சந்திர தரிசனம் என நாள்காட்டியில் இருக்கும். அமாவாசை முடிந்த இரண்டாம் நாள் மூன்றாம் பிறையை பார்ப்பது ஒரு பழக்கம். அமாவாசை, பிரதமை முடிந்து துவிதியை இரவு பிறை தெரிந்து மறைந்து விடும். த்ரிதியையான முன்றாம் நாள் தெரிவதுதான் மூன்றாம் பிறை என்று எண்ணி நான்காம் பிறையை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்த நாட்களும் உண்டு. ‘நாலாம்பிறையை பார்த்தால் நாய்படாத பாடு படனும்’ என்பது பழமொழி. மூன்றாம் பிறை மங்கலம். வளர்பிறையின் துவக்கம். ஆயிரம்பிறை கண்டவர் என எண்பத்தோராம் வயதில் அடியெடுத்து வைப்பவரை வணங்குவது மரபு. தமிழினி வெளியீடாக வந்திருக்கும் மூன்றாம் பிறை நாவல் அத்தகைய மங்கலமான தலைப்பையே கொண்டிருக்கிறது. நாவலை வாசித்து முடிக்கும் போது மனம் கனமாகிறது. இது ஒரு தேய்பிறை இருளின் சித்தரிப்பா அல்லது அமாவாசைக்கு அடுத்து வரும் நிலவின் கீற்றின் பிரதிபலிப்பா என்கிற எண்ணம் உருவாகிறது. இந்த தலைப்பு அங்கே ஒரு மெல்லிய ஆசுவாசத்தையே அளிக்கிறது.
மூன்றாம்பிறை நாவலின் குறிப்பிடத் தக்க அம்சமாக அதன் நடையைச் சொல்லலாம். சுமார் 800 பக்கங்கள் வரை நீளும் நாவலை ஒரு வாரயிறுதியில் வாசித்து விடலாம் என்கிற அளவிற்கான ஒரு இலகுவான வாசிப்பை அளிக்கிறது. பள்ளி, நண்பர்கள், சுற்றம், என இதன் வாசகரும் இதை தொடர்புபடுத்திக் கொள்ள இயல்கிறது. ஒரு யதார்த்த நாவலின் இலகுவான வாசிப்பை தடைசெய்பவை தேய்வழக்கு, பொருந்தா உரையாடல், போலச்செய்தல் ஆகியவை. மூன்றாம்பிறை நாவல் தன்னுடைய உள்ளடக்கதாலும் நடையாலும் அதை எளிதாக வாசிக்க வைக்கிறது.
இந்த நாவலை வெவ்வேறு கோணங்களில் வாசிக்கலாம். காதரின் வாழ்க்கையாக, ஒரு காலகட்டத்தின் பதிவாக, ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியாக என பல கோணங்களில் வாசிக்கவும் பொருந்தக் கூடிய நாவல். முதிராத காதல்களின் / நிறைவேறாத காதல்களின் தொகுப்பாகவும் இதை பார்க்கலாம். உதுமான் - பாரு முதல் துவங்கும் இந்த காதல் ஆட்டங்கள் தலைமுறைக்கும் தொடர்கிறது. கீற்றாக தெரியும் மூன்றாம் பிறை வளர்ந்து பெளர்ணமியாக ஆகி நிறைய வேண்டும் என்கிற விதியில்தானே உலகம் இயங்குகிறது. ஆனால் எல்லா கீற்றும் வளர்வது இல்லை. கரோலின் வஹீதா காதர் இன்பா புவனா என அனைத்தும் கீற்றுக்கள். ஒருபக்கம் உதுமான் ராவுத்தருடைய வாரிசுகளின் நிராசைகள் தொடர்கின்றன. அதற்குக் காரணம் ஒரு பெண்ணின் சாபம் என்று கதையோட்டத்தில் சொல்லப் படுகிறது. கூடவே எத்தனையோ ஆட்கள் சாபத்தையும் வாங்கி வளமாகவும் வாழவில்லையா என்கிற கேள்வியும் நாவலில் கதையோட்டத்திற்கு வெளியே இருக்கிறது.
அடிப்படையில் ஒரு திமுக ஆளாக வீட்டிற்கு உதயசூரியன் பெயரும் உணவகத்திற்கு பெரியார் பெயரும் வைக்கும் உதுமான் ராவுத்தரின் கடைசி பிள்ளையான காதரை மையமாக வைத்து அந்த குடும்பத்தின் மூன்று தலைமுறைக் கதையும், காதர் மையல் கொள்ளும் பெண்ணின் கதையும், அவனது நண்பர்கள் கதையும் ஆசிரியர்கள் கதையும் என நாவல் கிளைபரப்பி பரந்து விரிகிறது. ஒரு புதிய களம் என்றாலும் அந்தப் பாத்திரங்களுடன் வாசகமனத்திற்கு உருவாகும் நெருக்கம் என்பது குறப்பிடத்தக்கது. இஸ்லாமய பாத்திரம் என்றால் அதற்கு தார்மிக ஆதரவு அல்லது உள்ளார்ந்த எதிர்ப்பு என இருமை நிலையில் பழக்கப்படுத்தி வரும் பொதுப்புத்தியை எதிர்கொள்ள இது அவசியம். அவற்றுடன் கதையோட்டத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் அன்றைய நாட்டு்நடப்பு விஷயங்களும் உடன் வருகின்றன. அது தோற்றத்தில் காதரின் நாவலாக தோன்றுகிறது ஆனால் இறுதியில் சுபைதாவின் பாத்திரம் மையம் கொண்டிருக்கிறது. அவளது மூடத்தனமான / தாழ்வுணர்ச்சியான பண்புநலனால் தனது குழந்தைகளின் மணவாழ்வு, கல்வி எல்லாம் பாதிக்கப் படுவதும் நாவலில் வருகிறது.
சுபைதாவின் வாழ்க்கையை தொகுத்துப் பார்த்தால் எஞ்சுவது அவளுக்குள் இருக்கும் நன்றி உணர்ச்சி மட்டும்தான். தனது மாமனாருக்கு அவள் வாக்குகொடுத்த சத்தியத்தை காப்பாற்ற செய்யும் யத்தனங்கள். வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக இருளும் போது ஒவ்வொரு முறையும் கதறி அறற்றுவதும் பின்னர் கீற்றாக ஏதோ ஒன்றைப் பற்றிக் கொண்டு தொடரும் சுபைதா ஒரு போராட்டகுணத்தின் வெளிப்பாடாக நிற்கிறாள். நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் இருக்கிறாள். துவக்கத்தில் அவளுக்கும் ஜைனத்தாவுக்கும் வர்க்கபேதத்தை தாண்டிய ஒரு நட்பு உள்ளது. ஒரு இடத்தில் அந்த வர்க்கபேதம் கரைந்து நட்பு மட்டுமே எஞ்சுகிற சித்தரிப்பு வரும் இடம் நாவலின் உச்ச கணத்தில் ஒன்று. அதை எளிமையான வரிகளில் கடத்திவிடுகிறார். வங்கியில் சுபைதா அவமானப்படும் நீண்ட சித்திரிப்பை விட விட அது காத்திரமாக நிற்கிறது.
காதரது நண்பர்கள் குழாம் அவனது 'உதயசூரியன்' வீட்டில் சுதந்திரமாக உலவும் சித்திரம் துவக்க அத்தியாயத்தில் வருகிறது. வீட்டின் செல்லப்பிள்ளை காதர். உதுமானின் பெரும்பான்மை சொத்துக்கள் கரைந்து போய் வீடும் கடையும் மட்டும் எஞ்சி நிற்கும் காலத்தில் பிறக்கும் காதர் பார்ப்பது தனது குடும்பத்தின் படிப்படியான வீழ்ச்சியை மட்டுமே. அது அவனுக்குள் உருவாக்கும் தயக்கம் கூச்சம் தாழ்வுணர்வு உன அனைத்து எதிர்மறை எண்ணங்களும் அவனது வாழ்வின் முக்கிய தருணங்களிலேயே அவனுக்கு எதிராக நிற்கின்றன. உறவினர் திருமணத்தில் உச்சகட்ட அவமானத்தை எதிர்கொள்ளும் போது அவன் காட்டுகிற எதிர்வினை பின் கரைந்து விடுகிறது. அதை எண்ணி மருகுகிறதே தவிர வீறு கொண்டு எழுவது இல்லை. அவனது இயல்பு என்பது அத்தகையதாகவே இருக்கிறது.
அவனுக்கு எதிர் பாத்திரமான பூங்குழலி அதற்கு எதிர்மறை குணம் கொண்ட சூட்டிகையான பெண். அவளது அந்த ‘எதையும் பொருட்பருத்தாத’ குணமே ஆபத்துகளில் இருந்து அவளைத் தற்காக்கிறது. அந்த குணத்தின் எதிர்மறை விளைவுகளையும் அவள் உணர்வதாகவே நாவலில் வருகிறது. துவக்கம் முதல் வரும் அவளது பாத்திரம் அதன் பின்னர் அவசரமாக முடிந்தும் விடுகிறது. அதுபோலவே நீட்டி சொல்லத்தக்கதான ரசாக் பாத்திரமும் துரிதகதியில் விலகிச் சென்றுவிடுகிறது. ரசாக் அதிகம் பேசுவதில்லை. அவனுக்குத் திக்குவாய் உள்ளது. ஆனால் நுணுர்கொம்புகள் உள்ளன. மிருக சுபாவம் உண்டு. ஆனால் அந்த சுவாரஸ்யமான பத்தி கதையின் போக்கில் அவ்வாறே கலைந்து போய்விடுகிறது
இத்தகைய யதார்த்த வகை நாவல்கள் குறிப்பாக பெருநாவல்களில் மனிதர்களின் குணங்களை நுட்பமாக அணுகிப் பார்ப்பதும் மனிதகுலத்தின் முக்கிய கேள்வியை ஆராய்வதும் நிகழும். சில நாவல்கள் ஒரு காலமாற்றத்தை கண்முன் நிறுத்துகின்றன. சில படைப்புகள் ஒரு வாழ்வியலை நேரடியாகப் பதிவு செய்கின்றன.
முறையே தமிழினியின் முந்தைய வெளியீடுகளான அஞ்சலை, வெறும் தானாய் நின்ற தற்பரம், மணல்கடிகை, ஆழிசூழ் உலகு ஆகியவற்றை இவற்றிற்கு உடனடி உதாரணங்களாக சொல்லலாம். அவ்வகையில் மூன்றாம்பிறை நாவல் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தையும் கூடவே ஒரு குடும்பத்தின் கதையையும் பதிவு செய்யும் நாவலாக உள்ளது.
இந்திய முஸ்லீம் வாழ்க்கையை 1992 ம் ஆண்டை வைத்து கோடு கிழித்து இரு பாகங்களாக பிரிக்கலாம். முஸ்லிம் சமூகம் முற்றிலுமாக அரசியல் மயமாக்கப்பட்ட பிறகு இஸ்லாமிய குடும்ப கதையை எழுதுவது என்பது கறுப்பு வெள்ளையாக ஆகிவிட்டது. மாட்டுக்கறி அல்லது குண்டு வெடிப்பு என ஏதேனும் ஒன்றையாவது ஏற்றி வைப்பது நிர்பந்தமாகிப் போய்விட்டதோ என்று என்னும் அளவிற்கு படைப்புகளில் அவை பிரதிபலிக்கின்றன. மூன்றாம் பிறை நாவல் இந்த 1990க்கும் 2002 க்கும் இடையேயான பன்னிரெண்டு வருடக் கதை என்றாலும் இது இந்த அரசியல் வயப்படவில்லை. கதையில் அரசியல் கட்சிகள் வருகின்றன. காஃபிர், ஹராம் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப் படுகின்றன. ஆனாலும் அது அரசியல் கலக்காத நாவலாகவே உள்ளது. எந்த விதத்திலும் புறக் காரணிகள் கதையின் போக்கை மாற்றவில்லை. குடும்பக் கதையாக பால்யகால நினைவேக்கத்தை கொண்டு வருகிறது. முதலில் வஹாபியசம் கால் வைக்கும் போது நிகழ்ந்த ரசாபாசங்கள் என்ன அதன் ஊற்றுமுகம் யாது அதற்கான பலன் யாரை அடைந்தது போன்றவற்றை ஆராயவில்லை. ஆனால் குறிப்பால் உணர்த்துகிறது. காதரின் கையெழுத்து கற்பூரம் காட்டி கண்ணில் ஒற்றிக்கொள்கிற எழுத்து, ராவுத்தர் குணத்துல தர்மன் கொடுக்கிறதுல கர்ணன் போன்ற உதாரணங்கள் இயல்பாக புழங்குகின்றன.
குடும்பத்தின் கதையைச் சொல்லும் போதும் கூர்மையான சித்தரிப்புகள் ஊடாக ஒவ்வொருவரின் மனவோட்டத்தையும் கூறுகிறது. கவனமாக எடுத்துரைக்கிறது. வஹீதாவும் ஃபிர்தெளஸும், கொள்ளும் நட்பும் உரையாடலும் அந்த கச்சித சித்தரிப்பிற்கு உதாரணம். வஹிதாவின் மாற்றாளுமையாக வரும் மீரா மற்றொரு உதாரணம். ஆகவே நாடகீயமாக ஏதும் நடக்கவில்லை. ஆர்ப்பாட்டமாக ஏதும் சொல்லப்படவும் இல்லை. நாவலை முடித்த பின் ஓட்டிப் பார்க்கும் போது யார் எங்கிருந்து எங்கு வந்திருக்கின்றனர் என உணரமுடிகிறது. யார்மீதும் கோபம் எழவில்லை. தான் திருமணம் செய்து வாழ்ந்திருந்தால் காதரை அதட்டி கேள்வி கேட்கலாம் ஆனால் இப்போதைய நிலையில் எப்படி கேட்பது என வஹீதா தயங்குவதை சித்தரிப்பது மிக நுணுக்கமான இடம். வஹதாவை கைவிடும் இஸ்மாயில் சூழல்கைதியாக இருப்பதும் அத்தனை கோரமான முடிவுக்கும் பின்னரும் தெரிகிறது. மாற்றாக, பூங்குழலி வீட்டுச் சித்தரிப்பில் ஒரு அவரசமும் நாடகீயமும் மிகுந்து இருப்பதும் கவனிக்கத் தக்கது. அன்றாட செய்திகளிலும் பிற ஊடகங்களிலும் கண்ட தருணங்களின் பிரதிபலிப்பு உள்ளது. உதுமான் குடும்பத்தில் காணப்படும் இயல்புத் தன்மை பூவின் குடும்ப கதையை சொல்லும் போது அவசர நிலையும் இருமைத் தன்மையும் கொண்டுள்ளது. பூங்குழலியின் ஆளுமை வெளிப்படும் உச்சகட்ட தருணமாகவும் அது உள்ளது. மூலக்கதையான உதுமான் குடும்ப நிகழ்வுகளின் கையறு நிலையை கண்டு வெதும்பும் வாசக மனம் இந்த அத்தியாயத்தில் பூங்குழலியின் ஆளுமையில் ஒருவித ஆசுவாசத்தை அடைகிறது என்றும் சொல்லலாம்.
நாவலை வாசிக்கையில் சினிமா மற்றும் கிரிக்கெட் விஷயங்கள் சம்பந்தப்பட்ட பெயருடன் வரும் போது அதன் சமகால ரசிகனாக ஒரு காலக்குழப்பமும் உருவாகறது. மற்றும் உருட்டு போன்ற பிற்காலத்திய சொற்கள் வரும்போது சற்று துணுக்குறலும் வருகிறது. ஆனால் இவையாவும் கதையின் போக்கை மாற்றத் தக்கவை அல்ல. அடுத்த பதிப்பில் சரிசெய்யத் தக்க எளிய உறுத்தல்கள்.
பட்டவர்த்தனமாக சித்தரிப்பதால் நவீன இலக்கியத்திற்கு எந்தக் குறையும் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்றாலும் பல வர்ணனைகளை இடக்கரடக்கல் கொண்டு நகர்த்திச் செல்லும் பாங்கு நாவலாசிரியரின் நடைக்கு ஒரு உதாரணம். குறிப்பிடத்தக்க மற்றொன்று பெரும்பாலான அத்தியாயங்களின் துவக்கத்தில் வரும் சூழல் வர்ணனை. ஆற்றைச் சொல்லி நாட்டைச்சொல்லி பொறுமையாக நகரத்தை சொல்லும் பழந்தமிழ் இலக்கியத்தின் மெதுவான நடை.
//இதமான சூடும் இணக்கமான ஸ்பரிசமும் வாய்க்கப்பெற்ற உயிர்களுக்கு அந்த விடியல் வாயில் கணிந்த தாய்ப்பாலாய்த் தித்தித்துக் கிடந்தது. உலகத்தின் உயிர்களில் எல்லாம் புன்னகையைப் பூசிய ஏழுதேர்ச்செல்வி தனித்துக் கிடந்தவர்களின் கண்ணீரை முத்தங்களால் துடைத்து விட்டாள்.//
இது காவிய அழகியல் சாயல் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் இத்தகைய வர்ணனைகளுடன் அத்தியாயங்களைத் துவக்குகிறார். நாவலாசியர் மானசீகனுக்கு காவிய அழகியல் தன்மை ஈடுபாடு இருப்பது இத்தகைய நடையில் புலப்படுகறது. அவை அடுத்தடுத்த நாவல்களில் இன்னமும் காத்திரமாக வெளிப்படக்கூடும் எனத் தோன்றுகிறது
*********
மானசீகனின் 'மூன்றாம்பிறை' நாவல் விவாதிக்கப்பட்டது.