Friday, January 16, 2026

யாதும் ஊரே – எழுத்துக்காரனின் மின்குறிப்புகள் – இரா. முருகன்

 

சுறுசுறுப்புடன் இயங்குதல் என்றால் அது துறு துறு என சுற்றிக் கொண்டிருப்பதில்லை ஒரு திட்டமிட்ட செயலை வேறு எந்தப் புறக்காரணிகளாலும் ஒத்திப்போடாமல் என்பது. அதற்கு ஒரு தக்க உதாரணமாக எழுத்தாளர் இரா.முருகன் அவர்களைக் குறிப்பிடலாம். சில ஆண்டுகள் முன்பு நற்றுணைக் கூட்டத்தின் பொருட்டு அவருடன் உரையாடிக் கொண்டிருந்த காலத்தில்தான் தனக்கு பார்கின்ஸன் தாக்கியிருக்கிறது என்று கூறினார். மறதிங்கிறது ஒரு தேசிய வியாதியில்லையா அது நமக்கும் வந்திருப்பது பெருமைதானே என்றார். நான் இதற்கு சிரிப்பதா அழுவதா எனத்தடுமாறி சரி சிரிக்கலாம் என முடிவுசெய்து சிரித்து வைத்தேன். பின் என்ன சொல்வது எனத் தெரியாமல் இப்ப என்ன பண்றீங்க சார் எனக் கேட்டேன். ஞாபகம் இருக்கும்போதே முடிக்கணும்னு அடுத்த நாவலை எழுத ஆரம்பிச்சுட்டேன் என்றார். அரசூர் வம்சம் நாவல்களை நிறைவு செய்து ராமோஜியம் எழுதிவிட்டு பீரங்கிப் பாடல்கள் என்கிற மொழிபெயர்ப்பு நாவல்களையும் முடித்த பின் மிளகு என்கிற பெருநாவலை எழுதியிருந்தார். அதன்பின்னர் தினை அல்லது சஞ்சீவனி வந்திருந்தது. இப்போது றெக்கை நாவலை எழுதிக் கொண்டிருக்கிறார்.

சென்ற நூற்றாண்டின் கதைகளை எழுதினாலும் வரலாற்றுக் கதையை எழுதினாலும் இந்த காலத்தில் வாழும் எழுத்தாளன் கூடவே நின்று அன்றைய பாத்திரங்களின் தீவிரத்தைக் கேள்விக்குள்ளாக்கியபடியோ கிண்டலடித்தபடியோ இருப்பது அவரது பாணி. //சென்னைக்காரர்கள் நல்ல சங்கீத ரசனை மிக்கவர்கள். ஆனால் ஒன்பதரை மணிக்கே எலெக்ட்ரிக் ட்ரெய்ன் பிடிக்க ஓடிவிடுவார்கள்.// இந்துஸ்தானி பாடகர் பர்வீன் சுல்தானா இப்படிச் சொன்னதாக எழுதுகிறார். ஆனால் அது இவர் சொன்னதாகவும் இருக்கக்கூடும் என்பதை ராமோஜியம் வாசகர்கள் மறுக்கப் போவதில்லை.
அவரது அபுனைவுகள் எப்படியிருக்கும் என்கிற கேள்வியே ஆர்வத்தைத் தூண்டக்கூடியது. அந்த ஆர்வத்திற்கேற்ப வெளியாகியிருப்பதுதான் யாதும் ஊரே என்கிற தொகுப்பு. எழுத்துக்காரனின் மின்குறிப்புகள் என்று இதற்கு ஒரு துணைத்தலைப்பு கொடுத்திருக்கிறார். அது மலையாளத் தன்மை கொண்டது. எழுத்துக்காரன் என்பதே பிறரை தனக்கு அடுத்த அடுக்கில் வைக்கும் மலையாளிகளின் மனவெளிப்பாடு என்று கேணி கூட்டத்தில் இயக்குநர் பாலு மகேந்திரா கூறினார். பால்காரன் குதிரைக்காரன் எழுத்துகாரன். தமிழில் எழுத்தாளன் என்னும் அற்புதமான சொல் இருக்கையில் இதை கையாள வேண்டாம் என்பது அவர் மேலும் கூறியது. ஆனால் இரா.முருகனின் இயல்பான விளையாட்டுத்தனத்தோடு பொருத்திக் கொள்கையில் இந்த வார்த்தை நன்றாகவே இருக்கிறது. இவை இரா.முருகனின் தினசரிவாழ்வின் குறிப்புகளாக இருக்கிறது ஆனால் அதில் சொல்லப்படும் தகவல்கள் பல நூற்றாண்டுகளுக்கும் விரிகிறது. அனைத்தும் அவரது தளத்தில் மற்றும் ஃபேஸ்புக் நிலைத்தகவலில் வந்தவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கங்கள் என நினைக்கிறேன். புத்தகத்தில் அது குறித்த குறிப்பு இல்லை. இதைத் தவிர அவர் ஏற்கனவே எழுதிய எடிபன்பரோ குறிப்புகள் மறுபதிப்புக் கண்டிருக்கிறது. புரவி இதழிலும் பின் வாசகசாலை இணைய இதழிலும் எழுதிய வாதவூரான் பரிகள் அச்சு வடிவில் வந்துள்ளது என்பது உப தகவல்





கட்டுரைகளில் நடுநடுவே அவரது குரல் கேட்டபடியே இருக்கும்.சுருக்கமாக சொல்லப்பட்டவை. அதானாலேயே சுவாரஸ்யத்தைக் கூட்டுபவை. இத்தகைய நூல்கள் நாம் கடந்து வந்த ஒரு காலத்தைப் பதிவு செய்திருக்கும். அப்போது சிலகாலம் நிகழ்ந்த பல கூத்துக்கள் நினைவுக்கு வந்துவிடும்.
//நான் நடைபயணம் போகும் இடத்தில் ஒரு பெரியவர் நாலடியார் திருக்குறள் எல்லாம் சொல்லியபடி யோகாசனம் கற்றுத் தருவார். இப்போது எங்கும் இருப்பது பாபா ராம்தேவ் படங்களும் யோகாசனமும். ஒரு ஓரமாக பம்மிக்கொண்டு சிலம்பாட்டம் பயில்கிறார்கள்.//
அறிந்த நபர்களைச் சொல்லும்போதும் மெல்லிய அவதானிப்புடன் சொல்லிவிடுகிறார். 2013 ம் ஆண்டு, கமல் வீட்டில் ஏதோ விருந்து. அங்கு ஜெயமோகனைக் காண்கிறார். தமிழ் எழுத்துரு, சமணர் கழுவேற்றம் குறித்துப் பேசுகிறார்கள். இடையில் இரண்டு விஷயங்களைச் சொல்கிறார். 1. அங்கு இருந்தவற்றில் இலை தழைகளை உண்டது ஜெயமோகன் மட்டுந்தான். 2. ஜெயமோகன் கிளம்பிச் சென்றவுடன் விருந்து துவங்கிவிட்டது. திரைப்பட பார்ட்டிகளில் ஜெ.வின் பங்கேற்பு எந்தளவில் இருக்கும் என்பதை இவ்வளவு இலகுவாக சொல்லிவிட்டார் என்று தோன்றியது
இரயில் பயணத்தில் நடிகர் சார்லியை சந்திக்கிறார். அவர் சார்லி என்பது மெல்லத்தான் நமக்குப் புரிகிறது. எதிரில் இருக்கும் பயணியின் பிஹெடி தீஸிஸ்ல் இருந்து துவங்குகிறார். மெல்ல அவரை சொல்லும்போது நடிகர் சார்லியின் மற்றொரு பரிணாமம் வெளிப்பட்டிருக்கிறது





நடுவே இவரது சொந்த விஷயங்களும் வந்து போகின்றன.தன்னுடைய தந்தையின் நண்பாரான கண்டிப்பிள்ளை என்பவரைப் பற்றிய குறிப்பு உண்டு. சுதந்திரப் போராட்டத் தியாகி ஆனால் அவருக்குத் தியாகிப் பென்ஷன் கிடைக்காமல் வறுமையில் வாடுகிறார். அவருக்கு சிறிது தொகை அளிக்க இவர் கொள்ளும் தடுமாற்றமும் அவர் பெற்றுக் கொண்டு கொள்ளும் தவிப்பும் என ஒரு சிறுகதையாகி விடுகிறது. தமிழின் டாப் டென் நாவலில் ஒன்றான விஸ்வரூபம் நாவல் உருவாவதையும் அது வெளியானதும் இதற்குள் வந்து விடுகின்றது. அசோக மித்திரனை இரா.முருகன் சந்திக்கும் இடம் முக்கியமானது. இவர் அவரிடம் இலக்கியம் பேச அவர் இவரிடம் பேங்க் எக்ஸாம் எழுதிட்டியா என்று கேட்கிறார். அசோகமித்திரன் இவ்வாறு தன்னிடம் பேச வருபவர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டனரா என்று பார்ப்பதாக எனக்குத் தோன்றுகிறது. எழுத்தாளர் கி.கண்ணனும் இதை சொல்லியிருக்கிறார்

வெண்பா எழுதுவதில் இரா.முருகன் கெட்டிக்காரர் என்பது தெரிந்த விஷயம். பழனிக்கு சென்ற இவரது நண்பரான வடகலை ஐயங்கார் ஒருவர் முருகனை எதற்குப் பார்க்க வேண்டும் என பழனி லட்சுமி நாராயணன் கோயிலுக்குப் போக அவரும் அதிகாலையில் கோமணத்துடன் அருள் பாலித்திருக்கிறார். அதற்கு ஒரு வெண்பா உள்ளது. குபீர் ரகம்

இசை ஓவியம் போர் என ஒவ்வொரு விஷயத்திலும் அவர் சாதாரணமாக சொல்லிவிட்டு திரும்ப வந்துவிடுகிறார். ஒய்யாரமாக நடந்து வந்த மயில் தனது தோகையை விரித்து உடனே மீண்டும் அதைத் தழைத்துக்கொண்டு ஓடிவிடும். அதற்குள் ஒரு அபாரமான கணம் விரிந்தெழுவதைப் போல காலம் இவரது எழுத்தில் கண்முன் விரிந்து அடங்கி விடுகிறது.

தலைப்புகளை அட்டவணைப் படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. அது இல்லாமல் சில பக்கங்களை மீண்டும் தேடுவது கடினமாக உள்ளது. அடுத்த பதிப்பில் அதை சேர்த்துவிடக் கோருகிறேன்.

யாதும் ஊரே
இரா.முருகன்
எழுத்து பதிப்பகம்

No comments: