Monday, November 8, 2021

ஆள்தலும் அளத்தலும் - ஆனந்த விகடனின் மதிப்புரை

ஆனந்த விகடன் வழியாகத்தான் வாசிப்பு துவங்கியது. அதன் தொடர்கள் வழியாக இலக்கியமும் தொற்றிக்கொண்டது. ஆதர்ச எழுத்தாளர்களும் அறிமுகமாயினர். இன்றைக்கு வெளியாகியுள்ள ஆனந்த விகடனில் (28-10-2021) எனது "ஆள்தலும் அளத்தலும்" சிறுகதை தொகுப்பு குறித்த மதிப்புரை, அதன் படிப்பறை பகுதியில் வந்துள்ளது. இது மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றி Ananda Vikatan

Link:- https://www.vikatan.com/arts/literature/book-review-3



ஆனந்த விகடனின் மதிப்புரை

 தமிழ்ச் சிறுகதைகளில் மொழியையும் கதைசொல்லலையும், நவீன காலத்தின் அலைக்கழிப்பான வாழ்வியலையும் நேர்த்தியாகச் சொல்லத்தெரிந்த கதைசொல்லிகளில் ஒருவர் ஆர். காளிப்ரஸாத். இவரது `ஆள்தலும் அளத்தலும்' என்னும் பத்துக் கதைகள் கொண்ட தொகுப்பு பதாகை வெளியீடாக வந்துள்ளது.


காளிப்ரஸாத், மரபான உணர்வுபூர்வமான தருணங்களை எப்படிக் கதைகள் ஆக்குகிறாரோ அதேபோன்று சிக்கலான விஷயங்களையும் மிக அநாயாசமாகக் கையாள்கிறார். குறிப்பாக, இன்று பலரும் எழுதத் தயங்கும் அல்லது எழுத விரும்பாத விஷயங்களை மிக நுட்பமாகக் கையாள்கிறார். அப்படி ஒரு கதைதான் `ஆர்வலர்.' குத்தூஸ் என்பவரை மையமாகக் கொண்ட இக்கதை, பிற உயிர்களின் மீதான அன்பு குறித்துப் பேசுகிறது. மதம் எப்படி ஒவ்வொரு மனிதருக்குள்ளும் அன்பை சவாலாக்குகிறது என்னும் எக்காலத்துக்குமான பிரச்னைதான் கதை. ஒரு வார்த்தை தவறாக மாறியிருந்தாலும் பெரும் சிக்கலாக உருவெடுக்கும் கதைக்களம். ஒருவகையில் சமகால அரசியலை மிக அழகாக விளக்கும் கதை அது.


`விடிவு' நவீன இளைஞனின் மனதையும் அது எதிர்கொள்ளத் தயங்கும் தருணங்களையும் விவரிக்கிறது. நண்பன் ராஜாவின் விபத்து மரணத்துக்குத் தான்தான் காரணம் என்று வருந்தும் நண்பன் ரவியின் மனத்துயரை ராஜாவின் தாய் தீர்த்துவைக்கும் முடிவு ஒரு செவ்வியல் தருணம்.


இத்தொகுப்பின் பல கதைகளிலும் சாமானியர்களே கதை மாந்தர்களாக இருக்கிறார்கள். பல கதைகளில் சொந்த ஊரிலிருந்து பணி நிமித்தம் வேறு ஊருக்கு வந்து அல்லல்படும் எளிய மனிதர்களே வருகிறார்கள். ஆனால் காளிப்ரஸாத் கதைகளில் பெண்களைத் தேட வேண்டியிருக்கிறது. பெண்களே இல்லாமல்கூட ஒருவர் படைப்புகளை எழுதலாம். ஆனால் கதைகளில் அவர்கள் உதிரிகளாக வந்துபோகிறபோது அது படைப்பின் நிறைவில் ஒரு சிறுகுறையாகவே படுகிறது. இந்தத் தொகுப்பில் ஒரு பெண் பாத்திரம்கூட மனதில் அமரவில்லை.


கதை மொழியாலும் மாறுபட்ட கதைக்களங்களாலும் நிறைந்திருக்கும் இந்தத் தொகுப்பு வாசக கவனம் பெற வேண்டிய ஒன்று.


No comments: