காட்சியில் சிரஞ்சீவியும் வந்தது எங்களுக்கு திருப்தியாக இருந்தது. அதன் பின் நான் ஆறாவது முழுப்பரிட்சையிலும் அவன் ஏழாவது முழுப்பரிட்சையிலும் பிஸியாகி விட்டோம். பரிட்சை முடிந்த நேரம்  பணக்காரன் ரிலீஸ்.

பணக்காரன் படத்திற்கு டிடியில் விளம்பரமும் வந்தது. காரோடு  ஒரு லாரிக்குள் ஏறிவிடுவார் தலைவர். காரில் வில்லன் பாம் வைத்திருப்பார். காரில்  தலைவரின் அம்மா வேறு இருப்பார். அப்படிப்பட்ட  ஒரு சூழ்நிலையில் காரால் லாரியைஒ உடைத்துக்கொண்டு அவர் வெளியே வந்துவிட பின்னர் பாமும்  வெடிக்க ...விளம்பரம் முடிந்து விடும். எங்களுக்கு விளையாட்டு நேரத்தில் கூட  அந்த படததை பற்றிதான் பேச்சு ஓடியது. நம்ம ஊருக்கு வரும்போது முமு என நானும் முரளியும் பேசி வைத்துக்கோண்டோம். அப்படிபட்ட ஒரு நன்நாளில் நெத்திஅடி படம் பார்க்க லக்‌ஷ்மி  போன என் பிரெண்டு ஒருத்தன் அங்கே இண்டெர்வெல்லில் நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான் பாட்டு போட்டதாக சொன்னான். எங்க ஊர் தியேeட்டரில் அடுத்து போடப்போகும் படத்தின் பாடலை ஸ்பீக்கரில் போடும் பழக்கம் இருந்து வந்தது. மீண்டும் முமு மீண்டும் முரளியும் நானும் சென்று பார்த்து வந்தோம். அதில் ஊட்டி எஸ்டேட்டில்  இருக்கும் வெளிமாநில வில்லன்களை அந்தந்த மாநில பாஷை பேசி தலைவர் பெண்டு எடுக்கும் சீனை நாங்கள் எல்லோரும் பல மாதங்களுக்கு  இமிடேட் செய்து வந்தோம். தலைவருக்காக இளைய்ராஜா குரல் கொடுத்த உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி பாடலினை என் நண்பன் பாட்டுப்போட்டியில் பாடி எங்கள் பலத்த கரகோஷங்களுக்கிடயே ஆறுதல் பரிசை வாங்கிகொண்டான். 

அடுத்து ராஜாதிராஜா படத்தில் கோழையாக் இருந்து வீiரனாக மாறுவார்..மீனம்மா...மீனம்மா பாடலில் கோட் சூட் போoட்டு கையை மடக்கி விட்டுக்கொண்டு வருவார். யே ஜமாலக்கடி கிரி க்ரி என்று ராதாரவி கையில் பாம்பை கொண்டு வருவார்...கத்தியை அந்தரத்தில் சுழல விடுவார்..ஆக அந்த படமும் எங்கள் ஊரில் 50 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது...( எங்கள் ஊரில் முப்பது நாள் ஓடுவதே மிக அதிகம்)

அதற்கிடையே கொடி பறக்குது தர்மதுரை போன்ற நேரடி படங்களும்  நாட்டுக்கொரு நல்லவன் வீiட்டுக்கொரு நல்லவன் என்று இந்தி டப்பிங் படங்கள் வரிசையாக வர அதையும் பார்த்து ரசித்தோம். 

