Monday, April 8, 2024

உடைத்தெறியும் கலைஞி

கீரனூர் ஜாகீர் ராஜாவின் வடக்கேமுறி அலிமா குறித்த கட்டுரை ( மயிர் இதழில் வெளியானது. )





(1)



நவீன இலக்கியத்தின் வருகை என்பதே ஒரு கலகச் செயல்பாடுதான் என்று கூறலாம். அதுவரை நடைமுறையில் உள்ள விதிகளை மாற்ற அறைகூவல் விடுகிறது. இனி ஒரு விதி செய்வோம் என்று அழைக்கிறது. ஆனால் அந்த லட்சியவாதத்தில் போகப் போக ஒரு தேக்கம் வந்துவிட்டதையும் காண்கிறோம். அல்லது அதன் மீது ஐயம் வருகிறது. கலை இலக்கியத்தில் அடுத்தகட்ட நகர்வு என்பது முந்தையதன் மீதான ஒரு நம்பிக்கையின்மையின் வழியாக எழுந்து வருகிறது. முந்தையது காலப்போக்கில் நீர்த்துப் போயிருக்கலாம் அல்லது நிகழ்காலம் அதைக் கடந்து வந்திருக்கலாம். உதாரணமாக நதிக்கரையில் தினசரி அனுஷ்டானங்களை மேற்கொண்ட சமூகம் மெல்ல அலுவலகப் பணிகளுக்கும் காலமாற்றங்களினால் பெரு நகரங்களுக்கும் நதியில்லாப் பகுதிகளுக்கும் புலம் பெயர்ந்து செல்ல  நேரும்போது அங்கு சித்தாந்த ரீதியானதும்  சடங்கு சார்ந்ததுமான சிக்கல்கள் உருவாகின்றன. நவீன உலகில் இரவுப் பணிக்கு அல்லது அதிகாலைப் பணிக்கு செல்ல வேண்டியவர் அதன் பொருட்டு இதுவரையிலான தனது அன்றாடத்தை மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது.  பாரம்பரியத்தை போற்றி வரும் அனைத்து சமூகத்திற்கும் இது ஒரு குழப்பத்தை வரவழைக்கிறது. அதிலிருந்து மேலெழ தன்னை மீளுருவாக்கம் செய்து கொள்கிறது. அதுவரைக்குமான தனது விழுமியங்கள் அறம் ஆகியவற்றை மீளுருவாக்கம் செய்து கொள்கிறது. இவ்வாறாக, இலக்கியத்தின் பேசுபொருளுக்கு புறக்காரணிகள் பெரிய பங்கு வகிக்கின்றன.


இந்த மாற்றம் என்பது இலக்கியக் கர்த்தாவிற்கு முக்கியமான கச்சாப்பொருள் என்று சொல்லலாம். அதை வைத்தே தனது தர்க்கங்களைக் கட்டியெழுப்புகிறார். அந்த விவாதம் மெய்யான கேள்வியை எழுப்பி ஆராய்கிறதா என்பதன் வழியகத்தான் அடுத்தகட்ட நகர்வு சாத்தியப்படுகிறது. தனித்தனி குழுவாக இருந்த மக்களை  தொழிற் புரட்சி மூலம் தொலைதூரப் பயணச் சாத்தியங்கள் மூலம் ஒன்றிணைத்த அறிவியல் அவர்களுக்கு மனதளவில் ஒரு தயக்கத்தையும் உருவாக்கி வைக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை. ஆகவேதான் இதையொட்டி பழமை / சாஸ்திரத்திற்கும் புதுமை/யதார்த்தத்திற்கும் இடையில் ஒரு முரணியக்கம் உருவாகிறது. அதன் தாக்கம் சுற்றிவரப் பரவுகிறது. ஒருவகையில் தனித்து இருக்கும் உலகிலும் இது ஊடுருவ முயல்கிறது. இதனுடைய பிரதிபலிப்பைத் தான் இலக்கியமும் தத்துவமும் முன்னெடுக்கின்றன. ஓவியக்கலை என்பது நேரடி ஓவியமாக இருந்து பிறகு புகைப்படக் கலையின் வருகைக்குப் பிறகு நவீன ஓவியமாக புதிய பரிணாமம் எடுக்கின்றன. அதுவரை கண்ணுக்கு விருந்தளித்த ஓவியத்தை அதன்பின் வாசகர் யோசித்து உள்வாங்க வேண்டியிருக்கிறது. ஓவியம் இசை போலவே அதை இலக்கியத்திலும் காண முடிகிறது. புளியமரத்தின் கதை நாவலை நேரடியாக வாசிப்பதற்கும் தன் குறியீடை உணர்ந்து வாசிப்பதற்குமான வேறுபாட்டை வாசகர் உணர்கிறார். 


