விஷ்ணுபுரம் விழாவில் விஷ்ணுபுரம் ஆளாக கலந்துகொள்வதற்கும் விருந்தினராக கலந்துகொள்வதற்கும் ஆறு வித்யாசங்கள் ஏதும் இல்லை. மூன்று வித்யாசங்கள்தான். பயணப்படியை பெற்றுக்கொள்ளலாம். இலவசமாக நான்கு புத்தகங்கள் கிடைக்கும். ஒரு சால்வை உண்டு. மற்றபடி அதே ஜாலிதான். மாடரேட்டரைவிட மன அழுத்தம் குறைவுதான்.
என்னுடைய அமர்வு முதல்நாளின் (சனிக்கிழமை) மூன்றாவது அமர்வு. முதல் அமர்வு ரோல்ஸ் ராய்ஸ் புகழ் கோகுல் பிரசாத் அமர்வு. இந்த முறை இத்தகைய தனிப்பட்ட அமர்வுகளில் இருந்த பெரிய வித்தியாசம் என்பது கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கைதான். கோகுல் அமர்விலேயே முந்நூறு பேர் இருந்தனர். முதல் அமர்விற்கான கேள்விகள் கொஞ்சம் கொஞ்சமாக வரும். வண்டியை தள்ளி ஸ்டார்ட் பண்ணனும். ஆனால் இந்தமுறை சரவெடியாக இருந்தது. நரேன் அந்த அமர்வை மிகவும் நிதானத்துடனும் பொறுப்புடனும் கொண்டு சென்றார். கோகுல்பிரசாத் பதில்களும் பத்திரிக்கை ஆசிரியராக சினிமா மற்றும் இலக்கிய விமர்சகராக அவர் முன்வைத்த கருத்துகளும் ஏற்புடையதாக இருந்தன. சினிமா பங்களிப்பு சாராதவர்கள் விமர்சனம் எழுதுவது குறித்த கேள்விக்கும் அவருடைய பதில் நேர்மறையாக இருந்தது. அது வலையுலகிலும் மேன்மேலும் விவாதிக்கப்படும் என்றே நினைக்கிறேன்.
அடுத்த அமர்வு எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனின் அமர்வு. அவர் கூறிய திருப்பூர் மளிகைகடை சித்திரம் சடாரென ஒரு புரிதலை உண்டாக்கியது. மனைமாட்சியில் அவரது உரையாடல்கள் எளிதாகவும் ஆழமானதாகவும் இருக்கும். அது உரையாடலிலும் காணமுடிந்தது. கேள்வி கேட்டவர்களையே ஒருமுறை லேசாக பாராட்டிவிட்டு அல்லது கலாய்த்துவிட்டு பதில் சொன்ன ஸ்டைல் நன்றாக இருந்தது. குருஜி செளந்தர் அந்த செஷனை மாடரேட் செய்தார்
அடுத்த அமர்வு என்னுடையது. பேராசிரியர் லோகமாதேவி அவர்கள் ஒருங்கிணைத்தார். ஆள்தலும் அளத்தலும் மற்றும் தம்மம் தந்தவன் குறித்து அறிமுக கட்டுரைகள் எழுதியருந்தார். அது ஜெ. தளத்தில் வந்திருந்தது. யாவரும் பதிப்பகம் நிகழ்த்திய ஆள்தலும் அளத்தலும் விமர்சனக் கூட்டம் குறித்த பதிவு மற்றும் நான் எழுதிய கட்டுரைகள் மற்றும் உரைகள் குறித்த லிங்க் என அனைத்தும் அவ்வப்போது ஜெ. தளத்தில் வந்த வண்ணம் இருந்தன. ஏண்டா விக்ரமாதித்யனுக்கு விழா எடுக்கிறாங்க ஆனா சைட்ட திறந்தா காளியோட பதிவா வந்து சாவடிக்குது என்று என் நலம் விரும்பியான முனைவர்.சக்தி கிருஷ்ணன் B.A.B.L, P.H.D (இவ்வாறு போடுமாறு கேட்டுக்கொண்டார்) அலுத்துக்கொண்டார். விக்ரமாதித்யனுக்கும் காளிக்கும் புராணகாலத்திலிருந்து லிங்க் இருக்கு என பதில் அளித்தேன்.
மேடையில் அமரும் வரை படபடப்பு இருந்தது. ஆனால் அந்த நாற்காலியில் உட்கார்ந்த போது இல்லை. போஜராஜன் வேட்டைக்கு போகும் போது ஒரு விவசாயியை சந்திப்பான். அவன் மேட்டில் இருக்கும்போது படைவீரர்களை தோட்டத்தில் இளைப்பாற அழைப்பான். இறங்கி வந்தவுடன் துரத்துவான். ஏன் என ஆராய அந்த மணல்மேட்டை தோண்டினால் அங்கு ஒரு சிம்மாசனம் இருக்கும்.. அது விக்ரமாதித்யன் அமர்ந்த சிம்மாசனம். விக்ரமதித்யன் கதை இப்படித்தான் துவங்கும். அதுபோலத்தான் அந்த நாற்காலியும். நாஞ்சில்நாடன் முதல் சரவணன்சந்திரன் வரை அமர்ந்திருந்த நாற்காலி. ஏறும் வரை இருந்த படபடப்பு அமர்ந்த பின் இல்லாமல் ஆனது. தம்மம் தந்தவன் மற்றும் ஆள்தலும் அளத்தலும் தொகுப்பு மற்றும் நான் எழுதியிருந்த புத்தக மதிப்புரை மற்றும் அபுனைவு கட்டுரைகளிலிருந்து கேள்விகள் வந்தன. அனைத்து கேள்விகளையும் நேரடியாகவும் நேர்மையாகவும் எதிர்கொண்டேன்.
அதன் பின்னர் சுஷில்குமார், ஜா.தீபா செந்தில் ஜெகன்னாதன், பா.திருச்செந்தாழை ஆகியோரின் அமர்வுகள் நிகழ்ந்தன. அவர்கள் அனைவரும் உரையாடல்களை கொண்டு சென்ற விதம் சிறப்பாக இருந்தது. ஆங்காங்கு கைத்தட்டல்களும் எழுந்தன. அந்த அமர்வுகளை முறையே அவற்றை சுரேஷ் பாபு, இரம்யா, சந்திரசேகர், கிருஷ்ணன் ஆகியோர் மட்டுறுத்தினர்.
அதற்குப்பிறகு அன்றைக்கான கடைசி அமர்வு. சோ.தர்மன் எனும் பாணனின் அமர்வு. பேசினாரு சிரிப்பலை கரகோஷம் ரிப்பீட்டு என சென்றது. எனர்ஜிடிக்காகவும் யோசிக்க வைப்பதாகவும் இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் அடுத்த கேள்வி என்ன என அவர் ஜி.எஸ்.எஸ்.வி நவீனை பார்க்க அவர் என்னை ஏன் சார் டிஸ்டர்ப் பண்றீங்க நீங்களே ஏதாவது பேசுங்க சார் என்றார்.
அனைத்து உரையாடல்களிலும் எழுத்தாளர் அமிர்தம் சூர்யா கேள்விகள் எழுப்பினார். விக்னேஷ் மற்றும் இரம்யா ஆகியோரும் அனைத்து அமர்வுகளிலும் தீவிரமாக பங்காற்றினர். வருங்காலத்தில் எழுத்தாளர்களாக வரக்கூடும். அரங்கா மீனாம்பிகை ஸ்ரீநிவாசன் சார் சுதா மேடம் பிரசாத் ஷிமோகா ரவி அண்ணன் விஜயகிருஷ்ணன் ஆகியோர் வரவில்லை. அவர்களை மிஸ் செயதேன். வாட்சப்பில் பேசினாலும் நேரில் பேசுவது போல வராது. ஆனந்த்குமார் மற்றும் சுஷில்குமாரின் புத்தகங்கள் வெளியாயின. சீர்மை, தமிழினி, அழிசி, பாரதிபுத்தகாலயம், தன்னறம், யாவரும், விஷ்ணுபுரம் என ஏழு பதிப்பாளர்களின் ஸ்டால்கள் அரங்கில் இருந்தன. கலந்துகொண்ட வாசகர்களின் எண்ணிக்கையும் எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் எண்ணிக்கையும் விஷ்ணுபுரம் விருது விழா ஒரு திருவிழாவாக ஆகிக்கொண்டிருப்பதற்கான சான்று.
No comments:
Post a Comment