ஆள்தலும் அளத்தலும் குறித்து திரு காமராஜ் ராதாகிருஷ்ணன் அவர்களின் பதிவு
-ஆள்தலும் அளத்தலும் & பிறகதைகள்-
திரு. காளிப்ரஸாத் அவர்கள் எழுதிய மொத்தம் பத்து சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. ஒவ்வொரு சிறுகதையையும் படிக்க ஆரம்பித்ததுமே இயல்பாகவே கதையோட்டத்துடன் கலந்துவிடும்படியான சொல்லல் மொழி அமைந்துள்ளது. தனது கதைகளின் மாந்தர்களுக்கு நிறைவான வாய்பளித்து நகர்த்தும் முறை இருப்பதாக எனக்குப் படுகிறது.
ஒருவனின் பணியிடத்திலும் பணிசார் நண்பர்களுடனான உறவுகளையுமே சுற்றி வரும் சிறுகதைகள், அலுப்பூட்டாதவண்ணம் தேர்ந்த மொழியினால் தேர்ந்த சம்பவங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
எலெக்ட்ரீஷியன் ,மெக்கானிக், ப்ளம்பர் , HVAC Technician.. ..போன்ற Tool களை வைத்து பணிபுரியும் நபர்கள் எவர் இந்த சிறுகதை தொகுப்பை படித்தாலும் தத்தமது நினைவுகளை கிளர்த்தி இன்னோர் ஆள்தலும் அளத்தலையை கூறுவார்கள்.
இவர்களைப்பற்றி யார் எழுவார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தபோதுதான் தற்செயலாக இந்த தொகுப்பை வாங்கிப்படிக்க நேரிட்டது.
படிக்கப்படிக்க இன்னுமின்னும் புதிய கதாபாத்திரங்களின் வருகைக்காக ஆர்வத்தோடே காத்திருந்தது புதிய வாசிப்பு அம்சமாக இருந்தது.
விடிவு:
நண்பனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று விபத்துக்குள்ளாகி நண்பன் மட்டும் இறந்ததால் குற்றவுணர்வில் இருப்பவனின் மனதத்தளிப்பும் ...இறுதியாக "நீ இல்லாட்டி அனாதை பொணமா ரோட்ல கெடந்திருப்பான். எம்புள்ளைய கொண்டு வந்து சேத்துட்டியேப்பா" என்ற வரிகள் அவனை மட்டுமல்ல ; நம்மையுமே அவர் கைக்குள் முகத்தை புதைத்து பெருங்குரலெடுத்து அழத்துவங்கவைத்திடும்.
ஶ்ரீஜீ என்ற சிறுகதை கம்பெனியில் நீண்டகாலம் உழைத்து சீனியராக முன்னேறிய ஶ்ரீமந்நாராயணனை ஜூனியர்கள் உதாசீனம் செய்வதை அவரின் உள்ளப்பாடுகளை வாயிலாகவும் அவரின் ஆற்றாமையின் வெளிப்பாட்டையும் தெரிவிக்கிறது.
மதிப்பு ஒரு திருப்திகரமான சிறுகதை. டீமானிடைஸேஷன் ஏற்படுத்திய பாதிப்பை கதையின் இறுதியில் அழுத்தத்தோடு நிறைவுசெய்கிறது.
கரி என்னும் மற்றொரு சிறுகதை மருத்துமனையை களமாக கொண்ட சிறப்பான ஒன்று.
ஆள்தலும் அளத்தலும் என்ற சிறுகதை: சும்மா பெயர்நிமித்தம் "சென்னை வந்தால் வீட்டிற்கு வா" என்று சொன்னதற்கிணங்க சந்திப்பதற்காக குறிப்புகளுடன் விலாசத்தை தேடிக்கண்டடையும் அவன் அசப்பில் என்னை நினைவுபடுத்தினான்.
இந்த வரிசையிலிருந்து விலகிய ஆனால் அழகாக அமைந்த சிறுகதைதான் ஆர்வலர்.
மேலும், பழனி, திருவண்ணாமலை, பூதம், பராசக்தி போன்ற சிறுகதைகளும் இயல்பான கூறல் மொழிகளால் நம்மை நெருங்க வைத்துவிடுகிறது.
நன்றி &
வாழ்த்துக்கள்
திரு காளிப்ரஸாத்ஆள்தலும் அளத்தலும் & பிறகதைகள்
ஆசிரியர் : ஆர். காளிப்ரஸாத்
பதிப்பகம் : பதாகை - யாவரும் பப்ளிஷர்ஸ்
விலை : ₹ 140
No comments:
Post a Comment