மரபிலக்கியம் வீரர்களை தெய்வங்களைப் பேசுகிறது என்றால் நவீன இலக்கியம் சாதாரண மனிதர்களைப் பேசுகிறது. மதங்கள் கொண்டிருக்கும் அதிகாரத்தை சாதாரண மனிதர்களின் விழுமியங்களோடு பொருத்துகிறது. எதையும் அறிவுகொண்டு ஆராய்ந்து விளங்குதலும் கூடவே பகுத்தறிவின் எல்லை மற்றும் தர்க்கத்தின் எல்லை என அதையும் கேள்விக்கு உள்ளாக்கி அதற்கு அப்பாலாக உள்ள உள்ளுணர்வுகளைக் கொண்டும் அறிதல் என்று நவீன இலக்கயம் முன்னெடுத்துச் செல்கிறது. நவீனத்துவம் அறிவியல் மூலம் மக்களை இணைத்தலும் நேர்மாறாக ஒவ்வொரு தனிமனிதனையும் தனியனாகவும் ஆக்கியிருக்கிறது என்பதும் அதன் மற்றொரு கூறாக உள்ளது. குலம், குழு, கூட்டம், குடும்பம் போன்ற விழுமியங்கள் தகர்ந்து தான், தனது தர்மம், தன்னுடைய பிறவியின் நோக்கம் என்று தனிமனித மையமும் நவீனத்துவத்தின் விளைவாகவே சாதாரண மக்களிடமும் வந்து சேருகிறது. அதன் இறுதி எல்லையாக இருத்தலிய சிக்கல் எழுந்து வருகிறது. குழுவாக இருத்தல் அல்லது தனியனாக தன்னறத்தை முன்னெடுத்தல் என்கிற குழப்பம் அதைத் தாண்டி தன்னிரக்கம் மனச்சிதைவு போன்ற உளவியல் பாடுகளும் வந்து சேர்ந்ததையும் கொண்டு நவீனத்துவத்தின் காலகட்டத்தை மதிப்பிடலாம். அதனுடைய தொடர்ச்சியாக வந்த பின்நவீனத்துவ காலகட்டம் அதன் முந்தைய வடிவமான நவீனத்துவம் எழுப்பிய சில விழுமியங்களை விடாமல் முன்னெடுத்தும் அதன் சில அடிப்படைகளை நிராகரித்தும் செல்வதைக் காண்கிறோம். அதன் இலக்கிய வடிவத்தில் தனித்தலையும் மனிதன், அதிகாரத்தின் முன் செயலற்று நிற்கும் மனிதன், தனக்கென அடையாளமற்று இருக்கும் பெண்கள், சிறுபான்மை மக்கள், ஒதுக்கப்பட்டோர் என அனைவரையும் தனக்குள் அடக்கிக் கொள்கிறது. அதற்கு அது தனது கூறுமுறையை முக்கிய ஆயுதமாகக் கையில் எடுத்துக் கொள்கிறது. முன்பின்னான மாறுபட்ட கூறுமுறை,  நவீனத்துவம் கொண்டுவந்த இலக்கணங்களை மீறுதல், தடுக்கப்பட்ட வரிகளை புறக்கணிக்கப்பட்ட சொல்லாட்சிகளைக் கையாளுதல் அதிகாரத்தை நிராகரித்தல் உன்னதங்களைப் பகடிசெய்தல் என்று அது எந்த வரைமுறைகளுக்குள்ளும் அடங்காது வெளிப்படுகிறது. 


கீரனூர் ஜாகீர் ராஜாவின் எழுத்துக்கள் இதன் கூறுகளுக்கு பொருத்திப் போகின்ற படைப்புகளாக இருக்கின்றன.  விளிம்புநிலை கலைஞர்களின் வாழ்க்கையைக் கூறும் கதைகள், உலகமயமாக்கலால் கைவிடப்பட்டவனின் கதைகள், தன்னகங்காரம் கொண்டு எழுவதால் கட்டுப்படுத்தப் பட்டவனின் கதைகள் என இவரது பாத்திரங்களை வரையறுத்து விடலாம். ஆங்காங்கு தெறித்து விழும் அங்கதமும் உண்டு.  உதவி இயக்குநர்கள் ஆங்காங்கு 'சீன் சொல்லி' இரவுணவை மதுவை ஏற்பாடு செய்துகொண்டு ஜீவிக்கும் கதையில் கதவைத் திறந்த நண்பனின் மூச்சுக் காற்றில் மதுவீச்சம் அடிப்பதை உணர்ந்து, 'சமூகம் தனக்கு முன்பாகவே சென்று விட்டது' என்று கதைசொல்லி நினைத்துக் கொள்கிறான். ( தேய்பிறை இரவுகளின் கதைகள்). நட்பு காதல் பரிவு அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கும் கதைகளும் அவரது பிற்காலத் தொகுப்புகளில் உள்ளன ( ஹலால் சிறுகதை தொகுப்பு ). இந்தச் சிறுகதை தொகுப்புகளின் நீட்சியாகவே அவரது அலிமாவும் வருகிறாள்.






(2)


இந்த நாவலையும் உள்ளடக்கி, கீரனூர் ஜாகீர் ராஜவின் பிற்காலக் கதைகளில் பொதுவான அம்சமாக நான்கு கூறுகளைக் காணமுடிகிறது. 1) மதங்களும் அமைப்புளும் கொண்டிருக்கும் அதிகாரத்தைக் கேள்விகேட்டல் 2) கலையுலகிலும் இலக்கிய உலகிலும் உள்ள காழ்ப்புகளை வெளிக்காட்டுதல் 3) உதிரிகளையும் முக்கியப் பாத்திரமாக சித்தரித்தல் 4) படைப்புக்குள்ளாகவே பிரதியையும் எழுத்தாளரையும் ஐயப்படுதல். இந்தப் பண்புகளை முழுதும் பின்நவீனத்துவ குணங்கள் என்று சொல்லலாம். அவர் செய்வது ஒருவகையில் சிதறடித்தலும் மீள்கட்டுமானமும்தான் என்றாலும்  அதன் வழியாக வாசகர் பெறுவது உணர்ச்சி வேகமோ அல்லது கலைத்துப் போட்டப் பெருமிதமோ அல்ல. அதனூடாக அவரது பாத்திரங்கள் வாசகருக்கு இன்னும் அண்மையாகிறார்கள். அவரது பெரும்பான்மையான கதைகளில் இஸ்லாமிய மக்களின் வாழ்க்கைப்பாடு பேசுபொருளாக இருக்கிறது. அதன் ஊடாக அவருக்கு "கட்டுடைக்கக்" கிடைப்பது என்னவாக இருக்கும் என்பது ஆராயத் தக்கது. தமிழிலக்கியத்தில் மிகவும் குறைவாகப் பதிவுசெய்யப் பட்டவைகளில் இஸ்லாமிய வாழ்க்கையும் ஒன்று. துவக்கத்தில் சொன்ன உதாரணத்தைப் பொருத்திப் பார்க்கும் பொழுது கும்பகோணத்திலிருந்து பிராமணர்கள் மும்பை சென்னை டெல்லி என புலம் பெயர்ந்து சென்றபோது தங்களது தினசரி அனுஷ்டானங்கள் குறித்த சிக்கலை  அவர்கள் எதிர்கொண்ட விதங்களை திஜா, இ.பா முதல் சுஜாதா பாலகுமாரன் வரை அனைவரும் எழுதியிருக்கிறார்கள். இதைச் சார்ந்த ஒரு படைப்பைக் கட்டுடைப்பது என்று வரும்பொழுது அதன் பல்வேறு கோணங்கள் குறித்த பார்வை வாசகருக்கு உருவாகியிருக்கிறது. ஆனால் அதுபோல் இஸ்லாமிய வாழ்வியல் பிரதியை அணுகும் பொழுது அதன் பிற கோணங்கள் பெரிதளவில் பதிவு செய்யப் படவில்லை. இங்கு இருக்கும் பார்வையில்  உலகலாவிய அளவில் ஊடகங்கள் வழி  உருவாகிய பார்வையும் இருக்கிறது. பொது ஊடகங்கள் எதிர்மறையாக சித்தரித்து வைத்துள்ள ஒற்றை மதவாத / தீவிரவாத அட்டையை எப்பொழுதும் கழுத்தில் மாட்டி நிற்கும் ஒரு சூழலை ஒவ்வொரு இஸ்லாமிய தனி மனிதனுக்குள்ளும் ஊடகங்கள் நுழைத்துவிட்டன. இனி சராசரி விருப்பு வெறுப்பு கலந்த மனிதர்களாக சித்தரிக்கவும்  இயலாத நிலையும் இருக்கிறது. இத்தகைய புறக்காரணிகள் சம்பந்தமின்றி கதைக்குள் நுழைந்து தரும் பார்வைக் கோணம் என்பது தற்காலச் சூழலில் தவிர்க்கவியலாதவையாகவும் இருக்கிறது. கீரனுர் ஜாகீர் ராஜாவின் எழுத்துக்கள் (அவை இருத்தலியலைப் பேசினாலும்) கலகக் கதைகள் என்று பிரசங்கம் செய்யப்படுவதற்கும் அவை காரணமாக அமைந்து விடுகின்றன


வடக்கேமுறி அலிமா ஒரு தேவதை அல்லது பைத்தியக்காரி அல்லது நடிகை அல்லது எழுத்தாளர். அவள் குறித்த பிறரின் மதிப்பீடுகள் என்று நாவலில் வருவது பைத்தியக்காரி, திருடி, கஞ்சா விற்பவள், கொலைகாரி  உள்ளிட்ட மொத்தம் பதிமூன்று குணங்கள். (ஒரு காட்சியாகப் பார்த்தால் அவர்  அவ்வாறு பட்டியலிட்டுக் கொண்டிருக்கும் போது அலிமா, பிண்ணனியில் அவள் தன் பையிலிருந்து  வாழைக்காய்  அப்பமும் நேந்திரங்காய் வற்றலும் எடுத்து தெருநாய்களுக்கு வீசிக் கொண்டிருக்கிறாள்).  விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவர்கள், சிறுபான்மை இன மக்கள், புறக்கணிக்கப் பட்டவர்கள் என மையத்தினால் ஒதுக்கப் பட்டவர்களின் குணநலன்களை இங்கு சுட்டியிருக்கிறார். இயல்பு நிலையில் இல்லாத மனிதர்களின் இயல்புகள். பொதுப் பார்வையில் உதிரிகள். ஒருபுறம் பிற பாத்திரங்கள் அவளை இழித்துரைத்துக் கொண்டே இருக்க ஆனால் கதைசொல்லி அவரை மீண்டும் மீண்டும் வேறு ஒன்றாக காண்பிக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறார். அலீமா தனது விளையாட்டுகளில் ஒன்றாக  கபர்ஸ்தானில் ( பிணங்கள் அடக்கம் செய்யப்படும் இடம்) புதிய மய்யத்துகள் ( பிணங்கள்) அருகே நின்று கொண்டு அவள் கேள்விகள் எழுப்புகிறாள். அந்தக் கேள்விகள் மரித்தவரை சுவர்க்கத்திற்கு இட்டுச் செல்லும் தேவதை கேட்டும் கேள்விகளாக இருக்கின்றன. தலைதெறிக்க ஓடாதடி என்று பிறர் கூச்சலிட, அலீமா பட்டாம்பூச்சியாக பறந்தாள் என்கிறார். அவள் அழிக்கோடு முஸ்லியாருடன் ஓடிப்போகிறாள். பின்னர் எழுத்தாளர், நடிகை என பிற பரிணாமங்களைப் பெறுகிறாள். அதன் ஒவ்வொரு வெளிப்பாடுகளிலும் அவளது இளமைக்கால அனுபவங்களும் வீட்டின் சுற்றுப்புறமும் துணை நிற்கின்றன






(3)


இந்தக் கதையை அலிமாவின் கதை என்று மட்டும் கவனித்தால் அவளைச் சுற்றிவர இருக்கும் மம்மது, அம்மா, அஸ்லியார், ஷேக், பாப்பம்மா என பிற பாத்திரங்களும் உருவம் கொண்டு எழுகின்றனர். ஒவ்வொருவரின் நிலைப்பாடும் கோடிட்டுக் காட்டப்படுகிறது. அஸ்லியார் இறுதியில் தனக்கும் சித்துவேலையைக் கற்றுத் தரும்படி கேட்கும் சிஷ்யனிடம், ' முட்டாள் என் மக்களை நான் ஏமாத்தறேன். நீ வேணா சர்ச்சுக்குப் போ பாதிரியாகு கொள்ளயடி ' என்கிறார். அவரிடமிருந்து அலீமாவை அழைத்துக் கொண்டு ஓடும் மம்மது தனது உடல் வலிமையைக் காட்டி மகிழ்ந்திருந்து பணம்பெறும் விபச்சாரனாக இருக்கிறான். எது நடந்தாலும் எதுவும் கடவுளின் ஆணைப்படியே நடக்கிறது என்ற அவள் தந்தை இருக்கிறார். விளையாட்டுத்தனமான அலிமாவை இழுத்து வரும் வீட்டினர், அவ்வாறு இழுத்து வரும்  போதெல்லாம் அவளது அங்கங்களை தீத்தீண்டலிடும் காசிம் என அலீமாவைச் சுற்றிலும் மதம், காதல், கட்டுப்பாடு, காமம் என்ற சிறையிலிருந்து விடுபட்டு ஓடும் அலிமா பித்தம் பிடித்துக் கரைந்து வேறொரு அவதாரம் எடுக்கிறாள். 


நேரியல்பற்ற நடையில் சொல்லிச் சொல்லப்படுகிறது அலீமாவின் கதை. அவளது பிறப்பு, இளமைப் பருவம் தவிர, எதிர்பார்ப்புடன் அவள் இணங்கிச் செல்லும் முஸ்லியாருக்கு பொருளாசை தவிர தன்மீது அன்பில்லை என்பதை உணர்ந்து அங்கிருந்து மம்மதுவுடன் வெளியேறி அவன் அவளிடமிருந்த பொருள்களைப் பறித்துக்கொண்டு ஓடியபின்னர் மனநோய் காப்பகம் சென்று தப்பி வந்து எழுத்தாளராவது என நான்கு பருவங்களின் தொகுப்பு இந்த நாவல். அவளுடைய மாற்றங்கள் பகடியாக சொல்லப்படுகின்றது. அவள் தன்னுடைய ஆக்கங்களை கழிப்பறை சுவற்றில் கிறுக்க பதிப்பாளர் அனைத்துக் கழிப்பறைகளாக சென்று அதைப்படியெடுத்துப் பதிப்பிக்கிறார். அதன் வழியாக அவளது படைப்பிற்கு 'முட்டைச்சிம்னி' விருது கிடைக்கிறது. ஆங்காங்கே சிதறுண்டு இந்த சித்திரங்கள் வெளிப்பட்டாலும் தனித்து  வரும் மூன்று அத்தியாயங்கள் சேர்கையில் அது முழு வடிவத்தை எட்டுகிறது. அவை அதில் வரும் எழுத்தாளரின் அத்தியாயங்கள். எழுத்தாளராய் அலிமா வரும் அத்தியாயம், அலீமாவின் பெரியப்பா அவளுடைய கதையை எழுதும் அத்தியாயம், இந்நாவலாசிரியர் இடையில் வந்து தரும் தன்விளக்க அத்தியாயம். அவற்றில் தமிழ்த் திரைப்படக் கதாநாயக, நாயகியின் லட்சணம் முதல் எழுத்தாளரின், இயக்குநரின், பதிப்பாளரின் லட்சணங்கள் வரை பகடிக்குள்ளாக்கப் படுகின்றன. ( முத்துப் போன்ற பல்வரிசையுடன் சிரித்து வெட்கப்பட வேண்டும். பசுமை நிறைந்த சோலைகளிலே ஆடிப்பாட வேண்டும் ). அதிகாரம் எங்கெல்லாம் உருவாகிறதோ அங்கு முதலில் சென்று நிற்க வேண்டியது எழுத்தாளரின் விமர்சனம் என்பது. அது இந்நாவல் வழியாக கலை இலக்கிய உலகின் போலித்தனங்கள் மீதும், பொறாமை, ஆதிக்கம் அல்லது வாய்ப்பு வந்தவுடன் மாறிவிடும் சுபாவம் மீதும் விமர்சனமாக வெளிப்படுகின்றன. புத்திபேகம் தெருவைக் கண்டு கனவில் அதை மயக்க நிலையில் உள்வாங்கித் திரியும் எழுத்தாளனின் பாத்திரம் ஒரு கணத்தில் அச்சமும், பித்தும் கலந்த நிலையில் ஒரு நொடி பார்க்கும் அந்த ஒரு உருவம் அலிமாவாக இருக்கலாம். அவனது இல்லச் சூழலின் காரணமாக அவன் கரிசனத்துடன் நடத்தப்படுவதும் அந்த அத்தியாயத்தில் வருகிறது. கூடவே சில குமாஸ்தாக்களின் கதைகளும் உதிரியாக  வருகின்றன. குமாஸ்தாக்கள் போல கற்பனைவளம் சற்றும் அனுமதிக்கப் படாத எப்போதும் குறைகண்டுபிடிக்கப்படும் வேலையையே செய்துகொண்டிருக்கிற ஒருவன் கணப் பொழுதில் கண்ட காட்சியாகவும் அந்த அலீமா இருந்திருக்கலாம். குமாஸ்தாக்கள் வேலை பார்ப்பதும் கயிறு திரிக்கும் நிறுவனத்தில்தான். அவன் அலிமாவின் கதையையே திரித்துக் கொண்டும் இருக்கலாம். 


அலிமாவின் கதை அவள் புகைக்கும் கஞ்சாவைப் போலவே நாற்றமெடுக்கக் கூடியது. மணக்கக் கூடியது. அப்போது அவளைக் கடந்து செல்லும் பல்வேறு மனிதர்களுடன் இந்நாவலில் வாசகரை பொருத்திக் கொள்ளலாம் கூட. அவள் ஏழு பருவங்களிலும் ஏழு குதிரைகளில் ஒரே நேரத்தில் பயணம் போகிறவள். அவளே சொல்வது போல ஒரு குதிரையில் கூட போக வக்கில்லாதவர்களும் இருக்கிறார்கள் தானே.  அலிமாவைப் பற்றி அவளது  இயக்குநர் அகரன் கூறுவதாக ஒரு வரி நாவலில் வருகிறது. "அவளுக்குப் பிம்பம் கிடையாது. இனி அதைக் கட்டமைக்கவும் முடியாது. அதற்கு மிகவும் பிரயாசைப் படவேண்டும். ஏற்கனவே எல்லாவற்றையும் அலிமா சுக்குநூறாக உடைத்தெறிபவள்" அத்தனைக்கும் மேல், இந்தக் கேள்வியை இந்நாவல் விட்டுவைக்கிறது. அவளுடைய வாழ்க்கையை பிறப்பு முதல் அனைத்து விஷயங்களையும் ஏற்கனவே அவளது பெரிய தகப்பன் எழுதி வைத்திருக்கிறான். அலிமாவின் அத்தனை மீறல்களும் ஏற்கனவே எழுதப் பட்டவைதானா அல்லது அது பிரமையா.. எழுதப் பட்டவை என்றால் அவளது மீறல்களுக்கு என்னதான் பொருள். கேள்வியை முன்வைத்து விட்டு  அலிமா சிட்டாகப் பறந்து விடுகிறாள். வாசகர்கள் அதை கேள்வியாகவோ பகடியாகவோ சுமந்து திரியலாம்


***



No comments: