Saturday, November 3, 2018

மனத்துக்கண் மாசிலன் ஆதல்

ஏ ஆர் முருகதாஸ் எனக்குப்பிடித்த இயக்குநர்களில் ஒருவர். அவரது ரமணா படத்தில் சிம்ரன் குழந்தையோடு இறந்து உதிரும் காட்சியைக்கண்டுதான்  அவர் இயக்கம் மீது ஒரு ஈர்ப்பு உண்டானது. அவர் இயக்கம் என்றால் அந்தப்படத்தின்  மீது பெரும் எதிர்பார்ப்பும் உண்டாகிவிடும். ஆனால் ரமணா படம் இன்னொருவரின் கதை என ராணி குடும்ப வார இதழில் படித்தாலும் அதை நம்பியதில்லை. ( ராணியை குடும்ப இதழ் என்று நம்பாதது முதல் காரணம் ). அதன்பின் கஜினி. அதுவும் நொலன் படத்தின் காப்பி என்றார்கள். கூகுள் இமேஜில் படங்களை பார்த்தால் அப்படித்தான் இருந்தன. ஆனாலும் மொட்டை மாடி கல்பனா நொலனுக்கு தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை. அதற்குப்பிறகு அவர் இயக்கிய ஸ்டாலின் என்கிற தெலுங்கு படத்தைக் கண்ட பிறகுதான் அவர்மீது சலிப்பு துவங்கியது.  ஏழாம் அறிவு, ஸ்பைடர் போன்ற மரணமொக்கைகளைக் கண்டாலும் இடையில் வந்த துப்பாக்கியில் அந்த சலிப்பு நீங்கிவிட்டது. அதன் பின் மூவீஸ் நெள சேனலில் இண்டர்வியூ வித் வாம்பயர் திரைப்படக் காட்சியைக் கண்டதும் நான் முதலில் சிலாகித்த காட்சியே இங்கிருந்து உருவியதுதான் என அறிந்து பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகி யூ ட்டூ ப்ரூட்டஸ் என நினைத்துக்கொண்டேன்.

திரைப்படங்கள் மீது ஈடுபாடு குறைந்த பிறகு வாரமலர் நடுப்பக்கம் படிப்பதும் குறைந்துவிட்டதால் அதிகம் இந்த சங்கதிகள் பற்றி தெரியவில்லை. ஆனால்  அலுவலகத்திலோ அல்லது பள்ளி நண்பர்களுடனோ பேசுகையில் முருகதாஸ் காப்பி அடித்து படம் எடுப்பவர் என்றும் இன்னொருவர் கதையை திருடி எடுப்பவர் என்றும்  நம்புகிறார்கள் என உணர்ந்தேன். ஸ்பைடரை மைனாரிடி ரிப்போர்ட் என்று கூறும் விமர்சனங்களும் கத்தி படம் பற்றிய கோபிநயினாரின் பேட்டியும் இன்றைக்கு வந்திருக்கும் சர்கார் சர்ச்சையுமே அதைத்தான் நிலைநிறுத்தியிருக்கின்றன. உலக சினிமா ரசிகர்களுக்கும் தொடர்ச்சியாக வலையுலகில் புழங்கும் மக்களுக்கும் அதுவே அவர் குறித்த பிம்பமாக இருக்கிறது.அவர்கள் நம்ப விழையும் கருத்தும் அதுவே.

அடுத்து விஜய் மீதும் பொதுவாக ஒரு சலிப்பு சமீபகாலமாக அவர் ரசிகர்கள் அல்லாதவர்க்கு இருக்கிறது. நான் பூவே உனக்காக லவ்டுடே என அவர் படங்களை ரசிகனாக பார்க்கத்துவங்கினேன். அதற்கு முன் வந்த ரசிகன் உள்ளிட்ட கில்மா படங்களை ஒருமுறை பார்த்திருக்கிறேன் ஆனால் பூவே உனக்காக முதல் அவர் படங்களை பலமுறை பார்ப்பதுண்டு. பகவதி வரை. அந்தப்படத்திற்குப்பின் முதல்நாள் முதல் ஷோ எனப் போவதில்லை. மற்ற படங்களைப்போல நல்ல ரிவ்யூ வந்தால் மட்டும் செல்லும் வழக்கம்தான் இவருக்கும். காரணம் என்னவெனில், பகவதி படம் பார்த்த போதே அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது தெரிந்துவிட்டது. நமக்குத்தான் தோன்றுகிறதா  என அமைதியாக இருந்துவிட்டேன். ஆனால், பிறகு பார்த்தால் அது உண்மைதான். எம்ஜிஆர் இமேஜை தூக்கிப்பிடிக்கத்துவங்கி அது போன்ற கதைகளையே நாடவும் ஆரம்பித்து தன் இலக்கை நோக்கி அடியெடுக்க வைக்கத்துவங்கியதும் கச்சிதமாக நூல்பிடித்து செல்வதும் இயல்பாகவே ஒருவரை சீண்டக்கூடும். காரணம் திரை நாயகர்கள் அரசியலுக்கு வரும் தமிழக பண்பாடு. அதிலும் பெரும் ரசிகபட்டாளம் கொண்ட ஒருவரை சும்மாவே இருந்தாலும் அவர் ஓட்டு போட்டாரா, மழை வெள்ளங்களில் வருத்தம் தெரிவித்தாரா என கவனிப்பது நமக்கு பிடித்தமானது. சென்ற படத்தில் மத்திய அரசையும் விமர்சித்ததாலும் ஒரு தரப்பின் எதிர்ப்பையும் கொண்டிருக்கிறார். ஆனாலும் தன் திரை வாழ்க்கையின் இறுதி காலங்களில் அரசியலுக்கு வராமல் தான் உச்சத்தில் இருக்கும்போதே வருவார் என்பதை நானும் எதிர்பார்க்கவில்லை.

மூன்றாவதாக சன் பிக்சர்ஸ். கேபிள்டிவி ஆபீசில் கரெண்டு போனாலும் இன்வெர்டர் வைத்தாவது சன்டீவி மட்டும் ஒளிபரப்புவார்கள். இல்லாவிட்டால் மாதம் கலெக்சனுக்கு போகும்போது இல்லத்தரசிகள் நொங்கெடுத்துவிடுவார்கள். அந்தளவிற்கு பார்வையாளர்கள் அளவில் ஒரு ஸ்டிராங் பேஸ்மெண்ட் உள்ள நிறுவனம். தான் ஒரு படமெமுடுத்தால் அதை அடிக்கொருதடவை விளம்பரப்படுத்தி மாசிலாமணியைக்கூட பார்க்கவைத்துவிடும் மார்க்கெட்டிங் திறமை கூடவே உண்டு. ஆனால் அலைக்கற்றை பிரச்சனை சமயத்தில் அவர்களுக்கும் நெகடிவ் இமேஜ் உருவானது. கட்சி பின்புலமும் உள்ளதால் தேர்தலில் சார்பு நிலை எடுப்பதாலும் இவர்களாலும் நடுநிலை ஊடகம் என்கிற இடத்தை முன்பு  ஆரம்ப காலத்தில் இருந்தது போல மீண்டும் அடையமுடியுமா என்று தெரியவில்லை..

இவைகளை நெகடிவ் இமேஜ் என்று சொல்லமுடியாவிட்டாலும் அவர்கள் எதிலாவது மாட்டிக்கொண்டால் சந்தோஷப்படும் அளவிற்கு கணிசமான அதிருப்தியாளர்க்ளை சம்பாதித்து வைத்திருப்பது மூவருக்கும் பொதுவானதாக இருக்கிறது. அம்மாதிரியான சமயத்தில், மூவரும் ஒன்றாக இணையும் போது திட்டுவதற்கு ஒரு காரணத்தை  பொதுமக்கள் அனைவரும் எதிர்பார்த்தே இருந்தனர் என நினைக்கிறேன். ஆனால் இன்று பிரச்சனை என வரும்போது முருகதாஸ் திருட்டுப்பழியை சுமக்க மற்றவர்கள் அமைதிகாத்தனர். என் நண்பர்களாக உள்ள விஜய் ரசிகர்களேகூட தன் தலைவர் முருகதாஸை நம்பி ஏமாந்துவிட்டதாக கருதினர். இவை அனைத்திற்கும் காரணமாக இருந்தது ஒரு வாட்சப் செய்தி. நீதிமன்றத்தில் தான் கதையை திருடியதாக முருகதாஸ் ஒப்புக்கொண்டார் என்று சொல்லி பரவியது அது.  செய்திகளை கொஞ்சம் தேடி படித்தாலே இது நீதி மன்றத்திற்கு வெளியே முடித்துக்கொள்ளப்பட்ட வழக்கு என்பது புரியும். ஆனால் முன்பே கூறியது போல நிதர்சனம் எல்லோருக்கும் இரண்டாம் பட்சம்தான். தான் நம்ப விரும்பும் செய்தியே அனைவருக்கும் தேவையோ என்கிற ஐயமே ஏற்பட்டுவிட்டது. அதற்கேறார்போல செய்திகளை படிப்பதும் சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை இடுவதும் என்றே இருக்கிறது நிலைமை

கெளரவம் என்ற படம். அதில் மேஜர் சுந்தர்ராஜன் ( Major Sundarrajan ) தன் முதல் மனைவியை கொன்று பெரிய சிவாஜி மூலம் சட்டத்திலிருந்து தப்பித்துவிடுவார். ஆனால் சின்னசிவாஜி உள்ளிட்ட நல்லவர்கள் குழுவிற்கு இது பிடிக்காது. மேஜரின் இரண்டாவது மனைவி யதார்த்தமாக இறக்க அதில் கொலையே செய்யாத மேஜர் மட்டிக்கொள்வார். இதுபோலத்தான் முருகதாஸின் நிலையும் என்று எனக்குத் தோன்றுகிறது. சர்கார் விஷயத்தை முழுக்க படிச்சீங்களா என்று கேட்டால், கத்தி படத்துல என்னாச்சுன்னா என்றுதான் ஆரம்பிக்கிறார்கள்.

மேற்கண்ட மூவருக்கும் இருக்கும் எதிர் மனநிலை என்பது ஒரு முன்னெச்சரிக்கைதான். ஆனால் திரையில் காணும்போது  விஜயின் நடனமும் நடிப்பும் சன்டிவியின் பிரும்மாண்டமும் எப்பொழுதும் சுண்டி இழுத்துவிடும். முருகதாஸின் திரைக்கதையும் துப்பாக்கி போன்ற கதைகளில் வெளிப்படுகையில் பாசிடிவ்வாக மாறிவிடும். அதுவே பொது மக்களின் உணர்வு. ஆகவே, அது நிலையானது அல்ல.



ஆனால் நான்காவதாக ஒருவர் இருக்கிறார். அவர் இலக்கிய உலகைச் சார்ந்தவர். அங்குள்ளவர்களிடம்  முன்முடிவுகள் மாறுவதில்லை. அதை மேன்மேலும் மேம்படுத்திக் கொள்ளவே காரணங்களை தேடுவார்கள். சான்றுகளை அடுக்குவார்கள். அவருக்கும் இது தெரியாததல்ல. அந்த ஒரு காரணத்துக்காகவே, அவர்தான் இந்த படத்துக்கு வசனம் என்று தெரிந்ததும்  லைட்டாக ஒரு அல்லு இருந்தது எனக்கு. அதற்கு எந்த முகாந்திரமும் அப்போது இல்லை. ஆனால் சென்றவாரம் கதை திருட்டு என்ற பிரச்சனை வந்ததும், மீண்டும் அந்த எண்ணம் வந்தது. அதேபோல், முதலில் அதை எதிர்த்து பதிவிட்டவரும் அவரே. ( அவராக சொல்லாவிட்டாலும் உள்ளொளி தரிசனத்துக்காக அந்த கேள்வியை ஒருவேளை இந்த பதிவருமே கேட்டிருப்பார்.). இவர் ஏன் தானாக முன்வந்து இதைச் சொல்கிறார்  இவருக்கு என்ன வந்தது என சும்மா இருக்க வேண்டியதுதானே என்று நலம் விரும்பிகளும் கூறினார்கள். எனக்கும் முதலில் அப்படித் தோன்றியது.

முந்தைய இரண்டு சம்பவங்கள் ஞாபகம் வந்தன. முன்பு தான் வசனம் எழுதிய பாய்ஸ் படத்தில் ஒரு பிரச்சனை சுஜாதாவிற்கு வருகிறது. அது திரைக்கதை விஷயம்.  தான் எழுதியதல்ல என்று சொல்ல வற்புறுத்துகின்றனர். இதைக்குறிப்பிட்டு அவர் அப்போது எழுதிவந்த கற்றதும் பெற்றதும் ல் அந்த வசனங்கள் அனைத்தும் நான் அங்கீகரித்த பின்னரே இடம்பெற்றன என்றார் சுஜாதா. இரண்டாவதாக, சிவாஜி படத்தில் வந்த பிரச்ச்னை. அதில், தான் எழுதாத   அங்கவை சங்கவை வசனத்திற்கும் தானே பொறுப்பேற்றார். அதன்மூலம் பல அர்ச்சனைகள் பெறப்பெற்றார்.  சிவாஜி படத்தில் இந்த  வசனம் அவரால் எழுதப்பட்டதல்ல அது அந்த சமயத்தில் ஸ்பாட்டில் வந்த வசனம் என்று அதில் சம்பந்தப்பட்ட வேறொருவர் சொல்லியே எனக்குத்தெரிய வந்தது. அதுவரை நானும் சுஜாதா ஜாலியா எழுதிட்டார் என்றே கருதினேன். இதுவரையுமே இது ஆஃப் தி ரெக்கர்டுதான்.

இந்த சர்கார் பிரச்சனை வந்தபோது இவரும் தான் வசனம் மட்டும்தான் எழுதனேன் எனக்குத்தெரியாது என்று தப்பித்திருந்திருக்கலாம்.   அவரை யாருமே கேட்கவில்லையே ஏன் வாண்ட்டடா  வண்டி ஏறறாறு என்று எழுதுவதுபோல அமைதியாக இருந்திருக்கலாம்.  மற்ற பங்களிப்பாளர்கள் போல தந்திரமாக அமைதி காத்து தப்பித்திருந்திருக்கலாம். ஆனால் ஒரு சங்கடமோ பிரச்சனையோ வரும் போது துணை நிற்காமலோ, அங்கு தான் அறிந்த ஒன்றைச் சொல்லாமல்  போனாலோ அவர்கள் சராசரி உத்யோகஸ்தர்களாக ஆகிறார்கள் . அந்த இயல்பு சாமானியர்களுக்கானது. வாத்தியாருக்கோ  ஆசானுக்கோ உரியது அல்ல என்று தோன்றுகிறது

2 comments:

Aranga said...

//என் நண்பர்களாக உள்ள விஜய் ரசிகர்களேகூட //

ஓகோ !

காளி said...

:-))