Monday, April 8, 2024

வினா 40 விடை 40




ஒவ்வொரு குடிமகனும் குடிமகளும் மூன்று தேர்தல்களில் வாக்களிக்கின்றனர். உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், மாநிலங்களைத் தேர்தல். இவற்றில் தனது அடிப்படைத் தேவையான சாலை வசதி மின்கம்பம் கழிவுநீர் கால்வாய் போன்ற அன்றாட அல்லல்களுடன் தொடர்புடையது உள்ளாட்சித் தேர்தல். ஆகவே நாம் கவுன்சிலரை தேர்ந்தெடுக்கும் போது கட்சிக்கு அப்பாற்பட்ட ஒருவரைத் தேர்ந்தெடுக்க முகாந்திரம் உள்ளது.  இதைத் தவிர மற்ற இரு தேர்தல்களும் சித்தாந்தம் சார்ந்தவையாக உள்ளன. இதில் மேற்சொன்ன சாலை குடிநீர் முதல் கல்வி வேலை வாய்ப்பு நெடுஞ்சாலைப் போக்குவரத்து என சிறிது முதல் பெரிது வரை ஒவ்வொருவரும் சார்ந்திருக்கும் பிற அனைத்தும் இந்த இரு தேர்தல்களில் வரும் அரசுகள் இயற்றும் ஆணைப்படி நிகழ்கின்றன. நிர்வாகம் சார்ந்த மேற்சொன்ன பிரச்சனைகளைக் கையாளுவது என்பது எந்த அரசுக்கும் பொதுவானதாக உள்ளது. இதில் சாலையை அமைக்க வேண்டும் என்று ஒரு அரசும் மக்களுக்கு சாலை வசதி கூடாது என இன்னொரு அரசும் சொல்லப் போவதில்லை. 

இங்கு ஆதார் பான்கார்டு பொருளாதாரக் கொள்கை என இவை எதற்கும் எந்த ஒரு தேசியக் கட்சியும் பெருமை கொள்ள இயலாது. ஒருவர் வலியுறுத்திதை மற்றவர் கொண்டு வருவதும் மற்றவர் கொண்டு வந்ததை இவர் தீவிரப் படுத்துவதும் என ஒரு ரிலேரேஸ் போல தொடர்ச்சியாக முன்னோக்கி செல்வதுதான் நிகழ்கிறது.

ஆகவே நமது அடிப்படைத் தேவைகள் தாண்டி ஒரு அரசு அமைய வேண்டும் என்றும் இன்னொரு அரசு அமையக் கூடாது என்று நாம் விரும்ப அடிப்படைக் காரணமாக இருப்பது நமது சிந்தனையின் பாற்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்த காரணிகளே தவிர வேறு காரணங்கள் முதன்மையானவை அல்ல. அந்த வகையில் பாராளுமன்றத் தேர்தல் என்பது ஏற்கனவே இருக்கும் விதிகளை  நிர்வாகிக்கவும்  அடிப்படை வசதிகளுக்கானது என்றும் நாம் கருதுவோமேயானால் அந்தப் பெருமை அந்த நிர்வாகத்தையும் அடிப்படை வசதிகளையும் அளித்து வரும் அரசு அதிகாரிகளிக்கும் அலுவலர்களுக்கும்  உரித்தானது. அவர்களை மேற்பார்வையிடும் செயலாளர்களுக்குமானது.  

தேர்தலில் இலவசங்களோ வாக்குறுதிகளோ ஒரு கட்சிதான் அளிக்கிறது என்றோ இன்னொரு கட்சி அளிக்காது என்றோ பிரித்துப் பார்க்கவியலாது. ஒரு கட்சிதான் வாக்காளர்களுக்கு பணம் அளிக்கிறது என்றோ இன்னொரு கட்சி அளிப்பதில்லை என்றோ கூட செய்திகள் வருவதில்லை.

ஆகவே நிர்வாகம் கட்டமைப்பு வசதிகள்  வாக்குறுதி போன்றவற்றில் ஒரு கட்சியும் இன்னொரு கட்சியும் மாற்றுக் கருத்து கொள்வதில்லை. 


ஆகவே வாக்காளரின் மனச்சாய்விற்கு  கொள்கைகள் முக்கிய இடத்தை எடுக்கின்றன. ஒரு கட்சியின் சித்தாந்தம் வாக்காளருக்கு ஏற்புடையதா அது நமது மனவோட்டத்தற்கும் நம்பிக்கைக்கும் ஒத்திசைவாக உள்ளதா எனக் காண்பதே பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளரின் அடிப்படைக் காரணமாக உள்ளது. அதன் மீது வாரிசு அரசியல், ஊழல், மதவாதம், வளர்ச்சி, அண்டை நாட்டுடனான உறவுக் கொள்கை போன்ற காரணங்கள் பூசப் படுகின்றன. இத்தகைய காரணங்களின் வழியாக முதற்காரணம் இன்னமும் உன்னதப் படுத்திக் கொள்ளப் படுகிறது.


தனது சனாதன தர்மத்தை எதிர்த்து செயல்படும் அசுர அரசை எதிர்த்து வென்றது இராமாயாணமாக உள்ளது.  ஏற்கனவே நிலைபெற்ற தூய சத்ரிய குருதி வம்சத்தை எதிர்த்து பாண்டவர்கள் பெற்ற வெற்றி என்பது மகாபரதப் போராக ஆகிறது. தேவ அசுரப் போர் என்றும், அண்ணன் தம்பி போர் என்றும் நாம் வாசித்த இதிகாசங்களும்  நெறிகளுக்கு இடையிலான போராகவே இருப்பதையும் காணலாம். அது அதிகாரத்திற்கான நேரடிப் போர் என்பதால் குருதி சிந்தி் எட்டப் பட்டது.  நாகரீக உலகில் தேர்தல் என்பது அதே அதிகாரத்திற்கான போரின் மற்றொரு வடிவம். அதை முடிவு செய்வதில் பிற கருப்பொருட்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.



ஊழல், இயற்கை வளங்களின் மீதான மாநிலங்களின் உரிமை மறுக்கப் படுதல், சாதாரண குடிமக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப் படுதல், சுற்றுச் சூழல் சார்ந்த கொள்கை முடிவுகள், கல்விக் கொள்கைகள், அண்டை நாடுகளுடனான உறவு, நம்முடன் வணிக உறவில் நெருக்கமாக உள்ள நாடுகளுடனான உடன்படிக்கை, எரிபொருள், உணவுப்பொருள் விலையும் மக்களின் வாங்கும் திறனும் எனப் பல காரணிகள் ஒரு சாதாரண காலத்தில் ஒரு  அரசைத் தேர்ந்தெடுக்க தர்க்க ரீதியான காரணங்களாக அமைகின்றன. அசாதாரண காலங்களில் தர்க்கத்தை மீறிய காரணிகள் அமைந்து விடுகின்றன. எமர்ஜென்ஸிக்குப் பிறகான ஜனதாதள ஆட்சி அவ்வாறு அமைந்தது. ராஜீவ் கொலைக்குப் பிறகான காங்கிரஸ் ஆட்சி அவ்வாறு அமைந்தது. நிலையற்ற மூன்று பிரதமர்களைக் கண்டு, பின்னர் 'நிலையான ஆட்சி திறமையான பி்ரதமர்'  என்கிற பி்ரசாரத்தோடு மீண்டும் வாஜ்பேயி பிரதமரனதும் நிகழ்ந்தது. அந்த வரிசையில் இறுதி நிகழ்வாக  ஊழல் குற்றச் சாட்டுக்கள் குறித்து அவப்பெயரைச் சேர்த்துக் கொண்ட காங்கிரஸ் ஆட்சிக்குப் பின் பாஜக ஆட்சி அமைந்ததைக் கூறலாம். 


தற்போது நிகழும் பாராளுமன்றத் தேர்தல் அத்தகைய ஒரு ஒற்றைப்படை மனநிலைக்கு மக்களை இட்டுச் சென்று தர்க்கத்தை மீறிய ஒன்றாக மக்களை ஒருநிலைப் படுத்துமா என்கிற கேள்வி எழுகிறது. வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் நம்முடைய கண்முன் இரு கட்சிகள் உள்ளன. ஒன்று, மோதியைத் தலைமை வேட்பாளராகக் கொண்ட பாஜக தலைமையிலானது மற்றது காங்கிரஸ் ஒருங்கிணைத்துள்ள இன்னமும் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படாத இண்டியா கூட்டணி. இப்போது இது அறிவுத் தளத்தில்,    இந்துத்துவ அடிப்படைவாத மனநிலை கொண்ட பாஜகவிற்கும் அதை எதிர்க்கும் பன்மைவாத மனநிலை கொண்ட இண்டியா கூட்டணிக்குமான மோதல் என்கிற விவாதமாக மட்டுமே எழுந்து நிற்கிறது. 

முன்பு திமுக தன்னுடை முதல் அரசினை அமைத்தபோது அதனுடன் கூட்டணியில் இருந்த இராஜாஜி பிராமணர்களிடம் வைத்த வேண்டுகோள் பிரசித்தமானது எனக் கூறுவர். பிராமண எதிர்ப்பு மனநிலை கொண்ட திமுகவுக்கு வாக்களிக்க பிராமணர்கள் தயங்க அவர்களிடம் ஒரு கையில் பூணூலைப் பிடித்துக் கொண்டு மறு கையால் திமுகவிற்கு வாக்களியுங்கள் என்று இராஜாஜி கேட்டுக் கொண்ட செய்தி அது.  அத்தகைய இடத்தில் இன்று நிற்பவர்களாக தமிழ்த் தேசியவாதிகளும் அமைப்பு சாரா இடதுசாரிகளும் உள்ளனர்.


வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்ட விவாதங்களில்  இந்துத்துவ எழுச்சியைக் எதிர்க்கும் நோக்கம் இருந்தாலும் தமிழ்த்தேசிய கொள்கைபாற் பட்டவர்களுக்கு ஒரு நெருடல் உள்ளது. ஈழப்போரின் உச்சகட்டக் காலத்தில் ஈழப்படுகொலைக்கும் தமிழ்  மக்களின் புலம்பெயர்தலுக்கும் துணைநின்ற காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்கு தற்போது எவ்வாறு வாக்களிப்பது என்கிற கேள்வி அது. அது சார்ந்த உணர்ச்சிகரமான தர்க்கப்பூர்வமான நாற்பது கேள்விகளும் அதற்கான பதில்களும் இதில் உள்ளன.  கேள்விகளை நலங்கிள்ளி எழுப்ப தோழர் தியாகு அதற்கு தனது பதில்களை எழுதுகிறார். தமிழ்த் தேசியர்கள் இந்தமுறை காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற நிலைபாட்டின் எதிர்வினையாக கேள்விகளும் அதற்கான பதில்களும் உள்ளன. 





இறந்த காலத்தில் பெற்ற காயமும், எதிர்காலம் பற்றிய ஐயமும்,  நிகழ்கால அச்சமும் கொண்ட கேள்விகளும் அவற்றை அவ்வாறே ஏற்றுக் கொண்டும் அதில் தற்போது செய்ய இயலுவது என்ன என்பதை எடுத்துக் கூறும் பதில்களும் உள்ளன. பதில் அளிப்பவர் மீதான உரிமையுடனும் நட்புடனும் கேள்விகளில் கேலியும் குத்தலும் வைத்தே கேட்கிறார். அவற்றிற்கு பதில் உரைக்கையில் பதிலுக்கு அத்தகைய உணர்ச்சி கலவாமல் தன்னிலை விளக்கமாகவும்  தனது திட்டங்களின் வெளிப்பாடாகவும் பதில் உரைக்கிறார். இரு பதில்களில்  கூறியதே கூறுவதால் உருவான எரிச்சல் தொனி பதிவாகியிருப்பது வாசிப்பில் தோன்றாமல் இல்லை.


கேள்விகளில் நியாயம் இருக்கிறது. அதைக் கண்ணகிக்கு இருந்த நியாயம் என்று கருதலாம். பழைய கோபமும் வஞ்சிக்கப்பட்ட வன்மமும், பல அனுபவங்களின் ஊடாக உண்டான அவநம்பிக்கையும் கொண்டுள்ளன. பதில்கள் வரலாற்று நோக்கு உடையவையாகவும் நீண்டகால நோக்கு உடையவையாகவும் உள்ளன என்பது சிறப்பானது.


இந்த உரையாடல்களில், லெனினிய நிலைப்பாடடை ஆதாரமாகக் கொண்டு  தேர்தல் புறக்கணிப்பு துவங்கி நோட்டா ஆதரிப்புக்கு வந்து தற்போது பாஜக எதிர்ப்பு காரணமாக எதிர்க்கட்சியை ஆதரிக்கும் வரை வந்த பயணம் உள்ளது. அதனுடன் ஒரு குற்றத்தை உணர்ச்சி வசப்பட்டு அணுகுவதும் தர்க்க ரீதியாக அணுகுவதும் கலந்தே வருகின்றது. இனவழிப்புக் குற்றவாளிகளை மன்னிக்கலாமா என்கிற கேள்விக்கான பதில் உள்ள இந்த பத்தியை உதாரணமாக கூறலாம். 


//இனவழிப்புக்கு நீதி என்பதன் சிறு பகுதிதான் தனிக் குற்றவாளிகளுக்கு எதிராகக் குற்றத் தீர்ப்பு வழங்கப்படுவதும் அவர்கள் தண்டிக்கப்படுவதும். இது குற்றவியல் நீதி! குற்றமிழைத்த அரசு தண்டிக்கப்படுவதுதான் அரசியல் நீதி! அரசியல் நீதிக்குத் துணை நில்லாத குற்றவியல் நீதியால் பயனில்லை. இட்லர் தண்டிக்கப்பட்டு நாசிச அரசு ஜெர்மனியின் நீடித்திருந்தால் எப்படி இருக்கும்? ஸ்லொபதான் மிலொசெவிக் தண்டிக்கப்பட்டு யுகொஸ்லாவியாவில் செர்பியப் பேரினவாத ஆதிக்கம் நீடித்திருந்தால் எப்படி இருக்கும்? இராசபட்சர்கள் தண்டிக்கப்பட்டு சிங்களப் பேரினவாதம் நிலைத்து நீடித்தால் எப்படி இருக்கும்?

 

இராசபட்சர்கள் தண்டிக்கப்படுவது ஈழத் தமிழர் இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி பெறுவதன் அடையாளம்தான். சிங்கள பௌத்தப் பேரினவாத அரசக் கட்டமைப்பு தகர்க்கப்பட்டுத் தமிழீழம் இறைமை மீட்பதே குற்றவியல்  நீதியின் நிறைவாகிய அரசியல் நீதி, அதாவது இனவழிப்புக்குக் காரணமான அரசக் கட்டமைப்பைக் கலைத்து இனவழிப்பின் மீள்நிகழ்வைத் தடுப்பது (non-recurrence) ஆகும்.

 

இந்த வரலாற்று அரசியல் பார்வை இல்லாமல் இனவழிப்புக் குற்றவாளிகளை வெறும் பழிக்குப் பழி நோக்கில் நாம் தண்டிக்கத் துடிக்கவில்லை. இராசபட்சர்கள், சோனியாக்களுக்கு எது தண்டனை? சிங்களப் பேரினவாதமும் இந்திய வல்லரசியமும் தமிழீழ விடுதலையைத் தடுக்கும் முயற்சியில் தோற்றுப் போகும் படி செய்வதுதான். ”உலகில் தமிழர்க்கு ஒரு கொடி கிடைக்கக் கூடாது என்றுதானே இனவழிப்புச் செய்தாய், இதோ அசலும் வட்டியுமாக இரு கொடிகள் உயர்த்துவோம்” என்று நான் பேசுவதன் பொருள் இதுதான். நீதிக்கான இயக்கம் என்பது இன்று விடுதலைக்கான இயக்கத்தின் ஒரு கட்டம்தான். விடுதலைக்கான இயக்கத்துக்கு அப்பால் நீதிக்கான இயக்கம் எதுவும் இல்லை.//



குறுகிய கால இலக்கு நீண்ட கால இலக்கு என இரு காரணிகள் உள்ளன. தியாகுவிற்கு நீண்டகால இலக்கு என்பது இருக்கிறது. அதற்கான ஒரு குறுகியகால இலக்காக காங்கிரஸ் திமுக ஆதரவினை முன்மொழிகிறார். எமர்ஜென்ஸி காலத்தில் அனைவரும் ஒன்று கூடி இந்திரா காந்தியை தோல்வியுறச் செய்தது  போல தற்போது மோதியைத் தோற்கடிக்க வேண்டும் என்பது அவருடைய கருத்தாக உள்ளது. 

இதற்கு முன் எமர்ஜென்ஸியில் கடுமையாக பாதிக்கப்பட்ட திமுகவே அதற்குப் பின்னர் இந்திரா காந்தியுடன் கூட்டணி அமைத்தது ஒரு எதிர்பாரா திருப்பம். இவ்வாறு திமுகவின் முரண்களை சான்றுகளுடன் சுட்டிக் காட்டி எழும் கேள்விகளுக்கு சமாளிப்பு ஏதுமின்றி அரசியல் போக்குகள் அடைவு பெற்ற மெய்ம்மைகள் ஆகியவற்றை வைத்து கூறும் பதில்கள் ஒருவிதத்தில் அரசியல் சுருக்கவுரைகள் எனக் கருதத் தக்கவை. திமுகவும் அதிமுகவும் காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் இணைவது என்பது மாநிலத்தில் தனது போட்டிக் கட்சியை பழிவாங்கவும் தனது அதிகாரத்தை தக்கவைப்பதுமேயன்றி வேறு காரணங்கள் இல்லை. ஆனாலும் திமுக பாஜக கூட்டணி என்பது இயற்கைக்கு மாறான கூட்டணியாகவும் அதிமுக பாஜக கூட்டணி என்பது இயற்கைக்கு உகந்த கூட்டணியாகவும் நடைமுறையில் திகழ்ந்ததை   சுட்டுவது ஒரு நல்ல தர்க்கம்.


இது நூலாக வடிவம் பெற்றதால் முழுமை கூடியுள்ளதா எனப் பார்க்க வேண்டும். இரு காரணிகள் உள்ளன. முதலாவது, கேள்விகள் கேட்டுள்ள நலங்கிள்ளி  அதற்குப் பின்னர் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்று அறிவித்துள்ளார். ஆகவே அவர் இந்த பதில்களால் திருப்தியுறவில்லை என தெளிவாகிறது. ஆகையால் அவர் ஏன் இன்னமும் அது ஏற்புடையதல்ல என குறிப்பிட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. கேள்வி பதில் பொதுவாக நிகழ்வதால் அந்த உரையாடல் தனக்கான தரப்பை முன் வைத்திருத்தல் நலம். இங்கு கேள்விகள் பொதுவாக அத்தகைய நிலைத்தன்மை இல்லாது சில இடங்களில் தர்க்கமும் சில இடங்களில் தனிநபர் சீண்டலும் கொண்டுள்ளன.  ஆனால் பதில்கள் அத்தகைய பொது நோக்கைக் கொண்டுள்ளன.


இரண்டாவதாக, இருவருக்கிடையேயான உரையாடல் நூலாகத் தொகுக்கப்படுவதன் நோக்கம் அந்தக் குழப்பம் கொண்ட வாசகர்களின் தெளிவிற்காகவும் எனக்கொள்ளலாம். அந்த வகையில் இதன் வாசகர்கள் யார் என முடிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. கேள்வி கேட்பவரும் பதில் உரைப்பவரும்  உறுதியாக வலதுசாரி சிந்தனையாளர்கள் அல்லர். ஆகவே தற்போதைய அரசின் செயல் திட்டங்களில் ஏற்பு உடையவர்களுக்கு இந்தக் கேள்வி கேட்பவருமே அந்நியர்தான் என்பதால் இதனுடைய வாசகர்கள் தமிழ்த்தேசியர்களும் குறிப்பிட்ட சில இடதுசாரித் தரப்பினரும் என சுருங்கி விடுகிறது. அது இந்த நூலின் பரப்பைக் குறுக்கி விடுகிறது. இன்று இந்துத்துவர் அல்லாத, பாஜகவினர் அல்லாத,  அதேநேரம் மீண்டும் பாஜக அரசு அமைந்தால் என்னவாகிவிடும் என்று கேட்கிற, சாமானிய மக்கள் உள்ளனர்.  அந்த மக்களின் சார்பாக கேள்விகளை  எழுப்பவில்லை. அடிப்படை வசதிகள் அதைத் தாண்டிய மின்னணு வர்த்தகம் உள்ளிட்ட பிற வசதிகள், தேசத்தின் வளர்ச்சி, பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகள் பாஜகவால் முன்வைக்கப் படுகின்றன. வளர்ச்சி, குஜராத் மாடல், ஊழலுக்கெதிரான அரசு  என பாஜக முன்வைக்கும் பிற  காரணிகள் தான் பொதுமக்கள் முன் பாஜக அரசு வைக்கும் கருத்துக்களாக உள்ளன. அவற்றை வைத்து எழும் கேள்விகளை கேட்பதும் அதற்கு தியாகு போன்று  அரசியல் அறிவும் கள அனுபவமும் மொழித் தேர்ச்சியும் கொண்ட ஒருவரின் பதிலும் பதிவு செய்யப் படுவது நன்றாக இருக்கும். வருகின்ற தேர்தல் என்கிற குறுகிய கால இலக்கை மனதில் வைக்காமல் மீது  நீண்டகால இலக்காக  மக்களின் அடிப்படை விழுமியங்கள் மீதான உரையாடலாக அவை இருத்தல் நலம் பயக்கும். இந்த நூலில் அதற்கான புள்ளிகள் உள்ளன. ஆனால் உரையாடலின் மையம் வேறு ஒன்று என்பதாலும் தற்போதைய தேர்தல் சூழல்களாலும் அவை விவாத நோக்கில் விலகியுள்ளன.

No comments: