இமைக்கணக் காட்டில் அவன் அமர்ந்து உரைத்த அந்த சொல்குறித்தும் என் வாசிப்பினை இனி வரும் பதிவுகளில் எழுதுகிறேன் என்று முந்தைய பதிவில் குறிப்பி்ட்டாலும் அதற்கு முன் இளையயாதவனைப் பற்றிய ஒரு கழுகுப் பார்வையை தொகுத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. ஆகவே இளைய யாதவன் குறித்த என் முந்தைய குழப்பங்களும் வெண்முரசு மூலம் நான் கண்டடைந்தவைகளும் பற்றி முதலில் எழுது்கிறேன்
ஆ) இளைய யாதவனின் சொல்
எந்த ஒரு உயிருக்கும் அடிப்படை உணர்ச்சிகள் மூன்று. பசி,
பயம், காமம். இன்னொரு வகையில் சொன்னால் உண்ணும் வேட்கை,
வென்று எழுதல், தன் இனத்தைப் பரப்புதல். எல்லா உயிர்களுக்குமான அடிப்படை
நெறி என்பது இது. இந்த அடிப்படை விதிகளில்
இங்கிருந்து துவங்கி பரிணாமம் அடைந்து, மனித இனத்திற்கான நெறிமுறைகள் வளர்ந்து வருகின்றன. அந்தந்த
காலங்களை அதற்கேற்ற நெறிகள்
முறைப்படுத்துகின்றன. அங்கிருந்து திமிர்ந்து எழுந்து அடுத்த கட்ட நகர்வை நோக்கி
ஒருவர் எழுகிறார். அவர் புதிய விதிகளை சமைக்கிறார். அதன்பின்னர்,
அந்த அடுத்தக்கட்ட மேம்படுத்தப்பட்ட
நெறிகளுடன் சமூகம் முன்செல்கிறது. ஒரு கட்டத்தில் அதன் போதாமைகளும் எழுந்து வரும். அங்கிருந்து
மேம்பட்ட ஒன்றை ஒருவர் உரைக்கிறார். அதிலிருந்து நெறிகள் அடுத்த கட்ட நகர்வை
எடுக்கிறது. இது போன்று புதிய விதி சமைத்தவர்களை யுக புருஷர்கள்
என்கிறோம். ஒரு யுகத்திலிருந்து அடுத்த யுகத்திற்கு எடுத்துச் செல்லும் நபர்.
யுகசந்தியில் நிற்பவர். அவர்கள் அதிமானுடர்களாக கருதப்படுகின்றனர்.
உத்தாலகரின் மைந்தர் ஸ்வேதகேது அப்படி ஒரு யுகபுருஷர்.
அன்றைய நெறிகள் படி தன்
இனத்தை பெருக்குவது என்பது எந்த ஒரு உயிரின் அடிப்படை விதி.
அதை முன்வைத்து வேத சாட்சியாக உத்தாலகரின் மனைவியை யாசகம் கேட்க வந்த முனிவர் தன் இனத்தைப் பெருக்க தன்னுடன் அழைக்கிறார்.
வேதத்திற்கு கட்டுப்பட்ட உத்தாலகர் திகைத்து அதை மறுக்க சொல் இல்லாமல் நிற்கிறார்.
அப்பொழுது வெகுண்டு எழும் அவர் மைந்தன் ஸ்வேதகேதுவால் முன்னெடுக்கப்படுவது அடுத்தகட்ட அறமாக விளங்குகிறது. பெண்ணுக்கான கற்புநெறிகளை அவர் வகுக்கிறார். ”இதோ,
அனலுறையும் புல்லை என்
கையிலேந்தி ஆணையிடுகிறேன். இன்றுடன் மானுடருக்கு இந்த இழிமுறை ஒழிக!
பெண்ணென்பவளுக்கு மூவகை கற்பை நான் ஆணையிடுகிறேன். குலத்திற்கு மகள் என அவள் தன்
குடிசிறக்கச்செய்யும் பொறுப்பு கொண்டவள். கணவனுக்கு மனைவியென அவள் தன் கருவில்
அவன் குருதியை மட்டுமே ஏந்தும் கடமை கொண்டவள். மைந்தருக்கு அன்னை என அவள்
அவர்களால் இறுதிவரை பணிவிடை செய்யப்படும் உரிமை கொண்டவள். மூன்றுவகை அரண்களாலும்
அவள் எப்போதும் காக்கப்படுவதாக!” என்றார்.
இது நடந்தது வேத காலத்தில் என்பதை நான் கருத்தில் கொண்டேன். அதற்கும் சில ஆயிரம் ஆண்டுகள் கழிந்துதான் மஹாபாரத காலம் வருகிறது. மஹாபாரத காலம் என்பது நமக்கு மூவாயிரம்
வருடங்கள் முற்பட்டது. வாசிக்கையில் இதை கருத்தில் கொள்ள
வேண்டும். இன்று நாம் வாழும் இந்த காலத்தில் ஒப்பிட்டால் ஸ்வேதகேது சொன்னதும் பிழை
கொண்டதே. அதிலிருந்து முன்னகர்ந்து முன்னகர்ந்து இங்கு வந்திருக்கிறோம் என்பதை
கருத்தில் கொள்ள வேண்டும். இது முன்பு சொன்ன அடிப்படை மூவகை குணங்களில்
காமத்திற்கான ஒரு அடுத்தகட்ட நகர்வு இவ்வாறாக இருக்கிறது. இதே போல மற்ற அடிப்படை குணங்களுக்கும் இது
அடுத்தடுத்த நகர்வுகளை கொண்டு சமூகம் முன்னெழுகிறது. இது ஒன்றூடன் ஒன்று பிண்ணிப்
பிணைந்தது. அதனால் உண்டாகும் விளைவுகளும் சார்ந்தே சமூகம் முன் செல்கிறது. எந்தப் பெண்ணையும் யாரும் உரிமை கொள்ளலாம் என்ற
நெறியை மாற்றி பெண்ணிற்கு குலப் பாதுகாப்பு அளித்த ஸ்வேதகேதுவின் சொல் இன்னும்
முன்சென்று பெண்ணுக்குக் கல்வி (சுலஃபை, கார்த்யாயணி ), பெண்ணுக்கு
அரசு ( சத்யவதி ) , என்று
சென்று மேலும் பெண்ணை தெய்வமாக்கி
பேரன்னையாக உருவகம் செய்யும் அதே நேரத்தில்,
பெண்ணை கவர்வதை ஒரு
அறமாக மற்றொரு புறம் வீரம் முன்னிறுத்துகிறது. இது ”அச்சம் ” மற்றோரு அடிப்படை
உணர்வு கொண்ட பரிணாம வளர்ச்சி. நிமிர்வு
கொண்ட பெண்ணை அடைதல் என்பது ஆணுக்கு
வீரமாகும். வெண்முரசின் முதல் நாவலான
முதற்கனலில் அதன் நாயகனான பீஷ்மருக்கு எழும் முதல் ஐயம் இது சார்ந்துதான். அது
தொடர்ந்து எழும் அம்பையின் சாபம் பாரதப்
போரின் முதல் புள்ளி. அங்கே அவளுக்கு
ஆதரவு தராமல் போனது அப்போது இருந்த சத்ரிய
அறம். ( குறிப்பு :- அஸ்தினாபுரி அப்போதைய
ஐம்பத்தாறு சத்ரிய அரசுகளில் தலையானது. அமெரிக்கா போல :-) . அதே நேரத்தில் மற்றொரு
அன்னையர் பூமியான பாஞ்சாலம் அம்பையை வணங்கி நின்றதும் அவள் மைந்தன் சிகண்டி
பாஞ்சாலத்தில் எழுவதும் அவர்கள் பாண்டவர்கள் சார்பில் போர் செய்ததும் கவனிக்கத்
தக்கது. )
இங்கிருந்து தான் திரெளபதியின் “ஆழிவண்ணா, ஆயர்குலவேந்தே, உன் அறம் எழுக! ஆம், எழுக! ஒவ்வொருவருக்குமான உனது அறம்” என்கிற இடத்தை நாம் புரிந்து
கொள்ள முடியும். இது அப்படியென்றால்
பெண்ணிற்கு சம உரிமை அளித்தது தானா அவன் சொல்லின் மகத்துவம் என்றால், அது மட்டும் அல்ல என்றுதான் சொல்லவேண்டும். களிற்றியானை நிரையில் ஆதன் சொல்லும் சொல்
முக்கியமானது.. “புதிய வேதம் எவரும் எவருக்கும் கீழல்ல என்கிறது. பிறப்பொக்கும் எல்லா
உயிர்க்கும் சிறப்பனைத்தும் செய்தொழிலால் மட்டுமே என்கிறது”.
அன்றுவரை,
மூன்று அடிப்படை நெறிகளாக தோன்றி எழுந்து வந்தவை பிண்ணிப் பிணைந்து மேற்கொண்டு நகர
முடியாமல் ஒன்றுடன் ஒன்று சிக்கிக் கிடந்த தருணத்தில் அதை
வெட்டி எறிந்து மேலும் விரிந்தெழ வைத்தான். புதிய வேதத்தைப்
படைத்தான். ஒரு யுகபுருஷனாக கலியுகத்தில் நிலைகொண்டான்.
இது வெண்முரசின் வழியாக நான் பெற்ற மற்றொன்று. இதை மீண்டும் சென்ற பதிவில் சொன்னதை வைத்து
அணுகுவது முறையாக இருக்கும். பக்தர்கள் சொல்வது கிருஷ்ணன் கடவுளின் அவதாரம் என்று.
அவன் கடவுளின் அவதாரம் என்றால், ஏன் கை வழியாக புடவை கொடுத்ததுடன் நிறுத்திக் கொள்கிறான்.
ஏன் அவன் கைவழியாக சக்ராயுதம் கொண்டுவந்து எல்லார் தலையையும் சீவவில்லை. ஏன்
சூதாட்டத்தை தடுக்கவில்லை. தருமனை ஜெயிக்க வைக்கவில்லை. இது போன்ற பல கேள்விகள்
உபன்யாச கதை கேட்கும் போதே எழுந்து வந்தன. மற்றொரு புறம்,
கிருஷ்ணன் ஒரு ஸ்த்ரீ லோலன் என்றும் காண்டவ வனத்தை எரித்து
பழங்குடிகளை அழித்தவன் என்றும் முற்போக்குப் புகார்கள். அவன் காமாந்தகன் என்றால் ஏன் பெண்கள்
ஒழுக்கசீலனான ராமனை விட கிருஷ்ண பக்தையாக அதிகம் இருக்கிறார்கள் என்பது கேள்வி.
ஒருபுறம் அவன் சுண்டுவிரல்லால் மலையை தூக்கிய சிறுவன் என்று பக்தர்களும் மறுபுறம்
அவன் பெண்கள் குளிக்கும்போது உடைகளைக் கவர்ந்து கொண்டு எட்டிப் பார்க்கும்
காமாந்தகன் என்று மறுப்பாளர்களும் மாறி மாறி விவாதித்தனர். சொல்லப் போனால் வெண்முரசு வழியாகவே எனக்கு
இந்தக் குழப்பம் தீர்ந்தது. எனக்கு இதுவரை கிருஷ்ணன் மீது இருந்த பிம்பம் மாறியது.
அவன் ஒரு சொடுக்கில் உலகை அழிக்கும் தானோஸ் போல கெளரவர்களை அழித்தவன் நொடிப்பொழுதில் அழிக்கப் பிறந்தவன்
அல்ல. அதே நேரத்தில் அவனது இறை அம்சம் என்பது
பொய்மையும் அல்ல. வெண்முரசு, கிருஷ்ணனின் இந்த பிம்பத்தை மிக
அழகாக உணர்த்தியது. அம்பை அளித்த பெண் எழுகை, நாகர்களின் நாகவேதம்,
ஜராசந்தன் கொண்டுவந்த அசுரவேதம், துரியோதனனின் சத்ரிய வேதம், தருமனின் அறக் குழப்பம், யாதவர்களின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என அனைத்தும்
கலந்து பாரத தேசத்தைக் கடைந்த தருணத்தில் அதன் முற்றழிவு முடிவை உய்த்துணர்ந்து
அதை திரியவிடாமல் அழியாமல் காத்தவன்.
அதிலிருந்து வெண்ணையை திரட்டியெடுத்து அமுதமாக்கி அளித்தவன்.
மற்றொரு புறம் உலகிற்கு பெரும் நீதியை உரைத்த தத்துவ ஞானி.
அவன் சத்ரியர்களை அழித்து தன் குலத்தை முன்னேற்ற வில்லை. அவன் பெண்பித்தனும் அல்ல.
எந்த அறம் கம்சன் அத்தனை குழந்தைகளைக்
கொன்றபோது அதற்கு துணை நின்றதோ, எந்த அறம் பெண் துகிலுரியப் படும்போது அதை தடுக்காமல
மெளனமாக நின்றதோ அதை மாற்றியமைக்க சீர்படுத்த எண்ணினான். அதற்காக அதை முற்றொழித்து
நாக வேதமோ ஜராசந்தனின் அசுர வேதமோ கொண்டுவரவும் இல்லை. அவை சமூகத்தை
பின்னோக்கித்தான் கொண்டு சொல்லும். அவன் அவற்றிலிருந்து சிலவற்றை எடுத்தான் பலதை விட்டொழித்தான்
தொகுத்துக் கொண்டு இன்னும் சிறந்த ஒன்றை உலகுக்கு உபதேசித்தான். இதை ஆற்றுகையில் அழியப் போகும் உயிர்களை பற்றியும் அறிவான். கைம்பெண்ணாக நிற்கப்போகும் தன் பக்தைகளை அறிவான். குழந்தைகளை
இழக்கும் அன்னையர்க்ளையும் அறிவான். தன் செயலை ஆற்றும் முன் அகச் சிக்கல்களை எதிர்கொண்டான்.
மூத்தவளால் பீடிக்கப்பட்டான். இதற்காக தன்னை வருத்தி பன்னிரெண்டு ஆண்டு தவம்
செய்தான். பின் அவன் எண்ணியதை ஆற்றினான்.
ஆனால் இருபதாம் நூற்றாண்டில் இங்கு அவன் வருணாசிரம தர்மத்தை
வலியுறுத்தினான் என்று பிரசாரம் செய்யப் படுகிறது. இதற்கான சரியான மறுமொழியும் ஆத்திகர்களால்
சொல்லப் பட்டதில்லை. மறுமொழி சொல்லப் படாததற்கு
காரணம் அதை ஜாதியாக மாற்றியதால் ஆதாயம் அடைந்தவர்கள் தாங்களே என்ற
சுயநலம் காரணமாக இருக்கலாம் என்று இப்பொழுது எனக்குத்
தோன்றுகிறது. முழுமையாக படிக்கையில் புரிவது என்னவென்றால், அவன்
ஜாதியை வலியுறுத்தவில்லை. அவன் சொல்வது மனிதர்களின் குணங்களை மட்டும். அதுவும் அந்த
உரையில் முழுவதும் தத்துவ நோக்கிலானது. சட்டத்திற்கு முன் அனைவரும்
சமம் என்பது ஒன்று. குணரீதியாக உயிரியல் ரீதியாக ஒவ்வொரு மனிதனும் மற்றவனுக்கு சமமானவன் அல்ல எனது மற்றொன்று. இந்த சட்ட ரீதியான, தத்துவ ரீதியான
வேறுபாடு விளங்கிக் கொள்ளத் தக்க எளிய ஒன்றுதான். ஆனால் விளங்கிக்
கொள்ளப்படவில்லை ( இப்பொழுது பரபரப்பாக
படிக்கப் படும் செப்பியன் புத்தகத்தில் யுவால் ஓரித்தில் இதைக் குறிப்பிடுகிறார்
) மூவாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னதாக எழுந்த அவன் சொல் என்றும் எளியவருக்கானது. அதிகாரம்
அற்றவருக்கானது. பாரத யுத்தத்தில்
இறுதியில் சத்ரிய அரசுகள் அழிந்து பாணாசுரன் போன்ற அசுரர்களும் கடோத்கஜன் போன்ற அரக்கர் குலங்களும் சத்ரிய அந்தஸ்து பெற்று ஆட்சிக்கு வருகிறார்கள். பெண்கள் ஆண்களின் உடைமை அல்ல என்கிற
சித்தாந்தம் பரவலாகிறது. அரக்கனான கடோத்கஜனின் முரி வம்சம்தான் மெளரியப் பேரரசாக
பிற்காலத்தில் எழுந்து வருகிறது என்பதற்கான ஒரு இழையும் வெண்முரசிலேயே இருக்கிறது
(யாதவனுக்கு முன்பே வெண்முரசில் வரும் பரசுராமர் இவ்வாறு சத்ரிய
அந்தஸ்து கொடுப்பதை நெறியாக கொண்டிருக்கிறார். அவரும் ஒரு அவதார புருஷனாக கருதப்படுகிறார்.
அடுத்த பதிவு இதை சார்ந்து எழுதலாம் என்று தோன்றுகிறது. )
இந்திரநீலம் படித்தபோது, ஒரே குலமாக இருந்தாலும் ஆங்காங்கு உட்பிரிவுகளால்
பிரிந்திருந்து மேலும் கீழுமாக கருதி அடித்துக் கொண்ட பலதரப்பட்ட யாதவ குடிகளை
ஒன்றிணைத்தவன் என்று எண்ணினேன். சென்னை கூடுகையில் நான் இந்திரநீலம் பற்றி
பேசும்போது, ஜாஜா
இந்தியா முழுவதும் தலித் மக்களை ஒன்றிணைத்த அம்பேத்கரை உதாரணமாக கூறினார். அது
ஏற்புடையதாகவும் இருந்தது. ஜாஜா
உரையாற்றிய சொல்வளர்காடு கூடுகையில், இளைய யாதவன் சாந்தீபனி குருகுலத்தில்
தருமனுடன் பேசுகையில் காந்தியின்
அறச்சிக்கல் என் நினைவுக்கு வந்தது. கிருஷ்ணனின் தந்தை வடிவம் அம்பேத்கர் என்றும்
அவனது தாய் வடிவம் காந்தி என்றும் கருதினேன்.
ஆனால் இப்பொழுது வெண்முரசு முடிந்த தருணத்தில் பார்க்கையில் அவன் வெறும் தத்துவ ஞானியாக மட்டுமே எஞ்சி நிற்கிறான்.
“ஆழிவண்ணா, ஆயர்குலவேந்தே, உன் அறம் தொடர்க!! ஆம், தொடர்க.. ஒவ்வொருவருக்குமான உனது அறம்”
தொடர்ச்சி:- முரசும் சொல்லும் - இ) மரணமில்லாதவனின் மழு
தொடர்ச்சி:- முரசும் சொல்லும் - இ) மரணமில்லாதவனின் மழு
No comments:
Post a Comment