Sunday, September 5, 2021

ஆன்டன் செகாவ் கதைகள்

facebook ல் வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழுவில் எழுதியது 

புத்தகம்:- ஆன்டன் செகாவ் கதைகள்

(தமிழில்அதுவரை வெளிவராத கதைகள்)

தமிழில்:- எம்.கோபால கிருஷ்ணன்

பதிப்பகம்:- நூல்வனம்

 ஆன்டன் செக்காவ் -ன் பன்னிரெண்டு கதைகள் கொண்ட தொகுப்பு இது.  அவர் ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார் என்கிறார்கள். அதில் இதுவரை தமிழில்  சொற்ப கதைகளே மொழிபெயர்க்கப்பட்டு  வெளியாகியுள்ளன.  இந்த தொகுப்பில் இதுவரை தமிழில் மொழிபெயர்க்கப் பட்டிராத பன்னிரெண்டு சிறுகதைகள் உள்ளன.  



 முதல் கதையான 'ரோத்சீல்டின் பிடில்' ஒரு சவப்பெட்டி தொழிலாளியின் இறுதிநாட்களில் அவன் கொள்ளும் கனிவின் சித்தரிப்பு. அனைவர் மனதையும் இளகவைக்கும் அந்த பிடில் இசை யாது என்பதை வாசகர் அறிவார். அந்த  இசையை  கேட்காவிடினும் அதை நாமும் உணரமுடியும். 'கழுத்தில் தொங்கும் அன்னா' கதையில் வரும் அன்யா பயந்த பெண். ஒருமுறை சீமாட்டி உடை அணிந்த பின் சீமாட்டியாக மாறுவாள். அது மாத்திரமே கதையல்ல. ஆனால் அந்த இடத்தில் அவள் மாற்றத்தை எழுத்தாளர் கொண்டு வந்திருக்கும் விதமும்  கதையின் முடிவும் அவர் ஏன் ஒரு மாபெரும் சிறுகதை  மேதை என்பதற்கு சான்று ஆகும். உணர்ச்சிகரமானதாவும் மத அமைப்பை சீண்டுவதாகவும் சற்றே கேள்வி எழுப்புவதாகவும் 'நீத்தார் பிரார்த்தனை', 'ஆயர்', 'ஈஸ்டர் இரவு' ஆகியவற்றைச் சொல்லலாம். மூன்றும் வெவ்வேறு தளங்களில் நிகழும்  கதைகள். ஒரு பொதுமைப்படுத்தலுக்காக இப்படிச் சொன்னாலும் அவை ஒரே அடிப்படையைக் கொண்ட கதைகள் அல்ல. 'குடியானவபெண்கள்' எனும் கதை ஒரு பெண்ணின் விருப்பமும் அதனிடமிருந்து தன்னைக் கற்காத்துக்கொள்ளும் சமூக ஒழுக்கவியலும் கொண்ட ஒரு  கதை.  செக்காவ் எழுத்தில் நமக்கு ஏற்கனவே அறிமுகமான வெவ்வேறு விதமான ஒருவித தனித்த கைவிடப்பட்ட மாந்தர்களின்  கதைகள்  உண்டு. 'அன்யுதா', 'கடற்சிப்பி' 'தூங்குமூஞ்சி' ஆகிய கதைகள் அத்தகையவை.


செக்காவ் பற்றியோ, இவை  நூற்றி ஐம்பது வருடங்கள் முன்பு எழுதப்பட்ட கதைகள் என்பதையோ அறியாத வாசகர் இதை சமகாலத்தோடும் பொருத்திக் கொள்ளக் கூடும். அத்தகைய மாந்தர்களும்,  எக்காலத்திற்குமான களமும் கொண்ட கதைகளாகும். செக்காவின் நுண் விவரணைகளும் வர்ணனைகளும் கதைகளுடன் லயிக்க வைக்கிறன்றன. 



இத்தொகுப்பு தமிழின் முக்கிய நாவலாசிரியரும் சிறுகதையாசிரியருமான  எழுத்தாளர்.எம் கோபாலகிருஷ்ணன் அவர்களது சிறந்த மொழிபெயர்ப்பில் வந்துள்ளது. நூல்வனம் பதிப்பகத்தினர் செம்பதிப்பாக இதை வெளியிட்டுள்ளனர். மிகவும் நேர்த்தியானதாகவும்  கதைகளுக்கும், மொழிபெயர்ப்புக்கும் மேலும் அழகூட்டுவதாகவும் உள்ளது. 


நண்பர்கள் தவறாது  வாசிக்கவும். நல்லனுபவமாக இருக்கும்..

No comments: