தெருநாய்களை எதிர்கொள்ளும் அனுபவங்கள் தொடர்ந்து நிகழ்ந்தபடியே இருக்கின்றன. இளம் வயதில் ஒருமுறை விடுதியின் சுவற்றைத் தாண்டிக் குதித்த போது சுவற்றுக்கு அந்தப்புறம் இருந்த நாய் ஒன்று வெகுண்டு விட்டது. எனது தோளில் துண்டு இருந்தது. அதை எடுத்துச் சுழற்றினால் அது இன்னும் ஆக்ரோஷமானது. ஏதும் கடிபடவில்லை என்றாலும் அது ஒரு நல்ல அனுபவம். நாயை விரட்ட, குனிந்து கல்லை எடுப்பது போல ஆக்ஷன் காட்ட வேண்டுமே தவிர துண்டைச் சுழற்றி முத்து ஸ்டைல் காட்டக் கூடாது. கோலெடுத்தால் குரங்காடும். கல்லெடுத்தால் நாய் ஓடும் என்று கூறிய முன்னோர்கள் யாரும் மூடரில்லை.
தாம்பரம் சானடோரியத்திலிருந்து சிட்லப்பாக்கம் வரை நடக்கும் போது தங்கள் ஏரியாவை ஏரிக்கரை, வரதராஜா தியேட்டர், முத்தாரம்மன் கோயில் எனத் தொகுதி வாரியாக பிரித்துக் கொண்டு 'எங்க ஏரியா உள்ள வராத' என குதித்தவைகள் அடுத்தடுத்த நாட்களில் 'நேரங்கெட்ட நேரத்துல வறியே மண்டைல அறிவிருக்கா' என்று அலுத்துக்கொண்டு, பிறகு 'நேத்து வீக் ஆஃப் ல்ல ' என்று கேட்குமளவு ஆகிவிட்டன. அதன்பிறகு மேற்கு சைதாப்பேட்டை, புதூர், திருமுல்லைவாயல் என எங்கும் இதே நிலைதான். இன்று வரை நடந்தோ அல்லது பைக்கிலோதான் போகிறேன். பார்த்தவை பெரும்பாலும் செகண்ட் ஷிப்ட்டும் இரவு ஷிப்டும் என்பதால் ரோடு காலியாக இருக்கும், நாய்களும் let's have fun என்று எதிர் நோக்கியிருக்கும்.
இரவு மூன்று மணிக்கு ஓ.டி பஸ்டாண்ட்டை கடக்கையில் நாகாத்தமன் கோயில் வரை ஒன்று துரத்தி வந்தது. அதோடு அம்பத்தூர் நகராட்சி எல்லை முடிவதால் திரும்பிச் சென்று விட்டது. அப்போது அம்பத்தூர் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப் படவில்லை. அதன்பின் ஒன்று, பட்டரவாக்கம் ரயில்நிலையத்தில் யாரோ ஒருவர் ஏற்றிவிட்டு சென்ற தனது குட்டியின் உடல் அருகே முகர்ந்தபடி நின்றிருந்தது. ஒரு எமோஷனலில் இரு நொடிகள் நானும் வண்டியை நிறுத்தி தாமதிக்க அது வெறியுடன் என்னை நோக்கி வந்தது. வண்டியை நடைபாதையில் ஏற்றி முறுக்கி வந்தேன். மறுநாள் போகும் போது ஓரமாக அமர்ந்தபடி போக்குவரத்தை மேற்பார்வையிட்டபடி இருந்தது. இது போன்ற நேரான சாலைகளில் மாட்டினால் வேகமாக வந்துவிடலாம். ஆனால் வழிதவறி முட்டுச் சந்துகளுக்குள் சென்றுவிட்டால் வண்டியை திருப்பி வரவேண்டும். துரத்தும் நாய்கள் சுற்றி வளைத்து விடும். அந்த நேரங்களில் ஏய்..ச்சீ.. நகரு என்று கத்தி நகர்ந்து வருவேன். இப்படித்தான் சொல்ல வேண்டும் என்றில்லை. நமக்கு பதட்டத்தில் தாய்மொழி வருகிறது. அல்லது காலகேயர்களின் மொழி வருகிறது. அவற்றிற்கு இரண்டு மொழிகளும் தெரிந்திருக்கின்றன. இந்த அணுகுமுறையில் நான்கு முறை அவை ஒதுங்கி யிருக்கின்றன.
தெருநாய்கள் எங்கள் அப்பார்ட்மெண்டில் ஈன்றிருக்கின்றன. என்ன செய்வது என தெரியாமல் அப்படியே விட்டு விடுவோம். அப்பார்ட்மெண்ட் குழந்தைகள் அதற்குள் குட்டிகளுக்குப் பெயர் வைத்து விடுவார்கள். அப்புறம் டைகர் பிஸ்கெட் போடும் வைபவம் எல்லாம் நிகழும். அப்புறம் தெருநாய்கள் எண்ணிக்கை பெருகிவிடும். குட்டிகள் எங்கோ சென்றுவிட சில மாதங்களில் மொத்த எண்ணிக்கையில் ஒன்று அல்லது இரண்டு அதிகமாகியிருக்கும். மீண்டும் அடுத்த குட்டிகள் ஈன்றெடுப்பது என இது தொடரும். அதில் கொரோனா நேரத்தில் ஒரு நாய் ஈன்ற நான்கு குட்டிகள் தெருவில் சுற்றிக் கொண்டிருந்தன. ஒருநாள் இரவு குழந்தை தூக்கத்தில் எழுந்து அலறி நாய் போலவே குரலெழுப்பினாள். நாங்கள் சற்று குழம்பிவிட்டோம். சோளிங்கர் குங்குமத்தை இட்டுவிட்டு தூங்கச் செய்தோம். மறுநாள் காலையில் அந்த பார்த்த போது நான்கு குட்டிகளும் இறந்து கிடந்தன. யார் பார்த்த வேலை எனத் தெரியவில்லை. கொரோனா காலம் என்பதால் தூய்மைப் பணியாளரை தேடிப்போய் அழைத்து வந்தேன்.. அவர்தான் தூக்கிப் போட்டார். அதன்பின் இந்த ஐந்தாண்டுகளில் எந்தத் தெருநாயும் எங்கள் அப்பார்ட்மெண்டில் ஈன்றெடுக்கவில்லை என்பது தனிக்கதை.
முன்பு மன்னார்குடியில் இருந்த போது எங்கள் உறவினர் வீட்டிலிருந்து வளர்ப்பு நாய் ஒன்று எங்கள் வீட்டிற்கு வந்தது. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் எங்கள் வீட்டிற்கு கொண்டு வந்திருந்தோம். நள்ளிரவு இரண்டு மணிக்கு குரைக்க ஆரம்பித்து அரைமணி வரை ஓயாமல் குரைத்தது. அதன்பின் காலை ஆறு மணிக்கு உறவினர் உறக்கத்தில் இறந்து விட்டார் என ஃபோன் வந்தது. இந்த விஷயத்தை சொன்ன போது இறந்த நேரம் இதுவாக இருக்கலாம் என கூறினர். எனக்கு இவ்வாறு எனது அறிதலுக்கு அப்பாற்பட்டு் நடக்கும் விஷயங்கள் பலவும் நடந்துள்ளன. அதை ஆராயாமலும் சிலாகிக்காமலும் அப்படியே நகர்ந்து விடுவது எனது வழக்கம். அது போலவே இவையும்..
பல ஆண்டுகள் முன்பு தெருநாய்களை நாய் பிடிக்கும் வண்டியில் வந்து பிடித்துப் போவார்கள். அப்போது ஊரில் இருக்கும் கருப்பன், ஒயிட்டி, மணி எல்லாம் தெறித்து ஓடும். அவற்றை கொன்று தென்னை மரத்தில் புதைப்பது நிகழும் என கேள்விபட்டிருக்கிறேன். எம்ஜிஆர் வாட்ச் ஓடிக்கொண்டிருப்பது போல பலர் அதை சொல்லியிருகிறார்கள். அதில் இருவர் அதை எப்படி பள்ளி கிரெளண்டில் ஓடவிட்டு கதவை சாற்றி எப்படி அடிப்போம் என்று விவரித்திருக்கிறார். எதையும் நேரில் கண்டதில்லை..
மற்றொரு விஷயம், எனக்கும் டாமிதான் மூச்சு ஆனால் பிறர்மேல் அதை விடமாட்டேன் என்கிற ஞானம் இல்லாமல் ஓனர்கள் அடிக்கும் கூத்துக்கள். தெருவில் வாக்கிங் அழைத்து வந்து விட்டு விட்டு ரீல்ஸ் பார்ப்பது அல்லது சின்னத்தம்பி பட குஷ்புவைப் போல பொத்திப் பொத்திப் பார்ப்பது ஒரு வித அழிச்சாட்டியம். தெருநாய் என்றில்லை வளர்ப்பு நாய் கடித்தாலும் ரேபீஸ் வரும் என்கிற நிலைமை பெரிதாக புரியவில்லை. ஊரில் ‘வளர்ப்பு’ நாய் கடிபட்ட எனது நண்பரின் நண்பர் ஒருவர் நாய் போலவே நடந்துகொள்ளத் துவங்கினார். அது ரேபீஸ் என பிறகு தெரிந்தது. அவரை வீட்டில் அடைத்து வைத்திருந்தனர். பிறகு இறந்து போனார்.
இவை எனது அனுபவங்கள்.
எனது எண்ணங்களாக,
குழந்தைகள் மீது நாய்கள் பாய்வதற்கும் தெருநாய்கள் பெருக்கத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றே நினைக்கிறேன். ஒன்றிரண்டு இருந்தாலே அவை குழந்தைகளின் மணத்தில் ஈர்க்கப்படுகின்றன. மார்க்கெட்டில் பிஞ்சு வெண்டைக்காயை பார்த்தால் கை பரபரப்பது போல இது. குழந்தைகளை நீங்கதான பார்த்துக்கனும் என்பதை ஒரு மேட்டிமைவாத சொல்லாக கிண்டலடிப்பது அதீதமாகவே தோன்றுகிறது. குழந்தையோடு ஒருவர் வாக்கிங் செல்லும் போது சும்மா படுத்திருந்த ஒரு நாய் பாய்ந்து வந்தது இப்போதும் நடுக்கம் தருகிறது. அவர் கவனமாக இருந்ததால் அதை விரட்டினார். அந்த நேரம் அங்கு இல்லையென்றாலோ அவர் கவனச் சிதறலுடன் இருந்திருந்தாலோ பிரச்சனையாகி யிருக்கும்.
தெருநாய்களுக்கு ஏதுவான சூழல் இல்லாத போட்கிளப் ரோடு போன்ற பகுதிகளில் அவை இருப்பதில்லை. அதாவது அவர்கள் தெருவில் குப்பையை கொட்டுவதில்லை. தற்போது ரியல் எஸ்டேட் நடக்கும் வீடுகள் எழும்பாத இடங்களிலும் அவை இருப்பதில்லை. ஆனால் மிச்சத்தை வெளியே கொட்டும் வீடுகளைச் சுற்றி, குப்பைகள் கொட்டப்படுகிற இடங்களைச் சுற்றியும் உணவு படைக்கப்படும் கல்லறை போன்ற இடங்களைச் சுற்றியும் இருக்கின்றன. காலையில் நடந்து போகும் போது இருபது முதல் நாற்பது வரை நாய்கள் கூடி நிற்கின்றன.ஒரு அச்சம் உருவாகிறது என்பது நிஜம். ஆனால் கடந்து போகவும் முடிகிறது. அதேநேரம் பார்க் -க்கு குழந்தையை அழைத்து வருகையில் இந்த கூட்டத்திடம் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த அனுபவங்களோடும் புரிதலோடும்தான் சாரு எழுதிய இந்த கட்டுரையை வாசித்தேன். மூன்றாம் பத்தியிலிருந்து முழுக்க முழுக்க உடன்படுகிறேன். அதிலும் இந்த இடம் ஒரு ஹெலிகாஃப்டர் ஷாட்..
//தெருநாய்கள் முன்பு எண்ணிக்கையில் கம்மியாக இருந்ததால் அத்தனை ஆரவாரம் எழவில்லை. தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை. அதனால் தெருநாய்களின் எண்ணிக்கை பெருகி விட்டது. இது யாருடைய தவறு? மனிதர்களின் தவறுக்கு நாய்கள் என்ன செய்யும்?
மேற்கத்திய நாடுகளில் ஒரு தெருநாய் கூட கிடையாது. ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் நாயோ பூனையோ இருக்கும். நாய்களே அதிகம். தெருக்களில் திரிந்த நாய்களுக்கு அவர்கள் இனப்பெருக்கத்தடை ஊசிகளைப் போட்டார்கள். இந்தப் பணியை செய்து முடிக்க ஒரு பத்து ஆண்டுகள் ஆகும். ஆனால் நம் மக்கள் சுயநலமிகள். அவர்களுக்கு இன்றே வேலை ஆக வேண்டும். நாய்களை அப்புறப்படுத்துங்கள் என்கிறார்கள். ஆனால் இந்த மக்கள் அதிகாரமில்லாதவர்களிடம்தான் வீரம் காட்டுவார்கள். ஊர்களில் ஒழுங்கான சாலை இல்லை. முறையான கல்விக்கூடங்கள் இல்லை. கல்விக்கூடங்கள் மக்கள் பணத்தை வெளிப்படையாகக் கொள்ளையடிக்கும் வியாபார ஸ்தலங்களாக மாறி விட்டன. ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் கிடைப்பதில்லை. சுத்தமான தண்ணீர் இல்லை. தேசமே குப்பைத்தொட்டி போல் இருக்கிறது. மழை பெய்தால் ஊர்கள் மிதக்கின்றன. மக்களுக்கு எது பற்றியுமே கவலையில்லை. ஏனென்றால், அவர்கள் அதிகாரத்தை எதிர்த்து சுண்டு விரலைக் கூட அசைக்க முடியாத கோழைகள். ஆனால் நாய்களிடம் எந்த அதிகாரமும் இல்லை. அடித்தே கொல்லலாம். அடிக்கிறார்கள். இப்போது நாய்களுக்கு எதிராக தொலைக்காட்சி மூலம் மூளைச்சலவை நடக்கிறது. இப்படியெல்லாம் உத்வேகம் பெற்றோ என்னவோ கர்னாடகாவில் ஒருத்தர் நான் மூவாயிரம் நாய்களை விஷம் கொடுத்துக் கொன்றேன் என்கிறார். இது தேச சேவை என்று வேறு மார் தட்டுகிறார்.
//
ஏன் மூன்றாம் பத்தியிலிருந்து என்றால், கட்டுரையின் துவக்கம் இவ்வாறு அமைந்திருக்கிறது
//நான் கடவுள் படத்தின் கடைசிக் காட்சியில் ருத்ரன் (ஆர்யா) ஹம்சவல்லியிடம் (பூஜா) சொல்லும் வசனம் இது:
”உனக்கு கண்ணு இல்ல. அதனால உன்னால இந்த சமூகத்துக்கு ஒரு பயனும் இல்ல. நீ சாகணும்.” //
நான் கடவுள் படம் பற்று / விடுதலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகவே இன்றும் எனக்குத் தோன்றுகிறது. ஆகவேதான் இந்த டிஸ்கியோடு பகிர்கிறேன். படம் வந்தபோதே இந்த விவாதங்கள் நிகழ்ந்து ஒய்ந்து விட்டன. ஆகவே இப்போது முக்கியம் அந்தப் படம் அல்ல..
சாருவின் கட்டுரைக்கு இங்கே சொடுக்கவும்
No comments:
Post a Comment