நான் எட்டாவது படித்த காலத்தில் வந்த  தீபாவளியன்று தளபதி ரிலீஸ்.  டிடியில் மங்கள இசை ஜெயேந்திரர் அருளுரை ஆகியவற்றை வெறுமனே பார்த்துக்கொண்டு புதுப்பட பாடலுக்காக வெயிட்டிங்கில் இருந்தோம். கொஞ்சநேரம் காக்க வைத்து பின் ராக்கம்மா கையதட்டு பாடல் ஒளிபரப்பானது. கைதட்டி மிக்ஸரையெல்லாம் தரையில் கொட்டி அதகளமாகி விட்டது. இதில் கவனிக்க வேeண்டிய ஒரு முக்கிய விஷயம் எங்கள் தெருவில் இரண்டு பேர் வீiட்டில்தான் அப்பொழுது டிவி இருந்தது. அவர்களில் ஒருவர்தான் படம்பார்க்க உள்ளே விடுவார். ஒட்டுமொத்த பசங்களும் அன்று அவர் வீiட்டிதான் இருந்தோம். பிறகு வெடி வெடிக்க கிளம்பிவிட்டோம். அந்த தீபாவளி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கூட ரிலீஸான  கமலின் குணா திரைப்படம் அபாரமாக மண்ணைக்கவ்வியது. குஷ்பூ இருந்ததால் பிரம்மா தப்பித்தாலும் தலைவர் முன்னால் நிற்க முடியவில்லை. அப்பொழுது வந்த பொங்கல் வாழ்த்து அட்டைகளிலெல்லாம் தலைவர் குளத்து படிக்கட்டில் உட்கார்ந்து திரும்பிபார்க்கும் ஸ்டில்கள்தான். பொங்கலன்று மன்னன் ரிலீஸ்...
அந்த படததை கும்பகோணத்தில் பார்த்தோம். சின்னக்கவுண்டர் வேறு வெற்றியடைந்ததால் பலமான் போட்டி.

இப்படி சாத்வீமாக போய்க்கொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில் அண்ணாமலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பொழுது நாங்கள் செட் சேர்ந்துவிட்டோம்...கிட்டத்தட்ட 10 பேர் ஒன்றாக சென்று அண்னாமலை படம் பார்த்தோoம்...அதில்தான் முதன் முதலில் ரஜினி பேர் போடுவதற்கு முன் சூப்பர்ஸ்டார் என்று லோகோ வந்தது. எங்களுக்கு ஒரே உற்சாகம். முன் சீiட்டில் இருந்தவர்கள் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார்கள்... வந்தேண்டா பால் காரன் பாடு வந்த்போது  ரஜினி இண்ட்ரோவில் சூடம் காட்டி தேங்காய் உடைத்தார்கள்....இத்தனைக்கும் முக்கிய காரணம் அண்ணாமலை படம் எங்கள் ஊரில் முதல்நாளே  ரிலீஸானதுதான். 

அதன் பின் வந்த பாண்டியன், எஜமான் உழைப்பாளி, வீiரா படங்கள்  வந்த்போது முரளி ஊரில் இல்லாததாலும் 10 வகுப்பு தேeர்விலும் ஹிந்தி ப்ரவீiன் தேர்வுகளில் பிஸியாகி விட்டதாலும்
முமு மிஸ்ஸாகிவிட்டது. 

பிறகு நாகப்பட்டிணத்தில் டிப்ளமோ சேர்ந்த போது பாட்ஷா வெளியானது. அந்த படததை மன்னார்குடியில்தான் பார்த்தோம்...இண்டெர்வெல் வரை சண்டையே வரல.... ஆனால் படத்தில் செம பில்டப்.  இண்டெர்வெல் வருவதற்கு முன்னாடி ஒரு ஃபைட்டும் அதைத்தொடர்ந்து  “நான் ஒருதடவை சொன்னா...” பஞ்ச் டயலாக்கும் தேவாவின் பாட்சா...பாட்சா..ன்னு eகிரவுண்ட் இசையும் பட்டைய கிளப்ப...பல இடங்களில் டயலாக்கே கேட்க முடியல...அந்தளவிற்கு கைத்தட்டல்...விசில்ன்னு அதகளம்தான்...அதுல எங்கிட்டே இருக்கிற கூடாம் நான் சேர்த்த் கூட்டம் இல்லை அன்பால சேர்ந்த்ந் கூட்டம்-னு தலைவர் சொல்லும்போது  எங்க ஊர் மன்ற செயலாளர் சட்டைய கழட்டி ஸ்கிறின் முன்னால நின்னு தலைவான்னு ஒரு ஆட்டம் போட்டாரு.

எங்க பார்த்தாலும் பாட்சா தான் பேச்சே...தலைவர் அரசியலுக்கு வரப்போறாருன்னு வேeற பத்திரிக்கை செய்தி. இந்த மாதிரி இருக்கும்போது முரளியை பார்க்க திருச்சி போனபோது ரம்பா ஊர்வசி தியேட்டரில் முத்து படம் பார்த்தோம்...முதன் முதலில் நாங்கள் சேர் மீது ஏறி நின்று ஆடியது அப்பொழுதுதான்.  எங்கள் முன்சீட்டில் இருப்பவர்களும் நின்று கொண்டிருந்ததும் அதற்கு காரணம்.
அதில் அப்பா ரஜினி சொத்தை விட்டு விட்டு போகும் போது வர்ம் விடுகதையா பாடலில் டபுள் மீநிங் இருந்தது. அவர் அரசியலுக்கு வர்வாருன்னு சொன்னாங்க... அப்படி அவர் அரசியலுக்கு வந்துட்டு சினிமாவில் நடிக்கிறதை நிறுத்திட்டா அப்புறம் யார் படத்தையும் ”முமு” பார்ப்பதில்லை என்று நாங்கள் உறுதி எடுத்துக்கொண்டோம். அப்புறம் தலைவர் அரசியலுக்கு வராப்போறதில்லை.. அடுத்த படம் அருணாச்சலம்-ன்னு அறிவிச்சாரு.

அருணாச்சாலம் ரிலீசப்போ எனக்கு டிப்ல்ளமோ ஃபைனல் இயர் computer application  பிராக்டிகல். எக்ஸ்டெர்னலா வந்தவர் என்னிடம் கேள்வி கேட்டுக்கிட்டிருந்தப்போ பசங்கல்லாம் எனக்காக வராண்டாவில் உட்கார்ந்து என்னையே பார்த்துக்கிட்டிருந்தாங்க...நியும் அவங்களொட அருணாச்சலம் படம் பார்க்க போறியான்னும் கேட்டாரு...எவனோ ஒளறிட்டான்னு  புரிஞ்சது. 
ஹி..ஹி..ன்னு சிரிச்சுட்டு வெளியே வந்து பஸ்ஸை பிடிச்சு தியேeட்டருக்கு போய் படத்தை பார்த்தோம்...படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை...பாட்டும் மொக்கையாக இருந்தது...இன்னும் எக்ஸாம் இருந்ததால எங்களால ரொம்ப ஆட்டமும் போட முடியல...மதத ரசிகர்கள் எல்லோரும் எப்பவும்போல கலக்கிக்கிட்டு இருந்தாங்க. அனாலும் படம் நூறுநாள் ஓடியது. இது தலைவர்க்கு மட்டுe சாத்தியம்-னு தினமனிக்கதிரில் போட்டிருந்தாங்க. 

அதுக்கப்புறம் ஒரு வருஷம் கழிச்சு பெங்களுருக்கு ஒரு இண்டெர்வியூ-க்கு போயிட்டு வந்தேன். இண்டெர்வியூ செம மொக்கை.   அப்போதான் படையப்பா ரிலீஸாச்சு. சரீனு தியேட்டருக்கு போயிட்டேன்...சென்னை உதயம் தியேட்டர்...இது அருணாச்சலம் மாதிரி இல்லை...நல்ல வேகம்...ரம்யா கிருஷனன் தமிழ் ஃபீப்ல்டுக்கு ரீஎண்ட்ரி ஆனாங்க. தலைவர் கூuட நடிச்ச நடிகைங்க எல்லோருமேe நல்லா பிக்கப் ஆவாங்க. அதுதான் தலைவரின் ராசி...(ஆனால் கமலோடு நடிச்சா ஃபீல்ட் அவுட்டுதான்). இந்த படமும் பட்டைய கிளப்பிடுச்சி..க்ளைமாக்ஸும் திருப்தியா இருந்தது. கேe.எஸ். ரவிகுமார் பத்தியும் கமர்ஷியல் படத்துக்கான திரைக்கதைன்னா என்னங்கிறதையும் இந்த படத்த பார்த்து தெரிஞ்சிக்கலாம்.

பாபா............ஆந்திராவில் இருந்து இந்த படம் பார்க்க நான் சென்னைக்கு வந்தேன்...ஒரு நாள் லீவில் வந்து படம் பார்க்க முடியலைன்னா என்ன பன்றதுன்னு ரெண்டு பசங்க கிட்டே சொல்லி படத்துக்கு ரெண்டு தியேட்டரிலே ரிசர்வ் செய்ய சொல்லியிருந்தேன். ரெண்டுமே புக்காயிடுச்சி... முதலில் ரோகினி தியேட்டரில் பார்த்தோம்... படம் இண்ட்ரொடெக்‌ஷன் எல்லாம் நன்றாகவேe இருந்தது...பாபா முத்திரையோட  தலைவர் ஸ்டைலா நிப்பார்...அப்புறம் ஸ்கிரீனை பார்த்து புர்ர்ர்ர்ர்...ன்னாரு ( டிப்பு டிப்பு பாடு ஸ்டார்ட்டிங்). அப்பவே கொஞ்சம் ஷாக்காயிட்டோம்...அதுக்கப்புறம் மந்திரியை பார்க்க பைக்க எடுத்திக்கிட்டு சர்..ன்னு போறதுன்னு ஏகப்பட்ட சொதப்பல்ஸ்...அவர் உடம்புல சக்தி வருவதும்...பட்டத்தை கீழே இறக்குறதும் பார்த்து கொஞ்சம் மெரசலாகி வெளியே வந்தோம்.  இருந்தாலும் ரெண்டாவதா புக்கான டிக்கெட்டையும் வச்சு அன்னைக்கே இன்னொருவாட்டி பார்த்தேeன்...ரசிகருங்க எல்லாம் படம் ஆரம்பிக்குபோது ரொம்ப பரபரப்பா இருந்தாங்க அப்புறம் டல்லாயிட்டங்க இத நேராவே பார்க்க முடிஞ்சது...

அப்புறம் தேர்தலில் பாமகவுக்கு எதிரா பேசினாரு தலைவர்...ஆனால் பாமக ஜெயித்துவிட்டது. ஜக்குபாய் படம் ட்ராப் ஆனது. தமிழ் ஃபீல்டில் விக்ரம்தான் நம்பர் ஒன் -னு குமுதத்திலேe கவர்ஸ்டோரி வேற போட்டாங்க...இந்த நேரத்தில் தான் சந்திரமுகி படம் ரிலீiஸ் பண்ணினாரு..விஜயோட சச்சின் படமும் வந்தது. ” ரஜினிக்கு நான் ( கவனிக்க...ரஜினிக்கு) போட்டி இல்லை...ஒரு திருநாள்ன்னா எல்லார் படமும்தான் வரும் ...எது நல்ல படம் -னு மக்கள் முடிவு பண்ணுவாங்கன்னு விஜய் விகடனில் பேட்டி கொடுத்தார். நான் யானை இல்லை குதிரை; எப்படி இருக்கணுங்கறதைவிட எப்படி இருக்கக்கூuடாதுங்கறது முக்கியமுன்னு ஆடியோ ரிலீஸில் தலைவர் பேசினார்..எனக்கு மிகவும் உறசாகமானது.  அந்த நேரம் பார்த்து முரளியும் மதுரையில் இருந்து ஒரு வேeலை விஷயமாக சென்னை வந்திருந்தான். அருணாச்சலம் பாபா படம் தவிர மத்ததெல்லாம் அவனோட சேர்ந்துதான் பார்த்திருந்தேன்...அந்தவகையில்  எங்கள் வெற்றிக்கூuட்டணி மீiண்டும் இணைவதால் படம் வெற்றி...அதில் கடைசியில்  வேட்டையன்  லகலகலக மிரட்டிடுச்சி.. அதைவிட ஜோதிகா லகலக சொல்லும் சீன் தியேட்டரேe அதிர்ந்தது. எங்கு பார்த்தாலும்  சந்திரமுகிதான். லோக்கல் கேபிளில், பஸ்ஸில் என்று இதுவரை  20தடைவை பார்த்திருப்பேன்...அப்பொழுது ரிலீசான கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் செம ஃப்ளாப்...ஆனா மிகவும் வருத்தமாக இருந்தது. இன்று வரை கமலின் சிறந்த 5 படங்களில் ஒன்றாக நான் அதை நினைக்கிறேன். சச்சினும் ஃப்ளாப்...” நான் அப்பவே சொன்னேன்...சூuப்பர் ஸ்டார் ( கவனிக்க இப்போ..சூப்பர் ஸ்டார் ) கூட என் படத்தை வெளியிடாதீங்கன்னு...புரொடியூசர்தான் கேக்கலை” ந்னு அப்படியே ஒரு பல்டி பேட்டி கொடுத்தார் விஜய்...

ஷங்கர் டைரக்‌ஷனில் சிவாஜி படம் அறிவித்தார் தலைவர். சிவாஜி படம் ரிலீiஸின் போது சத்யம் தியேட்டரில் ஈவ்னிங் ஷோ முன்பதிவு செய்துவிட்டேeன். ஆனால் கலை எட்டு மணிக்கே என் நண்பன் ஒருவன் தொலைபேசியில் அழைத்தான்...” டே தியேட்டரில் இருக்கேண்டா...சுத்தி பத்தாயிரம் பேர் நிக்கிறப்போ போலீஸ் அரெஸ்ட் பண்ணி ஜீiப்பில் வந்து தலைவர் இறங்குறார்டா...” அதுக்கப்புறம் வேலையேe ஓடலை..ஒரு வழியா சாயங்காலம்  தியேட்டரில் உட்கார்ந்தா......கைதட்ட மாட்டாங்களாம்...விசிலடிக்க மாட்டாங்களாம்...கேட்டா தியேட்டர் கட்டுப்பாடாம்...அதையும் மீiறி நாங்க ஒரு நாளு பேர் கைத்தட்டலும் விசிலுமா ரகளை பண்ணிட்டுத்தான் வந்தோம். ஆனால் இனிமே தலைவர் படத்துக்கு சத்யம்ல மட்டும் ”முமு”  போகக்கூடாதுன்னு முடிவெடுத்தேன்.

படத்தில் இவர் கெஸ்ட் ரோல் என்றாலும்...அடுத்து குசேலன்  அந்தளவிர்கு பரபரப்பாகவில்லை என்பதில் எனக்கு வருத்தம்தான். 

இப்பொழுது தமிழ் படங்கள் நான் அவ்வளவாக பார்ப்பதில்லை...சினிமா பற்றிய அறிவு கொஞ்சம் அதிகமாகிவிட்டுக்கிறது.  கமர்ஷியல் படங்கள் மீதான ஈர்ப்பும் குறைந்து விட்டது . தலைவர் படம் மட்டும் இதில் விதிவிலக்கு...

ரோபோ ரிலீஸ் தேதி அறிவித்தவுடம் எனக்கும் முரளிக்கும் ”முமு”  டிக்கெட் ரிசர்வ் செய்ய வேண்டும்...