Thursday, February 9, 2017

மன்னார்குடியும் மாஃபியாவும்

நான் ஜெயலலிதாவை முதலும் கடைசியுமாக நேரடியாக பார்த்தது மன்னார்குடியில்தான். ராஜகோபாலஸ்வாமி கோயில் கும்பாபிஷேகத்திற்கு 1990களில் வந்திருந்தார். தெற்குவீதியில் நின்றிருந்தபோது காரில் வணக்கம் சொல்லியபடி சென்றார். அன்றுதான் என் உறவினர் கண்ணப்பா மாமாவையும் முதன்முதலில் பார்த்தேன். கும்பாபிஷேகம் பற்றி கட்டுரை எழுத வந்திருந்தார். விதுரன் என்கிற பெயரில் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தார்.  அவரும் ஜெயலலிதா போலவே திடீரென மரணம் அடைந்தார். தீபம் இதழின் பொறுப்பாசிரியர் ஸ்ரீநிவாச ராகவன் என்றால் சிலர் அறிந்திருக்கக்கூடும்,

மன்னார்குடி என் ஊர். என் அப்பாவின் ஊர் அதுவல்ல. திருவாரூர் அருகே  வேளுக்குடி என்னும் கிராமம்.  என் குழந்தைகளுக்கும் அது சொந்த ஊர் அல்ல. ஆகவே, எனக்கு மட்டுமான ஊர் என சொல்லலாம். நான் ஆறாவது படிக்கும்போது அங்கு வந்தோம். பதினெட்டு வருடங்கள் வாழ்ந்தோம். மன்னார்குடியை பற்றி சொல்லவேண்டுமெனில் அங்குள்ள குளங்களை பற்றி சொல்லவேண்டும். நாங்கள் ஆரம்பத்தில் இருந்த முதல்தெருவை சுற்றியே மூன்றுகுளங்கள் இருந்தன. ஆனால் குளிக்க போகவேனும் எனில் அரைமைல் நடந்து கோபிநாதன் கோயில் குளத்திற்குத்தான் செல்லவேண்டும். இவைகளைத்தவிர பல குளங்கள் இருந்தன. காவிரியின் கிளைஆறான பாமணியில் வரும் தண்ணீரை சேமிக்க முடிகிற வகையில் அருகருகே குளங்கள் இருக்கும்.   மிக கச்சிதமாக தாயக்கட்டத்தில் கோடு போட்டதைப்போல ஒரே அளவில் பிரிக்கப்பட்டு நன்றாக திட்டமிடப்பட்டு உருவான நகரம் அது.

பெரிய தெப்பகுளம் எனப்படும் ஹரித்ராநதியில் மதகு வழியே காவிரி தண்ணீர் பாய்வதை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன். மன்னார்குடி தெப்பகுளம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய குளங்களில் ஒன்று. அதன் நடுவே ஒரு கிருஷ்ணன் கோவில் உண்டு. இப்போது படகில் போய் வரலாம். நான் நீந்திப்போயிருக்கிறேன்.


ஆனிமாதம் தெப்ப உற்சவம் நடக்கும். அந்நாளில் அந்த குளத்தின் கரைகளில் உள்ள மாடங்களில் அகல் விளக்கு ஏற்றுவோம். இதுதவிர பங்குனி மாதம் பதினெட்டு நாட்கள் ராஜகோபாலனுக்கு உற்சவம் நடக்கும். அப்போது கோபாலன் நகர் உலா. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் என. இது தவிர அமாவசை, ரோஹிணி நட்சத்திரம், ஸ்ரவண நட்சத்திரம் கூடி வரும் நாட்களில் கோயிலுக்குள் கோபாலன் புறப்பாடு நிகழும். வெள்ளிக்கிழமைதோறும் செங்கமலத்தாயார் புறப்பாடு நிகழும். வெள்ளிக்கிழமையும் மேற்படி தினங்களும் கூடி வருகையில் இரட்டைப்புறப்பாடு நிகழும். புறப்பாடுகளில் பிரபந்தம் வாசித்தபடி முன்னால் செல்ல பின்னால் பெருமாள் வர அவருக்குப் பின்னால் வேதம் ஓதியபடி வருவார்கள். தமிழ் முன்னால் செல்ல அவ்வழியே பெருமாள் வர பின்னால் அவரைத்தேடி வேதம் வருகிறது என சொல்வார்கள்.மன்னார்குடி கோயிலின் ராஜகோபுரமானது இந்தியாவின் உயரமான கோபுரங்களில் முதல் பத்துக்குள் வரக்கூடியது. கோவிலைசுற்றி உயரமான மதில்கள் உண்டு. மன்னார்குடி மதிலழகு, திருவாரூர் தேரழகு, வேதாரண்யம் விளக்கழகு என சொல்வடை உண்டு. மன்னார்குடி கோயிலுக்கு மதிலழகைப் பார்க்கப் போனேன் என புஷ்பவனம் குப்புசாமியின் துள்ளலான பாடல் உண்டு. ( தஞ்சாவூரு மண்ணெடுத்து தாலி ஒண்ணு செய்ய போனேன், சீரகம் பாத்திக் கட்டி செடிக்கு செடி குஞ்சம் கட்டி என்று அவர் பாடிய பாடல்கள் அப்போது மிகப்பிரபலம். )

 உள்ளே நூற்றுங்கால் மண்டபம், ரோஹிணி மண்டபம் என கோயில் மிக பிரம்மாண்டமானது.

தாயாருக்குத் தனி கொடிக்கம்பம், கருடி சந்நிதி, தனி பிரகாரம் உண்டு
கோயிலில் ஒரு அழகான யானையும் உண்டு. செங்கமலம் என்று பெயர். செங்கம்மா என்று
அழைப்பார்கள். குழந்தைகளுக்கு தலையில் கைவைத்து குஷியாக்கும்.
மதியம் மூணு மணியளவில் சென்றால் யானை குளிப்பதை பார்க்கலாம்.

ராஜகோபாலன் மிக அழகு. மணிநூப்புரதாரி ராஜகோபாலா என்கிற தெலுங்கு கீர்த்தனையை கேட்டுப்பாருங்கள். மிக அழகான பாடல். அருணா சாய்ராம் குரலில் யூட்யூபில் இருந்தது.  பிறகு தூக்கிவிட்டார்கள். பதினெட்டு நாட்கள் உற்சவத்தின் போது இரவில் கடைத்தெரு வழியாக புறப்பாடு வருவதைப்போல பகலில் கோவிலை சுற்றியும் தெப்பகுளம் சுற்றியும் புறப்பாடு நிகழும். இதுவும் வேறு அலங்காரம். வைரமுடி, காளிங்க நர்த்தன சேவைகள் எல்லாம் அந்நேரங்களில்தான்.

கலை இலக்கிய இரவு எங்கள் ஊரில் மிக பிரசித்தம். பந்தலடி அருகே இரவு முழுவதும் கூட்டம் நடக்கும். அல்லது கோயில் அருகே. காலை பீப் லேந்து மாலை பீப் வரை வேலை பீப் செய்து கூலி பீப் கேட்டவனை பீப் சொல்லி திட்ட்டும் முதலாளி பீப் பற்றிய பாடல் அங்குதான் முதலில் கேட்டேன். படிச்சவன பன்னி மேய்க்க சொன்னான் பன்னிக்கெல்லாம் மினிஸ்டர் போஸ்ட்டு தந்தான் என்ற பாடலை கேட்டு ரசித்து கைதட்டி சிரித்து நின்றிருக்கிறேன். பொன்னீலன் குன்றக்குடி அடிகளார் பற்றி பேசிய உரை இன்னும் ஞாபகம் இருக்கிறது.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம். பொன் விளைகிற பூமி என்று சொல்லப்படும்.  இப்போது நிலக்கரி கிடைக்கிறது. மீத்தேன் கிடைக்கிறது என கிளம்பியிருக்கிறார்கள். பழுப்பு நிலக்கரி இல்லை ராவாகவே கிடைக்கிறது என சிலர் சொல்கிறார்கள். அதற்கேற்றார் போல தண்ணீரும் வருவதில்லை. முன்பு காவிரியில் தண்ணீர் வருகிறது என கீழப்பாலம் அருகே நின்று தண்ணீர் கணுக்காலில் பின் ஆடுசதையில் பின் இடுப்பளவு என குப்பைகளை சேர்த்து வர நடுவே கும்மாளமிடுவோம்.இப்போது தண்ணீர் அவ்வளவாக வருவதில்லை.  வண்டிகளில் மணல் அள்ளுகிறார்கள். மிகச் சமீபத்தில் விக்னேஷ் என்னும் ஒரு இளைஞன் காவிரி தண்ணீர் வரவில்லை என தீக்குளித்தான்.

இதுபோல என்னிடம் மன்னார்குடி பற்றி சொல்ல இன்னும் பல விஷயங்கள் உண்டு. அவற்றையெல்லாம் சொல்லிவிட ஆசைதான். ஆனாலும், சொந்த ஊர் மன்னார்குடி என்று நான் சொன்னதும், ஓஹோ!! மாஃபியா ஊருன்னு சொல்லுங்க.. என சிரிப்பவர்களுக்கு என சொல்ல சில விஷயங்கள் உண்டு. நீங்கள் சொல்லும் மாஃபியா கட்சி மன்னார்குடி எம் எல் ஏ வாக ஆனது என் பதின் பருவத்தில்.  அதன் பின் இன்று வரை இல்லை. இது முழுக்கவும் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் கோட்டை. கூட்டணி யாராக இருந்தாலும் இடது சாரிகள் வெல்வார்கள் .  திமுக மீது மிக அபிமானம் உண்டு. இடதுசாரிகள் ஜெயிக்காத நேரங்களில் திமுக ஜெயித்திருக்கிறது. கலைஞர் திருவாரூர் காரர். இன்னொரு அமைச்சருக்கு வடசேரியில் தொழிற்சாலை உண்டு. மாஃபியாவை  வாழவைக்கும் மற்ற ஊர்க்காரர்களுக்கு மாபியாவை சொந்தமாக்கி மன்னார்குடி  யை விட்டு வைக்குமாறு ஊர்க்காரனாக ஒரு விண்ணப்பத்தை   வைக்கிறேன்.
Wednesday, February 8, 2017

தாண்டவராயன் கதை - வாசிப்பனுபவம்

நான் இப்போது யாருடைய கனவில் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன் அல்லது நீங்கள் யாருடைய கனவில் இதை படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என இன்ஸெப்ஷன் தனமாக யோசித்திருக்கிறீர்களா? அல்லது மோகன்லால், சுரேஷ்கோபி நடித்த குரு த்தனமாக நமதுநோய்க்கு மருந்து நமக்குள்தான் இருக்கிறது என்றாவது? தமிழில் இதுபோன்ற முயற்சிகள் இல்லையென்பதால் நான் தமிழ் படங்களை குறிப்பிடவில்லை. முதல்தேதி என்றொரு திரைப்படம் சிவாஜி நடித்தது.. “ சம்பள தேதி ஒண்ணிலிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்” என்கிற என்.எஸ்.கே பாடல் இடம்பெற்ற படம். இறுதியில் மொத்த கதையும் சிவாஜியின் கனவு என சொல்லி முடித்திருப்பார்கள், இந்த கூற்றை நம்பி தமிழில் அப்பவே இதெல்லாம் என நினைத்து படத்தை பார்த்து பின் என்னை திட்டக்கூடாது. எனக்கு இந்த படம் ஞாபகம் வருகிறது அவ்வளவுதான். பா.வெங்கடேசனின் தாண்டவராயன் கதை நாவலை படிக்கும்போது எனக்கு இயல்பாக மேற்கண்ட ஆங்கில மலையாள படங்கள் நினைவிற்கு வந்தன. நடிகர் திலகம் படம் இதை எழுதும் போது தான் ஞாபகம் வந்தது

சாபக்காட்டில் பார்வை இழந்த தன் மனைவி எலினாரை அவள் தாய்வீட்டில் விட்டுவிட்டு இந்தியா பயணமாகும் டிரஸ்ட்ராம் என்கிற பிரிட்டீஷ் குடிமகன்,  அப்போது காலனியாதிக்கத்தில் இருந்த இந்தியாவில் கதைகளின் வழியே தன் மனைவியின் கண்பார்வைக்கான மருந்தை கண்டுபிடிப்பதுதான் தாண்டவராயன் கதை.  950 பக்கங்கள் கொண்ட இந்த நாவல் எண்ணூறு பக்கங்கள் வரை கதாநாயகனின் பயணங்கள், பிரெஞ்சு புரட்சி, இந்தியாவில் சுல்தானிய ஆட்சி முடிவு என பல வரலாற்று சம்பவங்களீனூடே பயணித்து கடைசி நூற்றியைம்பது பக்கங்களில் மொத்த கதைக்கான முடிச்சை ஒவ்வொன்றாக அவிழ்க்கிறது. கிராபத் என்கிற கதாபாத்திரத்தை நன்கு கவனித்திருந்தால் முன்பே ஊகித்தும்விடலாம். 

நாவலில் முதலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது அதன் மொழிநடையைத்தான். கொழுகொழுகன்றே கன்றிந்தாயே தாய் மேய்க்கும் இடையா என்ற பாடல் பா.வெங்கடேசனுக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இருந்திருக்கும் என அடித்து சொல்ல முடியும். வாக்கியங்கள் நிற்காமல் ஓடுகின்றன. ”950 பக்கங்கள் படிக்கல.. 950 வரிகள் படிக்கிறேன்” என  நண்பர்களிடம் நான் சொல்வதுண்டு. அது மிகைதான். உண்மையில் அதற்கும் குறைவான வாக்கியங்களே இருக்க வாய்ப்பு அதிகம். இவ்விதமான எழுத்து நடை முதலில் ஒரு வாசகனுக்கு ஒரு பந்தயத்தை முன் வைக்கிறது. நான் இதை படித்தேன் என்று சொல்வது என்னால் இப்படி கடினமான நாவலையும் படிக்கமுடியும் என்ற சுயதம்பட்டமாகவும் இருக்கலாம். 

இரண்டாவது ஆசிரியர் கையாண்டிருக்கும் புனைவுலகம். சாபக்காடு, பிரெஞ்சு மக்கள், நாயக்க மன்னர்களிடம் பணியாளாக சேரும் துயிலார்கள், லவணர்கள் என சமூகத்தால் சற்று தள்ளிவைக்கப்பட்டுள்ள மக்களை ஒரு மாலையாக தொகுத்துவிட்டிருக்கிறார். அதில் சரடாக தாண்டவராயன் கதை வருகிறது. தாண்டவராயனும் அவன் மகன் கோணய்யனும் செய்கின்ற சாகசங்கள் மற்றும் காற்றுப்புலி அத்தியாயங்கள் போன்றவை அவரது கற்பனையின் உச்சத்தை காட்டுகின்றன. டிரஸ்ட்ராம் தவிர இந்த கதையில் இன்னொரு நாயகனாக வரும் சொக்ககெளட பிரான்சில் மருத்துவரிடம் கதைகளைக்கொண்டே வியாதிகளை குணமாக்க முடியும் என சிறப்பாக வாதிக்கும் இடம் இந்த நாவல் செல்லும் திசையை அறிவிக்கும் மிகச்சிறந்த துவக்கம். அதற்கு முன் சொல்லியிருக்கும் சம்பவங்களை அதன் பின் சேர்க்கும் லாவகமும் அயற்சியடையாமல் படிக்க உதவுகின்றன. முதல்பாதியில் எலினாரும் இரண்டாம் பாதியில் கெங்கம்மாவும் நாயகிகள். ஓரளவு எழுதப்படித்த கெங்கம்மா மற்றும் தமிழ் படிக்க கற்றுக்கொண்ட டிரஸ்ட்ராம் ஆகியோரும் நீலவேணியின் பாதை என்கிற அந்த காவியத்தின் இடைசெருகலை படித்து புரிந்து கொள்வது போன்றவை ஆசிரியர் நமக்கு அளிக்கும் குறிப்புகள். நீலகண்டருக்கு தாண்டவராயன் கதை எழுத அவர் ராபர்ட் நோபிளி என்கிற பாதிரியாரால் ஈர்க்கப்பட்டார் என்று சொல்வது இன்னும் ஆச்சரியமானது. இத்தாலியிலிருந்து வந்த நோபிளி அவர்கள், இல்லாத ஒன்றை  இருப்பதாக பொய்யுரைகளை எழுதி அதற்கான ஓலைச்சுவடிகளை அவரே உருவாக்கி பின் அது ஒரு மோசடி என நூறு ஆண்டுகள் கழித்து இன்னொருவரால் நிரூபிக்கப்பட்டது. அதற்குள் அது வரலாறாக இங்கு பரப்பப்பட்டு இன்றளவும் சிலரால் நம்பப்படுகிறது. அதை மாதிரியாகக் கொண்டு எழுதப்பட்டது தாண்டவராயன்கதை என்று இந்த நாவலில் வரும் தாண்டவராயன் கதையாசிரியர் சொல்கிறார்.

எழுதுவது அபினி இழுப்பதுபோல. அந்த சுவாரசியத்தாலேயே எழுத்து எழுதிச்சென்றபடியே இருக்கிறது. இந்த நாவல் துப்பறியும் நாவல்களின் வகையைச்  சேர்ந்தது. ஆனால் இதை  பொன்னியின் செல்வன் வரிசையில் வைத்து அதுபோன்ற சுவாரசியமான வணிக எழுத்தாகவும் சொல்ல முடியாது. இது கையாளும் விவாதங்கள் அதன் குழப்பங்கள் மற்றும் மாயஎதார்த்தநடை போன்றவற்றைக்கொண்டு பின் தொடரும் நிழலின் குரல் வரிசையிலும் வைக்க முடியாது. தாண்டவராயன் கதை இரண்டும் கலந்து இவற்றிற்கிடையே ஒரு இடத்தில் இருக்கிறது. ஒரு உதாரணத்திற்கு, இந்த நாவலை கடைசி நூறு பக்கங்களை முதலில் படித்துவிட்டால் பின் முதலிலிருந்து படிக்க சுவாரசியம் போய்விடும். அப்படியிருக்கையில் அந்த பக்கங்கள் பின்னால் அவிழ்பதற்கான முடிச்சுகளை மட்டுமே போட்டுவருகிறதா என்கிற கேள்வி வருகிறது. வந்தியதேவன் என்னை கத்தியால் குத்திவிட்டான் என கந்தமாறன் பொன்னியின் செல்வனில் பல இடங்களில் மொத்தத்தையும்  விவரிப்பது போல இதிலும் இரண்டு பக்கங்கள் நீட்டித்து சம்பவங்களை விவரித்தபின் நாலு வரியில் என்ன நடந்துச்சின்னா என மீண்டும் அது சுருக்கமாக சொல்லப்படுகிறது. சொல்லின் அழகைத்தவிர அங்கே இருப்பது என்ன என்ற குழப்பம் வந்துவிடுகிறது. என் நண்பர் சிவகுமார் இது பற்றி பேசியபோது ஈர்க்கப்பட்டு இதை வாங்க அலைந்தேன். ஆனால் இது அச்சில் இல்லை. மூர்மார்க்கெட்டில் கிடைக்கும் என்றார்கள். மூர்மார்க்கெட்டில் இது இல்லை. காளியப்பா மருத்துவமனை பின்னால் இருகும் பழைய புத்தககடையில் கிடைக்கும் என்றார்கள். அங்கு போவதற்குள் சிவகுமாரே, தன் புத்தகத்தை இரவல் அளித்தார். அப்படித்தான் இதை வாசிக்க நேர்ந்தது. இதை விரைவில் அச்சில் கொண்டுவரவேண்டும் என்பதே பதிப்பாளர்க்ளுக்கு என் வேண்டுகோள். 
கீழுயிர்கள்

இழிமக்கள்… கீழுயிர்கள்… செத்துக்குவியட்டும் இவர்கள். ஆண்குறிகொண்டிருப்பதனாலேயே சாகத்தக்கவர்கள்… மீசைகொண்டிருப்பதனாலேயே கீழுலகில் நெளியவேண்டியவர்கள்

- வெண்முரசிலிருந்து


அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் இருப்பவனே இன்னொரு வீட்டின் ஏழு வயது பெண் குழந்தையை கடத்தி சென்று கொன்று பின் எரித்த செய்தி இன்று காலையில் நண்பர் மூலமாக அறியவந்தது. நண்பரின் பக்கத்து வீட்டு பெண். குழந்தை காணவில்லை என்று அவர் அனுப்பிய செய்தியை வேறொரு குழுமத்திற்கு அனுப்பிய போது அங்கிருந்த நண்பர் இந்த லிங்க்கை அனுப்பி குழந்தை இறந்த செய்தியை குறிப்பிட்டார். அதுவரைக்கும் அந்த குழந்தையை திருப்பி சேர்த்துவிடு ஆண்டவா என்ற வேண்டுதல்,  பயனற்றுப்போய் பலமணிநேரம் ஆகியிருந்தது. யாராலும் ஆறுதல் சொல்ல முடியாத சோகம். ஹாசினி என்ற பெயரைக்கேட்டால் நேற்றுவரை பொம்மரில்லு படத்தில் வந்த ஜெனிலியா ஞாபகம்தான் வந்தது. இனி இந்த குழந்தை ஞாபகம்தான் வரும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனை தயவு தாட்சணியம் பார்க்காமல் கொன்று தீர்க்கவேண்டும்.