முந்தைய பதிவில் ஒரு விஷயத்தை கவனித்திருப்பீர்கள். எங்கும் எழுத்தாளர். ஜெயமோகன் குறித்து ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் அவர் அமர்வுகளில் பங்குபெற்று கேள்விகள் எழுப்பவே இல்லை. முன்பு ஏற்காடு காவிய முகாமில் அமர்வில் பங்கேற்க வெளியே இருந்த இருவரை கண்டிப்புடன் உள்ளே துரத்த, அப்போது அரங்கா பதறியபடி இடைபுகுந்து அவர்கள் சமைக்க வந்தவர்கள் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்த வரலாறு உண்டு. இந்த முறை மொத்த அமர்வுகளையும் ஜாஜாவிடம் (ஜா.ராஜகோபாலன்) விட்டு விட்டு வெளியே சென்று அமர்ந்திருந்தார்.
எங்கே என தேடினால் கீழே வந்து தெருவை வேடிக்கை பார்ப்பது, அவசரமாக அரங்கில் நுழைபவருக்கு வணக்கம் சொல்வது போன்ற சீரிய பணிகளில் இருந்தார். அப்போது நானும் விஜயசூரியனும் சைகையில் பேசிக்கொண்டதன் கருத்துப்படம்தான் சைடில் இருப்பது,
(ஒரு கிசுகிசு:- அந்த பதிவில் குறிப்பிட்டுள்ள "தியேட்டரில் முன்சீட்டில் ஆடிக்கொண்டிருந்த அண்ணன்களில்" ஒருவர் இன்று டோக்கியோவில் இருக்கிறார். சிறுகதை தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். அவர் எழுத்தாளர் ஆகிவிட்டபடியால் அவர் பெயரை நாகரீகம் கருதி சொல்லாமல் தவிர்க்கிறேன்.
காலை தெலுங்கு கவிஞர் சின்ன வீரபத்ருடுவின் அமர்வு. நான் ஐந்து வருடங்கள் ஆந்திராவில் பணிபுரந்ததால் எனக்கு தெலுங்கு நன்றாக பேச வரும். தெலுங்கு திரைப்பாடல்களும் தெம்மாங்கு பாடல்களும் மிகவும் பிடிக்கும். இசையேயான மொழி அது. ஆகவே அது சார்ந்து அவரிடம் கேள்விகள் எழுப்பினேன். தமிழில் பாரதிக்கு பிறகு கவிதையில் சந்தம் குறித்து யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. இசையேயான தெலுங்கில் எப்படி என கேட்டேன். அந்த மரபு குறித்து நீண்ட பதில் கூறினார். சில கவிதைகளை பாடிக்காட்டினார். 1970களில் சந்தம் வேண்டாம் என ஒரு தம்பிக்கை உண்டானதும் அவ்வாறு அவரது இரண்டாம் தொகுப்பில் கவிதை வடிவம் மாறியதும் பின் தற்போது அவரும் அதை விரும்புவதாகவும் கூறினார். அந்த அமர்வை அவரது கவிதைகளை மொழிபெயர்த்த ராஜு அவர்கள் மட்டுறுத்தினார்.
அதன் பிறகு இயக்குநர் வஸந்த் அமர்வு. சுபஸ்ரீ அவர்கள் ஒருங்கிணைத்தார். அந்த அமர்வில் கேளடிகண்மனியில் வரும் பாலகுமாரன் முதல் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் வரை அவர் இலக்கியத்தோடு கொண்டிருக்கும் ஒட்டுதல் குறித்து கேட்டேன். அது தனிப்பட்ட ஆர்வம் என்றார். உண்மைதான். அவர் தமிழிலக்கிய வாசகரில் ஒருவர்தான்.
அதன்பின் விக்ரமாதித்யன் அமர்வு. அதை சுநில் ஒருங்கிணைத்தான். விக்ரமதித்யன் அவர்கள் நாற்காலியில் உட்கார்ந்து பேச இலகுவாக இல்லை என நின்று கொண்டு பேசினார். ரகளையான அமர்வு அது. அந்த தாமிரபரணிதான் நான். திருநெல்வேலி ஒரு சுக்கிர ஸ்தலம் என்று அவர் அடித்த பன்ச்கள் ஏராளம். அவர் தமிழின் அத்தனை வகையிலும் எழுதிப்பார்த்திருக்கிறார். வரம்பு மீறிய கவிதைகள் முதல் பக்திக்கவிதைகள் வரை. அவர் குறித்து நான் எழுதிய கட்டுரை தளத்தில் வெளியாகியிருந்தது. நேர்ப்பேச்சில் அது குறித்து நிறைய பேசினார்.
இறுதியாக ஜெய்ராம் ரமேஷ் அவர்களின் அமர்வு. அவர் எழுதிய புத்தரின் ஆசியஜோதி புத்தகம் குறித்த உரையாடல் நீண்டு சென்றது. பெளத்தம் தனிமனிதனுக்கு அணுக்கமாவதை விட சமூக இயக்கமாக ஆகும்போது பொற்காலமாக திகழும் என்று கூறினார். அதற்கு முரணான சூழலாக விளங்கும் இலங்கையின் பெளத்த அரசியல் குறித்து கேள்வி கேட்டிருந்தேன். எந்த ஒரு மதத்திலும் அரசியல் நுழைந்தால் இப்படி ஆகிவிடுகிறது. அதில் பெளத்தமும் விதிவிலக்கல்ல. தான் கூறுவது அந்த அரசியல் புத்தர் அல்ல என்று கூறினார். I respect your sentiment என்று இறுதியில் கூறினர். சூழலியல் குறித்தும் இந்திராகாந்தியின் பங்கு குறித்தும் புதிய விஷயங்களை அவர் கூறியது நன்றாக இருந்தது.
அவரது அமர்விற்குப் பின் கல்பனா ஜெயகாந்தின் "இம்ம் என்றமைந்திருக்கும் ஆழ்கடல்" கவிதை தொகுப்பு வெளியானது. இவ்வாறு அரங்கில் வெளியானவை தவிர புத்தக ஸ்டால்களில் புத்தக வெளியீடுகள் நிகழ்ந்தவண்ணம் இருந்தன. ம.நவீன் எழுதிய சிகண்டி நாவல், கே.ஜே.அசோக்குமாரின் 'குதிரைமரம் , வைரவன் லெ ரா எழுதிய 'பட்டர் பி' ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளியாயின.
அதன்பின்னர் விழா துவங்கியது. விழா பதிவுகளையும் ஆவணப்படத்தையும் பார்த்திருப்பீர்கள். அதன்பின்னர் இரவு உணவோடு விஷ்ணுபுரம் விருது விழா நிறைவு பெற்றது. இந்த இரு நாட்களிலும் நாஞ்சில் நாடன் அவர்களை அழைத்து வந்தபோதும் கொண்டு போய் விடும்போதும் யோகேஸ்வரனுடன் நானும் இணைந்து கொண்டேன். மறுநாள் காலை ஜெ. லக்ஷ்மி மணிவண்ணன் மற்றும் கவிஞர்.விக்ரமாதித்யன் ஆகியோரை சந்தித்து விடைபெற்றுக்கொண்டேன். இவ்வாறாக உலகம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியது.
விழாவிற்கு பிறகான உரையாடலில் கவிஞரை விடவும் பகவதி அம்மாள் இன்னும் அணுக்கமானவராக ஆனார். அவர் ஒரு சிவாஜி ரசிகை. வசந்தமாளிகை படத்தின் வசனங்களைப் பேசிக் காட்டினார். அன்று காலைதான் அவர் அறிமுகம். காலையில் நடைபயணத்தின் போது அவரை கவிஞருடன் கண்டிருந்தேன். அவருக்கு வணக்கம் வைத்து விட்டு கவிஞருடன் பேசிக்கொண்டிருந்தேன். அதை ஞாபகம் வைத்திருந்து நீ காளிதாஸ் தான.. காலையில் என்னை பார்த்தும் பேசாம போனியே என்று கேட்டார். ஆவணப்படத்தில் ஒரு காட்சி வருகிறது. "இந்தா.. குடிக்க தண்ணி குடு" என்கிறார் கவிஞர். பின் "காதுவேற சரியா கேட்காது" என தனக்குள் முணகுகிறார். பகவதியம்மாள் தண்ணீர் கொண்டு வந்து தருகிறார். "ஆங்.. என்னதிது ? " என்கிறார் கவிஞர். "ஆங்.. டீ.. " என்கிறார் இவர். அது அவர் கேட்ட தண்ணீர்தான் என்பது அவர் குடிக்கும் வேகத்தில் நமக்குப் புரிகிறது. சிரிப்புத்தான் வருகிறது. இப்படியே அவரை லெஃப்ட் ஹேண்டில் டீல் பண்ணிருக்கார். அவருடன் உரையாடிய போது கவிஞர் இளம்வயதில் பாக்யராஜ் போல அழகாக இருப்பார் என்றார். விருதாளரின் மனைவியை சுற்றி உட்கார்ந்து அரட்டை நிகழ்ந்தது விஷ்ணுபுர வரலாற்றில் முதல் முறை. இந்த விழாவின் நாயகர் கவிஞர்.விக்ரமாதித்யனாக இருக்கலாம். ஆனால் 'மக்களின் முதல்வர்' பகவதி அம்மாள்தான். அவரிடம் ஆசி பெற்றுக்கொண்டேன். மீண்டும் ஒரு நிறைவான விழா. அடுத்து சென்னையில் புத்தக வெளியீடுகளும் கண்காட்சியும் இருக்கிறது. இந்த இனிமை தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது பிரார்த்தனை
No comments:
Post a Comment