Friday, July 17, 2020

முரசும் சொல்லும் - ஈ) குலங்களும் கலப்பரசியலும்


வெண்முரசில் குலங்களின் முரணியக்கம்  பற்றிய என் புரிதல்களை எழுதினால் முந்தைய பதிவில் வரும் பரசுராமரும் இளைய யாதவரும் நிகழ்த்தியவை குறித்து இன்னும் அறியலாம். அவர்கள் ஏன் புதிய சத்ரிய அரசுகளை உருவாக்க வேண்டும் என்கிற கேள்விக்குள் சென்றடையலாம்.  விடைகள் வெண்முரசில் உள்ளன. நான் எழுதும் இந்தப் பதிவுகள் முழுக்க நான் வெண்முரசு மூலம் பெற்ற அறிதல்களை பகிர மட்டுமேயன்றி அதற்கான விளக்கமோ விமர்சனமோ எழுதுவது அல்ல. ஆகவே வேறு இலக்கிய பிரதிகளையும் இங்கு எடுத்து ஒப்புநோக்கி எழுதவில்லை. அருகமர்ந்து உரைத்த ஆசிரியனிடமிருந்து நான் பெற்றவைகளை தொகுத்தலும் எனக்கு இருந்த குழப்பங்கள் நீங்கியதை குறிப்பிடுவதுமே இந்த பதிவுகளின் நோக்கம்.



அதற்கு முன், குலம் என்னும் இந்த பதம் பலவிதமாக பொதுவெளியில் அவரவர்கள் தன் அனுபவம் ஒட்டி தன்விருப்பத்திற்கேற்ப புரிந்துகொண்டு பக்கம் பக்கமாக பேசி, இவ்வாறுதான் பாரதத்தில் கிருஷ்ணன் சொன்னது என்று இறுதியில் பசுமாட்டை தென்னை மரத்தில் கட்டிவிடுவது நம் அறிவுத்தளத்தில்  வழக்கமான ஒன்று. கீதையில் அர்ஜுனனிடம் இளையயாதவன் சொல்லும் ஒன்றூ பார்த்தா.. இவ்வாறு தயங்கி நீ வில் ஏந்தாமல் போனால் குலக்கலப்பு நேரிடும் என்பது.. இந்த ஒரு வரியை வைத்துக் கொண்டும்தான்  கீதை ஜாதியை பேசுகிறது என்று அடித்து வாதாடப் பட்டு வருகிறது. முழுமையாக வெண்முரசு படித்த ஒருவன் இதிலிருந்து எப்படி தெளிவு பெறலாம் பண்டைய சமூகத்தை அரசியலை விளங்கிக் கொள்ளலாம் என்று பார்க்கலாம்

குலங்களும் கலப்பரசியலும்

              வாசிப்பு ஏதும் இல்லாத ஒருவர் இயல்பாக அறியக்கூடிய இரு வம்சங்கள், சூரியவம்சம் மற்றும் சந்திரவம்சம். இதில் பாண்டவர்கள் கெளரவர்கள் வருவது சந்திரவம்சத்தில். இதில் யயாதி காலத்தில் ஒரு பிரிவு உண்டாகிறது. அவரது நான்கு மைந்தர்களின் மூவர் யயாதியின் சாபத்தால் குலமிழந்து நகர் நீங்குகிறார்கள். சாபம் பெறாத மகனான புரு யயாதியின் சந்திர வம்சத்தை தொடர்கிறான்.  அவ்வாறு பிரிந்து சென்ற யது, மாடு கன்றுகளை மேய்க்க பழகுகிறான். அவனிடமிருந்து உருவாகி வருவது யாதவகுலம். துர்வசு பாலைவனத்தில் சென்று சேர்கிறான். அங்கு அவன் உருவாக்கிய குலம் பிற்காலத்தில் காந்தார குலமாக வருகிறது. மேலும் அனுத்ருஹ்யூ மலை பிரதேசத்தை அடைந்து அங்கு குடிகளை உருவாக்குகிறான். இது நிகழ்வது ஆதி காலத்தில் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. அதன் பின் பற்பல சந்ததிகள் கடந்துதான்  குருவம்சம் என்ற பெயர் நிலைக்க வைத்த குரு ஹஸ்தினாபுரியை அமைத்த ஹஸ்தி, ஆகியோரின் பிறப்பு நிகழ்கிறது.  முன்பு பிரிந்த யாதவமும், காந்தாரமும் முறையே பாண்டு மற்றும் திருதராஷ்டிரன் மணம் மூலம் மீண்டும் மண உறவில் அஸ்தினாபுரியுடன்  இணைகின்றன. இதில் இருவருமே சத்ரிய அந்தஸ்து இல்லாதவர்களாகவே வருகின்றனர் என்பதும் கவனிக்கத் தக்கது. இதில் காந்தாரிக்கு மணத்தூது கேட்டு சென்ற சகுனியின் அமைச்சரிடம் குதிரைச் சவுக்கு அளிக்கப் பட்டு அவர்களின் இடம் சூதருக்கானது என்று சத்ரிய அரசான மகதம் கூறுகிறது. யாதவ அரசியான குந்தியை மணம் கொண்டாலும் பாண்டு மன்னனாகும்போது, அவனுடன் பட்டத்து அரசியாக அமர அவளுக்குத் தகுதியில்லை என சத்ரிய இளவரசியான மாத்ரியை அவன் மணம் செய்கிறான்.


மற்றொரு கவனிக்கத் தக்க ஒன்றும் உண்டு. பாரத கதை துவங்கும் இடம் என்பது பீஷ்மரின் பிறப்பில்தான். பீஷ்மரின் தந்தை சாந்தனு கங்கை குடியினரின் இளவரசியை மணம் கொண்டபின் அவர்களுக்கு பிறப்பவர். கங்கைக்குப் பின் சாந்தனு மணம் செய்து கொள்வது மீனவப் பெண்ணான சத்யவதியை. அவ்வாறு பீஷ்மரின் மாற்றாந்தாய் ஆகிறார் அவர். சத்யவதிதான் திருதராஷ்டிரன் பாண்டு மற்றும் விதுரரின் பாட்டி. ஆகவே சந்தனுவின் சந்திர வம்சம்தான் தொடர்கிறதா என்றால் ஆம். ஆனால் அது குருதித் தொடர்ச்சி அன்று. பீஷ்மர் பிரம்மசரிய விரதம் மேற்கொண்டதாலும், சித்ராங்கதன் இறந்ததாலும் தன் வம்சம் தொடரவேண்டி சத்யவதி விசித்திர வீரியனின் மனைவியரை கருவுறச் செய்ய தன் மைந்தரான வியாசனின் உதவியை நாடுகிறாள். சத்யவதி சாந்தனுவை மணம் செய்யும் முன் பராசர முனிவரை மணந்து அவர் மூலம் பெற்றெடுத்த மகன் வியாசர். இப்பொழுது அந்த வியாசர் மூலம் சந்திரகுலம் பாண்டுவையும் திருதராஷ்டிரனையும் பெற்றெடுக்கிறது. இந்தச் சிக்கல்  முதலில் சற்று தலை சுற்றலை அளித்தாலும் அச்சப்படத் தேவையில்லை. இன்ன பிற சம்பவங்களையும் படிக்கையில் பழகிவிடும் :-0

இவர்கள் தவிர குந்திக்கு மைந்தர்கள் பிறப்பது கடவுளின் அருளால் என்பது நாம் அறிந்த கதைகளில் வருவது. தருமன் யமனுக்கும் பீமன் வாயுவிற்கும் அர்ஜுனன் இந்திரனுக்கு நகுல சகாதேவர்கள் அஸ்வினி குமாரர்களுக்கும் பிறக்கின்றனர். வெண்முரசு அதை கையாள்கையில், அவர்களுக்கான குருதி தந்தையரையும் பூடகமாக வரையறுக்கிறது. குந்திக்கு மணத்தன்னேற்புக்கு முன்பே சூரியனிடமிருந்து  பிறக்கும் கர்ணனுக்கும் ஒரு குருதி தந்தையை சற்று தெளிவாகவே விளங்கும்படியும் சொல்லிச் செல்கிறது. அதேநேரம் குறிப்பிட்ட எல்லை வரை அதில் உள்ள அந்த பூடகத்தையும்  மர்மத்தையும் பேணிக்காக்கிறது.



பாண்டுவிற்கும் குந்திக்குமான உரையாடலில் மைந்தகள் குறித்த ஒரு விளக்கம் வருகிறது. ஒரு புரிதலுக்காக அதை இங்கே குறிப்பிடலாம். "மைந்தர்கள் பன்னிரு வகை என்கிறது வெண்முரசு.  தன் மனைவியிடம் தனக்குப்பிறந்தவன் ஔரசன் எனப்படுகிறான். தன் மனைவியை தன் அனுமதியுடன் உயர்ந்தவர்களிடம் அனுப்பி கருவுறச்செய்து பெறப்பட்டவன் ஷேத்ரஜன். இன்னொரு குடும்பத்தில் இருந்து உரியமுறையில் தத்து எடுத்துக்கொள்ளப்பட்டவன் தத்தன். தன்னால் மனம்கனிந்து மகனாக ஏற்றுக்கொள்ளப்பட்டவன் கிருத்ரிமன், மனைவி அவள் விருப்பப்படி இன்னொருவனைக் கூடிப்பெற்ற குழந்தை கூடோத்பன்னன். உரியமுறையில் காணிக்கைகொடுத்து நாடோடி ஒருவனிடம் மனைவியை அனுப்பி பெறப்பட்டவன் அபவித்தன். இந்த ஆறு மைந்தர்களும் அனைத்துவகையிலும் மைந்தர்களே. தந்தையின் உடைமைக்கும் குலத்துக்கும் உரிமைகொண்டவர்கள் அவர்கள். தந்தைக்கும் மூதாதையருக்கும் முறையான அனைத்து நீர்க்கடன்களையும் செய்ய உரிமையும் பொறுப்பும் கொண்டவர்கள். அவர்களை மைந்தர்களல்ல என்று விலக்க எந்நூலும் ஒப்புக்கொள்வதில்லை

இன்னும் ஆறுவகை மைந்தர்கள் உள்ளனர். மனைவி தன்னை மணப்பதற்கு முன் பெற்றுக்கொண்டவன் கானீனன். தன்மனைவி தன்னைப்பிரிந்துசென்று செய்துகொண்ட இரண்டாவது திருமணத்தில் இன்னொருவனுக்குப் பிறந்தவன் பௌனர்ப்பவன். நான் உனக்கு மைந்தனாக இருக்கிறேன் என்று தேடி வந்தவன் ஸ்வயம்தத்தன். மைந்தனாக விலைகொடுத்து வாங்கப்பட்டவன் கிரீதன். கர்ப்பிணியாக மணம்புரிந்துகொள்ளப்பட்ட மனைவியின் வயிற்றிலிருந்தவன் சகோடன். ஒழுக்கமீறலினால் தனக்கு பிறபெண்களிடம் பிறந்த பாரசரவன். அவர்களும் மைந்தர்களே. எக்குலத்தில் பிறந்தாலும், எத்தகைய ஒழுக்கமுள்ள பெண்ணிடம் பிறந்திருந்தாலும் தன் குருதியில் பிறந்த மகவு தன் மைந்தனே. அவனை ஏற்கமறுப்பது மூதாதையர் பழிக்கும் பெரும் பாவமாகும். இவர்கள் அனைத்து நீத்தார்கடன்களுக்கும் உரிமைகொண்ட மைந்தர்கள். மூதாதையரால் நீர்பெற்று வாழ்த்தப்படுபவர்கள். அவர்களுக்கு தந்தை மனமுவந்து அளிக்காவிட்டால் நாட்டுரிமையும் சொத்துரிமையும் இல்லை என்பது மட்டுமே வேறுபாடு"

அஸ்தினாபுரியை விட்டு மற்ற சத்ரிய குடிகளுக்குச் சென்றால்,  பல்வேறு குழுக்களாக பிளவுட்டிருந்த  அரக்க குலத்திலிருந்து திரண்டு பேரரசுகளாக எழுந்து வந்த அங்கம் வங்கம் கலிங்கம் பெளண்டாரிகம் சுங்கம் ஆகிய குலங்கள் பற்றிக் கூறலாம். தன் இனம் சிறு சிறு குழுக்களாக பிரிந்து  ஓயாது பூசலிட்டதில் மாறி மாறி மடிந்து போன தன் மைந்தர்களையும், குலம் இன்னும் நிலைபெறாமல் அலைபாய்ந்து கொண்டிருப்பதையும் காணவொண்ணா வாலி என்னும் அரக்க மன்னன் தீர்க்கதமஸ் என்னும் வியிழிழந்த அந்தணர் வாயிலாக தன் மனைவியினரைக் கருவுறச் செய்து பிறக்கும் மைந்தர்களும் அவர்களுக்கு துணை நிற்கும் வேதச் சொல்லும் கொண்டு அமைத்த அரசுகளே அங்கம் வங்கம் கலிங்கம் பெளண்டாரிகம் சுங்கம் ஆகிய அரசுகள்.




இங்கே முதலில் வந்த யயாதியின் கதைப்படி குருதி உறவு இருந்தாலும் அவர்கள் குருதிவழியான குல அந்தஸ்தை அடையவில்லை. அதேநேரத்தில், குறிப்பிடப் பட்ட மற்றவைகளில் குருதி உறவு இல்லாத குழந்தைகள்  அந்த அந்தஸ்தை அடைகிறார்கள். இது அவ்வாறே ஏற்கப் படுகிறது என்பதில் உள்ள முறைமைகள் புரியும் பொழுதும் அதில் அதன்விளைவாக எழும் ஒரு நகைப்பையும் நாம் வெண்முரசு மூலம் உள்வாங்கிக் கொள்ளலாம். உதாரணமாக, இதில் இழிகுலத்தோன் என்று கருதப்படும் சூதனான கர்ணன் அரசனாகிறான். அவன் சத்ரியையான கலிங்க இளவரசியை மணம் முடிக்கிறான். கர்ணன்தான் இருப்பவர்களிலேயே உயரமானவன் வெல்லுதலுக்கு அரிய சிறந்த வீரனென்றபோதும்  அவளால் அவன் சூதன் என்றுதான் அவனமானப் படுத்தப்படுகிறான். அதேநேரம் பேரரசியான திரெளபதிக்கு அவன் ஆளுமை தெரிந்தும் இருக்கிறது. இந்த முரண்பாட்டையும் நாம் புரிந்து கொள்ள முடியும். இந்த முரணை முற்றிலும் அணுகி விளங்கிகொள்ளவில்லை என்றால் அது குறைபட்ட புரிதலாகிவிடும். அதேநேரம் சமகால ஒழுக்க நெறிகளை பயங்களை வைத்து அவற்றை புரிந்து கொள்வதை  குறைபட்ட புரிதல் என்றெல்லாம் சொல்லி சமாதனமாக முடியாது.   புரிதலில்லாமை என்றே சொல்லப்பட வேண்டும். ஒன்றிற்கு ஒப்புக் கொடுக்காமல், நம்பி அணுகாமல் வெறும் காழ்ப்பு அல்லது கேலி கொண்டு எளிய அரசியல் சமூக உதாரணத்திற்காக  தவறாக பொருள் பரப்பப்படும் என்றால் அது ஒருபோதும் தெளிவைத் தராது.

இதற்குப் பின்னால் இருக்கும் நெறி என்பது சத்ரியருக்கானது. அது தன் முழு ஆற்றலுடன் திரண்டு பகைவர்களை எதிர்த்து தன் மக்களை காத்தல் என்பது. சத்ரிய நெறி தன்னைப் பலி கொடுத்தேனும் தன்னை நம்பிய மக்களைக் காக்கும் உன்னத நோக்கமும் கொண்டது. அதில் உயிர்கொடுத்து காக்கும் ஆண்களுக்கு இணையாகவே தர்மத்தைக் காக்க வேறோர் ஆணுடன் கலந்து கருக்கொள்ளும் அன்னையரும் வணங்கப் படத்தக்கவர்கள். அரசனை நரகத்திலிருந்தும் அவன் நாட்டை எதிரிகளிடமிருந்தும் காக்கும் அன்னையாக அவர்கள் உள்ளனர்.  அவர்களின் அத்தனை சுயபலியும் தன் இன்பத்திற்காக அல்ல. மக்களைக் காத்தல் என்கிற அடிப்படி நெறிக்காகவே. அந்த சத்ரிய நெறி என்பது செயலாக இல்லாமல் அகங்காரமாக ஆகும்போது அதை பரசுராமர் மற்றும் இளைய யாதவர்கள் முறியடித்து இன்னும் மேன்மையுறச் செய்வதை சென்ற பதிவுகளில் கண்டோம். அதேபோல அரசன் இவ்வாறு அத்து மீறும் தருணங்களில் மற்ற வர்ணத்தவர் அடங்கிய  குல சபைகள் எப்படி அவனை கட்டுப் படுத்துகின்றன என்பதையும் வெண்முரசில் காணமுடிகிறது. உதாரணமாக தேவாபி,  திருதராஷ்டிரன் ஆகியோர் அரசராக முடியாமல் போகும் தருணங்கள். அக்ரூரர் கிருதவர்மன் போன்றோர் மன்னிக்கப் படும் தருணங்கள், அங்கதேசத்தில் கர்ணனின் சபை  என்று பல உதாரணங்களும் உள்ளன. இவற்றை வாசிக்கையில் அவை எவ்வாறூ ஒன்றுடன் ஒன்று கலந்து இயங்கின என்பதும் தெரிகிறது. அது எவ்வண்ணம் குல / ஜாதி பிரிவினைக்குள் வருங்காலங்களில் சிக்க வாய்ப்பு இருக்கின்றன என்றும் தெளிவாகிறது



இப்பொழுது முதல் பத்தியில் சொல்லப்படும் விவாதத்திற்கு வந்தால், தனக்குள்ளேயே இத்தனை குலக் கலப்புக்களை கொண்டிப்பது பாரதக் கதை. மெலும்  ஜெ. தன் கீதை உரைகளில் சுட்டிக் காண்பிப்பது ஒன்று உண்டு. இதை சொல்லும் கிருஷ்ணன் சத்ரியகுலம் முதல் காடாளும் ஜாம்பவர் குலம் வரை பெண்களைக் கரம் பிடித்தவன்.  கேட்கும் அர்ஜுனனும் நாகர் குலம் வரை மணம் முடித்தவன்.

அந்த குலக் கலப்பு என்கிற பதம் வென்றவர்கள் தோற்வர்களின் ஊர்களை எரித்தும், ஆநிரைகளை, பெண்களை குழந்தைகளைக் கவர்ந்தும் செய்யும் வெறிச்செயல்களைக் குறிப்பிடுகிறது. ஆனால், ஒரு சொல்லை இடம் பொருள் ஏவல் கொண்டு புரிந்து கொள்ளாமல் அதை அப்படியே வேறெங்கோ சற்றும் பொருத்தமில்லாத இடத்தில் சுட்டிக் காட்டி நம் முன்னோர்கள் அறிவற்றவர்கள் அல்லது நம்மை திரித்தவர்கள் என்று நம்மையே நம்பவைக்க அறிவுத் தளத்தின் மீது வெட்டுக்கிளி படையெடுப்பாக சிந்தனையாளர்களின் முயற்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இது என்றும் நிகழ்வதுதான். சமீபத்தில் கூட ஜெ. எழுதிய பத்து லட்சம் காலடிகள் கதையின் ஒரு கதாபாத்திரம் சொல்லும் ஒற்றை வரியை வைத்து பலநாட்கள் ஜல்லியடிக்கப் பட்டது.   அதுபோலத்தான் இங்கும் நிகழ்கிறது. ஒன்றை ஆழ்ந்து படித்தால் விளங்கிக் கொள்ளத்தக்க ஒன்றிற்கு முற்றிலும் எதிரான விளக்கங்களை அளித்து அதை முன் கொண்டு சென்றது. அந்தத் தரப்பு வரலாற்றை புராணங்களை சரியாக படிக்கவில்லை என்று சொன்னாலும் அதற்கு பதில் சொல்ல வேண்டிய பக்தி தரப்பும் அதை வலுவாக எதிர்க்கவில்லை. அவர்களும்  அதை சரியாக விளங்கிக் கொள்ளாமல் அனைத்தும் அவனுடைய லீலை என்ற ஒரு வார்த்தையையே வெவ்வேறு விதங்களில் சொல்லி தன் தரப்பு வாதத்தை தானே குழிதோண்டி புதைத்துக் கொண்டிருந்தது. அதுபோன்ற நேரத்தில் வெண்முரசு போன்ற படைப்புகள் அளிக்கும் அறிதல் என்பது அளப்பரியது

முரசும் சொல்லும் - உ) விழைவின் கொடி

No comments: