Sunday, June 3, 2018

இரவுக்கு ஆயிரம் கண்கள்

இலக்கிய உலகில் தொண்ணூறுகளில் பிறந்தவர்கள் பற்றி சுநீல் கிருஷ்ணன் ஒரு கோட்பாடு சொல்வதுண்டு. இது தொண்ணூறுகளிலோ அதற்கு முன்னோ  பத்தாம் வகுப்பு முடித்த அதிர்ஷ்ட்டசாலிகள் பற்றியது.  விவேக்-ரூபலா, பரத்-சுசீலா, நரேந்திரன் - வைஜெயந்தி  ஆகிய நாயக நாயகிகளை அறியாதோர் அறியாதோரே...!!! என வாலி ஸ்டைலில் சொல்லலாம்

முறையே ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் சுபா உருவாக்கிய இந்த நாயகர்களோடு இவர்களின் உப நாயகர்களும் கூட இருப்பார்கள். விஷ்ணு-கோகுல்நாத், ஜான் சுந்தர் அனிதா என. துப்பறிவாளன் பட பிரசன்னா போல, கடைசியில் முடிச்சவுக்கவும் செய்வார்கள். இவர்கள் தனியாக துப்பறியும் நாவல்களும் உண்டு

இதில் விவேக் விஷ்ணு கோகுல்நாத் போன்றவர்கள் க்ரைம் பிராஞ்ச். ஒரு சிபிஐ டைரிக் குறிப்பில் வரும் சிபிஐ மம்மூட்டி முகேஷ் ஆகியோரைப் பார்த்த போது இவர்கள் ஞாபகம் வரும். ராஜேஷ்குமாரின்  விவேக் சிங்கம் சூர்யா போல. ஸ்டிரிக்ட் ஆபீசர். ரூபலாவைத்தவிர மற்ற பெண்களுடன் அவர்கள் கனவில் மட்டுமே டூயட் பாடுவார். ரூபலாவிடம் கூட, எப்படி ஒரு தங்கப்பத்தம் சிவாஜி  கேஆர் விஜயாவை கொஞ்சுவரோ, ஊமைவிழிகள் விஜயகாந்த் சரிதாவைக் கொஞ்சுவாரோ அந்தளவு டிஸ்டன்ஸ்  வைத்துக்கொள்வார். அதற்கே பாரத் என்றொரு மகனும் பிறந்துவிட்டான்.

மற்ற இரு ஜோடிகளும் பிரைவேட் டிடெக்டிவ்ஸ்! அவர்களுக்குள் அனைத்து சில்மிஷங்களும் உண்டு. 


சுசீலாவின் டி ஷர்ட் வாசகங்கள் இப்போது திரைப்படத்தில் பெண்கள் அணிவதாக காட்டப்படும் வாசகங்களைவிட அதிகம் கற்பனை வளம் கொண்டவை. உதாரணமாக,  “words on the office doors".  சிலவருடங்கள் கழித்து நான் சென்னை வந்து office door களைக் கண்டு புரிந்துகொண்டேன்.

இன்னும் புத்திசாலித்தனமானவை சுபாவின் சம்பாஷணைகள். இதில் பல அவர்கள் வசனமெழுதிய படங்களில் உள்ளன.

ஒரு போலீஸ்காரருக்கு அம்பது ரூபாய் லஞ்சம் கொடுத்துவிட்டு சொல்லுவார், “ சார், அப்படியே பாக்கெட்டுல வச்சுகங்க! முகந்து பார்க்காதீங்க..”

சிறிது நேரம் கழித்து வைஜ்..” ஏன் முகந்து பாக்கக்கூடாதுன்னு சொன்ன..”

“ அப்படி சொன்னாத்தான் முகந்து பார்ப்பாரு.. இல்லைன்னா பாக்கெட்லதான் வச்சுப்பாரு”

“முகந்து பார்த்தா என்ன”

“ ஒண்ணுமில்ல...”

சுபாவின் உருவாக்கத்தில் செல்வா -முருகேசன் ஜோடிதான் டாப். செல்வா ஓய்வு பெற்ற ராணுவ வீரர். காலில் குண்டடி காயம் வேறு. அதனால் தாங்கித்தாங்கித்தான் நடக்க முடியும்.  முருகேசன் நம்ம லூஸ்மோகன் மாதிரி சென்னைத்தமிழ் பேசுவார் ஆனால் காரியத்தில் கில்லி. அவருக்கு மட்டும் ஒவ்வொரு நாவலுக்கும் ஒவ்வொரு அத்தை வீடு. மற்ற அனைவருக்கும் வேறு நாயகிகள் இல்லை.  சுபா முருகேசனைப் பற்றி அளிக்கும் ஒரு அறிமுக குறிப்பு,

நம்ம நாய் மணி என்னா நேக்கா அவன புடிச்சிடுச்சிப்பா..” என்று முருகேசன் சொன்னபோது அவன் வலது கை மணியை தடவிக்கொண்டிருந்தது. இடதுகை கியர் போட்டுக்கொண்டிருந்தது.. 

 மேற்கண்ட அனைவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை உண்டு. ஒரு கேஸிலும்  இவர்கள் தோற்றதில்லை.

இவர்கள் தவிர இன்னும் இருவர் உண்டு.. கணேஷ் வசந்த்

அனைவரையும் ஒருசேர பார்த்த படம் இரவுக்கு ஆயிரம் கண்கள்
 நாயகன் பெயர. பரத், வில்லன் கணேஷ், நாயகி சிசீலா, முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் நரேன் வைஜெயந்தி, வசந்த், முருகேசன் என பாக்கெட் நாவல் காலம். ஆனால் கதாபாத்திரங்களின் இயல்புகளுக்கும் இந்த பெயர்களுக்கும் சம்பந்தமில்லை.  சுசீலா பயந்து அழுகிறார்.  கணேஷ் சிசிடிவி இருப்பது கூட தெரியாமல் இருக்கிறார். பென்-ட்ரைவில் முக்கியமான ஃபைலை வத்திருக்கிறார். சுஜாதா உயிரோடு இருந்தப்பவே மேகக் கணினியகம்” நு எழுதிவச்சும் கணேஷுக்கு இந்த நிலமை. வைஜெயந்தி என்ற பெயர் கொண்ட எழுத்தாளருக்கு ரமணி சந்திரன்னே பேர் வச்சு அவருக்கும் ஒரு நன்றி செலுத்திருக்கலாம். வைஜெயந்தியை இப்படி பார்க்கவேண்டிய துர்பாக்கியம் நேர்ந்திருக்காது. அத்தனையையும் மீறி கொஞ்சமும் போரடிக்காமல் படத்தை பார்க்க வைக்கிறது இதன் திரைக்கதையும் திருப்பங்களும்.


நேர்மையான காதல் நேர்மையான துரோகம் நேர்மையான பழிவாங்கல் நேர்மையான காமெடி என இது ஒரு ராஜேஷ்குமார் டைப் சீரியஸ் கதை. ஆனால் பெயர்கள் அனைத்தும் பழைய பாக்கெட்நாவல் சூப்பர் நாவல் காலங்களை ஞாபகப் படுத்திவிட்டன..

No comments: