Saturday, July 18, 2020

முரசும் சொல்லும் - உ) விழைவின் கொடி



ஜெயமோகன் நாவல்களின் துவக்க அத்தியாயம் என்பது மிகவும் முக்கியமானது. அது ஒரு சுருக்குக் கயிறு போல உள்ளே இழுத்துவிடும். ஆயிரம் தாமரைகள் வரைந்து வரைந்து பெரும் சக்கரமாக நிற்கும் விஷ்ணுபுரத்தின் முதல் அத்தியாயம் ஒரு உதாரணம். எழுத்து ஒருவிதமாக உள்ளிழுக்கும். ஆனால் அது வேறொரு பொருளும் கொண்டிருக்கும். அதை பிற்காலத்தில் இரண்டாம் வாசிப்பில் உணர்ந்த தருணங்கள் எனக்கு உண்டு. வெண்முரசிலும் அது நிகழ்ந்தது.

உ) விழைவின் கொடி

வெண்முரசின் துவக்க அத்தியாயம் அந்நாவல் செல்லும் திசையை உரைத்து விடுகிறது. உலகம் உருவானது குறித்து ஒவ்வொரு வேதமும் தனக்கான காரணங்களை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது. அதில் நாகர்களின் வேதப்படி உலகம் உருவான புராணமே மானசாதேவியால் ஆஸ்திகனுக்கு உரைக்கப் படுகிறது. வெண்முரசு முதல் அத்தியாயம் நாகர்களிடம் இருந்துதான் துவங்குகிறது என்பது ஒரு யதார்த்தமானது  அல்ல. விழைவின் அதிபர்களான நாகர்கள்தான் இதில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணமாறுதலுக்கும் மூலமானவர்களாக இருக்கிறார்கள். அவதார நாயகர்கள் தவிர மற்ற அனைவரும் அதனால் தீண்டப் படுகிறர்கள். மற்ற இதிகாச புராணங்களிலிருந்து பாரதம் எங்கனம் மாறுபடுகிறது என்பதே இவ்வாறு முதல் அத்தியாயத்தில் குறியீடாக சொல்லப்பட்டு விடுகிறது என்றும் சொல்லாம். அதன்பின் தீர்க்கசியாமரால் அது சொல்லாக உரைக்கப் படுகிறது. அறத்தின் மீது இச்சையின் கொடி ஏறிவிட்டது



துவக்கத்தில் உத்தாலகர் தன் தாயை முன்வைத்து பெண்களுக்கான கட்டுப்பாடு விதிக்கிறார். அடுத்த யுகத்தில் பரசுராமனின் வேதம் தன் தாயின் தலையை சீவவும் துணிந்து ஒருத்திக்கு ஒருவன் என்று கட்டுப்பாடு விதித்து செல்கிறது. மற்றொரு புறம்  அதுவே அனைத்து குலங்களுக்கான நெறிகளையும் விதித்தபடியும் செல்கிறது. அதற்கடுத்த யுகத்தில் அயோத்யா ராமனின் அறம் அதிலிருந்து முன்னேறி, த்ரியனுக்கான அறத்தையும் கட்டுபாடுகளையும் சொல்லிச் சென்றிருக்கிறது. அதே நேரம் இது ஆணுக்கான ஒரு ஒழுக்க விதிகளையும் சுட்டுகிறது. இப்பிறவியில் இரு மாதரை சிந்தையினாலும் தொடேன் என்பது இல்லற ஒழுக்கம்.  தன் உரிமையான அரியணையை, தந்தையின் சொல்லுக்காக விட்டு கானேகுவதும் தந்தை சொல்லுக்கு மைந்தரின் அடிபணிதல்.  இவ்வாறு தனக்கான ஒழுக்கநெறிகளையும் கொண்டிருப்பதால் அவன் ஒரு உதாரண புருஷனாக இன்றும் கருதப்படுகிறான். ஆனால் அந்த இதிகாசம் என்பது அந்தந்த குணங்களின் நேரடி வெளிப்பாடாக இருப்பதாலேயே அது வாசிக்க எளிதாகவும், புரியும் வண்ணமும்  இருக்கிறது. ராமனின் குணம், அனுமனின் குணம், ராவணன், விபீஷணன், கும்பகர்ணனின் குணங்களும் அத்தகையவை. ஒரு தம்பியாக ஒப்பு வைத்தால் பரதனும் கும்பகர்ணனும் ஒருவரே. அதன் அனைத்து உணர்ச்சிகளுமே ஒரு அளவிற்கு நேரடியானவையும் கூட. அதனாலேயே ராமாயணம் வாசிப்பதும் புரிந்து கொள்வதும் எளிதானதுஆனால் பாரத வாசிப்பு அத்தகைய எளிதானதாக இல்லை.


ஒரு கதாபாத்திரத்தின் தனிப்பண்பு  என்று சொல்லப்படுவது அவரது ஆதார குணம் எப்படிப் பட்டது அவர் என்னவாக இருக்கிறார் என்பதே. எளிதாகச் சொன்னால்  அவர் நாம் என்னவாக வரையறை செய்வோமோ அதுதான் அவரது தனிப்பண்பு. ஒருவருடைய வெற்றி தோல்வி வளம் வறுமை அனைத்தையும் மீறி அவர் என்னவாக எஞ்சுவாரோ அதுவே அந்த குணம். ( எம்ஜிஆர் இரக்க குணம் கொண்ட அள்ளித் தரும் வள்ளல் எனப்படுவது போல :-)  இவ்வாறு சுற்றுப்புரத்தில் உள்ள ஒவ்வொருவரையும் நாம் அடையாளப்படுத்தி இருப்போம். ) அத்தகைய பாத்திரங்களும் மற்ற இதிகாச புராணங்கள் போல வெண்முரசில் அத்தனை எளிதான பாத்திரப் படைப்பாக இல்லை. அதனாலேயே இதிகாச புராண பாத்திரங்களைப் பார்த்துக் கேட்டு பழகியவர்களுக்கு வெண்முரசு அளிக்கும் சித்திரம் ஆச்சரியமாகவும் இருக்கிறது.

இதை துரியோதணன் மற்றும் திருதராஷ்டிரன் பாத்திரங்களை வைத்து விளங்கிக் கொள்ளலாம். திருதராஷ்டிரன்  பெரும் மன விரிவு கொண்டவராகவும்,  பெருந்தந்தையாகவும் மைந்தர்களால் களித்திருப்பவராகவும் வருகிறார். வெண்முரசு முழுதும் வாசித்தபின் அவரது அடிப்படை குணம் அல்லது தனிப்பண்பு என்று அதைத்தான் வரையறுக்க முடியும்.  இறுதிவரை அது அவரிடம் மாறவில்லை.  போர் முடிந்து நீர்க்கடன் அளிக்கும் நாளில் அனைவரும் கலங்கி இறுகி இருக்கிறார்கள். ஆனால் அந்த நாளில் கூட பரீக்‌ஷித்தை மடியில் ஏந்தி வாழ்த்துவதை அவர்தான் செய்கிறார்.  தான் மறையும் தருணத்தில் தன் அணுக்கன் சங்குலனிடம் பிள்ளைகள் பெற்று மகிழ்ந்திரு என்று வாழுத்தும் வரையிலும் அவர் அப்படியே இருக்கிறார். அவரது அந்த இயல்பு மாறவே இல்லை

 அதேபோல மற்றொருவன் துரியோதனன். தான்  ஒரு அரசன் என்கிற நிலையிலிருந்து அவன் இறங்கவே இல்லை. பிறந்தது முதல் இறந்தது வரை அவன் ஒரு அரசனாக மட்டுமே இருக்கிறான். அவன் கொடுங்கோல் ஆட்சி புரிந்தவன் அல்ல. பல பெண்களை மணந்து போகத்தில் திளைத்தவனும் அல்ல. அரசனின் அறம் பிழைந்து நடந்தவனும் அல்லநாம் அறிந்த கதைகளில் பொறாமை கொண்டவராகவும் மற்றவர்கள் அஞ்சி விலகி நிலையில் இருப்பவராகவும் வரும் திருதராஷ்டிரன் மற்றூம் துரியோதணனின் குணமாக வெண்முரசில் இதுவே வருகிறது. எந்த நேரத்திலும் இவர்களின் பெருந்தன்மையும் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறதுஅவர்களில் திருதராஷ்டிரனை தீயவராகவே இது சுட்டவில்லை. குந்தி சொன்ன சொல்லை ஏற்று யுதிஷ்டிரனை இளவரசனாக ஏற்பது அதில் முக்கியமான ஒன்று. வெண்முரசின் எழுதழல் நாவலில் குந்தியை நோக்கி துரியனால் எழுப்பப்படும் கேள்விகள் முன்பு இளவரசனாக யுதிஷ்டிரனை அமர்த்துகையில் திருதராஷ்டிரனிடமிருந்து  எழுந்து வரவில்லை என்பது முக்கியமானது.



துரியனிடமும் இத்தகைய மேன்மை குணங்கள் ண்டு. அவனுக்கும் கர்ணனுக்குமான நட்பு குறித்து புதிதாக ஏதும் சொல்ல அவசியம் இருக்காது. அதேபோல பூரிசிரவஸிடம் கொண்டிருக்கும் அன்பு. எழுதழல் நாவலில் விதுரர் துரியனின் ஆட்சி அறம் வழுவாமல் நடந்தது என்று குறிப்பிடுகிறார். சென்றயுகத்தில் ரகுகுல ராமன் வகுத்த சத்ரிய நெறியை ஆற்றியவன் துரியோதணன் தான். ஆனால் திருதராஷ்டிரன் அளவிற்கு மனவிரிவு கொண்டவனாக துரியோதனன் வெண்முரசில் வரவில்லை. துரியோதனன் வாசகர்களால் அந்தளவு ஏற்றுக்கொள்ள முடியாத வகையில்தான் இருக்கின்றன. அப்படியென்றால் அத்தகைய அறம் வழுவாத ஆட்சி செய்த துரியன் ஆற்றும் பிழைதான் என்ன?  துரியோதனன் தான் அறிந்தே ஆற்றிய பிழை என்றால் அது வாரணாவத ஒப்புதல் மட்டுமே. அது மட்டுமே அவனது அத்தனை குணங்களையும் பின்னிறக்குகிறது. வீரமே முதன்மையான சத்ரிய அறத்தினை பின் தள்ளி சூது வழியாக தருமனுக்கு அறைகூவல் விடுதலும் அவன் மீது இருக்கும் கலி புருஷன் உவமையை தீவிரமாக்குகிறது.  அதுதான் தீர்க்கசியாமர் முன்பு சொன்ன அறத்தின் மீது இச்சையின் கொடி ஏறும் தருணம். ( இதனால்தான் துரியனுக்கு எதிரானவன் என்பதாலேயே ஒரு முறை கூட அரியணையில் அமராத நேரில் கண்டிராத யுதிஷ்டிரனை நேரில் காண்கையில் அறச்செல்வனே என்று மக்கள் மனமுவந்து அழுது தொழுகிறார்களா என்றும் தோன்றுகிறது. அவன் ஆற்றிய அறச் செயல்கள் என்று எதுவுமே வரையறுக்க வியலவில்லை. அல்லது அது சூதர்களின் வாயிலாக மக்களின் உளப்பதிவு எனக் கொள்ளலாம்)

வெண்முரசில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மாறுதலையும் நாம் இவ்வாறு காணலாம். அது துரோணரில் பாசத்தால், ஜெயத்ரதனில் அகங்காரத்தில் விதுரனில் கையறு நிலையில்  தருமனில் அறத்தை முன்வைத்து நிகழ்கிறது. இவையனைத்திலும் அவரவர் தரப்பு நியாயமானது. முந்தைய புராணங்கள் போல இங்கு தர்மம் அதர்மத்துடன் மோதவில்லை. இங்கு அது மற்றொரு தர்மத்துடன் மோதுகிறது. அதனாலேயே இது பாத்திரங்களை அணுகி அறிவதில் ஒரு குழப்பத்தை உருவாக்குகிறது. எளிய வாசகர்களுக்கு நல்லவன் கெட்டவன் என்பது எளிதாக இருக்கிறது. ஆனால்  அதே புரிதலுடன் வெண்முரசுக்குள் வரும் போது அது துவக்கத்தில் குழப்புகிறது. ஒரு தரப்பை அதன் அனைத்து பின்புலத்துடன் அணுகுகையில் அது இன்னும் பல கதவுகளை திறக்கக் கூடும்.

          அந்த தனி மனிதரின் குண மாறுதல் மட்டுமன்றி, சமகாலத்தில் உருவான தத்துவ ரீதியிலான சமூக மாற்றங்களும் அதில் அங்கம் கொள்கின்றன. சமணம் உருவாகி வணிகத் தொடர்புகள் வளர்கின்றன. சார்வாகன் ஒருவர் அரசியல் முடிவை எதிர்த்து பூசலிடுகிறார். சைவ, வைணவ மற்றும் அன்னையர் நெறிகள் பெரிதாக வளர்கின்றன. திரெளபதியின் துகிலுரிப்பு நிகழ்ந்தது சத்ரியர்களுக்கு எந்தவித பாதிப்பும் அளிக்கவில்லை. ஆனால் அன்னையர் வழிபாடு கொண்ட கானகர்கள், வேடுவர்கள் நிஷாதர்கள் அதனாலேயே வீறு கோண்டு எழுகிறார்கள். பாண்டவர்களுடன் இணைகின்றனர். ஆகவே பாரதப் போருக்கு தனிமனித அகக் கொந்தளிப்பு காரணம் என்றாலும், புறக்காரணிகளாக நெறி, வணிகம் தவிர இவ்வித தத்துவக் காரணிகளும் உள்ளன.


இவை அனைத்தையும் புரிந்து கொள்ள, இதிலிருந்து தத்துவ நோக்கில் முன் செல்லத் துவக்கமாகவும் வெண்முரசின் சில நாவலகள் வழி செய்கின்றன. காண்டீபம் சமணத்தையும், இந்திரநீலம் விசிஷ்டாத்வைதத்தையும், கிராதம் அத்வைதத்தையும், பன்னிரு படைக்களம் சாக்தத்தையும் வெய்யோன் நாகத்தையும் முன்னெடுக்கின்றன. இவற்றில் சில தத்துவமாக பின்னாளில் வந்தவை என்றாலும் இதன் துவக்க கால கூறுகள் வெண்முரசில் விளக்கப்படுகின்றன. சாத்யகி தன் உடலில் சூட்டுக்கோலால் இட்டுக்கொள்ளும் தொழும்பர் குறி இன்று வைணவர்களால் சமாஸ்ரணம் என்று தொடரப்படுவது போல இதன் நிகழ்கால தொடர்ச்சியையும் அறிந்து கொள்ளலாம்.

அறிந்த கதையோட்டத்தில் செல்லும் வெண்முரசு நாவல் நம்மை இதற்குள் நம்மையுமறியாமல் இழுத்து விடுகிறது. அந்த வகையில் நமக்கு இவையனைத்தையும் அறிமுகப் படுத்தும் நாவலான  வண்ணக்கடல் நாவல் வெண்முரசு வரிசைகளில் மிகவும் முக்கியமானது. அந்நாவல் தமிழகத்திலிருந்து கிளம்பி மகாபாரத்ததை அறியச் செல்லும் இளநாகனால் துவங்குகிறது. தென் தமிழ்நில மூலையில் மகாபாரதம் உணர்ச்சிகளுக்கு அப்பால் வைத்தே அணுகப் படுகிறது. ஒரு இளிவரல் நாடகமாகவும் கூத்தாகவும் விளையாட்டுப் பாடலாகவும் அறியப்படுகிறது. தமிழ் நிலத்தில் அந்த பாத்திரங்கள் மீது பெரும் பிடிப்பு இல்லை. பூம்புகாரில் துவங்கி அஸ்தினாபுரி செல்லும் பயணத்தில் அவன் மெல்ல மெல்ல அதன் முக்கிய பாத்திரங்களை மனமாற்றங்களை அறியத் துவங்குகிறான். கூடவே அது சார்ந்த நிலங்களையும் காண்கிறான். இறுதியில் அவன் தனக்காக பாரதத்தை / ஞானத்தை அடைகிறான். 

இப்பொழுது ஒரு வாசகனாக நானும்  வண்ணக்கடலை  இளநாகன் கண்டது போலவே  வெண்முரசுக்குள் வைத்துப் பார்ர்கிறேன். அதுவரை வெண்முரசு அனைவரும் அறிந்த நபர்களினையும் அறிந்த கதைகளையுமே சொல்லி சென்றது.  அதன் கதையோட்டம் ஒரு இலக்கிய வாசகனின் ஒருவித எதிர்பார்ப்புக்கு இணையாகவே இருந்தது என்றும் கூட சொல்லலாம். ஆனால் ஒவ்வொரு மனிதர்களின் ஆதார குணம் என்ன என்பதும் அவர்கள் இச்சையால் அலைக்கழிக்கப் படுதலும் நிகழத் துவங்குவது வண்ணக்கடலில்தான்.  இளநாகன் அணுகும் தோறும் பாரதத்தை  அறிந்து போலத்தான் வாசகனாக நானும்  துரோணர், துரியோதனன், கர்ணன், பீமன் ஆகியோரின் அலைக்கழிப்புகள், நஞ்சு கொள்ளுதலை அணுகி அறியத் துவங்கினேன். அவர்களுக்கான அறமும் அவர்களின் இச்சையும் அவர்களுக்குள் ஆடும் ஆட்டங்களை தொட்டுக் காட்டியது. மஹா பாரதத்தின் அறியாத பக்கங்களையும் வண்ணக்கடலின் அலை இழுத்து வந்தது.

அவர்களின் அலைக்கழிப்புக்கள் இச்சையால் மட்டுமல்ல, நூல்களால் வேதங்களால் மதங்களால் கூட நிகழ்கின்றன. இளநாகன் செல்லும் வழியிலேயே அவற்றைக் காண்கிறான். காளஹஸ்தியில் சிவனடியார்கள் நிகழ்த்தும் சுயபலியிலிருந்து ஹிரண்ய கசுபுவின் வீழ்ந்த மாநகரம் வரைக் காண்கிறான். ஆந்திர நிலத்தின் அன்னையிடம் பழங்கஞ்சி வாங்கி உண்கிறான். ஆங்காங்கு சமண சத்திரங்களில் ஓய்கிறான். கதை மாந்தர்களுக்குள் இச்சையின் கொடி ஏறியதை மட்டும் சொல்வதில்லை, அவர்களுக்குள் நிலங்கள், தரிசனங்கள், தத்துவங்கள்  என அனைத்தும் ஏற்படுத்திய பாதிப்புகளையும் தொட்டுத் துவங்குகிறது வண்ணக்கடல். இதன் வழியே அஸ்தினாபுரியை தேடிச் செல்லும் இளநாகன் தனக்கான அஸ்தினாபுரியை கண்டடைகிறான். இளநாகன் போல விழைவு கொண்ட வாசகர்கள் வெண்முரசுக்குள் தனக்கான அறிதலையும் கண்டடைலாம்.

தொடர்ச்சி:-  முரசும் சொல்லும் - ஊ) பிழைகளின் சுழலிலிருந்து ஞானத்தின் வட்டத்திற்குள்

No comments: