Friday, July 24, 2020

முரசும் சொல்லும் - ஏ) கதிரெழுகை

முந்தையது:- முரசும் சொல்லும் - எ) தன்னறத்தின் தடத்தில்

ஜெ. தளம் இயங்கத் துவங்கிய சில நாள் முதலே கீதை விளக்க கட்டுரைகள் வரத்துவங்கின. ஒவ்வொரு கட்டுரையின் கீழும் பின்னூட்டத்தில்  அது சார்ந்த மேலதிக கேள்விகள் எழும். அனைத்திற்கும் பதில் சொல்லி அடுத்த கட்டுரை துவங்கும். அதில் ஒரு கடிதத்தில், இதைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் ஒட்டு மொத்த பாரதத்தையும் பக்க சார்பின்றி அணுக வேண்டும் அத்ற்கு நான் பாரத்ததையே மீண்டும் எழுதவேண்டும் என்று கூட ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். ஜெ.வின் அறையை தன் செங்கோலின் கீழ் அரசபரிபாலனம் செய்பவர் அந்த நேரத்தில் ஆமோதித்திருக்கக் கூடும். அந்த வகையில் வெண்முரசு எழுத அதுவுமே ஒரு காரணம் என்று சொல்லலாம்.


நான் கீதை ஆழ்ந்து வாசித்தவன் இல்லை. என் முதற்கட்ட அணுகுதலை வைத்து,  இமைக்கணத்தை கீதையுடன் இணைத்து கீழ்கண்டவாறு புரிந்து கொண்டேன்.

ஒன்று : காலம்
இரண்டு : இயல் --  கர்ணன் ( சாங்கிய யோகம் )
மூன்று : ஒருமை -- பீஷ்மர் ( கர்ம யோகம் )
நான்கு : அறிவு -- சிகண்டி ( ஞானகர்ம சந்நியாச யோகம் )
ஐந்து : விடுதல் -- விதுரர் ( கர்ம சந்நியாச யோகம்)
ஆறு : ஊழ்கம் -- வியாசர் ( தியான யோகம் )
ஏழு : மறைமெய் -- யுதிஷ்டிரன் ( ஞான விஞ்ஞான யோகம் அட்சர பிரம்ம யோகம், ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்)
எட்டு : சுடர்வு -- திரெளபதி (  விபூதி யோகம் )
ஒன்பது: சொல் -- தெளம்யர், கர்க்கர் குசேலர் ( விஸ்வரூப தரிசன யோகம் பக்தி யோகம் )
பத்து : பொருள்  -- உதங்கர் ( சேத்ரம் சேத்ரக்ஞன் விபாக யோகம், குணத்திரய விபாக யோகம், புருசோத்தம யோகம் )
பதினொன்று : முழுமை -- சுகர் (தெய்வ அசுர சம்பத் விபாக யோகம் சிரத்தாத்திரய விபாக யோகம் மோட்ச சந்நியாச யோகம்)
பன்னிரண்டு : இறைப்பாடல் -- அர்ஜுனனுக்கு உரைக்கும் கீதை ( தொகுப்பு )

அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் போர்க்களத்தில் உரைத்ததுதான் கீதை என்னும் ஒரு நாடகீய தருணம் சொல்லப்படுகிறது. இதில் உள்ள ஒவ்வொரு அத்தியாயமும் அறிதலின் ஒவ்வொரு படிகள் என்றூ பொதுவான கருத்தும் நிலவுகிறது. கீதையில் இந்த அனைத்து படிகளிலும் நின்று அர்ஜுனன் இந்தக் கேள்விகளைக் கேட்கிறான். அவனுக்கு போரிட எழும் தயக்கத்திலிருந்து சரணாகதி தத்துவம் வரை கேட்கிறான். ஆனால், வெண்முரசில் அந்த அத்தனையையும் அர்ஜுனனே கேட்கவில்லை. அவர்கள் மாறுபடுகிறார்கள். இமைக்கணத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் அதை அந்த ஐயம் சரியாக பொருந்தக் கூடிய நபர் வந்து கேட்கிறார். இமைக்கனத்தின் ஒவ்வொரு பாத்திரத்தையும் அணுகி அறிவது இந்தப் பதிவின் நோக்கமல்ல. ஆனால் கர்ணனை அணுக இது மிகவும் உதவியாக இருந்தது என்பதால் அதை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

ஜெயமோகன் இங்கும் ஒரு புனைவின் உச்சத்தைத் தொட்டுப் பார்க்கிறார். இந்தக் கேள்வியை அந்த நபர்கள் கேட்கவில்லை. அவர்களுக்குள் புகுந்து கொண்ட தர்மராஜன் யமன் இதைக் கேட்கிறான் என்பது அது. அதற்கான ஒரு கதை சொல்லப் படுகிறது, அந்தக் கதை ரகுகுல ராமன் உலகியல் இன்ப துன்பங்களில் ஆழ்ந்து பீடிக்கப்பட்டு இருக்கீறான். அவன் காலம் முடிந்ததை அறிவிக்க வரும் யமனுக்கு, மும்மூர்த்திகளின் ஒருவனான ராமன் பூவுலக வாழ்வில் பீடிக்கப் பட்டதைக் கண்டு மெல்லிய ஆற்றமை எழுகிறது. அது நகைப்பாக மாறுகிறது. ஆணவமாக எழுகிறது. அதனால், அவனை யமலோகத்தில் மானுடர் உள்நுழையும் வழியிலேயே அவரை அழைத்து வருகிறான்.  அது அவனது ஆணவமாக பதியப்பட்டு விடுகிறது. அதனால் தவம் மேற்கோள்கிறான் யமன். அவந்து பணி நிகழாததால் உயிர்களின் மரணம் ஜனனம் என்கிற சுழற்சி நிகழாமல் போகிறது. ஆகவே நாரதர் அவனைக் காண வருகிறார். இது நான் சுருக்கமாக, மேலோட்டமாக  தொகுத்து எழுதினாலும் அந்த முதல் அத்தியாயம் தியானிகன்,  பிரபாவன், நாரதர் ஆகியோருக்கான பல அற்புத உரையாடல்கள் கொண்டது. உயிர் என்பது என்ன என்பது போன்ற அடிப்படைக் கேள்விகள் அங்கேயே எழுப்பப்பட்டு உரையாட படுகின்றன. ஆகவே இதை ஒரு பிண்ணனிப் புரிதலை வைத்துக் கொண்டு அந்த அத்தியாயத்தைப் படிப்பதே சிறந்த வாசிப்பு அனுபவமாக இருக்கும்.

(மறுபடியும் இதை இங்கு குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், இமைக்கணம் முழுக்கவே பலதரப்பட்ட உரையாடல்கள் வருகின்றன. அவற்றை வாசிக்கும் எனக்கான புரிதல் என்பது என் அளவில் மட்டுமே இருக்கும். நான் அதை எழுதும் போதே எழுத்தில் வேறொரு புரிதல் வருவது போல எழுதிவிடலாகும் என்கிற எச்சரிக்கையே இங்கு குறிப்பிடுகிறேன். இமைக்கணத்தின் சில வரிகள் வாசிக்கையில் பிறருக்கு வேறோன்றாக தோன்றலாம். அல்லது வேறொரு வாக்கியம் முக்கியமானதாக தோன்றலாம்.

உதாரணமாக நாரதர் யமனிடம் சொல்லும், ’கடமைகளை கைவிட்டுவிட்டு எவரும் தவத்தை முழுமைசெய்ய இயலாது, காலத்துக்கரசே!’  என்கிற ஒரு வரி.  ஒரு சிறிய உரையாடலின் இந்த வாக்கியமே சிலருக்குத் தன் வாழ்வின் ஒரு கேள்விக்கு திறப்பாக அமையக் கூடும். )



மீண்டும் பதிவிற்கு வருவோம்,

தன் குழப்பத்தாலேயே, தன் கடமையை செய்யமுடியவில்லை என்பதனால்தான் யமன் தவம் மேற்கொள்ள, அவருக்கு நாரதர் அளிக்கும் ஆலோசனைப் படி இளைய யாதவரிடம் விளக்கம் கேட்டு வருகிறான் யமன். இதுவே வெண்முரசில் இமைக்கணம் துவங்கும் முன் நிகழும் முன்னோட்டம்


வெண்முரசில் அதற்கான நபர்கள் இளையயாதவனிடம் வருகையில் வாசகனாக எனக்கு எழுந்த வியப்பு முக்கியமானது.  சாங்கிய யோகம் என்பது உலகியல் ஆசை கொண்டவருக்கானது.  அந்த இடத்தில் வருபவன் கர்ணன். கர்ணன் உலகியல் வெற்றி விழைவு கொண்டவனாக வருகிறான் என்பதே அந்த வியப்பின் காரணம்.

அவனது கொடை வீரம் சாபம் மரணம் அனைத்துமே பாவலரால் பாடப்பெற்றவை. வேறு எவருக்கும் இது நிகழவில்லை. இவற்றையெல்லாம் காண்கையில் வாசிக்கையில் கர்ணன் குறித்த ஒரு சிறந்த பிம்பமே உருவாகிறது. ஆனால் இத்தகைய மேன்மை குணங்கள் கொண்டவன் ஏன் உலகியல் ஆசை கொண்டவனாக வருகிறான் என்பது இமைக்கணம் எனக்கு ஏற்படுத்திய குழப்பம். காரணம் அவர்களை மானுட எல்லைக்கு அப்பாற்பட்டு வைத்தே ஆராதிக்க என் மனம் விரும்புகிறது போலும்.

சில ஒப்பீடுகள் மூலமாகவே அதை நான் விளங்கிக் கொண்டேன். அவற்றை இங்கு காணலாம். ராமயணத்தில் சூரிய வம்சத்தினனாக வருபவன் ராமன். வீரம் காவிய சோகம் இரண்டும் அவனுக்கே உரைக்கப் படுகிறது. அந்த வகையில் அதன் காவிய நாயகன் அவன் தான். அப்படியாக வெண்முரசை எடுத்துக் கொண்டால் இங்கு சூரிய மைந்தன் கர்ணன். அவந்து காவிய சோகம் என்பதும் நாம் அறிந்த ஒன்றுதான். தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை என்று அனைத்து நாடகங்கள், திரைப்படங்கள்,பாடல்களில் கர்ணனை நாம் பாடிய அளவு வெறு எந்த பாத்திரத்தையும் பாடவில்லை. இன்று வரை அவர்களின் அறக்குழப்பங்களும் தவிப்புகளும் பட்டிமன்ற பேச்சு பொருளாகவே இருக்கின்றன. நவீன இலக்கிய வாசகனுக்குமே கர்ணன் பாத்திரம் மிக அணுக்கமானது. வெண்முரசுக்கு முன்னால் சிறுகதையாக ஜெ. வும் களம் கதையை எழுதியுள்ளார்.

இந்த ஒப்புமையை மேலும் உறுதி செய்யுமாறே வெண்முரசும் இருக்கிறது. கர்ணனுக்காக வெண்முரசில் இரு நாவலகள் எழுதப் பட்டுள்ளன. வெய்யோன் மற்றூம் இருட்கனி. இந்தப் பெயர்கள் இரண்டுமே, கம்ப ராமயணத்தில் ராமனை சுட்டப் பயன் படுத்தியவை.


1) ராமனின் ஒளியாய் வர்ணிக்கும் வரிகள்

//
வெய்யோன் ஒளி, தன் மேனியின்
விரி சோதியின், மறைய
பொய்யோ எனும் இடையாளோடும்
இளையானோடும் போனான்
மையோ மரகதமோ மறி கடலோ மழை முகிலோ
ஐயோ இவன் வடிவு என்பது ஓரு அழியா அழகுடையான்
//


2) ராமனை இருளின் திரட்சியாய் வர்ணிக்கும் வரிகள்

//முனியும் தம்பியும் போய்முறையால் தமக்கு
இனிய பள்ளிகள் எய்தினர் போய்
இருட்கனியும் போல்பவன் கங்குலும் திங்களும்
//

வெண்முரசும் கூட இவ்வாறே வெய்யோனில் கர்ணனின் எழும் பகுதிகளையும் இருட்கனியில் அவன் மறையும் இருள்மிக்க பகுதிகளையும் சொல்கிறது.



பொதுவாக நிலவும் கருத்து போலவே, கர்ணன் ஏதோ ஒரு இடத்தில், குந்திதான் தன்னுடைய தாய் என்று தருமனிடம் சொல்லியிருந்தால் போர் முடிந்திருக்கும் என்பதும் வாசகர்கள் எளிதில் உணரக்கூடிய ஒன்றுதான். ஆனால் அவன் கட்டுண்டு இருக்கிறான். அது தன் தாயால், தன் நண்பனால், ஏன் தன் குருவால் கூட. அனைவருக்கும் தன்னால் இயன்ற கொடையை அவன் அளிக்கிறான். தாய்க்கு அர்ஜுனனின் உயிரை, நன்பனுக்குத் தன் உயிரை என. குருவுக்கு அவன் ஆற்றும் நன்றி மிகவும் நுட்பமாக உணரத் தக்கது. முதன்முதலில் வெண்முரசு மூலமாகவே இந்தக் கோணம் வெளிப்படுகிறது என நான் எண்ணுகிறேன். ஒரு சூதனாக வளர்ந்து அதன் அத்தனை சமூக இழிவையும் நன்குணர்ந்தவன் எவ்வாறு சத்ரியர்களுக்காக போரிடுகிறான் என்கிற கேள்விக்கான விடையாகவே இதை நான் எடுத்துக்கொண்டேன். அவன் தாய்க்கு அளித்த கொடை என்பது மறைமுகமாக் தன் குருவுக்கும் அளித்த நன்றியாகிறது. சத்ரிய குலத்தை அழிக்க வந்த பரசுராமனின் சீடனான கர்ணன்  ஒருவகையில் தன் வில்லை எடுக்காமல் இருப்பதாலேயே அவர் குறிக்கோளை ஆற்றுகிறான் என்பதாகவே அந்த நாவல் முடிகிறது. இருட்கனியின் இறுதியில் பரசுராமர் அவனுக்கு நீர்க்கடன் செலுத்துகிறார் என்பது இதற்கு தொடர்புடையது


இத்தனைக்குப் பிறகும் அந்த கேள்வி எனக்குள் எஞ்சியே இருந்தது. ஏன் கர்ணன் தன் உலகியல் வெற்றி விழைவு கொண்டவனாக வருகிறான் என்பது அது

வெண்முகில் நகரம் நாவலில் காம்பில்ய போருக்கு செல்லும் தருணத்தில், பூரிசிரவஸீடம் கர்ணன் சொல்லும் வார்த்தைகள் கவனிக்கத் தக்கவை. தருமன் போன்ற அறமும், அர்ஜுனன் போல பற்றற்ற தன்மையும் தன்னிடம் இல்லை என்று கூறுகிறான். அந்தப் போரில் அவன் தோற்கும் தருவாயில் திரெளபதியின் உடையைக் கண்டு திகைக்கவும் செய்கிறான்.  இயல்பாகவே கர்ணனுக்கு மணிமுடியின் மீதும் திரெளபதியின் மீதும் உட்கரந்த விழைவு உண்டு. ஆகையாலேயே கார்க்கோடகன் அவனிடம் அதை முன்வைத்தே உரையாடலைத் துவங்குகிறான். அவன் ஒப்புக் கொண்டால் தருமனுன் துரியனும் துணைநிற்க திரெளபதியுடன் அரியாசனத்தில் நீ அமர்ந்திருப்பாய் என்றே கர்ணனிடம் சொல்கிறான். ஆனால் பெருங் கொடையாளனாகிய கர்ணன், அதை மறுத்து நாகக் குழவியையே ஏற்கிறான். அரியாசனத்தையும் மறுக்கிறான். கொடைக்குணமும் தன்விழைவும் ஒருங்கே கொண்டவன் அவன். அதன் பொருட்டான தன் கேள்விகளையே அவன் முன்வைக்கிறான். ஜெயத்ரதன் பூரிசிரவஸ் போன்ற ஏனைய பாத்திரங்களை விட அதற்கு மிகப் பொருத்தமானவன் கர்ணன்தான். ஏனென்றால் அவர்களுக்கு விழைவு உண்டு. அது சார்ந்த அறச்சிக்கல் ஏதும் இல்லை.  துரியோதணன் பீமன் போன்றவர்களுக்கு குழப்பங்கள் இல்லை என்பதும் அவர்கள் இளையயாதவனிடன் அணுகிப் பெற ஏதுமில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. சஞ்சலம் கொண்டவர்கள் மட்டுமே அவனை அணுகுகிறார்கள்.



இமைக்கணம் நாவலில் கர்ணனுக்கு இளையயாதவர் காட்டும் இமைக்கண பொழுதுகள் சுவாரசியமானவை. ஒன்று அவன் அரசனாகிப் பின் பலதலைமுறைகள் கழித்து அவன் மறக்கப் படுவதைச் சுட்டுகிறது. மற்றொன்று அவன் பாண்டவர்களைக் கொன்று முற்றழிவதைச் சொல்கிறது. இரண்டையும் கடந்து அவன் எடுக்க வேண்டிய முடிவை அவனுக்கு குறிப்பால் உணர்த்துகிறார் இளையயாதவர். அதனூடாக கர்ணனால் அந்தப் போர் எவ்வண்ணமேனும் தடுக்கப் பட்டிருந்தால் அது என்னவாகியிருக்கும் என்பதையும் உணரச் செய்கிறார். அனைத்துப் பாத்திரங்கள் வழியாக இதைக் கேட்பவர் தர்மராஜன் என்பது போல அனைத்து சாத்தியங்கள் வழியாக இதை உரைப்பவர் ஜெயமோகன் தான்.  குறிப்பாக ஜைன பாரதம் ஜனமேஜயனுக்குப் பிறகான பாண்டவ வம்சம் மொத்தமும் எவ்வாறு வளர்ந்து அழிந்தது தொகுத்துள்ளது. அதை உதாரணமாகக் கொண்டே கர்ணனுக்கான முதல் இமைக்கணம் தொகுக்கப்பட்டிருக்கிறது.  


இங்கு குறிப்பிட விரும்பும் மற்றொன்று, இருபதாம் நூற்றாண்டில் நமக்குப் பல பேரரசர்கள், தன் வீரத்தால் எழுந்து வந்த மன்னர்கள் அனைவரும் நினைவில் இல்லை. பாரதக் கதையிலுமே, ஜனமேஜெயனுக்குப் பின் வந்த அரசர்களுமே நினைவில் இல்லை. இப்பொழுது இந்த  மூவாயிரம் ஆண்டுகள் முன்பு இருந்த கர்ணன் என்பவன் தன் வீரத்தாலும், கொடையாலும் தியாக்த்தாலும் நம் நினைவில் நிற்கிறான். அவன் மீது எழும் பக்தி கரிசனம் இரண்டுமே உலகியலோடு நமக்கு உள்ள அறம் பொருள் இன்பம் சார்ந்த விழைவுகளின் உச்சம்தான். ஒரு உலகியல் விழைவு கொண்டவனின் உட்ச பட்ச சாத்தியம் என்பது அவன் அது சார்ந்த அத்தனை குழப்பங்களிலும் அதிமானுடனாக நினைவுகூறப்படுதலே.  அவன் அரசாகியிருந்தால் ஏழு தலைமுறைகளுக்குப் பின் மறக்கப் பட்டிருப்பான் என்பதே நிதர்சனம். இன்று நம் எல்லா உலகியல் சிக்கல்களிலும் அவன்  தன் அறத்தாலும் வீரத்தாலும் ஏன் தான் எதிர்கொண்ட இழிவாலுமே நினைவுகூறப்படுகிறான். அவனுக்கான அந்தக் கண்ணீர் இன்றும் சிந்தப் பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அந்த மேன்மையை அவன் தன் கொடையாலேயே அடைந்தும் விட்டான். கொடையால் இறவாமை பெற்று நிற்கும் மகாபலிகூட பெறாத ஒன்று அது


3 comments:

சாந்தமூர்த்தி said...

தொடர் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.எல்லா கட்டுரைகளும் வெண்முரசு காவியத்தை புதிய கோணங்களில் அணுகி வாசிப்புக்கு உதவுகின்றன.
வாழ்த்துக்கள் மற்றும் நன்றி,காளிப்ரஸாத்!
சாந்தமூர்த்தி

காளி said...

மிக்க நன்றி சாந்தமூர்த்தி சார்

Unknown said...

அரிய ஆய்வு சொற்ப அளவிலேயே வெண்முரசு முழவதையும்எமக்குநினைவுபடுத்துகிறது மிக்க நன்றி