Wednesday, October 1, 2025

Planned Activity




திட்டமிட்ட செயல்பாட்டுக்கு வாரயிறுதி நாட்களே ஏற்றவை


பேரழிவின் நினைவுநாள் நிகழ்வுகள் 

வாரயிறுதிக்கு மாறுகின்றன

பிறந்தநாள் கேக்குகள் வாரயிறுதியில்

வெட்டப் படுகின்றன

பிரசாரங்கள் வாரயிறுதியிலேயே சொல்லப் படுகின்றன


பிடித்தமான தொடரின் அன்றைய பத்தியை பார்த்து  விட்டு

மனைவிக்கு முத்தம் கொடுத்து 

நிதானமாய் பி்ரசவம் பார்க்க கிளம்பும் மருத்துவருக்கு


சுவாசக் குழாயை நீக்க சூப்பர் ஓவர் முடியும் வரை காத்திருப்பில் உள்ள மருத்துவர் எதிர்படுகிறார்


திட்டமிட்ட செயல்பாடுகளுக்கு வாரயிறுதியே வசதியானது


சொல்லின் வழியே மலையை பறக்க வைக்கும் மந்திரவாதியை

குடையிலிருந்து நிலாவை எடுக்கும் மாயாஜாலக்காரனை

முன் கூட்டியே பதிவு செய்யலாம்


கண்டுகளிக்கும்  திரளும் வாரயிறுதியிலேயே ஒழிவாக இருக்கின்றன


வாடிக்கையாளர்களுக்கு

வாடிக்கையான பதில்களைச் சொல்லி அலுத்துப் போனவளின் கேள்பொறியைச் சரிசெய்ய வாரயிறுதிக்கு ஒப்புக் கொடுக்கப் பட்டவர்

இரு திட்டமிட்ட செயல்பாடுகளுக்குள் சிக்கிக் கொள்கிறார்


வெள்ளியன்று எடுக்கக் கூடாதா எனத் தூசகற்றும் கருவியும்

திங்களன்று பெருக்கக் கூடாதா எனப் பி்ரேதமும் கேட்கின்றன

No comments: