Thursday, November 18, 2021

எஸ்.ராவுடன் ஒருநாள்

 எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை வாசித்தி்ராமல் ஒருவர் நவீன இலக்கிய வாசகராக இருக்கவியலாது என்றே சொல்லலாம். நவீன இலக்கியம் என்றால் என்ன என்று தெரியாமல் கூட அவரது துணையெழுத்து வழியாக அவரை அறிந்தவர்கள் அவ்வாறு வாசகரானவர்கள் கூட இருக்கலாம். எஸ்ரா அவர்கள் எழுதியுள்ள புத்தகங்களின் / பக்கங்களின் எண்ணிக்கை மிகுதியானது. அவரது அனைத்து நாவல்களையும் முன்னூறுக்கும் மேற்பட்ட  சிறுகதைகளையும் துணையெழுத்து முதல் மறைக்கப்பட்ட இந்தியா வரையிலான கட்டுரைத்தொடர்களையும் வாசித்திருக்கிறேன். இருப்பினும் நான் வாசிக்காத அவரது புத்தகங்களின் எண்ணிக்கை அதைவிட மிகுதி. இதுவே அவரிடம் கண்ட முதல் பிரமிப்பு.

ஒரு வாசகராகவும் இன்றைய எழுத்து வரை படித்து அதுகுறித்து எழுதியும் வருகிறார்.




நற்றுணை கலந்துரையாடலில் எஸ்ரா அவர்களின் புத்தகங்கள் குறித்து உரையாடலாம் என்று ஆலோசிக்கத்  துவங்கினால் ஏதோ ஒரு புத்தகத்தை என அனைவரும் அவரை வாசித்திருந்தனர்.  அனைவருக்கும் கூற ஏதோ ஒன்று இருந்தது. ஆகவே ஒருநாள் முழு  அமர்வுதான் சரி என தோன்றியது. அதுவுமே போதாது என அன்றைய தினம் தோன்றியது. ஒருமணி நேர நிகழ்வை (எஸ்ராவுடன் வாசக கலந்துரையாடல்) நேரம் கருதி இன்னொரு  நாளுக்கு ஒத்திவைக்க வேண்டியிருந்தது.






யாவரும் பதிப்பகமும் ஆர்வமாக இணைந்து கொண்டனர். எஸ்ரா அவர்களும் ஒப்புக் கொண்டார். பிறகு நிரல் தயாரித்து சிறுகதைகள், நாவல், அயல் இலக்கியம், திரைப்பட நூல், பயண நூல், ஆளுமை என பல தலைப்புகளில் அமர்வுகள் ஒருக்கப்பட்டன. நான் 'கர்னலின் நாற்காலி' என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள 'எஸ்ரா குறுங்கதைகள்'  குறித்து பேசினாலும் மேற்சொன்ன அனைத்து தலைப்புகளிலும் பேச விஷயங்கள் இருந்தன. ஆகவே அவர் ஆளுமை முதல் நாவல் சிறுகதை கட்டுரை என தொட்டு குறுங்கதையில் வந்து நிறைவு செய்தேன். பேசிய பிற அனைவருக்கும் அப்படியே. இறுதியாக பேசிய கவிதைக்காரன் இளங்கோ அவர்கள் துயில் நாவலை தன் சொந்த அனுபவத்துடன் ஒப்பிட்டு கூறினார். வசந்தபாலன் வெயில் குறித்து கூறினார். அவ்வாறு அனைவருக்கும்  புனைவிற்கு வெளியே அவர் கதைகளுடன் இணைக்கும் அனுபவம் ஒன்று இருந்தது வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது.

மிகவும் உற்சாகமும் நிறைவும் அளித்த நாள்.  துவக்க உரையே சரவெடியாக இருந்தது.  நீதியரசர் சந்துரு அவர்களின் உரை. அடுத்து தோழர்.எஸ்.ஏ.பெருமாள் அவர்களின் உரை. மாணவர் மீதான ஆசிரியரின் பெருமிதம் வெளிப்பட்ட உரை அது. எஸ்ரா அவர்கள் காதல் திருமணம் செய்தவர் என்பது அன்றுதான் தெரிந்தது. அடுத்து எஸ்ரா அவர்களின் படைப்புகள் மீதான வாசக / எழுத்தாளர்களின் உரை துவங்கியது.

சுரேஷ் பிரதீப் உரையுடன் துவங்கி கவிதைக்காரன் இளங்கோ உரையுடன் நிறைவுபெற்ற அந்த உரைகளில் 14 பேர் பேசினோம். ஒவ்வொரு அமர்வு நிறைவடைந்தவுடன் அது குறித்து எஸ்ரா அவர்களும் பேசினார். இறுதியாக ஏற்புரையும் வழங்கினார். துவக்கம் முதல் இறுதிவரை வாசகர்கள் அரங்கில் இருந்தனர். 130 வாசகர்கள் வரை முழுமையாக நாள் முழுதும் அமர்ந்திருந்தனர். 




பெரும்பான்மை வாசகரை இலக்கியத்திற்குள் அழைத்து வந்த ஆசிரியருக்கு எங்கள் அன்பை தெரியப்படுத்தக் கிடைத்த வாய்ப்பு  அந்த நாள். அந்த நல்வாய்ப்பை நல்கிய அனைவருக்கும் அன்று இடைவெளி விட்ட சென்னை பெருமழைக்கும்  நன்றி

 நிவேதனம் அரங்கின் முத்துகுமார் மற்றும் ஸ்ருதிடீவியை சேர்ந்த சுரேஷ் ஆகிய இருவரும் வாசகர்களுக்கும் நிகழ்விற்கும் உறுதுணையாக இருந்தனர். அவர்களுக்கும் நன்றி. நிகழ்வு மொத்தமும் ஸ்ருதி டிவியால் பதிவு செய்யப்பட்டுள்ளது.










No comments: