Monday, January 15, 2018

ஞாநி -நினைவுகள்

சொல்புதிது குழுமத்தில் லட்சியவாதிகள் என நீங்கள் கருதுபவரை குறிப்பிடுங்கள் என்று சொல்லி ஒரு திரி துவங்கப்பட்டது. அதில் நான் ஞாநியின் பெயரை குறிப்பிட்டிருந்தேன்.  அதற்கு மறுநாள் நண்பர்களுடனான தனிப்பட்ட  விவாதத்தின் போது ஞாநி பெயரை நான் குறிப்பிட்டதற்கான காரணம் கேட்கப்பட்டு, பின் வேறு விவாதங்களில் அந்த கேள்வி தேய்ந்து மறைந்துவட்டது.  பிறகு எனக்கே ஆச்சரியமாக நான் கேட்டுக்கொள்வதும் அதையே! லட்சியவாதி என்றதும் ஏன் அவர் ஞாபகம் வந்தது என யோசித்திருக்கிறேன்.

அவரை எனக்கு தெரியும் ( எனக்கு ஐஜியை தெரியும்! ). அவருக்கும்  என்னை நினைவிருக்கலாம். பொதுவாகவே  ஞாநிகளை குறைத்து மதிப்பிடமுடியாது.






தவிப்பு தொடர் வந்தபோது படித்திருந்தாலும், அது வந்த சில மாதங்கள் கழித்து ஞாநி மீது தவறாக சொல்லப்பட்ட ஒரு கட்டுரைச் செய்திக்கான அவரின் மறுப்பு விகடனில் வெளியானது. அந்த செய்தியின் பின்புலம் நினைவில் இல்லை. ஆனால் அதில் அவர் எழுதியிருந்தது, சமரசம் இல்லாத நேர்மை என்பதை நான் கொள்கையாக வைத்திருக்கிறேன் என்கிற ஒரு வரி. அது துவக்கமாக இருக்கலாம். அதன்பின்னர் பல வருடங்கள் கழித்து தீம்தரிகிட  இதழை சூலூர்பேட்டையில் விஞ்ஞானி முருகன் வீட்டில்வாசித்தேன். அதில் பாபா படத்திற்கான கடுமையான விமர்சனமும் கூடவே எஸ்ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு குட்டும்  போட்டிருந்தார். அதன்பின்னர் அவர் வீட்டிலிருந்த பழைய தீம்டரிகிட இதழ்களை வாசித்தேன்.

ஆர்குட் காலங்களில் அதில் தீவிரமாக இருந்த எழுத்தாளர்களில் அவர் ஒருவர். அல்லது ஒருவர் அவர்தான். அவரது community மிகவும் கவனமாக அதே நேரம் சுதந்திரமாகவும் இருக்கும்.அவ்வப்போது  அவருடன் விவாதிப்பதும் (  என்ன கைய புடிச்சி இழுத்தியா!  ) சாத்தியமானது.  கலைஞர் ஓய்வு பற்றி அவர் எழுதிய ஓ பக்கம் அப்போது பலத்த சர்ச்சையை கிளப்பியிருந்த்து. பின் சிவாஜி படம் வெளிவந்து அதற்கும் அவர் விமர்சனம் ரசிகர்களால்  ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்து. ( அதாவது என்னால் )

அந்த நேரத்தில்தான் அவரது முனியன் நாடகத்தை தி.நகரில் பார்த்தேன்.  அது அணுக்கழிவு சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு நாடகம். பாதல் சர்க்காரின் நூற்றாண்டை முன்னிட்டு் அந்த நாடகத்தை நடத்தினார் என நினைவு. முனியன் யாரு என கதாபாத்திரங்கள் தேடிக்கொண்டு இருப்பார்கள். அப்போது பக்கத்தில் நின்று பார்வையாளர்போல் இருந்தவர், இதோ நானிருக்கிறேன் என்பது போல ஒரு  எங்கவீட்டுபிள்ளை வசனத்தை ஒத்த ஏதோ ஒன்றை சொல்லி மேடையேறினார். அவர்தான் முனியன் என்பதை விட அவர் திடீர்க்குரலில் அதிகம் அதிர்ச்சி அடைந்தேன். அவரோடு பேசியது அன்றுதான். சிவாஜி பற்றிய விவாதத்தில் எனக்கே சரியாக  தெரியாத ஒரு விஷயத்தை வைத்து விவாதித்ததற்கு மன்னிப்பு கேட்டேன். கருத்துதான் முக்கியம் நீங்க ஆள டேமேஜ் பண்ற மாதிரி பேசினீங்கன்னா நான் கண்டுக்க மாட்டேன் என்றார். அதன்பின் ஒருமாதம் கழிந்து  அவருடைய எண் மகன் நாடகம் பார்த்துவிட்டு வந்தபோது கூட வந்த ஒரு நண்பரிடம் தீம்தரிகிட இதழ்  இப்போது ஏன் வருவதில்லை என்று கேட்டேன். அதில் அரசியல் சார்ந்து பல கட்டுரைகள் வரும். ஆனா அதற்கு விளம்பரங்கள் மூலம் ஸ்பான்சர் செய்தவர் அதில் இலக்கியம் சார்ந்து நிறைய பக்கங்கள் ஒதுக்கலாம் என சொன்னபோது, நான் நடத்தும் பத்திரிக்கைக்கு நீங்க உபயம் பண்றீங்க.. நீங்க உபயம் பண்ற பத்திரிக்கைய நான் நடத்தல என சொல்லி அதை நிறுத்திவிட்டதாக கூறினார்.

அவர் எழுதிய ஓ பக்கங்கள் விகடனில் வராமல் குமுதத்தில் வரத்துவங்கின. அறிந்தும் அறியாமலும் தொடரும் கூட பாதியில் நின்றது. மனிதன் மிருகங்களை பழக்கி அடக்கி ஆளுவதுதான் சிறந்தது. ஜல்லிக்கட்டு போன்ற வன்முறை விளையாட்டுகள் தேவையில்லை என்பது போல அவர்  எழுதிய கட்டுரையை மக்கள் கருத்துக்கு  விரோதமானது என விகடன் நிறுத்தியதால் வெளியே வந்துவிட்டதாக கூறினார். அப்போது கிழக்கு பதிப்பக மாடியில் நிலாக்கூட்டம் நடத்துவார்கள். டோண்டு ராகவன் அவர்களை சந்தித்தும் அங்குதான்.

சில மாதங்கள் கழிந்து  எழுத்தாளர்களை சந்தித்து வாசகர்கள் உரையாட கேணி கூட்டங்களை ஏற்பாடு செய்த போதுதான் மீண்டும் அவரை நேரில்பார்க்கிறேன். அவர் அதற்கிடையில் நரம்பையே பூணூலாக அணிவதால் நிஜ பூணூலை துறந்துவிட்டார் என அடுக்கு மொழி வசனங்களால் வசைபாடப்பட்டிருந்தார்.  அப்போது அவர்வீட்டிற்கு போகிறேன். குடிக்கத் தண்ணீர் கேட்டபோது உள்ளே கைகாட்டினார் ஒருவர். சமையலறையில் போய் நாமே தண்ணீர் எடுத்து குடித்துக்கொள்ளலாம். அவர் தனியாக ஒரு ரூமில் இருப்பார். ஒரு வழிப்போக்கனுக்கும் அளிக்கப்படும் அந்த சுதந்திரம் மிகவும் ஆச்சரியமானது. ஒரு கனவு இல்லத்திற்குரியது.  அன்று திலீப்குமார் உரை என்றால் அவர் புத்தகம் மேஜை மீது இருக்கும். கூட்டத்திற்கு முன்பு எழுத்தாளரை படித்துவிட்டு வந்து கேள்வி கேட்கலாம். நான் கடவு தொகுப்பை  படித்தது  அங்குதான். அன்று பேசப்படும் எழுத்தாளரின் புத்தகங்கள் இருக்கும். அது மட்டுமே இருக்கும். ஒருமுறை ராமானுஜம் அவர்கள் மாண்ட்டோ பற்றி பேசியபோது பதிப்பாளர் வேறு புத்தகங்களையும் பரப்பியிருந்தார். ஞாநி அவருக்கு ஒரு மூலையில்  இருந்த கட்டுக்கட்டான புத்தகங்களை காண்பித்தார். அவை ஞாநியின் புத்தகங்கள். அவர்அதையே அங்கு வைப்பதில்லை

மழை பெய்தால் கூடத்தில் கூட்டம் நடக்கும். ஆனால் ஒருபோதும் கேன்சல் செய்யமாட்டார். வருபவர்களிடம் பண உதவி ஏதும் வாங்க மாட்டார். எழுத்தாளர்க்கு ஐநூறு, வருபவர்களுக்கு டீ பிஸ்கட்,  அதை பாஸ்கர் சக்தி தந்திடுவார். நீங்க பணம் தர விரும்பினால் அன்றைய எழுத்தாளரோட புத்தகத்தை வாங்கிட்டு போங்க என்பதுதான் அவர் பதில்.
தமிழகத்தின் அத்தனை எழுத்தாளர்களையும் அங்கு பார்த்திருக்கிறேன். இறுதியாக ஷோபா ஷக்தி கலந்துகொண்ட கேணி கூட்டத்திற்கு சென்றேன். இமையம் கலந்துகொண்டது அதற்கும் முன்பு எனில் அதுவே இறுதியானது.  அதன்பிறகு ஒரு கூட்டம் மட்டும் நடந்தது என நினைக்கிறேன்.

ஞாநியினுடைய டைமீங் மிக சுவையானது. அவர்வீட்டில் ஒரு பறை இருக்கும்.
கிருஷ்ணப்பிரபு அதை அடித்தபடி 'ஞாநி,  மேனகா காந்தி இதைப் பார்த்தா என்ன சொல்வாங்க?' என்றார்.
' இது எந்த மாட்டோட தோல்னு சொல்லுவாங்க' என்றார் ஞாநி உடனே..


இன்றும் சென்னை வெண்முரசு கூட்டங்களில் கேணி கூட்டத்தின் சாயல்  இருக்கும்.   அதன் நேரந்தவறாமை,  இடைவெளி விடாமல் மழையோ பவர்கட்டோ மாதக் கூட்டத்தை விடக்கூடாநு என நடத்துவது,  இடையிடையே வாசகர்கள் சிலர் வந்து சிற்றுண்டி எடுப்பது என ஞாநியிடமிருந்து சற்றுத்  தள்ளி நின்று கற்றவைகளை செயல்படுத்துவதுண்டு.

வலதுசாரிகள் இடதுசாரிகள் திராவிட இயக்கம் என அனைத்து பக்கங்களில் இருந்தும் அவருக்கு வசைகள் வந்துகொண்டேயிருக்கும். அவர்களில் சிலரால் அவர் கொண்டாடப்பட்டும் இருந்தார். நான்  முகநூலை விட்டு விலகியதும் அவருடனான கொஞ்சநஞ்ச follow வும் போனது. போனவருடம்  அசோகமித்திரன் இறந்தபோது மீண்டும் ஒரு விவாதத்தில் ஈடுபட்டார். அதே வேகம் அதே கோபம் அதே புள்ளிவிவரம்  ( ராஜ குலோத்துங்குவை விட்டுவிட்டாரைய்யா ) என பார்த்தபோது டயாலிஸிஸ் அரக்கனிடமிருந்து மீண்டு வருவார் என நம்பத்தோன்றியது. டயாலிஸிஸ் பற்றி அவர் முகநூலில் பதிவிட்டதும் அவரின் கலைஞர் பற்றிய கட்டுரையை அவருக்கே சுட்டி அளித்து தன் கீழ்மையை சிலர் காட்டினர். இவர் அவர்களுக்கும் லைக் இட்டுக்கொண்டிருந்தார். அவர்களில் சிலர் பிற்காலத்தில் ஞாநியைப்பற்றி ஒருவரி எழுதக்கூடும்.  தான் நம்பிய நேர்மையை பெரும்பாலும் மற்றவர்க்கு எவ்வகையேலும் கடத்திக்கொண்டே இருந்தார். அவருக்கு என் அஞ்சலிகள்.  பிரார்த்தனைகள். வாழ்க நீ எம்மான்!
















No comments: