Friday, January 16, 2026

ஒதம்பல் – சிவகுமார் முத்தய்யா

 குறிப்பு--

எழுத்தாளர் சிவகுமார் முத்தய்யாவின் சமீபத்திய நாவலான ஒதம்பல் குறித்து, ‘படைப்பு அரங்கில்’ உரையாற்றினேன். அதன் எழுத்து வடிவம். காணொலி இங்கே-

நன்றி- வேரல் பதிப்பகம், நண்பர்கள்: ஜீவகரிகாலன், கலை கார்ல் மார்க்ஸ், ஜி.பி.இளங்கோவன்  மற்றும் ஸ்ருதி இலக்கியம் 


ஒதம்பல்

இங்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கும் யவனிகா ஸ்ரீராம் மற்றும் எம்.டி.எம் இருவரும் முறையே தங்களது அரசியல் கவிதைகள் மூலமாகவும் தங்களது கட்டுரைகள் மற்றூம் விவாதங்கள் வாயிலாகவும் இலக்கிய உலகிற்கு முக்கிய பங்காற்றியவர்கள். அவர்களுக்கு முதற்கண் வணக்கங்கள்

இன்றைய விழா நாயகர்களான  சிவகுமார் முத்தையா, ஜிபி இளங்கோவன் மற்றும் பா.சரவணகுமார் அவர்களுக்கும் படைப்புகள் குறித்து உரையாட வந்திருக்கும் அண்ணன் சுந்தரபுத்தன் மற்றும் தோழர்கள் மீனா சுந்தர் மற்றும் ஜோ.மகேஸ்வரன் அவர்களுக்க்கும் நிகழ்வை ஒருங்கிணைக்கும் வடலூர் ஆதிரை மற்றும் குடந்தை அனிதா  அவர்களுக்கும் இங்கு குழுமியிருக்கும் இலக்கிய ஆர்வலருக்கும் எனது காலை வணக்கங்கள்

 

இங்கு எனது உரையின் மையமான ஒதம்பல் நாவல், கீழ்வெண்மணி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.  நான் பிறந்து வளர்ந்த கீழத்தஞ்சைப் பகுதியில் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் நேரத்தின் போதும் கீழ்வெண்மணி நினைவுநாள் அனுசரிக்கப்படும். தெருமுனைக் கூட்டங்கள் ஊர்வலங்கள் நிகழும். எங்கும் சுவரொட்டிகள் சுவற்றோவியங்கள் தீட்டப் பட்டிருக்கும்.  அது பற்றிய ஒரு நினைவூட்டல் நிகழ்ந்தபடியே இருக்கும். ஆனால் சென்னை வந்த பிறகு எனக்கு அது சார்ந்த பதாகைகளோ சுவரொட்டிகளோ காணக் கிடைக்கவில்லை. சென்னைப் பதிப்பு செய்தித்தாள்களில் கூட அந்நிகழ்வுக்கான அஞ்சலி இடம்பெறவில்லை.  அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அது ஒரு பிராந்தியத்தின் போரட்டமாக ஆகிவிட்டதோ என்கிற ஐயத்தை அது கிளப்பியது.

அதன் பிறகு இரு வேறு சமயங்களில் கீழ்வெண்மணி என்கிற பெயர் ஊடகங்களில் அடிபட்டது. இரண்டும் திரைப்படங்கள் வாயிலாக நிகழ்ந்தன. முதலில் சிட்டிசன் என்கிற படத்தில் வரும் நாயகன் தனது ஊரையே கொன்றழித்த அதிகாரிகளைப் பழிவாங்குவான். அப்போது அது எப்படி ஒரு ஊரையே கொன்றுவிட்டு வில்லன்களால் தப்பித்து வாழ முடியும் இதெல்லாம் சினிமாவில்தான் சாத்தியம் என்ற விமர்சனங்கள் எழுந்தன. அப்போது அதன் வசனகர்த்தாவாகிய பாலகுமாரன் ஒரு பேட்டியளித்து இந்த சம்பவத்தை நினைவு கூறினார். அதன் பின் பல்லாண்டுகள் கழித்து அசுரன் படம் வந்தபோது பலரும் கீழ்வெண்மணியை நினைவு படுத்திப் பேசினர். இவ்வாறு அவ்வப்போது அது பொதுவெளியில் உச்சரிக்கப்படும் பெயராக ஆகியது. ஆனால் அது நிகழந்த காலத்தில் உருவாக்கிய அதிர்வலைகள் என்னென்ன என்பதை ஒரு வணிகத் திரைப்படம் சொல்லாது. அதைப் புரிந்து கொள்ள நாம் சற்று மெனக்கெட வேண்டியிருக்கிறது. ஒன்று, அந்தச் சமகாலத்தில் உருவான ஆளுமைகளை வைத்துப் புரிந்து கொள்ளலாம். இரண்டு இலக்கியத்தில் அது எவ்வாறு உள்ளது என்றூ பார்க்கலாம்.

அது உருவாக்கிய அல்லது மாற்றியமைத்த ஆளுமைகள் என்றால் இன்று நம்முடன் உரையாடும் இருவரைச் சொல்லலாம்..




முதலில் தோழர் தியாகு, கீழ்வெண்மணி சாதீயப் படுகொலை தியாகுவிடம் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. 1969 இல், தன் கல்லூரிப் படிப்பைத் துறந்து, வீட்டைவிட்டு வெளியேறி நக்சல் இயக்கத்தில் இணைந்தார். அந்த கோபாலகிருஷ்ண நாயுடுவை அழித்தொழிப்பு செய்ய வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது என்று தனது சுவருக்குள் சித்திரங்கள் புத்தகத்தில் எழுதுகிறார். தமிழகத்தில் முதன் முதலில் எம் எல் இயக்கம் உருப்பெற ஒரு தீப்பொறியாக இருந்தது இந்நிகழ்வு.

இரண்டாவதாக கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் அவர்கள், ஏற்கனவே சர்வோதயா அமைப்பில் இருந்தவர்கள் கீழ்வெண்மணி அனுபவத்தில் இருந்து கற்றுக்கொண்டு "உழுபவனின் நில உரிமை இயக்கம்"(லாப்டி) (LAFTI: Land for Tillers' Freedom) என்னும் அமைப்பை ஜெகந்நாதனுடன் இணைந்து துவங்குகிறார். சர்வோதயாவில் இருந்து விலகுகிறார்.

 


அதுபோல இலக்கியத்தில் இதன் பங்கு என்ன என்பதை நாம் ஆராய வேண்டும். இதுவரை கீழ்வெண்மணியை மையமாகக் கொண்டு ஐந்து நாவல்கள் தமிழில் நான் வாசித்திருக்கிறேன். குருதிப்புனல், செந்நெல், , கீழைத்தீ, தாளடி ஆகிய நேரடி நாவல்களும் குறத்தியம்மன் என்கிற மொழிபெயர்ப்பு நாவலும் வந்துள்ளன. இப்பொழுது ஆறாவதாக சிவகுமார் முத்தய்யாவின் ஒதம்பல் நாவல் வந்துள்ளது. இதற்கு முன் வந்த அனைத்து நாவல்களும் தனித்தனி அழகியல் கொண்டவை என்று எனது வாசிப்பில் வகைப்படுத்த இயலும். குருதிப்புனலில் இருந்த ஃபிராய்டிய அணுகுமுறை அது வெளிவந்த காலத்தில் மிகவும் சர்ச்சையை உருவாக்கியது. அதற்கு மாற்றாக தனது நாவலைக் கொண்டுவருவதாகவே செந்நெல் எழுதிய சோலை சுந்தர பெருமாள் கூறுகிறார். கீழைத்தீ நேரடியாக விவசாயிகள் தரப்பில் நின்று அதை அணுகுகிறது. தாளடி அதை ஒரு காலத்தால் முன்னும் பின்னும் சென்று ஒரு பிரத்யேக அழகியல் நடையில் அந்த நிலத்தின் மாறுதல்களை ஆராய்கிறது. குறத்தியம்மன் நாவல் பேரியக்கங்களின் தோல்வியை விமர்சிக்கும் வண்ணம் இதை சித்தரிக்கிறது. இவற்றின் வரிசையில் வரும் இந்த ஒதம்பல் நாவல் மேற்சொன்னவையோடு ஒப்பிட முரண்படும் இடம் என்பது முக்கியமானது. கீழ்வெண்மணியில் நிகழ்ந்த படுகொலைச் சம்பவம் என்பது பிற நாவல்களின் மையமாக உள்ளது. ஆனால் அதை நீக்கிவிட்டால் கூட ஒதம்பல் நாவலை அதே சுவாரஸ்யத்துடன் நீங்கள் வாசித்து விட முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.. இதுவே இந்த நாவலை ஒரு பின்னவீனத்துவ வாசிப்புக்கு என்னை ஆட்படுத்துகிறது. அப்படியென்றால் இந்நாவலின் மையம் என்று எதை செல்வது? இதில் பல மையங்கள் உள்ளன. ஒரு சாதிக்குள் இருக்கும் பிரிவினைகள். இரு வேறு சாதிகள் இணைந்து செயலாற்றும் இடங்களில் வெளிப்படும் முரண்கள் மற்றும் ஒத்திசைவுகள். சாதி அடுக்குகள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள செய்யும் சூழ்ச்சிகள் என சமூகம் சார்ந்த ஒரு வாசிப்பை வைக்க் இயலும். குடும்ப அமைப்பு தனக்குள் உருவாக்கும் அதிகாரப்படிகள் அதன் வாயிலாக உருவாகும் விலக்கும் காழ்ப்பும் என வாசிக்க முடியும். மக்கள் இயக்கங்களின் தோல்வியும் புதிய மக்கள் இயக்கங்கள் உருவாக்கும் சமரசங்களும் என ஒரு வாசிப்பை முன் வைக்க இயலும். இத்தகைய சாத்தியங்களால் வாசகருக்கு எது நெருக்கமாகிறது என்றால் இந்நாவல் அந்த மண்ணும் அந்த மண்ணின் வளம் உருவாக்கும் ஏற்றத் தாழ்வுகளும் அந்த வர்க்க பேதம் உருவாக்கும் குழப்பங்களும் என அந்த மக்களை மிகவும் அருகில் வைத்துப் பார்க்கும் வாய்ப்பை அளிக்கிறது

 

மற்றொரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். அது சிவகுமார் முத்தையாவின் மொழிவளம்..

 

ஒரு மார்கழி மாதம் என்பது எவ்வளவு அழகான மாதம் அல்லவா.. நாம் இப்பொது மார்கழியில் இருக்கிறோம். இலக்கியவாதிகளுக்கு விஷ்ணுபுரம் விருது விழா வருகிறது. புத்தக கண்காட்சி வருகிறது. பக்தர்களுக்கு திருப்பாவையும் திருவெம்பாவையும் வருகின்றன. ஹனுமத் ஜெயந்தி வருகிறது. கிறிஸ்துமஸ் வருகிறது. பொது மக்களுக்கு புத்தாண்டு விடுமுறை வருகிறது. சுற்றுலாத்தளங்கள் நிரம்பி வழிகின்றன.  ஆனால் ஒரு விவசாயக்கூலிக்கு அது எப்படியிருக்கும்? சிவகுமார் முத்தையா, இரவு ஒரு நத்தையாகி விடுகிறது என்று எழுதுகிறார். நத்தை தனது ஒவ்வொரு புலனால் கண்காணித்து நகரவேண்டும். ஒரு சுமையை வைத்துக்கொண்டு மெல்ல்ல நகரு நத்தை போல அந்த மாதங்கள் கழிகின்றன. கூலியாட்களுக்கு அப்போது வேலையில்லை. அறுவடை முடிந்த பின் மாற்றாக நெல் தருகிறேன் என்று மரவள்ளிக் கிழங்கை வாங்கி அவித்து உண்கிறார்கள்.




அதை இத்தகைய எதிர்ப் பிரதி எழுதும் ஒருவர் வந்து சொல்ல வேண்டும். கம்பனோ காளிதாசனோ இதைச் சொல்லமாட்டார்கள்.  செவ்வியல் படைப்புகள் அரசின் தரப்பை எழுதுகின்றன நட்டுப்புறப் படைப்புகள் மக்களின் தரப்பை எழுதுகின்றன. சிவகுமார் முத்தையா ஒரு டெல்டாப் பாடகன். அவரால் மாதங்களில் அவள் மார்கழி என்று கண்ணதாசன் வரிகளோடு காதலில் ஆழ்பவருக்கும் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று அதைப் புனிதமாக்கும் புராணப் பிரதிகளுக்கும் இணங்க முடியாது. அவை  இந்த அவஸ்தையை சொல்வதில்லை. அவன் மழையை ரசிப்பதில்லை. மழை பக்கோடா இளையராஜா என்று ட்ரெண்ட் செய்பவனில்லை. இவனால் அவர்களை எழுத முடியாது. பெருமழையில் ஒருவன் மாட்டிக் கொள்கிறான். தண்ணீர் அளவு ஏறுகிறது. குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். ஓடுகிறான். முடியவில்லை. ஒரு இடத்தில் நிற்கிறான். சத்தமிட்டு அழுகிறான். அழுதபின் ஒரு மூர்க்கம் வெளிப்படுகிறது மீண்டும் ஓடுகிறான். இவர் அவனைத்தான் எழுதுவார். 

 

அந்த நிலப்பகுதி குறித்த அறிமுகம் இல்லாதவர்கள், எம். எம். தண்டபாணி தேசிகர் நடித்த நந்தனார் திரைப்படம் இன்னும் யூட்யூபில் காணக்கிடைக்கிறது. அதைப் பார்த்தால் ஆயிரம் ஆண்டுகளாக அந்த நிலப்பகுதியும் சமூகமும் எப்படியிருந்தன என்பதைக் காணலாம். எம். எம். தண்டபாணி தேசிகர் அவர்கள் உயர்த்திற்கே நாற்றுகள் வளர்ந்திருக்கும். அதைக்காண பிரமிப்பாக இருக்கும். ஆனால் ஒருவர் மற்றவரை எப்படி அழைக்கின்றனர் என்பதை அதில் யதார்த்தமாகக் காட்சிப் படுத்தியிருப்பார்கள். அதாவது அன்றைக்கான யதார்த்தம். இன்றைக்கு அதைச் சொல்லும்போது சம்பந்தப் பட்ட யாரும் அதை சொல்லவோ கேட்கவோ விரும்பவில்லை என்கிற நிலையும் உருவாகிறது. ஒரு அரசியல் சரிநிலை தேவையாகிறது.  ஆகவே புனைவெழுத்தாளன் அதை கவனத்துடன் கையாள வேண்டியிருக்கிறது.

 

அந்த விதத்தில் சிவகுமார் முத்தையா புனைவில் எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் என்பது கவனிக்கத் தக்கது. அவர் ஒரு ஊரை உருவாக்குவார். அந்த ஊருக்கு கிழக்கே இந்த ஊர் மேற்கே இது, இந்த நதி பாய்கிறது. இந்தக் கட்சி எம் எல் ஏ என்று அதன் சுற்றுவட்டாரத் தகவலகளை வரலாற்றுத் தரவுகளோடு வைப்பார். அதற்கு நடுவே அவர் உருவாக்கிய அந்த கற்பனையான ஊரில் இவர் கதாபாத்திரங்கள் எழுந்து வருவார்கள். ஆகவே வாசிப்பவருக்கு அது ஒரு கற்பனையூர் என்பது கவனத்தில் இராது. அதற்குமேல் தன்னுடைய சித்தரிப்பில் அதை உண்மையான ஊராக்கி விடுவார். தஞ்சாவூரில் தப்படிச்சான் மூலை என்கிற ஒன்றை தன் குரவை நாவலில் உருவாக்கியிருந்தார். இதில் அவுரிப் பண்ணையை உருவாக்குகிறார். இந்த நாவலின் முதல் அத்தியாயம் அதை நோக்கிப் பெரிய மழைக்கு நடுவே செல்லும் ஒருவனின் பயணத்தில்தான் துவங்கும்.

அங்கே அவன் ஒதம்பலில் சிக்கிக் கொள்கிறான். ஒதம்பல் என்பது ஒருவகைப் புதைசேறு. இங்கு பல புதைக்குழிக்கள் உள்ளன. கீழ்வெண்மனியை தமிழ்த்தேசியர்கள் தமிழர் வடுகர் என்று விவாதித்தனர். ஆகவே அதில் பெரியார் இழுத்து வந்தனர். சாதிப் பிரச்சனையாக்கியும் விவாதம் நிகழ்ந்தது. ஏனென்றால் அதில் இறந்த அனைவரும் தாழ்த்தப்பட்ட மக்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆதிக்க சாதியினர். ஆனால் இறுதியில் அது ஒரு வர்க்கப் போரட்டமாகவே நிலை நின்றது. ஆனால் இலக்கியம் ஒரு ஹோமியோபதி மருந்து போல. அதில் நோய்க்கு மருந்து தருவதில்லை. நோயாளிக்குத்தான் மருந்து அளிப்பார்கள்.  ஒரு நோயாளியின் ஒட்டுமொத்த வாழ்க்கை அவர் ஆசை அவருக்கு வரும் கனவு எல்லாம் சொல்லவேண்டும். அதுபோல இதன் அனைத்துக் கோணங்களும் இந்த நாவலில் அலசப் படுகின்றன. நான்கு மருமகளும் ஒரு மாமியாரும் கொண்ட அந்த நாயுடு வீட்டில் அதிகாரத்தைக் கைப்பற்ற பெண்கள் ஒவ்வொருவரும் என்னென்ன சாகசஙக்ள் செய்கிறார்கள்.. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எவ்வாறு மற்றவரை மட்டந்தட்டுகிறார்கள் என்று சொல்கிறார். நாம் கிளியம்மாளுக்கு வருத்தப் படுவது போலவே, நாயுடு குடுபத்தில் வரும் இளைய மருமகளான சம்பூர்ணத்துக்கும் வருத்தப் படுகிறோம். 

நெல் உற்பத்தியாளர் சங்கத்தில் அனைத்து ஜாதியினரும் இருக்கிறார்கள். அவர்களில் பிராமணர்கள் தொழிலாளர்களுடன் சமரசம் செய்கிறார்கள் அல்லது நிலத்தை விட்டுவிட்டு நகரத்துக்கு இடம் பெயர்கிறார்கள்.  நிலத்தைக் கைவிடாத பிற ஆதிக்க சாதியினர் ஒடுக்கத்துணிகிறார்கள் அல்லது பதவி வழியாக அரசை அணுகுகிறார்கள் என்கிற சித்திரத்தை அளிக்கிறார். அரசியல் என்று பார்த்தால், காங்கிரஸ் இடதுசாரி மற்றூம் திராவிட இயக்கங்கள் வருகின்றன அவற்றில் பண்ணையார்கள் தனது காங்கிரஸ் ஆதரவிலிருந்து திராவிட கட்சி ஆதரவுக்கு வருகிறார்கள். அங்கு பண்ணையாளை சேர்த்துக் கொள்கிறார்கள். இனி வெண்மணி குறித்துப் பேசாதே என்று சொல்லிக்கொண்டு இருவரும் ஒரு சமரசத்துக்கு வருகிறார்கள்.  சமூகம் என்று வந்தால், ஒரு தலையாரி பணிக்காக தனது பங்காளியைக் கொல்ல வேணு தயங்கவில்லை. இருவரும் ஒரே ஜாதிதான்.  அதே சமயம் வெண்மனி கொலைகளின் முதல் குற்றவாவாளியாக இருந்த கோபால கிருஷ்ண நாயுடு மீது சக பண்ணையார்களுக்கு ஒரு மரியாதையே இருக்கிறது.  அது இளம் தலைமுறைக்கு தனது முன்னோர்கள் மீது ஒரு விலக்கத்தை உருவாக்குகிறது.

இந்தப் புள்ளியை நான் எடுத்துச் செல்கிறேன். இவையெல்லாம் பிண்ணிப் பிணைந்துதான் இந்த நாவல் உருக்கொள்கிறது. அதன் களத்திற்கு அவுரி என்றொரு கிராமமும் அதற்கொரு பண்ணையும் புனைவில் உருவாக்கி வெண்மணியை அதில் பிரதிபலிக்கிறார்.

 


இதன் ஓட்டத்தில் இதைச் செம்மைப் படுத்தியிடுக்கலாம் என்று நான் கருதும்  இரு விஷயங்களைக் குறிப்பிட வேண்டும். எங்கும் வருடத்தைச் சொல்லாமல் அதைக் குறிப்பால் உணர்த்துவது எழுத்தாளரின் பாணியாக உள்ளது. அவர் சித்தரிக்கும் முதல்வர் வெளியான திரைப்படம் ஆகியவற்றைக் கொண்டு வாசகர் மனதில் அதன் காலமும் இடமும் மனதில் பதியும். பன்னீர் வக்கீலைப் பார்க்கும் இடத்தில் அவர் வாசிக்கும் புத்தகங்கள் சொல்லப் படுகின்றன. அங்கு மூலதனம் என்கிற பெரிய புத்தகத்தைக் காண்கிறான். மூலதனம் 1998 ல் தமிழில் வெளியிடப்பட்டது. அங்கே அதைக் காண்பது என்பது ஒரு காலக்குழப்பத்தை உருவாக்குகிறது. ஆனால் அதனால் கதையின் போக்கு ஏதும் மாறுவதில்லை. அந்த இடத்தில் அதன் ஆங்கிலப் பதிப்பு இருந்தாலும் கதையின் போக்கு மாறப்போவதில்லை. நாவலின் நடை என்பது விவசாயக் கூலிகளின் நடையிலேயே உள்ளது. நாயுடுவின் இல்லத்தில் நிகழும் உரையாடல்களிலும் அத்தகைய சித்தரிப்பு வருகிறது. ஊரில் சற்று தெலுங்கு கலந்து உரையாடும் அந்த மொழி மிகவும் நன்றாக இருக்கும். நகைச்சுவையாக இருக்கும் என்றும் சொல்லலாம். அந்த மொழியை அந்த உரையாடலில் வைத்திருக்கலாம் என்று தோன்றியது. இவ்விரண்டும் பெரிதளவில் நாவலின் களத்தைப் பாதிக்க வில்லை என்பதால் பெரிதாக இடறவில்லை

 

இந்நாவலின் முன்னுரையில் தான் எந்த சமூகத்தையும் விமர்சிக்கும் நோக்கத்தில் இந்நாவலை எழுதவில்லை என்று எழுத்தாளர் குறிப்பிடுகிறார். முன்னுரை என்பது எழுத்தாளரின் தர்க்க மனதால் எழுதப் படுவது. ஆனால் சிவகுமார் முத்தையா ஒரு டெல்டாப் பாடகன். அவரது புனைவு என்பது அந்தப் பாடகனின் ஆழ்மனதின் வெளிப்பாடு. அது நாவல் ஓட்டத்தில் எல்லா விமர்சனங்களையும் சொல்லிவிடுகிறது.  வாசகர் என்பவர் எழுத்தாளரின் சக பயணி. ஆகவே, வாசகரால் அதை உணர்ந்து கொள்ள முடியும். ஒரு இடத்தில் பொதுவுடைமைக் கட்சி ஊர்வலம் செல்கிறது. அங்கு ஒருவன் ‘நாற்பத்திரெண்டு பேரைக் கொன்னுமா உங்க கொட்டம் அடங்கலை? என்கிறான். காரியக்காரன் அதிகாலை மூன்று மணிக்கு களத்துக்குப் போகவேண்டும். எழுந்து போகும்போது வாசலில் படுத்துக் கொண்டிருக்கும் அம்மாவை எழுப்பி தனது மனைவியின் அருகில் படுத்துக் கொள்ளச் சொல்கிறன். இது போன்ற மிக நுட்பமான இடங்கள் மனிதர்களை இவர் கவனிக்கும் விதங்கள் எல்லாம் அபாரமானவை.

காரியக்காரன் காணியாச்சி நடவாள் ஒனக்கை ஒதம்பல் என அனைத்து மருதநிலத் துளிகளை அறியத்தரும் ஒரு சிறந்த படைப்பு இந்த ஒதம்பல். இதை அவைவரும் வாசிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கிறேன். நன்றி

1 comment:

Anonymous said...

நாவல் குறித்த விமர்சனம். ஆற்றொழுக்கு போல் அழகாக அணைந்து செல்கிறது. நண்பரின் நாவலை படிக்கவில்லை. படித்தபின் எழுதுகிறேன்..நன்றி.
_இடலாக்குடி அவன்