Wednesday, February 11, 2009

நான் கடவுள்

நான் கடவுள் படத்திற்கு சில விமர்சனமும் அந்த விமர்சனங்களுக்கு பல விமர்சனங்களும் வலையுலகில் இன்னும் வந்து கொண்டே இருக்கின்றன. படத்தை பற்றி நான் எதுவும் சொல்லப்போவதில்லை என்று சொல்லியே மூன்று பதிவுகளை ஜெயமோகனும் அவரது வலை தளத்தில் இட்டிருக்கிறார்.

என் பங்கிற்கு நானும்...

எப்பொழுதும் சராசரிக்கும் கீழான விளிம்புநிலை மக்களையே சுற்றி படம் எடுக்கும் பாலா, இந்தமுறையும் அதே.... உடல் ஊனமுற்றவர்கள், பிச்சைக்காரர்கள் அவர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் வில்லன் மற்றும் வில்லனைக்கொல்லும் அகோரி சாமியார் ஆகியவர்களை சேர்க்கும் திரைக்கதையில் நான் கடவுள். மக்களிடம் பரிதாப உணர்ச்சியை ஏற்படுத்த பிச்சைக்க்காரர்களை ஊனமாக்கும் அந்த வில்லன் பாத்திரம் உக்கிரம் என்றால் அவரது அசிஸ்டெண்ட் முருகன் ( சார்..இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு கொஞ்சம் சொல்றீங்களான்னு வடிவேலுவை கலாய்ப்பாரே அவர்தான்), முருகனின் அசிஸ்டெண்ட்டாக வரும் திருநங்கை ஆகியோர் மனதை நெகிழ வைக்கும் பாத்திரங்கள். ஊனமுற்றவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் எவ்வளவு அந்நியோன்னியமாக இருக்கிறார்கள் என்பதும் இந்த படத்தை பார்த்தால் புரிகிறது. அதிலும் நண்டு சிண்டுவும் ஆசானாக வரும் கவிஞர் விக்கிரமாத்தித்தனும் அவரது கையிலிருக்கும் குருவி என்கிற குழந்தையும் கீச்சு குரலில் பேசுபவரும் மனதில் நிற்கிறார்கள் ( ஆஹா...எல்லோரையும் சொல்லிடுவேன் போலிருக்கே...). பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே பாடலும் ( மது பாலகிருஷ்ணாவிற்கு சிந்து பைரவி ஜேசுதாஸ் குரல்), தன் தாயிடம் ஆர்யா சொல்லும் நாலு வரி பாட்டும் ( ஐந்திரண்டு திங்களாய் நின்று போன தூமையே கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டு ஆனதே...) இசையை மீறீ மனதில் பதிந்தன. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பாலா எப்படி கண்டு பிடிக்கிறார் என்பது ஆச்சரியம். அதிலும் ஆர்யாவின் அப்பாவ்வாக வருபவர் தன் கண்களிலேயே சொல்லிவிடுகிறார். ஆர்யா நரமாமிசம் சாப்பிடுபவர் என்பதை காட்சியாகவோ வசனமாகவோ காட்டவேயில்லை. அகோரி சாமியார் என்று சொல்கிறார் மற்றதை நாமே புரிந்து கொள்ளவேண்டும் போலிருக்கிறது. ஆர்யாவின் அறிமுக காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் வரை அவர் பேசும் வசனம் பத்து வரிதான் இருக்கும். ஆனால் அவர் உடலும் கண்களும் நன்றாக பேசுகின்றன. அலட்சியமும், உக்கிரமும் துள்ளலும் அவருக்கு நன்றாகவே வருகின்றது. பூஜாவும் பட்டையை கிளப்பியிருக்கிரார். ( இவருக்கு விருது கிடைக்கலாம் என பத்திரிக்கைகளில் செய்திகள் வர ஆரம்பித்திருக்கின்றன).  
வசனம் ஜெயமோகன். அவரின் ஏழாம் உலகம் நாவலே அவருக்கு கை கொடுத்திருக்கிறது. நீiதி மன்ற காட்சியில் உள்ள ஏளனம் அவரது நகைச்சுவைக்கு ஒரு உதாரணம். ஏழாம் உலகம் நாவலில் வரும் முதலாளி பாத்திரம் இந்த படத்தில் வரும் முதலாளி தாண்டவனை விட மிகவும் வக்கிரமானதாக இருக்கும். இந்த பட வில்லன் நார்மல் தமிழ் பட வில்லன் தான். இவரை ஆர்யா அடித்து கொல்லும் காட்சி சடாரென ஆரம்பிக்கிறது. கொஞ்சம் நந்தாவில் வரும் முதல் சண்டைகாட்சி போல  ஒரு பில்டப்புடன் ஆரம்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் நம் எதிர்பார்ப்பே அவர் எதிர்பாராத முறையில் படமெடுப்பார் என்பதுதான்.

படம் பிடித்திருக்கிறதா இல்லையா என்று கேட்டால் பிடித்திருக்கிறது என்று சொல்வேன். நன்றாக இருக்குமா ஓடுமா என்பவை எனக்கு தேவையில்லாதவை.

2 comments:

வண்ணத்துபூச்சியார் said...

Hey wanna watch all International movies review..

அது போன்ற சினிமாக்களை பற்றி அறியவும் பார்த்து ரசிக்கவும் அன்புடன் அழைக்கிறேன். உலக சினிமா பற்றிய வலையை பார்க்கவும்

http://butterflysurya.blogspot.com

காளி said...

கண்டிப்பாக வண்ணத்துபூச்சி...