Monday, February 15, 2021

இடைவெளி - எஸ்.சம்பத்

நான் யார்? எங்கிருந்து வந்தேன்? போன்றவை அடிப்படைக் கேள்விகள். மனிதனைத் தவிர வேறு உயிர்களுக்கு இந்த ஆர்வம் ஏதும் இல்லை. ஆறாம் அறிவின் பக்க விளைவாக இதை சொல்லலாம். இந்த குழப்பம் இருந்தாலும்  அதை பெரிதாக பற்றிக் கொள்ளாமல் உலகியலில் ஆழ்வது என்பது பெரும்பான்மையினர் செய்வது. இதை அறிய வேண்டி உலகியலைத் துறந்து இந்த தேடலை ஒட்டி அலைவது  ஞானியருக்கானது. இந்த குழப்பம் ஒரு தருணத்தில் அனைவருக்கும் எழக்கூடியதுதான். உலகியலில் ஒருவித ஞான மரபின் தொடர்பில் இருப்பவருக்கு பற்றிக் கொள்ள ஒரு பிடிப்பு போதுமானது. அவர்கள் தனக்கான குருவை மத சித்தாந்தத்தைக் கண்டடைகிறார்கள். ஆனால் எதையும் கேள்விக்கு உள்ளாக்கி தானே  முழுதும் அறிய விரும்புபவர்க்கு உலகியல் கைகூடாமல்  ஞானமும் கைகூடாமல் போவதே சாத்தியமானதாகிறது. முற்றிலும் தேடலில் அமர்ந்த புத்தனே தன வீட்டை விட்டு காட்டில் சென்று அமர்ந்து பல  ஆண்டுகள் கழித்துதான் அந்த உண்மையை அறிகிறான். புத்தனுக்கும் முன்னால் தோன்றிய கிருஷ்ணனும் பாண்டவர்களின் வனவாச காலம் முழுவதும் ஊழ்கத்தில் அமர்ந்துதான் இதை அறிகிறான். ஆனால் மனிதனின் ஆசை என்பது அளப்பரியது. அது, தான் உலகியலில் இருந்தபடியே அந்த அடிப்படைக்கு கேள்விகளை அறிய முடியுமா என்று தூண்டியபடியே இருக்கிறது. தினகரன் அத்தகைய பேராசை கொண்ட ஒருவர்.

 



அடிப்படைக் கேள்விகள் என்பது உடநிடத காலத்தில் வரும் நசிகேதன் முதல் தாஸ்தாவ்யெஸ்கி வரை அனைவரையும் அலைக்கழித்த ஒன்றுதான். தினகரன் அனைவரையும் வாசித்திருக்கிறார். காணும் அனைத்தினையும் அதற்கான சமிக்ஞைகளாக  கருதுகிறார்.  மரணம் என்பது ஜீவாத்மாவின் ஒரு தொடர்ச்சியே வினைப்பயன் என்றெல்லாம் செல்லும் நம் சிந்தனை மரபின் ஊடாக அவர் மரணம் என்பது ஒரு 'இடைவெளி'தான் என்கிற புரிதலை அடைகிறார். அந்த புரிதல் வரை அவரை செலுத்தியவைகளின் தொகுப்பு இந்த நாவல்

 

தினகரன் மெத்த படித்தவர் ஆனால் ஒரு கடைநிலை பணியிலேயே தன்னைப் பொருத்திக் கொள்கிறார். பெரும் அலுவலக பொறுப்புகள் தன் தேடலுக்கு இடையூறாக அமைந்துவிடும் என்று அவற்றைத் தவிர்க்கிறார். ஆனால் அவரது உடல் இச்சையை அவ்வாறு விலக்கிவைத்தவர்  இல்லை. அது சார்ந்து ஒரு அலைக்கழிப்பே அவருக்கு  எஞ்சி நிற்கிறது.  முற்றிலும் அதில் ஆழ்ந்து கிடப்பது. மற்றோரு தருணத்தில் இணையின் அழைப்பையும் தவிர்த்துவிட்டு தான் ஒரு இம்போடெண்டோ என்று குழம்புவது என அலைபாய்கிறார். அலுவலக வேலையிலும் முழுக்கவனம் செலுத்த இயலவில்லை. ஒரு வேலையில் இருக்கும்பொழுது இந்த சிந்தனைக்கு ஆட்பட்டு அப்படியே கால நேரம் தெரியாமல் அமர்ந்திருக்கிறார். அவர்  ஒரு தருணத்தில் தனக்கு மனநோய் இருக்கிறதோ என்று கருதி அதற்கான சிகிச்சையும் மேற்கொள்கிறார். அத்தகைய தருணத்தில்தான் ஒரு உறவினரின் மரணம் அவருக்கு ஒரு புரிதலை கொடுத்துவிட்டுச் செல்கிறது.

தினகரனின் அவஸ்தையை சுற்றியுள்ள நபர்கள் நன்றாக புரிந்து கொள்கிறார்கள். அவர் ஏமாற்றவில்லை என்பதும் அவருக்கு உண்மையாகவே அந்த குழப்பம் இருக்கிறது என்றும் அதற்கு தன்னால் இயன்றதை செய்யவும் அவர்கள் சித்தமாக இருக்கிறார்கள். ஹோட்டல் சர்வர் முதல் மனைவிவரை அனைவரும் அதக அனுசரணையாகவே செய்கிறார்கள். ஆனால், அவருடைய கேள்விகளுக்கான பதிலாக  இந்த நாவல் தெளிவாக ஒன்றை சொல்லிவிடுகிறதா? என்றால் இல்லை. இது ஒன்றும் பெரிய ரகசியம் இல்லை. இதன் முடிவு என்னவாக இருக்கும் என்பது இந்த நாவலைக் கையில் எடுக்கும்   அனைவருக்கும்  தெரிந்த ஒன்றாகத்தான் இருக்கும். அப்படி ஒன்று நிகழ்ந்திருந்தால் இன்று இதை பற்றி நான் எழுதிக் கொண்டிருக்க மாட்டேன். இந்நேரம் இந்த நாவல் புனித நூலாக ஆகி உரைகள் எழுதப் பட்டிருக்கும். அதிருஷ்டவசமாக அல்லது துரதிஷ்டவசமாக    அவ்வாறு ஆகாமல்  இலக்கிய தரத்துடன் நின்றுவிடுகிறது.

 

நாவலின் பெரிய  பலம் என்பது அதில் உள்ள ஒரு அப்பட்டமான அணுகுமுறை. தன்  தயக்கம், தோல்வி, அவமானம் என அனைத்தையும் பாசாங்கு இல்லாமல் முன் வைக்கிறார். தாஸ்தாவ்யேஸ்கி மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்ததை போல தானும் முயற்சிக்க எண்ணி மாடியின் விளிம்பு வரை சென்று கீழே குதிக்க யோசிக்கிறார். முழு பிரக்ஞையுடன் அதைச செய்வதால் அவர் குதிக்கவும் இல்லை. அதே சமயம் அவரது தேடல் வெற்றியடையவும் இல்லை. இந்த நாவல் முழுவதுமே இருக்கும் குழப்பம் என்பது இந்த  பிரக்ஞை உள்ள மற்றும் அற்ற நிலைகளின் குழப்பமாக இருப்பதுதான். தாஸ்தாவ்யேஸ்கி நாவலின் நாயகர்கள் போல தினகரன் முழுவதாக ஒரு பேரதிர்ச்சியைக் கண்டு செயலிழக்கவும் இல்லை. அல்லது இந்திய மரபின் ஞானத்தேடல் போல முற்றிலும் தன்னை விடுவித்துக் கொள்ளவும் இல்லை. கீழைத்தேச மற்றும் மேலைத்தேச ஞான மரபை அறிந்தவராக இருப்பதால் மேலும் மேலும் என்று அதை துழாவியபடியே செல்கிறார். அவர் நிலையழிந்து போகும் தருணங்கள் வருகின்றன. காசு  சுண்டிவிடும்போதும், அலுவலக இயந்திரத்தைக் கண்டு அமர்ந்திருக்கும்போதும் அவருக்கு காலம் தூரம் கடந்த நிலை உருவாகிறது. ஆனால அவர் மூர்ச்சையாவதும்  அல்லது உடனே விழிப்படைவதும் உண்டாகிறது. சாவு ஒரு உருவம் கொண்டு அவருடன் பேசாத துவங்குகிறது. அவர்   அதனுடன்  உரையாடத துவங்குகிறார். இதில் அகவெளியில் நிகழ்வது எது? புறவெளியில் நிகழ்வது எது? என்கிற குழப்பம் அவருக்கும் உண்டாகிறது. சுற்றியிருப்பவர்கள் அது உணர்ந்தாலும் கண்டுகொள்வதில்லை. இறுதியில்  இடைவெளி என்ற  சித்தாந்தத்தை பற்றிக் கொண்டதும் அதற்கேற்ப சில பரிசோதனைகளை செய்து தன்னுடைய  ஆய்வை நிறுத்திக் கொள்கிறார்.

 

நாவலின் மற்றோரு பலம் என்பது பிறழ்வு நிலையை இலகுவாக எழுதியிருக்கும் நடை. சட்டை மாற்றுவது போலத்தான் உயிர் உடலை மாற்றுகிறது.. காந்தி வெற்றுடம்புடன் நின்றததுதான் அவரது தற்காப்புக்கு முதன்மை காரணம்  போன்ற வரிகள்  மூலம் பல நீண்ட விவாதங்களை எளிதில் தாண்டிச்  செல்கிறார்.  மூணு சிட்டு விளையாட்டால் அவர் காணும் நுட்பம் பிடிபட்டதும் அதிலிருந்து விலகுவது. அவர் கல்பனா என்ற பெண்ணுடன் அவருக்கு இருந்த உறவு உண்மையா அல்லது அவருடைய புனைவா ( கல்பனா பெயர்க்காரணம்) என்பது வாசிப்பை சுவாரஸ்யமாக்குபவை. ஆனாலும் இது நாவலின் முடிவை நோக்கி எந்த வித எதிர்பார்ப்பையும் உருவாக்கவில்லை என்பதும் உண்மை




 

நாவலின் நாயகன் தினகரனுக்கும், நாவலாசிரியர் எஸ்.சம்பத்துக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. இந்த நாவலின்  முன்னுரையை வெங்கட் சாமிநாதன் எழுதியிருக்கிறார். எழுத்தாளர். சம்பத் பற்றி அவர் அளிக்கும்  சித்திரம் மிகவும் ஆர்வமானது. பழுப்பு நிறப் பக்கங்களில் சாரு அனைத்தையும் தொகுத்து எழுதியிருக்கிறார்.  சம்பத்தின்  மரணமும்  அவரது பதட்டமும் அலைச்சலும் கொண்ட  வாழ்க்கை சம்பவங்களோடு இடைவெளி தினகரனை  வாசிக்கையில் அந்தப் பின்புலம் இந்த நாவலை  இன்னொரு தளத்திற்கு இட்டுச்  செல்கிறது என்பது மறுப்பதற்கில்லை.  சென்றமுறை எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியை சந்தித்த பொழுது அவர் ஒரு தகவல் கூறினார். எழுத்தாளர் சம்பத் அறுநூறு பக்க நாவல் ஒன்று எழுதி சரிபார்க்க இவரிடம் கொடுத்துள்ளார். பதினைந்து நாட்கள் கழித்து நாவலைப் பற்றி அவரிடம் கருத்து கேட்கையில் "நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன்' என்று இந்திரா பார்த்தசாரதி பதில் அளிக்கிறார். இத்தனை நாட்களில் முழுமையாக உங்களை வாசிக்க வைக்கவில்லையென்றால் அது நாவலின் தோல்வியே என்று கூறியபடி, அந்த நாவலை எரித்துவிடுகிறார் சம்பத். இன்று போல அப்பொழுது கணினியில் சேமிக்கும் முறையெல்லாம் வழக்கத்தில் இல்லை. கையால் எழுதியதுதான். அதைத்தான் முற்றிலுமாக எரித்து சாம்பலாக்கியிருக்கிறார். இடைவெளி நாவல் வாசித்தபின், அந்த நிகழ்வை எண்ணிப்பார்க்கிறேன்.  இன்று அந்தப் பிரதி  இருந்திருந்தால் அது ஒருவேளை அவரை தமிழிலக்கியத்தின் தாஸ்தாவ்யேஸ்கியாக  அடையாளம் காட்டியிருக்கும் என்று எண்ணவைக்கிறது இடைவெளி என்னும் இந்த நூறு பக்க   நாவல் காட்டும் சித்திரம்.

 

Tuesday, January 26, 2021

கைவிடப்பட்டவரின் பிரதிநிதி

 அரூ காலாண்டு இதழில் வெளியான கட்டுரை


சற்றே கசப்பு நிறைந்த எழுத்து தன்னுடையது என்றே நாஞ்சில் நாடன் அவர்கள் சுயமதிப்பீடு செய்கிறார். (சூடிய பூ சூடற்க – முன்னுரை). ஒரு வாசகனாக அதைக் கசப்பு என்று என்னால் சொல்ல இயலாது. சீற்றம் என்று சொல்லலாம். அவரது சிறுகதை தொகுப்புகளில் படிப்படியாக அந்த சீற்றம் வளர்ந்து கொண்டே போவதைக் காணலாம். சீற்றம் வளர்கிறது என்றால் முதலில் ஒரு மனிதனை எரித்து, அடுத்த தொகுதியில் ஊரை எரித்துப் பின் அதற்கடுத்துப் பிரபஞ்சத்தை எரிக்கிறது என்கிற பொருளை எடுத்துக் கொண்டுவிடலாகாது. அவரது சீற்றம் முதலில் சகமனிதனின் தவிப்பைக் காணாது செல்லும் கீழ்மை கண்டு எழுகிறது. பின் அது இம்மாதிரி இழி மனிதர்கள் முன்னால் ஏன் நிற்கிறாய் என்று இரைபவனை நோக்கியும் சீறுகிறது. பின் இதைக் கண்டு நீ என்ன செய்தாய் என்று தெய்வத்தின் மீதும் சீறுகிறது. அது ஒரு சீற்றம்தான் என்றாலும் சாபம் அல்ல. யாரையும் அழிந்து போ என்று ஆசிரியர் சபிப்பதில்லை. அது ஒருவகை கனிவே. இறுதியில் இம்மாதம் ஆவநாழியில் வெளியான அவரது சமீபத்தியக் கதைவரை படித்தபின் அடித்துச் சொல்ல முடிகிறது. அவை அனைத்தும் வெறும் கனிவாகவே எஞ்சி நிற்கின்றன என்று.




அவரது கதைகள் பெரும்பாலும் கைவிடப்பட்டவனின் குரல், கைவிடப்பட்டவனை அடையாளப்படுத்தும் குரல், பின் கைவிட்ட மனிதர்களின் அறியாமையை அல்லது அகங்காரத்தைச் சுட்டும் குரல் என்றே ஒலிக்கத் துவங்கி அதற்குப் பிறகு அதன் அடுத்த படிநிலையான தீர்வை நோக்கியும் செல்கின்றன. 1998-ல் கும்பமுனி அவதரித்த பின் (நேர்காணல் சிறுகதை) அவரது கதைகள் தன் பழைய சீற்றத்தை வேறு விதமாக வெளிப்படுத்தித் தனித்துவம் கொண்ட வேறோர் இடத்துக்குச் செல்கின்றன.

கைவிடப்பட்டவர்கள் என்றால் ஏதோ வாழத்தகுதியற்றவர் அல்லது வக்கற்றவர் என்று பொருளாதார அல்லது அதிகார வரிசையில் கூறுவது அல்ல. தான் வசதியாக வாழ்ந்து தன் இரு பெண்களை நல்ல இடத்தில் வசதியாக கட்டிக் கொடுத்தவரும்தான். ஆனால் அவருக்கு அமாவாசை அன்று நல்ல சோறு கிடைப்பதில்லை. இரு மகள்களும் ‘ஏம்ப்பா இங்க சாப்பிட வரலை’ என்று கேட்டு கோபித்துக்கொள்கிறார்கள். அவரது கூச்ச உணர்வு அவருக்கும் முன்னாலேயே அங்கு சென்றுவிடுகிறது. தான் இன்னும் சாப்பிடவில்லை என்று சொல்ல நா எழ மறுக்கிறது. சொந்த மகளாயினும் தயக்கம் வந்துவிடுகிறது. வேறு ஒரு விருந்தினரை உபசரிக்கையில் சாப்பிடுங்கள் என்று அழைக்கும் நாகரீகத்தை இன்றும் மக்கள் மறந்துவிடவில்லை. ஆனால் அதைச் சொந்த தந்தையிடம் காட்டாமல் இருப்பது அந்த மகள்களின் தவறும் அல்ல. நாம் வழக்கத்துக்கு மாறாக திருநீறு பூசி வந்ததால் அவர்கள் அவ்வாறு புரிந்துகொண்டனர் என்று அவரும் தன் வீட்டிற்கே சென்று பழையதை எடுத்து உண்கிறார். தான் சாப்பிடவில்லை என்று சொல்லியிருந்தால் அது சரியாகியிருக்கும். ஆனால் பெற்றவளைத் தவிர மற்ற யாரிடமும் பசிக்கிறது என்று சொல்லி உணவு கேட்கக் கூசும் மனித மனம். அதுவே ஒருவனின் சுயம். அது அடுத்த வேளை உணவுக்கு வழி இல்லாத ராசாவுக்கும்தான் இருக்கிறது என்று சுட்டிக் காட்டுகின்றன இவ்வகைக் கதைகள்.

நண்பர் குழாம் இல்லாத வேறு ஒரு குழுவில் தன் பிழைப்புக்காக அல்லது தனக்கான ஏதோ ஒரு பலனைச் சாதித்துக்கொள்ள வேண்டி விருப்பமில்லாமல் புழங்க வேண்டித்தான் உள்ளது. அத்தகைய மகிழ்வுக் கூட்டங்களில், கொண்டாட்டங்களில்கூட யார் அதிகாரத்தில் பெரியவர், யார் இளைத்தவர் என்ற படிக்கட்டுகள் எக்கணமும் அதிசிறக்க எவ்வாறோ உணர்த்தப்பட்டும் விடும். தன்னியல்பாலேயே சுயமரியாதை உள்ள ஒருவர்கூட, அத்தகைய நவநாகரீக உலகில் மேல்தட்டுக்குச் சென்று புழங்க சற்று கூச்சத்தை விட்டு எழுந்தால் போதுமானதுதான். அதற்காகக் கீழ்மையில் முங்கிக் குளிக்கத் தேவையில்லை. காலைச் சற்று நனைத்துக்கொண்டால்கூடப் போதும். டேபிள் மேனர்ஸ் என்றும் கம்பெனி என்றும் அவற்றிற்குப் பெயர்களைக்கூடச் சூட்டிக்கொள்ளலாம். என்றாலும் அவ்வுலகில் புழங்கிக்கொண்டும் ஆனால் உள்ளூரக் கூசும் அகத்தோடும் இருப்பவர்கள் உண்டு. அத்தகைய தன் கூச்சத்தால் எங்கும் நாணித் தவிப்பவர்களும் உண்டு. ‘சிறுமை கண்டு பொங்குவாய் வா! வா! வா!’ என்று மகாகவி சொல்லக்கேட்டு வளர்ந்தாலும் அனைவராலும் அவ்வாறு பொங்கிவிட முடிகிறதா என்ன?




இந்தக் கைவிடப்பட்டவர்கள் கதைகளை விடவும், பின்னால் வந்த கும்பமுனிக் கதைகளை விடவும் எனக்கு மிக அணுக்கமானவை அவரது “கை கொடுக்கும்“ கதைகள். மொஹித்தே, கான்சாகிப்,’ பிராந்து’ மந்திரமூர்த்தி என்று அவர் அறிமுகப்படுத்தும் மனிதர்கள். ஒரு சிலர் முன்னேற ஒரு வாய்ப்பும் இல்லாமல், வாழ்வில் முதல் அடிகூட எடுத்து வைக்காமல் ஊரிலேயே எருமைக் கிடாவிற்கு இணையாகச் சோம்பலில் கிடந்து உழலுவதும் உண்டு. யாரோ ஓர் அய்யாவு ஆசான் (நாட்டு மருந்து) அவர்களுக்கு வாய்க்கிறார்கள். தனக்குள்ளே மூழ்கியவரை நோக்கி, வா என்று கை நீட்டுகிறார்கள். இந்தியா முழுவதும் உள்ள இத்தகைய மனிதர்களை, குழுக்களை, பண்பாடுகளை அறிமுகப்படுத்தியே செல்கிறார். நாஞ்சில் நாடன் என்று பெயர் வைத்து ஒரு பிராந்தியத்துக்குள் தன்னை அவர் சுருக்கிக்கொண்டாலும் சக மனிதர்கள் மீது நம்பிக்கை கொள்ள வைக்கும் இக்கதைகள் மூலம் அவர் உலகம் யாவிற்குமான எழுத்தாளராகவே வெளிப்படுகிறார்.

இதுவரை நாஞ்சில் நாடன் அவர்களின் எட்டுச் சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. கான் சாகிப் அதில் முக்கியமானது. அவரது மொத்த கதைகளையும் வாசித்த ஒருவருக்கு இந்தத் தொகுப்பு ஒரு முக்கூடல் போல. அவற்றில் நாஞ்சில் நாடன் அவர்களின் முற்கால கதைகளில் இருக்கும் அப்பாவிகளின் புரியா நிலையில் எழும் சீற்றத்திலிருந்து, பிற்காலக் கதைகளில் கும்பமுனியின் உக்கிரம் வரை அனைத்தும் கலந்த தொகுப்பாக இதைச் சொல்லலாம். கைவிடப்பட்டவர்களின் குரலாக ஒலித்த குரல் இங்கிருந்து அவர்களின் பிரதிநிதியாகவும் எழுந்து நிற்கிறது. நீ என்ன செய்தாய் என்று கேட்டவை இவ்வாறும் செய்யலாம் என்று செய்தும் காட்டுகின்றன. அவரது கதைகளில் மிகவும் அணுக்கமானவையாக இவற்றை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். அந்த விதத்தில் எட்டுத் தொகுப்புகளிலும் எனக்கு மிக அணுக்கமான தொகுப்பாகவும் ‘கான்சாகிப்’ உள்ளது.

கைவிடப்பட்ட பேச்சியம்மையின் ஆங்காரம்தான் அவளை வார்த்து எடுத்தது. கணவன் இல்லாது, வெறும் பதினெட்டு மரக்கால் விதைப்பாட்டில் மகனைப் பொறியியல் படிக்கவைத்து, அண்டை வீடுகள் தரும் உணவுகூட உண்ணக்கூடாது என்று மகனைக் கண்டிப்புடன் வளர்த்தது அவளது வைராக்யம். ஆனால் பிற்காலத்தில் அது அவளது மகனாலேயே சோதிக்கப்படுகிறது. ஆனால் இத்துணை காலம் அவளுடன் இருந்து அவளையும் இயக்கியது அவ்வைராக்யம்தான். அதுவே அவளுக்கு இறுதித்துணை (பேச்சியம்மை). கீழோர் முன் அமைதியாகச் செல்லும் கோம்பையும் அவன் கூட்டமும் காட்டும் எதிர்வினை அதே வைராக்யத்தின் மற்றோரு வடிவம் (கோம்பை). மற்றொரு கதையில் (பின்பனிக்காலம்) காமாட்சி நாதன் மலையம்மையை மணம் முடிக்கிறார். அது, அதே கைவிடப்பட்ட மனிதர் தன்னைப்போலவே மற்றவரைக் கண்டபின் கனிந்து வரும் தருணம். அசரீரியாக ஒலிக்கும் அறத்தின் குரலாக ஆசிரியரின் குரல் பலவகைப் பாத்திரங்களின் ஊடாக வெளிப்பாட்டுக்கொண்டே இருக்கிறது. அநாதைக் குழந்தைகள் என்பதால் கல்யாண வீட்டில் மீந்து போன உணவைத் திருப்பி அனுப்பும் சாமியார் சொல்வது ” எம்புள்ளைங்க அனாதைங்கதான் ஆனால் பிச்சைக்காரங்க இல்ல பாத்துக்கிடுங்க” என்று. ஒரு விதத்தில் அவரது முந்தைய கதைநாயகனான பண்டாரம் (இருள்கள் நிழல்கள் அல்ல) ஏற்றி வைத்த பாரத்தை இது இறக்கிவைத்தது. பண்டாரம் இன்று இருந்திருந்தால் பட்டினியாக நின்றிருக்க மாட்டான். ஆனால் பண்டாரம் அடைந்த புறக்கணிப்பு என்றும் ஒன்று உள்ளது. அது இன்று மாறிவிட்டதா என்ன? உணவும் பொருளும் தாராளமாகக் கிடைத்தாலும் புறக்கணிப்பும் அவமானமும் நுட்பமான ஒன்றாக மாறிவிட்டது. பணத்தையும் தாண்டிய ஒன்று உள்ளது; பணம் மட்டுமே வாழ்க்கையில்லை போன்றவையெல்லாம் அனைவரும் சொல்லிச் சலித்த ஒன்றாகிவிட்டது. கேட்பவரும் ‘ஆமாங்க சரியாச் சொன்னீங்க போங்க’ என்று சொல்லி எளிதாக நகர்ந்து சென்றுவிடும் அளவு அலட்சியம் நிறைந்துவிட்டது. அந்தத் தருணத்தில்தான் கும்பமுனியின் உக்கிரம் எழுகிறது. இதற்கு முந்தைய தொகுப்பு வரை இலக்கியப் பிழைகளுக்காகத் தன்னளவில் கண்ணீர் மல்கிக் கொண்டிருந்த கும்பமுனி, ஒரு பெரும் முனீஸ்வரனாக எழுந்து, ‘நாய்க்குப் புழல்ல தேனீருந்தா போயி அதையும் நக்குவீரா வோய்?’ என்று உக்கிரம் கொள்கிறார். முனீஸ்வரனின் துணையாக வரும் புரவி போலத் தவசிப்பிள்ளையும் கும்பமுனிக்கு உடன் சேர்கிறார். அந்த இரட்டை நாயனங்களின் எழுகையைக் கான்சாகிப் தொகுப்பில் காணலாம். பல இடங்களில் வயிறு நோகச் சிரிக்க வைக்கவும் தவறுவதில்லை.

சமகால எழுத்தாளர்களில் தனக்கான எவ்வித அரசியல் சார்பும் இல்லாமல், நடப்பு அரசியலின் கூத்துக்களை இலக்கியத்தில் பதிவு செய்தவர்களில் நாஞ்சில் நாடன் முதன்மையானவராகவே இருப்பார். நான் அறிந்த வரை அவர் ஒருவர்தான். இந்நாட்டு இங்கர்சால், ராமராச்சியம் என்றெல்லாம் தன் முதல் தொகுப்பிலிருந்தே அவர் தன் கருத்துகளை விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். இந்தத் தொகுப்பிலும் ஒரு குதிரை பேரக் கதை உண்டு. பொதுவாகவே கும்பமுனி போஸ்ட்மேன் முதல் பிரதமர் வரை எவரையும் விட்டுவைப்பவர் இல்லை. இவ்வாறு, அரசியலையும் சமூகத்தையும் விமர்சிக்கும் அதிகாரத்தை மக்கள் அனைவருக்கும் வழங்கிவிடுவதில்லை. அது ஒரு பிதாமகனுக்கான இடம். சுய விருப்பு வெறுப்பு இல்லாமல் அதைச் சொல்பருக்கே அந்த பீடம் அமைகிறது. அது நாஞ்சில் நாடன் அவர்களுக்கு உள்ளது. காரணம் சமூக விமர்சனமோ அரசியல் விமர்சனமோ செய்யும் எந்த ஒரு படைப்பாளியும் தொடத் தயங்கும் இடம் ஒன்று உண்டு. அது தன் துறை மீதான விமர்சனம். தன் இனம் மீதான விமர்சனம். ஆனால் இங்கோ, தான் சார்ந்த மக்கள் அல்லது துறை என்றால் கும்பமுனிக்குத் தனி உற்சாகமே வந்துவிடுகிறது.




இந்தத் தொகுப்பில், ஒருவித நேரடி அஞ்சலிக் குறிப்பு போலவே உள்ள தலைப்புக் கதையான கான்சாகிப், அவர் அடையாளம் காட்டும் ஓர் உதாரண மனிதர் என்று தோன்றுகிறது. யாரும் அதிமானுடனாக அற்புதங்கள் செய்ய வேண்டாம். சிறந்த நண்பராக இருக்க அங்க தேசத்தை எழுதி வைக்கவும் வேண்டாம். தன் சக மனிதனுக்கு அளிக்கத்தக்க குறைந்தபட்ச நேசத்தையும் நண்பனுக்கு அளிக்கத்தக்க குறைந்தபட்ச நம்பிக்கையையும் அளித்தால் போதுமானது. ஒரு தோள்பட்டைப் பையாக அவர் நினைவை இலக்கிய உலகம் என்றும் சுமந்து கொண்டிருக்கும்.

இந்த ‘கான் சாகிப்’ சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பதினேழு கதைகள் உள்ளன. வாசித்து முடித்ததும் வாசகர்கள் ஒருவித சுயபரிசோதனை செய்து பார்க்கலாம். நம்மைப் பற்றி ஒருவர் எழுதினால் நாம் இதுபோல கான்சாஹிப் வரிசைக் கதைகளில் வருவோமா அல்லது கும்பமுனிக் கதைகளில் பாத்திரமாக வருவோமா என்று!!!

Thursday, December 10, 2020

கணப்பித்தம் கணச்சித்தம்




 (1)

நாம் அறிந்த உலகம் உண்டு. அறியாத ஒன்றும் உண்டு. அறியாதவை பல இருக்கின்றன என்கிற ஒரு புரிதல் அனைவருக்குமே இருக்கலாம். நாம் அறிந்த ஒன்றில் கிடைக்கும் நெம்புகோலை வைத்துதான் அறியாத ஒன்றைத் துழாவ வேண்டியிருக்கிறது. ஏதோ ஒரு தேசத்தில் நடக்கும் தீவிரவாத தாக்குதலைப் பற்றிக் கேள்விப்படுகையில் ஒருவருக்கு அந்நாட்டைச் சேர்ந்த நண்பர்களின் உறவினர்களின் நினைவுகள் வரும். அவர்கள் பிழைத்திருக்க என்ணியா தாக்குதலில் உள்ளாகியிருக்க எண்ணியா என்பது அவரவர் வழி.  ஆனால் அதன் மற்றொரு புறத்தை அறிய நமக்கு இருக்கும் தகவல்களையே மனம் துழாவுகிறது.  

அந்தக் கணம் மனம் கொள்ளும் பாவனைகள் வியப்பானவை. ஒன்றை தேடி அடையும் பொழுதில் அந்த இரு தரப்பிலும் பெரும் எதிர்பார்ப்பு என்பது இராது. மலை உச்சியில் கல்லாய் சமைந்திருக்கும் ஒன்றை காண்பவனும்,  அந்த மலை உச்சியில் தானிருக்கும் இடத்திலிருந்து தன்னைக் காணவரும் அனைவரையும் காணும் அந்த சிற்பமும் மேலதிக வியப்பு ஏதும் கொள்வதில்லை. ஆனால் ஒரு மேஜையில் சுற்றிக் கொண்டிருக்கும் உலக உருண்டையின் மேல் விழுந்து விட்ட எறும்புக்கூட்டம் சிதறி ஓடுகையில் அது தன்னுடைய எந்த கூட்டாளியை எந்த தேசத்தில் எந்நிலையில் காணுமோ என்று ஆராய்வதில் ஒரு சுவாரசியம் உண்டு. அந்த ஒரு ஆர்வத்தை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் உண்டாக்கிய வண்ணமே இருக்கின்றன.

Saturday, November 28, 2020

ஞானத்தை அடைய பத்து வாயில்கள் - குரு - ஹெச். எஸ். சிவபிரகாஷ் ( தமிழில்:- ஆனந்த் ஸ்ரீநிவாசன்)

           ஆன்மீக அனுபவம் மிகவும் அந்தரங்கமானது. இங்கு மிகவும் உன்னதமாக ஆக்கப் பட்டிருப்பதும் அதற்கு இணையாகவே மிகவும் தவறாக பிரசாரம் செய்யப் படுவதும் ஆன்மீகம்தான். உடனடி பலன் என்ன எனத் தேடி அலையும் உலகில் அது ஒருவித சித்து வேலை என்று நகர்பவர்கள் உண்டு. சித்து வேலையிலேயே ஆழ்ந்து அதில் உலகியல் இன்பங்களைப் பெற்று உழல்வதும் உண்டு. தீர்க்க தரிசனம், ஞான திருஷ்டி போன்றவற்றை வைத்து பலனடையும் சாமியார்களும் உண்டு.

 

           ஹெச். எஸ். சிவபிரகாஷ் அவர்கள் கன்னட எழுத்தாளர். கவிஞரும் கூட. அவர் தன் ஆன்மீகத்தேடல் குறித்து எழுதிய “Everyday Yogi" புத்தகம் மிகவும் ஆர்வமூட்டக்கூடிய ஒன்று.  ஹெச். எஸ். சிவபிரகாஷ் அவர்களின் தந்தை ஒரு கன்னடர். கன்னட அறிஞர் அவர். பல பல்கலைக்கழக துணைவேந்தர்களும், மந்திரிகளும் அவரது கருத்து கேட்க அவரது வீட்டில் வந்து காத்திருக்கும் அளவு செல்வாக்கு உள்ளவர்.  அவருக்குத் தன் தந்தை வழியாகவே இலக்கிய அனுபவம் உண்டாகிறது. அவரது தாயார் தமிழர். தன் தாயார் வழியாக சங்க இலக்கியங்களும் அவருக்கு நல்ல அறிமுகம் உண்டு. தன் குழந்தைப் பருவத்தில் பெற்ற அனுபவங்களும்,  தன் தந்தை தன் தாய் மீது காட்டிய வன்முறையும் அவரை சில குருமார்களை தேடிச் செலுத்துகின்றன. காஷ்மீர வீர சைவ மரபை சார்ந்தவர். மரபு வழி சம்பிரதாயங்களை கொண்ட மடங்கள், சத்யானந்தா குருகுலம்  உள்ளிட்ட நவீன மையங்கள், சித்தர்கள், சூஃபி ஞானி மற்றும் கிறிஸ்தவ மத தீர்க்கதரிசிகள் என தான் வாழ்வில் சந்தித்த அனைவரைப் பற்றியும் அதில் எழுதியுள்ளார். யாரையும் தேடி வனங்களுக்கு அலைவது போன்றது அல்ல. நம் அருகே இருப்பவர்கள். மிகவும் பரபரப்பான பெங்களூருவில் சாலையிலிருந்து சற்று விலகியுள்ள ஒரு மலைப்பகுதியில் இருந்த ஒரு சூஃபி ஞானி போல. ஞானிகள் ஆற்றும் அற்புதங்கள்கூட ஒருவித சோதனைகளே. அதைக் கடந்துதான் ஞானத்தின் பாதையில் செல்லவேண்டும். இந்த அனுபவங்கள் “Everyday Yogi" புத்தகத்தில் உண்டு.

 


                     அறிதல் என்பது ஆனந்தம் அளிக்கவல்லதே. அதே நேரம் அது அளப்பறியது கூட. இலக்கியம், யோகம், தியானம், செயல், பக்தி என அனைத்தும் அறிதலுக்கான வழிகளே. ஆனால் அவற்றின் எல்லைகள எங்கனம் அறியமுடியும் என்பது திகைப்பை அளிக்கிறது. இவற்றில் இவை அனைத்தையும் சிறிது முயன்று பார்த்தவர்களும் இருக்கலாம். எதுவுமே துவக்கத்தில் ஒரு ஈர்ப்பும் செல்லச் செல்ல சலிப்பும் அளிக்கக் கூடியவையே. அந்த சலிப்பைக் கடந்து நிறைவை அடைவது ஒரு தவம். அது அனைவருக்கும் கைகூடுவதில்லை. சிலர் அறிந்து அதிலிருந்து விடுபடுகிறார்கள். சிலர் அறிந்து அதை தொடர்கிறார்கள். ஏன் இந்தச் சலிப்பு என்று அறியாமல்  விழிபிதுங்குவதை விட அதை அறிவது மேலானது. அந்தவகையில் அவரது சமீபத்திய புத்தகமான குரு மிகவும் முக்கியமான ஒன்று. நற்றிணை பதிப்பகம் வாயிலாக தமிழில் வெளியாகியுள்ளது.




          ஞானத்தை அடைய உறுதுணையான பத்து வாயில்களை இது சொல்கிறது. குரு, மந்திரம், தெய்வம், உடல், பிராணன், மனம், காமம், செயலும் வினையும், அகவொளி, பிறிதொன்றிலாமை என பத்து வாயிகள் குறித்து விளக்குகிறார். இவை படிநிலைகள் அல்ல. இன்றுடன் ஒன்று கலந்தவை. சிலருக்கு இதில் ஏதேனும் ஒன்று மட்டும் கூட உவப்பானதாக இருக்கலாம். மேலும் இந்தப் புத்தகம் அதற்கான எந்த ஒரு பயிற்சியையும்  விளக்கவில்லை. யோகப் பயிற்சிகளில் இருப்பவருக்கு எந்தெந்த பயிற்சிகள் மேற்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்கிறது. அவ்வாறு இல்லாதவருக்கு இலக்கியம் செயல் மற்றும் வாழ்வியல் சார்ந்து ஒரு வழியை காட்டுகிறது. இது அறுதியிட்டு ஒன்றைச் சொல்வது அல்ல.  பத்து வாயில்கள் வழியாக இந்தப் புத்தகம் அதை வாசிப்பருக்கு அனைத்து வழிகளை சுட்டி ஒரு திசை காட்டி போல நிற்கிறது. சென்று அடைவது வாசகரின் தன்முனைப்பு சார்ந்தது. 





    இந்தப்  புத்தகத்தை திரு.ஆனந்த் ஸ்ரீநிவாசன் அவர்கள்,  ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.    சிக்கலான விஷயத்தை மொழிபெயர்ப்பில் வாசிக்கும் போது அதை எளிய மொழியில் சொல்லி நீர்த்து போகச் செய்வதும், ஸ்லோகங்களை கடின மொழியில் சொல்லி அச்சுறுத்துவதும்  நிகழ்ந்துவிடும். அவ்வாறு இல்லாமல் மிகவும் நேர்த்தியாக மொழிபெயர்ப்பு செய்யப் பட்டிருக்கும் புத்தகம் இது. இதில் பல கவிதைகளை எழுத்தாளர் குறிப்பிட்டிருக்கிறார். சில வேத மந்திரங்கள் கூட உள்ளன அவையும் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.  ஞானத்தின் பாதையை அறியாதவருக்கும், அறிய விரும்புபவருக்கும்,  ஆன்மீகத்தில் இல்லக்கில்லாமல் ஓடுபவருக்கும்,   இலக்கை நோக்கி ஓடுபவருக்கும் என அனைவருக்குமே சற்று அமர்ந்து தொகுத்துக் கொள்ள இந்தச் சிறிய புத்தகம் உதவிகரமாக இருக்கும்.


குரு - நற்றிணை பதிப்பகம்

Wednesday, November 4, 2020

உபாதைகள் மொய்க்கும் தீம்புனல் உலகம்

நவம்பர் 2020 வல்லினம் இணைய இதழில் வெளியான கட்டுரை. கட்டுரை இணைப்பு இங்கே

(1)

சுதந்திரத்திற்குப் பிறகு மிகக் குறுகிய காலத்தில்  சமூகம், அரசியல்  மற்றும் சித்தாந்தம் என பலதரப்பட்ட வகையில் மாறுதல்களைக் கண்டவற்றில் தமிழகம் மிகவும் முக்கியமான மாநிலம்தான். மாறி  மாறி வரும் தமிழ் சமூக சூழலில் இன்னும் ஒரு யதார்த்த நாவலுக்கான களம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.  தான் பாடுபட்டு ஒன்றை உருவாக்கி தன் தலைமுறைக்கு வைத்துச் செல்வோம், ஏழு தலைமுறைக்கான வாழ்வாதாரத்தை அளித்துச் செல்வோம் என்று தீர்க்கமாக ஒருவரால் எதையும் சொல்லிவிட முடியாத நிலைதான் இன்றும். அடுத்த தலைமுறைக்குள் காட்சிகள் மாறிவிடுகின்றன. யதார்த்த நாவல்கள் இன்னும் எழுதப்பட இந்த குறுகிய கால மாறுதல்களும் மோதல்களும் ஒரு காரணமோ என்று எண்ண வைக்கிறது. விவசாய பின்னணி, தொழிற் பின்னணி என பல பின்புலங்களில் யதார்த்த நாவல்கள் பலவும் எழுதப்பட்டு இருக்கின்றன. அந்தத் தளத்தில் பலநாள் விவாதிக்கப்பட்டு வரும் மண் தஞ்சைக்கானது.

இன்று தமிழகத்தின் அந்த நெற்களஞ்சியம் மெல்ல மெல்ல தன் அந்தஸ்தை இழந்து வருகிறது. ‘நடந்தாய் வாழி காவேரி’ என காவிரி பாய்ந்து செழிப்பாக்கிய நெற்களஞ்சியத்தின் ஒவ்வொரு துளி உமியிலும் இன்று அரசியல் ஏற்றப்பட்டு விட்டது.  அது செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சி விவாத மேடைகளிலும் புள்ளி விவரங்களோடு அலசப் படுகிறது. இதனாலேயே இது குறித்துப் பேச ஒவ்வொரு தனி நபருக்கும் ஒரு கருத்து உருவாகியுள்ளது. விவசாயம் பொய்த்ததா? ஏரிகளும் விளை நிலங்களும் குடியிருப்பு மனைகளாவதா? காவிரியின் மண் சுரண்டலா? என பல விதங்களில் கிட்டத்தட்ட அனைவருக்கும் அது தன் சார்ந்த ஒரு கருத்தைப் பேச விட்டு வைத்திருக்கிறது. ஆனால் இலக்கியத்துக்குள் இது பெருமளவு எழுதப்பட்டதில்லை. இதற்குள் உடனடியாக மொழி / மாநில கட்சிகளின் அரசியலும் புகுந்துகொண்டதால் அரசியல் மேடைகளிலும்  இதழியல்களிலும், வணிக படைப்புகளிலும் அதிகம்  பேசப்பட்டு விட்டது. அவ்விடங்களில் புனைவுக்கும் பஞ்சமில்லாமல் இது அலசப்படுவதால்   இலக்கியத்தில் இருந்து விலகியும் இருந்ததோ என்றும் எண்ண வைக்கிறது

நெற்களஞ்சியத்துக்கு இணையாகவே, தஞ்சை ஒரு காலத்தில் தமிழிலக்கியத்தின் மையம் என்று சொல்லும் அளவிற்கு ஆளுமை கொண்ட இலக்கிய கர்த்தாக்களையும் கொண்டிருந்தது. அவர்களின் படைப்பில் காவிரி ஒரு வற்றாத சுரபியாகவே வருகிறது. பிற்காலத்தில்  காவிரி சார்ந்த அரசியல் எழுந்து வந்து தஞ்சையின் விவசாய வாழ்க்கை பாதிக்கப் பட்டு வறட்சி, டிஎம்சி ஆகிய சொற்கள் விவாதிக்கப்படத் துவங்கிய சம காலத்தில் தஞ்சையும் தன் இலக்கிய மையத்தைக் கைவிட்டிருந்தது. ஆகவே இன்றும் தஞ்சை எழுத்தாளர்கள் படைப்புகளில் தனிமனிதர்கள் மையம் கொண்ட அளவு நிலம் சார்ந்த படைப்புகள் எழவில்லை.




சில வருடங்கள் இடைவெளிக்குப் பின் வந்த யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’ நாவல் மனித உறவும் அன்பும் குறித்துப் பேசியது. அது அறிமுகப் படுத்திய நபர்கள் அதுவரைக்குமான மனிதர்களைவிடவும்  சற்று உக்கிரமானவர்களாக இருந்தனர். இருப்பினும் அதுவும் நிலம் சார்ந்த அடிப்படைகளுக்குள் செல்லாத நாவல்.  விவசாயம் / அதன் தோல்விகள் சார்ந்த படைப்புகள் தமிழில் மற்ற பிரதேசங்களில் எழுதப்பட்டன. விவசாயம் பொய்த்தபின் மனிதர்கள் வேறு சில பகுதிகளுக்குப் பிழைப்புத் தேடிச் செல்வதும் தமிழிலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டன. சோ.தர்மன், சு.வேணுகோபால், கண்மணி குணசேகரன், இமையம் போன்றோர்கள் விவசாயம் பற்றியும், இயற்கை / அரசுத் திட்டங்கள் மூலமாக விவசாய வாழ்வை இழந்து இடம் பெயரும் பாத்திரங்களையும் சித்தரித்துள்ளனர்.  ஆனால்,  தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையிருந்து அதை மையப்படுத்தி ஒரு நாவல் வருவதற்கு இத்தனை வருடங்கள் ஆகி விட்டிருக்கிறது.  அதே, சமயம் அங்கும் இங்குமாக எழுந்து வந்த குழப்பங்கள் அரசியல் ஆட்டங்கள் மண் சுரண்டல்கள் என அனைத்தையும் தொகுத்துப் பார்க்க இத்தனை காலம் தேவை என்பதும் மறுக்கமுடியாததுதான்.

அரசியல் என்று எடுத்துக் கொண்டாலும் தமிழகத்தின் முக்கிய சித்தாந்தமான திராவிட சித்தாந்தம் மையம் கொண்ட பூமி தஞ்சைப் பகுதிதான். கோயில் நகரம் என்றழைக்கப்படும் கும்பகோணம் நகர்,  பக்திக்கு முக்கியத்துவம் பெற்ற அளவே நாத்திகத்துக்கும் முக்கியத்துவம் பெற்ற ஊர்தான். அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் ஆகியோரின் திராவிட அரசியலுக்குப் பின் பெரும் எழுச்சி கொண்டதாக சாதிக்கட்சிகள் வந்தன. சித்தாந்த ரீதியாக அவற்றின் தாக்கமும் அதிகம் இருந்தது. ஒவ்வொரு பத்தாண்டிற்கும் ஒரு பெரும் குழப்பத்தை சித்தாந்த ரீதியிலும் வாழ்வாதார ரீதியிலும் சாதீய ரீதியிலும் அந்தச் சுற்று வட்டார மக்கள் எதிர்கொண்டுதான் வந்தனர். கார்ல்மார்க்ஸ் அந்த துவக்க காலத்தைத்தான் தன் நாவலின் பின்புலமாக வைத்திருக்கிறார். சிறுவனான மூர்த்தி, இளைஞனாய் ஆகும்வரை நிகழ்ந்த புறச்சூழலும் அதனால் அவன் பெற்ற ஒருவித சிந்தனை தெளிவும்தான் இந்த நாவல் என்று சொல்லிவிடலாம்.

(2)

மூன்று தலைமுறைக் கதையான தீம்புனல் நாவல், ஒரு குடும்பம் எவ்வாறு புறச்சூழல்களால் அலைக்கழிக்கப் படுகிறது என்பதை விளக்கமாகச் சொல்கிறது. குத்தகை நிலத்தில் விவசாயம் பார்த்து வரும் சோமுவின் நிலம் ஒரு செட்டியாருக்குச் சொந்தமானது. அந்த நிலத்தைச் செட்டியார் தன் பெயரில் மீண்டும் மீட்டெடுக்க வழக்குத் தொடுத்திருப்பதில் இருந்து சோமு வீட்டு சித்திரம் துவங்குகிறது. சோமுவின் பார்வையிலும் அவரது பேரன் மூர்த்தியின் பார்வையிலும் நகர்கிறது. இந்தப் பின்னணியில் மேலும் பல இடர்களைச் சந்தி்த்து நகர்கிறது அந்தக் குடும்பம். சோமுவின் பட்டறிவும் மூர்த்தியின் தர்க்க அறிவும் சந்திக்கும் இடத்தில் நாவல் முடிகிறது. இந்த நாவலின் பெரும் சவால் என்பது வாழ்ந்து கெட்ட ஒரு விவசாய குடும்ப பின்னணி கொண்ட ஒரு கதையை எப்படி ரசமாகச் சொல்வது என்பது தான்.  காரணம் இது பல தளங்களில் ஏற்கனவே அலசப்பட்டுவிட்ட ஒன்று. ஆசிரியரின் சவால் என்பது வாசகருக்கு இதை புதிதாக விவரிக்க வேண்டும்;  அந்த நிலப்பகுதியை புதிதாக சுற்றிக் காண்பிக்க வேண்டும் என்பதுதான். கார்ல்மார்க்ஸ் அதில் வெற்றி பெற்றிருக்கிறார். விவசாய குடும்பம் என்பதை வார்த்தைகளாக இல்லாமல் வர்ணனைகள் மூலமாக விளக்கியிருக்கிறார். இன்னொருவருக்குச் சொந்தமான குத்தகை நிலத்தில் உழவு செய்யும் ஒரு விவசாய குடும்பத்திற்கு அந்த நிலத்தின் மீது உள்ள உரிமை எந்தளவு என்பது ஒருவரால் உடைத்துச் சொல்ல முடியாத ஒன்று. சட்டரீதியாக அதை அணுக முடியாது. சாதீய / பொருளாதார பின்புலம் கொண்ட அது எவ்வாறு சமூகத்தில் இன்றும் கையாளப்பட்டு வருகிறது என்பது வியக்கத் தக்க ஒன்று. இந்நாவல் அதை லாவகமாகக் கையாளுகிறது. ஒரே ஊரின் வறண்ட காலமும் நீர் நிரம்பி கதிர்கள் மூழ்கி நிற்கும் காலமும் வர்ணிக்கையில் அது சார்ந்த  அனைத்து விஷயங்களையும் கொண்டுவந்து அதை ஒரு காட்சி போல சித்தரிக்கிறார். முட்டிக்கால் தண்ணீரில் நிற்கும் சோமுவின் கால் ஈரமும் நீர் நிரம்பி ஓடும் பாலத்தைக் கடக்கும் மூர்த்தியின் பதட்டமும் சிலிர்ப்பும் அப்படியே வாசகருக்கும் தொற்றிக் கொள்கிறது. அதேபோல மனிதர்களுக்குள் எழும் கசப்பு எள்ளல் போன்றவையும் எளிதாகக் கடத்தப் படுகின்றன.

அறியாச் சிறுவனிலிருந்து, விடலைப் பருவம் தாண்டி, சமூகப் பிரக்ஞை கொண்ட  இளைஞனாக நாவலில் நாயகன் மூர்த்தி எழுந்து வருகிறான்.  நாவலின் மற்ற பாத்திரங்கள் கோபால், விசாலாட்சி, பொன்னம்மாள், பெரியசாமி, புலவர், கிருஷ்ணன் ஆகியோரின் கதைகள் வழியாகத்தான் மூலக்கதையின் போக்கைத் தீர்மானிக்கும் புறக்காரணிகள் வெளியாகின்றன. அரசியல், காமம், களவு என அனைத்து அறிதல்களும் திசைக்கொன்றாக வந்து அவனை ஆட்கொள்கின்றன. திராவிட கட்சிகளிலிருந்து தங்களுக்கான மக்களை பாமக பிரித்தெடுப்பதும் அதற்கான எதிர்வினையாக விடுதலைச் சிறுத்தைகளும் களமாடுவதும் அதன் ஊடாக எழுந்து வந்த சாதிய மோதல்களும், அவற்றின் துவக்க காலத்தில் மக்களை எவ்வாறு  எல்லாம் அலைக்கழித்தன என்கிற தோற்றமும் இதில் உள்ளது. இவை தவிர மூர்த்தி இலக்கிய வாசகனாகவும் இருக்கிறான். சமூக, சித்தாந்த ரீதியிலான அனைத்தையும் தால்ஸ்தோய் தஸ்தாவேஸ்கியில் கண்டடைந்து அவன் ஒரு புரிதலை அடைகிறான்.

ஏற்கனவே இவ்வகை நாவல்களை வாசித்துள்ள, சமூக பிரக்ஞையுள்ள வாசகருக்கு இதன் கதைப் பின்புலம் புதிதாக இராது. இன்று திரைப்படங்கள், சின்னத்திரை வரை இந்தக் கருவை அலசத் துவங்கி பலகாலங்கள் ஆகிவிட்டன. ஒரு குடும்பக் கதையாக அணுக அவர்களின் முன்னோர்களின் பின்னணி தேவைப்படவும் இல்லை. அவர்கள் அந்த மண்ணின் மைந்தர்கள் என்பது அதற்கு முக்கிய காரணம்.  ஆகவே அதுவும் ஒரு சாதாரண குடும்ப வரலாறாகத்தான் உள்ளது. அதற்குள் எந்தளவு நுட்பமாக விஷயத்தை உரைக்க முடியுமோ அதை சொல்லிவிடுகிறார்.  உதாரணமாக சோமு சுந்தரவள்ளி திருமண நிகழ்வு வரும் அத்தியாயம். அன்றைய யுவதிகளின் சுதந்திர ஆற்றுக் குளியல், கணவனைப் பார்க்காமலேயே மணம் புரிதல்  என சொல்லி வரும்போதே சோமுவுடன் இலுப்பை மரக் காடு வரை சென்று ஓநாய்களின் ஊளை வரை சொல்லிவிடுகிறார். பின்வரும் அத்தியாயங்களில் அவை மெல்ல மெல்ல அழிவை நோக்கி வந்து சேரும் சித்தரிப்பை ஆற அமர விளக்குகிறார். தலைமுறைகளாக அங்கேயே இருந்த ஒன்று ஒரு ஐம்பது ஆண்டுக்குள் எங்கிருந்து எங்கு வந்து சேர்ந்திருக்கிறது என்பதை விளக்கும் நல்ல உத்தியாக அது உள்ளது.  அதேபோல மேலதிக கவனம் தேவைப்படும் சில இடங்கள் நாவலில் பூடகமாக இருக்கின்றன.  சாதி விட்டுத் திருமணம் செய்த ரஞ்சிதாவை அழைத்து வரும் கோபால் ஏன் அதே ஒதுக்குப்புற வீட்டில் அடைத்து வைக்கிறான். அல்லது அங்கு மூர்த்தியால் வரவழைக்கப் பட்டானா? அந்த வீட்டில்   கலியபெருமாள் எப்படி இறந்து கிடக்கிறார். கலியபெருமாள் மரணத்தில் இந்திராணி அல்லது மூர்த்தியின் பங்கு என்ன? இதெல்லாம் வாசகர் ஊகித்துக் கொள்ள விட்டிருக்கிறார்.  மூர்த்தி தனி ஒருவனாக கோபால் கோஷ்டியினருடன் சண்டையிட்டு அவர்களை விரட்டியதாகப் புலவர் சொல்கிறார்? ஒதுக்குப்புறமான தனித்த வீடு. அதை இளைஞர்கள் விலை மாதர்களை அழைத்து வந்து தனித்திருக்கப் பயன்படுத்துவது தவிர நாவலின் இறுதிக் காட்சியும் ஒரு சண்டையோடு முடிகிறது. இதை வாசிக்கும்போது ரஷ்ய இலக்கியத்திற்கு இணையாகத் தமிழ்த் திரைப் படங்கள்கூட மூர்த்திக்குள் பல சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்தியதா என்றுகூட யோசிக்க வைக்கிறது.

ஆசிரியரான ரத்தினம், தான் பிறந்து வளர்ந்த காலனிப் பகுதியை விட்டுவிட்டு வெளிப்புறத்தில் உருவான நகர் ஒன்றுக்குக் குடிபெயர்கிறார். ஆனால் சில நாட்களில் அவர் தன் பழைய வீட்டிற்கே வந்து விடுகிறார்.  அவர் சென்ற புதிய நகரில் அவருக்கு நேர்ந்திருக்கக் கூடிய நுட்பமான சாதீய அவமதிப்பை ஊகிக்க முடிகிறது. மேலும் அதை ரமணியும் உய்த்தறிந்து முந்தைய  அத்தியாயத்தில் வரும் உரையாடலிலேயே சொல்லவும் செய்கிறார்.  அதன் பின் ஒரு அத்தியாயத்தில் ரத்தினத்துக்குத் திருமண பத்திரிகை தரும் தமிழாசிரியர் அவர்கள் வீட்டில் ஏதும் அருந்தாமல் இருப்பது விவரிக்கப் படுகிறது. சோமுவும் மைந்தர்களும் கொண்ட அந்த  விவசாய குடும்பம் நொடித்துப் போய் விரிசல் கொள்ளும் போது மழையில் அந்த வீட்டின்  சுவர் இடிந்து விழுவது இயல்பாகவே நாவலில்  ஒரு குறியீட்டு முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது.  இருந்தாலும் பின்னொரு அத்தியாயத்தில் சுவர் விழுந்தது ஒரு குறியீடு என்று நாவலாசிரியர் கூற்றாக அது விளக்கப் படுகிறது. முந்தைய அத்தியாயத்திலேயே  சொன்ன பின்பும் அதையே மீண்டும் ஒரு அத்தியாயமாக வைப்பது / நாவலாசிரியர் வந்து விளக்குவது ஆகியவை ஒருவித திகட்டலாகத் தோன்றிவிடுகிறது.  ஆனால் ஒருபொழுதும் நாவலின் மையக் கதையையோ அதன் நடையையோ இவை மட்டுப்படுத்தவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

 

(3)

பெரிதும் மாற்றிவிடமுடியாத யதார்த்தக் கதைப் பின்புலம் என்றாலும் நாவலை வாசிக்கத் தூண்டுவது  அதன் பலதரப்பட்ட தருணங்களும் உபகதைகளும்தான். மணல் சுரண்டுவது தெரிந்த ஒன்றுதான் என்றாலும் அதற்கான முஸ்தீபுகள் எவ்வெவ்வாறெல்லாம் நிகழும் என்று சுட்டிக் காட்டுகிறார். ஒரு கள்வனின் களவு முறைகள் அவன் குடும்பம் என ஒன்றும் இந்தக் குடும்பத்தை ஆட்டுவித்துச் செல்கிறது. மூர்த்தி தான் வேலைகேட்டு சென்ற ஒருவரின் வீட்டுப் பெண்ணுடன் உருவாகும் ஒரு நிமிட விடலைப் பரிதவிப்பும் அவள் உறவு முறையில் தங்கை என்று தெரிந்ததும் உண்டாகும் ஏமாற்றமும் என சிலவற்றைக் குறிப்பிடலாம். தேசியவாத காங்கிரஸ், இனவாத திராவிட கட்சிகள், சாதிய ரீதியிலான கட்சிகள்  என மக்கள் படிப்படியாக ஒவ்வொரு தலைமுறைக்கும் பிரிந்தபடியும் குறுகியபடியும் செல்வதைக் குறிப்பிட்டுச் சொல்லாமல் வாசகரை உணரவைப்பது சிறப்பான ஒன்று.

சோமுவின் கம்பீரம் குறைவது, அவரைக் கண்டால் எழுந்து நிற்கும் பெண்கள் பின் அசட்டையாக அமர்ந்திருப்பதைச் சொல்லி விளக்குவது போல நாவலின் பல குணாதிசயங்களும் முரண்களும் வாசகருக்குக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன. சமூகத்தில் கிடைக்கும் மதிப்பு பொருளாதாரம் சார்ந்ததா அல்லது சாதீய அடுக்கு சார்ந்ததா என்கிற கேள்வி உள்ளார்ந்து எழுந்தபடியே இருக்கிறது. ரத்தினம் பொருளாதாரத்தில் உயர்ந்தாலும் அவர் சாதீய பார்வையில் குறைத்து மதிப்பிடப்படுகிறார். சாதீய நோக்கில் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் பொருளாதார ரீதியாக வீழ்ந்ததில் சோமுவும் குறைத்துத்தான் மதிப்பிடப் படுகிறார். அவரது முந்தையை கம்பீரம் குறைந்து விடுகிறது. கோபால் போல சாதீய அடிப்படையிலும் பொருளாதார அடிப்படையிலும் தன்னைத் தக்கவைத்துக் கொள்வோரே அங்கு கோலோச்ச முடிகிறது. அவ்வாறாக, சமூகம் எதை நோக்கிச் செல்கிறது என்பதன் துவக்கப்புள்ளியைத் தீம்புனல் விளக்கிவிடுகிறது. இப்பொழுது பார்த்தால் அங்கு அதற்குப் பின் நிலைகொண்ட நிலை அதுவே. புலவரும் ரத்தினமும் பேசும்போது மூர்த்தி நகர்ந்து செல்வதும் அங்கு நிகழும் உரையாடலும் அதில் எழும் ஒருவித வெறுமையும் தான் நாவலின் மையமாக நிற்கிறது. நாவலாசிரியர் சொல்ல வந்த ஒன்று இதுதான் என்றும் தோன்றுகிறது. பெரும் வார்த்தை ஜாலங்கள் இல்லாத அந்த எளிய உரையாடலை விளங்கிக் கொள்ள இந்தக் கதையைச் சொல்லியாகத்தான் வேண்டும்.




ஆனால் அதன்பின் நிகழும் ’ஆக்ஷன் பிளாக்’ ஒருவிதத்தில் கதையை முடிக்கும் அவசரமாகவே  இருக்கிறது. அல்லது நவலாசிரியரின் ஒருவித ஆத்ம திருப்தி என்று கொள்வதா எனத் தெரியவில்லை. நாவல் நிகழும் தருணம் என்பது திராவிடக் கட்சிகள் மக்களிடம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் போன்ற சிந்தனைகளை உருவாக்கி லட்சிய நோக்கில் ஒருவனின் சிந்தனையைக் கட்டமைத்த காலம். இறுதிக் கட்டத்தில் மூர்த்தி எடுக்கும் முடிவும் அது சார்ந்துதான் நிகழ்கிறது. ஆனால் சரியும் ஒரு ஸ்தம்பத்தினை சரியவிடாமல் கயிற்றை இழுத்துப் பிடிக்கும் முயற்சி போலத்தான் அது. நாவலாசிரியர் சுட்டிக் காட்ட விரும்புவதும் அந்தக் காலத்தைத்தான் என்று கருதுகிறேன். 1980களில் நிகழ்கிறது இந்த நாவல்.  2020ல் இன்று நாவல் வெளிவந்த தருணத்தில் வைத்துப் பார்க்கும்போது இன்றும் நிகழும் சாதியக் கொலைகளும் புறக்கணிப்புகளும் அதைத்தான் பறை சாற்றுகின்றன. இன்று அந்த மூர்த்திக்கு அடுத்த தலைமுறை எழுந்துவந்து களமாடுவைதைக் காணும்போது அந்த  வெறுமையையே உணரமுடிகிறது.

இந்நாவலுக்கு முன்பு புனைவுத்தளத்தில் கார்ல் மார்க்ஸ்ன்  இரு சிறுகதை தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. ’வருவதற்கு முன்பிருந்த வெயில்’ மற்றூம் ’ராக்கெட் தாதா’  ஆகிய தொகுப்புகளாக வந்திருகின்றன. அவற்றை வெளிவந்த காலத்தில் வாசித்திருக்கிறேன்.  இவற்றில் ’வருவதற்கு முன்பிருந்த வெயில்’ தொகுப்பின் ’காட்டாமணக்கு’ உள்ளிட்ட ஓரிரு கதைகளைத் தவிர்த்து, பொதுவாகவே அது பொருந்தாக் காமம், அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைஞர் வாழ்வு  என சிற்றிதழில் செல்லுபடியாகக் கூடியவைகளையே மீண்டும் சொல்லும் கதைகளாகவே இருந்தன. ஆனால் ராக்கெட் தாதா அதிலிருந்து வேறுபட்ட ஒன்று. அது மிகவும் சுவாரசியமான ஒன்று.  அதன் ஒவ்வொரு கதையும்  சில அழகான அல்லது திகைக்க வைக்கும் சிறுகதை தருணங்களைத் தன்னுள் வைத்துக் காட்டியது.  ஒரு வாசகனாக அவரது புனைவுகளில் எழுந்து வரும்  இத்தகைய தருணங்களை நான் ரசித்து வாசிப்பதுண்டு.  இந்தத் தீம்புனல் நாவலையும் அவ்வாறே அவ்விரண்டின் கலவை என்று சொல்லலாம். நாவலின் கதை எளிதாக ஊகிக்கக் கூடிய ஒன்று.   ஆனால் அதில் எழுந்து வரும் தருணங்கள், நிலம் சார்ந்த வர்ணனைகள், அவர் மனிதர்களை கவனித்து காட்சிப் படுத்தியிருக்கும் விதம் ஆகியவை நாவலை மிகவும் எளிதாக்குகின்றன. அவரது அடுத்த நாவலுக்கான எதிர்பார்ப்பையும் அவையே தூண்டுகின்றன.

 


Thursday, September 3, 2020

முரசும் சொல்லும் - ஒ) நிறைவுடன்...

முந்தையது:- முரசும் சொல்லும் - ஐ ) வரலாற்றுடன் உரையாடுதல்


ஒருவன் இலக்கிய வாசகனானாலும் தத்துவ நூலை அணுகுவது எளிதல்ல. ஆகவே அதை கதையாக விளங்கிக் கொள்ளவே இதில் நாடகீய போர்த்தருணம் சொல்லப்பட்டது. இருப்பினும் அதை நேரடியாக வாசித்து அறிவதும் கடினமே. அதுவே, இமைக்கணம் வழியாக கீதையை அணுகுவது ஒப்புநோக்க எளிதானது. ஆனால் இமைக்கணத்தை விளங்கிக் கொள்ளவும்,  வெண்முரசினை அது சொல்லவரும் வரலாறு/ அரசியல்/ மரபு / தரிசனங்கள் சார்ந்த பின்புலத்துடன் அறிய வேண்டியதும் அவசியம்.

 

இமைக்கணத்தின் படிநிலைகள் என்று சொல்வதால், அவை ஒன்றுடன் ஒன்று மேம்பட்டது என்று ஆகிவிடாது. உதாரணமாக மாத சம்பளம் வாங்கும் ஒரு பணியாளர், தனது வரையறுக்கப்பட்ட வாழ்க்கை எல்லைக்குள் வாழ்பவர். அவரால் எளிதாக மூன்றாம் அத்தியாயமான கர்ம சந்நியாச யோகத்துக்குள் வந்துவிட முடியும்.  விடுபட்ட நிலையில் பெரும் விழைவு இன்றி தன் கடமையை ஆற்ற முடியும்.  ஆனால் அவருக்கு மாத ஊதியம் வழங்கும் அந்த நிறுவன தலைவரால் அவ்வாறு இருக்க வியலாது. அவர் சாங்கிய யோகப்படி உலகியலில் உழன்று செயலாற்றி நின்று செயல் புரிதல் வேண்டும். எனவே இந்த அறிதல்கள் என்பது ஒன்றுடன் ஒன்று உயர்ந்தது தாழ்ந்தது என்று இல்லை. எந்த ஒரு வழியில் சென்றாலும் அது இறுதியாக  ஞானத்திற்கே இட்டுச் செல்லும்

 

தனக்கு உலகியலோ போரின் முடிவோ ஒரு பொருட்டு இல்லை என்று சொல்லும் பீஷ்மருக்கு செயல் / கர்ம யோகம் உரைக்கப்படுகிறது. தன் இளவயது சபதம் முதிய வயதில் அபத்தமாக தோன்றுவதம் குழப்பம் அறிவின் சொற்கள் மூலம் சிகண்டிக்கு அகற்றப்படுகிறது. இவ்வாறு வெவ்வேறு குணங்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கலந்து உருவானதே வெண்முரசு என்னும் பெருங்கதையாடல். இன்று போரும் அதற்குப் பின்னான அரசியல்  மொழி மற்றும் சித்தாந்த மாற்றங்களையும் கண்டபிறகு,  இமைக்கணத்தின் மறு வாசிப்பில் அந்தப் பெருஞ்சித்திரத்தை உணர முடிந்தது. இமைக்கணத்தினை அணுகுவது என்பது அவரவர் புரிதலுக்கு உட்பட்டது.  அவரவர் வாழ்க்கை அனுபவத்துடன் தொடர்புடையது. அவ்வகையில் இமைக்கணத்தை அவரவர் வாசித்து அறிவதே சிறந்தது.

 

வெண்முரசு வாசிப்பின் வழியே நான் அடைந்தவற்றின் தொகுப்புத்தான் இந்தக் கட்டுரைகள். சென்னை வெண்முரசு கலந்துரையாடல்கள் எனது வாசிப்பிற்கு மிகவும் உறுதுணையாக இருந்தன. கலந்துரையாடல் என்பது அளிக்கும் பலன் ஒவ்வொருவருக்கும் மிகவும் அந்தரங்கமானது.  எனக்கு அதில் வரும் உவமைகள் சொற்கள் சிறு கிளைக்கதைகள் என பல குறிப்பிடத்தக்க இடங்கள் உள்ளன. அவ்வாறாகவே, ஒவ்வொருவரும் அதில் ஒவ்வொன்றை பற்றிக் கொள்ளக் கூடும். ஆகவே இந்தக் கட்டுரைகளுக்குள் அவற்றைக் குறிப்பிடவில்லை. வேறு சந்தர்பங்களில் அவற்றையும் நான் எழுதக் கூடும். இந்தக் கட்டுரைகளைப் பொறுத்தவரையில், புதிதாக வெண்முரசு வாசிக்கத் துவங்கும் ஒருவருக்கு அந்த படைப்பு  குறித்த ஒரு குறைந்தபட்ச  புரிதலை அளிக்க வேண்டும் என்பது மட்டுமே  எனது நோக்கமாக இருந்தது.


மே-2015 முதல் ஐந்து வருடங்களைக் கடந்து நிகழ்ந்து வரும் சென்னை வெண்முரசு மாதாந்திர கூடுகையின் முதலாம் ஆண்டின் நிறைவில் எழுத்தாளர் ஜெயமோகன் லலந்து கொண்டபோது

வெண்முரசின் ஓவியங்கள் பல தருணங்களை எளிதாகப் புரிய வைத்திருக்கின்றன. தனது முதல் இலக்கிய வாசிப்பு என்பது வெண்முரசு வழியாகவே நிகழ்ந்தது என்று ஓவியர் ஷண்முகவேல் அவர்கள் கூறினார். ஆனால்  முதல் அத்தியாயத்தில் மானசா தேவி ஆஸ்திகனுக்குக் கதை சொல்வதில் துவங்கி ஒவ்வொரு இடத்திலும் கதாபாத்திரத்தின் வீச்சை ஓவியங்கள் மூலம் அவர் வாசகரிடத்தில் கொண்டு சேர்த்தார். அவருடனான ஒரு சென்னை கலந்துரையாடலின் போது அவரது உரையில் கூறிய ஒன்று அவர் எந்தளவு கவனமாக இருந்திருக்கிறார் என்று உணர்த்தியது. ஜெ. வெண்முரசை தொடராக எழுதும் போது எதிர்காலத்தில் ஏதோ ஒரு வர்ணனையில் முகத்தில் உடலில் ஒரு மச்சம் வடு போன்ற ஒரு அடையாளத்தை எழுதிவிட்டால் என்ன செய்வது என்று கருதியே எந்த ஒரு கதாபாத்திரத்தின் முகத்தையும் தான் வரையவில்லை என்றும் முகத்தைக் காட்டாமலேயே அந்த சூழலைச் சித்தரித்தது பெரும் சவாலாக இருந்தது என்றும் குறிப்பிட்டார். இன்று இந்த கட்டுரைகளுக்காக ஓவியங்களை மீண்டும் தேடிப் பார்த்து அவற்றில் எதை ஒதுக்குவது என்பதில் பெரும் குழப்பம் உண்டாயிற்று. 


ஓவியர் ஷண்முகவேல் வெண்முரசு விழாவில் கெளரவிக்கப் பட்டபோது

எனது வீட்டில் வெண்முரசு புத்தகமாக அனைவராலும் வாசிக்கப் படுவது.  
அதன் வழியாக கொற்றவை நாஞ்சில்நாடன் அ.முத்துலிங்கம் என பலரை வீட்டில் உள்ளவர்கள் வாசிக்கத் துவங்கினர். நவீன இலக்கியத்தில் இவ்வாறு வீட்டில் அனைவரும் தொடர்ச்சியாக வாசிப்பது என்பது பல ஆண்டுகளுக்குப் பிறகு வெண்முரசின் வழியாகவே மீண்டும் நிகழத் துவங்கியுள்ளது. அதை முன்பே கணித்து நேர்த்தியாக வடிவமைத்த நற்றிணை மற்றும் கிழக்கு பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும்.


அம்மா வெண்முரசு ( செந்நாவேங்கை ) வாசிக்கும் சிக்குபலகை மேடை😀 


வெண்முரசு வாசகர்களை திரட்டி “venmurasu reader” குழு மூலம் வெண்முரசு நாவல்கள் மற்றும் அதன் பலதரப்பட்ட சிறப்புகள் குறித்த கட்டுரைகள் வெண்முரசு வாசகர்கள் மூலம் தொகுக்கப் படுகின்றன. அவற்றின் மூலம் வெண்முரசின் இன்னும்  பல வாசிப்புக் கட்டுரைகளும் / உரைகளும் எழுந்து வரும். ஆனால் எவ்வளவு தொகுத்தாலும் வெண்முரசின் இறுதியில் வரும்  கிளி போல நமது உள்ளமும்  “இல்லை! இல்லை!” என்றுதான் கூவிக்கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை

 


முரசும் சொல்லும் - ஐ ) வரலாற்றுடன் உரையாடுதல்

இந்தப் பகுதி வல்லினம் கலை இலக்கிய இதழின் செப்டம்பர்-2020 இதழில் வெளியானது. இணைப்பு இங்கே:- 

 

முந்தையது:- முரசும் சொல்லும் - ஏ) கதிரெழுகை

ஐ ) வரலாற்றுடன் உரையாடுதல்


(1)

இதிகாசங்கள் என்பவை பொதுவாக உரையாடல்தான். முன்னர் நிகழ்ந்ததை சொல்பவை. இவ்வாறு வியாசர் வினாயகரிடம் சொல்லி அவர் எழுதிய ஜய கதையை சொல்கிறேன் என்று வைசம்பாயனர்  ஜனமேஜயனிடம் அவையில் சொல்லும்போது அதைக் கேட்ட செளதி ( சூததேவர்) பிற்காலத்தில் செளனகரிடம் உரைப்பதுதான் மஹாபாரதமாக நமக்குக் கிடைப்பது.  அந்த இதிகாசம் இலக்கியத்துக்குள் வரும்போது அதுவும் ஒரு உரையாடலாகத்தான் நிகழ்கிறது. அது அந்த எழுத்தாளாரின் அக உரையாடல் எனக் கொள்ளலாம். அது வழிபாடு, குழப்பம் என்கிற இரு இடங்களில் நிகழ்கின்றன. வழிப்பாட்டு மனநிலையில் அணுகும்போது அது அதன் உச்ச குணங்கள் அனைத்தையும் மீறாமல் அதற்குள்ளாகவே அவர்களின் நுட்பத்தை இன்னும் விரிவாக்கி அளிக்கிறது. பாலகுமாரன் எழுதிய  ஒரு அன்பு மந்திரம், கிருஷ்ண அர்ஜுனன் ஆகியவை இந்த வகையைச் சேர்ந்தவை.  அன்றைய பாக்கெட் நாவல்களின் குடும்ப நாவல் வகை கதைகளாக அவை உள்ளன. புலரியில் படுக்கையில் துவங்குவதே பாக்கெட் நாவலின் ஒரு மரபு. அதுபோலவே சுபத்ரையை மணந்த அர்ஜுனன் மஞ்சத்திலிருந்து துவங்கும் கதை.  அது கிருஷ்ண அர்ஜுன தோழமையை இன்னும் விரித்துச் சொல்லி வாசகருக்கு நெகிழ்வும் பக்தியையுமே அளிக்கின்றன. என் அன்பு மந்திரமும் இந்த வகைதான். அது துரோணர் துருபதன் நட்பைப் பேசுகிறது. குருகுலங்கள் ஏன் முக்கியம் என்ற உரையாடலில் இது துவங்குகிறது.  இதனூடாக அன்றாட வாழ்வின் எளிய சிக்கல்களே அணுகப் படுகின்றன.  இதிகாச பாத்திரங்களின் சிக்கலைக் கண்டு வாசகர்கள் தெளிவடைவது வேறு.  வாசகரின்அன்றாட சிக்கலை இதிகாச பாத்திரங்களுக்கு பொருத்துவது வேறு. இதனாலேயே இவை ஆரம்பகட்ட பக்தியுடன் நின்று விடுகின்றன. அல்லது கடமையை செய் பலனை எதிர்பாராதே போன்ற சொற்களின் விளக்கங்களாக அவை அமைந்து விடுகின்றன. இது இலக்கியத்தை நேர்மறையாக அணுக உதவும் என்றாலும் பாத்திரங்கள் மீது உன்னதங்கள் ஏற்றி வைக்கப்படுதலும் அவர்களைப் பெரும் பிம்பமாக்குவதும் இதன் மூலம் நிகழ்ந்து விடுகிறது

 

இந்த சிக்கல் எங்கும் இருக்கத்தான் செய்கிறது. பாஞ்சாலி சபதம் எழுதிய பாரதி அதை விடுதலைப் போருக்கான ஆயுதமாக முன்னெடுக்கிறார். அதற்குள் அதிகம் அறச்சிக்கல் கொள்ளவில்லை.  ஆனால் நவீன இலக்கியத்திற்கும் முன்பு சொன்ன ஒருவித சிக்கல் இருக்கத்தன் செய்கிறது. அந்த விதத்தில், நவீன எழுத்தாளருக்கு இதிகாசத்தை அணுகுவதில் இருக்கும் நோக்கானது தமிழின் முதல் நவீன சிறூகதை எழுத்தாளரான புதுமைப் பித்தனிடமிருந்தே துவங்குகிறது. ராமன் அகலிகையிடம் சீதையிடம் நடந்து கொள்ளும் முறைகள் வேறு வேறாக இருப்பது  புதுமைப் பித்தனைக் குழப்பியிருக்கின்றது ( சாபவிமோசனம்). அதன் பின் மற்ற படைப்பாளிகள் வாயிலாகவும் அது மெல்ல வளர்ந்து, அது இதிகாசத்தில் கொல்லப்பட்ட அனைவரின் தரப்பாகவும் ஒலிக்கத் துவங்குகிறது. ஏகலைவனுக்காக,  அரக்கு மாளிகையில் பலியாகும் ஆறு அப்பாவி வேடர்களுக்காக அவை வாதிடுகின்றன. ஒடுக்கப்படும் மக்களின் குரலாக ஆள்பவரை கேள்வி கேட்கும் குறியீடாக அவை மெல்ல முன்னெடுக்கப் படுகின்றன. அதன்பின் மெல்ல மெல்ல தோற்பவர் தரப்பு நியாயங்கள் முன்னெடுக்கப் பட்டு வென்றவர்கள் சூழ்ச்சி செய்பவர்களாக நிலை நிறுத்தப் படுகிறார்கள். அல்லது ஒரு தனிப்பட்ட நாயகனை முழுதும் அலசி ஆராய்ந்து அவன் எவ்வகையில் சூழ்நிலைக் கதையாக இருக்கிறான் கட்டுண்டு கிடக்கிறான் பிறருக்காக தன்னைப் பலி கொடுக்கிறான் என்று வர்ணிக்கப் படுகிறது. கர்ணன் பாத்திரம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். இதனால் ஏற்படும் பிரச்சனை என்னவெனில், கர்ணனுக்காக துரியோதணன் தரப்பு நியாயங்கள் பீமன் அர்ஜுனர்கள் தரப்பு அநீதிகள் தொகுக்கப்பட வேண்டிய நிர்பந்தம் எழுத்தாளருக்கு உண்டாகிவிடுகிறது. இந்த விதத்தில் இந்த வகை படைப்புகள் ஏற்கனவே உள்ள நம்பிக்கையை கேள்விக்கு உள்ளாக்குவது அல்லது ஏற்கனவே சித்தரிக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் இன்னொரு முகத்தை எடுத்துரைப்பது என்கிற இருவகைகளில் அடங்கி விடுகின்றன. முன்பு சொன்னது நேர்மறை என்றால் இதை எதிர்மறை என்று சொல்லலாம்