Wednesday, August 19, 2020

கடலும் வண்ணத்துப்பூச்சிகளும் - சுரேஷ்குமார இந்திரஜித்

விஷ்ணுபுரம் விருது அதன் துவக்கத்தில் இருந்தே எனக்கு ஒரு ஆச்சரியம் தான். நான் இலக்கியத்தில் வெகுஜன ஊடகம் வாயிலாக அறிந்த சிலரை வாசித்து இலக்கிய உலகில் இருப்பதாக எண்ணியிருப்பேன். முற்றிலும் அறியாத ஒருவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப் படுவார். எழுத்தாளர். தெளிவத்தை ஜோசப் அவர்களின் பெயரே அப்பொழுதுதான் கேள்விப் படுகிறேன். மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்கள் அப்படியான மற்றொருவர். வாசிக்கத் துவங்கும் முன் தெரியாது, ஒரு சுரங்கத்துள் இறங்கப் போகிறேன் என்று. சில நாவல்கள் மூலம் மலேசிய மண்ணின் பிண்ணனியை மக்களை தொகுத்துக் காண்பித்து விட்டார். பேராசிரியர் ராஜ் கெளதமன், கவிஞர் அபி ஆகியோரும் அப்படித்தான். அவ்வாறாக  ஜெ. ஹேட்ரிக் அடித்தது அடித்து விட்டார். இனி நான் எதிர்பாராத ஒருவர் வந்துவிடக்கூடாது என்று ஒரு பட்டியல் வைத்திருந்தேன். இனி அப்படியொருவர் பெயர் உரைக்கப்படுமானால் அது நம் தமிழிலக்கிய வாசிப்புக்கே அவமானம் என்று சூளுரைத்தவனாய் காத்திருந்தது  நல்லவிதத்தில் ஜெயமாக முடிந்தது. நான் யோசித்து வைத்திருந்த மூவரில் ஒருவர்



 
எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் அவர்கள் நாற்பது வருடங்களாக இலக்கிய உலகில் இருப்பவர். ஆனால் 2018ல் பதாகை சிறப்பிதழ் வந்திருக்காவிடில் இவரைப் பற்றியும் எனக்கு முழுதாக தெரிந்திருக்காது என்பதை நான் இங்கு மறைக்கத் தேவையில்லை :-). இன்று இதை எழுதும் வரையில் சுரேஷ்குமார் இந்திரஜித் என்றே எண்ணியிருந்தேன் என்பதையும் மறைத்தும் என்னதான் ஆகிவிடப் போகிறது. அமுத்துலிங்கம் அவர்களுடனான உரையாடலில் கூட அவர் பெயரை அப்படித்தான் உச்சரித்தேன். புத்தகத்தில் ‘ர’ விற்கு மேற்புள்ளியில்லை என்பதை முதலில் அச்சுப்பிழை என்றுதான் எண்ணியிருந்தேன். இப்பொழுது திடீரென  அந்தத் தமிழ்ப் பெயர் சிங்களப் பெயராக ஒலிப்பதைக் காண்கிறேன். அதுவும் நல்லதே! விஷ்ணுபுரம் விருது விழாவில் அவரது அமர்வில் என்னுடைய முதல் கேள்வி இப்பொழுதே தயாராகிவிட்டது.
 
சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களின் கடலும் வண்ணத்துப்பூச்சிகளும் படித்து முடித்தேன். நாற்பது வருடங்களாக சிறுகதைகள் மட்டுமே  எழுதியவரின் முதல் நாவல் இது. சென்ற ஆண்டு வெளியாகியுள்ளது. பக்க அளவை வைத்து  நாவல் என்று முடிவு செய்திருக்க வாய்ப்புண்டு. ஆந்தாலஜி வகை திரைப்படங்கள் இப்பொழுது பிரசித்தமாகியுள்ளன. ஒரு நாவலுக்குள் அவ்வாறு யோசிக்கலாமா என்று இறங்கியிருக்கலாம். அல்லது நீட்டிச் சொல்வதை விட இது சிறப்பானது என்று நினைத்திருக்கலாம். ஆனால் மிக சுவாரசியமான ஒன்று
 
நாமறிந்த நாவல்கள் பெரும்பாலும் வாழ்க்கைப்பாட்டை நூணுக்கமாக விவரித்துச் சொல்பவை. சிறுகதைகள் கோடிட்டுக் காட்டுபவை. உளவியல் சிக்கல்களை என்னவென்று சொல்லிச் செல்பவை. ஒரு நாவலில் வாசகர் தனக்காக கண்டடைதலாக நினைவில் நிற்கும் சில தருணங்கள் இருக்கலாம். அல்லது ஒரு பாத்திரத்தின் மொத்த வாழ்க்கை நினைவுக்கு வரலாம்.  அந்தவகையில் நாவல் வடிவம் என்பதே ஒரு தருணத்தை நீட்டி முழக்கி சொல்பவையாக இருக்கின்றன. அதில் வாசகன் தானாக கண்டடையும் தருணங்கள் சொற்பமாகவும் ஆசிரியர் சொல்வது அதிக அளவிலும் இருக்கும்.  அப்படிப் பார்த்தால் இந்த நாவல் வகை மிகவும் புதுமையான ஒன்று. ஆதித்ய சிதம்பரம்  நோபல் பரிசு பெறும் ஒரு இந்திய நாவலாசிரியர் ( இந்திய ஆங்கில எழுத்தாளர்). அவர் பரிசு பெற்ற கதையை சொல்லும் நாவல். அவர் என்ன எழுதி நோபல் பரிசு வாங்கினார் என்பதும் ஒரு சிறுகதையாக ( குறுங்கதை) அதிலேயே வருகிறது. அதைத் தவிர அவர் எழுதிய ஐந்து குறுநாவல்களும் உள்ளேயே வருகின்றன. அனைத்தும் கலந்த ஒரு நூறுபக்க நாவல் இது.
 
இது எதையுமே ஆசிரியர் என்ன ஏது என்று சொல்லி கோர்க்க வில்லை. ஆகவே இதில்  நம் வசதிக்கேற்ப ஒரு கதையை நாம் எழுதிக் கொள்ளலாம். அது இருவகையாக நிற்கும். மொத்தமே நூறு பக்கங்கள் கொண்ட இந்த நாவலை,  பெண்கள் குறித்த துண்டுப் பிரதிகளாக வாசிக்கலாம் அல்லது  ஆதித்ய சிதம்பரத்தின் வாழ்க்கையில் அவரை பாதித்த தருணங்களின்  தொகுப்பாக வாசிக்கலாம். ஆகவே இங்கு நாவலை நாவலாக்குவதில் வாசிப்பரின் பங்கும் இருக்கிறது.


 
சாஸ்திரத்தால்  கட்டுண்ட கைம்பெண், காதலை மறந்து வேறொருவனை கைபிடித்த பெண், வாழ்க்கையைத் தொலைத்த நடிகை - அவளைப் பார்த்துக் கொள்ளும் பணிப்பெண்,  தன் கணவனுக்கு மதுரையில்  குடும்பம் இருப்பது  தெரியாமல் அவனை மலேசியாவில் திருமணம் முடிக்கும் பெண். இவர்கள் தவிர  பறவைகளை  நேசிக்கும் ஒருவள் ஆகிய ஐந்து குறுங்கதைகள். இந்த குறுங்கதைகள் குறித்த விமர்ச கூட்டமும் நாவலிலேயே வருகிறது. கூடவே இந்த குறுநாவல்களை எழுதிய  நாவலாசிரியரான ஆதித்த சிதம்பரத்தை  வடிவமைத்த அவரது காப்பாளர் ( ரெஜினா ) , முன்னாள் மனைவி ( சாரதா ), தோழி ( ரஞ்சனா)  என மூன்று பெண்கள். இதில் நாவலின் இறுதியில் கடலலைகளால் அடிக்கப்படாத மூன்று பட்டாம்பூச்சிகளாக வருவது இவர்கள்தானா அல்லது ஐந்து குறுநாவல்களில் இவர் குறிப்பிடவிரும்பும் சிலரா என்பதை முடிவு செய்வதும் எனக்கானதே என்றாகி விடுகிறது.
 
கடலும் வண்ணத்துப் பூச்சியும் என்பதில் கடல் ஆசிரியரின் வாழ்க்கைப்பாடு என்றால்  பட்டாம்பூச்சியை அவர் கடந்து வந்த மனிதர்கள் குறிப்பாக  பெண்கள் என்று சொல்லலாம். அவர்கள் உலகம் எப்படியானது அதில் அவர்கள் மற்றவருக்கு பொருள்படும் விதம் என்பது ஒரு மின்னல் வெட்டாக வந்தாலும் நினைவில் நிற்கிறது. . ஒருவனுக்கு  அவள் அம்பாள். மற்றொரு ஒருவனுக்கு சாதாரண மனைவி. ஆனால் அவள் மிடுக்கான தலைமை ஆசிரியை  ( சாரதா ) இதில் ஆணும் பெண்ணும் கதையில் வரும் சிவப்பு உடையணிந்த பெண் வரும் தருணம் சுவாரசியமான உளவியல் இடம். நடிகையின் கணவனை  வேலைக்காரி காணும் இடமும் அப்படித்தான் தோன்றுகிறது.  இஸபெல்லா நல்ல பாத்திரம்தான், ஆனால் சமயங்களில் அவளே அந்தத் தனிமையின் அபத்தக் கற்பனையா என்றும் தோன்றுகிறது. இது என் வாசிப்பு
 
இதை வாசிக்கையில் எழுத்தாளர் எம். கோபால கிருஷ்ணனின் மனைமாட்சி நாவல்நினைவுக்கு வருகிறது. நான்கு வெவ்வேறு கதைகளாக பெண்களை / உறவுச் சிக்கலை இன்னும் அருகே சென்று நுணுக்கமாக ஆராய்ந்து உரைத்த ஒரு நாவல் அது. இந்த நாவல் அதற்கு நேரெதிரானது. புள்ளிகளாகச் சொல்லிவிடுகிறது. அதைப் புள்ளிகளாகவே வைக்கலாம் அல்லது இணைத்து சித்திரமாகவும் ஆக்கலாம்.

ஒரு புதிர் போல யோசிக்க வைக்கும் இந்த அனுபவத்திற்காகவே இதை வாசிக்கலாம்.

No comments: