ஆள்தலும் அளத்தலும் சிறுகதை தொகுப்பு குறித்து அருணாசலம் மகாராஜன் வல்லினம் இதழில் எழுதிய மதிப்புரை:-
ஆள்தலும் அளத்தலும்: செல்லும் தூரத்தை சுட்டும் சாதனை
“அந்தக் கணம் என்றுமே என் நினைவில் இருந்து மறையாது… ஒரு கணத்திலேயே அது என்னவென்று புரிந்தது… ஆனால் அந்த ஒரு கணத்துக்குள் அது ஆயிரம் வடிவம் காட்டியது. முதலில் ஊரின் மச்சு வீட்டு வாசலில் இருந்த கரும் திண்ணையின் நினைவு வந்தது. பின் ஊர்க்காவல் பெரியாச்சி அம்மனின் விரித்த சடை ஞாபகம் வந்தது. ஒரு பெரும் அங்காளம்… அல்லது பெரும் பத்தாயம்… ஒருநாள் இரவில் கண்ட கோரை ஆறு… கார்மேகம்… அல்லது காரிருள்… அல்லது ஏதுமற்ற வெறுமை… அமாவாசை இரவு… சூனியம்பாங்களே அது இதுதானா… நட்சத்திரங்களாய் கண்கள்… எல்லாம் அறிந்தவன் போலப் புன்னகை.”
நண்பரும், தீவிர இலக்கிய வாசகருமான காளிபிரசாத் என்னுள் எழுத்தாளராக நுழைந்தது இவ்வரிகள் ஊடாகத்தான். ஒரு எழுத்தாளரின் மிகப் பெரிய சவால் என்பதே சொல்லாக மாற்ற இயலாத கணங்களை வாக்கியமாக்கி, அதன் பின்னும் அக்கணம் தந்த உணர்வுநிலையை வாசகனிடம் குன்றாமல், குறையாமல் கடத்துவதே. ஜெயமோகன் காவிய ஆசிரியராகவும், தல்ஸ்தோய், தஸ்தாவேஸ்கி துவங்கி நாஞ்சில்நாடன் போன்றோர் ஏன் பேரிலக்கியவாதிகளாகவும் (மாஸ்டர்ஸ்) கொண்டாடப் படுகிறார்கள் என்றால் அவர்கள் இச்சவாலை அநாயாசமாகக் கடந்தவர்கள் என்பதாலும் தான். ஒவ்வொரு எழுத்தாளரும் தனக்குத் தானே இலக்கிட்டு, எட்டி, கடந்து, புது இலக்கு உருவாக்கி, அதையும் கடந்து என ஆடும் ஆடலின் முக்கியமான சவால் இது. ஏனெனில் எழுத்தின் ஊர்தியான மொழியின் மேல் ஒரு எழுத்தாளனின் ஆளுமை இரண்டறக் கலக்கும் இடம் இது. ஒரு எழுத்தாளன் தன்னளவில் முழுமையாகும் முதல் படி என்பது அவனுக்கே உரித்தான ஒரு மொழிபை, தன் அகத்தில் ஓடும் மொழிக்கு மிக அருகில் இருக்கும்படியான ஒரு மொழிபைக் கண்டடைவதே. அகமொழிக்கும், வெளிப்பாட்டு மொழிபுக்குமான இடைவெளி குறையக் குறைய எழுத்தாளன் இலக்கியவாதியாகவும், பேரிலக்கியவாதியாகவும், காவிய ஆசிரியனாகவும் மலர முடியும்.
முதல் தொகுப்பிலேயே ஒரு எழுத்தாளரிடம் இதை எதிர்பார்ப்பது என்பது சற்று அதீதம் தான். ஆனால் அதை நோக்கிய பயணம் அந்த எழுத்தாளருக்குச் சாத்தியமா என்பதை முதல் தொகுப்பு காட்டிக் கொடுத்துவிடும். அவ்வகையில் காளிபிரசாத்தின் மேற்கண்ட வரிகள் அவர் அச்சவாலை ஏற்கக் கூடியவர்தான் என்பதற்கு கட்டியம் கூறுகின்றன. மிகச் சரியாகத் தொகுப்பின் தலைமைக் கதையாக அவர் தேர்ந்தெடுத்த ‘ஆள்தலும் அளத்தலும்’ கதையில் தான் இவ்வரிகள் வருகின்றன. சந்தேகமே இல்லாமல் இலக்கியமாகும் தகுதி கொண்ட கதை தான் அது.
பெரும்பாலும் மீண்டும் மீண்டும் கேட்கப்படும் ஒரு கேள்வி எதை வைத்து ஒரு கதை இலக்கியமென்றும், அல்லவென்றும் ஆகிறது என்பது. உண்மையில் இது ஒரு அடிப்படையான கேள்வி. பொதுவாக எந்தவொரு அடிப்படையான கேள்விக்கான பதிலைப் போல இதன் பதிலும் மிக எளிமையானதே. ஒரு படைப்பு, சிறுகதை, கவிதை, நாவல் என எந்த வடிவமாகக் இருந்தாலும், வாழ்க்கையைப் பேசும் என்றால் அது இலக்கியம். மிக நேரடியான, எளிமையான பதில். எப்படி ஒரு படைப்பில் வாழ்க்கை இருக்கிறது என்பதை அறியலாம்? அதற்கு நீங்கள் வாசகராக வேண்டும். வாசிக்கையில் அதில் எழுந்து வரும் தருணங்களில், அதன் உணர்வு நிலைகளில் உங்களால் ஈடுபடமுடிந்தால் அப்படைப்பில் வாழ்க்கை இருக்கிறது. அது நீங்கள் அறிந்த வாழ்க்கையாகத் தான் இருக்க வேண்டும் என்பதல்ல. முற்றிலும் புதிய நிலத்தின், புதிய வாழ்வாகக் கூட இருக்கலாம். ஆனால் அது மெய்யான சித்திரத்தைத் தருகிறதா அல்லது பொதுவில் சமைக்கப்பட்டிருக்கும் கருத்துநிலைகளில் இருந்து உருவாக்கி எடுக்கப்பட்ட ஒரு கற்பனையை முன்வைக்கிறதா என்பதில் இருக்கிறது இந்த வேறுபாடு. எப்படி இந்த வேறுபாட்டை அறிவது? அதற்கு வாசகராக நீங்கள் உங்கள் உள்ளுணர்வையும், நுண்ணுணர்வையும் தான் நம்ப வேண்டும். இலக்கிய விமர்சனங்கள், பரிந்துரைகள் ஓரெல்லை வரை உதவும். அதுவும் துவக்க நிலை வாசகர்களுக்கு மட்டுமே. அதன் பிறகு வாசகன் என்பவனும் தனியனே, எழுத்தாளனைப் போலவே!
வெறுமனே வாழ்வை மட்டுமே பேசுபவற்றை மெல்லிலக்கியம் என வரையறுக்கலாம். அவை பேசும் வாழ்வு மெய்யானதாக இருப்பதால் மட்டுமே அவை இத்தகுதியை அடைகின்றன. ஆனால் அது இலக்கியத்தின் வெளியில்தான் இருக்கிறது என்பதை வாசகர்கள் மறந்துவிடக் கூடாது. அப்படிப் பார்த்தால் இத்தொகுப்பின் அனைத்துக் கதைகளிலுமே வாழ்க்கை என்பது இருக்கிறது. பெரும்பாலான வாசகர்களுக்கு அறிமுகம் இல்லாத மின்னியல் தொழிலாளர்களின் வாழ்வு. பழனி, திருவண்ணாமலை, கரி, மதிப்பு, பராசக்தி போன்ற கதைகள். அப்படி ஒரு புதிய களத்தைத் தேர்ந்தெடுத்ததே இக்கதைகளுக்கு ஒரு வாசிக்கும் ஆர்வத்தைத் தந்துவிடுகின்றன. எனது வாசிப்பில் ‘மதிப்பு’ கதையே இவற்றில் சிறப்பானது. உண்மையில் தலைப்பால் மட்டுமே இக்கதை தன் உச்சத்தை வாசகருக்குக் கடத்துகிறது. அதை விட முக்கியம் இக்கதை யாருடைய தரப்பையும் எடுக்கவில்லை. நல்ல சிறுகதைக்கான படைப்பமைதி கூடிய கதை இது. மாறாக ‘கரி’, அதன் தலைப்பாலேயே அது சென்றடைய வேண்டிய உயரத்தை எட்டாமல் போன கதை ஆகிறது.
சிறுகதை என்பது முடிந்த அளவு ஒரு மையப்படிமத்தை முன்வைத்து நகர வேண்டியது. இக்கதையில் ஒரு நிகழ்வு இரு வேறு மனிதர்களிடம் என்ன வகை மாற்றங்களை நிகழ்த்துகிறது என்பதைப் பற்றி பேசுகிறது. அவ்விரு மனிதர்களும் வெவ்வேறு வகையில் அந்த நிகழ்வில் இருந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்நிகழ்வில் பங்கேற்ற அப்பெண் எந்த சலனமும், மாற்றமும் இன்றி அப்படியே தொடர்கிறாள். உண்மையில் மிகப் பெரிய தரிசனம் உள்ள கதை. ஆனால் கதையின் போக்கும், அதன் தலைப்பும் இந்த திசையில் இல்லை.
வாழ்வை நடந்தது நடந்த படியே கூறுவதுதான் இலக்கியம் என்றால் சிசிடிவிகளும், நேரலை தொலைக்காட்சிகளும்தான் மிகச் சிறந்த இலக்கிய ஆசிரியர்கள். என்றால் ஒரு படைப்பு இலக்கியத் தகுதியை அடைய வேறு என்ன வேண்டியிருக்கிறது. அது காட்டும் வாழ்வில் இருக்கும் உணர்வு உச்சங்கள். எனில் நம் உணர்வை, கண்ணீரை, அறச்சீற்றங்களைத் தட்டி எழுப்புபவை எல்லாம் இலக்கியமாகிவிடுமல்லவா? இது வாசகரின் முன்னிருக்கும் முக்கியமான இக்கட்டு. வாசகன் திறந்த மனதுடன், தன்னைத் தானே சுயபரிசோதனை செய்யும் வகையில் அந்த உணர்வுகளை பரிசீலிக்க வேண்டும். தனக்கு வந்த அந்த உணர்வு உச்சம், வலிந்து ஏற்படுத்திக் கொண்டதா (நான் புரட்சியாளன், ஏழைப் பங்காளன், தன்னைப் போல பிறரை நேசிப்பவன் என அதற்கு பல வேடங்கள் இருக்கின்றன) அல்லது அது தான் உண்மையிலேயே தன் இயல்பா என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும். அந்த உணர்வு உச்சம் இயல்பானதுதான் என அவன் உணர்ந்தால் அப்படைப்பு சந்தேகமே இல்லாமல் இலக்கியம்தான்.
இப்போது ஒன்று புரிந்திருக்கும், ஒரு படைப்பு வாசிக்கும் ஒருவரை வாசகராக்க வேண்டும். அச்சவாலை அப்படைப்பு சந்திக்கும் போது தான் அது இலக்கியமா அல்லவா என்ற வகைப்பாட்டிற்கே தகுதி உடையதாகிறது
இத்தொகுப்பின் ‘விடிவு’ கதையை எடுத்துக் கொள்வோம். ஒரு இரு சக்கரவாகன விபத்தில் நண்பனைப் பறிகொடுத்த ஒருவன். அந்த நண்பன் இறந்து அவனது உடல் வீட்டிற்குக் கொண்டுசெல்லப்படும் வரையிலான நிகழ்வுகள்தான் கதை. ஆனால் இக்கதை முழுக்க முழுக்க கதை சொல்லியை அவனது அக்கணத் தவிப்புகளாக நம்முள் கடத்துகிறது. அவன் அழவில்லை. ஆனால் யாருடையத் தோளிலாவது சாய்ந்து கொள்ள வேண்டுமென தேடுகிறான். ஆனால் ஒரு தோளும் அமையாத கணங்களில், சோர்ந்து போய், தளர்ந்து நிற்கும் தருணத்தில் முற்றிலும் எதிர்பாராத ஒருவரின் கைகளில் அடைக்கலமாகும் அந்த உச்சம், வாசகரிடமும் அந்த உணர்வு நிலையை எழுப்புகிறது. ஒருவகையில் மலையாளச் செவ்விலக்கியத் திரைப்படமான பரதம் படத்தின் உச்ச காட்சியை நினைவுபடுத்தியது. அனைத்தையும் விட முக்கியம், அந்த உச்சத்திற்குப் பிறகு வாசகரிடம் மானுடம் பற்றிய, இந்த வாழ்வைப் பற்றிய ஒரு நம்பிக்கையை விதைக்கிறது இக்கதை.
சரி, வாழ்க்கைத் தருணங்களை, அவை எழுப்பும் அதே உணர்வு உச்சங்களைப் பேசுவது மட்டுமே தான் இலக்கியமா? இது இலக்கியமாகும் முதல் தகுதி தான். உண்மையில் எந்த ஒரு படைப்புமே அது சொல்ல வரும் வாழ்க்கை இங்கே இதற்கு முன்பு எப்படி பேசப்பட்டிருக்கிறது என்பதைச் சந்திப்பதில்தான் அது இலக்கியத்தின் அடுத்த படிக்கு நகர்கிறது. உதாரணத்திற்கு இத்தொகுப்பில் இருக்கும் ‘பூதம்’ கதையை எடுத்துக் கொள்வோம். கதை முழுவதும் மிகச் சாதாரண நிகழ்வுகள். அந்த வாழ்வை இன்று பெரும்பாலான ‘இழந்த மனசுக்கார ஆண்கள்’ வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அனைத்துத் தரப்பு நியாயங்களும் கண்முன் தெரிகையில் எந்த ஒரு தரப்பையும் எடுக்கமுடியாமல், தன் முன்னே உள்ள நியாய, அநியாயங்களை விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களின் பிரதிநிதியான கதையின் நாயகன் இறுதியில் தன்னை விடமுண்ட நீலகண்ட சிவமாக உணர்வதில் முடிகிறது. அந்த புள்ளியில் இருந்து வாசகன் மிக நீண்ட தூரம் செல்ல முடியும். உண்மையில் தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று இது. இக்கதை அன்றாடத்தை மரபின் ஒரு புள்ளியில் இணைத்ததாலேயே இலக்கியமாகிறது. அந்த கடைசி பாரா மட்டும் இல்லாவிட்டால் இது ஒரு மிகச் சுமாரான, சாதாரணமான கதை. இந்த பூதம் கதையில் காளியின் இயல்பான அங்கதம் நன்றாகக் கைகூடியும் வந்திருக்கிறது.
இதே வகைமையில் வரத் தக்க மற்றொரு கதை ‘ஶ்ரீஜி’. தன்னெஞ்சறிய பொய் சொன்ன ஒருவரின் கதை. ஒரு நல்ல சிறுகதை என்பது அது முடிந்த பின் வாசகரிடம் துவங்க வேண்டும் என்பார் ஜெயமோகன். இக்கதை அதற்கு மிகச் சிறந்த உதாரணம். இக்கதையில் காளியின் மொழிபு திருக்குறளைச் சந்தித்திருக்கிறது.
வாழ்வும், உணர்வும், தத்துவங்களும் இருந்தால் இலக்கியம் எனச் சொல்லிவிட்டோம். அப்படியெனில் பேரிலக்கியம் என்பது என்ன? இன்னொருவக்கையில் இவ்வினாவைக் கேட்டால், இலக்கியம் என்பதை மிக அகலமான அலைவரிசையாகக் கொண்டால், அதன் உச்சம் என்பது என்ன? ஒரு படைப்பில் வரும் வாழ்வை வாசகனை உணர வைப்பது, அவ்வாழ்வுடனே அவனைப் பிணைப்பது ஆரம்ப கட்ட இலக்கியம் எனில், அவ்வாழ்வை, அவ்வாழ்க்கைத் தருணத்திற்கான தத்துவங்களை விவாதிப்பது, சுட்டுவதன் மூலம் வாசகனை அறிய வைப்பது அடுத்த கட்ட இலக்கியமாகிறது. ஆனால் இவ்விரண்டு தளங்களையும் தாண்டி அந்த வாழ்க்கைத் தருணத்தை அதன் உள்ளும் புறமுமாகக் காணச்செய்யும், அதை முழுமையாகப் பார்க்கச் செய்யும், படைப்புகளே இலக்கியத்தின் உச்சமாகும் தகுதி பெற்றவை. இதையே படைப்பின் தரிசனம் என்கிறார்கள் விமர்சனக் கோட்பாட்டாளர்கள்.
காவியம் என்பது இன்னும் ஒருபடி மேலே சென்று வாழ்க்கையை இந்த புடவிப் பெருக்கில் வைத்து, இன்னும் ஒரு மாபெரும் முழுமைத் தரிசனத்தைச் சொல்வது. அது வெண்முரசு, கம்பராமாயணம், சாகுந்தலம் போன்றவற்றிற்கே சாத்தியம். எனவே தான் காவிய ஆசிரியன் மெய்ஞானிக்கு இணையாக நம் மரபில் வைக்கப்படுகிறான்.
சிறுகதை என்னும் வடிவம் தரிசனங்களுக்கான வடிவம் அன்று. ஆயினும் அதில் தரிசனம் அமையக்கூடாது என்பதல்ல இதன் பொருள். மிகச் சிறந்த கதைகள் என்பவை இத்தகைய தரிசனங்களைக் கொண்டவை தான். புதுமைப்பித்தன், அசோகமித்திரன் என அத்தனை பேரிலக்கியவாதிகளும் இத்தகைய சிறுகதைகளை எழுதியிருக்கிறார்கள்.
இத்தொகுப்பில் ‘ஆர்வலர்’ என ஒரு கதை இருக்கிறது. பிறவற்றைப் போலவே சாதாரண நிகழ்வுகள். ஒரு இஸ்லாமியர் தன் குடியிருப்புப் பகுதியில் வந்து அசிங்கம் செய்யும் பன்றி ஒன்றின் குட்டிகளுக்கு இரக்கம் காட்டுகிறார். அவரது பேரன் அந்த குட்டிகளில் ஒன்றை விளையாட விரும்பிக் கேட்க அதை எடுக்கச் சென்றுவிடுகிறார். தாய் பன்றியின் கோபத்திற்கு ஆளாகிறார். அடுத்தநாள் அந்த தாய்பன்றி குட்டிகளோடு வேறு இடத்திற்கு போய்விடுகிறது. இத்தனை நாள் எப்படி அந்த பன்றிகளை வெளியேற்றுவது என கையைப் பிசைந்து கொண்டிருந்த அந்த குடியிருப்பு வாசிகள் இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து விழா எடுக்கிறார்கள். அனைவரும் அவரது அன்பான அணுகுமுறையால் தான் பன்றிகள் சென்றுவிட்டதாக அவரைப் புகழ்கிறார்கள். ஆனால் அவருக்கு மட்டுமே அதன் உண்மையான காரணம் தெரிகிறது. இந்த இடம் வரை இதுவும் ஒரு ‘ஶ்ரீஜி’ வகைக் கதை தான். ஆனால் அவ்விழாவில் அவரது ஏற்புரையாக வரும் இவ்வரிகள், ‘ஒருவரை நாம் வெறுக்கும் போதும், விரும்பும் போதும் ஒரு எல்லைக்குள் நிற்கிறோம். ஆனால் அது கொஞ்சம் நீண்டு போகும்போது ஒரு உரிமை எடுத்துக் கொள்கிறோம். அதுவரையிலான நம் அன்பு, எல்லை தாண்டும் போது உரிமை என்றாகிறது என்பது நமக்குத் தெரிவதில்லை. அப்போது அனைத்துமே தலைகீழாகிவிடுகிறது…. அது தெரிந்தபின் செய்வதற்கு ஒன்றும் இருப்பதில்லை.’
இவ்வரிகளே இக்கதையின் தரிசனம். அன்பு உரிமையாதல் என்பதே இன்று நம்முன் இருக்கும் மிகப் பெரிய சவால். அத்தனை உறவுகளின் கசப்படைதல்களின் ஆதார வேர் இது தான். ஆனால் இக்கதை மிக இயல்பாக இந்த புள்ளிக்கு வந்து நிற்கிறது. ஒரு எழுத்தாளராக காளியின் அடுத்த சவால் என்பது இவ்வரிகளை வாசகரைத் தாமே உணர்ந்து கொள்ள வைப்பதே.
அந்த சவாலிலும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அவர் அடைந்ததே ‘ஆள்தலும், அளத்தலும்’ கதை. அனைத்து வகையிலும், காளியிடம் இருந்து நல்ல இலக்கியத்தரமான படைப்புகளை இனியும் எதிர்பார்க்கலாம் என வாசகருக்கு நம்பிக்கை தரும் படைப்பு.
காளிபிரசாத்திற்கு சிறுகதைத் தருணங்களைக் கண்டடையும் கண்கள் இருப்பதைப் போல அவற்றைக் கூறும் முறையும் நன்றாகக் கைவந்திருக்கிறது. அத்தருணங்களில் இருந்து பெற வேண்டியவற்றை அடையவும், அறிய வேண்டியவற்றை அறியவும் தேவையான வாசிப்பும், நுண்ணுணர்வும் இருக்கிறது. மீண்டும் மீண்டும் ஒரே வாழ்வியலை ஒரே போன்று எழுதுவதை அவர் சற்று கவனிக்கலாம். அந்தந்த கருக்களுக்கான மொழிகள் அமைய வேண்டும். இத்தொகுப்பின் அனைத்து கதைகளும் கிட்டத்தட்ட ஒரே மொழியில் தான் அமைந்திருக்கின்றன. மேலும் ஆடையற்ற பெண்ணுடல் என்பதும், ஒரு இருளான அறையில் நிகழும் உடலுறவு என்பதும் இந்த தொகுப்பில் இருகதைகளில் மைய நிகழ்வாகவும் (ஆள்தலும் அளத்தலும் மற்றும் கரி), பேச்சுவாக்கில் வருவதாக மேலும் இருகதைகளிலும் (பழனி மற்றும் பராசக்தி) வருகின்றன. அதையும் ஆசிரியர் ஏன் என சுயவிசாரணை செய்து கொள்ளலாம். உண்மையில் நிர்வாணம் என்பதும் ஒரு தரிசனம் தான். அதைத் தான் ஆசிரியர் முன்வைக்கிறார் எனில் அதை இன்னும் பல கோணங்களில் எழுதிப் பார்க்கலாம். மாறாக அவை அதிர்ச்சி மதிப்பீடு அல்லது கதையின் சுவாரசியம் என்ற புள்ளியில் அமைந்திருக்குமாயின், சரியான மாற்றைத் தேடலாம்.
ஒட்டுமொத்தமாக ஒரு தொகுப்பு எனப் பார்த்தால் இலக்கியத்தின் அனைத்து இடங்களிலும் சென்றமரத் தக்க ஐந்து சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருகின்றன. முதல் தொகுப்பு என்ற வகையில் இதுவே சாதனைதான். ஆனால் ஒரு எழுத்தாளராக அவர் செல்ல வேண்டிய தொலைவுகள் இன்னும் இருக்கின்றன. அதற்கான முதல் அடியாக இந்த ‘ஆள்தலும் அளத்தலும்’ இருக்கட்டும்.
எப்படி எழுதவேண்டும் எனச் சொல்வது விமர்சகனின் வேலை கிடையாது. அது விமர்சனத்தில் எல்லைக்குள்ளும் வராது. எழுத்து என்பது தடையின்றி எழுதப்படவேண்டியது தான். ஆனால் அந்த இடத்திற்குச் செல்ல எழுத்தாளர் தொடர்ந்து எழுதி எழுதி தன்னை மொழிக்கும், எழுத்திற்கும் நிரூபித்திருக்க வேண்டும். பின் ஒரு புள்ளியில் படைப்புக் கணங்களே அந்த எழுத்தாளனைத் தன் கையில் ஏந்தி தன்னைத் தானே நிகழ்த்திக் கொள்ளும். அத்தகைய கணங்கள் வாய்ப்பதாக நண்பருக்கு, எழுத்தாளர் காளிபிராசாத்திற்கு!
No comments:
Post a Comment