நவம்பர் 2021 - அகழ் மின்னிதழில் வெளியான கட்டுரை. கட்டுரைக்கான இணைப்பு இங்கே
ஒரு பழைய கலகக்காரனின் கதைகள்
கம்பவாரிதி
இலங்கை ஜெயராஜ் அவர்கள் தன்னுடைய கம்பராமாயண
உரையில் குகன் படலத்தைச் சொல்லும் பொழுது, இலங்கையில் தான் பிரசங்கம் செய்யப் போன இடத்தில்
நிகழ்ந்த ஒன்றைக் கூறுகிறார். அங்கு கூட்டமாக மக்கள் கோயிலுக்கு வெளியே குந்த வைத்து அமர்ந்து
இவர் உரையைக் கேட்கிறார்கள். உள்ளே இடம் இருப்பதைக் காட்டி அவர்களை வரச்சொல்லும் போது
உடனிருந்தவர்கள் அவர்களை "மத்தவங்க" என்று சொல்லி அனுமதிக்க மறுப்பதை சொல்கிறார். முன்பு தமிழகத்தில்
அத்தகைய சூழல் நிலவியதைக் கேள்விப் பட்டிருந்தாலும் சமகாலத்தில் அத்தகைய ஒன்றைக் கண்டிராத, முக்கியமாக தமிழகத்தை விடவும்
சிறந்த பொற்கால/சமதர்ம ஆட்சி அங்கு நடக்கிறது என்று எல்லாம் கருதி வந்தவனுக்கு முதல்
அதிர்ச்சி அதுதான் என்று சொல்லலாம். சமகால
இலக்கியத்தில் ஒரு எழுத்தாளர் இத்தகைய சூழல் சார்ந்தும் கேள்விகளை தன் எழுத்தில் எழுப்புகிறாரா
என்பது முக்கியமானது.
எழுத்தாளர் கற்சுறா தொகுத்து 'கறுப்புப் பிரதிகள்' வெளியீட்டில் வந்துள்ள
"என்.கே.ரகுநாதம்" புத்தகம் ஈழ எழுத்தாளர் என்.கே.ரகுநாதன் அவர்களுக்கான ஒரு முழுத்தொகுப்பாகவும் அவர் எழுத்துலகிற்கு
ஒரு சமர்ப்பணமாகவும் வந்திருக்கிறது. அவரது சிறுகதைகள், வரலாற்றுச் சித்திரம், கட்டுரைகள்,
நேர்காணல்கள், கவிதைகள் எல்லாம் கொண்ட பெருந்தொகுப்பாக வந்துள்ளது. ஆனால் பெரும்பான்மையான தமிழக வாசக தளத்திற்கு
தான் பிறந்து தொன்னூறு வருடங்கள் கழிந்து, தன் மறைவிற்குப் பின்னர், இந்தத் தொகுப்பு வாயிலாகத்தான் அவர் அறிமுகமாகிறார்
என்பதும் உண்மை. அதற்கான நடைமுறைக் காரணங்கள் இல்லாமல் இல்லை. அவர் எழுதத் துவங்கியபோது
இருந்த சமூக நிலை அல்ல பிற்கால ஈழத்தில் இருந்தது.
ஆகவே துவக்கத்திலும் இறுதிக்காலத்திலும் இருந்த அளவு இடைப்பட்ட காலத்தில் அவர் தன்னை
வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. தன் கண்முன்னரே தன்னுடைய அனைத்து கருத்தியலும் கலகமும்
போர்ச்சூழலில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்திருக்கலாம் என்று
எண்ணுகிறேன்.
முதல்கதையான "நிலவிலே பேசுவோம்" கதையே மிகவும் சுவாரசியமானது. காந்தி சொன்னார் என்று கள்ளுண்ணாமையை
முன்னெடுக்கும் சிவப்பிரகாசத்தைக் கண்டு தன்
தரப்பு நியாயங்களை உரைக்க வரும் கள் இறக்கும் மக்களுடனான உரையாடல்தான் கதை. 'மது ஒழிக' என்னும்
கோஷம் சீமை சாராயத்தைக் கொண்டு வரும் முயற்சிதான் என்று வாதிடுவது சாதாரணமானது என்றாலும்
மற்றொரு கோணத்தை வைக்கும்போது ஆகச்சிறந்த கதையாகிவிடுகிறது. மக்கள் தங்களிடம் கள்ளைத்தான் வாங்கிப் பருகுவார்களேதவிர
தாங்கள் தேநீர்க்கடை வைத்தால் மக்கள் வாங்கிப்
பருகுவார்களா என்று கேள்வி எழுப்புபவருக்கு அவரிடம் பதில் இல்லை. அவர் மழுப்பி சமாளிக்க, அங்கிருந்து விடை பெற்றுச் செல்லும்போதுதான் தங்களை வீட்டுக்குள் கூட அனுமதிக்காமல் வெளியில்
"நிலவிலே பேசுவோம்" என்று வெளியே வைத்துப் பேசியதன உள்ளர்த்தம் விளங்குகிறது.
கள் இறக்குவது என்பதுதான் தன் சமூகத்தை பொருளாதார ரீதியாக நிலை நிறுத்தும் என்பதும்,
வேறு ஏதும் தான் பரிமாற மற்றவர்கள் வாங்கி அருந்த தயாராக இல்லை என்பதும் உணர்ந்த ஒரு
தோலைநோக்குப் பார்வையும் அதே சமயம் தன்னை வீட்டிற்குள் சேர்க்காத யதார்த்தமும் திரண்டு
வரும் கதை. இந்தக்கதை வெளியானது 1951 ம் வருடம்
என்பதையும் வைத்துப் பார்க்கும்போது எழும் வியப்பைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அந்தக்
கதையின் கூறு பொருள் தமிழகத்திலேயே இன்றும் செல்லத்தக்கதாக இருக்கிறது என்பதை உணரமுடியும்.
அவரது எழுத்துநடையுமே மிகவும் கச்சிதமானது.1950களில் எழுதப்பட்டதாக வாசகரால் உய்த்தறிய
இயலாது. மேலும் சில கதைகளும் அத்தகையவை
கோயிலுக்குள் அனைத்துச் சமூக மக்கள் அனுமதிக்கப்பட்டது
அறிந்து ஆலயம் செல்லும் செல்லத்துரை தரிசனம்
முடிந்த பின் வெளியே உள்ள உணவகத்தில் சென்று குழந்தைக்கு சோறூட்ட ' அனைவரும் வந்து
அமர இது கோயிலல்ல கடை என்று முதலாளியால் அவர்
வெளியே தள்ளப்படுகிறார் ( கதவுகள்), ஒரு விலைமகள் வீட்டிற்கு செல்லும்போதும் அங்கும் அவனின் வேலை பணவசதி எல்லாம் கடந்து சாதிதான் கேட்கப்
படுகிறது ( வெறி). இத்தகைய கதைகள் ஒரு கலகக்காரராக அவரை காட்டுகின்றன. ஒரு கலகக்காரனின் குரல் என்றால் அது தனக்கு சாதகமான
இடங்களில் கண்மூடி இருப்பது அல்ல என்கிற தெளிவும்
அவரது கதைகளில் காணக்கிடைக்கிறது. ஆகவே,
அவர் கல்வி சாலைகளில் உள்ள கீழ்மைகள் , சுயமரியாதை இயக்க நபர் கொள்ளும் தகா உறவு, இலக்கிய
உலகம் கொண்டிருக்கும் போலிக் பெருமிதங்கள்,
எழுத்தாளரின் சுயநலம் , இலக்கிய அமைப்புகளின் இரட்டை வேடம் என அனைத்திலும் உள்ள போலித்தனத்தைக்
காட்டி விடுகிறார், பகடி செய்கிறார்.
அடுத்து ஈழப்போரின் துவக்கம் மற்றும் அகதிகள் பெருகி
வருவது என ஈழப்போர் ஒரு தீப்பொறியாக மட்டும் இருந்த காலங்களில் இவர் கதைகளில் அவை எதிரொலிக்கும்
விதமும் கவனிக்கத்தக்கது. தன்னுயிரைக் காப்பாற்ற உயிர் துறக்கும் சிங்கள தம்பதிகள் ( நெருப்பு), இன வெறுப்பில் குடையை
மறைத்து வைத்த சிங்கள கடைக்காருக்கு ஆதரவாக வரும் மற்றொரு சிங்களவர் (குடை) ஆகிய கதைகளின்
ஊடாக அவர் வலியுறுத்துவது மாற்றுத் தரப்பிலும் உள்ள நல்ல மனிதர்களையும் மேன்மைகளையும்தான்.
அவரது முதல்கதையான "நிலவிலே பேசுவோம்"
ல் உள்ள ஒருவித முன்னோக்கிக் காணும் தன்மை இத்தகைய கதைகளில் வெளிப்படுகிறது. இவ்விரு தளங்களையும் தவிர்த்தும் பல கதைகள் எழுதியுள்ளார்.
அவற்றில் வெளிப்படும் ரகுநாதன் மிகவும் ரசிக்க வைக்கிறார். வெள்ளைக்கார துரை மற்றும் துரைசானி
இருவரும் காரில் வரும்போது பள்ளி ஆசிரியர் ஒருவர் படாரென இரு கரங்களாலும் சல்யூட்
அடிக்கும் கதை (இரட்டை 'சல்யூட்' ) ஒரு அபத்தமும்
அதற்குள் கொண்டிருக்கும் பகடியும் கலந்த கதை. இவரது கதைகளில் வரும் குழந்தைகள் மனதிற்கு
மிகவும் நெருக்கமாகிறார்கள். ( ஒருநாள் கழிந்தது,
இரண்டு அப்பாமார்களும் பிள்ளைகளும், ஓர் அம்மாவும்
அந்த அம்மா பெற்ற பிள்ளைகளும் ). மேற்சொன்ன
சீண்டல் / கலகக் கதைகளை ஒருவேளை இவர்
எழுதியிருக்காவிட்டால் கூட , இவருடைய இந்தக் கதைகள் பொது வாசகர் தளத்தில் திஜா எழுத்துக்கள்
போல வெகுவாக ரசிக்கப் பட்டிருக்கும்.
என்.கே.ரகுநாதன் அவர்களின் அத்தனைச் சிறுகதைகளையும்
குறித்த பொதுவான ஒன்றை ஒரே சொல்லில் சொல்லவேண்டும் என்றால், அவர் கதைகளில் வலியுறுத்தும்
ஒழுக்கவியலைக் குறிப்பிடலாம். அவரைப் பொறுத்தவரை, எழுத்தாளன் என்பவன் ஒரு படி மேலே,
அவனுக்கு பிற மக்களை வழிநடத்தும் பொறுப்பு இருக்கிறது, ஆகவே அவன் கவனமாக வார்த்தைகளைக்
கையாளவேண்டும் என்கிற நிலைப்பாட்டைக் கொண்டவராக இருக்கிறார். இது அவரது இடதுசாரி சித்தாந்தத்தின்
வழி வந்தது என்பதும் எளிதில் விளங்கிக் கொள்ளக்கூடிய ஒன்றுதான். மற்றபடி, இலக்கிய அழகியல்,
வடிவச் சோதனைகள், நேரடி வர்ணனைகள், காமம் மற்றும் உரையாடலில் வரும் கெட்ட வார்த்தைகள் என அனைத்தும் அவருக்கு
ஒரு பொருட்டு இல்லை. ஒருவித நேரடி கதைச்சொல்லல்தான் அவரது பாணி. அது தன்னுடைய பாணி
என்றாலும் அதிலிருந்து மாறுபட்டு எழுதும் பிற பாணி எழுத்தாளர்களை அவர் மேற்கண்ட காரணங்களால்
குறைத்தே சொல்கிறார். ஈழ மற்றும் தமிழக எழுத்தாளர்கள் அனைவரிடமும் அவர் இந்த ஒழுக்கத்தை
எதிர்பார்க்கிறார். அவ்வாறு இல்லையேல் அதைச் சுட்டிக் காட்டுகிறார். சில இடங்களில்
எழுத்தில் இவ்வாறு சொல்பவர் தன சொந்த வாழ்க்கையில் எப்படி இருந்தார் என்று பிரதிக்கு
வெளியேவும் சென்று அலசுகிறார். இந்த வகையில் தமிழக எழுத்தாளர்கள் நா.பார்த்தசாரதி ஜெகே,
இ.பா ஆகியோர் மீதும் இதே விதமான விமர்சனங்களும் வைக்கிறார்.
அவரது கட்டுரைகளில் உள்ள அன்றைய இலக்கிய வம்புகள் இன்று
வாசிக்கப்படுகையில் சுவாரசியமாகத்தான் உள்ளன. பெரும் பகடியும் உண்டு. அகஸ்தியர் என்னும் எழுத்தாளர் குறித்த ராகுலதாசன்
என்கிற வாசகர் கட்டுரையையும் மேலும் சில கட்டுரைகளையும் கட்டுடைத்து அதை எழுதியது ராகுலதாசன்
அல்ல அந்த எழுத்தாளரேதான். அவரே புனைப்பெயரில் இதை எழுதுகிறார் என்று ஒரு கட்டுரையில்
பூடகமாக குறிப்பிடுகிறார். பிறகு சில ஆண்டுகள்
கழித்து ஈழ இலக்கியம் சார்ந்த இன்னொரு கட்டுரையில் பெயர் சொல்லாமல் இன்னொரு சம்பவத்தை சொல்கிறார். முன்பு ராகுலதாசன் என்னும்
வாசகர் தன் ஆதர்ச எழுத்தாளரைப் புகழ்ந்து கட்டுரைகள் எழுதியபடியே
இருந்தார். அந்த ஆதர்ச எழுத்தாளர் ஒருநாள் இறந்தும் போனார். ஆனால் வியப்பு என்னவெனில்
அந்த வாசகரும் அதோடு எழுதுவதை நிறுத்திக் கொண்டார். ஒரு அஞ்சலிக் கட்டுரை கூடவா எழுத்தமாட்டார்..
ஒருவேளை ஆதர்ச எழுத்தாளர் இறந்ததையடுத்து அவரது ஆதர்ச வாசகரும் இறந்தாரோ என்று சொல்லி வருந்துகிறார். நமக்குத்தான் வெடிச்சிரிப்பாக
இருக்கிறது.
தாழ்த்தப் பட்டவர்களின் முன்னேற்றமும் முற்போக்கு எழுத்தும்தான்
தன் பாணி என்று அவர் முடிவு செய்து கொண்டதால் பிற விஷயங்களான மாற்று இலக்கியம் அல்லது அரசியல் மாற்றங்கள் அவருக்கு எந்தளவு ஏற்கத்தக்கதாக
இருந்திருக்கும் என்று ஊகிக்க உதாரணமாக இரு சம்பவங்ககளைச் சொல்லலாம். ஒன்று, தேவதாஸ்
மற்றும் ஷோபாசக்தி ஆகியோர் அவரை எடுக்கும் நேர்காணலில் ஈழ எழுத்தாளர் மு.தளையசிங்கம்
குறித்த கேள்விக்கு ரகுநாதன் சொல்லும் பதிலில், "எனக்கு மு.தளையசிங்கம்
குறித்து ஒன்றும் தெரியாது.. அவரது இலக்கிய நிலைப்பாடு முற்போக்கு எழுத்தாளர்களால்
கவனத்தில் கொள்ளப்படவில்லை" என்கிறார். எல்லைகளைக் கடந்து இன்றும் தொடர்ந்து வாசிக்கப்படும்
ஒருவர் குறித்த இந்த பதில் வியக்கத்தக்கது. அதேநேரம் முற்போக்கு எழுத்தாளர் மற்றும்
கவிஞர்களுக்கு பல ஆண்டுகள் கழித்தும் நினைவு
மலர் கட்டுரைகள் எல்லாம் கொண்டுவருகிறார். மற்றது ஈழப்போர். முதல்பத்தியில் சொன்ன இரு
கதைகளைத்தவிர வேறு எங்கும் போர் விவரணைகள் இவர் எழுத்தில் இல்லை. இன்றைக்கு ஈழ இலக்கியம்
என்பதே போர்ச்சித்தரிப்பு என்று ஆகிவிட்ட சூழலிலும் தானும் அகதியாக கனடா சென்று வாழ்ந்திருந்த
போதும் அவர் போர் குறித்து ஏதும் எழுதவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 'சாதி வெறியர்கள்
இன்று துப்பாக்கியின் நிழலிலே மறைந்து கிடக்கிறார்கள்' என்கிற ஒரு வாக்கியத்தோடு அவர்
கடந்துவிடுகிறார். தான் எதிர்பார்த்து வந்த சமூக முன்னேற்றம் என்கிற சிந்தனை, இன்று
இனக்கலவரம் / போர் என்று வேறொரு சூழலால் அடித்துச் செல்லப்பட்ட போது அவருடைய
எழுத்துக்கான காலம் இன்னும் கனியவில்லை என்பதும் அதனால் அவர் எழுதுவதையும் நிறுத்திக்
கொண்டார் என்றும் புரிந்துகொள்ள முடிகிறது. தனக்கான களம் வாய்க்காத போது செல்லுபடியாவதை
எழுதுவோம் என்று எழுதி அவர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விரும்பவில்லை என்றே கருதுகிறேன்.
இதே தொகுப்பில் உள்ள 'ஒரு பனஞ்சோலை கிராமத்தின் எழுச்சி' என்கிற இவரது தன் வரலாற்று நாவல் பிற்காலத்தில் எழுதப்பட்டது. குரும்பைக்கட்டு விளையாட்டோடும் நல்ல நிலவர்ணனையோடும்
துவங்கும் "ஒரு பனஞ்சோலை கிராமத்தின்
எழுச்சி" ஒரு நாவலளவிற்கான களம் கொண்டது. இத்தனைக்கும் கதைநாயகனாக இராசன் என்று படர்க்கையில் எழுத்தப்பட்டிருந்தாலும்
அது வரலாற்றுச் சித்திரம் என்றே குறிப்பிடுகிறார். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த
ஒரு மாணவன் பள்ளியில் கொண்ட இடர்களும் மெல்ல பொதுவெளியில் கொண்ட எதிர்வினைகளும் கொண்ட இளமைக்கால நினைவுத் தொகுப்பு என்றாலும், அங்கு நிலவிய
சமூக அமைப்பை விளங்கிக் கொள்ள பெரிதும் உதவுகிறது. காந்தி, பெரியார் ஆகிய இந்திய தலைவர்களின்
தாக்கம் அங்கு நிகழ்வதும் ஆலய நுழைவு போராட்டம்
எழுவதும் அதற்கு ஆதரவாக இராசன் எழுதிய கந்தன் கருணை நாவல் குறித்த இலக்கிய அரசியல்
நிகழ்வுகளும் போருக்கு முன்பான ஈழ நிலத்திற்கான ஒரு முன்வரைவை அளிக்கின்றன. ஈழத்தில்
இருந்த சாதீய வன்முறைகளும், அதற்கெதிராக சமதர்மம்
பேசி எழுந்த காந்திய திராவிட சிந்தனைகளும் அதற்குள்ளும் அவர் சுட்டிக் காட்டும் சொற்ப சுயநலமும்
கலந்து ஒரு சித்திரத்தை அளிக்கின்றன. மேலும்
சுவாரசியமான களமாக ஈழத்தில் இருந்த சீன ஆதரவு கம்யூனிஸம் மற்றும் ரஷ்ய ஆதரவு கம்யூனிஸம்
ஆகிய சித்திரங்கள் கிடைக்கின்றன. நண்பர்கள் சேர்ந்து அமைக்கும் வாசகசாலைக்கு தமிழக
அரசியல் பாதிப்பால் திராவிடர் கலைமன்றம் என்று பெயர் வைக்கிறார்கள். அவை அனைத்தும் வாசிக்கையில் போர் வந்து
கலைத்திருக்காவிடில் அங்கு வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்ற யோசனைக்குள் ஆழ்த்திவிடுகின்றன.
இவருடைய கதையுலகம் பள்ளிச் சம்பவங்கள், ஆலயப்பிரவேசம்,
அனைத்து சாதியினருக்கும் ஒரே சுடுகாடு போன்ற முழக்கங்களுடன் செல்கிறது. எதிலும் இடதுசாரிவழி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், கோஷம் என்று செல்கிறது.
ஆங்காங்கு நாமறிந்த இலக்கியவாதிகள் கதைமந்தர்களாக வருகிறார்கள். பெரும் திருப்பங்கள்
இலாத அதேநேரம் வாசிக்கவும் அயற்சிதராத கதையோட்டம் கொண்டது. இருப்பினும் அனைத்தும் கலந்த
தொகுப்பாக இதை வாசிக்கும் பொழுது இவர் தன்வாழ்வில் எதிர்கொண்ட அந்தச் சில குறிப்பிட்ட
சம்பவங்களே மீளும் மீளும் பதிவு செய்யப் படுவதை வாசிக்கையில் சலிப்பூட்டுகிறது. உதாரணமாக,
கந்தன் கருணை நாடகம் எதிர்கொண்ட 'உரிமைப்பிரச்சனை' பல கட்டுரைகளில் வருகிறது. ஆனால்
முதல் கட்டுரையை படித்தபின் மற்ற எதிலும் பெரும் மாற்றமோ புதிய சுவாரசியமோ இல்லை. அவற்றை இன்னும் கச்சிதமாக்கியிருக்கலாம்
என்ற எண்ணம் தோன்றுகிறது.
சாதியமைப்பில்
தனக்கு மேல் இருக்கும் சமூகத்தை
நோக்கி அதற்கடுத்த நிலை சமூகம் கேள்வி எழுப்புவது இயல்பானது. ஒரு ஏணியில் அனைவரும்
ஏறிப்போகத்தன் விரும்புவார்களே தவிர நிலைத்து நிற்கவோ இறங்கிப் போகவோ யாருக்கும் எண்ணம்
இராது. அங்கு வரிசையில் பின்னால் இருப்பவர்
மேலே இருப்பவருடன் இணைந்தோ அல்லது தாண்டியோ
செல்லவே விரும்புகிறார். இது இயல்பான ஒன்று.
இங்கே அதிகாரம் அல்லது வழிநடத்துவது ஆகியவற்றிற்கு
ஒரு சமுதாயம் பொறுப்பேற்பதாக கருதப்படும் பொழுது அது தன்னுடைய 'தன்னலமின்மையை' நிரூபித்தாக
வேண்டும். அவ்வாறு இல்லாத சமயங்களில் பழி ஏற்க வேண்டும். உதாரணமாக, தமிழகத்தில் பிராமண சமுதாயம் அந்தக் கேள்வியை எதிர்கொண்டது. அது மிகவும் சிறுபான்மை என்பதாலும்
சமரச அணுகுமுறையாலும் தற்காத்தும் கொண்டது. ஆனால் அவ்வாறு இல்லாத நிலங்கள் உண்டு. அங்கு
அவை தங்களுக்குள் போரிடல் வேண்டும். அல்லது ஒரு பொது எதிரியைக் கண்டடைய வேண்டும். இரண்டிலும்
பேரழிவு நிச்சயம் என்பதற்கு ஈழம் வரை பல உதாரணங்கள் உண்டு. ஒரு இலக்கியவாதியின் இடமானது, இந்த நெருப்பில் தான் எண்ணெய் ஊற்றுகிறோமா அல்லது
தண்ணீர் ஊற்றுகிறோமா என்பதும், யாருக்கான தரப்பில்
நின்று பேசுகிறோம் என்பதிலும் வைத்து முடிவு செய்யப் படுகிறது. என்.கே. ரகுநாதன் அவர்களுக்கு
தீயில் எண்ணெய் ஊற்றும் அத்தனை வாய்ப்புகள் இருந்தாலும் அவர் எழுத்தில் அதை கவனத்துடனும்
பொறுப்புணர்வுடனும் அணுகுகிறார். புரட்சியை
கலகத்தை தன்னலம் கருதி எழுதி ஆதாயம் அடையும்
எழுத்தாளரின் கட்டைவிரலை எமன் எடுத்துக் கொள்ளும் இவரது கதை ஒன்று உண்டு (கட்டைவிரல்).
ஏகலைவனின் கட்டைவிரலை மட்டும் பேசிக் கைத்தட்டல் பெறும் எழுத்துலகில் எழுத்தாளர்களின்
கட்டை விரலையும் பற்றிப் பேசிய என்.கே.ரகுநாதன் என்கிற அந்தக் கலகக்காரரின் "கட்டைவிரல் ரேகை" இந்தத் தொகுப்பின்
கதைகள் வழி தமிழ்நிலத்திலும் பதிக்கப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment