Monday, December 6, 2021

எல்லாமுமான கவிஞன்

விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர்.விக்ரமாதித்யன் படைப்புகள் குறித்த எனது கட்டுரை. எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் வெளியான லிங்க் இங்கே:-


எல்லாமுமான கவிஞன்

"தேவதைக்கதைகளில்வரும் தேவதைகளை தெரியவே தெரியாது   

பேய்க்கதைகளில் வருகிற 

பேய்களை புரியவே புரியாது   

கடவுளின் கதைகளில் வந்துபோகும் கடவுளைமட்டும் தெரியுமா என்ன  


எதுவுமே அறியாமல் எல்லாமுமான கவிஞன் இவன்"





நேற்று தி.நகரிலிருந்து வரும்போது வண்டி தேங்கிய நீருக்குள் நின்று விட்டது. வழக்கமான பாதைதான்.  நீருள்ளது என்றும் தெரியும்.  வண்டியின் வலுவும் தெரியும். ஆனால் இறங்கிய பின்தான் அதன்  ஆழம் தெரிந்தது. நேற்று காலை ஜன்னலோரமாக அமர்ந்து ரசித்த அதே சாரல்தான். காபி அருந்திக் கொண்டிருந்தே ரசித்துப் பார்த்த, படபடவென பொழிந்து தள்ளிய அதே மழைதான்.  நல்ல மழை என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளலாம். அது லேசானதா, மிக கனத்ததா என்பதையைல்லாம் நாம் சொல்வதற்கில்லை. ஒரு சென்டிமீட்டர் குறைந்தாலும் கூடினாலும்  பெயர் மாறிவிடும். ஆகவே நல்லமழை என்றே சொல்லிவிட்டு தொடரலாம். அதுவும் பெய்த அளவை வைத்துத்தான். மற்றபடி மழையின் குணத்தை வரையறுக்கும் எண்ணமும் இல்லை. சொல்லப்போனால் இங்கு (மாநகரத்தில்) பலருக்கு கெட்டமழைதான். எனக்குமே வண்டி மாட்டி பின் இயங்கத் துவங்கும் வரை நல்லமழை என்று சொல்ல வாய்வரவில்லை. நன்றாக ஒருநாளில் வெளுத்து வாங்கிவிட்டு  அடுத்தநாள் அதிக கனமழை என பெயர் வாங்கிக் கொண்டு போகும் மழைகளும் உண்டுதான். ஒருநாள் ஜாலி ஒருநாள் ஓட்டம்.  பரிசுப் போட்டிகளுக்கு மட்டுமே எழுதுவேன் என்ற பிடிவாத எழுத்தாளர்கள் போல சீசனுக்குத் தூறிவிட்டுப் போகும் மழைக்கூட உண்டு. அவை தனிரகம். அவற்றால் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால்  ஒரு மாதத்திற்கும் மேலாக தினமும் நின்று, ஆடி, நின்று  சுரக்கும் மழை அப்படி இல்லை. சாரலாக துவங்கி, வலுத்து, நின்று பின் வான்வெளுத்து ஏமாற்றி, மீண்டுமொருமுறை வெளுத்துவாங்கி என மாறி மாறி நின்று பெய்யும் மழை அது.  பார்க்கத்தான் சாரல், ஆனால் மெல்ல திரண்டு வண்டியை மூழ்கடிக்கும் ஆழம்.



கவிஞர்.விக்ரமாதித்யனை தொகுத்துக் கொள்வது போல வேறொரு கடினமான முயற்சி இல்லை. ஆனால் எப்பாடுபட்டாவது அவர் கவிதைகளை முற்றோதல் செய்யவேண்டும் என்றே பரிந்துரைப்பேன்.. அவரைப் புரிந்துகொண்டால் உலக இயக்கத்தை சிலர்  புரிந்து கொள்ளலாம். மனித மனத்தின் பக்குவத்தை  புரிந்து கொள்ளலாம்.  எனக்கு அவர் அறிமுகம் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையில் நிகழ்ந்தவைதான். 


அவர் புத்தகங்கள் வழி அறிமுகமாகிய காலம் தொட்டு இன்று வரையில் அவரது தோற்றத்தில், அவர்  ஆளுமை குறித்து வாசித்த கட்டுரைகளில், கேட்ட கதைகளில், இலக்கிய பேச்சிலர் ரூம் ரகளைகளில் புரணிக்கதைகளில் என ஏதும் மாறவில்லை. இதில் ரஸம் என்னவென்றால், பார்த்த திரைப்படங்களிலும் அவர் அப்படியே வருகிறார். கடவுளை தேவ்டியாப்பயல் என்கிறார். அந்த விக்ரமாதித்யன் எப்படி  ஒரே உருவத்தோடு கையில் வாளும் தோளில் வேதாளமுமாய்  கதைக்குள் வசிக்கும் ஒரு நபரோ அதுபோலத்தான் எனக்கு இந்த விக்ரமாதித்யனும். அதனாலேயே நானும் அவருடைய கட்டுரைகள் ஏதும் இதுவரை வாசித்ததில்லை. முன்னுரைகளை வாசிப்பதில்லை. அதில் எங்காவது  அவரது பால்யகாலம் இருந்துவைத்து சிறுவனாக பள்ளிக்குச் சென்ற அனுபவம் வந்தால் என்னாவது?   அவரெல்லாம் ஒண்ணாங்கிளாஸுக்கு தாடியோட போனேன் என்று சொன்னால்தானே நம்ப முடிகிறது! அவரைக் கண்ட முதல் புகைப்படத்திலேயே அவர் நரைத்த தாடியுடன் இருந்ததால் ஒருவேளை தாத்தாவிடம் கொள்ளும் நெருக்கம் போல ஆகிவிட்டதோ என்னவோ. அவரை,  அவரது கவிதைகள் வழியாகவும் பேட்டிகள் வழியாகவும் பிறருடைய கட்டுரைகள் வழியாகவும்தான் மாறி மாறி அறிந்து வருகிறேன். 


முதலில் விகடன் தீபாவளி மலரில்  (நேரடியாகவோ அல்லது யாரோ குறிப்பிட்டிருந்தோ நினைவில்லை) வாசித்த கூண்டுப்புலிகள்.  பின் 2000 ஆண்டில் விக்கிரம வருடம் பிறப்பதை ஒட்டி விகடனில் இயக்குனர் விக்ரமன் நடிகர் விக்ரம் என விக்கிரம வரிசை பெயர்கொண்டவர்களின் பேட்டி வழியாக மறுமுறை. அதில் கவிஞர்.விக்கிரமாதித்யனும் இருந்தார்.  கையில் காசு இருந்தால் குடிப்பேன் அல்லது ஓவியம் வாங்குவேன் என்று சொல்லியிருந்தார். வீட்டுக்கு காசு தரமாட்டேன் என்றார்.  விக்ரமாதித்யனுக்கு வரமளித்த மாகாளியை வணங்க கல்கத்தாவிற்கு  போனேன் என்றார். எத்தனை! அதன்பின்  ஜெயமோகன் எழுதிய தமிழிலக்கியம் ஒரு அறிமுகம் எனும் பகடி கட்டுரை. எஸ்.ரா எழுதிய அவரது ஆளுமை குறித்த ஒரு கட்டுரை (விக்ரமாதித்யன் எனும் பெருநகரப் பாணன்).  பின் நான்கடவுள்.. அங்காடி தெரு.. அந்த சமயங்களில் வந்த நேர்காணல்கள்.. இப்படியே.. இடையிடையே  ஆங்காங்கு வாசிக்க கிடைத்த அவர் கவிதைகள். எங்கும் மனதளவில் எனக்கு  அவருடைய தோற்றம் மாறவேயில்லை. ஆனால் அவரது கவிதைகள் மீதான எனது பார்வை மாறிக்கொண்டுதான் இருக்கிறது.


பாரதி முதற்கொண்டு  அனைவரும் எதிர் கொண்ட  சிக்கல் கொண்ட கூண்டுப்புலிகள் கவிதை.  லெளகீகம் ஆட்டிப்படைக்கும் ஒரு  படைப்பாளி தன்னை ஒரு கூண்டுப்புலியாகவும் ஒரு  புலிக்கலைஞனாகவும்  தான் உணர முடிகிறது.

(பிற்காலத்தில் ஜெயமோகன் எழுதய  குருவி கதையும் இதே வரிசையில் வருகின்றது. ஆனால் சற்று மாறுபட்டது )


கூண்டுப்புலிகள்

நன்றாகவே பழகிவிட்டன

நாற்றக் கூண்டு வாசத்துக்கு

பெரிதாக ஒன்றும் புகார் இல்லை

நேரத்துக்கு இரை

காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி

குட்டி போட சுதந்திரம் உண்டு

தூக்க சுகத்துக்கு தடையில்லை

கோபம் வந்தால்

கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்

சுற்றிச் சுற்றி வருவதும்

குற்றமே இல்லை

உறுமுவதற்கு உரிமையிருக்கிறது

முகம் சுழிக்காமல்

வித்தை காண்பித்தால் போதும்

சவுக்குச் சொடுக்குக்குப் பயந்து

நடந்து கொண்டால் சமர்த்து

ஆதியில் ஒரு நாள்

அடர்ந்த பசியக்காட்டில்

திரிந்து கொண்டிருந்தனவாம்

இந்தக் கூண்டுப் புலிகள்


இது இன்றும் அவர் பெயர் சொன்னால் அனைவருக்கும் நினைவில் வரும் கவிதைதான். ஆனால் அடுத்து வாசித்தது பலமாக ஆச்சரியப்படுத்தியது. அப்போது சென்னையில் நண்பர்களுடன் அறையில் வாசம்.


கூண்டுப்புலியா இவர் என்று தோன்ற வைத்த தொகுப்பு ஒன்றை அங்குதான் வாசித்தேன்."தேவதைகள்-பெருந்தேவி-மோகினிப்பிசாசு." கூண்டுப்புலி கவிஞரின் கைவிலங்கை முறித்து எழுந்த கவிதைகள் இவை. அப்பட்டமான காம வர்ணனைகள். காமத்தின் வழியான சரணாகதி என. வரம்பு மீறிய மொழி. கட்டற்ற இளமைக்கனவு.. திமிறி வரும் சொற்கள் என அந்த தொகுப்பு.


"புல்முளைத்து இருப்பது

போல இருக்குமோ


புதர்மண்டிக் கிடப்பது

போல இருக்குமோ


வெட்டி விடப்பட்ட

வெம்பரப்பாக விளங்குமோ


எப்படி இருந்தால் என்ன

ஏதோ ஒதுங்க இடம்கிடைத்தால் சரி

"


எனத் தூண்டிவிடுகிறது. ஒருவித விடலை மனப்பாங்கா? நிஜத்தில் வாய்க்காத ஒன்று சிந்தையை ஆக்ரமிக்க அதைக் கடைந்து எடுத்து வெவ்வேறு தளங்களில் ஆடிப் பார்க்கிறது மனசு





"படுப்பது

சுலபம்


படுக்கை விரிப்பதெ

ஒரு வேலை


படுக்கை போட்டுக்கொண்டே

பெண்


படுத்துக்கொண்டே

ஆண்"


இவ்வாறு யோசிக்க வைக்கிறது.


"அம்மனின் ஒற்றை மூக்குத்தி

பத்து நூறு ஆயிரம் லக்ஷமென

மாயத்தோற்றம் தரும் ராத்திரி


செவ்வரளி ஆரம்

சிவனணையும் காளிக்கு


இருப்பதில் உயர்ந்த 

மதுபானமும் அவளுக்கே

.

.

.


ஆதி 

நிறம் கொண்ட தாய்


ஆடவிட்டு

வேடிக்கை பார்க்கிறாள்


சோதித்ததெல்லாம் 

போதும்


சுகமாக

வாழவைக்க வேண்டும்"



இங்கு அந்த அரற்றல் எல்லாம் பிரார்த்தனையாக ஆகிறது. பின் அவளுடன் அமைகிறது


"காளி தர்சனம்

கதி மோட்சம்


ஓம் ரீம் காளி அபயம்

ஓம் ரீம் காளி தஞ்சம்


ஓம் ரீம் காளி சரணம்

ஓம் ரீம் காளி அடைக்கலம்

"

இங்கே அது ஒன்றிவிடுகிறது. 


இது மனிதனின் படிப்படியான புரிதலா அல்லது யோகப்படிநிலையா? அல்லது காமசாஸ்திரமா? என்றால்  அது எனக்கு காமசாஸ்திரம்தான். ஒருவகையில் அவர்  நவீனவாத்ஸ்யாயனர்.


இதன்பிறகு அந்த ஜுர வேகம் பிற கவிதைகளில் இல்லை. ஆனால்  கோபம் உண்டு. அமைதியும் உண்டு. 


அவருக்கு விக்கி என்று பெயர். விக்கிக்கு நாடாறு மாசம். காடாறு மாசம். குடும்ப பிரச்சனை உண்டு.  எந்தப் பெண்விலங்காவது ஆணை கொன்று தின்கிறதா? மனிதனில் மட்டும் ஏன் என அரற்றுகிறது. சமூக கோபமும் உண்டு. விக்கிக்கு தொழிலாளர்கள் மீதான துப்பாக்கிச்சூடு வயிரெறிய வைக்கிறது. முன்னால் பின்னால் பதினைந்து கார்கள் சூழ பவனிவரும் அரசியல்வாதியைக் கண்டு மனம் கொதிக்கிறது. இயல்புமீறிய குடும்பத் தலைவனின் சாயல் கொண்ட கவிஞராக விக்கி. அவர் எழுதிய மங்களக் கவிதைகளை குறிப்பிடவேண்டும். குறிப்பாக, சைவத் தலக்கவிதைகள்.  கோவில்களாக அலைந்து அம்மையப்பன் ஆடலை பதிவு செய்த கவிதைகள். இங்கு அவர் நவீன நாவுக்கரசராக ஆகிறார். அவர்  பாடிய ஸ்லதலங்கள் பாடல்பெற்ற ஸ்தலங்களாகின்றன. திருக்கோயில் வைபவங்களை பதிவு செய்கிறார். பழனியாண்டி, ஆழித்தேர், திருக்கல்யாணம் என. 


அதேநேரம்,  விக்கியின் சொற்கள் ஒரே நேரத்தில் தினசரி வாழ்வில் உழன்றும் அங்கிருந்து மேலேறியும் இருக்கும் சொற்கள்


'ஃப்ராய்ட் பணத்தை விட்டுவிட்டார் மார்க்ஸ் மனத்தைக் கவனிக்கத்தவறிவிட்டார் 

ஆனாலும் என்ன 

இருவரின் கொடைகளும்

எந்நாளும் அழியாதவைதாம் 

ஒன்றை யொன்று நிரவியபடியே"



ஆனால் அந்த விக்கியை கடந்தும் ஒருவன் எழுகிறான். அந்த மற்றையவன் அமர். அவன் அமரன். அமர்  வரும் கவிதைகளில்  அமருடைய சொற்களில் தெரிபவர் முந்தைய நாவுக்கரசரோ வாத்ஸ்யாயனரோ பாரதியோ  விக்கியோ அல்ல. அங்கு அவன் சித்தராக இருக்கிறான். சித்தர் பாடல்கள் தொகுப்பின் அட்டையில் சித்தர்களின் ஓவியங்கள் உள்ளன. அமரின் புகைப்படம் அதுவாக இருக்கலாம் என்று சொல்லிவிடலாம். 


"அமர் என்ன மேன்மைதங்கிய குடியரசுத்தலைவரா

மாண்புமிகு முதல்வரா 

 மேதகு ஆளுநரா 

மதிப்புக்குரிய மாவட்ட 

ஆட்சித்தலைவரா 

இல்லை சட்டமன்ற உறுப்பினரா லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகனா 

ஒரு சுக்கும் இல்லை 

முந்நூறுபேர் படிக்கும் கவிஞன்   அமர்"


நான் வாசித்த வரிசையில் கூண்டுப்புலியாக இருந்து அமராக எழும்வரை அத்தனை தடங்களும் கவிதைத் தொகுப்புகளில் விரவியிருக்கின்றன. எனக்கு இந்த வரிசைப்படியில் இன்று அமர் அணுக்கமாக இருக்கிறான். விக்கியும்தான். ஆனால் விக்கி மீது கூடவே ஒரு மரியாதையும் உண்டாகிறது

விக்கிக்கும் முந்தையவர்கள் தினமும்  வருகிறார்கள்தான். அவர்கள் மீது மரியாதை இருக்கறது. ஆனால் அனைவரை விடவும்  அமர் அணுக்கமாக இருக்கிறான். அவனுக்கு ஒரு ச்சியர்ஸ் சொல்லிவிட வேண்டும் என்று தோன்றுகிறது





"பிறந்துவிட்டான் விக்கி வசித்துக்கொண்டிருக்கிறான் அமர் வாழ்ந்துக்கொண்டிருக்கிறான் பூர்ணன் எழுதிக்கொண்டும் போகிறான் புட்டா"


கட்டுரையின் துவக்கத்தில்  சொன்னதை மறந்துவிடவும். கவிஞர்.விக்ரமாதித்யனை தொகுத்துக் கொள்வது கடினம் அல்ல. அதுபோல சுலபமான வேறு ஒரு வேலை இல்லை.


சுருக்கமாக சொல்லிவிடலாம். 

 

நல்ல மழை.

No comments: